ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 6: 4 - 13
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 6: 4 – 13
நிகழ்ச்சி எண்: 0023

வாசியுங்கள்

வேத்தைக் கற்றுக் கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்து கொள்ளும் உங்களுக்காக கர்த்தரை துதிக்கிறோம். 

கடந்த நிகழ்ச்சியிலே நாம் ஆதியாகமம் 6 ஆம் அதிகாரம்  மூன்றாம் வசனம் வரை  பார்த்தோம். 

 இன்று ஆதியாகமம் 6 அதிகாரம் 4 முதல் 13 ஆம் வசனம் வரை  பார்ப்போம்.

ஆதியாகமம் 6:4  பாருங்கள் 

[4] அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

…………….

இங்கே பூமியிலே ராட்சதர்கள் இருந்தார்கள் என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறத்கே ஒழியஅவர்கள் தேவகுமாரர்களுக்கும் மனுஷகுமாரத்திகளுக்கும் பிறந்தார்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்களுடைய சந்ததியை பற்றி இது கூறுகிறது.  இவர்களே பூர்வத்தில் பெயர் பெற்ற மனுஷராகிய பலவான்கள். இவர்கள் ராட்சதர்கள் அல்ல அவர்கள் மனிதர்கள்தான்/  ராட்சதர்கள் இது நடப்பதற்கு முன்பே பூமியில் இருந்தார்கள் என்பதை இங்கே உள்ள வசனம் மிகத் தெளிவாக காட்டுகிறது. மேலும் இந்த சந்ததியினர் தனித்துவமான சிறந்த நபர்களாக இருந்தார்கள் என்பதை இது எளிமையாக கூறுகிறது, அவ்வளவுதான். மனித குலத்திற்கு ஒரு மகத்துவமான ஆற்றல் இருக்கிறது. மனிதன்  அற்புதமாய், ஆச்சரியமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறான். இது உண்மையிலேயே நாம் கவனிக்க தவறிய ஒரு பெரிய உண்மை. மனிதன் ஏதோ ஒரு குப்பை கூடையில் இருந்தோ அல்லது கடற் பாசியில் இருந்தோ அல்லது  ஒரு புரோட்டாபிளாசத்தில் இருந்தோ உருவாகியுள்ளான் என்று சொல்லுகிற எண்ணம் மிகவும் அபத்தமானது. பரிணாமக் கொள்கை மறுக்கப்படும் என்றும் அப்பொழுது சிலர் கேலிக்குரியவர்களாக தோன்றுவார்கள் என்றும் சில விஞ்ஞானிகள் இன்றைக்கும் நம்புகிறார்கள்.

பரிணாமம் என்பது விஞ்ஞானத்தை பொருத்தவரை உலகத்திலே அது ஒரு கோட்பாடு மட்டும்தான். அதைப்பற்றி எதுவும் உறுதியாக இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. இது வேறு எந்த தத்துவத்தை போலும் ஒரு தத்துவம் தான். இதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். இது ஏற்றுக்கொள்ளப்படும்போது நிச்சயமாக உலகின் பிரச்சனைகளுக்கு மிகவும் பைத்தியக்காரத்தனமான சில தீர்வுகளுக்கு இது வழி நடத்தும்.  இன்று நம் கல்லூரிகள், நம் அரசாங்கம், நம் செய்தி ஊடகங்கள் மற்றும் பல முக்கியமான துறைகளில் உள்ள அறிவாளிகள் தாங்கள் மிகச் சிறந்தவர்கள் என்றும் ஏதோ ஒரு வகையிலே அவர்கள் உச்சிக்கு வந்து விட்டதாகவும் ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. மனிதர்கள் தாங்கள் உண்மையில் இருப்பதை வட பெரியவர்கள் என்று நினைப்பது இந்த காலத்தில் ஒரு மாயை என்று சொல்லலாம். மனிதன்  ஒரு பயங்கரமான வீழ்ச்சியால் துன்பப்படுகிறான். அவன் இன்று முற்றிலும் சீரழிந்து இருக்கிறான். இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாத வரை நாம் எல்லா வகைகளிலேயும் சிக்கலில் தான் இருக்கிறோம்.

