ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 2:21-3:5
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 2:21-3-5
நிகழ்ச்சி எண்: 0016

வாசியுங்கள்


அருமையானவர்களே மீண்டும் ஒரு வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.  இன்று நாம் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம். முதலாம் அதிகாரத்தில்  தமிழில் தேவன் என்று சொல்லப்பட்டிருக்கிற இடங்களில் எபிரேய வேத புத்தகத்தில் ஏலோகிம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது,  ஏலோகிம் என்றால் படைப்பின் கடவுள். ஆனால் இரண்டாம் அதிகாரத்தில் யாவே எலோஹிம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது – அதாவது  உடன்படிக்கை செய்யும் தனிப்பட்ட கடவுளை இது வெளிப்படுத்துகிறது.

 

இந்த அதிகாரத்தில் முதல் முறையாக ஒரு பெரிய வெளிப்பாட்டின் கொள்கை காணப்படுகிறது. ஆனால் இதே காரியம் வேத புத்தகத்தில் மீண்டும் மீண்டும் காணப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.  இது  பரிசுத்த ஆவியானவரின்  கை ரேகைகளில் ஒன்று என்று சொல்லலாம் . வேத புத்தகத்தில் இது மீண்டும் மீண்டும் வரும் ஒரு விதி அல்லது மறு பரிசீலனை செய்யும் ஒரு விதி  அல்லது தொகுத்து உரைக்கும் விதி என்று கூறலாம்.   வேறு வார்த்தைகளிலே சொல்வதென்றால் கடவுளின் ஆவி கடவுளின் வார்த்தையை கொடுப்பதில் சிறந்த உண்மைகள் மற்றும் உண்மைகளின் தொடரை சுருக்கமாக கூறும் ஒரு நடைமுறையை கொண்டிருக்கிறது.  பின்னர் அவர் திரும்ப வந்து ஏற்கனவே கூறிய தொடரில் இருந்து மிக முக்கியமானவைகளை  எடுத்து மீண்டும் தெளிவாகச் சொல்லுவார்.  மேலும் அவர் அந்த குறிப்பிட்ட காரியத்தை தெளிவுபடுத்தி விரிவுபடுத்துவார்.  இதே கொள்கையை நாம் உபாகம புத்தகத்திலும் பார்க்கிறோம் 40 ஆண்டுகால வனாந்தர அனுபவத்திற்கு பின்னர் உண்டான நியாயப்பிரமாணத்தின் விளக்கத்தை உள்ளடக்கியுள்ள புத்தகமாக இது இருக்கிறது. இது நியாயப்பிரமாணத்தை மீண்டும் சொல்கிறதாக இல்லாமல் இதன் விளக்கமாக இருக்கிறது. அதேபோல நமக்கு ஒரு சுவிசேஷ புத்தகம் கொடுக்கப்படாமல் நான்கு சுவிசேஷ புத்தகங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட படைப்பின் ஆறு நாட்களின் செயல்களில் முக்கியமாக மனிதனின் படைப்பைப் பற்றி  இப்பொழுது இரண்டாம் அதிகாரத்தில் சற்று விவரமாக சொல்லப் போகிறார்.

வாசிக்கிறேன்

ஆதியாகமம் 2:1-3 வசனங்கள்

‘இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ‘

……………………………

இந்த வசனத்தில் உண்டாக்கப்பட்டு தீர்ந்தென என்ற வார்த்தையை பார்க்கிறோம். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய சிருஷ்டி பின் பணி முடிவடைந்து விட்டது.  அதாவது நிறைவடைந்துவிட்டது.  பொதுவாக  நாம் பட்டணங்களின் வழியாய் செல்லும் பொழுது, ஆரம்பிக்கப்பட்ட பல பணிகள்  நீண்ட காலம் நிறைவடையாமல் இருப்பதை நீங்கள்பார்க்க முடியும்.  ஆனால் தேவன் தான் செய்து முடிக்க திட்டமிட்ட அனைத்தையும் செய்து முடித்து விட்டார். தேவன் எந்த ஒரு வேலையையும்  அரைகுறையாய் செய்கிறவர் அல்ல.

