ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 6: 14 - 7:9
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 6:14 – 7:9
நிகழ்ச்சி எண்: 0024

வாசியுங்கள்

அருமையானவர்களே மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த நிகழ்ச்சியில் ஆதியாகமம் 6 ஆம் அதிகாரம் 13ஆம் வசனம் வரைக்கும் நாம் கற்றுக் கொண்டோம். 

இன்று நாம் ஆதியாகமம் 6 அதிகாரம் 14 முதல் 7:ஆம் அதிகாரம் 9 வது வசனம் வரை கற்றுக் கொள்வோம். இந்த வேத பகுதியை  நீங்கள் பலமுறை வாசித்திருக்கலாம்.  என்றாலும்  இந்த நாளில் கர்த்தர் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களை கற்றுக் கொள்வோம்.

இந்தப் பகுதி, நோவாவின் பேழை கட்டுதல், விலங்குகள் உள்ளே செல்லுதல் மற்றும் ஜலப்பிரளயம் ஆகியவற்றை விவரிக்கிறது. இது மனிதகுலத்தின் பாவத்தால் ஏற்பட்ட தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சொல்கிறது. அதே சமயம்நோவா மூலமாக இரட்சிப்பு கிடைத்ததையும் விவரிக்கிறது. இந்தப் பகுதி தேவனுடைய நீதி, கிருபை, கீழ்ப்படிதல் மற்றும் இரட்சிப்பின் அடையாளமாக விளங்குகிறது.

ஏற்கனவே நாம் பார்த்தது போல ஜலப்பிரளயத்திற்கு முன் தேவன் ஜனங்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்திருந்தார். தொடர்ந்து என்ன  நடந்தது பாருங்கள்.

வாசிக்கிறேன்

ஆதியாகமம் 6:14 

[14] நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு.

………………….

இங்கே தேவன் நோவாவை பார்த்து அந்தப் பெரிய படகை செய்வதற்கு கொப்பேர் எனும் மரத்தை பயன்படுத்த சொன்னார். இது நம்முடைய நாட்டிலே நாம் பார்க்கிற செம்மரத்தை போல உறுதியானது. அடுத்து தேவன் அதில் அறைகளை உண்டு பண்ண சொன்னார். எபிரெய மொழியிலே அறைகள் என்று சொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை கூடுகள் எந்த கருத்துடையதாய் இருக்கிறது. யானைக்கு பெரிய அறை தேவை, ஆனால் சிறிய வெள்ளெலிக்கு சிறிய இடம் போதும். அது மட்டுமல்ல தண்ணீர் கொஞ்சமும் உள்ளே வர முடியாத படி உள்ளேயும் வெளியேயும் கீல் பூச வேண்டும்

கொப்பேர் மரம் வலிமையானது, கீல், அதாவது, பிசின் நீர்க்கசிவைத் தடுக்கும். இது தேவனுடைய துல்லியமான திட்டத்தைக் காட்டுகிறது. பேழை இரட்சிப்பின் அடையாளம்.

ஆதியாகமம் 6:15 வாசிக்கிறேன்.

[15] நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.

………………

பெரும்பாலான மக்கள் பேழை என்று சொல்லும் பொழுது ஞாயிறு பள்ளியிலே படத்தில் பார்த்தது தான் அவர்களுக்கு நினைவில் இருக்கும். ஆனால் நோவா கட்டிய பேழை மிகவும் பெரியது. இது எப்படி நமக்கு தெரியும்? தேவன்  பேழையை கட்டுவதற்கான ஆலோசனைகளை நோவாவுக்கு கொடுக்கிறார். பேழையின் நீளம் 300 முழமாய் இருக்கக்  வேண்டும். ஒரு முழம் என்பது 18 அங்குலம்.  அதாவது ஒன்றறை அடி. அப்படி என்றால் அதன் நீளம் எவ்வளவு இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

அவ்வளவு முந்திய காலத்தில், எப்படி இவ்வளவு வலிமையாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்க முடிந்தது என்ற கேள்வி ஒருவேளை எழும்பலாம். அருமையான சகோதரனை சகோதரியே நாம் குகை மனிதர்களை பற்றி பேசவில்லை. நாம் ஒரு மிகச்சிறந்த அறிவாளியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் கவனித்து பார்த்தால் இன்று மனித இனத்திற்கு இருக்கும் புத்திசாலித்தனம் நோவாவிடம் இருந்தே வந்தது என்று சொல்லலாம். அவர் ஒரு மாபெரும் புத்திசாலியாக இருந்தார்

