ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 9:6-29
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 9:6-29
நிகழ்ச்சி எண்: 0027

வாசியுங்கள்

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்து வரும் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன்.
இன்று நாம் ஆதியாகமம் 9: 6 – 29 பார்க்க போகிறோம்.
தேவன் மனிதனோடு உடன்படிக்கை பண்ணிய பொழுது அவர் கூறிய ஐந்தாவதும் கடைசியுமான வாக்கியத்தை நாம் கவனிக்க வேண்டும்.
‭ஆதியாகமம் 9:6
[6] மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
…………………..
இங்கே நாம் பார்ப்பது போல தேவன் மனித அரசாங்கம் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு கொள்கையை கூறுகிறார். அரசாங்கத்திற்கு மரண தண்டனை வழங்குவதற்கான உரிமையை கடவுள் கொடுக்கிறார். தேவன் கொடுத்த இந்த புதிய உடன்படிக்கையில் மனிதன் தனது சந்ததியை பெருக்க வேண்டும். விலங்குகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அவைகளை வழிநடத்த வேண்டும். இப்பொழுது மனிதன் மற்ற மிருகங்களை, பறவைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்பதை குறித்து தேவன் கூறுகிறார் ஆனால் அவன் இரத்தம் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். இப்பொழுது அரசாங்கத்தின் கொள்கையை அவனுக்கு கடவுள் கொடுப்பதை பார்க்கிறோம். இதுதான் மரண தண்டனைக்கான அடிப்படை ஆகும்.
இன்றைய தலைமுறையின் அணுகுமுறை வேத புத்தகத்தில் இருந்து எவ்வளவோ தூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வேதத்தை இப்பொழுது மையமாகக் கொண்ட மக்கள் தொகை நம்மிடத்தில் இல்லை. தேவனுடைய வார்த்தையை பற்றி மக்கள் முற்றிலும் அறியாமையில் இருக்கிறார்கள். இதன் விளைவாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் தொடர்புடையவர்கள் அனைவரும் மரண தண்டனையை ஒழிக்க விரும்புவதை நாம் பார்க்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
இதே நேரத்தில் குற்றங்கள் அதிகரிப்பதையும் மிகக் கொடூரமான குற்றங்கள் நடப்பதையும் நாம் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். மரண தண்டனை கிறிஸ்தவமா என்ற தலைப்பிலே டாக்டர் வர்ணன் மகி அவர்கள் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்கள். மரண தண்டனை என்பது வேத வசனத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட ஒன்று. ஒருவர் மற்றும் ஒருவரின் உயிரை பறிக்கும் பொழுது அந்த நபரின் உயிரை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உண்டு. ஏன் ? மனித உயிர்களை பாதுகாக்க தேவன் அவ்வாறு கட்டளையிட்டு இருக்கிறார் என்பது மிகவும் தெளிவானது.
இன்று செய்தித்தாளை நாம் பார்க்கும்பொழுது பட்டப் பகலில் கூட்டம் அதிகமாய் இருக்கும் இடங்களிலேயே கூட மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டினுள் இருப்பவர்களுக்கும் பாதுகாவல் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் பலர் இதை மறுக்கிறார்கள் என்றாலும் அதற்கு காரணம் மரண தண்டனை குறித்த நமது அணுகுமுறைதான். ஒரு குற்றவாளி ஒரு உயிரை பறித்தால் தனது உயிரும் பறிக்கப்படும் என்பதை அறியும்பொழுது அவன் ஒரு உயிரை எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பான். மேலும் இன்று ஆயுதங்களை எடுத்துச் செல்வதை குறித்த பல கட்டுப்பாட்டு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மையான பிரச்சனை ஆயுதங்களில் அல்ல, மனிதனுடைய இருதயத்தில்தான் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மனுஷனுடைய ரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய ரத்தம் மனுஷனால் சிந்தப்பட வேண்டும் என்ற கட்டளை நமது சட்ட புத்தகங்களில் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு சட்டமாகும். உண்மையில் தேவையற்ற ஒரு அனுதாப போக்கை நாம் ஒழிக்க வேண்டும். மனித அரசாங்கம் என்பது அனைத்து மனு குலத்திற்கும் உட்படுத்தப்பட்ட ஒரு அடிப்படை. மனிதனுடைய ரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய ரத்தம் மனுஷனால் சிந்தப் பட வேண்டும் என்று கடவுளே சொல்கிறார். ஏனென்றால் தேவன் மனுஷனை தம்முடைய சாயலாக உண்டாக்கினார். இதுதான் மனித அரசாங்கத்தின் அடிப்படை. உலக அரசாங்கங்களை பொருத்தவரையிலும் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

‭ஆதியாகமம் 9:7
[7] நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார்.
