ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 7:10 - 8:12
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 7:10 – 8:12
நிகழ்ச்சி எண்: 0025

வாசியுங்கள்

பிரியமானவர்களே நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை அன்போடு வாழ்த்துகிறோம். இன்று நாம் ஆதியாகமம் 7:10 – 8:12 வரை சிந்திக்கப் போகிறோம்.
இந்தப் பகுதி ஜலப்பிரளயத்தின் நீர் பெருகுதல், அழிவு, நீர் வற்றுதல், பூமி உலர்தல் மற்றும் நோவாவின் பொறுமையான காத்திருப்பு ஆகியவற்றை விவரிக்கிறது. இது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முழு அளவு, அவருடைய இரட்சிப்பு, மற்றும் புதிய தொடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் இந்த பகுதி காட்டுகிறது.
ஆதியாகமம் 7:10 ஆம் வசனம் பாருங்கள்:
“ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.”
…………………
நோவா பேழைக்குள் நுழைந்த பிறகு ஏழு நாட்கள் காத்திருப்பு இருந்தது. இந்த ஏழு நாட்கள் தேவனுடைய கிருபையின் இறுதி காலம். கர்த்தர் உலகத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். 2 பேதுரு 2:5ல் சொல்லப்பட்டது போல நோவா “நீதியின் பிரசங்கி” ஆக இருந்து தேவன் கதவைப் பூட்டும்வரை எச்சரிக்கை செய்திருக்கலாம்.
2 பேதுரு 2:5: வாசிக்கிறேன்
“பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;
…………………..
ஆனால் மக்கள் அவபக்தியுள்ளவர்களாக மாறி கீழ்ப்படியாமற் போனதினால், கர்த்தர் ஜலப்பிரளயத்தை வரப் பண்ணினார். இயேசு கிறிஸ்துவும் இறுதி நியாயத்தீர்ப்பை இந்தக் காலத்தோடு ஒப்பிடுகிறார். வாசிக்கிறேன். மத்தேயு 24: 37:
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.”
……………………….
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால். இறுதி நியாயத்தீர்ப்புக்கு முன் கிருபையின் காலம் உண்டு.
ஆதியாகமம் 7:11-12
[11] நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. [12] நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
‭ஆதியாகமம் 7:16-17
[16] தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். [17] ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
…………………..
“நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே,” – என்று வேதாகமம் இங்கே மிகத் துல்லியமாக ஒரு தேதியைக் குறிப்பிடுகிறது. இது ஜலப்பிரளயத்தின் வரலாற்றுத் தன்மையை உறுதிப்படுத்துகிறது. இது கட்டுக்கதை அல்ல, உண்மையான நிகழ்ச்சி என்பது நமக்குத் தெரிகிறது./ /
இப்பொழுது இரண்டு இடங்களில் இருந்து நீர் வருவதைக் பார்க்கிறோம். முதலாவது, ”மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன” – (underground sources) – பூமியின் ஆழத்தில் இருந்த நீரூற்றுகள் பிளந்து பொங்கின.
இரண்டாவது, “ஆகாயத்தின் மதகுகளும்” (windows of heaven) என்று குறுப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது வானத்திலிருந்து மழையும் பெய்தது.
ஆதியாகமம் 1:7ல் படைப்பின் போது, “தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்” என்று வாசிக்கிறோம்.