நோவா 50 அடி உயரம் எலும்பும் அலைகளைத் தாங்கிச் செல்லும் ஒரு  பயண கப்பலை உருவாக்கவில்லை அவர் உருவாக்குவதெல்லாம் விலங்குகளும் மனிதர்களும் நீண்ட காலம் தங்குவதற்கான ஒரு பாதுகாப்பான இடம் மட்டுமே. புயலைக் கடந்து செல்வதற்காக அல்ல

 பெறுவெள்ளம் வடியும் வரை காத்திருக்கவே இதை அவர் கட்டினார். அந்த காரணத்திற்காகவே ஒரு கடற்பயண கப்பலில் காணப்பட வேண்டிய பல வசதிகள் இந்த பேழையிலே இல்லாமல் இருந்திருக்கலாம். இதுவே அதில் அதிகப்படியான இடவசதி இருக்க வாய்ப்பு கொடுத்தது. அந்த கப்பல் மிதப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது நோவாவின் வேலை அதில் பயணியாக இருப்பதுதான். கேப்டனாக இருப்பதல்ல. கடவுளே அந்த பேழையின் கேப்டனாக இருந்தார். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சூழ்நிலையில் கர்த்தர் உங்களை வைக்கும்போது ஒரு திசை திருப்பியை நீங்கள் பொறுத்த முயற்சிக்க வேண்டாம்,  தேவனே உங்களைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்வார் சரியான நேரத்தில் அதிலிருந்து கரை இறங்கவும் செய்வார்.

ஒரு முழம் என்பது 18 அங்குலம் என்றால் 300 முளம் என்பது 450 அடிகள். அந்தப் பேழை அவ்வளவு நீளம் கொண்டது.  அது மிகவும் நீளமான ஒரு படகு தான். ஆனால் அதன் விகிதாச்சார அளவுகள் நமக்கு ஆர்வம் உண்டாக்குகிறதாய் இருக்கின்றன.

உதாரணம் ஒன்று சொல்கிறேன் கவனியுங்கள். இரண்டாம் உலக போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நியூ மெக்சிகோ என்ற கப்பல், 624 அடி நீளமும் 106 1/4 அடி அகலமும் சரியாக 29 அரை அடி உயரமும்  கொண்டதாக கட்டப்பட்டிருந்தது.  ஒப்பிட்டு பார்த்தால் நோவாவின் பேழையும் நடைமுறையில் அதே விகிதத்தையே கொண்டிருக்கிறதுஎனவே அது பார்ப்பதற்கு வேடிக்கையான ஒரு படகு அல்ல, மாறாக இன்று கப்பல்கள் கட்டப்படும் முறைக்கு இணையான ஒரு வடிவமைப்பை கொண்டிருந்தது. சொல்லப்போனால் வேதத்திலிருந்தே தற்கால கப்பல்களை கட்டுவதற்கான விகிதாச்சாரத்தையும் மனிதன் பெற்று இருக்க வேண்டும்.

வசனம் பதினாறு பாருங்கள்

ஆதியாகமம் 6:16 

[16] நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.

…………………

தேவன் நோவாவிடம் பேழைக்கு ஒரு ஜன்னலை செய்யும்டியாய் சொல்லுகிறார், அந்த ஜன்னல் என்பது பேழையின் பக்கவாட்டில் செய்யப்பட்ட ஒரு சிறிய துளை அல்ல. அவ்வளவு விலங்குகளுடன் நீண்ட காலம் உள்ளே இருக்கும் பொழுது அங்கு ஏற்படக்கூடிய துர்நாற்றத்தை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த ஜன்னல் மேல் தட்டில் இருந்து ஒரு முளம்  கீழே தள்ளி  இருந்தது. பேழையின் மேற்புறம் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தது. பேழையின் கூரை அந்த ஜன்னலை தாண்டி சற்று நீட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இன்று சில உடற்பயிற்சி கூடங்களிலே காற்றோட்ட வசதி இப்படித்தான் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய நகரத்திலே நடைபெற்ற மாநில கண்காட்சியில் விலங்குகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேல் பகுதி முழுவதும் இது போன்ற ஜன்னல்கள் இருந்ததாக ஒருவர் கூறுகிறார். அங்கே அவ்வளவு விலங்குகள் இருந்தபோதிலும் அது ஒரு சங்கடமான இடமாக இருக்கவில்லை. மக்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் உறங்கிக் கொண்டும் இருந்தார்கள். அது மிகவும் வசதியாக இருந்தது என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் துர்நாற்றம் அதிகம் இல்லாமல் இருந்திருக்கும். பாவம் நோவா அவர் உயிர் பிழைப்பதற்காக இந்த சிறிய ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டிக் கொண்டு இருந்திருக்க வேண்டியிருக்கும் என்று சிலர் சொல்வது வேடிக்கையானது தான். அது மனிதனின் கற்பனையை தவிர வேதத்தில் அப்படிச்  சொல்லப்படவில்லை. வேதத்திலே சொல்லப்பட்டிருப்பது என்ன??. அந்த ஜன்னல் மேல் தட்டில் இருந்து ஒரு முளம் கீழே இருக்க வேண்டும் அவ்வளவுதான்

