ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமத்தின் வழியாக - ஆதியாகமம் 1:2-25
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் வேதாகமத்தின் ஊடாக
நூல் : ஆதியாகமம்
பகுதி : ஆதியாகமம் 1:2-25
நிகழ்ச்சி : #0014

வாசியுங்கள்

TTB 0014 – ஆதியாகமம் 1:2-25

அருமையானவர்களே இன்று நாம்  ஆதியாகமம் 1ஆம் அதிகாரம்  இரண்டாம் வசனம் முதல் 25 ஆம் வசனம் வரை கற்றுக் கொள்ளப் போகிறோம்.

 வாசிக்கிறேன், ஆதி1:2

‘பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ‘

…………………………

கடந்த சில வருடங்களாக இந்த கண்ணோட்டம் பலரால் இழிவுபடுத்தப்பட்டிருந்தாலும் வசனங்கள் ஒன்று மற்றும் இரண்டுக்கு இடையில் ஒரு பெரிய பேரழிவு நிகழ்ந்ததாக நான் நம்புகிறேன்.  எனக்கு தெரிந்தவரை அதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.  முதலாவதாக இந்த மாபெரும் படைப்பை பாருங்கள்.  இதற்கு ஏதோ நடந்திருக்கிறது. மனிதன் சந்திர மண்டலத்திற்கு சென்று வந்த பின்னரே அங்கே மனிதர்கள் வாழ முடியாத ஒரு வெற்றிடம் தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டான். தேவன் படைத்திருந்த  பிரபஞ்சத்திலே  திடீரென்று ஏதோ ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இது பூமியை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது ஏனென்றால் இங்கு தான் மனிதன் வாழ்கிறான் எனவே பூமியை குறித்து தான் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையும் இருந்தது என்று வாசிக்கிறோம்.

ஆழத்தின் மேல் இருள் இருந்தது என்பது அங்கே தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் இருந்ததை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல ஒழுங்கின்மையும் வெறுமையாய் இருந்தது என்பது சிறப்பான ஒரு வெளிப்படுத்துதல். ஒழிங்கின்மை என்பதற்கான எபிரேய வார்த்தை போகு என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால் அழிவு அல்லது வெற்றிடம் அல்லது ஒன்றும் இல்லாமல் என்று கூறலாம். இதைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியில் சொல்லப்பட்டிருக்கிற வசனத்தை கவனியுங்கள்.  ஏசாயா 45:18வசனம்

‘வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை. ‘

…………………….

இங்கே கர்த்தர் சொல்வது என்ன,  வெறுமையாக இருப்பதற்காக தேவன் பூமியை  உண்டாக்கவில்லை.  வெறுமை என்பதற்கு இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற அதே கிரேக்க வார்த்தை தான் ஆதியாகமம் முதலாம் அதிகாரம் இரண்டாவது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன் இந்த பிரபஞ்சத்தை ஒரு குழப்பமாய் படைக்கவில்லை ஒரு உலகத்தை படைத்தார். இதைத்தான் ஏசாயா தெளிவுபடுத்த விரும்புகிறார். தேவன் தோகு வா போகுவை படைக்கவில்லை. ஆனால் இந்த உலகம் வா போகுவாக ஆயிற்று . தேவன் பூமியை மனிதன் வசிப்பதற்காக உருவாக்கினார்.  இந்த அழிவும் வெறுமையுமாய் இருந்த இடத்திற்கு வந்து மனக்குலம் வாழக்கூடிய ஒரு இடமாக மாற்றியவர் கடவுள்தான். விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் வாழ்கிற நாம் அறிந்து கொள்கிற உண்மை என்னவென்றால் இந்தப் பிரபஞ்சத்தின்  எல்லா இடங்களிலும் பூமி மட்டுமே மனிதர்கள் வசிக்கத்தக்க ஒரு இடமாக இருக்கிறது. இந்த பூமி உருவமற்றதாகவும் வெற்றிடமானதாகவும் மாறியது என்றும் கடவுளின் ஆவி தண்ணீரின் மேலே அசைவாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லும் பொழுது அது சந்திரனை போலவே மனிதன் வாழ தகுதியற்றதாக இருந்தது. இந்த பெரிய பேரழிவின் கீழ் முழு  பிரபஞ்சமும் வந்ததாக நாம் நம்பலாம் அந்த பேரழிவு என்ன?  இதை நாம் ஊகிக்கத்தான் செய்யலாம்.  ஒரு படைப்பு அங்கே இருந்திருக்கிறது. விடியற்காலையின் மகனான லூசிபர் பரலோகத்தில் இருந்து விழுந்த நிகழ்ச்சி தொடர்பானதாய் அது இருக்கலாம். நாம் சாத்தான் மற்றும் பிசாசு என்று சொல்கிறோமே அவனோடு தொடர்புள்ள ஒன்றாய் இருக்கலாம். ஆனால் இந்த காரியங்களை குறித்ததான விளக்கத்தை தேவன் நமக்குத் தரவில்லை மிகக் குறைவான உண்மைகளையே தேவன் நமக்கு ஆதியாகமத்திலே கொடுத்திருக்கிறார்.

