ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 8:13 – 9:5
நிகழ்ச்சி எண்: 0026
வாசியுங்கள்
அன்பானவர்களே வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை கவனிக்க, தொடர்ந்து எங்களோடு இணைந்து கொள்ளும் உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக கர்த்தரை துதிக்கிறோம்.
வேத வசனங்களை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். இன்று நாம் ஆதியாகமம் 8:13 முதல் 9:5 வரை பார்க்கப் போகிறோம்.
ஆதியாகமம் 8:13 வாசிக்கிறேன்
[13] அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
…………………
நோவா மழை நின்று விட்டதை அறிந்த போதிலும் தானாக வெளியே வரவில்லை; தேவனின் கட்டளைக்காகக் காத்திருந்தார். இது நோவாவின் கீழ்ப்படிதலையும் பொறுமையையும் காட்டுகிறது. கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் ஒரு பொழுதும் வெட்கப்பட்டு போவதில்லை.
ஆதியாகமம் 8:14-17 கவனியுங்கள்
[14] இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. [15] அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி; [16] நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். [17] உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.
…………………….
ஜலப் பிரளயம் ஆரம்பித்து இப்பொழுது 261 நாட்கள் ஆகிவிட்டன. மொத்தத்தில் 371 நாட்கள் – அதாவது ஒரு வருடத்திற்கு மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.
நோவா தானாக முடிவெடுக்கவில்லை; தேவனின் நேரடி கட்டளைக்காகக் காத்திருந்தார். இது விசுவாசத்தின் முக்கிய பாடம். இந்த அவசர உலகத்தில் நாம் எல்லாமே நமக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காத்திருக்கும் பொறுமை நமக்கு இல்லை. இன்ஸ்டன்ட் காஃபி, / ஃபாஸ்ட் ஃபூட் மாதிரி அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இது பொறுமையற்ற நிலையை விவரிக்கிறது. நாமும் எந்த காரியத்திலும் நோவாவை போல தேவனின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்க வேண்டும்.
பேழை ஒரு “இரட்சிப்பின் இடம்”. இது ஜலப் பிரளயத்திலிருந்து நோவாவையும், அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றியது. இப்பொழுது நோவா தன் குடும்பத்தாரோடு வெளியே வரப் போகிறார். இது புதிய வாழ்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஜலப் பிரளயம் அல்லது பெருவெள்ளம் தொடர்பான சில முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் மற்ற கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன. இந்த பெருவெள்ளம் உலகம் தழுவியது. அது பூமி முழுவதையும் மூழ்கடித்தது என்ற கருத்தை கொண்ட டாக்டர் ஜே இ ஷெல்லி அவர்களின் வார்த்தைகளை நன்றாக கவனியுங்கள்.
இதற்கு மிகவும் வியக்கத்தக்க உதாரணம் மம்மூத் எனப்படும் யானைகளின் விஷயத்தில் காணப்படுகிறது. இந்த யானைகள் ஆசியக் கண்டம் முழுவதிலும், சைபீரியாவின் துந்திரா (Tundra) பகுதியிலும், அலாஸ்கா மற்றும் கனடாவின் வடக்குப் பகுதிகளிலும் உள்ள உறைந்த வண்டல் மண்ணில் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை சதுப்பு நிலங்களில் சிக்கிக் கொள்ளாமல், உயரமான நிலப்பகுதிகளில் கூட்டமாக, பல லட்சம் எண்ணிக்கையில் காணப்படுகின்றன.”
