ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 5:21 – 6:3
நிகழ்ச்சி எண்: 0022
வாசியுங்கள்
பிரியமானவர்களே, கடந்த நிகழ்ச்சியில் நாம் ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரம் 20 ஆம் வசனம் வரைக்கும் கற்றுக் கொண்டோம். இறுதியாக யாரேத் மரித்துப் போனான் என்று சிந்தித்தோம். ஆனால் ஆதியாகமம் 5: 19 ஆம் வசனத்தில் நாம் பார்ப்பது போல ஏனோக்கு என்று ஒரு மகனை பெற்றெடுத்தான். அந்த ஏனோக்கு 65 வயதானபோது என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 5:21
[21] ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
,……………..
தொடர்ந்து ஒவ்வொருவருடைய மரணத்தை குறித்தும் நாம் சிந்தித்து வருகிறோம். சரி ஏனோக்கு எந்த வயதில் மரித்தான்? அவன் மரிக்கவில்லை. இந்த அதிகாரம் பலருடைய மரணத்தைக் குறித்து கூறும் ஒன்றாய் இருந்தாலும் இங்கே பிரகாசமான ஒரு காரியம் ஏனோக்கு மரணம் அடையவில்லை. அப்படி என்றால்?? ஏனோக்கின் வாழ்க்கையில என்ன நடந்தது? கவனியுங்கள்.
ஆதியாகமம் 5:22-24
[22] ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்ற பின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். [23] ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். [24] ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
………………..
இது குறிப்பிடத்தக்க ஒரு காரியம். . ஏனோக்கைக் குறித்து சொல்லப்பட்டிருப்பது என்ன?? ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
மற்றும் ஒரு வகையிலும் இது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இரண்டு நபர்களை குறித்து மட்டுமே அவர்கள் தேவனோடு நடந்தார்கள் என்று வாசிக்கிறோம். பெருவெள்ளத்திற்கு முன்பு தேவனோடு நடந்தவர்களிலே ஒருவர் ஏனோக்கு. அடுத்த அதிகாரத்தில் நோவா தேவனோடு நடந்ததை குறித்து நாம் வாசிக்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் நாம் வாசிப்பது போல உண்மையில் இருவர் மட்டுமே மரணத்தை சந்திக்கவில்லை. அவர்களில் ஒருவர் ஏனோக்கு மற்றவர் நிச்சயமாக எலியா தீர்க்கதரிசி. ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்த சிலரில் ஏனோக்கும் ஒருவர். அவரைப் பற்றிய வேறு எந்த காரியமும் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் மரிக்கவில்லை தேவன் அவரை எடுத்துக் கொண்டார் என்பது மட்டும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் குறித்து ஒருவர் சொல்லும் பொழுது, ஏனோக்கு மொழிபெயர்க்கப்பட்டார் என்று கூறுகிறார். மொழிபெயர்ப்பு என்றால் என்ன? மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்து அதன் அர்த்தத்தை மாற்றாமல் மற்றும் ஒரு மொழியில்
வைப்பதாகும். ஏனோக்கு இந்த பூமியிலிருந்து அகற்றப்பட்டார் அவர் மொழிபெயர்க்கப்பட்டார். அவர் வைத்திருந்த பழைய உடலை அவர் அகற்ற வேண்டியது இருந்தது. அவர் ஒரு வித்தியாசமான நபராக இருக்க வேண்டியதிருந்தது, ஆனால் மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதிருப்பது போல அவர் அதே நபராக இருக்க வேண்டியிருந்தது. எனவே ஏனோக்கு தேவனால் அப்படியே எடுத்துச் செல்லப்பட்டு விட்டார்.