கர்த்தருடைய செயல்படும் திறனை குறித்து  அப்போஸ்தலனாய் பவுலும்  பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு எழுதி இருக்கிறார்.

பிலிப்பியர் 1:5-6

‘உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ‘………

நமது வாழ்க்கையிலும் கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற எந்தப் பணியையாவது நாம் முழுமையாய் செய்து முடிக்காமல் பாதியில் விட்டு விடலாம் என்று யோசிக்கிறோமா?  நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகளாய் இருப்பீர்கள் என்றால்,  அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நீங்கள்  செய்ய திட்டமிட்ட காரியங்கள் எல்லாவற்றையும் அவரைப்போல செய்து முடிப்பதே  சிறந்த ஒரு மாதிரி.

ஓய்வு நாளின் முக்கியத்துவத்தை நாம் ஒருக்காலும் தவற விட்டு விடக்கூடாது.  ஓய்வு நாள் மிகவும் முக்கியமானது. இது சிறப்பாக ஆசரிக்கப்பட வேண்டிய ஒன்று. கடவுள் தனது வேலையில் இருந்து ஓய்வெடுத்தார் என்று சொல்லும் பொழுது அதன் பொருள் என்ன?  கடவுள் சோர்வடைந்து ஏழாம் நாளில் ஓய்வு எடுக்க உட்கார்ந்து 40 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்த ஒரு பெரிய வாரம் இருந்ததாகவும் அவர் ஓய்வெடுக்க  விரும்பினார் என்றும் சொன்னாரா?  இல்லை அப்படி பார்த்தால் அது சரியான முட்டாள்தனம். கடவுள் தனது வேலையில் இருந்து ஓய்வு எடுத்தார். அதாவது கடவுள் தனது ஆறு நாட்கள் வேலை முடித்த பொழுது அவர் அதைப் பார்த்தார் அது மிகவும் நன்றாக இருந்தது. சரி இனி வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு மன நிலையில் அவர் இருந்திருப்பார்.  நம்மில் பலர் நம்முடைய வேலை மேஜையை விட்டு  எழும்பும் பொழுது – நான் எல்லாவற்றையும் முடித்து விட்டேன் என்று  சொல்லி  மற்றொரு இடத்தில் போய் உட்கார  முடிவதில்லை. ஆனால் தேவன் அப்படி செய்தார் என்று வசனம் சொல்லுகிறது . ஆறு நாட்களின் முடிவில் அவர் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார் ஏனென்றால் அவருடைய வேலை முடிந்து விட்டது.  இதுவும் மிகப்பெரிய ஒரு ஆவிக்குரிய சத்தியத்தை பார்க்கிறோம்.

இன்றைக்கும் இந்த உலகத்திலே காணப்படும் ஏழு நாள் வாரம் என்பது, தேவனுடைய படைப்பின் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஏழாவது நாளும் மனிதனுக்கு தேவன் ஓய்வு நாளாய் கொடுத்திருக்கிறார். தேவனே மனிதனின் உடலைப் படைத்தார்.  எனவே ஆறு நாள் பணி செய்யும் அவனுக்கு ஒரு நாள் ஓய்வு தேவை என்பதை தெளிவாக மனிதன் புரிந்து கொள்ளத்தக்கதாக ஏழாவது நாளை ஓய்வு நாள் ஆக்கினார்.  இதை கவனித்துக் கொண்டிருக்கிற நம்மில் பலர் நம்முடைய சரீரத்திற்கு வாரத்தில் ஒரு நாளாவது சரியான அளவு ஓய்வு கொடுக்கிறது இல்லை. அந்த வசனத்தை கவனமாய் நீங்கள் பார்ப்பீர்கள் என்றால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ‘ பரிசுத்தமாக்கினார் என்றால் அதை பிரத்தியேக படுத்தினார்.  மேலும் அந்த நாளை ஆசிர்வதித்தார் என்று வாசிக்கிறோம். நீங்கள் வாரத்தின் இறுதி நாளில் தேவனை ஆராதித்தாலும் சரி வாரத்தில் முதல் நாளை அதற்காக பயன்படுத்தினாலும் சரி வாரத்தில் ஒரு நாள் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தேவை என்பதை,  கற்றுக் கொண்டவர்களாக அதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள் அது நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் பலனளிப்பதை பின்னான காலங்களிலே நீங்கள் அனுபவிக்கும் பொழுது அதைக் குறித்து திருப்தி அடைவீர்கள்.