அவர் தொடர்ந்து கூறும் பொழுது இந்த யானைகள் பரிசோதிக்கப்பட்ட போது அவை நீரில் மூழ்கி இறந்திருப்பது கண்டறியப்பட்டது. அவை வெறும் சதுப்பு நிலத்தில் மட்டும் சிக்கி இருந்தால் பசியினால் இறந்திருக்கும். “ஒருவர் வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல, இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது; ஆர்க்டிக் வட்டத்திற்குள் இருக்கும் வெள்ளைக்கடல் (White Sea) தீவுகளின் மண், பெரும்பாலும் இந்த மம்மூத்களின் எலும்புகளாலேயே ஆனது. அவற்றுடன் வாள்-பல் புலிகள் (sabre-tooth tiger), ராட்சத எல்க் மான்கள், குகைக் கரடிகள், கஸ்தூரி எருதுகள் ஆகியவற்றின் எலும்புகளும், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களின் தடிகளும் கலந்து கிடக்கின்றன. இப்போது அந்தப் பகுதிகளில் மரங்களே இல்லை; அங்கிருந்து சில நூறு அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலேயே அருகிலுள்ள மரங்கள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே வளரக்கூடிய குட்டையான தாவரங்களை மம்மூத்களால் உண்ண முடியாது; நூறு சதுர மைல் பரப்பளவில் வளரும் அத்தகைய தாவரங்கள் கூட ஒரு மம்மூத்திற்கு ஒரு மாதம் உயிர்வாழப் போதுமானதாக இருக்காது. ஆனால், அவற்றின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தேவதாரு (Pine) மற்றும் ஹாவ்தார்ன் (Hawthorn) கிளைகளாக இருக்கின்றன.”
இந்த மம்மூத்துகள் வண்டல் மண் மென்மையாக இருந்த பொழுதே அதில் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளன. அவையும், அந்த வண்டல் மண்ணும் திடீரென உறைந்து போயின. அதன் பிறகு அவை ஒருபோதும் உருகவில்லை. ஏனென்றால் அவை சிதைவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மம்மூத்களின் தந்தங்கள் லண்டன் துறைமுகங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இயற்கை வரலாற்று அருங்காட்சியம், லண்டன் துறைமுகத்தின் தந்த கடைகளிலிருந்து ஒரு மம்மூட்டின் தலை மற்றும் தந்தங்களை வாங்கியுள்ளது. அந்த தலை முற்றிலும் புத்துணர்வுடன் அதன் அசல் ரோபோங்களால் மூடப்பட்டிருந்தது. என்று கூறியிருக்கிறார். பிரியமானவர்களே, பெருவெள்ளம் உலகம் தழுவியது என்பதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களை நம்ப வைக்க இந்த ஆதாரங்களை போதுமானவை என்று நான் நம்புகிறேன்.
இன்னமும் ஒருவேளை உங்களுக்கு இதைக் குறித்து சந்தேகம் வரும் என்றால் அது உலக அளவில் நடைபெற்ற ஒன்றுதான் என்று அடுத்து வரும் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. கவனியுங்கள்
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 8:18-19
[18] அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். [19] பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
……………………..
நோவாவின் குமாரரின் மனைவிகள் எந்த அளவு தேவனை குறித்த அறிவுள்ளவர்களாக இருந்தார்களோ நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் தங்கள் கணவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நோவாவின் பேழையில் பிரயாணம் பண்ண எடுத்த அவர்கள் தீர்மானம் முக்கியமானது.
இப்பொழுது தேவன் நோவாவோடு கூட ஒரு உடன்படிக்கை செய்யப் போகிறார். அடுத்த அதிகாரத்திற்குள் நுழையும் பொழுது அந்த புதிய ஆரம்பத்தை நாம் பார்ப்போம். இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது. தேவன் நோவாவோடு ஒரு உடன்படிக்கை செய்தார் என்றால் தேவன் இன்றைக்கும் பூமியிலே உயிரோடு இருக்கிற அனைத்து மக்களுக்கும் அந்த உடன்படிக்கையை செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரு வசனங்களும் மிகவும் சுருக்கமாக இருந்தாலும், நோவாவின் விசுவாசத்தையும், தேவனின் இரட்சிப்புத் திட்டத்தையும் ஆழமாகக் காட்டுகின்றன.
நோவா, அவரது மூன்று மகன்கள், சேம், காம், யாப்பேத், நோவாவின் மனைவி, மற்றும் மூன்று மருமகள்கள், மொத்தம் 8 பேர் பேழையைவிட்டு வெளியே வந்தார்கள்.