ஏனோக்கு 65 ஆண்டுகள் வாழ்ந்து மெத்துசலாவை பெற்றெடுத்தார். அதன் பிறகும் அவர் தேவனோடு நடந்தார் என்று வாசிக்கிறோம். அவரது வாழ்க்கையின் முதல் 65 ஆண்டுகள் எப்படி அவர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை. அவர் மற்ற கூட்டத்தினரை போல இருந்தார் என்று கூட நாம் யோசிக்கலாம். மனிதர்கள் எல்லாருமே பொறுப்பற்று வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது.. கிட்டத்தட்ட அது நோவாவின் காலத்திற்கு மிக அருகாமையிலான ஒரு காலம். ஆனால் மெத்துசலா என்ற குழந்தை பிறந்த பொழுது, ஏனோக்கின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்தக் குழந்தை அவரை தேவனுக்கு நேராய் திருப்பியது என்று கூறலாம். அருமையான சகோதரனே சகோதரியே சில நேரங்களில் தேவன் இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையை வைக்கிறார். அந்த குழந்தை உங்களை கடவுளிடம் கொண்டு வரவில்லை என்றால் வேறு எதுவும் அப்படி செய்ய முடியாது.. மெத்துசலா பிறந்த பின் 300 ஆண்டுகள் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தார். மேலும் அவர் மற்ற மகன்கள் மற்றும் மகள்களை பெற்றெடுத்தார். ஏனோக்கின் மொத்த காலங்கள் 365 ஆண்டுகள் தான், ஆம் அவ்வளவு காலம் அவர் இந்த பூமியிலே வாழ்ந்தார். அதன்பின் அவர் இறந்தார் என்று வேதம் சொல்லவில்லை. ஏனோக்கு கடவுளோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமல் போனான், தேவன் அவனை எடுத்துக் கொண்டார் என்று வாசிக்கிறோம்.
இதை விவரிக்க வேண்டும் என்றால் ஒரே வழி ஞாயிறு பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஒரு சிறுமி தன் தாயினிடத்திலே அன்றைக்கு ஓய்வு நாள் பள்ளியில் நடந்ததை விவரித்துச் சொன்னபடி சொல்கிறேன் கவனிங்கள்.
அந்த சிறுமி அம்மாவை பார்த்து அம்மா இன்றைக்கு எங்கள் சன்டே ஸ்கூல் அக்கா ஏனோக்கைப் பற்றியும் அவர் தேவனோடு நடந்ததை பற்றியும் சொன்னார்கள் என்று கூறினாள். அதற்கு அம்மா, சரி ஏனோக்கைப் பற்றி என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுமி ஏறக்குறைய இப்படித்தான் சொன்னார்கள் – தினமும் கடவுள் வந்து ஏனோக்கிடம் ஏனோக்கு நீ என்னோடு நடக்க விரும்புகிறாயா? என்று கேட்பாராம். ஏனோக்கும் தன் வீட்டில் இருந்து வாசலுக்கு வந்து கடவுளோடு நடந்து செல்வார். அவர் அதை மிகவும்
ரசிக்கத் தொடங்கினார். தினமும் தன் வீட்டின் வாசலில் காத்திருப்பாராம். கடவுள் வந்து ஏனோக்கு வா ஒரு நடை போகலாம் என்று சொல்வாராம்./ / பின் ஒரு நாள் கடவுள் வந்து – ஏனோக்கு இன்றைக்கு நாம் ஒரு நீண்ட நடை போகலாம், நான் உனக்கு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்னாராம். அதனால் அவர்கள் நடந்தார்கள் நடந்தார்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஏனோக்கு ஐய்யோ பிற்பகல் ஆகிவிட்டதே நான் வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டுமே என்று சொன்னாராம். அதற்கு கடவுள் அவரிடத்தில் – ஏனோக்கு நீ உன் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பதைவிட என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கிறாய், எனவே நீ என்னுடன் என் வீட்டிற்கு வா என்று சொன்னாராம். எனவே ஏனோக்கு கடவுளோடு கடவுளுடைய வீட்டிற்கு சென்று விட்டாராம்.
இந்த வசனங்களில் காணப்படும் சத்தியத்தை இதைவிட சிறப்பாக எப்படி சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
மேலும் 5ஆம் அதிகாரத்தில் ‘மரித்தான்’ என்ற வார்த்தை திரும்ப திரும்ப வருகின்றது. மரணத்தின் ஆதிக்கத்திற்கு ஏனோக்கு ஒரு விதிவிலக்கு. விசுவாசத்தினால் ஏனோக்கு மரணத்தை மேற்கொண்டான் என்று சொல்லலாம். அவன் கடவுளுக்குப் பிரியமானவன். அதனால் இது சாத்தியமானது. விசுவாசம் இல்லாமல் கடவுளுக்குப் பிரியமாக நடக்க முடியாது என்பது அடிப்படைக் கோட்பாடு.
