ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமத்தின் வழியாக - ஆதியாகமம் அறிமுகம்
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் வேதாகமத்தின் வழியாக
புத்தகம் : ஆதியாகமம்
பகுதி : ஆதியாகமம் 1 அறிமுகம்
நிகழ்ச்சி : #0011

வாசியுங்கள்

TTB 0011D  – ஆதியாகமம் 1:1A

பிரியமானவர்களே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று முதல் நாம் ஆதியாகம புத்தகத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம் முதலாவது அதற்கான சில முகவரி குறிப்புகளை அறிந்து கொள்வோம்.

வேதாகமத்தின் இரண்டு முக்கியமான  புத்தகங்களில் ஆதியாகமம் புத்தகம் ஒன்றாகும். பழைய ஏற்பாட்டைத் தொடங்கும் புத்தகம் (ஆதியாகமம்) மற்றும் புதிய ஏற்பாட்டைத் தொடங்கும் புத்தகம் (மத்தேயு) ஆகிய இவை இரண்டும் பரிசுத்த வேதாகமத்தை புரிந்துகொள்ளும் திறவுகோலாக இருக்கிறது. 

இந்த வேத ஆராய்ச்சி செய்திகளை தொடர்ந்து நீங்கள் கேட்கும் முன், ஆதியாகமம் புத்தகத்தை ஒருமுறை முழுமையாக வாசிப்பீர்கள் என்றால் அது மிகச் சிறந்தது. . ஒரே நேரத்தில் முழுபுத்தகத்தையும்  வாசிப்பது சிறந்ததாக  இருக்கும். அப்படி உட்கார்ந்து வாசிக்க முடியாமல் போகலாம் என்பதை நான் அறிவேன், உண்மையைச் சொல்லப்போனால், நானும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை  . இடையூறுகள் காரணமாக எனக்கு பல நாட்கள்  தேவைப்பட்டன. என்றாலும் , ஒரே அமர்வில் ஆதியாகமத்தை வாசிக்க முடிந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஆதியாகமம் என்பது பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகம் மட்டுமல்ல, முழு வேதாகமத்தின் அடித்தளமே ஆகும். “ஆதி” என்றால் தொடக்கம் என்று பொருள். இப்புத்தகம் உலகின் தோற்றம், மனிதனின் தோற்றம், பாவத்தின் நுழைவு, நியாயத்தீர்ப்பு, இரட்சிப்புத் திட்டத்தின் முதல் அத்தியாயங்கள் ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளது.

முதலாவதாக ஆதியாகமத்தின் முக்கியமான எல்லா கருத்துக்களையும்  உங்களுக்கு தருகிறேன், இது புத்தகத்திzன் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாயிருக்கும். சில விஷயங்களை நீங்கள் கவனித்து குறித்துக்கொள்ள  வேண்டும், ஏனென்றால் ஆதியாகமம் புத்தகம் உண்மையில் முழு வேதாகமத்திற்கும் zஅடிப்படையானது. உண்மையில், ஆதியாகமம் பல விஷயங்களை முதல்முறையாகக் கூறும் ஒரு புத்தகம் -: படைப்பு, மனிதன், பெண், பாவம், ஓய்வுநாள், திருமணம், குடும்பம், உழைப்பு, நாகரிகம், க zலாச்சாரம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், மீட்பு, மற்றும் நகரங்கள்.  இவைகள் எல்லாவற்றையும் முதன்முறையாக இங்கேதான் நாம் பார்க்கிறோம்.

சில சொற்றொடர்கள் அடிக்கடி வருவதையும் நாம் பார்க்கலாம். உதாரணமாக, “வம்ச வரலாறு” என்பது முக்கியமான ஒரு வார்த்தையையாகும், ஏனென்றால் ஆதியாகமம் புத்தகம் ஆரம்பகால வரலாற்றின் குடும்பங்களைக் குறித்துக் கூறுகிறது. இது நமக்கு மிகவும்  முக்கியம், ஏன் தெரியுமா?? நாமும் இங்கு தொடங்கும் மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் தான் என்று திட்டமாகச்சொல்லலாம். 