பிரளயத்திற்கு முன் பேழைக்குள் நுழைந்த வரிசையை ஆதியாகமம் 7ஆம் அதிகாரத்தில் 7ஆம் வசனத்திலும், 13ஆம் வசனத்திலும் நாம் பார்த்தோம். அங்கே கூறப்பட்ட வரிசைப்படியே இங்கும் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இது தேவனின் வழிகாட்டுதலின் துல்லியத்தை வலியுறுத்துகிறது.
நோவா பூமி உலர்ந்ததும் தானாக வெளியே வரவில்லை; தேவனின் அனுமதிக்காகக் காத்திருந்தார். இது நோவாவின் பொறுமை, விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் உச்சத்தைக் காட்டுகிறது.
உயிரினங்கள் ஒழுங்காக, அவைகளின் இனம் மற்றும் குடும்பம் அடிப்படையில் வெளியேறின. “ஜாதிஜாதியாய்” என்ற சொல் ஆதியாகமம் 1இல் உயிரினங்கள் படைக்கப்பட்ட வரிசையை நினைவூட்டுகிறது. ஜலப் பிரளயம் அழிவைத் தந்தாலும், தேவன் உயிரின் தொடர்ச்சியைப் பாதுகாக்கிறார் என்பதை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
வசனம் 20.
ஆதியாகமம் 8:20
[20] அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
………………………
நோவா பேழையைவிட்டு வெளியே வந்த உடனேயே ஒரு பலிபீடம் கட்டினார். வேதாகமத்தில் முதல் முறையாக “பலிபீடம்” என்ற சொல் இந்த இடத்தில்தான் வருகிறது. முன்பு ஆதாமின் குமாரர்களாகிய ஆபேல், காயீன் முதலானோர் பலி செலுத்தினார்கள். ஆதியாகமம் 4ஆம் அதிகாரத்தில் நாம் இதைப் பார்த்தோம். ஆனால் அங்கே பலிபீடம் குறிப்பிடப்படவில்லை.
பலிபீடத்தை மண் அல்லது வெட்டப்படாத கற்களால் கட்ட வேண்டும். யாத்திராகமம் 20ஆம் அதிகாரம் 24, 25 வசனங்களை வாசிக்கிறேன், கேளுங்கள்:
“மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.”
…………………………………
பலிபீடம் தேவனுக்கு அர்ப்பணிப்பின் அடையாளம். நோவாவின் முதல் செயல் விவசாயமோ, வீடு கட்டுதலோ அல்ல. பேழையிலிருந்து வெளியே வந்தவுடனே தேவனை ஆராதிக்கிறார். இது நோவாவின் சரியான முன்னுரிமையைக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அவருடைய நன்றியுணர்வையும், விசுவாசத்தையும் எடுத்துக் காட்டுகிறது. நோவாவை போல ஒரு பயணத்தின் இறுதியில் மட்டுமல்ல பயணத்தின் ஆரம்ப நேரத்திலும் தேவனிடத்திலே அதைக் குறித்து பேசி ஜெபித்து நாம் புறப்பட்டுச் செல்வது சிறந்தது.
நோவா ஏன் சுத்தமான மிருகங்களில் ஏழு ஜோடிகளையும் அசுத்தமான மிருகங்களில் இரண்டு ஜோடிகளை மட்டும் எடுத்துக் கொண்டார் என்பது இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா? அவர் இப்பொழுது அந்த சுத்தமான மிருகங்களை பலியாக செலுத்துகிறார்.
பேழையில் இருந்து வெளியே வந்தவுடன் நோவா செய்த முதல் காரியம் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அவருக்கு ஒரு பலியையும் சர்வாங்க தகன பலியையும் செலுத்தினார். “அந்த சர்வாங்க தகன பலியானது இயேசு கிறிஸ்துவின் ஆளுமையைக் குறிக்கிறது. அது தேவனுக்கு முன்பாக அங்கீகாரம் பெறுவதற்காகவும், அவரைப் போற்றித் துதிப்பதன் அடையாளமாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த ஒரு விஷயம் தான் அந்தச் சமயத்தில் நோவாவின் மீது தேவன் பிரியமடையக் காரணமாய் இருந்தது.”