…………..
முதலாம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற கட்டளை மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.
எட்டாம் ஒன்பதாம் வசனங்களைப் பாருங்கள்.
‭ஆதியாகமம் 9:8-9
[8] பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி: [9] நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
…………………
“பின்னும்” என்ற வார்த்தை முக்கியம் — ஏற்கனவே தேவன் நோவாவோடு 9ஆம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் 7ஆம் வசனம் வரை பேசியிருந்தார். இப்போது மீண்டும் ஒரு புதிய, மிகப் பெரிய வாக்குத்தத்தத்தைத் தருகிறார். தேவன் நோவாவுடன் மட்டுமல்ல, அவன் மகன்களிடமும் நேரடியாகப் பேசுகிறார். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த உடன்படிக்கை ஒரு தனி நபருக்கு மட்டுமல்ல, முழு மனித இனத்திற்கும், அதாவது எதிர்கால சந்ததிகளுக்கும் செல்லுபடியாகும்.
தேவன் தம்மை தாழ்த்தி மனிதரோடு உரையாடுகிறார். இது தேவனுடைய கிருபையையும், தொடர்பு கொள்ளும் ஆவலையும் காட்டுகிறது.

தேவன் நோவாவுக்கு கொடுத்த கட்டளைகளும் அவருடைய புதிய உடன்படிக்கையும் நோவாவோடு மட்டுமல்ல, நோவாவின் எல்லா சந்ததியினருக்கும் உரியதாகும். அதாவது நோவாவை தொடர்ந்து உலகத்தில் தோன்றிய அத்தனை ஜனக் கூட்டத்திற்கும் அது சொந்தமானது.
வசனம் பத்து
‭ஆதியாகமம் 9:10
[10] உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.
………………
தேவனுடைய படைப்புகள் அனைத்தும் இந்த உடன்படிக்கைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒருநாள் சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும் என்றும் அவை எதற்கும் தீங்கு செய்யாது அல்லது எதையும் அழிக்காது என்றும் ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் தற்போதைய காலத்தில் சிருஷ்டி அனைத்தும் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். பூமியில் தேவனுடைய ராஜ்யம் வரும் வரை நோவாவுடனும் அவருடைய அனைத்து படைப்புகளுடனும் தேவன் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் என்று நான் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் இது நோவாவின் அனைத்து சந்ததியினருக்கும் மற்றும் உங்களோடு இருக்கிற சகல ஜீவ ஜந்துக்களுக்கும் உரியதாகும் என்று தேவன் கூறி இருப்பதை நாம் பார்க்க வேண்டும்.
பிரியமானவர்களே, இது தேவனுடைய ஒரு வாக்குறுதி. இனி ஒருபொழுதும் பூமியை ஒரு ஜலப் பிரளயத்தினால், ஒரு பெரிய வெள்ளத்தினால் அவர் அழிக்க மாட்டார் என்பதே அவருடைய வாக்கு. அடுத்த முறை பூமியின் மீதான அவருடைய நியாயத் தீர்ப்பு அக்கினியாகத்தான் இருக்கும். இது குறித்து பேதுரு தனது நிருபத்தில் எழுதியிருக்கிறார். கவனியுங்கள், வாசிக்கிறேன்.
‭2 பேதுரு 3:7
[7] இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
…………..…
“உடன்படிக்கை” – ஆங்கிலத்தில் இதை Covenant என்று சொல்வார்கள்.வேதாகமத்தில் இது மிக முக்கியமான ஒன்று. இது சாதாரண ஒப்பந்தம் அல்ல, உயிர், மரணம் தொடர்பான, நிரந்தரமான வாக்குறுதி.