ஆதியாகமத்தில் பல சுவாரிசமான கதாபாத்திரங்கள் நமக்காக விளக்கி காட்டப்பட்டிருக்கின்றன. ஒருவர் ஆதியாகமத்தை “வாழ்க்கை வரலாறுகளின் புத்தகம்” என்று கூறி இருக்கிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, பார்வோன், மற்றும் யோசேப்பைச் சேர்த்து  யாக்கோபின் பதினொரு குமாரர்கள்  எல்லாரையும் குறித்து நாம் பார்க்கிறோம். கடவுள் தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பை இவர்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும் பார்க்க முடியும்.  மேலும், ஏற்கனவே நான் கூறிய  நபர்களுடன் தொடர்புடையவர்களான—லோத்து, அபிமெலேக்கு, போத்திபார், பான பாத்திரக்காரன், பார்வோன்—ஆகியோரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 

ஆதியாகமப் புத்தகத்தில் உடன்படிக்கை என்பதைக் குறித்த  குறிப்பு காணப்படுகிறது. ஆதி பிதாக்களிடம், குறிப்பாக ஆபிரகாமிடம் கர்த்தர் அடிக்கடி பேசுவதும். பலிபீடம் கட்டப்படுவதும்  இந்த புத்தகத்தில் முக்கியமானது. வீட்டில் பொறாமை எப்படி  காணப்படுகிறது என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. வேறு எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத அளவு எகிப்து தேசத்தை குறித்து இங்கே நாம் படிக்கிறோம். பாவத்தின் மீதான கர்த்தரின் நியாயத்தீர்ப்புகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றும் தேவன் எப்படி தனது ஜனங்களை  பராமரிக்கிறார் என்பதையும் சிறப்பாக இந்த புத்தகத்தில் நாம் படிக்கலாம். 

ஆதியாகமம் ஒரு மத நூல் மட்டுமல்ல. மனிதனுக்கு ஏற்படும் பல சந்தேகங்களை தீர்த்து வைக்கும் ஒரு அரிய பொக்கிஷம் இது. படைப்பு, பாவம், மரணம், தெரிவு, உடன்படிக்கை போன்ற காரியங்களில் மனிதனுக்கு எழும் ஆழமான கேள்விகளை  எதிர்கொள்ளும் ஒரு இலக்கிய-தத்துவ மாஸ்டர்பீஸ் இன்று சொல்லலாம். இதை நம்பிக்கையோடு படிப்பவர்கள் கடவுளைக் காண்கிறார்கள்; விமர்சனக் கண்ணோட்டத்தோடு படிப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ள சத்தியங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அறிவில் சிறந்த மேதாவிகள்  சொல் நயம், பொருள் நயத்தை ஆராய்ந்து பார்த்து மெய் சிலிர்க்கிறார்கள். பாமர மக்களுக்கும் இது எளிதாகப் புரிகிறது. ஆக மொத்தத்தில் பார்த்தால், இது எல்லாரையும் கவர்ந்து ஈர்க்கும் வகையில் இருக்கிறது. 

நாம் வேதத்தை ஆராய்ச்சி செய்யும்போது, பல ஆண்டுகளுக்கு முன் பிரவுனிங் என்பவர் எழுதிய ஒன்றை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்: “முதலாவது முழுவற்றையும் கற்பனை செய், பின்னர் பகுதிகளை நிறைவேற்று. வீடு கட்டுகிறவர்கள்  அந்த வீடு எப்படி வரப்போவது என்பதை திட்டமிட்டு வரைபடம் ஆக்கி,  பின்னர் ஒவ்வொரு பகுதிகளையும் எவ்வாறு செய்வது என்பதை புரிந்து செயல்படுவது போல.” ஆதியாகம புத்தகத்தின் முழு பகுதியையும் பார்க்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு பகுதியாக ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும்…. வேதாகமத்தை ஆய்வு செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன; ஒன்று தொலைநோக்கி கொண்டு அதைப்பார்ப்பது, மற்றொன்று நுண்ணோக்கியுடன் சிறுசிறு பகுதிகளாக உன்னிப்பாக  படிப்பது.