மேலும் இந்த வசனத்தில் நாம் பார்ப்பது என்ன? பேழையின் கதவை அதன் பக்கத்தில் வை என்று சொல்கிறார். பேயினுள் நுழைய ஒரே ஒரு கதவு தான் இருந்தது. அது மிக முக்கியமானது

ஏனென்றால் இரட்சிக்கப்படுவதற்கான வாசல் இயேசு கிறிஸ்து மட்டுமே. கிறிஸ்து நானே வழி என்றும் நானே ஆடுகளின் வாசலாய் இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.  அவரே பேழையின் வாசலாய் இருக்கிறார்.

கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும் என்றும் தேவன் கூறுவதை பார்க்கிறோம். அப்படி என்றால் பேழை 3 அடுக்குகளை கொண்டிருந்தது. ஒருவேளை அது நான்கு அடுக்குகளைக் கொண்டதாயும் இருந்திருக்கலாம் என்று ஒருவர் கூறுகிறார். ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி கதவுகள் இல்லாமல் ஒரே கதவு தான் இருந்தது. இதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்

வசனம் 17. 

ஆதியாகமம் 6:17 

[17] வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

.,……………….

இப்பொழுது தேவன் பூமியின் மேலும் மிருகங்கள் மேலும் பறவைகள் மேலும் மனிதனின் மேலும் நியாயத் தீர்ப்பை கொண்டு வருகிறார்.

இந்த வசனத்தில் தேவன் நோவாவோடு பேசுகிறார். இது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அறிவிப்பு ஆகும். தேவன் தாமே ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன் என்று கூறுகிறார்.

நான் என்ற வார்த்தை தேவன் தாமே இந்த செயலைச் செய்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. இது தேவனுடைய இறையாண்மை (sovereignty) மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டைக் காட்டுகிறது. இந்த ஜலப் பிரளயம் இயற்கை சீற்றம் அல்ல, ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்: ஆம்  இது தேவனுடைய நேரடி நியாயத்தீர்ப்பு/. – “பிரளயம்என்ற சொல் எபிரெய மொழியில்மப்பேல்” (mabbul) என்று சொல்லப்படுகிறது. இது வேதாகமத்தில் வேறு எங்கும் ஜலப்பிரளயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. இது தனித்துவமான, உலகளாவிய வெள்ளம். இது வானம் மற்றும் பூமியின் ஆழங்களிலிருந்து நீர் பொழியும் மாபெரும் அழிவு. ஆதியாகமம் 7ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தைப் புரட்டிப் பாருங்கள்:

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.”

………………
பூமியின் ஆழங்களிலிருந்தும், வானத்திலிருந்தும் தண்ணீர் பொழிந்து மாபெரும் அழிவைக் கொண்டு வந்தது

வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க: “சுவாசமுள்ளஎன்றால் உயிரின் சுவாசம்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று வாசிக்கிறோம்

மனிதனுக்கு தேவன் உயிரின் சுவாசத்தை ஊதினார். இப்போது அதே சுவாசமுள்ள அனைத்து ஜீவன்களும் அழியும். இது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது

பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.”: இது முழு அழிவைக் குறிக்கிறது. ஆனால் பேழையிலுள்ளவர்கள் விதிவிலக்கு

வசனங்கள் 18 முதல் 20 வரை பாருங்கள்

ஆதியாகமம் 6:18-19 

[18] ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். [19] சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்

……………….