“… ஏற்படுத்துகிறேன்” — உடன்படிக்கை செய்வது தேவனே. தாமாக முன்வந்து செய்கிறார். மனிதன் கேட்டு செய்யவில்லை; தேவனுடைய ஒருதலை முயற்சி இது. (unilateral).

அடுத்த சில வசனங்களில் இந்த உடன்படிக்கையின் ஒரு சித்திரத்தை நாம் பார்க்கிறோம். சொல்லப்போனால் இது அந்த உடன்படிக்கையின் உண்மையான ஆவிக்குரிய பொருளை கொடுக்கிறது. இதை ஒரு சாக்கிரமந்து போன்றது என்று கூட சொல்லலாம். அதாவது வாக்குறுதியுடன் இணைக்கப்பட்ட ஒரு வெளிப்படையான அடையாளம் என்பதே இதை அவ்வாறு மாற்றுகிறது.

வசனங்கள் 12 13 பாருங்கள்.
‭ஆதியாகமம் 9:12-13
[12] அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: [13] நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
………………..
வானவில் ஒரு சாக்கிரமந்து. அதாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம்.
Rainbow picture
வானவில் அடையாளமாக வருகிறது. இந்த வானவில் உடன்படிக்கையின் அத்தாட்சி. இது தேவன் கொடுக்கும் sign. தேவன் மேகத்தில் வானவில்லை வைத்திருக்கிறார். அது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நிரந்தர ஞாபகச் சின்னம்.
தேவனுடைய கிருபை மற்றும் பொறுமை இங்கே வெளிப்படுகிறது. மனிதன் பாவம் செய்து உலகைக் கெடுத்த பிறகும், தேவன் அழித்துவிடாமல், மீண்டும் வாழ வாய்ப்பு தருகிறார். இது வேதாகமம் முழுவதும் தொடரும் கிருபையின் முன்னோடி. இது இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் புதிய உடன்படிக்கைக்கு அடித்தளம்.
“சகல் ஜீவஜந்துக்களுக்கும்” – எல்லா ஜீவன்களையும் உள்ளடக்கியது. மனிதன் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் எல்லாம் இந்த உடன்படிக்கையில் அடங்கும்.
இந்த வசனங்கள் மூலம் நாம் அறிவது என்னவென்றால், தேவன் தம்முடைய உலகத்தை விட்டுவிடவில்லை. அவர் நம்மோடு உறவு வைத்திருக்க விரும்புகிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்பகமானவை. இது நமக்கு எவ்வளவு தூரம் ஆறுதல் கொடுக்கிறது, இல்லையா?

தொடர்ந்து 14 முதல் 16 ஆம் வசனம் வரை பாருங்கள் வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 9:14-16
[14] நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். [15] அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். [16] அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
…………………
“அந்த வில் மேகத்தில் தோன்றும்” — வானவில் என்பது மழைக்குப் பின் சூரிய ஒளி நீர்த்துளிகளில் பிரிகையில் உருவாகும் ஒளி வளைவு. ஆனால் இங்கு தேவன் அதை மேகத்தில் தோன்றச் செய்கிறார். பண்டைய காலத்தில் “வில்” என்பது போர் ஆயுதம். வில் அன்றால் அம்பு. ஆனால் இங்கு அது போரை நிறுத்திய அடையாளம். தேவன் தம்முடைய “யுத்த வில்லை” கீழே வைத்துவிட்டார் என்ற பொருள். ஜலப்பிரளயம் போன்ற தண்டனை இனி வராது. இனிமேல் தேவனுடைய கிருபையினால் உண்டாகும் அமைதி மட்டுமே நிலவும்.

இங்கே தேவன் சொல்லியிருப்பதை கவனித்தீர்களா? நான் நினைவு கூரும்படிக்கு அதை நோக்கிப் பார்ப்பேன் என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள் என்று தேவன் சொல்லவில்லை. தாம் அதை பார்ப்பதாகவே அவர் சொன்னார். அவர் அதை நோக்கி பார்ப்பார் என்றும் அது தேவனுக்கும் பூமியின் மேல் உள்ள மாம்சமான சகல ஜீவ சந்துக்களுக்கும் இடையில் உண்டான நித்திய உடன்படிக்கையாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். நீங்கள் எப்பொழுதெல்லாம் ஒரு வானவில்லை பார்க்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் அது உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு காட்சியாய் இருக்க வேண்டும்.