கடந்த காலத்தின் ஒரு பிரசித்திபெற்ற  இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த  போதகரான ராபின்சன், என்பவர், இந்த காலங்களில் வாழும் கடவுளின் மக்களின் மனதிலும் இதயத்திலும் அழியாதவாறு எழுத விரும்பும் ஒன்றை எழுதியிருக்கிறார்:  கவனியுங்கள்.

நாம் புத்தகங்களின் யுகத்தில் வாழ்கிறோம். அவை அச்சிலிருந்து எப்போதும் அதிகரிக்கும் எண்ணிக்கையில் நமக்கு கொடுக்கப்படுகின்றன. நாம் எப்போதும் கையேடுகள், பாடப்புத்தகங்கள், கட்டுரைகள், தியானப் புத்தகங்கள், விமர்சன புத்தகங்கள், வேதாகமத்தைப் பற்றிய புத்தகங்கள், நற்செய்திகளைப் பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாசிக்கிறோம். ஆனால் நற்செய்திகளை பரிசீலனை செய்ய எவ்வளவு நேரமும் உழைப்பும் கொடுக்கிறோம்? நவீன கால உண்மையின் ஒரு அறிக்கையை வாசிப்பதன் மூலம் நல்லதை விரைவாகப் பெறுகிறோம் என்று நாம் தொடர்ந்து சோதிக்கப்படுகிறோம், அது நமது கல்வி அல்லது பகுதிறிவு தொடர்பானதாக, நமக்கு பழக்கமான வடிவத்திலும், நாம் புரிந்துகொள்ளும்  கண்ணோட்டத்திலும் வழங்கப்படுவதால் அதை ஏற்றுக்கொள்வதை ஒப்பிட்டுப்பார்த்தால் எளிதாயிருக்கிறது. ஆனால் நாம் விரைவாகப் பெறும் நல்ல காரியங்கள்  நமது இருதயத்தில் ஆழமாக நுழைந்து நிலையான உடைமையாக மாறுவதில்லை. எதுவும் மதிப்புள்ளது என்றால் அதை முயற்சி எடுக்காமல் பெற முடியாது என்பதை நாம் எளிமையாக உணர்ந்தால் நல்லது. இயற்கையின் பெரிய உண்மைகள் நமக்கு எளிதாகப் புரிந்துகொள்ளும் வடிவில் வழங்கப்படுவதில்லை. கிருபையின் பொக்கிஷங்களை, நல்ல முத்துக்களைத் தேடும் மனிதனின் திறமையும் ஆற்றலும் கொண்டு தேட வேண்டும். என்று எழுதியிருக்கிறர்.

இந்த அறிக்கை எவ்வளவு உண்மையானதாயிருக்கிறது இல்லையா??, ஏனென்றால் வேதாகமம் மட்டுமே  வேறெந்த புத்தகத்தாலும் செய்ய முடியாத அளவு நமது இதயங்களோடு பேசும்.. நமது காலத்தில் பல புதிய மொழிபெயர்ப்புகள் தோன்றுகின்றன; உண்மையில், அவை முயல்கள் பெருகுவதைப் போல வேகமாகவும் ஏராளமாகவும் வருகின்றன. என்றாலும் நாம் இந்திய வேதாகம சங்கத்தினரின் வெளியீடான பரிசுத்த வேதாகமத்தையே தொடர்ந்து பயன்படுத்துவோம்.

ஆவியாகமத்தின்  முக்கிய பிரிவுகளை இப்பொழுது  நாம் கவனிப்போம்.