மூன்றாம் வசனத்தின் இறுதியில் பரிசுத்தமாக்கினார் என்று வாசிக்கிறோம்,  அப்படி என்றால் அந்த நாளை பிரத்தியேக படுத்தினார் என்பதுதான் பொருள். நாம் செய்ய வேண்டிய பணிகளை அந்தந்த நேரத்திலே செய்ய வேண்டியது எத்தனை முக்கியமோ,  அதேபோல,  ஓய்வு எடுப்பதற்கு என்றும் வாரத்தில் ஒரு நாளை பிரத்தியோகப்படுத்தி வைக்க வேண்டும். பின்னான காலங்களில்,  தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு 10 கற்பனைகளை கொடுக்கும் பொழுதும், ஓய்வு நாளை முக்கியப்படுத்தி ஒரு கட்டளையை கொடுத்திருக்கிர்.  கவனியுங்கள் வாசிக்கிறேன்.

யாத்திராகமம் 20: 8 -11

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

9ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

10ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்……

மற்ற கற்பனைகளுக்கெல்லாம் குறுகிய வார்த்தைகளையே பயன்படுத்தி சொல்லி இருக்கிறார்.  ஆனால் ஏழாம் நாளில் ஓய்ந்திருக்க வேண்டும் என்பதை குறித்து சொல்லும் பொழுது, மட்டும் இத்தனை விபரமாக எடுத்துக் கூறுகிறார். ஏனென்றால் இது மனுக்குலம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு கட்டளை. இன்றும் சில குடும்பங்கள் இதன் முக்கியத்தை உணர்ந்து. இந்த நாளை கடைபிடிக்கிறார்கள். ஓய்வு என்பது மனிதனுக்காக கடவுள் வடிவமைத்த நல்ல திட்டத்தின் ஒரு பகுதி. ஓய்வு என்பது பாவத்திற்குப் பிந்தைய தீர்வு அல்ல; அது படைப்பின் ஒரு பகுதி. பாவம் வருவதற்கு முன்னமே கடவுள் ஓய்வை நமக்கு மாதிரியாக வைத்தார். அதாவது, நாம் வேலை செய்ய மட்டும் படைக்கப்படவில்லை; நாம் 7 நாட்களுக்கு ஒரு நாள் முடிந்த பணியில் மகிழ்ந்து ஓய்வெடுக்கவும் படைக்கப்பட்டிருக்கிறோம்.

 

இதே நேரத்தில் மற்றும் ஒரு உண்மையையும் நாம் உணர வேண்டும், தேவன் ஏழு நாட்களில் ஒரு நாளை  பிரத்தியேக படுத்தினார்.  ஆனால் இன்று பலர்  இரண்டு நாட்கள் வாரத்தில் விடுமுறை வேண்டும் என்று எதிர்பார்ப்பதை கவனித்திருப்பீர்கள்.

நீதிமொழிகள் 22;29 இவ்விதமாகக் கூறுகிரது.

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். என்று நீதிமொழிகள் 18:9 கூறுகிறது . இந்த இருவரில் நாம் யாராக இருக்கிறோம் என்பதையும் சற்று யோசித்துப் பார்ப்போம்.