‭ஆதியாகமம் 9:17
[17] இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.
………………..
இது தேவனுடைய உடன்படிக்கை. அது மட்டும் அல்ல, இது நோவாவோடு மட்டும் செய்யப்பட்ட உடன்படிக்கை அல்ல, பூமி மேல் வாழும் அனைத்து உயிரினங்களோடும் தேவன் செய்த உடன்படிக்கை.
ஏற்கெனவே கூறிய ஒன்றை நான் மீண்டும் கூறுகிறேன். வானவில் ஒரு சாக்கிரமந்து. ஏனென்றால் அது தேவனுடைய வாக்குத்தத்தம் அல்லது வாக்குறுதி குறித்து வெளிப்படையாகக் காணப்படும் ஒரு அடையாளம்.
பஸ்கா பண்டிகை, வெண்கல சர்ப்பம், கிதியோனின் ஆட்டு ரோமம் மற்றும் நம் காலத்தில் நாம் கைக்கொள்ளும் ஞானஸ்நானம் மற்றும் கர்த்தருடைய பந்தி ஆகியவை இத்தகைய அடையாளங்களாய் இருக்கின்றன.

ஜோஹான் பீட்டர் லாங்க்ஏ என்பவர் ஜெர்மன் தேசத்தைச் சேர்ந்த ஒரு calvinist இறையையாளர் மற்றும் இறையியல் பேராசிரியர். இவர் கூறி இருப்பதை கவனியுங்கள். தேவனுடைய கிருபை நிறைந்த கண்ணும் நம்முடைய விசுவாசக் கண்ணும் சாக்கிரமந்துகளில் சந்திக்கின்றன. மனிதன் ஒரு வானவில்லை பார்க்கும்பொழுது இதுதான் நடக்கிறது
அதாவது அந்த அடையாளத்தோடு இணைக்கப்பட்ட வாக்குறுதி விசுவாசம் பற்றி கூறுகிறது. அந்த அடையாளம் எதைப் பற்றி பேசுகிறதோ அதில்தான் அதன் மதிப்பு இருக்கிறது. ஒரு வாக்குறுதி இல்லாமல் விசுவாசம் இல்லை. ஒரு அடையாளம் இல்லாமல் உறுதிப்பாடு இல்லை. வார்த்தையும் அடையாளமும் எப்பொழுதும் உண்டாகவே செய்கின்றன. தேவன் ஒரு வாக்குறுதியை கொடுப்பார் என்றால் அதனுடன் ஒரு அடையாளத்தையும் இணைக்கிறார். இந்த வானவில் என்பது நோவாவின் பலிபீடத்திற்கு தேவன் கொடுத்த ஒரு பதில் என்று சொல்லலாம். அதாவது நான் நினைவு கூறுவேன் நான் அதை பார்ப்பேன் என்று தேவன் சொல்வது போல இருக்கிறது.
நண்பர் ஒருவர் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபொழுது ஒரு புயலை கடந்து சென்றதைப் பற்றி அவர் கூறினார். அதாவது சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்த உயரத்தில் விமானம் சென்று கொண்டிருந்தபொழுது திடீரென்று அவர் ஒரு முழு வட்ட வடிவிலான வானவில்லை கண்டார். தேவன் எப்பொழுதும் வானவில்லை அப்படித்தான் பார்க்கிறார் என்று நினைக்கிறேன். பொதுவாக நாம் வானவில்லை பார்க்கும்பொழுது ஒரு வட்டத்தில் பாதியைத்தான் பார்க்கிறோம். ஆனால் தேவன் எப்பொழுதும் வட்ட வடிவிலான வானவில்லை பார்ப்பார்.
தொடர்ந்து வரும் வசனங்களில் நோவாவின் ஒரு பாவத்தை குறித்தும் அவனுடைய குமாரர்கள் செய்த காரியத்தை குறித்தும் பார்க்கிறோம்.