இரண்டாம் வசனத்தின் பின்பகுதியில் நாம் பார்ப்பது என்ன? தேவ ஆவியானவர் ஜலத்தின் -மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்

……………

அசைவாடிக் கொண்டிருப்பது என்றால், கோழி தன் குஞ்சுகளை அரவணைத்துக் காப்பது போல பரிசுத்த ஆவியானவர் பூமியை காத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதும் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரு பணியை அங்கே துவங்கினார் என்று சொல்லலாம். அதாவது மீண்டும் படைக்கும் ஒரு ஊழியம்.  அவர் இந்த ஒழுங்கின்மையான சூழ்நிலைக்குள்ளே வந்து மீண்டும் புதுப்பித்து சிருஷ்டித்தார் என்று சொல்லலாம். பரிசுத்த ஆவியானவர் நமக்காக என்றும் இதைத்தான் செய்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியது நினைவிலே இருக்கிறதா?? யோவான் 3 5 பாருங்கள்.

‘இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். ‘

…………………………..

இங்கே தண்ணீர் என்பது கர்த்தருடைய வார்த்தையை குறிக்கிறது.  இதற்கு அடையாளமாக ஞானஸ்நானத்தை சொல்வீர்கள்  என்றால் அதுவும் சரிதான். ஆனால் தண்ணீர் என்றால் அது கர்த்தருடைய வார்த்தை. பரிசுத்த ஆவியானவரே அதை உண்டாக்கினவர்.  இந்த காரியங்களை எப்பொழுதும் நாம் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அடுத்ததாக பூமி சிருஷ்டிக்கப்பட்டதை நாம் சிந்திப்போம்.  அண்ட சராசரங்களும் சிருஷ்டிக்கப்பட்டது குறித்து முதல் வசனத்தில் நாம் பார்க்கிறோம். ஆனால் பூமியிலே ஏற்பட்ட ஒழுங்கின்மையும் வெறுமையும் குறித்து இரண்டாவது வசனத்தில் பார்த்தோம்.  தொடர்ந்து மூன்றாம் வசனம் முதல் 31 ஆம் வசனம் வரை அவர் மீண்டுமாக உலகத்தை எவ்வாறு ஆறு நாட்களிலே சிருஷ்டித்தார் என்பதை சற்று விரிவாக பார்க்கப் போகிறோம்.

இங்கே பல காரியங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  முதலாவதாக,   ஆதியாகமம்  முதலாம் அதிகாரத்தில் மட்டுமல்ல  யாத்திராகமம் 20:11ஆம் வசனத்திலும்,

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி,……..

 என்று வாசிக்கிறோம்.

இந்த வசனத்திலே கர்த்தர்  சிருஷ்டித்தார் என்று சொல்லப்படவில்லை கர்த்தர் உண்டாக்கினார், என்று சொல்லப்பட்டு இருக்கிறது.  அதாவது ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்ட காரியங்களில் இருந்து ஆறு நாட்களிலே மறு படைப்பு செய்கிறார் என்று சொல்லலாம். அதாவது ஏற்கனவே இருந்த பொருட்களைக் கொண்டு அவர் மீண்டும் செயல்படுகிறார். இந்த பொருட்களை அவரே ஒருவேளை பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பாக படைத்திருக்கலாம். தேவன் உயிரினத்தை  உருவாக்கி இந்த உலகத்திலே வைத்தார். உலகத்திற்காக அவர் மனிதனையும் உண்டாக்கினார். இந்த படைப்பை குறித்து நாம் கரிசனை உள்ளவர்களாக இருக்கிறோம்.. ஏனென்றால் நானும் நீங்களும் அப்படிப்பட்ட ஒரு படைப்பாய் இருக்கிறோம். எனவேதான் ஆதியாகமம் இன்றும் நமக்கு ஒரு முக்கியமான பகுதியாய் இருக்கிறது.