இந்த வேத பகுதி, தேவன் பிரித்த நீர்களை நமக்கு நினைவூட்டுகிறது. அப்போது ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற நீருக்கும், ஆகாயத்துக்கு மேலே இருக்கிற நீருக்கும் இடையே பிரிவு இருந்தது. இப்போது அந்த ஒழுங்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு, மேலிருந்த நீரும் கீழிருந்த நீரும் ஒன்று சேர்ந்தன. இது உலகளாவிய பிரளயத்தை உறுதிப்படுத்துகிறது. இது ஓர் உள்ளூர் வெள்ளம் அல்ல.
”ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது,” –
தொடர்ச்சியாக 40 பகல்கள் மற்றும் 40 இரவுகள் மழை பெய்தது. இது இயற்கைக்கு மீறியது. சாதாரணமாக எந்த மழையும் இவ்வளவு நாட்கள் தொடர்ந்து பெய்வதில்லை.
வேதாகமத்தில் 40 என்ற எண் பெரும்பாலும் சோதனை, தீர்ப்பு, தயாரிப்பு, மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும். சில எடுத்துக்காட்டுக்களைச் சொல்கிறேன், கேளுங்கள்:
யாத்திராகமம் 24:18: “மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.”
……………………….
மோசே சீனாய் மலையிலே தேவனோடு நாற்பது நாள் தங்கி இருந்தான்.
எண்ணாகமம் 14:33: “நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.”
………………………
இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருஷம் வனந்தரத்தில் பிரயாணப்பட்டார்கள்.
1 இராஜாக்கள் 19:8: “அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.”
……………………………..
இந்த வசனம் எலியாவைக் குறித்துச் சொல்கிறது. எலியா 40 நாட்கள் உணவு உண்ணாமல் பயணித்தான்.
மத்தேயு 4:2: “அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.”
ஆம், இயேசு 40 நாட்கள் உபவாசித்து, சோதிக்கப்பட்டார்.
அப்போஸ்தலர் 1:3: “அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.”
……………………………..
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு 40 நாட்கள் பூமியில் தங்கியிருந்தார்.
ஆக, 40 என்ற எண் வேதாகமத்தில் ஒரு முக்கியமான எண்.

இங்கே 40 நாட்கள் மழை என்பது முழுமையான தீர்ப்பின் காலத்தை குறிக்கிறது. 40 நாட்கள் பெய்த மழை பாவ உலகத்தை முழுவதுமாக அழிக்கப் போதுமானது.
40 நாட்கள் தொடர்ச்சியான மழை போல, தேவனுடைய தீர்ப்பு முழுமையானது மற்றும் தீவிரமானது. இன்று இயேசு கிறிஸ்துவே நமது “பேழை”. அவர் என் இரட்சகர் என்று விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்ளும் பொழுது நாமும் நியாயத் தீர்ப்பிலிருந்து தப்பிக்கலாம்.
வேத புத்தகத்தில் ஜல பிரளயம் பற்றி நீங்கள் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். அதுபோல அதை குறித்த அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? 1960 ஆம் ஆண்டு ஹென்றி எம் மோரிஸ் என்பவரும் ஜான். சி விட்காம்ப் என்பவரும் எழுதிய, The Genesis flood என்ற புத்தகம் பிரசித்தி பெற்றது. இவர்கள் இருவரும் இந்த தலைப்பில் எழுதுவதற்கு முழுமையான தகுதி உடையவர்கள் என்று சொல்லலாம். விட்காம்ப், – கிரேஸ் இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டு பேராசிரியராக இருந்தார். ஹென்றி எம் மோரிஸ் என்பவர் நீரியல் பொறியியல் பேராசிரியராகவும் சிவில் இன்ஜினியரிங் துறை தலைவராகவும் பணியாற்றியவர்
.
நோவாவின் காலத்தில் வந்த வெள்ளப்பெருக்கு உலகளாவியது என்றும் இது மிகப் பெரிய பேரழிவு என்றும் இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அதில் திட்டவட்டமாய் கூறி இருக்கிறார்கள். மேலும் தற்போது நடக்கும் மாற்றங்களைக் கொண்டே அனைத்து புவியியல் மாற்றங்களையும் விளக்கி விடலாம் என்ற வாதத்திற்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அந்தக் கோட்பாடுதான் உலகளாவிய வெள்ள பெருக்கத்திற்கான புவியியல் ஆதாரங்களை குறைத்து மதிப்பிடுவதற்காக முன்வைக்கப்படும் ஒன்று.
ஜலப் பிரளயம் என்பது உலகளாவிய ஒன்று என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன என்பதை இந்தப் புத்தகம் தெளிவாகக் கூறுகிறது. அந்த புத்தகம் இன்றும் கிடைக்கக்கூடிய ஒன்றாய் இருக்கிறது. மிகவும் அறிவோடு எழுதப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் உலகளாவிய வெள்ளப்பெருக்கு உண்மை என்பதை குறித்த பதில்கள் விரிவாக சொல்லப்பட்டிருப்பதால் நாம் அதற்குள்ளே நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