ஆனாலும் உன்னோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்“: இங்கேஆனாலும்என்ற சொல் மிக முக்கியம். அழிவின் மத்தியில் கிருபையின் திருப்பத்தை நாம் இங்கே பார்க்கிறோம். தேவன் முழு அழிவை அறிவித்தாலும், நோவாவோடு உடன்படிக்கை செய்கிறார். இது வேதாகமத்தில் முதலாவது தெளிவாகக் கூறப்படும் உடன்படிக்கை. தேவன் நோவாவின் நீதியின் அடிப்படையில், தேவனுடைய கிருபையால் உடன்படிக்கை செய்கிறார். இதன் பின்னர் ஆபிரகாமிய உடன்படிக்கை (15:18), சீனாய் உடன்படிக்கை (யாத்திராகமம் 19-24), தாவீதிய உடன்படிக்கை இவைகள் தொடர்ச்சியாக வந்தன. எரேமியா 31:31ல் சொல்லப்பட்ட புதிய உடன்படிக்கை இயேசு மூலம் நிறைவேறியது. ம்ேலும் ஆதியாகமம் 6:18ல்

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.”

…………………


நீயும் உன்னோடே உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் போங்கள்“: மொத்தம் 8 பேர்:/ / நோவா, அவரது மனைவி, மூன்று குமாரர்கள்,சேம், காம், யாப்பேத், அவர்களது மனைவிகள் 3 பேர். இது குடும்ப இரட்சிப்பு என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது. நோவாவின் விசுவாசம் அவரது குடும்பத்தையும் காப்பாற்றியது. எபிரெ யர் 11ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தை வாசிக்கிறேன், கேளுங்கள்:

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்;”…………………

இது இன்றும் பொருந்தும்: ஒரு தனிப்பட்ட மனிதரின் விசுவாசம் அவர் முழு குடும்பத்திற்கே ஆசீர்வாதமாகலாம்

இந்தப் பகுதியிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடங்கள் அதிகம் இருக்கின்றன. தேவன் நீதிபரர். ஆனால் அவர் எப்போதும் தமது நியாயத்தீர்ப்புடன் கிருபையை இணைக்கிறார். இன்று இயேசு கிறிஸ்து மூலமான இரட்சிப்பே நமதுபேழை“. மேலும் ஒரு தனிப்பட்ட மனிதரின் விசுவாசம் அவரது மொத்தக் குடும்பத்தையே ஆசீர்வதிக்கும் என்ற சத்தியத்தையும் நாம் கற்றுக்கொண்டோம். அதுமட்டுமல்ல, தேவன் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர், உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர் என்பதையும் தெரிந்துகொண்டோம்.

இந்த வசனங்கள் தேவனுடைய நீதியும் கிருபையும் ஒருசேர இயங்குவதைக் காட்டுகின்றன. நாம் அவருடைய இரட்சிப்பை ஏற்று, கீழ்ப்படிய அழைக்கப்படுகிறோம்!

ஆதியாகமம் 6:20: “ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.”

………………..

அவைகள் உயிரோடு காக்கப்படுவதற்காக வகைக்கு ஒவ்வொன்றாக உன்னிடத்தில் வரக்கடவது என்று தேவன் கூறுகிறார். ஒரு காலத்தில் பிராங்க் பக் என்பவர் காட்டு மிருகங்களை உயிரோடு பிடித்து வருவதற்காக காட்டிற்கு செல்வார்.

 ஆனால் நோவா அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஒரு பெரிய வேட்டைக்காரன் அல்ல. அவர் இந்த விலங்குகளை தேடி அலை வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவைகளே அவரிடம் வந்தன