இந்த அதிகாரத்தின் மீதமுள்ள பகுதியிலே மிகவும் ஏமாற்றம் அளிக்கும் ஒரு காரியத்தை நாம் பார்க்கப் போறோம். இங்கே ஒரு கேள்வி எழும்புகிறது. பெருவெள்ளத்திற்கு பிறகு மனிதன் பேழையில் இருந்து வெளியே வந்தபொழுது பாவிகள் அனைவரும் மரித்து போயிருந்தார்களே, அப்படியானால் பூமியில் இனி பாவம் இருக்காது என்று அர்த்தமா? சரி, அதைக் குறித்து நாம் தொடர்ந்து பார்ப்போம்.
‭ஆதியாகமம் 9:18
[18] பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
……………………
இங்கே காமின் குமாரனாகிய கானான் ஏன் குறிப்பிடப்படுகிறான்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணத்தை நாம் சற்று நேரத்தில் பார்ப்போம். மற்றொரு காரணம் என்னவென்றால் மோசே இந்த வரலாற்றை எழுதிய பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கானான் தேச மக்கள் மீது தேவன் கொண்டு வந்த நியாயத்தீர்ப்பை பற்றிய இந்த தகவலை அவர்கள் அறிந்திருப்பது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
‭ஆதியாகமம் 9:19-21
[19] இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். [20] நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். [21] அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
………………
இங்கே நோவாவின் பாவம் குறித்த ஒரு பதிவைப் பார்க்கிறோம். இந்த விஷயத்தில் மறைக்க முடியாத உண்மை என்னவென்றால் நோவா மது அருந்தி வெறித்திருந்தார் என்று சொல்லலாம். இது ஒரு பாவமாகும். இதற்கு திருப்திகரமான சாக்கு போக்கு எதுவும் இல்லை. இருந்தாலும் பல விளக்க உரையாளர்கள் அவருக்காக சாக்கு போக்குகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் அதில் ஒரு சாக்கு போக்கு என்னவென்றால் இதற்கு முன்பு யாரும் மது அருந்தி வெறித்தவர்களாய் இல்லை என்பதால் திராட்சை ரசத்தின் விளைவு பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். பெரு வெள்ளத்திற்கு முன்பு குடிப்பழக்கம் பாவங்களில் ஒன்றாக கூறப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். அது , விதான கோட்பாட்டை நம்புகிறவர்கள் உண்டு. இதை ஆங்கிலத்தில், canopy theory என்று சொல்கிறார்கள். இந்த விதான கோட்பாடு என்ன என்றால் பெருவெள்ளத்திற்கு முன்பு பனிக்கட்டியால் ஆன ஒரு மூடு போன்ற படலம் பூமியை சுற்றி இருந்தது. அதன் விளைவாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு வந்ததால் திராட்சை ரசம் பெருவெள்ள காலத்திற்கு முன்பு புழிப்படையவில்லை என்றும் இது நோவாவிற்கு புதிய காரியமாக இருந்தது என்னும் கூறுகிறார்கள். சரி. ஆனால் விஞ்ஞானத்தின் விளக்கங்களால் அப்படிப்பட்ட ஒரு மூடு படலம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று இந்த கோட்பாடு புறக்கணிக்கப்பட்டு விட்டது.
சரி, இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் இதுதான். இது ஒரு புதிய உலகில் ஒரு புதிய தொடக்கம். ஆனால் பழைய பாவம் இன்னும் அங்கேதான் இருக்கிறது.
இந்த சம்பவம் அதை வெளிப்படுத்துகிறது. மேலும் நாம் பார்க்க போகிறபடி ஒரு பெரிய கேள்விக்கு பதிலாகவே இது கொடுக்கப்பட்டிருக்கிறது.
வசனங்கள் 22 முதல் 24 வரை பாருங்கள்
‭ஆதியாகமம் 9:22-24
[22] அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைத் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். [23] அப்பொழுது சேமும், யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. [24] நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
……………….
இப்பொழுது நோவாவின் மூலமாக தேவன் என்ன சொல்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்
இது நோவாவின் உடன்படிக்கையின் ஒரு பகுதி ஆகிறது.
வசனம் 25.