ஆதியாகமம் 1:3-5

‘தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ‘

……………………………

இது 24 மணி நேரம் கொண்ட ஒரு நாள் என்று நாம் விசுவாசிக்கலாம். தேவன் என்ன கூறுகிறார் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார்.  இங்கே உண்டாகக்கடவது – பிரிக்கக்கடவது என்பன போன்ற பல கட்டளைகளை பார்க்கிறோம்.  இதைக் குறித்து ஒருவர் சொல்லும் பொழுது படைப்பின் பத்து கட்டளைகள் என்று இதை கூறுகிறார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னார் கடவுள் பேசியதாக நமக்கு சொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுவே வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய முதல் வார்த்தைகள்.

ஆதியாகமம் 1:6 பாருங்கள்

‘பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். ‘

……………………………..

தேவன் ஆகாய விரிவு உண்டாகக்கடவது என்றார், இதற்கான எபிரேய வார்த்தை  றக்கியா என்பதாகும்.  இது காற்றாலான இடைவெளி தூரம் என்று சொல்லலாம் அதாவது ஜலத்திலிருந்து ஜலம் பிரியக்கடவது என்று கூறினார். இதன் பொருள் என்ன? அதாவது தண்ணீர் நமக்கு மேலும் இருந்திருக்கிறது. எனவே மேலும் கீழும் இருந்த தண்ணீர் அகன்று போகும்படியாக தேவன் கட்டளை கொடுத்தார். அது அப்படியே ஆயிற்று என்று பார்க்கிறோம்.

ஆதியாகமம் 1:7

‘தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. ‘

……………………….

மழை அதிகம் பெய்யாத இடத்தில் வாழும் ஒருவர் வருடத்திற்கு 200 அங்குலம் மழை பெய்யும் இடத்திற்கு செல்வார் என்றால் அந்த அனுபவம் நிச்சயமாக அவர்களுக்கு வித்தியாசமானதாய் இருக்கும். இதுவும் தேவனுடைய செயலே. தேவன் பூமியை  உண்டாக்கிய காலத்திலும் மேலே இருக்கிற தண்ணீருக்கும் கீழே இருக்கிற தண்ணீருக்கும் இடையில் ஒரு பிரிவை உண்டு பண்ணினார்.

ஆதியாகமம் 1:8

‘தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. ‘

………………………………

இங்கே, தேவன் ஆகாயவிரிவுக்கு  வானம் என்று பெயரிட்டார் என்று பார்க்கிறோம்.  சிலர் இதை பரலோகம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.  வேத புத்தகத்தில் மூன்று வானங்களை குறித்து நாம் வாசிக்கிறோம்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வானத்து பறவைகளைப் பற்றி பேசினார். அதுதான் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வானம் என்று நாம் சொல்லலாம். பின்னர் வானத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அது இரண்டாவது வானம் என்று சொல்லலாம் மேலும் தேவன் வசிக்கும் மூன்றாவது வானமும் இருக்கிறது. எனவே முதல் அடுக்கு மேகங்கள் இருக்கும் இடம் மற்றும் பறவைகள் பறக்கும் இடம் என்று இந்த வானத்தை நாம் கூறலாம்.