ஆபத்தில் இருக்கும் விலங்குகள் அவ்வாறு தான் செய்யும். யூட்யூபில் நீங்கள் பல சிறு சிறு வீடியோக்களை இது தொடர்பை பார்த்து இருப்பீர்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதல் முறையாக யோ சிமிட்டி என்ற பள்ளத்தாக்கிற்கு சென்றார்கள். அங்கே அது பனி பெய்யும் காலமாய் இருந்தது. அந்த குடும்பத்தில் இருந்த குழந்தை பணியை பார்த்ததே இல்லை. ஆனால் அவளை கீழே இறக்கி விட்ட உடன் அவள் அழ தொடங்கினாள். ஆனால் அங்கே வந்த ஒரு சிறிய மானை பார்த்ததும் அவள் அழுகையை நிறுத்தி விட்டாள். பெரியவர்கள் அந்த மானுக்கு அருகிலே சென்று அதை தடவி கொடுத்திருக்க முடியும் அவ்வளவு பக்கத்திலே அது வந்தது. ஒருவேளை  அந்தமானால் தங்களுக்கு எதுவும் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் பக்கத்திலே செல்லவில்லை. அதைப் பற்றி வன காவலர் இடத்திலே அவர்கள் சொன்ன பொழுது அவர் சிரித்துக் கொண்டே ஆமாம்உயரமான மலைப் பகுதிகளிலே அதிகமாக பனிப்பொழிகிறது அங்கே ஆபத்து ஏற்படும்போது இந்த மான்கள் கீழே வந்து விடுகின்றன. அப்பொழுது அது எந்த விலங்கையும் போல மிக சாதுவாக இருக்கும். ஆனால் வசந்த காலத்திலே பணி உருகிய அடுத்த நிமிடமே இவை இந்த இடத்தை விட்டு சென்று விடுகிறது. பிறகு அவற்றின் அருகே நீங்கள் செல்லவே முடியாது என்று கூறினார். ஏன் அப்படி அது வருகிறது ஏனென்றால் இயற்கையாகவே ஒரு விலங்கு ஆபத்தில் இருக்கும் பொழுது அது மனிதனை தேடி வருகிறது. பெரு வெள்ளத்தின் நேரத்திலும் நோவாவுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏனென்றால் விலங்குகள் அனைத்தும் அவரிடம் தாமே வந்தன.

அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்

ஆதியாகமம் 6:21-22 

[21] உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். [22] நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

…………………

நோவா இப்பொழுது நடைமுறையான ஒரு காரியத்தை செய்ய வேண்டியது இருந்தது. அந்த பேழையில் இருந்த விலங்குகளுக்கு தீவனம் அளிப்பதற்கு பெருமளவிலே வைக்கோல் தேவைப்பட்டது. சிலர் அந்த விலங்குகளில் சில இறைச்சி உண்ணும் விலங்குகள் ஆயிற்றே அவை ஒன்றே ஒன்று சாப்பிட்டு இருக்குமே என்று சொல்வார்கள். அப்படி சொல்ல முடியாது ஏனென்றால் பெருவெள்ளம் ஏற்படும் காலம் வரை மனிதர்களும் சரி விலங்குகளும் சரி மாமிசம் உண்பவர்களாக இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது அவை மாமிசத்தை உண்ணவில்லை.. ஊன் உண்ணும் விலங்குகள் அப்பொழுது இருந்திருக்கவில்லை. ஆயிரம் வருட அரசாட்சியின் பொழுதும் சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக படுத்திருக்கும் சிங்கம் எருதுகளைப் போல வைக்கோல் தின்னும் என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஏசாயா 11 6 7 வசனங்களை பாருங்கள்

ஏசாயா 11:6-7 

[6] அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். [7] பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

…………………..

இது நிச்சயமாகவே நிறைவேறக்கூடிய ஒரு காரியம்தான் ஏனென்றால் விலங்குகளின் ஆரம்ப கால நிலையை யோசித்து பாருங்கள் அதுவும் அநேகமாய் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்

தொடர்ந்து ஏழாம் அதிகாரத்திலும் சில வசனங்களை பார்ப்போம்

ஆதியாகமம் 7:1 

[1] கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

………………….

இங்கே நோவா நீதிமானாக இருந்தார் என்று வாசிக்கிறோம் ஏன் அவர் நீதிமானாக இருந்தார் அது விசுவாசத்தினால் உண்டானது. சற்று பின்னான காலங்களிலே ஆபிரகாமும் தனது விசுவாசத்தினாலே நீதிமானாக கருதப்பட்டதை நாம் வாசிக்கிறோம் பாருங்கள் 15 6. 

ஆதியாகமம் 15:6 

[6] அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

…………………..

இதுதான் தேவன் ஆபிரகாமை இரட்சித்ததற்கான காரணம். அந்த நியாய தீர்ப்பின் காலம் எல்லாம் தேவன் இந்த மனிதனிடத்தில் எவ்வளவு கிருபையாக இருந்தார் என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இங்கே முதலாவது வசனத்தில் நாம் பார்ப்பது என்ன.?? 