‭ஆதியாகமம் 9:25
[25] கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
…………………
இங்கு தேவன் கானான் சபிக்கப்பட்டவன் என்றுதான் சொன்னார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் காமின் மீது சாபத்தை கூறவில்லை. இன்றும் பலருக்கு அடிக்கடி எழும்புகிற ஒரு கேள்வி இதுதான். காமின் சாபம் கருப்பு இன மக்கள் மீது இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. அவ்வாறு நினைப்பது முற்றிலும் முட்டாள்தனமானது. வேதாகமம் அப்படி நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை. மனித குலத்தின், மேல் தோலில் உள்ள நிறம் அதாவது ஆங்கிலத்திலே pigment என்று கூறப்படுவது மற்றும் தோலின் நிறம் என்பது வெளிப்புறத்தில் நம் உடலை பாதிக்கும் சூரிய ஒளியினால் ஏற்படுகிறதே தவிர உள்ளிருக்கும் பாவத்தினால் அல்ல. காமின் மீது எந்த சாபமும் கூறப்படவில்லை. அந்த சாபம் அவனுடைய மகனாகிய கானான் மீதே இருந்தது. இந்த சம்பவத்தில் கானான் எந்த விதத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. இங்கே நமக்கு ஒரு மேலோட்டமான பதிவு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கானான் மிகக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இங்கேயும் குறிப்பிடப்பட்டு இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இதற்கும் தோலின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மனித இனத்தின் ஒரு பகுதியினர் நிறத்தின் மீது சுமத்தப்பட்ட சாபம் அல்ல. இந்த கருப்பு மனிதனைப் பற்றி சொல்லப்பட்ட மிகவும் வருத்தமான போதனைகளில் இதுவும ஒன்று என்று நாம் சொல்லலாம். இது கருப்பு மனிதனுக்கும் நியாயமானது அல்ல தேவனுக்கும் நியாயமானது அல்ல. ஏனென்றால் அவர் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப் போனால் உலகத்தின் முதல் இரண்டு சிறந்த நாகரிகங்கள் காம் வம்சத்தை சேர்ந்தவை. அதாவது பாபிலோனிய மற்றும் எகிப்திய நாகரிகங்கள் இரண்டுமே காம் வம்சா வழியினர் உடைய நாகரிகம்.

இப்பொழுது மற்றும் ஒரு கேள்வி நமக்கு எழும்புகிறது.
நோவாவின் பாவம் குறித்த பதிவை ஏன் தேவன் நமக்கு கொடுத்தார்? ஒருவேளை மனிதன் ஆதியாகமப் புத்தகத்தை எழுதியிருந்தால் அவன் இரண்டு காரியங்களில் ஒன்றை செய்திருப்பான். நோவாவை ஒரு பெரும் வீரனாக காட்டுவதற்காக அவனுடைய பாவத்தை குறிப்பிடாமல் முற்றிலும் மறைத்திருப்பான். அல்லது நோவாவின் பாவத்தை இருந்ததை விட இன்னும் அதிக கொடூரமானதாக சித்தரித்திருப்பான். ஆனால் தேவன் தமது சொந்த நோக்கங்களுக்காகவே அதை பதிவு செய்திருக்கிறார்.
முதலாவதாக நான் ஏற்கனவே கூறியது போல மோசே மற்றும் யோசுவாவின் காலத்தில் கானான் தேசத்திற்குள் நுழைந்த இஸ்ரவேல் புத்திரர்களை ஊக்குவிப்பதற்காக இது கொடுக்கப்பட்டது. கானான் மீது தேவன் சாபத்தை அறிவித்திருந்தார் என்பதை இது அவர்களுக்கு தெரியப்படுத்தியது. அந்த இனத்தின் மீது அவர் தமது நியாயத்தீர்ப்பை அறிவித்திருந்தார் அந்த நியாய தீர்ப்பின் நிறைவேறுதலை கண்டறிய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பழைய ஏற்பாட்டின் மீதி உள்ள பகுதியையும் உலக வரலாற்றையும் வாசித்து பார்ப்பதுதான். இப்பொழுது கானானியர்கள் ஏறக்குறைய முற்றிலும் மறைந்து விட்டார்கள்.