ஆதியாகமம் 1:9-10

‘பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ‘

…………………………

இப்பொழுது கிடை மட்டத்தில் தண்ணீர் பிரிக்கப்படுகிறது. முதலாவது மேலே இருந்த தண்ணீர் கீழாக பிரிக்கப்பட்டது. இப்பொழுது தண்ணீர் நிலத்தின் மேலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இது விஞ்ஞானத்திற்கு விரோதமானது அல்ல. நாம் குடியிருக்கும் இந்த பூமியின் மேற்பரப்பு முழுவதும் ஒரு காலத்தில் தண்ணீரால் மூடப்பட்டு இருந்தது என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கிறார்கள். நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத முன்னொரு காலத்தில் பூமியின் மேலே ஒரு நியாயத்தீர்ப்பாக அவ்வாறு தண்ணீர் இருந்திருக்கிறது. இதைக் குறித்து நாம் விவரிக்க நினைத்தால் நம்முடைய ஊகத்திலே தான் நாம் பேச முடியும். ஏனென்றால் இது குறித்து நமக்கு குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் நாம் அவர் மேல் விசுவாசம் வைப்பதற்கு போதுமான அளவு நமக்கு கூறப்பட்டிருக்கிறது.

சரி, தேவன் வெட்டாந்தரைக்கு பூமி என்றும் ஜலத்திற்கு சமுத்திரம் என்றும் பெயரிட்டார் என்று வாசிக்கிறோம்.  இங்கே அவர் என்ன செய்ய துவங்குகிறார்? மனிதனை இங்கே வைக்கக் கூடிய ஒரு இடத்தை தேவன் ஆயத்தப்படுத்துகிறார் என்று கூறலாம். மனிதன் தண்ணீரில் வாழும் ஒரு உயிரினம் அல்ல.  கடலில் உள்ள ஒரு செடியில் இருந்து மனிதன் வந்தான் என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும், சிலர் சாய்வாக வைக்கப்பட்ட ஒரு வாழியிலிருந்து வெளியே வந்தான் என்று சொன்னாலும் அது எவ்வளவு சிரிப்பான ஒரு காரியம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

ஆதியாகமம் 1:11

‘அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ‘

………………………….

நோவாவின் காலத்தில் வெள்ளம் வரும் வரை மனிதன் சைவ உணவை மட்டுமே உட்கொண்டான்.  அதற்காகத்தான் அவனுக்கு தேவன் பூமியிலே பயணங்களை உருவாக்கிக் கொடுக்கிறார்.  அக்காலங்களில் மனிதன் பழங்களையும் கொட்டைகளையும் உணவாக எடுத்துக் கொண்டான்.  எனவே மூன்றாவது நாள் தேவன் இந்த பூமியிலே தாவரங்களை உண்டாக்கினார் என்று வாசிக்கிறோம்.

ஆதியாகமம் 1:12-13

‘பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. ‘

…………………………….

ஆம் நான் வாசித்தது போல மூன்றாவது நாளில் தேவன் புல்லையும் பூண்டுகளையும் தாவர வகைகளையும் கனி மரங்களையும் உண்டாக்கினார்.

வசனம் 14

‘பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ‘

…………………………

இந்த காலகட்டத்தில்தான் தேவன் சூரியனையும் சந்திரனையும் படைத்தார் என்று நாம் நினைக்கக் கூடாது. இவை எல்லாமே ஏற்கனவே இருக்கின்றன. அவைகளை அந்தந்த இடங்களிலே நாட்களையும் காலங்களையும் வருடங்களையும் கணக்கிடும்படியாக அவர் கொண்டு வந்து வைக்கிறார்.

ஆதியாகமம் 1:15-16

‘அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ‘

……………………………..

பகலை ஆள தேவன் சூரியனை படைத்தார் அது தன்னுடைய பணியை சிறப்பாய் செய்கிறது. இரவிலே வலம் வரும்படியாக சந்திரனையும் அவர் வைத்தார். இரவில் வரும் நிலவும் அநேகருடைய வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று சொல்லலாம். நிலவின் ஒளியிலே அதாவது முழு நிலவிலே சிறப்பாக செய்யும் காரியங்களை மனிதர்கள் காலம் காலமாக திட்டமிட்டு செய்கிறார்கள். பௌர்ணமி அன்று ஊழியங்களுக்கு போகும் திருச்சபைகள் உண்டு. பௌர்ணமி அன்று ஆலய வளாகத்தில் கூடி ஆண்டவரே ஆராதிக்கும் சபைகள் உண்டு. பௌர்ணமி அன்று சிறப்பு விருந்தை ஒழுங்கு செய்யும் குடும்பங்களும் குழுக்களும் உண்டு.