சரி, இங்கு நாம் நான்காம் வசனத்தில் பார்ப்பது என்ன? நாம் ஏற்கனவே சிந்தித்தது போல ஆதியாகம் என்பது ஒரு  வம்ச வரலாறுகளை குறித்த புத்தகமாகும். இது குடும்பங்களின் புத்தகம். தேவகுமாரர் என்பது தேவபக்தியுள்ள சந்ததியில் வந்தவர்களை குறிக்கிறது. அதாவது ஆதாமின் வழியாக சேத்துவின் வம்சவழியில் வந்தவர்கள். மனுஷகுமாரத்திகள் என்பது காயின் வம்சத்தை குறிக்கிறது. இங்கே நாம் காண்பது என்னவென்றால் தேவபக்தியற்ற சந்ததி சேத்தின்  சந்ததியோடு கலந்து வருகிறது.

 இறுதியாக ஒரே ஒரு சந்ததியை தவிர மற்ற எல்லா சந்ததிகளும் மாசு பட்டு போய்விட்டது.  இந்த காட்சியைதான் இங்கே நாம் பார்க்கிறோம்.

தேவகுமாரர்கள் உண்மையில் தூதர்கள் என்ற தவறான கருத்திற்கு சிறந்த விளக்கம் அளிப்பவர்கள் சிலரும் அதை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். உங்களில் பெரும்பாலானோர் சரியாக இருக்க விரும்புகிறீர்கள் என்றும் என்னுடன் ஒத்துப்போக விரும்புவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். நீங்கள் எந்த கருத்தை எடுத்துக் கொண்டாலும் நாம் அனைவரும்  நண்பர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் இது வெறும் விளக்கத்தின் விஷயம் மட்டும் தான். இது நீங்கள் வேதத்தை நம்புகிறீர்களா இல்லையா? என்பதோடு சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல. மாறாக இது வேதத்தின் உண்மையின் விளக்கத்தைப் பற்றியது மட்டும் தான்.

பெருவெள்ளம் வருமுன் பூமி எப்படி இருந்தது? சரி தேவன் ஏன் பூமியின் மேலே வெள்ளமாகிய நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தார்

ஆதியாகமம் 6:5 

[5] மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

,…………….

இங்கே நாம் முக்கியத்துவப் படுத்த வேண்டிய நான்கு வார்த்தைகள் இருக்கின்றன. கவனியுங்கள் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது. 

அடுத்தது அவன் இருதயத்து நினைவுகளின்  தோற்றம் எல்லாம்

அடுத்ததாக நித்தமும் 

மேலும் அது பொல்லாதது என்று வாசிக்கிறோம்.

“மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது” – அக்கிரமம் என்றால் பாவம், தவறு, குற்றம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதிக்கு எதிரான செயல்கள். மனிதர்களின் பாவம் சிறிய அளவில் இல்லாமல், பூமி முழுவதும் பரவியது. இது வெளிப்புறமான செயல்களை மட்டுமல்ல, உள்ளார்ந்த தன்மையையும் குறிக்கிறது. ஆதாமின் பாவத்திற்குப் பின், மனிதகுலமே இயற்கையாகவே பாவத்திற்கு அடிமையானது.

 “அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே” –

இருதயம் வேதாகமத்தில் மனிதனின் உள்ளார்ந்த மையத்தைக் குறிக்கும். எண்ணங்கள், விருப்பங்கள், உணர்வுகள் எல்லாம் இருதயத்தோடு சம்பந்தப்பட்டவை. பாவம் வெளிப்புற செயல்களில் மட்டுமல்ல, உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியது. இதைத்தான் எரேமியா 17:9ல் வாசிக்கிறோம்:
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”
 

நினைவுகளின் தோற்றம் (imagination of the thoughts) என்றால் மனதில் உருவாகும் திட்டங்கள், கற்பனைகள். இவை நித்தமும் பொல்லாதவை. அதாவது எப்போதும், இடைவெளியின்றி தீமை நிறைந்தவை. ஒரு நல்ல எண்ணம்கூட இல்லை. இவ்வாறு கூறுவது மனிதனின் முழுமையான பாவ நிலைமையை விவரிக்கிறது.

“கர்த்தர் கண்டு” –  தேவன் சர்வவல்லமையுள்ளவர்; எதுவும் அவரிடமிருந்து மறைக்கப்பட முடியாது. எரேமியா 17:10ஐ வாசித்துப் பாருங்கள்:


கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.”……………


தேவன் பாவத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். இது தேவனுடைய நீதியை வெளிப்படுத்துகிறது.