ஆதியாகம புத்தகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தால் எந்த இடத்தில் அதை  பிரிப்பீர்கள்? முதல் பதினொரு அதிகாரங்கள் ஒரு முழுமையானதாகவும், அதிகாரம் 12 முதல் புத்தகத்தின் மீதமுள்ள பகுதி வரை முற்றிலும் வேறுபட்ட பிரிவாகவும் இருப்பதை நாம் கவனிக்கலாம். இவை இரண்டு பகுதிகளும் பல வழிகளில் வேறுபடுகின்றன: முதல் பிரிவு படைப்பிலிருந்து ஆபிரகாம் வரை வருகிறது. இரண்டாவது பிரிவு அபிரகாமிலிருந்து யோசேப்பு வரை உள்ள பகுதியாயிருக்கிறது. முதல் பிரிவு முக்கிய பொருள்களைப் பற்றியது, நமது காலத்திலும்  சிந்தனை  செய்யும்  மனிதர்களின் மனதை இன்னும் ஈர்க்கும் காரியங்களான: படைப்பு, வீழ்ச்சி, பெருவெள்ளம், பாபேல் கோபுரம் ஆகிய காரியங்களைப் பார்க்கிறோம். இரண்டாவது பிரிவு ஆளுமைகளைப் பற்றியது: விசுவாசத்தின் மனிதன் ஆபிரகாம்; ஆபிரகாமின் அன்புக்குரிய குமாரன் ஈசாக்கு; தெரிந்துகொள்ளப்பட்டு தண்டிக்கப்பட்ட குமாரன் யாக்கோபு; மற்றும் துன்பமும் மகிமையும் கண்ட யோசேப்பு குறித்து பார்க்கிறோம். 

இது ஒரு முக்கிய பிரிவு என்றாலும், இன்னும் முக்கியமான மற்றொரு பிரிவு இருக்கிறது. அது காலத்துடன் தொடர்புடையது. முதல் பதினொரு அதிகாரங்கள் குறைந்தபட்சம் இரண்டாயிரம் ஆண்டுகளின் காலத்தை உள்ளடக்கியது—ஆனால் உண்மையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம். இந்த முதல் பிரிவு பல நூறாயிரம் ஆண்டுகளை உள்ளடக்கும் என்று சொல்வதும் பாதுகாப்பானது என்று கூறலாம்.. ஆதியாகமத்தின் முதல் பிரிவு உங்கள் குறிப்பிட்ட கோட்பாட்டுக்கு தேவையான கடந்த காலத்தின் எந்த காலத்தையும் உள்ளடக்கும் என்று சொல்லலாம், குறைந்தபட்சம் முதல் பதினொரு அதிகாரங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளை ஆதியாகமம் உள்ளடக்கியது என்பதை நாம் அறிவோம், ஆனால் மீதமுள்ள முப்பத்தொன்பது அதிகாரங்களின் இரண்டாவது பிரிவு, 350ஆண்டுகளை மட்டுமே உள்ளடக்கியது. உண்மையில், ஆதியாகமம் 12 முதல் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு முழுவதும் கடந்து செல்லும் போது, மொத்தம் இரண்டாயிரம் ஆண்டுகள் மட்டுமே உள்ளடகம் ஆகிறது. எனவே, காலத்தைப் பொறுத்தவரை, ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை முடித்தவுடன் வேதாகமத்தின் பாதியை முடித்துவிட்டீர்கள் என்று சொல்லலாம். 

நமது மனதிற்கும் இதயத்திற்கும் அவசியமான உறுதியான நோக்கத்தினால்தான் தேவன் இந்த முதல் பிரிவை நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை நாம் மறந்து போகககூடாது. தேவன் இந்த முதல் பிரிவையா அல்லது வேதாகமத்தின் மீதமுள்ள பகுதியையா, எதை வலியுறுத்துகிறார் என்று நினைக்கிறீர்கள்? அவர் கடைசி பகுதியில் வலியுறுத்துகிறார் என்பது தெளிவாக இல்லையா? முதல் பிரிவு பிரபஞ்சம் மற்றும் படைப்பைப் பற்றியது, ஆனால் கடைசி பகுதி மனிதன், தேசங்கள், மற்றும் இயேசு கிறிஸ்து எனும்  நபரைப் பற்றியதாயும் இருக்கிறது. கடவுள் முழுமையாக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தை விட ஆபிரகாமில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறலம். மேலும், அருமையான சகோதரனே சகோதரியே  தேவன் உங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கிறார், முழு பௌதிக பிரபஞ்சத்தையும்  விட உங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார் என்று திட்டமாகக் கூறலாம்.. 