இவை மட்டுமல்ல, மேலும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார் என்று வாசிக்கிறோம். இது ஏதோ சிறிய காரியம் போல எழுதப்பட்டிருக்கிறது ஆனால் இது எவ்வளவு பெரிய வேலை இல்லையா?? ஆனால் தேவனுக்கு அதுவும் ஒரு பெரிய வேலை அல்ல.

போதகர் ஜான் வெஸ்லி அவர்கள் கூறும் பொழுது,  தேவன்,வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்-  அதில்  பாதி கூட முயற்சித்திருக்க மாட்டார்  மேலும் நட்சத்திரங்களையும் உண்டாக்கி விட்டார் என்று கூறி இருக்கிறார்.

ஆதியாகமம் 1:17-18

‘அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும். பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ‘

………………………….

வெளிச்சத்துக்கும் இருளுக்குமான வித்தியாசத்தை தேவனே இங்கே உண்டாக்கினார். அருமையான சகோதரனே, சகோதரியே, இன்றைக்கும் இருளுக்கும் ஒளிக்குமான வித்தியாசத்தை அவரே தீர்மானிக்கிறார்.  இந்த நாட்களில் மனிதர்களுக்குள்ளே பலர் சரியான காரியத்திற்கும் தவறான காரியத்திற்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள். தேவனே இவை இரண்டிற்கும் இடையிலான கோட்டை போட்டு விட்டார். மற்றபடி நமக்கு எது சரி எது தவறு என்று எப்படி தெரியும்?? சரியானவை எவை என்று தேவன் சொல்லுகிறாரோ அவைகளே சரியானவை. தேவன் சில சட்ட திட்டங்களை நமக்கு கொடுத்திருக்கிறார். வெளிச்சத்தில் இருந்து இருளை அவர் பிரித்தார். அதாவது சரிக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசத்தை போல. இன்றைக்கும் அந்த வித்தியாசத்தை தேவனே சொல்கிறார், எதிர்பார்க்கிறார், செய்கிறார்.

 நம்முடைய வாழ்க்கையிலும் ஒளிக்கும் இருளுக்குமான வித்தியாசத்தை அறிந்தவர்களாக வாழ்கிறோமா? என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  இன்று அனேகர் தவறான காரியங்களிலே ஏன் உற்சாகமாய் நடந்து செல்கிறார்கள் என்றால்; அது தவறு என்ற உணர்வற்றவர்களாய் அவர்கள் செல்கிறார்கள். வேத வசனங்களை நாம் வாசிக்கும் பொழுதும், தேவனோடு ஐக்கிய முன்னோர்களாய் நாம் இருக்கும் பொழுதும், தவறுக்கும் சரியான காரியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தேவன் நமக்கு உணர்த்துகிறார். எனவேதான் தேவனுக்கு பிரியமாய் வாழ விரும்புகிற ஒவ்வொரு மனிதனும் தவறு செய்யும் பொழுது தனது உள்ளத்தில் தான் செய்தது தவறு இனி இதை செய்யக்கூடாது என்ற உணர்வை பெற்றுக் கொள்கிறான்.

 என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே உங்கள் வாழ்க்கையில் அந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் உணர்வு உங்களுக்கு இருக்கிறதா?/ அப்படி என்றால் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். சரியான காரியத்தை அறிந்து இருந்தாலும் அதை செய்வதற்கான பலனை பரிசுத்த ஆவியானவரே நமக்கு தருகிறவராக இருக்கிறார்.

தொடர்ந்து ஆதியாகமம் 1:20,21ஆம் வசனங்களைப் பாருங்கள்.

‘பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். ‘

‘தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ‘……………………..