இந்த வசனம் ஜலப்பிரளயத்துக்கான முக்கியக் காரணம். பூமி வன்முறையால் நிறைந்திருந்தது. ஆனால் நோவா நீதிமானாக இருந்ததால் கிருபை பெற்றான்.

இந்த வசனம் நம்மை சுயபரிசோதனைக்கு அழைக்கிறது. நமது எண்ணங்கள் தூய்மையானவையா? பாவம் உள்ளத்தில் தொடங்குகிறது. ஆனால் தேவன் கிருபையால் மீட்கிறார். நோவாவைப்போல நாமும் இரட்சிக்கப்படலாம். இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பு உண்டு.

இந்த வசனம் தேவனுடைய நீதி, அன்பு, மனிதனின் பலவீனத்தை ஒருசேர காட்டி, இரட்சிப்பின் தேவையை வலியுறுத்துகிறது.

 ஆதியாகமம் 6:6 

[6] தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

…………………

இங்கே கர்த்தர் மனஸ்தாப பட்டார் என்று வாசிக்கிறோம் எதற்காக மனஸ்தாபப்பட்டார்? மனிதனுடைய சீரழிவே கர்த்தரை மனஸ்தாபப்படுத்தியது. தேவன் தம்முடைய மனதை மாற்றிக்கொண்டு மனிதனை பூமியிலிருந்து அகற்ற தீர்மானித்தது போல தெரிகிறது. பூமியில் இருந்த ஒரு முந்தைய சிருஷ்டிப்பையும் அவர் அவ்வாறே அளித்திருக்கலாம். மனுஷனுடைய பாவத்தினிமித்தம் அது தேவனுக்கு வேதனை அளித்தாலும் தேவன் அவனை முற்றிலும் அழிக்கவில்லை என்பதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். 

 

“கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” – “மனஸ்தாபப்படுதல்” repent அல்லது regret என்ற சொல் இங்கு தேவனுக்கு பயன்படுத்தப்படுவது ஆச்சரியமாகத் தோன்றலாம். ஏனெனில், தேவன் மாறாதவர். “நான் கர்த்தர், நான் மாறாதவர் என்று மல்கியா 3:6லும், அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை…..என்று யாக்கோபு 1:17லும் வாசிக்கிறோம்.

இதை  anthropomorphism என்று சொல்வார்கள். இது மனித மொழியில் தேவனுடைய உணர்வை விவரிக்கும் ஒரு வழியாகும். மனிதர்கள் தேவனைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு உருவக மொழி இது. தேவன் தமது செயலின் விளைவால் “வருத்தப்படுவது” போல வெளிப்படுத்தப்படுகிறது. இது தேவனுடைய திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதை வலியுறுத்துகிறது; மாறாக, பாவத்தின் விளைவால் ஏற்படும் வேதனையை காட்டுகிறது.

“தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக” –  தேவன் மனிதனை தமது சாயலில் சிருஷ்டித்தார். அந்த சிருஷ்டி நல்லது என்று தேவன் கண்டார். ஆனால், மனிதன் பாவத்தில் விழுந்து, அவரது சாயலை மாசு படுத்தியதால் தேவன் வருத்தமடைகிறார். இது சிருஷ்டியே தவறு என்று அர்த்தமல்ல. மாறாக, மனிதனின் பாவத்தால் ஏற்பட்ட விளைவு.

“அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” – “இருதயம்” என்ற சொல் தேவனுக்கு பயன்படுத்தப்படுவது அவருடைய ஆழமான உணர்வை வெளிப்படுத்துகிறது. “விசனம்” (grief) என்றால் துக்கம், வேதனை. தேவன் உணர்ச்சியற்றவர் அல்ல; அவர் அன்புள்ள தகப்பன். தேவன் நம்மை நேசிப்பதால், நமது பாவம் அவருக்கு வேதனையை அளிக்கிறது.

இந்த வசனத்தில் தேவனுடைய அன்பும், நீதியும் வெளிப்படுகிறது. தேவன் பாவத்தை வெறுக்கிறார். ஆனால், பாவியை நேசிக்கிறார். ஓசியா 11ஆம் அதிகாரம் 8, 9ஆம் வசனங்களில் தேவன் இஸ்ரவேலை அழிக்க வருந்துகிறார். தேவனுடைய மனஸ்தாபம் அங்கே மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வசனங்களை வாசிக்கிறேன், கேளுங்கள்: ஓசியா 11:8,9:

“எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.”…………….