ஏனோக்கின் வாழ்வு மரணத்தை மேற்கொள்ளுதலின் முன்னறிவிப்பு (foreshadowing) ஆகும். இது இயேசு கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேறுகிறது. இயேசு மரணத்தை மேற்கொண்டார். அவரை விசுவாசிப்பவர்களும் மரணத்தை மேற்கொள்வார்கள் என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோவான் சுவிசேஷத்தில் இயேசு சொல்வதைக் கேளுங்கள். யோவான் 11:25,26:
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;”
இதே சத்தியத்தைத்தான் பவுலும் 1 தெசலோனிக்கேயர் 4ஆம் அதிகாரம் 16,17 வசனங்களில் சொல்கிறார்:
“ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”
………..
கிறிஸ்துவின் வருகையில் உயிரோடிருப்பவர்கள் ஏனோக்கைப் போல மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப் படுவார்கள். ஏனோக்கு மரணமில்லாமல் எடுத்துக்கொள்ளப் பட்டது போல, கிறிஸ்துவில் விசுவாசமாய் இருப்பவர்கள் மரணத்தின் கூரை உடைத்து, உயிர்த்தெழுத்த உடலோடு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவார்கள்.
பாவத்தின் விளைவாக மரணம் இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் விசுவாச வாழ்க்கையில் கர்த்தரோடு நடக்கிறவர்கள் மரண பயத்திலிருந்து விடுதலை அடைகிறார்கள். ஏனோக்கு நமக்கு ஒரு நல்ல உதாரணம். மக்களுடைய பாவத்தினால் ஜலப்பிரளயம் வரப் போகும் கொடிய காலத்தில் அவன் வாழ்ந்தாலும், கர்த்தருக்குப் பிரியமாக நடந்தான். அதேப் போல் பாவம் நிறைந்த இந்த உலகில் நாம் வாழ்ந்தாலும், கர்த்தருக்குப் பிரியமாக வாழ முடியும். விசுவாசத்தினால் மரணத்தை மேற்கொள்ள முடியும் என்ற சத்தியம் நம்பிக்கையின் ஒளியைத் தருகிறது.
ஆதியாகமத்தில் உள்ள அனைத்து பெரிய உண்மைகளும் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பொருத்தமானவை என்று கூறலாம். நாம் விசுவாசிப்பது போல எதிர்காலத்தில் என்ன வரப்போகிறது என்பதற்கான ஒரு படம். இப்படித்தான் சபையின் எடுத்துக் கொள்ளுதலும் நடக்கப்போகிறது. பெரு வெள்ளத்தின் நியாயத்தீர்ப்பிற்கு முன் கடவுள் ஏனோக்கை எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து ஏனோக்கு முதல் நோவா வரை உள்ள வம்ச வரலாறு சொல்லப்பட்டு இருக்கிறது.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 5:27
[27] மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
……………
மெத்துசலா ஆதாமை விட நீண்ட காலம் வாழ்ந்து இருக்கிறார். ஆதாம் மற்றும் மெத்துசலா இந்த இந்த இரண்டு மனிதர்களும் படைப்பிற்கும் பெருவெள்ளத்திற்கும் இடையிலான இடைவெளியை மிகச் சிறப்பாக இணைத்து இருக்கிறார்கள். மெத்துசலா உலக படைப்பில் இருந்து எல்லாவற்றையும் நோவாவினிடத்திலே சொல்லி இருக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வம்ச வரலாற்றில் நமக்கு ஒரு இடைவெளி இருப்பதையும் நாம் கவனிக்கலாம். புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு அனேக காரியங்களை இடையில் விட்டு இருக்கிறது. இது நமக்கு தெரியும். மேலும் வேண்டுமென்றே அதை மூன்று சம பிரிவுகளாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறது, எனவே சில காரியங்கள் விட்டு விடப்பட்டுள்ளது. ஆனால் அது துல்லியமாக பின் தொடர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். இந்த