நமக்கு ஓரளவு வளர்ச்சி இருக்கிறது.  ஆனால் இப்படி சொல்வதினால் எல்லாம் ஒரு சிறிய செல்லில் இருந்து வந்தது  என்பது அல்ல.  தேவன் ஒவ்வொரு உயிரினத்திலும் ஒன்றைப் படைத்தார்.  அந்த ஒவ்வொரு உயிரினத்தில் இருந்தும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  ஜலமானது திரளாய் ஜநிப்பிக்க கடவது என்று கூறினார்.  இது மட்டுமல்ல அடுத்த வசனத்தில்  ஜாதி ஜாதியாய் என்று வாசிக்கிறோம். ஜாதி என்று சொல்லும் பொழுது ஒரு குறிப்பிட்ட வகை மட்டும் அல்ல.  அதைவிட அதிகமானதைக்  குறிக்கிறது. ஜாதி ஜாதியாய் என்பதை குறித்து சொல்வதற்கு ஒரு விஞ்ஞானி வார்த்தையை தேடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.  வேத சாஸ்திர கல்லூரி பேராசிரியர் ஒருவர் இதற்கு ஆங்கிலத்திலே phylum என்ற வார்த்தை பயன்படுத்தலாம் என்றார். இதை நீங்கள் அகராதியில் பார்த்தால் அது ஒரு குழுவிற்குள் ஒரு நேரடி வம்சாவளியை குறிக்கிறது. உதாரணமாக ஒரு   குதிரையை மட்டுமல்ல, குதிரை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு விலங்கையும் குறிக்கும்.  தேவன் அப்படிப்பட்ட ஒன்றைப் படைத்தார் ஒவ்வொரு உயிரினத்தில் இருந்தும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது; மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும்   தொடர்ந்து  சீரழிவும் ஏற்பட்டுள்ளது.

அந்த வசனத்தின் கடைசியில் தேவன் அது நல்லது என்று கண்டார் என்று வாசிக்கிறோம்.  தேவன் ஒன்றை செய்யும் பொழுது நிச்சயமாக அது நல்லதாகவே இருக்கும்.  உங்கள் வாழ்க்கையிலும் தேவன் எதை செய்தாலும் அது நலமானதாகவே இருக்கும்.

ஆதியாகமம் 1:22

‘தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். ‘

…………………..

நான் முன்பு மேற்கோள் காட்டிய ஒரு விஞ்ஞானி நமது பள்ளிகளிலே  வேதத்தில் சொல்லப்பட்டுள்ள படைப்பு சரித்திரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால்,  நாரையை குறித்த ஒரு கட்டுக் கதையையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். வேத வசனம் கற்பனையில் எழுந்த அந்த நாரை கதையையும் புறக்கணிக்கிறது. இந்த வசனத்தை நாம் கவனமாய் பார்த்தால் தேவன் அவர்களை ஆசீர்வதித்து,  நீங்கள் பழகி பெருகி சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்று கூறினார். அதேபோல பறவைகளும் பூமியிலே பெருக வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை.

ஆதியாகமம் 1:23-25

‘சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். ‘

…………………………..

இங்கே மீண்டும் ஜாதி ஜாதியாய் பிறப்பிக்க கடவது என்கிற வார்த்தையை கவனிக்கிறோம்.  இப்பொழுது தேவன் தாவர வாழ்க்கையையும் விலங்கு வாழ்க்கையையும் மனித குலத்திலிருந்து பிரிப்பதை பார்க்கிறோம்

இங்கே நாம் மூன்று வகைகளைப் பார்க்கிறோம்:

  1. கால் உள்ள மிருகங்கள் (பெரியவை – யானை, சிங்கம் போன்றவை)
  2. ஊர்ந்து செல்லும் விலங்குகள் (பாம்பு, தவளை போன்றவை)
  3. பூமியின் ஜந்துக்கள் (சிறியவை – எலி, பூச்சி போன்றவை)

இவைகளைத்தான் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார். இதிலிருந்து மிகப் பெரிய உண்மை வெளியாகிறது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் படைத்தார். ஒரு ஜாதி மற்றொன்றாக மாறவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. மனிதன் குரங்கிலிருந்து வந்தான், குரங்கு வேறொரு ஜந்துவிடமிருந்து வந்தது, அந்த ஜந்து இன்னுமொரு ஜந்துவிடமிருந்து வந்தது என்ற கோட்பாடு இங்கே பொய்யாகிறது.

மேலும் அவர் நமது சாயலில் மனிதனை உருவாக்குவோம் என்று கூறுகிறார். இந்த உயிரினம் உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது இல்லையா? ஏனென்றால் அவர் உங்கள் தாத்தா என்னுடைய தாத்தா ஆவார். இதன் பொருள் நீங்களும் நானும் உறவினர்கள்தான் . முழு மனக்குலமும் ஒரே குடும்பம் என்பதை தெளிவு படுத்துகிறது. 