இங்கே ஆதியாகமத்தில், தேவனுடைய மனஸ்தாபம் அவருடைய நீதியான தீர்ப்புக்கு இட்டுச் செல்கிறது. ஜலப் பிரளயம் வருகிறது. ஆனால் கிருபைக்கும் வழி வகுக்கிறது. கிருபையால் நோவா காப்பாற்றப்பட்டான். 

இந்த வசனம் நமது பாவம் தேவனுக்கு எவ்வளவு வேதனையை உண்டாக்குகிறது என்பதை நினைவுபடுத்துகிறது. நாம் பாவம் செய்யும்போது, தேவனுடைய இருதயத்தை விசனப்படுத்துகிறோம். ஆனால், அவர் கிருபையால் மன்னித்து, மீட்கிறார். நோவாவைப்போல, கிறிஸ்துவில் கிருபை பெறுவோம். நமது வாழ்வு தேவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். அல்லது விசனத்தை உண்டாக்கலாம். எதை தெரிவு செய்வது என்பது நமது கையில்தான் இருக்கிறது.

ஆதியாகமம் 6:7-8 

[7] அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். [8] நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

………………..

“நிக்கிரகம்” என்பது ‘அழித்தல்’ அல்லது ‘துடைத்துப்போடுதல்’ என்று பொருள்படும். தேவனின் நியாயத் தீர்ப்பு மனிதர்களை மட்டுமல்ல, படைப்பின் பல பகுதிகளையும் பாதிக்கும்,

இந்த வசனம் கடவுளின் புனிதத்துவம், நீதி மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. பாவம் கடவுளின் படைப்புத் திட்டத்தை சீர்குலைக்கும்போது பரிசுத்தராகிய தேவனால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. அவர் தீர்ப்பு அளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.  ஆனால், தேவன் இங்கே, “எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது” என்று சொல்கிறார்.  “மனஸ்தாபம்” தேவனை கோபமுள்ளவராக அல்ல, துயரமடைந்தவராகக் காட்டுகிறது. ஒரு தந்தை தன் மகன் தவறு செய்தால், எப்படி வேதனைப்படுவாரோ அப்படி நம் ஆண்டவர் வேதனைப்படுகிறார்.  அன்பு நிறைந்த தேவன் மனிதன் மேல் இரக்கம் காட்டுகிறார். ஆனால் நீதிபரராகிய அவர் பாவத்துக்கு தண்டனை வழங்கவும் வேண்டும். அதனால் தேவன் மனஸ்தாபப்படுகிறார்.

 

இந்த வசனத்தை நன்றாக கவனித்தீர்களா?? இங்கே மீன்களை குறித்து ஏதும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவைகள் தண்ணீரில் தான் இருக்கின்றன. அவர் அதிகமான தண்ணீரை தான் அனுப்பப் போகிறார். 

எட்டாம் வசனத்தில் நாம் பார்ப்பது எனன??

 நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களிலே கிருபை கிடைத்தது. நோவா தேவனிடத்திலே கிருபை பெற காரணம் என்ன

அடுத்த வசனம் வாசிக்கிறேன். 

ஆதியாகமம் 6:9 

[9] நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

……………….

நோவாவை தேவன் ஏன் பாதுகாத்தார் நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். இது மட்டுமல்ல நோவாவை குறித்து சொல்லப்பட்டிருக்கிற முற்றுமொரு காரணத்தை எபிரெயர் நிருபத்திலும் வாசிக்கிறோம்.

எபிரெயர் 11:7 

[7] விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

………………….

அந்த காலம் வரைக்கும் மழை பெய்யவில்லை. மழை தூறல் கூட எப்படி  இருக்கும் என்பதை நோவா அறியாத காலத்திலே, வெட்டாந் தரையில் ஒரு  பெரிய படகை உருவாக்க அவன் கொண்ட விசுவாசம் பெரியது. எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில்தான் ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைக் குறித்தும் வசிக்கிறோம். தேவன் விசுவாசிகளை இந்த உலகத்தில் இருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது பலவீனமான பரிசுத்தவான்களையும் அவர் எடுத்துக் கொள்ளப் போகிறார். ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுதல் விசுவாசிகளுக்குரியது. தேவன் தம்முடைய கிருபையினாலே தன்னுடைய இரக்கத்தினால் அவ்வாறு செய்ய போகிறார். 