வம்ச வரலாறு துல்லியமானது என்று நாம் திட்டமாய் நம்பலாம். ஆனால் முக்கியமான காரியம் என்னவென்றால் மனிதன் இந்த பூமியிலே நாம் நினைப்பதை விட நீண்ட காலம் இருந்திருக்கிறான் என்பதற்கு காரணமான ஒரு இடைவெளி இங்கே இருக்கலாம். இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பொருள் என்பதால் இதைப் பற்றி நாம் அதிகம் இங்கே விவாதிக்க வேண்டாம். வேதம் இங்கே தெளிவாக இல்லை அப்படி இல்லை என்றால் கடவுள் அதை வலியுறுத்த ஆர்வம் கொண்டவராக இல்லை. அவர் நமக்கு உணர்த்த முயற்சிப்பது எல்லாம் இந்த பூமியிலே மனுக்குலத்தின் மீட்பு வரலாற்றை தான். எனவே தெளிவற்ற காரியங்களை குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. சரி தொடர்ந்து மெத்துசலா குறித்த சில குறிப்புகளை பார்ப்போம்
மெத்துசலா 969 ஆண்டுகள் வாழ்ந்தார். அவருடைய எபிரேய பெயருக்கு அவருடைய மரணம் கொண்டுவரும் அல்லது அவர் மரித்த போது அது அனுப்பப்படும் என்று அர்த்தமாகும். அதாவது அவர் இறந்த அதே ஆண்டில் வந்த பெருவெள்ளத்தை அவருடைய பெயர் தீர்க்கதரிசனமாக கூறுகிறது. மெத்துசலா உயிருடன் இருந்தவரை ஜலப்பிரளயம் வர முடியவில்லை. இங்கே மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கோத்திர தலைவர்களின் வம்ச வரலாற்றின் கால வரிசைப்படி இந்த அதிகாரத்தின் முடிவில் இது கூறப்பட்டிருக்கிறது. அதாவது மெத்துசலா மரித்த ஆண்டில் தான் ஜலப்பிரளயம் வந்தது.
மெத்துசலா ஏன் மற்ற எல்லாரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தார்? தேவன் பொறுமை உள்ளவர் மற்றும் கிருபை உள்ளவர் என்பதை மனித குலத்திற்கு தெரியப்படுத்தவே தேவன் மெத்துசலாவை உலகில் நீண்ட காலம் வாழ வைத்தார். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனே சகோதரியே தேவன் உங்களுக்காகவும் உங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பார். தேவனின் நீடிய பொறுமையை பற்றி பேதுரு பேசுகிறார் கவனியுங்கள் வாசிக்கிறேன்.
1 பேதுரு 3:20
[20] அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
………………..
இந்த அதிகாரத்தின் மீதி பகுதியை நாம் பார்க்கும் பொழுது ஒவ்வொரு மனிதனும் குறிப்பிடப்பட்டு பின் அவர்களுடைய மரணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் 5ஆம் அதிகாரம் ஆதாமின் வம்சாவளியை முறையான பட்டியலாக விவரிக்கிறது. இந்த அதிகாரத்தில் பெரும்பாலான வசனங்கள் எண்கள் மற்றும் “மரித்தான்” என்ற முடிவோடு இருக்கும். ஆனால் ஆதியாகமம் 5:29ஆம் வசனம் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு. இங்கு மட்டும் ஒரு தந்தையாகிய லாமேக்கு தன் மகனுக்கு பெயர் வைத்ததற்கான காரணத்தை விளக்குகிறான். இது இனி வரும் ஜலப் பிரளயத்துக்கு மிக முக்கியமான அடித்தளமாக உள்ளது. எபிரெய மொழியில் நோவா என்ற பெயருக்கு ‘ஓய்வு’ அல்லது ‘ஆறுதல்’ என்று பொருள். லாமேக்கு தன் மகனுக்கு பெயர் வைக்கும்போதே ஒரு தீர்க்கதரிசனமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறான்.
ஆதாம் ஏவாள் பாவத்தால் ஏற்பட்ட நிலத்தின் சாபம் இன்னும் தொடர்கிறது. விவசாயம், உழைப்பு எல்லாம் கடினமாக, வேதனையோடு இருந்தது. லாமேக்கு இந்த சாபத்தின் பாரத்தை உணர்ந்து, அதிலிருந்து விடுதலையை எதிர்பார்க்கிறான்.