நன்றாக கவனியுங்கள் நோவாவின் இந்த பாவத்தை வேதத்தில் பதிவு செய்ததற்கு தேவனிடத்தில் மற்றும் ஒரு காரணம் இருந்தது என்று சொல்லலாம்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭ரோமர் 15:4
[4] தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
………………………
கவனிக்கிறீர்களா? மாம்சத்தின் பலவீனத்தைப் பற்றி நீங்களும் நானும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே நோவாவின் பாவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியது நினைவில் இருக்கிறதா? வியாழன் அன்று இரவு இயேசுவும் சீடர்களும் ஜெபிக்க சென்ற பொழுது, தோட்டத்தில் இயேசு வேதனையோடு ஜெபித்துக் கொண்டிருந்தபொழுது சீடர்கள் உறங்கி விட்டார்கள். அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்து ஆவி உற்சாகம் உள்ளதுதான் மாம்சமோ பலவீனம் உள்ளது என்றார்.

மேலும் கலாத்தியர் 2 16 இல் நாம் வாசிப்பது என்ன?
‭கலாத்தியர் 2:16
[16] நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
…………………..
கவனித்தீர்களா? நியாயப்பிரமாணத்தை கைக் கொள்வதினால் எந்த ஒரு மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே மாம்சத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தும் விதமாக விழுந்து போன ஒரு மனிதனின் கதையை தேவன் இங்கே நமக்கு கொடுத்திருக்கிறார்.
நோவாவிற்காக சாக்கு போக்குகள் சொல்ல முயற்சி செய்வதில் எந்த பயனும் இல்லை. நோவா மது அருந்தி வெறித்து இருந்தான் என்பது அப்பட்டமான உண்மை.

இப்பொழுது நீங்கள் ஒரு வேளை ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் மது அருந்தாமல் இருக்கலாம். ஆனால் நீங்களும் நானும் கூட நோவாவை போலவே தேவனுக்கு பிரியம் இல்லாத வகையில் மாம்சத்தின் படி வாழ்ந்து கொண்டிருக்கலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியிலே நம்முடைய வாழ்க்கை குறித்த ஒரு தவறான புரிதல் நமக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக, மனிதர்களை நிலவில் இறக்குவதற்காக அமெரிக்க ஐக்கிய நாடு கோடி கணக்கில் செலவிட்டது. ஆனால் நிலவு வாழ்வதற்கு ஏற்ற இடமாகத் தெரியவில்லை
ஆனால் இந்த பூமியில் எப்படி வாழ்வது என்பதை குறித்து அறிந்து கொள்ளவும், அதை அறிவிக்கவும் நாம் மிகக் குறைந்த அளவே செலவு செய்கிறோம். ஆனால் தேவாதி தேவன் இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று உங்களுக்கும் எனக்கும் பயிற்சி அளிப்பதில் அக்கறை உள்ளவராய் இருக்கிறார்.
இந்த வேதப்பகுதியை நாம் ஆராய்ந்து படிக்கும் பொழுது பொதுவாக செய்யப்படும் சில தவறுகளை நாம் செய்யாமல் இருக்க வேண்டும். நோவா தனது ரட்சிப்பை இழக்கவில்லை என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர் செய்தது ஒரு மோசமான காரியம்தான். அதற்கு எந்த சாக்கு போக்கும் சொல்ல முடியாது. அது அவருடைய மாம்சத்தின் பலவீனமாக இருந்தது. ஆனால் அவர் அப்பொழுதும் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதராகவே இருந்தார்.
அடுத்த இரண்டு வசனங்களைப் பாருங்கள்.
‭ஆதியாகமம் 9:26-27
[26] சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். [27] யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
………………
பிரியமானவர்களே நான் ஏற்கனவே கூறியது போல மோசே தேவனிடத்தில் இருந்து இந்த வெளிப்பாட்டைப் பெற்றபொழுது அவர் இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்தை நோக்கி வழி நடத்திக் கொண்டிருந்தார் இந்த இஸ்ரவேலர்கள் தான் சேமின் சந்ததியினர்.
‭ஆதியாகமம் 9:28-29
[28] ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். [29] நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
…………………….