நீயும் உன்  வீட்டார் அனைவரும் பேழையினுள் செல்லுங்கள் என்று சொல்லுகிறார். இதே அழைப்பை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் மனுக்குலம் அனைத்திற்கும் கொடுக்கிறார்

மத்தேயு 11 28. 

மத்தேயு 11:28 

[28] வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

…………

மேலும் ஆதியாகமம் ஏழாம் அதிகாரம்7;16ல் கர்த்தர் அவனை உள்ளே விட்டு கதவை அடைத்தார் என்று வாசிக்கிறோம். இது மிகவும் அருமையான ஒன்று இல்லையா? மேலும் இறுதியாக எட்டாம் அதிகாரத்தில் தேவன் நோவாவை நினைத்தருளினார் என்றும் வாசிக்கிறோம். இதுவும் ஆச்சரியமான ஒன்று. தேவன் நோவாவை எளிதாக மறந்திருக்க முடியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அடடா கீழே இருந்த அந்த மனிதனைப் பற்றி நான் மறந்து விட்டேனே அவனே ஒரு பேனைக்குள் வைத்து அப்படியே அடைத்து விட்டு மறந்து விட்டேனே என்று சொல்லி இருக்கலாம். அது எத்தனை கஷ்டமாக இருந்திருக்கும் இல்லையா? ஆனால் தேவன் மறக்கவில்லை தேவன் நோவாவை நினைவு கூர்ந்தார். என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே தேவன் யாரையும் ஒருபோதும் மறப்பதில்லை. அவர் உங்களையும் என்னையும் நினைவில் வைத்திருக்கிறார் நம் ஒவ்வொருவரையும் தம் உள்ளங்கையிலே வரைந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் இரட்சிப்பிற்காக அவரிடம் வரும்பொழுது அவர் நினைக்காத ஒரே ஒரு விஷயம் உங்கள் பாவங்கள் மட்டுமே. உங்கள் பாவங்களை அவர்  ஒரு பொழுதும் நினைப்பதில்லை. இது எத்தனை ஆச்சரியமான அழகான ஒரு காரியம் இல்லையா?

இப்பொழுது நோவாவும் அவனுடைய குடும்பத்தினரும் பேழைக்குள் செல்கிறார்கள்.. படைப்பின் வரலாற்றைப் போலவே நோவாவை பற்றிய இந்த கதையும் பூமியின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா பாபிலோனிய சரித்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை காண வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிகழ்ச்சியோடு ஒத்துப் பார்க்க வேண்டும். மற்ற பதிப்புகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் கேள்விக்குரியவை, எனவே அவைகளை குறித்து நாம் யோசிக்க வேண்டாம்

அருமையானவர்களே பெரும்பாலான நாடுகளும் மக்களும் படைப்பு மற்றும் பெருவெள்ளம் ஆகிய இரண்டை பற்றியும் ஒரு பதிவு வைத்திருக்கிறார்கள் இந்த உண்மை உங்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும்.  அவற்றிற்கு ஒரு உண்மை அடிப்படை இருக்கிறது என்பதை இது உங்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த மக்கள் அனைவரும் வெறுமனே கதைகளை உருவாக்கிக் கொண்டிருந்தால் இப்படிப்பட்ட ஒரு பதிவை அவர்கள் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். இதில் எது துல்லியமானது என்பதை நீங்கள் அறிய விரும்பினால் அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் உதாரணமாக பாபிலோன் பதிப்புகளிலே சொல்லப்பட்டிருப்பது தெய்வங்களுக்கிடையே நடந்த ஒரு வித போரை பற்றி கூறுகிறது.  இது முற்றிலும் கேள்விக்குரிய ஒரு கதையாகும். அந்த தெய்வங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டதுதான் பெரு வெள்ளத்திற்கு காரணம் என்று அது கூறுகிறது. இதற்கு நேர் மாறாக பெருவெள்ளம் என்பது மனிதனின் பாவத்திற்காக அவன் மீது கடவுள் அனுப்பிய தீர்ப்பு என்று வேத புத்தகம் தெளிவாய் சொல்கிறது. சொல்லப்போனால் இதுதான் அர்த்தம் உள்ளதாய் இருக்கிறது

ஆதியாகமம் 7:2-3 

[2] பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், [3] ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.

………………..