வசனம் 23 பாருங்கள்
‭ஆதியாகமம் 7:23
[23] மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
……………….,
இங்கே சொல்லப்பட்டிருக்கிற சத்தியங்களுக்கு எதிராகவும் சில போலி இறையலாளர்கள் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது இது உலகளாவிய ஒரு வெள்ளம் அல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பதுதான் அவர்கள் கருத்து. அதாவது இது யூப்ரட்டீஸ் பள்ளத்தாக்குடன் மட்டுப்படுத்தப்பட்டது என்ற நிலையை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இது ஒரு பெரிய நீச்சல் குளம் போன்றது என்று கூறுகிறார்கள்.
.
ஆனால் நான் ஏற்கனவே கூறிய இந்த Genesis flood என்ற புத்தகம் அந்த சிந்தனையை முற்றிலுமாக தகர்த்து இருக்கிறது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கு பூமி முழுவதையும் மூடியது என்பதை வேதாகமம் மிகத் தெளிவாக கூறியிருக்கிறது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பூமி முழுவதும் வெள்ளத்தால் அழிக்கப்படப் போவதாக தேவன் கூறினார். தேவன் நோவாவை நோக்கி கூறியதை மீண்டும் வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 6:13
[13] அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
..,……………,
பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே வட அமெரிக்காவில் மனிதர்களும் விலங்குகளும் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஜலப் பிரளயம் உலக அளவிலானது அல்ல என்று நீங்கள் சொன்னால் நோவாவை தவிர வேறு யாரோ ஒருவர் மூலமாக மனித நேயம் மீண்டும் தொடங்கியது என்று நீங்கள் சொல்ல வேண்டியது வரும். ஆனால் தேவனுடைய வார்த்தை அவ்வாறு சொல்லவில்லை.
அல்லது வேதப் புத்தகம் சொல்வதை நிராகரிக்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குரிய வெள்ளம் என்று வாதாடுவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் தேவனுடைய வார்த்தையை புறக்கணிப்பது ஆகும். அது உலகம் தழுவிய பெருவெள்ளம் என்பதை வேதாகமம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறது. ஜீவன் உள்ள பொருட்கள் யாவும் அழிக்கப்பட்டன. நோவாவும் அவனுடைய பேழையில் இருந்தவர்கள் மட்டுமே தப்பிப் பிழைத்தார்கள்.

‭ஆதியாகமம் 7:24
[24] ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
…………………

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் சுமார் அரையாண்டு காலம் அதாவது ஐந்து மாதங்களுக்கு பூமியின் மேல் தண்ணீர் நின்றது.
ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்த பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குரியது அல்ல மாறாக உலகம் தழுவியது என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை,
சீரான மாற்ற கொள்கை அதாவது யுனிபார்மிடேரியனிசம் குறித்த கேள்விக்கும் பதில் அளக்கிறது.
இந்தக் கொள்கையின் சுருக்கம் – நிகழ்காலமே கடந்த காலத்திற்கான திறவுகோல். அதாவது இன்று பூமியில் நிலச்சரிவு எரிமலை வெடிப்பு ஆற்று அரிப்பு அல்லது கடல் மட்ட உயர்வு போன்ற மாற்றங்கள் எந்த வேகத்தில் மற்றும் எந்த இயற்கையின் விதிகளின்படி நடக்கிறதோ அதே வேகத்திலும் அதே விதிகளின்படியும் தான் பல மில்லியன் ஆண்டுகளாக பூமி மாறி வருகிறது என்பது இதன் பொருள்.
உலகளாவியப் பெருவெள்ளம் எதுவும் ஏற்படவில்லை என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் அந்த விபரங்களுக்குள் நாம் செல்ல தேவையில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்லும் காரியத்தை மட்டும் நாம் கவனிப்போம். வாசிக்கிறேன்
‭2 பேதுரு 3:3-4
[3] முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, [4] அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
…………….

பரிகாசக்காரர்கள் எல்லாருமே எப்பொழுதும் நிகழ்காலமே கடந்த காலத்திற்கான திறவுகோல் என்று சொல்வார்கள். இந்த குறிப்பிட்ட காரியத்தை குறித்து நீங்களும் அதே நிலைப்பாட்டை கொண்டிருப்பீர்கள் என்றால் அதே சமயம் தேவனுடைய வார்த்தையின் நம்பகத்தன்மையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்..
தொடர்ந்து நாம் எட்டாம் அதிகாரத்தின் சில வசனங்களையும் பார்ப்போம். 8ஆம் அதிகாரத்தில் மழை நிற்கிறது. பூமி காய்கிறது. நோவா பேழையை விட்டு வெளியே வருகிறார். ஒரு பலிபீடம் கட்டி பலியிடுகிறார்.
முதல் நான்கு வசனங்களை வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 8:1-4
[1] தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. [2] ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. [3] ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. [4] ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
………………