முடிவுரை எழுத வேண்டும்

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் 2 முதல் 25 வசனங்கள் வரை நாம் இன்று பர்த்தோம். இந்த வசனங்களின் மூலம் நாம் அறிவது என்ன?  கடவுள் குழப்பத்தை ஒழுங்காக மாற்றுகிறார். எல்லாம் திட்டமிட்டு, அழகாக, நோக்கத்தோடு நடக்கிறது. தேவன் ஒழுங்கை விரும்புகிறார் என்பது இதிலிருந்து நமக்குப் புரிகிறது. நாம் எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்கிறோமா? அல்லது வேலையை முடிக்க வேண்டுமே என்று ஏனோ தானோவென்று செய்கிறோமா? எனக்கு அருமையான சகோதரனே, சகோதரியே, நீங்கள் எதைச் செய்தாலும் ஒழுங்கோடும், கிரமத்தோடும் செய்யுங்கள். அதைத்தான் ஆண்டவர் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

ஒவ்வொரு நாளும் தேவன் படைத்ததற்குப் பிறகு அது நல்லது என்று கண்டார் என்று மீண்டும் மீண்டும் வருகிறது. இது பாவம் இந்த உலகத்துக்கு வருவதற்கு முன் இருந்த நிலைமை. அப்பொழுது எல்லாமே முழுமையாக நல்லதாக இருந்தது.

மனிதன் இன்னும் படைக்கப்படவில்லை. ஆகவே பிரபஞ்சம் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது என்பது தெரிகிறது. மனிதனைப் படைப்பதற்கு முன் தேவன் அவனுக்குத் தேவையானவைகளை ஒவ்வொன்றையும் கரிசனையோடு நேர்த்தியாகப் படைத்தார். இது தேவனின் அளவற்ற அன்பைக் காட்டுகிறது.

“தங்கள் தங்கள் ஜாதியின்படியே” என்று 10 முறை வருகிறது. ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியே, மாற்றமில்லாமல் படைக்கப்பட்டது.

இந்த 24 வசனங்களில் தேவன் ஒரு குழப்பமான, இருண்ட, வெறுமையான உலகை- ஒளிமயமான, ஒழுங்கான, உயிருள்ள, அழகிய உலகமாக மாற்றுகிறார். அடுத்து மனிதனைப் படைத்து அதன் மேல் ஆளுகை செய்ய அழைக்கிறார்.

இதுவே படைப்பின் முதல் பாதி. மனிதனுக்கு ஒரு பூரணமான வீடு தயாரிக்கும் தேவனின் அன்பின் பிரமாண்டமான காட்சி!

எனவே எந்த இயற்கை காட்சிகளை நாம் காணும் பொழுதும்எனவே எந்த இயற்கை காட்சிகளை நாம் காணும் பொழுதும் , இவையெல்லாம் தேவனுடைய படைப்பு என்பதை நினைவிற்கு கொண்டு வருவது மட்டுமல்ல அவைகளின் அழகிற்காக அது எத்தனை விதங்களில் மனிதனுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது என்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

 மேலும் உலகில் உயிருடன் வாழும் ஜீவஜந்துகளை கவனிக்கும் பொழுதும் தேவனுடைய படைப்பின் மகத்துவத்திற்காக ஆண்டவரே நாம் மகிமைப்படுத்த வேண்டும்.

 இவை எல்லாவற்றையும் தேவன் நமக்காக படைத்து கொடுத்திருப்பதால் இவைகளை அழிக்காமல் கேடு விளைவிக்காமல் இவைகளை பாதுகாப்பதும் நமது கடமை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயற்கையை,  மாசுபடுத்துகிறவர்களுக்கு  இயற்கையை அழிக்க முற்படுகிறவர்களுக்கு  எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமானதா இருக்கிறது.

 மிக நேர்த்தியாக தேவன் நமக்கு படைத்துக் கொடுத்த உலகத்தை பாதுகாக்க வேண்டியதும் பராமரிக்க வேண்டியதும் மனிதனுடைய கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  அப்படிப்பட்ட கிருபையை இந்த வார்த்தைகளை கேட்கும் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் தருவாராக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top