இந்த வசனத்தில் – “இவன் நம்மைத் தேற்றுவான்” -என்று வாசிக்கிறோம். இது ஒரு நம்பிக்கை நிறைந்த தீர்க்கதரிசனம். ஜலப்பிரளயத்துக்குப் பின் நோவா விவசாயத்தைத் தொடங்குகிறான். திராட்சைத் தோட்டம் நடுகிறான். இது பூமியின் உழைப்பில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. சாபத்தின் முழு விளைவுகள் இன்னும் நீக்கப்படவில்லை. ஆனால் இது ஒரு ஆறுதலான தொடக்கம்.
நோவா மூலமாக மனிதகுலம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது. வெள்ளம் பாவ உலகை அழித்து, புதிய தொடக்கத்தைத் தருகிறது. இது இறுதியில் இயேசு கிறிஸ்துவில் முழுமையாக நிறைவேறுகிறது. யோவான் 1:29ல் கான்கிறபடி, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவரே நமக்கு உண்மையான ஓய்வைத் தருகிறார்.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்கிறார். இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?
ஆதியாகமம் 5:31-32
[31] லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான். [32] நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
……………..
மனித சுபாவம் இயல்பாகவே உள்ளார்ந்த நிலையில் நல்லதாகவும் அதை மேம்படுத்த முடியும் என்று உலக அளவில் பிரபலமான ஒரு கோட்பாடு இருக்கிறது. இதை மனிதர்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது அனைத்து தத்துவங்களின் முடிவாகவும் இருக்கிறது என்று நாம் எடுத்துகொள்ளலாம். இன்று பரவலாக உள்ள எண்ணம் என்றால், நாம் மனிதனின் சூழலையையும் அவனது பரம்பரையையும் மேம்படுத்த முயன்றால் அவன் உண்மையில் மேம்படுத்தப்பட முடியும் என்பதாகும். கம்யூனிசமும், சோசியலிசம் மனிதனை மேம்படுத்தவே முயற்சி எடுத்தன. ஆர்மீனியனிசம் என்றால் ஒருவன் தனது இரட்சிற்கு தானே உதவ முடியும் என்று அர்த்தம். மேலும் மனிதன் தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ள முடியும் என்ற கோட்பாடும் நலவி வருகிறது.
வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் இரட்சிப்பு என்பது தேவன் நமக்கு கொடுக்கும் ஒரு வித – நீயே செய்து கொள் போன்றது என்று சிலர் நினைக்கிறார்கள். சில மதப் பிரிவுகள் மனித சுபாவம் முற்றிலும் நல்லது என்றும் பாவம் என்று எதுவும் இல்லை என்றும் சொல்கின்றன. ஆனால் மனிதனைப் பற்றி தேவன் என்று சொல்லுகிறார் தெரியுமா? மனிதன் முற்றிலும் பொல்லாதவன். முற்றிலும் கெட்டவன் என்று தேவன் சொல்லுகிறார். இதுவே நம் அனைவரின் நிலையாகும் ரோமர் 3:10 என்று சொல்கிறது?
[10] அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
இதுவே தேவனுடைய வார்த்தையின் மதிப்பீடு. நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டால் மற்றவர்கள் நமக்கு அளிக்கும் கருத்துக்களை விட இன்றைய வாழ்க்கை பற்றிய உண்மையான புரிந்து கொள்ளுதலை வேத புத்தகம் நமக்கு கொடுக்க முடியும்.
மேலும், நாம் இப்பொழுது தேவ பக்தியுள்ள பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம். இது எங்கே கொண்டு செல்ல போகிறது? இது இந்த பூமியிலே ஒரு ஆயிரம் ஆண்டு அரசாட்சிக்கு வழி வகுக்கமா?
இல்லை. அவர்கள் ஒரு பேரின்ப பூமியை அடைத்து ஒரு உன்னத சமூகத்தை சாதிக்க முடியுமா? முடியாது. அடுத்த அத்தியாயமே இதை நமக்கு சொல்கிறது ஒரு பிரளயம் அதாவது தேவனின் நியாய தீர்ப்பு பூமியின் மேல் வந்தது.