இதை மேலும், சற்று விபரமாகச் சொல்கிறேன் கவனியுங்கள். நான்கு நற்செய்தி பதிவுகளின் எண்பத்தொன்பது அதிகாரங்களில், கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையின் முதல் முப்பது ஆண்டுகளை நான்கு அதிகாரங்கள் மட்டுமே உள்ளடக்கியிருக்கின்றன, எண்பத்தைந்து அதிகாரங்கள் அவரது கடைசி மூன்று ஆண்டுகளை உள்ளடக்கி இருக்கிறது, மேலும் இருபத்தேழு அதிகாரங்கள் அவரது வாழ்க்கையின் கடைசி எட்டு நாட்களை உள்ளடக்கியிருக்கின்ரன. பரிசுத்த ஆவுயானவர், எதை முக்கியப்படுத்துகிறார் என்பதை அது காட்டுகிறது?இல்லையா?? கடைசி பகுதியில், இருபத்தேழு அதிகாரங்களால் உள்ளடக்கப்பட்ட கடைசி எட்டு நாட்களில் வலியுறுத்தல் இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த கடைசி பகுதி எதைப் பற்றியது? அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியது. அதுவே நற்செய்தி புத்தகங்களின் முக்கியமான பகுதி. வேறு வார்த்தைகளில், சொல்லவேண்டும் என்றால் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் மற்றும் நமது நீதிக்காக எழுப்பப்பட்டார் என்று நம்பும்படி கடவுள் நற்செய்திகளை கொடுத்தார். அது அவசியம். அது மிகவும் முக்கியமான உண்மை. 

ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்கள் வேதாகமத்தின் அறிமுகம் மட்டுமே என்று சொல்லலாம், அவற்றை ஒரு அறிமுகமாகவே  பார்க்க வேண்டும். இப்படிக் கூறுவதால்  பதினொரு அதிகாரங்களை முழமையாக படிக்காமல் தாண்டி செல்லப் போகிறோம் என்று அர்த்தமல்ல. உண்மையில், அந்த பகுதியையும் நாம் நேரம் எடுத்துப் படிக்கப் போகிறோம்.

ஆதியாகமம் வேதாகமத்தின் “விதைத் திட்டம்” என்று கூறலாம், அதாவது எல்லாவற்றின் தொடக்கம், அல்லது ஆரம்பம் காணப்படுகிறது. ஆதியாகமம் புத்தகம் அழகான ரோஜாவின் மொட்டு போன்றது, அது வேதாகமத்தின் மீதமுள்ள பகுதியில் திறக்கிறது. இங்கு உண்மை அணு வடிவில் மிகவும் சிறிதாக இருக்கிறது. 

ஆதியாகமத்தை பகுதி பகுதியாக நாம் பிரிக்க வேண்டும் என்றால் குறிப்பாக குடும்பங்களின் அடிப்படையில் நாம் பிரிக்கலாம்.

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதலாம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 6 ஆம் வசனம் வரை வானமும் பூமியும் உண்டான சம்பவங்களை நாம் வாசிக்கிறோம்.

. அடுத்ததாக ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனம் முதல் 6ஆம் அதிகாரம் 8ஆம் வசனம் வரை ஆதாமின் சந்ததியைக் குறித்துப் பார்க்கிறோம். ஆதியாகமம் 6ஆம் அதிகாரம் 9 முதல் 9ஆம் அதிகாரம் 29ஆம் வசனம் வரை நோவாவின் சந்ததியைக் குறித்துப் பார்க்கிறோம். ஆதியாகமம் 10ஆம் அதிகாரம் 1 முதல் 11ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் வரை நோவாவின் குமாரரின் சந்ததியைக் குறித்து வாசிக்கிறோம். ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் 10 -12 வசனங்களிலே சேமுடைய குமாரரின் வம்சத்தைக் குறித்துப் பார்க்கிறோம். ஆதியாகமம் 11: 27 முதல் 25 : 15 வரை தேராகுவின் வம்ச வரலாறை நாம் பார்க்கிறோம். ஆதியாகமம் 25 : 12-18 வரை இஸ்மவேலின் வம்சத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஆதியாகமம் 25: 19 முதல் 35ஆம் அதிகாரம்  : 29 வரை ஈசாக்கின் சந்ததியைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஆதியாகமம் 36: 1 முதல் 37 : 1 வரை ஏசாவின் சந்ததியைக் குறித்து வாசிக்கிறோம். ஆதியாகமம் 37 : 2 முதல் 50 : 26 வரை யாக்கோபின் வம்சங்களைக் குறித்து நாம் பார்க்கிறோம். 