பெருவெள்ளம் எவ்வாறு உண்டானது என்பது பற்றியும் அது எவ்வாறு பெருகி நின்றது என்பதும், பின் அது எவ்வாறு வற்றத் தொடங்கியது என்பதைப் பற்றிய விபரங்களும் நமக்கு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவன் நோவாவை நினைத்தருளினார் என்பது எவ்வளவு ஒரு அருமையான வாக்கியம் இல்லையா? தேவன் பூமியின் மேலே காற்றை வீசப் பண்ணினார் அப்பொழுது ஜலம் வடிந்தது என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது – இது ஒரே இரவில் நடந்து விடவில்லை. ஜலம் பெருகி நிற்க 150 நாட்களுக்கு மேலானது. பின்னர் அது வற்றிப்போக 261 நாட்கள் ஆனது. இதை பார்க்கும் பொழுது இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிக்குரிய வெள்ளத்தை காட்டிலும் மேலானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
‭ஆதியாகமம் 8:5-6
[5] பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. [6] நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
…………………
சொல்லப்போனால் இதுதான் வெள்ளத்தின் முடிவின் ஆரம்பம், தொடர்ந்து நோவா என்ன செய்கிறார் என்பதை பாருங்கள் அடுத்த இரண்டு வசனங்கள் வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 8:7-8
[7] ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. [8] பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
………………..
தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நோவா பறவைகளின் செயல்களை கூர்ந்து கவனிக்கிறவராக மாறினார். காகம் மற்றும் புறா ஆகிய இந்த இரqண்டு பறவைகளையும் அவர் வெளியே அனுப்பினார்.
வசனங்கள் 9 முதல் 12 வரை பாருங்கள்.
‭ஆதியாகமம் 8:9-12
[9] பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். [10] பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான். [11] அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். [12] பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.
………………..
எட்டாவது அதிகாரத்தில் உள்ள இந்த காகம் மற்றும் புறாவின் சம்பவம் மூலம் ஒரு சிறந்த ஆன்மீக உண்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நோவா ஒரு வருடத்திற்கு மேலாக பேழையில் தங்கி இருந்த பிறகு அவர் ஒரு காகத்தை வெளியே அனுப்பினார். அந்த காகம் மீண்டும்வருவதும் போவதுமாக இருந்தது. ஆனால் புறா மீண்டும் வந்தது. அது தன் அலகில் ஒரு சிறிய பசுமையான ஒலிவ மரத்து இலையை கொண்டு வந்தது. புறாவும் ஒலிவ இலையும் ஏன் எப்போதும் அமைதியின் அடையாளமாக இருக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவை அவ்வாறே கருதப்படுகின்றன. புறாவின் இரண்டாவது வருகையின் செய்தி சரியாக அதுதான் என்று நம்மால் புரிய முடியவில்லை. ஆனால் அந்த புறா முற்றிலும் திரும்பி வராத போது அது நியாயத்தீர்ப்பு முடிந்து விட்டதற்கும், பூமியில் அமைதி திரும்பி விட்டதற்கும் அடையாளமாய் இருந்தது என்று சொல்லலாம். ஆனால் நிச்சயமாக பேழையில் இருந்து வெளியே வரும் மனிதன் முதல் முறை கடவுளிடத்திலிருந்து நியாயத்தீர்ப்பாக பெருவெள்ளத்தை தூண்டிய ஆதாமின் குமாரர்களை போன்ற அதே வகையான மனிதன்தான். பெரு வெள்ளத்திற்கு பிறகு மனிதனிடம் அதிகம் முன்னேற்றம் இல்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். சொல்லப் போனால் எந்த மாற்றமுமே இல்லை.
இங்கே ஒரு பெரிய ஆன்மீகப் பாடம் இருக்கிறது. அதை நீங்கள் எந்த காரணத்திற்காகவும் தவற விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நோவா இங்கே பறவைகளை கவனிப்பதில் ஈடுபட்டிருக்கிறார். அவர் காகத்தை வெளியே அனுப்பினார். காகம் திரும்பி வரவில்லை. அந்த காகம் ஏன் திரும்பி வரவில்லை.?
காகம் எதை உண்ணும் என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். அது அழுகிய பிணங்களை உண்ணும். பெரு வெள்ளத்திற்கு பிறகு ஏராளமான விலங்குகளின் உடல்கள் மிதந்து கொண்டு இருந்தன. இந்த பழைய காகம் அத்தகைய உணவையே சாப்பிட்டது. அது ஒரு விருந்திற்கே சென்றது என்று சொல்லலாம். அங்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அது நோவாவின் இடத்திற்கு திரும்பி வரவில்லை. சொல்லப் போனால் காகம் ஒரு தீட்டான பறவையாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