ஹேரி ரிம்மர் என்பவர் 1890 முதல் 1952 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஒரு ஊழியக்காரர். இவர் சிருஷ்டிப்பின் வரலாற்றை குறித்து மிகச் சிறந்த முறையிலே மக்களுக்கு பதில் உரைத்தவர். வேத புத்தகத்தில் முரண்பாடுகள்இருப்பதை நிரூபிப்பவர்களுக்கு ஆயிரம் டாலர்கள் தருவதாக இவர் அறிவித்திருந்தார். இதை ஒட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கிற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது. வேத புத்தகத்தில் இது ஒரு முரண்பாடு என்று பல தாராளவாத இறையியலாளர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தார்கள். முதலில் ஒவ்வொரு வகையிலும் இரண்டு என்று சொல்லிவிட்டு, இப்பொழுது ஏன் ஒவ்வொரு வகையிலும் ஏழு என்று சொல்ல வேண்டும் என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது. நிச்சயமாக அந்த வழக்கில் டாக்டர் ட்ரிம்மர் வெற்றி பெற்றார். நோவா பேழையிலிருந்து வெளியே வந்ததும் அவர் சுத்தமான மிருகங்களை பலியாக செலுத்தினார் என்பதை தெரிந்து கொள்ள நாம் அடுத்த பக்கத்தை திருப்பிப் பார்த்தாலே போதும். அவர் இரண்டிற்கும் மேற்பட்ட சுத்தமான மிருகங்களைக் கொண்டு செல்லவில்லை என்றால் அவருக்கு இந்த சுத்தமான மிருகங்கள் எங்கே இருந்து கிடைத்திருக்கும் அவர் 7 மிருகங்களை எடுத்துச் சென்றது சுத்தமான மிருகங்களிலே மட்டும்தான். அதன் காரணம் இப்பொழுது நமக்கு தெரிகிறது. ஆனால்  தீட்டான/ சுத்தமில்லாத மிருகங்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே ஜோடி ஜோடியாய் சென்றன ஆகாயத்து பறவைகளிலும் ஆணும் பெண்ணும் ஏழு ஏழு ஜோடிகளாக கொண்டுவரப்பட்டது இதுவும் சுத்தமான பறவைகளைக் குறிக்கிறது.

ஆதியாகமம் 7:4 

[4] இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார்.

…………….

ஒருவேளை ஏழு நாட்களாக இந்த உலக மக்கள் பேழையின் கதவை தட்டி இருக்க முடியும். உண்மையைச் சொன்னால் அவர்கள் தாராளமாக உள்ளே வந்திருக்கலாம். தேவன் அவர்களை காப்பாற்றி இருப்பார். அதற்கு அவர்கள் செய்திருக்க வேண்டியது எல்லாம் தேவனை விசுவாசிப்பது மட்டும்தான்

ஆதியாகமம் 7:5-9 

[5] நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். [6] ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். [7] ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். [8] தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், [9] ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன்.

……………….

நோவா வெளியே சென்று விலங்குகளை துரத்தி உள்ளே கொண்டு வந்ததாக வேதத்தில் எங்குமே சொல்லப்படவில்லை ஏனென்றால் அதற்கு அவசியமே இல்லை அவை தானாகவே பேழையினுள் வந்தன.

நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த அருமையான சகோதரனே சகோதரியே,  சூழ்நிலைகள் எதுவும் சாதகமாக இல்லாத சூழ்நிலையிலும் நேரத்திலும் நோவா கர்த்தரை விசுவாசித்ததால் பூரணமாக கீழ்ப்படிந்தார்.  இன்று நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சூழ்நிலைகளை நாம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கர்த்தர் சொல்லும் காரியங்களுக்கு  கீழ்படிவோமா??

உலகத்தில் நாம் அனைவரும் பாவம் செய்திருக்கிறோம்,  சட்டப்படி நாம அனைவரும் நியாயம் தீர்க்கப்பட வேண்டும்.  ஆனால் இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுனாலே, அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் அவர் பாதுகாவலராய் இரட்சிப்பை கொடுக்கிறவராய் இருக்கிறார் . இன்று இந்த உலகத்தில் உங்கள் நம்பிக்கை எதன் மேல் இருக்கிறது?

தேவன் நோவாவை மறந்து போகவில்லை,  நம்மையும் அவர் ஒரு பொழுதும் மறந்து போக மாட்டார் . தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற ஒரே ஒரு காரியம் விசுவாசம். 

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்களும் உங்கள் வீட்டார் இரட்சிக்கப்படுவீர்கள். 

 

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top