ஆதியாகமம் 8:21
[21] சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
…………,………….
அருமையானவர்களே,
“இது உண்மை என்பதை நீங்கள் அப்படியே குறித்துக் கொள்ளலாம். உங்கள் இளமைப் பருவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கற்பனைகள் தீயதாக இருந்ததா இல்லையா? எப்பொழுதும் நமது சமுதாயத்தில் இளைஞர்களின் கிளர்ச்சியை நாம் பார்க்கிறோம்; அவர்கள் செல்லும் திசையைக் கவனிப்பது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது இல்லையா? அவர்கள் அதே திசையில்தான் சென்றிருக்கிறார்கள். மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அனைத்தும் அவனது இளமைப் பருவம் முதற்கொண்டே தீயதாக இருக்கிறது—அது மேம்படுவதில்லை.”
ஒரு மருத்துவமனையில் படுக்கைகளுக்கு இடையிலே திரை போடப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு திரை மறைவிலே ஒரு கணவன் மனைவி இருவருக்கும் உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆனால் அதை கவனித்தால் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் மிகக் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரில் யார் அதிகமாக மற்றவரை வசையினால் மிஞ்ச முடியும் என்பதற்கான போட்டி நடப்பது போல தெரிந்தது. இவ்வளவு அநாகரிகமான பேச்சை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்..
ஆம் அருமையானவர்களே மனிதனுடைய இருதயத்தின் கற்பனை அவன் வாலிப வயது முதல் பொல்லாததாகவே இருக்கிறது. வெகு காலத்திற்கு முன்பு சொல்லப்பட்ட அந்த வாசகம் இன்றைக்கும் மிகச் துல்லியமான உண்மையாகவே இருக்கிறது.
ஆதியாகமம் 8:22
[22] பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
…………………..
“பூமியுள்ள நாளளவும்” – அதாவது உலகின் முடிவு வரை என்று பொருள். வேதாகமத்தில் உலகின் முடிவு புதிய வானம் மற்றும் புதிய பூமி உருவாகும் வரை எனக் கூறப்படுகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தை வாசிக்கிறேன், கேளுங்கள்:
“பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.”……………………….
எனவே, இது நிரந்தரமான உறுதி அல்ல. ஆனால் தற்போதைய உலக அமைப்பு நீடிக்கும் வரை, தேவன் சொன்னது போல நிலைத்து நிற்கும். அடுத்ததாக “விதைப்பும் அறுப்பும்” என்று வாசிக்கிறோம் – ஜலப் பிரளயத்தில் எல்லா தாவரங்களும் அழிந்திருந்தாலும், இயற்கை மீண்டும் வளர்ச்சி அடையும் என்பதை ஆண்டவரின் எண்ணம் உறுதிப்படுத்துகிறது. விதைக்கும் காலமும், அறுவடை காலமும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். விவசாய சுழற்சி எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நடந்துகொண்டே இருக்கும்.
அதுமட்டுமல்ல, குளிரும் வெப்பமும் மாறி மாறி வரும். கோடை காலமும் குளிர் காலமும் ஒன்றன் பின் ஒன்றாய் வரும். பூமியின் சுழற்சி நிற்காது. அதனால் பகலும், இரவும் தொடர்ந்து வரும்.
ஜலப் பிரளயத்தில் ஏற்பட்ட குழப்பம் இனிமேல் வராது. இயற்கை ஒழுங்கு நிலையாக இருக்கும்.
மனுஷனின் இதயம் பொல்லாததாய் இருக்கிறது என்று தேவன் அறிந்திருந்தாலும், அவர் மீண்டும் பூமியை அழிக்கவோ, சபிக்கவோ மாட்டார். இது தேவனின் நீதியுடன் கூடிய கிருபையை காட்டுகிறது.