தொடர்ந்து ஆறாம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை பார்ப்போம். இந்த அதிகாரத்தில் பெரு வெள்ளத்திற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது பெருவெள்ளத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து தேவன் கொடுக்கும் விடுதலையையும் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 6:1-2
[1] மனுஷர் பூமியின்மேல் பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: [2] தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்
……………..
இங்கே நாம் வாசிக்கிற தேவகுமாரர் மற்றும் மனுஷ குமாரத்திகள் குறித்த காரியம் முடிவில்லாத விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேவகுமாரர் என்பவர்கள் தூதர்கள்தான் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் அனேக நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த காலத்து விளக்க உரையாளர்களும் பலர் இதை ஒத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் நாம் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இவர்கள் நல்ல தூதர்களாக இருந்தால் இவர்கள் இந்த பாவத்தை செய்திருக்க மாட்டார்கள். மேலும் பொல்லாத தூதர்கள் ஒரு பொழுதும் தேவகுமாரர் என்று குறிப்பிடப்பட முடியாது. மேலும் இங்கே அவர்களுக்கு பிறந்த சந்ததியும் மனிதர்கள்தான். அவர்கள் பயங்கர உருவங்கள் அல்லது அசுரர்கள் அல்ல சிலர் இவர்கள் ராட்சதர்களாக இருந்தார்கள் என்று கருதுகிறார்கள். ஏன் அப்படி யோசிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை. 4ஆம் வசனதுக்கு வரும் பொழுது இன்னும் சற்று விளக்கமாக நாம் அதை பார்ப்போம்.
ஆதியாகமம் 6:3
[3] அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
……………..
நோவா 120 வருடங்கள் மக்களுக்கு பிரசிங்கித்தார் என்றும் அந்த காலத்தில் தேவனுடைய ஆவி மனிதர்களோடு இடைபட்டுக் கொண்டிருந்தது என்றும் நம்புகிறோம். தேவனுடைய ஆவி மனிதர்களை தேவனிடம் கொண்டு வருவதற்காக அவர்களுடன் போராடிக் கொண்டிருந்தது என்பதை அப்போஸ்தலனாகிய பேதுருவும் மிக தெளிவாக கூறியிருக்கிறார் ஆனால் அவர்கள் திரும்பவில்லை.
1 பேதுரு 3:18-19
[18] ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். [19] அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
……………….
பேதுரு இந்த வார்த்தைகளை எழுதிய பொழுது அந்த ஆவிகள் சிறையில் இருந்தன ஆனால் அவை நோவாவின் காலத்தில் நோவாவின் பிரசங்கத்தை கேட்டவைகள் தான். அது நமக்கு எப்படி தெரியும்?? வசனம் 20 என சொல்லுகிறது பாருங்கள்
1 பேதுரு 3:20
[20] அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
இந்த வசனம் வரப் போகும் ஜலப் பிரளயத்துக்கு மிக முக்கியமான அடித்தளமாக உள்ளது. இது 6:1–2இல் விவரிக்கப்பட்ட மனிதகுலத்தின் தீவிர பாவத்துக்கு, அதாவது, “தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை” மணந்த பாவத்துக்கு தேவனின் நேரடியான பதிலாக வருகிறது. மனிதன் பாவத்தில் மூழ்கியதால் தேவனின் பொறுமைக்கு ஒரு எல்லை வைக்கப்படுகிறது.
இந்த வசனத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து விளக்கம் பார்க்கலாம்:
“என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை;”
”என் ஆவி” – என்பது கடவுளின் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஆதியாகமம் 1:2இல் படைப்பின் போது “தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” என்று பார்க்கிறோம். கடவுளின் ஆவி மனிதனுக்கு ஜீவனைத் தந்தது என்று ஆதியாகமம் 2:7ல் பார்த்தோம். வசனத்தை வாசிக்கிறேன். ஆதியாகமம் 2:7:
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.”
அதுமட்டுமல்ல, கர்த்தருடைய ஆவி மனிதனோடு உறவாடி, மனசாட்சி மூலமாக வழிநடத்தி, பாவத்தை எச்சரிக்கும். யோவான் 16:8ல் இயேசு சொல்வதைக் கேளுங்கள்:
“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.”