ஆதியாகமம் 6:10 

[10] நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

……..  . ……

ஆதியாகமம் 6:11-12 

[11] பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. [12] தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

…………………

அதாவது மனிதன் கடவுளின் வழியை  கெடுத்து தன் சொந்த வழியில் சென்று கொண்டிருந்தான். கடவுள் அவனை படைத்த நோக்கத்திலிருந்து அவன் விலகி சென்று கொண்டிருந்தான். 

“சீர்கெட்டது” (corrupt) என்ற வார்த்தை முற்றும் அழிந்தது, ஊழல் நிறைந்தது, கெட்டுப் போனது என்று பொருள்படும். இது ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தில் தேவன் நல்லது என்று கண்ட சிருஷ்டிப்பின் முழுமையான எதிர்மறை. ஆதியாகமம் 1:31ல் இவ்வாறு வாசிக்கிறோம்:

“அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;”………………

ஆனால் இப்பொழுது, “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது;”

“தேவனுக்கு முன்பாக” என்றால் தேவனுடைய பார்வையில், அதாவது அவருடைய நீதியான தராசில் பூமி கேடாயிருந்தது.

“கொடுமை” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “கொடுமை” என்றால், வன்முறை, அநீதி, அடக்குமுறை. இது உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல, சமூக அநீதி, பலவந்தம், கொள்ளை போன்றவற்றையும் உள்ளடக்கும். “தேவகுமாரர்” மற்றும் “மனுஷகுமாரத்திகள்” தொடர்பான பலவந்த திருமணங்கள், அடக்குமுறை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். 

பூமி முழுவதும் பாவம் பரவலாகவும், தீவிரமாகவும் பரந்து விரிந்து இருந்தது.

“இதோ” என்ற சொல் ஆச்சரியத்தையும், உறுதியையும் காட்டுகிறது.

மாம்சமான யாவரும், அதாவது எல்லா மனிதர்களும் தேவன் கொடுத்த நல்ல வழியை தாங்களாகவே கெடுத்துக்கொண்டிருந்தார்கள். இது மனிதனின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

தேவன் பாவத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார். இது அவருடைய நீதி மற்றும் பரிசுத்தத்தை வெளிப்படுத்துகிறது.

2 பேதுரு 2:5ல் நோவாவை நீதியின் பிரசங்கி என்று கூறி அந்நாட்களில் நடந்த அவலங்களை பேதுரு எடுத்துக் கூறுகிறார். வசனத்தை வாசிக்கிறேன், 2 பேதுரு 2:5:
பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி;”……………

ஆனால் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டி உண்டு. 2 கொரிந்தியர் 5ஆம் அதிகாரம் 17ஆம் வசனத்தில் பவுல் இதை உறுதிப்படுத்துகிறார்:
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”…………

ஆம், எனக்கு அருமையான சகோதர, சகோதரிகளே, நாம் வாழும் இந்த சமூகத்தில், இன்றும் அநீதி, வன்முறை நிறைந்திருக்கிறது. ஆனால், நோவாவைப் போல நாமும் நீதியாக நடந்து, தேவனுடைய கிருபையைப் பெறலாம். பாவம் தேவனுடைய சிருஷ்டியைக் கெடுக்கிறது. நாம் மனந்திருந்தி, கிறிஸ்துவில் புதிதாக்கப்பட வேண்டும். 

ஆதியாகமம் 6:13 

[13] அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.

……………….

இந்த வசனம் தேவன் நோவாவிடம் நேரடியாகப் பேசி, ஜலப்பிரளயத்தின் தீர்ப்பை அறிவிக்கும் முதல் வசனம்.

தேவனின் தீர்ப்பாகிய ஜலப்பிரளயம், மனிதர்களை மட்டுமல்ல, பூமி முழுவதையும் பாதிக்கும். கவனித்தீர்களா, மனிதனின் பாவத்தின் விளைவினால் சுற்றுச்சூழலும் அழிக்கப்படப் போகிறது. 