பிரளயத்துக்குப் பிறகு பூமி சீராக இயங்கும் என்பது மனுக்குலத்துக்கு ஆறுதல் அளிக்கிறது. இன்று கால நிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தாலும், தேவன் பூமியின் அடிப்படை ஒழுங்கைப் பேணுவார் என்ற நம்பிக்கையை இது நமக்குத் தருகிறது.
அந்த நாட்களில் ஏற்பட்ட ஜலப் பிரளயம், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. அதாவது அது பூமியையே ஒருபுறமாக சாய்த்து விட்டது என்று சொல்லப்படுகிறது.. உங்களுக்கு தெரிந்திருக்கிற படி பூமி அதின் அச்சில் நேராக இல்லை. நாம் மையப் புள்ளியில் இருந்து சற்றே விலகி இருக்கிறோம். பூமியின் காந்த மையமும், பூமி சுழன்று கொண்டிருக்கும் மையமும் வெவ்வேறானவை. காலப்போக்கிலே ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அது இந்த பெருவெள்ளத்தின் போது நடந்திருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள்.
பூமி அப்படி சாய்ந்து சுழல்வதால் தான் நமக்கு வெவ்வேறு கால நிலைகள் ஏற்படுகின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், கிட்டத்தட்ட ஆடிக்கொண்டே சுழலும் ஒரு பம்பரத்தைப் போல இருக்கிறது. சிறுவயதில் நீங்கள் பம்பரம் விளையாடும் பொழுது அதன் வேகம் குறையும் பொழுது அது தள்ளாடுவதை பார்த்திருப்பீர்கள். இன்று பூமியும் அவ்வாறுதான் சுழன்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாகத் தான் நமக்கு வெவ்வேறு கால சீதோஷ்ண நிலைகள் உண்டாகின்றன.
இந்த ஜலப் பிரளயத்திற்கு முன்பாக மனிதன் மூன்று விதமான காரியங்களைச் செய்தான். முதலாவதாக அவன் தேவனுக்கு எதிராக கலகம் செய்தான். அது உணரப்பட்டது, அது வெளியரங்கமானதாக இருந்தது. இரண்டாவதாக தேவனிடத்தில் இருந்து வந்த வெளிப்பாடு மனிதனால் மறுக்கப்பட்டது. நோவாவின் சாட்சியும் மக்களை சென்றடையவில்லை. மூன்றாவதாக மனம் திரும்புதலை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. தேவனிடத்தில் ஒருவருமே மனம் திரும்பவில்லை. தேவன் கொடுத்த அடைக்கலத்தை மனிதன் மறுத்துவிட்டான். 120 ஆண்டுகளாக நோவா எந்த ஒரு மனம் திருந்தியவனையும் பார்க்கவில்லை. இந்த மூன்றும் அன்றைய நாட்களில் வாழ்ந்த மக்களிடத்திலே காணப்பட்டது. அவர்கள் தேவனுக்கு எதிராக செயல்பட்டார்கள். தேவனுடைய வெளிப்பாட்டைப் புறக்கணித்துத் தள்ளினார்கள். தேவனிடத்திலே அவர்கள் மனம் திரும்பாதவர்களாய் இருந்தார்கள்.
இப்பொழுது நோவா பேழையிலிருந்து வெளியே வரும்பொழுது அவர் மிகவும் தனித்துவமான ஒரு நிலையிலே நிற்கிறார். சொல்லப்போனால் ஆதாம் இருந்த அதே நிலையில் என்று சொல்லலாம். அதாவது மீண்டும் மனித இனத்தின் தலைவன் என்கிற நிலையை அவர் பெறுகிறார். அருமையானவர்களே, நாம் அனைவரும் ஆதாமுடன் தொடர்பு உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நாம் அதைவிட நோவாவோடு நெருக்கமான உறவு முறை கொண்டவர்கள்.