ஆதியாகமம் 9-ஆம் அதிகாரத்தின் இந்தப் பகுதி, மனித வரலாற்றின் ஒரு புதிய தொடக்கத்தை நமக்குக் காட்டுகிறது. பெருவெள்ளத்திற்குப் பிந்தைய இந்த வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஆவிக்குரிய பாடங்கள் மூன்று:
முதலாவதாக
தேவன் நோவாவுடனும் அவன் சந்ததியுடனும் செய்த உடன்படிக்கை, மனிதன் கேட்டதினால் வந்ததல்ல; அது தேவன் தாமாகவே முன்வந்து கொடுத்த ‘கிருபையின் வாக்குறுதி’. வானவில் என்பது வெறும் இயற்கை நிகழ்வு மட்டுமல்ல, அது தேவன் தம்முடைய கோபத்தை நிறுத்தி, பூமியை இனி ஜலத்தினால் அழிக்கமாட்டேன் என்று கொடுத்த சமாதானத்தின் அடையாளம்.
ஆவிக்குரிய பாடம்: நாம் பாவிகளாய் இருந்தபோதே தேவன் நம்மோடு சமாதானமாக விரும்புகிறார். வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம், நம்முடைய தகுதியைக் கருதாமல் தேவன் நமக்குக் காட்டும் அளவில்லாத பொறுமையையும் கிருபையையும் நாம் நினைவுகூர வேண்டும்.
இரண்டாவதாக
பேழையிலிருந்து வெளிவந்த நோவா, ஒரு புதிய உலகைக் கண்டாலும், அவனுக்குள் இருந்த ‘பழைய பாவம்’ அவனை விடவில்லை. ஒரு நீதிமானாகக் கருதப்பட்ட நோவாவே மதுவினால் தடுமாறினார் என்றால், மாம்சத்தில் வாழும் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. நோவாவின் இந்தச் சம்பவம் மறைக்கப்படாமல் வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது, “எந்த மனுஷனும் தன் கிரியைகளினால் நீதிமானாக்கப்படுவதில்லை” என்பதை வலியுறுத்தவே ஆகும்.
ஆவிக்குரிய பாடம்: நமது சுய பலத்தில் நாம் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ஒவ்வொரு நாளும் தேவனுடைய ஆவியின் துணை நமக்குத் தேவை. விழுந்துபோன மனிதனைத் தேவன் கைவிடுவதில்லை, ஆனால் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து அவரிடம் சரணடைய வேண்டும்.
3. மனித வாழ்வின் மதிப்பும் நீதியும்
“மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால்” அவனுடைய இரத்தம் விலையேறப்பெற்றது என்று தேவன் கூறுகிறார். இது மனித உயிரின் புனிதத்தை உணர்த்துகிறது. அதே வேளையில், அநீதிக்கும் பாவங்களுக்கும் தேவன் ஒரு எல்லையை வகுத்திருக்கிறார். சாபங்களும் ஆசீர்வாதங்களும் தற்செயலானவை அல்ல; அவை ஒருவருடைய செயல்கள் மற்றும் கீழ்ப்படிதலோடு தொடர்புடையவை
பிரியமானவர்களே, நோவாவின் காலத்தில் தேவன் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிக்க ஒரு ‘பேழையை’ தந்தது போல, வரப்போகிற அக்கினியின் நியாயத்தீர்ப்பிலிருந்து நம்மைத் தப்புவிக்க இயேசு கிறிஸ்து என்னும் நித்தியப் பேழையைத் தந்திருக்கிறார். வானவில் எப்படி ஒரு அடையாளமோ, அப்படியே சிலுவை நமக்கு இரட்சிப்பின் அடையாளமாய் இருக்கிறது.
நமது மாம்சம் பலவீனமானதுதான், ஆனால் கிறிஸ்துவின் கிருபை அந்தப் பலவீனத்திலும் நம்மைப் பலப்படுத்தும். பழைய பாவங்களை விட்டுவிட்டு, தேவன் நமக்காக வைத்திருக்கும் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்குள் நாம் பிரவேசிக்க கர்த்தர் தாமே நமக்குக் கிருபை செய்வாராக. ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top