மேலும் எபிரெயர் நிருபத்தில், விசுவாசிகளாகிய நாம் ஒரு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.  அதாவது நாம் தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நுழைகிறோம்.  நாம் அவருடைய பூரணமான மீட்புக்குள் நுழைகிறோம். உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக சிலுவையில் மரித்தார் மீண்டும் உயிரோடு எழுந்தார்  அந்த காலம் முதல் நாம் நுழைந்து இளைப்பாற கூடிய ஒரு மீட்பை அவர் நமக்கு உண்டு பண்ணி விட்டார்.

ரோமர் 5:1 என்ன சொல்கிறது??

‘இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ‘

……………………………..

எனது இரட்சிப்பிற்காக அவர் எல்லாவற்றையும் செய்துவிட்டார் நான் என் சுண்டு  விரலைக் கூட அதற்காக நான் அசைக்க வேண்டியதில்லை. அவர் எல்லாவற்றையும் எனக்காக செய்து முடித்து விட்டார்.

சகோதரர் பிரகாஷ் இயேசுவடியான் அவர்கள் எழுதிய பாடலின் வரிகள் அர்த்தம் நிறைந்தவை.

எனக்காய் ஜீவன் விட்டவரே

என்னோடு இருக்க எழந்தவரே

என்னை என்றும் வழி நடத்துவாரே

என்னை சந்திக்க வந்திடுவாரே

இயேசு போதுமே, இயேசு போதுமே, இயேசு போதுமே.

ஆம் ஆண்டவரே இயேசு கிறிஸ்து நமக்காக அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.

இப்பொழுது ஆதியாகமம் 2:4 பாருங்கள்

‘தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.

………………………….

தேவன் உருவாக்கிய பிரபஞ்சத்தில் குழம்பிப் போயிருந்த காரியங்களை முதல் ஐந்து நாட்களிலே அவர் ஒழுங்குபடுத்தினார்.

நாம் வாழும் இந்த பரந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இங்கே இருந்தது. ஆனால் பூமிக்கும் படைப்பின் பெரும் பகுதிக்கும் ஏதோ நடந்தது. இதன் விளைவாக கடவுள் உள்ளே நுழைந்து அனைத்தையும் சரி செய்ய வேண்டியது இருந்தது. கடவுளின் ஆவி  ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.  மேலும் குழப்பத்திலிருந்து பிரபஞ்சம் வெளியே கொண்டுவரப்பட்டது.  தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று சொல்லப்பட்ட பொழுதுதான்  இவை அனைத்தும் ஒழுங்கிற்கு வந்தன.

இங்கே வரலாறு என்று சொல்லப்பட்டிருப்பது,  மனுக்குலத்தின் குடும்பங்களையும் குறிக்கிறது.  ஆதியாகமம் பூமியின் தொடக்கப் புத்தகம் மட்டும் அல்ல குடும்பங்களின் புத்தகமும் ஆகும்.  வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்; இவ்விதமாக வானமும் பூமியும் அவைகளின் குடும்பங்களும் உண்டாக்கப்பட்டு தீர்ந்தன என்று சொல்லலாம்.

ஆதியாகமம் 2:5-6

‘நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. ‘

…………………..

இவை எல்லாமே மனிதன் பூமியில் சிருஷ்டிக்கப்படும் முன்னரே உண்டாக்கப்பட்டு விட்டது இப்பொழுது நாம் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவனுடைய நோக்கம் என்னவாக இருந்தது என்பதை கண்டுபிடிக்க போகிறோம். ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் தாம் உருவாக்கப் போகின்ற மனிதனுக்கு வீட்டை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தார். இப்பொழுது தேவன் ஆயத்தப்படுத்தின இடத்திற்கு அவனை கொண்டு வரப் போகிறார்.

ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் நாம் பார்க்கும் பொழுது அங்கே எதுவுமே இல்லாமல் இருந்தது. பின்னர் கனிம பொருட்கள் உண்டாக்கப்பட்டன. அதாவது ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். இதற்கு அடுத்த கட்ட சிருஷ்டிப்பில் உயிரினங்கள் படைக்கப்பட்டன. ஆதி 1: 21 ஆம் வசனத்தில் தேவன் மகா பெரிய மீன்களையும் பின்னர் மற்ற உயிரினங்களையும் படைத்தார் என்று நாம் வாசித்தோம். அவர் உயிரினங்களை படைத்தார். ஆனால் தாவரங்கள் அழிந்து போய் இருக்க வில்லை. தேவன் மீண்டும் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பொழுது, பூமிக்குள் ஏற்கனவே விதைகள் இருந்தன. அவ்வாறே நாம் இந்த பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. தேவன் இது சம்பந்தமாக மிகவும் குறைவாகவே நமக்குச் சொல்லி இருக்கிறார். இதற்கு அடுத்ததாக மனிதன் படைக்கப்பட்டான். இங்கே பரிணாம வளர்ச்சி காணப்படவில்லை. இந்த பூமியானது மனிதன் படைக்கப்படும் முன்னரே அவனுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டதாய் இருந்தது. ஒருவேளை ஆறு நாட்களில் படைப்புகள் நடைபெறாமல் முதலாவது மனிதன் படைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்?? தேவன் உங்களுக்கும் எனக்கும் தேவையானவைகளை முதலாவது இந்த பூமியில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கிறார். இன்றைக்கும் நம் வாழ்க்கையில் தேவை என்பது வரும் முன்னதாக அதை சந்திப்பதற்கான எல்லா ஆயத்தங்களையும் தேவன் செய்கிறவராக இருக்கிறார்.

ஆதியாகமம் 2:7

‘தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ‘

……………….

இதுதான் கடவுள் மனிதனை படைத்த முறை. படைப்பைக் குறித்து  நமக்கு சொல்லப்பட்டு இருப்பதில் நாம் வரம்புக்கு உட்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடல் ரீதியாக மனிதன் தரையில் இருந்து எடுக்கப்பட்டான். நம்முடைய உடலிலே சுமார் 15 அல்லது 16 வேதியல் கூறுகள் மட்டுமே இருக்கின்றன என்பது மிகவும் சுவாரசியமானது. அதே வேதியல் கூறுகள் தரையில் இருக்கின்றன. மனிதனின் உடல் பகுதி பூமியின் தூசியில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் உருவாக்கப்பட்ட தனித்தனி வேதியல் கூறுகளில் வேக வைக்கப்பட்டால் பணத்தின் அடிப்படையில் நாம் குறைவாகவே மதிப்பிடப்பட முடியும் ஒருவருடைய கணக்குப்படி 300 ரூபாய்க்கு தான் அங்கே வேதியல் பொருட்கள் இருக்கின்றன.  நாம் பூமியின் தூசியில் இருந்து உருவாக்கப்பட்டதால் நமது உடல் மதிப்பு அவ்வளவுதான். ஆனால் பல சமயங்களில் நாம் எவ்வளவோ விலையேறப் பெற்றவர்களாக நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

இந்த வசனத்தில்,  கர்த்தர் மனுஷனை மண்ணினாலே உருவாக்கி என்று வாசிக்கிறோம்.  இந்த உருவாக்கி என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரேய வார்த்தை-  யத்சர்

( Yatsar) என்பதாகும். இது ஒரு குயவன் களிமண்ணை எடுத்து தன்னுடைய கரத்திலே வைத்து வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படும் அதே வார்த்தையாகும்.