நம் அனைவரும் நோவாவுக்குள் உறவினர்களாக இருக்கிறோம். ஒரு வகையில் சொல்லப்போனால், இன்று நம் அனைவருக்கும் நோவா தான் தந்தையாக இருக்கிறார்………
தொடர்ந்து ஒன்பதாம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை கற்றுக் கொள்வோம்.
இப்பொழுது நாம் ஒரு புதிய ஆரம்பத்திற்குள்ளே வருகிறோம். இது எவ்வளவு புரட்சிகரமான ஒரு தொடக்கம் என்பதை உணர்ந்து கொள்வது நமக்கு கடினமாக இருக்கலாம். மனித மனசாட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தேவன் இப்பொழுது மனிதனை ஒரு அரசாங்கத்தின் கீழ் வைக்கிறார். அதாவது மனிதன் தன்னைத்தானே ஆள வேண்டும். தேவன் நோவாவோடு செய்த உடன்படிக்கையிலே இதன் ஒரு பகுதியை நாம் பார்க்க முடியும். தேவன் நோவாவோடு அந்த உடன்படிக்கையை செய்த பொழுது அது மனுக்குலம் முழுவதிற்குமானது என்பதால் அதை நீங்களும் நானும் உட்பட ஒட்டுமொத்த மனுக்குலத்தோடும் செய்தார் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 9:1 பாருங்கள்
[1] பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
………………….
நிரப்புங்கள் என்று இந்த வசனத்தில் நாம் பார்க்கிற வார்த்தை மிகவும் அர்த்தம் உள்ள ஒன்று. ஏனென்றால் ஜலப் பிரளயத்திற்கு முன்பும் ஒரு நாகரிகம் இருந்தது என்பதை நாம் அறிவோம். இப்பொழுது ஜலப்பிரளயத்திற்கு பின்பும் ஒரு நாகரிகம் உருவாகப் போகிறது.
தேவன் நோவாவுக்குச் சொன்ன முதல் காரியம் நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்பதுதான். மனித இனம் தழைக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். தேவன் இந்த கட்டளையை ஒரு சிறப்பான சூழ்நிலையின் கீழ் கொடுத்தார் என்பதை நினைவில் நாம் கொள்ள வேண்டும். இன்று நாம் மக்கள் தொகை அதிகரிக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். மக்கள் தொகை அதிகரிப்பு என்பது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. என்றாலும் நோவா ஒரு தனித்துவமான நிலையிலே இருந்தார். அப்பொழுது அவரும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் காலையில் நீங்கள் வேலைக்கு செல்ல நெடுஞ்சாலையிலே கார் ஓட்டுகிறீர்கள். உங்களுக்கு முன்னால் கார்கள், வலது பக்கம் கார்கள், இடது பக்கம் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்கள், பின்னால் கார்கள் என எங்கும் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் சத்தங்களுடன் ஒரு போக்குவரத்து நெரிசலிலே நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள். சுமார் ஒரு வருடம் கழித்து அதே நெடுஞ்சாலைக்கு செல்கிறீர்கள் அங்கே ஒரு காரையும் காணவில்லை. உங்களுடைய கார் மட்டும் தான் இருக்கிறது. நீங்கள் அங்கிருக்கும், அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் அகற்றி விடலாம். ஏனென்றால் நீங்கள் ஒருவரே வாகனம் ஓட்டுவதால் அவை உங்களுக்கு தேவைப்படாது. அப்படிப்பட்ட அனுபவம் ஒரு விசித்திரமான அனுபவமாக இருக்கும் இல்லையா? நோவாவுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேய அப்படிப்பட்ட ஒரு அனுபவம் தான் கிடைத்தது.
ஆதியாகமம் 9:2 பாருங்கள் வாசிக்கிறேன்.
[2] உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
…………………….