இவை அனைத்தும் ஆதியாகமம் புத்தகத்தில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது குடும்பங்களின் புத்தகம். ஆதியாகமம் ஒரு ஆச்சரியமான புத்தகம், இவ்வாறு பார்ப்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஆதியாகமத்தை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

முதலாவது பகுதி படைப்பும், ஆதி வரலாறும். ஆதியாகமம் 1 முதல் 11ஆம் அதிகாரம் வரைக்கும் இதை நாம் பார்க்கலாம். இரண்டாம் பகுதி மூதாதையர் வரலாறு. ஆதியாகமம் 12 முதல் 50ஆம் அதிகாரம் வரை பல மூதாதையர்களின் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கின்றன. 

முதலாவது பகுதியைப் பார்க்கலாம்.

1. படைப்பும் ஆதி மனித வரலாறும் (அதிகாரங்கள்: 1–11)

ஆதியாகமம் 1:1: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” …………….

இது வேதாகமத்தின் மிகப் பிரபலமான முதல் வசனம். படைப்பை ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், ஆறு நாட்கள் படைப்பு, ஏழாம் நாள் ஓய்வு.  மனிதனை தேவன் தமது சாயலாகவும், தமது ரூபத்தின்படியேயும் படைத்தார் என்பதுதான் ஆதியாகமத்தின் மிக முக்கியமான போதனை. மனிதன் தேவனின் பிரதிபிம்பம்.

மூன்றாம் அதிகாரத்தில் பாவத்தினால் ஏற்படும் வீழ்ச்சியைப் பற்றி வாசிக்கிறோம். சர்ப்பம் பிசாசின் அடையாளம். தந்திரமான அந்த பாம்பு, தடை செய்யப்பட்ட கனியைப் புசிக்கச் சொல்லி தூண்டியது. இதைச் சாப்பிட்டால் தேவர்களைப் போல் ஆவீர்கள் என்று பொய் சொன்னது. பாவம் ஏதேன் தோட்டத்துக்குள் நுழைந்தது. பாவத்தின் விளைவு: அவமான உணர்வு, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுதல், சாபம், மரணம், தோட்டத்திலிருந்து துரத்தப்படுதல்./ / ஆனால் இங்கே ஆச்சரியப்படும் ஒரு அற்புதமான செய்தி இருக்கிறது. முதல் நற்செய்தி ஆதியாகமத்திலேயே வருகிறது.

இது கிறிஸ்துவின் வெற்றியைக் குறிக்கிறது.

ஆதியாகமம் 4ஆம் அதிகாரம் முதல் 11ஆம் அதிகாரம் வரைக்கும் பாவத்தின் தொடர்வதை பார்க்கிறோம். காயீனின் கொலை, லாமேக்கின் பழிக்குப் பழி, மனிதர்களின் அக்கிரமம் பெருகுதல், தேவனின் மனஸ்தாபம், ஜலப்பிரளயம், பாபேல் கோபுரம் இவைகள் எல்லாம் அங்கே கூறப்பட்டிருக்கிறது..

இப்படி பாவத்திற்கு மேல் பாவம் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆனால் தேவன் கிருபையாய் ஒவ்வொரு முறையும் இரங்குகிறார். இந்தப் பகுதியை A downward spiral path என்று சொல்கிறார்கள். தமிழில் சொல்ல வேண்டுமென்றால், இது ஒரு சுருள் இறங்கு பாதை. காலம் செல்லச் செல்ல மக்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இந்தப் பகுதி, பாவம் → தீர்ப்பு → கிருபை → மீண்டும் பாவம் என்று திரும்பத் திரும்ப வருகிறது.

 இப்பொழுது இரண்டாம் பகுதிக்கு வருவோம். 

இங்கே தேவன் ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். அது ஆபிரகாமின் குடும்பம். 12ஆம் அதிகாரம் முதல் 25ஆம் அதிகாரம் வரைக்கும் நாம் ஆபிரகாமின் சரித்திரத்தைப் பார்க்கலாம். தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். ஆதியாகம 12:2,3:

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”…………..