தேவன் ஜனப்பிரளயத்தை பூமியின் மேலே அனுப்பப் போகிறார் அதற்கான பல காரணங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மீட்பர் ஒருவர் வருவார் என்ற வாக்குறுதியை ஏற்கனவே ஏதேன் தோட்டத்திலே மனிதன் பெற்றிருந்தான். மேலும் பூமியில் இரட்சிகர் ஒருவர் வரப்போகிறார் என்று அவனுக்கு சொல்லப்பட்டதை மனிதன் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் பரிதாபம் என்னவென்றால் தேவன் மேலே விசுவாசத்தோடு நம்பிக்கையோடு வாழ்வதற்கு  பதிலாக அவன் தேவனை விட்டு விலகினான். 

ஞாபகம் இருக்கிறதா? ஆதாம் ஏவாளுக்காக தேவன் ஒரு வழியை அளித்திருந்தார். மேலும் காயீன் ஆபேல் காரியத்திலே ஒரு மகத்தான நித்திய கொள்கை நிலைநாட்டப்பட்டதை நாம் பார்க்கிறோம். இந்த காயின் ஆபேல் ஆகிய இருவரும், பெரிய அமைப்புகளின் அதாவது இரண்டு வகையான மக்களின் பிரதிநிதிகளாக நிற்கிறார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் இரட்சிக்கப்படாதவர்கள். சுயநீதி உள்ளவர்கள் மற்றும் நொறுங்குண்ட ஆவி உள்ளவர்கள். சம்பிரதாய பேராசிரியர் மற்றும் உண்மையான விசுவாசி . இந்த காலத்தில் மனித   சமுதாயம்   இப்படித்தான் இருக்கிறது. 

மேலும் முற்பிதாக்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததால் ஆதாம் மற்றும் மெத்துசலாவின் ஆயுட்காலம் சிருஷ்டிப்பு முதல் ஜல பிரளயம் வரையிலான முழு இடைவெளியையும் இணைத்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் நிச்சயமாக எல்லா மனித குலத்திற்கும் ஒரு வெளிப்பாட்டை கொடுத்திருக்க முடியும். அதை அவர்கள் செய்தார்கள். யூதா எழுதின பொதுவான நிருபம் 14 15ஆம் வசனங்களை பாருங்கள். 

யூதா 1:14-15 

[14] ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், [15] தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

…………………….

கவனித்தீர்களா?/ ஏனோக்கு அந்த காலகட்டத்திலேயே பிரசங்கித்தார், தீர்க்கதரிசனம் கூறினார் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பேழையை கட்டும் பொழுது நோவாவும் அந்த காலகட்டத்திலே பிரசங்கித்தார் என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஏனோக்கு மறைந்த பொழுது அது மனித விவகாரங்களிலே தேவனுடைய தலையீட்டைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த மெத்துசலா பற்றியும் அவருடைய பெயரின் அர்த்தம் பற்றியும் அறிந்திருந்தார்கள். மேலும் அவர் மரித்த பொழுது ஜன பிரளயம் வரப்போகிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இறுதியாக பரிசுத்த ஆவியானவரின் ஊழியமும் இருந்தது. தமது ஆவியானவர் எப்பொழுதும் மனிதனோடே போராடுவதில்லை என்று தேவன் சொல்லியிருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மனிதனுடன் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் மனிதன்தான் தேவனை முற்றிலும் நிராகரித்தவனாய் வாழ்ந்து வந்தான். எனவே அதற்கு நியாயத் தீர்ப்பாக ஜலப் பிரளயம் பூமியின் மேல் வந்தது. முழு மனித குடும்பமும் தேவனை விட்டு அன்று விலகி வாழ்ந்தது இன்றைக்கும் இதுபோலத்தான் இருக்கிறது. நீதிமான் ஒருவனும் இல்லை என்றுதான் ரோமர் 3:10ல் வாசிக்கிறோம் ஆனாலும் ஒரு சிலரே அவரை நம்பினார்கள். அதாவது நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் தேவனை நம்பினார்கள். இங்கே தேவனுடன் நடந்த ஒரு மனிதன் இருக்கிறான். அவன் தேவனை விசுவாசித்தான். இங்கே இன்னும் தேவனை நம்பி ஒரு மனிதன் இருக்கிறான். எனவே தான் விசுவாசத்தால் அந்த காய்ந்து போய் இருந்த நிலத்திலே ஒரு பெரிய படகை கட்ட துணிந்த ஒரு மனிதனாய் இருந்தான். மழை வராவிட்டால் அவன் நிச்சயமாக அந்த சமுதாயத்திலே கேள்விக்குறியாக மாறி இருப்பான். 120 ஆண்டுகளுக்கு அவன் அவ்வாறு இருந்தான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நோவா தேவனை விசுவாசித்தான். 