இந்த உடன்படிக்கையின் மற்றும் ஒரு பகுதி விலங்கு உலகத்தின் மீதான மனிதனின் பாதுகாப்பு மற்றும் ஆளுகை என்று சொல்லலாம். இதற்கு முந்திய காலத்தில் இவற்றிற்கு இடையேயான உறவு வேறாக இருந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். முன்பு மனிதன் மாம்சம் உண்பவனாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அப்பொழுது எல்லா விலங்குகளுமே சாந்தமானவைகளாய் இருந்தன. ஒரு செல்லப்பிராணியாக இருக்கும் விலங்கை சாப்பிட யாருக்கும் மனம் வராது. ஜலபிரளயம் நெருங்கியபோது விலங்குகள் எல்லாம் தாமாகவே நோவாவை தேடி வந்ததை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களிலே அவைகளுக்கு பயப்படும் குணம் இருந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் இப்பொழுது விலங்குகள் மனிதனைக் கண்டு அஞ்சவும் நடுங்கவும் செய்கிறது இருப்பினும் விலங்கு இனத்திற்கு மனிதனே பொறுப்பாளியாக இருக்கிறான். விலங்குகளை மனிதன் நடத்திய விதம் ஒரு கொடூரமான கதை. மனிதன் பல விலங்குகளை முற்றிலுமாக அளிப்பதற்கு முயன்றும் இருக்கிறான்
அரசாங்கம் தலையிடாமல் இருந்திருந்தால் ஹவாய் தீவுகளை சுற்றி உள்ள அனைத்து திமிங்கலங்களையும் பணத்திற்காக மனிதன் கொன்று குவித்து இருப்பான். ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளிலே எருமை மாடுகள் பெரும் கூட்டமாய் இருந்தன. ஆனால் அவை மனிதனால் கொல்லப்பட்டன. இன்று நாம் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க சரணாலயங்களை அமைக்க வேண்டியதிருக்கிறது. நாம் அவ்வாறு செய்வது நல்லது தான். ஆப்பிரிக்காவில் உள்ள விலங்குகள் அழிந்து வருகின்றன. மனிதன் ஒரு மகா கொடூரமான உயிரினம். மனிதனிடத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க இப்பொழுது நமக்கு ஒரு அரசாங்கம் தேவைப்படுகிறது.
வசனம் மூன்று பாருங்கள்.
ஆதியாகமம் 9:3
[3] நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
……………………
இப்பொழுது தேவன் மனிதனுக்கு ஒரு புதிய உணவு திட்டத்தை வழங்குகிறார். ஜலபிரளயத்திற்கு முன்பு தேவன் மனிதனுக்கு பசுமையான தாவர வகைகளை உணவாகக் கொடுத்திருந்தார். இப்பொழுது அவர் நோவாவிடத்திலே விலங்குகளின் மாம்சத்தை நீங்கள் சாப்பிடலாம் என்று கூறுகிறார். உணவு கட்டுப்பாட்டில் தீவிரமான பிடிவாதம் கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய விஷயங்கள் ஒருவருடைய மதத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. ஊழியர் ஒருவர் ஒரு முறை ஒரு பெண்ணை சந்தித்தார். அவர் தனது மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக சைவ உணவை மட்டுமே உட்கொள்வதாகச் சொன்னார். ஆரம்ப காலங்களில் எல்லாருமே சைவம் சாப்பிடுகிறவர்களே என்று ஊழியர் சொன்ன பொழுது அந்த சகோதரி மிக உற்சாகமடைந்தார்கள். நாமும் சைவமாகவே இருக்க வேண்டும் என்ற தனது வாதத்திற்கு இது வலு சேர்ப்பதாக அவர்கள் நினைத்தார்கள். உடனே அதைக் குறித்துக் கொள்ள தன் உதவியாளரிடம் சொன்னார்கள். அதன்பின் அந்த பெண் இந்த குறிப்பை அளித்து விட்டிருக்க வேண்டும் ஏனென்றால் ஊழியர் அவரிடம் நான் உங்களிடத்தில் இருந்தால் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் ஜலப் பிரளயத்தில் அழிக்கப்பட்டவர்கள் அனைவரும் சைவ உணவு சாப்பிட்ட ஒரு கூட்டத்தினர்தான், அந்த வகையான உணவு முறை அவர்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்பட்டவர்கள் ஆக்கி இருந்தால் அவர்கள் அழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள் என்று கூறினார்.