 

ஆனால் பிரியமானவர்களே மனிதன் மண்ணைக் காட்டிலும் மேலானவனாக இருக்கிறான்.  சரீர பிரகாரமாக அவன் மண்ணில் இருந்து தோன்றினபடியினால் மண்ணுக்கே திரும்புவான். ஆனால் அவனுடைய ஆவி தேவனிடத்தில் திரும்பிச் செல்கிறது ஏனென்றால் தேவன் ஜீவசுவாசத்தை அவன் நாசிலே கூறினார். மனுஷன் ஜீவாத்மாவானான். அதாவது தேவன் அவனுக்குள் ஜீவசுவாசத்தை ஊதினார். தேவன் மனிதனுக்கு சரீர பிரகாரமான வாழ்க்கையையும் பிறகு ஆவிக்குரிய பிரகாரமான வாழ்க்கையும் கொடுத்தார்.  அதாவது தேவன் அவன் நாசிலே ஊதிய பொழுது  அவன் ஆவி ஆத்துமா சரீரத்தில் புத்துயிர் பெற்றான் என்று கூறலாம் .  அது மட்டும் அல்ல மனிதன் இப்பொழுது தன்னை படைத்த சிருஷ்டிகளோடு ஆச்சரியமான  உறவு கொள்ளக்கூடியவனாகவும் இருக்கிறான். தேவனோடு தொடர்பு கொள்ளும் தகுதியை பெற்று இருக்கிறான் தேவனுடைய இந்த அண்ட சராசரத்தில் உள்ள மற்ற படைப்புகளுக்கும் மனிதனுக்கும் இதுவே மாபெரும் வேறுபாட்டை உண்டாக்குகிறது. தேவ தூதர்கள் இருக்கிறார்கள். இருந்த போதிலும் அவர்களை குறித்து நாம் மிகவும் குறைவாகவே அறிந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தேவனோடு தனிப்பட்ட உறவு கொள்ளக் கூடியவனாகவும் அவருடைய விருப்பங்களை அறிந்து கொள்ளக் கூடியவனாய் இருந்தான்.

இறையியல் பரிணாம வாதிகள் மனிதகுலம் இதுவரை பரிணமித்ததாகவும். பின்னர் கடவுள் இந்த பரிணாம வளர்ச்சியின் விளை பொருளை கொண்டு செயல்பட தொடங்கினார் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் எந்த வகையான பரிணாம கோட்பாட்டாலும் மனிதனின் பேச்சு திறமையை  கணக்கிட முடியாது. மனிதனின் மனசாட்சியை கணக்கிட முடியாது. மேலும் மனிதனின் தனித்துவத்தை கணக்கிட முடியாது. பரிணாம வளர்ச்சியில் சிறிது சிரமம் உள்ள மூன்று காரியங்கள் இவை. ஒரு மனிதனின் எலும்புகளை எடுத்து அவற்றை ஒரு மனித குரங்கின் எலும்புகளுடன்  அல்லது  ஒரு குதிரையுடன் ஒப்பிடுவது மிகவும் எளிதானது. ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை அங்கே இருக்கும்.  ஆனால் ஒரு பரந்த வேறுபாடும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒற்றுமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் ஏனென்றால் இந்த உயிரினங்களும் நாம் மனிதர்களாக இயற்கையாகவே நடமாடும் அதே சூழலிலே நடமாட வேண்டும். நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால்  டாட்டா கார்களின் முக்கிய பிரேம் ஒர்க் இருப்பது போலவே  சுசுக்கி கார்களின் முக்கிய ப்ரேம் ஒர்க் இருக்கும். அல்லது வெவ்வேறு கம்பெனிகளின்  இரண்டு சக்கர வாகனங்களை ஒப்பிட்டு பாருங்கள்.  உங்களுக்கு புரியும்.