புறா ஒரு சுத்தமான பறவை. அது வேதத்தில் அவ்வாறே பட்டியலிடப்பட்டிருக்கிறது. நோவா சுத்தமான மற்றும் தீட்டான விலங்குகள் இரண்டையுமே கொண்டு சென்றார் என்பதை நாம் நினைவிலே வைத்திருக்க வேண்டும். புறா தகவல்களைக் கொண்டு வந்தது. அது ஒரு முறையான தூது பறவையாக இருந்தது. புறாவின் இரண்டாவது பயணத்தின் பொழுது நோவா இப்பொழுது ஒரு உறுதியான பறவை ஆய்வாளராக மாறினார் என்று சொல்லலாம். மேலும் உலர்ந்த நிலம் தோன்றுவதற்கான ஆதாரத்தை புறா கொண்டு வந்தது. மூன்றாவது முறை அந்தப் புறா திரும்பி வரவில்லை. நியாயத்தீர்ப்புபின் ஜலம் நீங்கி விட்டது. என்பதை நோவா அறிந்து கொண்டார்.
வேத புத்தகத்தின் அனைத்து பெரிய உண்மைகளுக்கும் ஆதியாகமம் தான் அடிப்படை என்பதை எப்பொழுதும் நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். ஒரு விசுவாசிக்கு பழைய சுபாவம் மற்றும் புதிய பாவம் என இரண்டு சுபாவங்கள் இருப்பதாக வேதம் தெளிவாக நமக்கு போதிக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல்
கொரிந்து திருச்சபைக்கு எழுதும் பொழுது என்ன எழுதுகிறார் பாருங்கள்.
‭2 கொரிந்தியர் 5:17
[17] இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
………………..
சுத்தமானதும் தீட்டானதுமான இரண்டு சுபாவங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. விசுவாசிகளாகிய உங்களிடமும் என்னிடமும் இந்த இரண்டு சுபாவங்களும் இருக்கின்றன. நம்முடைய ஆண்டவர் என்ன கூறினார்?. பாருங்கள் வாசிக்கிறேன் யோவான் 3 :6
‭யோவான் 3:6
[6] மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
………………..
மேலும் பவுல் ரோமர் 7 : 18ல் என்ன கூறுகிறார் பாருங்கள்.
‭ரோமர் 7:18
[18] அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை.
……………….
இந்த வசனங்களை நாம் நன்றாக கவனித்து பார்ப்போம் என்றால், இந்த இரண்டு சுபாவங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை பற்றியும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு விசுவாசியின் பழைய சுபாவத்திற்கும் புதிய சுபாவத்திற்கும் இடையே தொடர்ந்து போராட்டம் உண்டு.
காகம் நியாயத்தீர்ப்புக்கு உள்ளான உலகத்திற்குள் சென்று விட்டது. அதாவது அது செத்த பிணங்களில் விருந்து கண்டது. ஏனென்றால் அதுவே அதன் வாழ்வாதாரம். செத்துப்போன ஒரு யானையின் பிணம் அதற்கு ஒரு பெரிய விருந்தாக இருந்திருக்கும். மேலும் அது அந்த காகத்திற்கு கட்டுக்கடங்காத கொண்டாட்டமாக இருந்திருக்கும். அது அங்கும் இங்குமாக ஓய்வில்லாமல் மேலேயும் கீழேயும் பறந்து கொண்டு இருந்தது. பிரியமானவர்களே இதுதான் பழைய சுபாவத்தின் ஒரு படம். நம்முடைய பழைய சுபாவம் அந்த காகத்தைப் போலத்தான் இருக்கிறது. அதாவது பழைய சுபாவம் உலக காரியங்களை நேசிக்கிறது, மற்றும் அவற்றையே விரும்பி, விருந்து சாப்பிடுவதைப் போல அதை அனுபவிக்கிறது. இதுதான் ஞாயிற்றுக்கிழமையும் பலர் ஆராதனைக்கு செல்லாமல் தொலைக்காட்சியையும் youtubeபையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு காரணம். அதற்கு வேறு ஏதோ ஒரு நல்ல காரணம் இருக்கிறது என்று என்னிடம் சொல்ல வேண்டாம். உங்கள் இடத்தில் ஒரு பழைய சுபாவம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு சாக்கு போக்காகாது. ஏனென்றால் நீங்கள் பழைய சுபாவத்திலே வாழக்கூடாது.
புறா நியாயத் தீர்ப்புக்குள்ளான உலகத்தினுள் சென்றது. ஆனால் அதற்கு அங்கே எந்த ஓய்வும் திருப்தியும் கிடைக்கவில்லை. அதனால் அது பேழைக்கே திரும்பியது. புறா இந்த உலகத்தில் இருக்கும் விசுவாசியை பிரதிபலிக்கிறது. பழைய காகம் உலகத்திற்கு சென்று அதை நேசித்தது. அது அந்த பழைய பிணத்தை கண்ட பொழுது ஒருவேளை அதற்கு பொற்காலமே வந்து விட்டதாக அது நினைத்திருக்கும்.
ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் வந்துவிட்டது என்று கூட நினைத்திருக்கலாம்.
பேராசிரியர் ஒருவர் சொல்லும் பொழுது எது சரி எது தவறு என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய ஒன்று என்று கூறியிருக்கிறார். அவர் சொல்வது சரிதான். அது அவ்வாறு தான் இருக்கிறது. தேவன் எது சரி என்று சொல்கிறாரோ அதுவே சரி. அந்தப் பேராசிரியர் எது தவறு என்று சொல்கிறாரோ அது தவறு. ஆனால் சொல்லப்போனால் அவருக்கு தவறாக தெரியும் காரியங்கள் மிக குறைவுதான். ஆனால் தேவன் எது தவறு என்று சொல்கிறாரோ அது தவறு. விசுவாசிக்கு சொல்லப்பட்டிருப்பது என்ன?? பாருங்கள்
‭1 யோவான் 2:15
[15] உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
……………..