மேலும் இப்பொழுது தேவன் மனிதன் மாமிசம் உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறார் என்பதை எடுத்துச் சொன்னார்.
ஆனால் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான காரியம், ரத்தத்தை சாப்பிடுவதை தேவன் தடை செய்திருக்கிறார்.
நாலாம் வசனம் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 9:4
[4] மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
…………………
விலங்கின் ரத்தம் கீழே வடிக்கப்பட வேண்டும். ரத்தம் என்பது உயிரைக் குறிக்கிறது அதைக் கீழே வடிப்பதன் நோக்கம் என்னவென்றால் அந்த விலங்கை அதன் துன்பத்தை நீட்டிக்காமல் கருணையோடு கொல்ல வேண்டும். மற்றும் அது உண்மையாகவே இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும். சிலருக்கு பறவைகளை வேட்டையாடுவது பிடிக்காது. ஏனென்றால் சில நேரங்களில் அந்த சிறிய பறவையை சுடும் பொழுது அது கொஞ்சம் காயம் பட்டு தட்டுத் தடுமாறி எங்காவது மறைந்து ஓடிவிடும். அதை மீண்டும் பிடிக்க முடியாது. அப்படி செய்வதால் அந்த மிருகத்தை முழுமையாகக் கொல்லாமல் ஊனமாக்கி விடுவதற்கு ஒப்பானதாய் இருக்கிறது.
தேவன் மனிதர்கள் மிருகங்களை சாப்பிடலாம் என்று சொன்னாலும் அவற்றை ரத்தத்தோடு புசிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். உணவாக எடுத்துக் கொள்ளப்படப் போகிற அந்த விலங்கும் கருணையான முறையில் கொல்லப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ரத்தம் முழுவதுமாக வடிக்கப்பட வேண்டும்.
வசனம் ஐந்து
ஆதியாகமம் 9:5
[5] உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்,
…………………….
அருமையானவர்களே, இது ஒரு சுவாரசியமான வாக்கியம். ஆனால் எல்லைப் புறப்பகுதிகளிலே வசிக்காத பலருக்கு இது அவ்வளவு அர்த்தமுள்ளதாகத் தெரியாது. இருந்தாலும் வெறி நாய் கடி நோய் அல்லது நோய்களை பரப்பக்கூடிய எலிகள் போன்ற சில விலங்குகளை நாம் முற்றிலும் அழிக்க பிரயாசப்படுகிறோம். ஏனென்றால் அவைகள் உண்மையாகவே மனிதனுக்கு கேடு விளைவிக்கிறதாக இருக்கிறது.
இன்று நாம் கற்றுக் கொண்ட வேத வசனங்களில் முக்கியமாய் நம்முடைய உள்ளத்திலே வைத்துக் கொள்ள வேண்டிய சத்தியம் என்ன?? தேவன் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறார். தன்னுடைய திட்டத்தின் படி உலகை அழித்தாலும் நோவாவின் குடும்பம் பத்திரமாய் கரை இறங்கச் செய்தார். பத்திரமாய் வெளியே வந்த நோவாவும் குடும்பத்தினரும் தேவனுக்கு பலி செலுத்தி தேவனை தொழுது கொள்கிறார்கள். எந்த ஒரு காரியத்தின் துவக்கத்திலும் முடிவிலும் நாம் தேவனோடு உறவாடி அவருக்கு நன்றி செலுத்த வேண்டியது நம்முடைய கடமை.
மிருக ஜீவன்களை உட்கொள்ளும்படி அனுமதி கொடுத்தாலும் அதன் இரத்தத்தை நாம் சாப்பிடக் கூடாது என்பதை தேவன் தெளிவாய் கட்டளை கொடுத்திருக்கிறார். தேவனுடைய கரத்திலே புதிய ஜீவனை பெற்றிருக்கிற நாம் நன்றி உள்ளவர்களாக அவருக்கு பிரியமானவர்களாக தொடர்ந்து வாழ அவரை சேவிக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்வோமா??
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