மோட்டார் நிறுவனங்கள் மற்ற வாகனங்களுக்கும் தங்கள் வாகனத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக உங்களுக்கு சொல்வார்கள்.  ஆனால் அடிப்படையில் எல்லா வாகனங்களும் ஒன்று போலவே செவ்வகமான சட்டத்தின் நான்கு மூலையிலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கார் முன்னோக்கி செல்ல சக்கரத்தை சுழற்றக் கூடிய இன்ஜின் இருக்கும்.  இப்படி ஒற்றுமை இருப்பதால் எல்லாம் ஒரே இடத்தில் தயாரானது என்று நாம் சொல்ல முடியாது. மனிதன் ஒரு வித்தியாசமான உயிரினம் என்று சொல்லலாம். மனிதனை உண்டாக்கின தேவன் அவன் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதினார் அவன் ஜீவ ஆத்துமாவானான். மனிதன் மிகவும் ஆச்சரியப்படத்தக்க  மேன்மையான வகையிலே படைக்கப்பட்டிருக்கிறான். இதை எப்பொழுதும் நம்முடைய இருதயத்திலே நாம்  வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதியாகமம் 2:8 வாசிக்கிறேன்.

‘தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். ‘

………………..

ஏதேன் தோட்டம் எங்கே இருந்தது என்று சொல்வது கடினமானது. ஆனால் ஐபிராத்து – டைகிரீஸ் நதியின் சமவெளியில் அமைந்திருக்க வேண்டும் என்று கூற முடியும். ஒரு வேளை அந்த சமவெளி முழுவதும் ஏதேன் தோட்டமாய் இருந்திருக்கலாம். உண்மையில் இந்த நதியின் படுகை மிகவும் செழிப்பான ஒரு பகுதி. இப்பொழுதும் அது அவ்வாறே காணப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் விவசாயம் கூட செய்ததில்லை. அங்கே தானாக வளர்ந்த பயிர்களை அறுவடை மாத்திரமே செய்து உணவிற்கு பயன்படுத்தினார்கள். இது மீண்டும் ஒரு நாளில் பூமியின் மைய இடத்தை பெறும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம்.

பிரியமானவர்களே இன்று நாம் கற்றுக் கொண்ட இந்த வேத பகுதியில் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில காரியங்களை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். உலகத்தின் எல்லா காரியங்களையும் படைக்கும் பொழுது தேவன் தம்முடைய வார்த்தையினாலே உண்டாக்கினார்.  ஆனால் மனிதனை படைக்கும் பொழுது மட்டும் தனது கரத்தினாலே அவர் செயல்பட்டு,  தன்னுடைய சொந்த ஜீவனை நமக்குள்ளே ஊதினார்.  இயற்கையோடு தேவனுக்கு இருக்கும் உறவையும் தொடர்பையும் விட நம்மோடு அவருக்கு இருக்கும் உறவு பெரிது என்பதை இது காட்டுகிறது.  இதை வெளிப்படுத்தும் படியாக தான் பாவத்தில் விழுந்த மனக்குலத்தை மீட்டு இரட்சிக்க,  இயேசு கிறிஸ்துவை நமக்காக ஒப்புக்கொடுத்தார்.  எனவே நாம் அவரை விசுவாசிக்க வேண்டியதும் அவருக்கு கீழ்ப்படிய வேண்டியதும் மிகவும் முக்கியம்..

மேலும்  தேவனாகிய கர்த்தர்,  ஆறு நாட்களில் படைப்பின் பணிகளை நிறைவேற்றி,  ஏழாம் நாளில் அவர் ஓய்ந்திருந்து மகிழ்ந்தார் என்று வேதம் நமக்கு சொல்கிறது.  அது மட்டுமல்ல மனிதர்களாகிய நமக்கும் நம்முடைய உடலுக்கும் ஓய்வு தேவை என்பதை வலியுறுத்த பத்து கற்பனைகளில் ஒரு கற்பனையாகவும் அதை மனிதனுக்கு கொடுத்திருக்கிறார்.  எனவே நாம் ஏழு நாட்களும் ஓடிக்கொண்டே இருக்கிறோமா அல்லது நமது உடலுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வை கொடுப்பதில் கவனமாய் இருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்த்து அதை கடைபிடிக்க தீர்மானம் செய்வோமா??

ஜெபம் செய்வோம்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top