என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே நீங்களும் நானும் இன்று நியாயத் தீர்ப்புக்குள்ளான ஒரு உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறோம். ஆனால் நாம் இந்த உலகத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து வாழ வேண்டும். நாம் உலகத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. நாம் உலகத்தின் மேல் அன்பு கொள்ளக்கூடாது. மாறாக இந்த உலகத்திலே அழிந்து போய்க் கொண்டிருக்கிற மக்களை மீட்கவும் தேவனுடைய வார்த்தையை அறிவிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய ஆண்டவர் நமக்கு என்ன சொல்லி இருக்கிறார்?
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭மாற்கு 16:15
[15] பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
………………….

இந்த உலகத்தில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் தேவனுடைய வார்த்தையை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதுவே முக்கியமான நம்முடைய கடமை. தான் எத்தகைய உலகத்திலே இருக்கிறேன் என்பதை புறா உணர்ந்திருந்தது. அதற்கு ஓய்வு கிடைக்கவில்லை. அதற்கு பேழையில் மட்டுமே ஓய்வு கிடைத்தது. அந்தப் பேழை இயேசு கிறிஸ்துவை முன் அறிவிக்கிறது.
இந்த மிக முக்கியமான தனிப்பட்ட கேள்வியை நான் உங்களிடத்திலே கேட்க விரும்புகிறேன். நீங்கள் எந்த வகையான பறவையாக இருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு காகமா? அல்லது புறாவா? நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருப்பீர்கள் என்றாலும் உங்களிடம் இரண்டு சுபாவங்களும் இருக்கும். ஆனாலும் இன்று நீங்கள் எதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமானது. நீங்கள் தேவனுடைய காரியங்களை நேசிக்கிறீர்களா? தேவனுக்குப் பிரியமான வார்த்தைகளைப் பேசுவதிலும், தேவனுக்குப் பிரியமான காரியங்களை செய்வதிலும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறீர்களா? தேவனுடைய பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களாக வாழ்கிறீர்களா? உங்களுடைய வார்த்தைகளும், செயல்களும் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் இருக்கிறதா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

கர்த்தர் தாமே உங்களை சரியான சிந்தனையில் வழி நடத்தி திட்டவட்டமான தீர்மானங்களுக்குள் எடுத்துச் செல்வாராக ஆமென்.
16

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top