இதுதான் வேதாகமத்தின் மிக முக்கியமான வாக்குத்தத்தம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் சிலுவை மரணம் மூலமாக இந்த வாக்குத்தத்தம் மனுக்குலம் அனைத்தும் பெறும்படி ஆயிற்று. பவுல் இதை மிகத் தெளிவாகக் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் சொல்லி இருக்கிறார். கலாத்தியர் 3: 8:

“மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.”……………..

மேலும் அதே அதிகாரத்தில் 14ஆம் வசனத்தை எடுத்து வாசித்துப் பாருங்கள்: கலாத்தியர் 3:14:

“ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.”…………………

ஆபிரகாமுக்கு அடுத்து ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சரித்திரங்களை ஆதியாகமம் உள்ளடக்கியுள்ளது. மிக அழகிய, நெகிழ்ச்சியான இலக்கிய நடையில் இவர்களின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. கடைசியாக சொல்லப்பட்ட யோசேப்பின் வரலாறு ஆதியாகமத்தின் உச்சம் என்று சொல்லலாம். யோசேப்பு தனது சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டு, எகிப்தில் சிறையில் அடைக்கப்பட்டு, பார்வோனின் கனவை விளக்கிக் கூறியதால் எகிப்தின் பிரதான மந்திரியாக உயர்வு பெற்று, இறுதியாக தன் சகோதரர்களை மன்னித்தான். ஆதியாகமம் 50:20:

“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.”…………………

இந்த வசனம் ஆதியாகமம் முழுவதற்கும் சுருக்கம். சங்கீதக்காரன் சொல்வதைக் கேளுங்கள். சங்கீதம் 103: 8,9.10:

“கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.”………………………

ஆம், தேவன் இறையாண்மையுள்ளவர். பாவம், துரோகம், பொறாமை இருந்தாலும், அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

ஆதியாகமத்தில் கிறிஸ்துவை முன்னறிவிக்கும் பகுதிகளைப் பற்றியும் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில்  Typology என்று சொல்லப்படும்.  Typology என்பது தேவன் பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவையும் அவரது இரட்சிப்பையும் முன்கூட்டியே ‘படங்கள்’ மூலம் வரைந்து வைத்திருக்கிற முறை.

ஆதியாகமத்தை இந்தக் கண்ணோட்டத்தில் படித்தால், ஒவ்வொரு பக்கமும் “இயேசு இங்கே இருக்கிறார்!” என்று தெளிவுபடுத்தும். சில உதாரணங்களைக் கூறுகிறேன்:

ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட பல காரியங்கள் புதிய ஏற்பாட்டில் நிறைவு பெற்றிருக்கின்றன. ஆதாம் இயேசு கிறிஸ்துவுக்கு முன்னடையாளமானவன். ரோமர் 5:14:

“அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.”……………………..

முதல் ஆதாம் பாவத்தைக் கொண்டு வந்தான். கடைசி ஆதாமாகிய கிறிஸ்து நீதியையும், ஜீவனையும் கொண்டு வந்தார்.

நோவாவின் பேழையும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானமும். 1 பேதுரு 3: 20,21:

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.”…………………….

பேழை தண்ணீரிலிருந்து நோவாவையும், அவன் குடும்பத்தாரையும் காப்பாற்றியது போல ஞானஸ்நானம் கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, காப்பாற்றுகிறது.

அடுத்து  மெல்கிசேதேக்குவையும் இயேசுவையும் ஒப்பிடலாம். மெல்கிசேதேக்குவைப் பற்றி ஆதியாகமம் 14ஆம் அதிகாரம் 18,19, 20 வசனங்களில் வாசிக்கிறோம். ஆதியாகமம் 14:18-20:

“அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.”…………………………..

மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” இயேசுவும் மகா போதகர். ராஜாவும் ஆசாரியரும் இவரே. தொடக்கமும் முடிவும் இல்லாதவர். எபிரெயர் 7ஆம் அதிகாரத்தில் இதைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக 17ஆம் வசனத்தில், இயேசுவைப் பற்றிச் சொல்லும்பொழுது, இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது:

“நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.”………………….