கர்த்தர் மறுபடியும் பூமியில் வரும் முன் அதாவது ரகசிய வருகைக்காக அவர் வரும்பொழுது அல்ல, ஆனால் தமது ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க வருமுன் நோவாவின் காலத்தில் நடந்தது போல மீண்டும் நடக்கும் என்று ஒரு ஒற்றுமை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட தக்க காரியங்கள் ஏற்கனவே நடந்துவிட்டன. உதாரணமாக இந்த அத்தியாயம் இவ்வாறு தொடங்கியது பூமியில் மனுஷன் பெருக துவங்கி அவர்கள் குமாரத்திகள் பிறந்த போது என்று வாசித்தோம். அங்கே மகத்தான மக்கள் தொகை அதிகரிப்பு இருந்தது அந்த நேரத்தில் மனிதன் பூமியிலே பரவி விட்டான் அவன் வட அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்திருப்பான். அவன் எல்லா திசைகளிலும் பரவி இருந்தான். இன்றும் நமக்கு ஒரு மகத்தான மக்கள் தொகை பெருக்கம் இருக்கிறது. மனிதர்கள் மறுபடியும் பூமியிலே பெருகி இருக்கிறார்கள். 

மேலும் மகா உத்தரவு காலத்தில் பரிசுத்த ஆவியானவர் தீமையை தடுத்து நிறுத்த மாட்டார் என்ற உண்மையும் இருக்கிறது. அவர் மனிதர்களை மனமாற்றம் செய்ய அங்கே இருப்பார். ஆனால் பூமியில் அவர் தீமையை தடுக்க மாட்டார் என்று மிகத் தெளிவாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

 மனிதர்களுக்கு தேவன் கொடுத்த அழைப்புகள் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் போயின.  இன்றும் நிச்சயமாக அவ்வாறு இருக்கிறது என்று உலகத்திலே தாராள வாத பிராட்டஸ்டண்ட் மற்றும் ரோம கத்தோலிக்க ஊழியர்களால் மட்டுமே செவி சாய்க்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?? பழமை வாத ஆண்களிடம் இருந்து நீங்கள் எதையும் கேட்பதில்லை. அவர்கள் சில வகையான ஊடுருவல்களை செய்ய முயற்சிக்கிறார்கள். மேலும் அவர்கள் மீண்டும் முக்கிய வட்டத்திலே வர தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால் நீங்கள் தேவனுக்காக நிற்க போகிறீர்கள் என்றால் உங்களால் அடிக்கடி ஒரு தொலைக்காட்சி கேமரா முன் பேச முடியாது என்பதை கண்டறியும் நாளுக்கு நாம் வந்து விட்டோம். இன்றைக்கும் உண்மையான விசுவாசிகள் கர்த்தருடைய வார்த்தைக்கு பயப்படுகிறவர்கள் திருச்சபைகளிலேயும் புறக்கணிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். 

இறுதியாக அந்த நாட்களிலே உலகத்தில் இருந்து விசுவாசிகள் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது பூமியில் அதிகமான மக்கள் விட்டுச் செல்லப்பட போகிறார்கள்.  நோவாவின் நாட்களிலே நியாயத்தீர்ப்புகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் அதையெல்லாம் கவனிக்கவில்லை. 

நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனை சகோதரியே ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது மக்கள் எச்சரிப்படைந்திருக்க வேண்டும். நோவா பேழையை கட்டிய பொழுது மக்கள் எச்சரிப்படைந்திருக்க வேண்டும். அவர்கள் எச்சரிப்படையாததால், மனம் திரும்பாததால், அழிக்கப்பட்டார்கள். இன்று தேவன் நம்முடைய வாழ்க்கையிலே நமக்கு காட்டும் எச்சரிப்பின் அடையாளங்களை நாம் கவனமாய் பார்த்து பூரணமாய் கர்த்தரிடத்திலே மனம் திரும்புவோமா?.  என்னால் பாவத்தை விட முடியாது என்று நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். பாவத்தின் மேல் உள்ள ஆசையை ஆண்டவர் பாதத்திலே வைத்து விடுங்கள். கர்த்தர் உங்களுக்கு பூரண விடுதலை தருவார் என்று விசுவாசித்து அடிக்கடி அதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் அதிசயங்களை காண்பீர்கள்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top