அடுத்து ஈசாக்கையும் இயேசுவையும் ஒப்பிடலாம். ஆபிரகாமின் ஒரே குமாரன் ஈசாக்கு. அவனை மரங்களை அடுக்கி அதன் மேல் பலியிட ஆபிரகாம் துணிந்தான். தேவன் இடைபட்டதால், ஆட்டுக்கடாவை அவனுக்குப் பதிலாக பலியிட்டான் என்று ஆதியாகமம் 22ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சிலுவை மரத்தில் பலியாகக் கொடுத்தார். இங்கே ஆட்டுக்கடாவுக்குப் பதிலாக இயேசு தாமே பலியாகத் தொங்கினார். ரோமர் 8:32:

“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” …………………………………

அடுத்து யோசேப்பைப் பார்க்கலாம். இவன் தந்தைக்கு மிகவும் பிரியமான புத்திரன். சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு 20 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். கடைசியில் எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்தப்பட்டான். இரட்சகனாகி எல்லாரையும் காப்பாற்றினான். கிறிஸ்துவின் முன்னறிவிப்பு இவன்.  தேவனுடைய பிரியமான குமாரனாகிய இயேசு மக்களால் புறக்கணிக்கப்பட்டார். 30 வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். சிலுவை மரணம் அடைந்தார். மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, நமக்கு இரட்சகரானார்.

ஆதியாகமத்தின் முக்கியப் போதனைகளை ஐந்து குறிப்புக்களில் சொல்கிறேன்.

முதலாவது, தேவன் மட்டுமே ஒரே படைப்பாளர். இந்த உலகம் தற்செயலாய் வந்ததல்ல. தேவனால் திட்டமிட்டு சிருஷ்டிக்கப்பட்டது.

இரண்டாவது, மனிதன் தேவனின் சாயலில் படைக்கப்பட்டாலும் பாவியாக இருக்கிறான். மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்துகொண்டே இருக்கிறான். ஆனால் தேவன் கிருபையாய் இரங்குகிறார்.

மூன்றாவது, தேவன் வாக்குத்தத்தம் கொடுப்பவர், உடன்படிக்கை செய்பவர். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார்.

நான்காவது, இரட்சிப்பின் திட்டம் ஆதியாகமத்திலேயே தொடங்குகிறது..

ஐந்தாவது, தேவனுடைய இறையாண்மையும், கிருபையும் எல்லாவற்றையும் மீறுகிறது.

 

இறுதியாக தமிழ் வேதாகமத்தின் மொழி நடையைப் பற்றிச் சொல்லி இந்த நிகழ்ச்சியை முடிக்கலாம் என்று விரும்புகிறேன்.

 

தமிழ் வேதாகமத்தில் ஆதியாகமம் மிக இலக்கியமான, பழமையான நடையில் இருக்கும். “ஆதியிலே”, “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது”, “தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சம்”, “ஆதாம் ஏவாளை அறிந்தான்” போன்ற வாக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் நீங்கள் பார்க்க முடியும்.

ஆதியாகமம் என்பது வெறும் புராணக் கதையோ, சில கதாபாத்திரங்களின் வரலாறோ அல்ல. இது இறையியலின் முதல் பாடம். மனிதனின் பிரச்சனைக்கும் தேவனுடைய தீர்வுக்கும் உள்ள முதல் பக்கம். யோவான் 1:1ஐ படிக்கும்போது, அதாவது, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது …………………………என்பதை வாசிக்கும்போது,  நமக்கு ஆதியாகமம் 1:1 நினைவுக்கு வருவதும் இதனால்தான்.

தொடர்ந்து ஆதியாகமத்தை எங்களோடு இணைந்து  படியுங்கள். அது உங்கள் வாழ்க்கையின் தொடக்கத்தையும் முடிவையும்  புரிந்துகொள்ள உதவும்,

கர்த்தர் தாமே இந்தத் தொடர் நிகழ்ச்சியை  உங்களுக்கு ஆசிர்வாதமான தாக்கி தருவாராக ஆமென்.

 

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top