இங்கே ‘அவர்’ என்று சொல்லப்படுவது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது.
“போராடுவதில்லை” – இது “வழக்காடுதல்”, “போராடுதல்”, “நியாயம் விசாரித்தல்” என்ற பொருள் தரும். கடவுளின் ஆவி மனிதனின் பாவத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி, அவனை மனந்திரும்பச் செய்ய முயன்றது. ஆனால் மனிதன் தொடர்ந்து பாவத்தில் மூழ்கியதால், இனி அந்தப் போராட்டம் நிறுத்தப்படும்.
“என்றைக்கும்” – கடவுளின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை இது வலியுறுத்துகிறது. கடவுள் நீண்ட காலம் சகித்துக்கொண்டே இருக்கிறார். 2 பேதுரு 3:9ஐப் பாருங்கள்:
“தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”
ஆனால் இறுதியில் நியாயத்தீர்ப்பு வரும்.
“அவன் மாம்சம்தானே” – மாம்சம் என்பது மனிதனின் பலவீனமான, பாவத்திற்கு அடிபணிந்த இயல்பைக் குறிக்கிறது. மனிதன் ஆவிக்குரியவனாக இருக்க வேண்டியவன். அவன் தேவனின் சாயலில் படைக்கப்பட்டவன். ஆனால் பாவத்தால் மாம்சீகமாக மாறிவிட்டான். இது ரோமர் 8: 5 முதல் 8 வசனங்களை நினைவூட்டுகிறது: கவனியுங்கள் வாசிக்கிறேன்.
“அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.”
மனிதன் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை முழுமையாக நிராகரித்து விட்டான். அதனால் இனி, ஆவியானவரின் தாக்கம் குறைக்கப்படும்.
“அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம்” – ஜலப் பிரளயத்துக்கு முன்னால் மக்கள் 900 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார்கள். இனி மனித ஆயுள் படிப்படியாக 120 ஆண்டுகளாகக் குறையும் என்று கர்த்தர் தீர்மானித்தார். ஜலப் பிரளயத்துக்குப் பின் வாழ்ந்த ஆபிரகாமின் காலம் 175 வருஷம். மோசே 120 வருஷம் இந்த பூமியில் இருந்தான். சங்கீதம் 90:10 இவ்விதம் கூறுகிறது:
“எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.”
பாவத்தின் தீவிரத்தால் உலகம் சீர்கெட்டது. நீண்ட காலம் வாழ்வது பாவத்தை இன்னும் பெருக்கும் என்பதால் ஆயுள் குறைக்கப்பட்டது.
ஆதியாகமம் 6:3 கடவுளின் நீதியும் இரக்கமும் கலந்த பதிலைக் காட்டுகிறது. மனித பாவத்திற்கு நியாயத்தீர்ப்பு உறுதி ஆனாலும், அழிவுக்கு முன் அவகாசம் தரப்படுகிறது. இது நோவாவின் காலத்தில் ஜலப் பிரளயமாக நிறைவேறியது போல , இறுதியில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாகவும் நிறைவேறும். மத்தேயு 24ஆம் அதிகாரம், 37,38,39 வசனங்களில் இயேசு இதை மிகவும் தெளிவாகச் சொல்கிறார்: கவனியுங்கள்.
“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”
இன்றும் இது நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். பரிசுத்த ஆவியானவரை நிராகரித்தால், அவர் இறுதியில் விலகிக்கொள்வார். ஆனால் இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், இப்போதும் மனந்திரும்ப வாய்ப்பு உண்டு என்பதே.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே நாம் கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த கிருபையின் காலம் எப்பொழுது முடியும் என்பது நமக்கு தெரியாது. எனவேதான் இதுவே அணுக்கரர் காலம் இப்பொழுது ரக்சன் என்றால் பரிசுத்த வேதம் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலை மூலமாக அல்லது பரிசுத்த வேத வசனங்களும் மூலமாக அல்லது நாம் கேட்கும் செய்திகள் மூலமாக தேவன் நம்முடைய பாவத்தை உணர்த்துவார் என்றால் உண்மையான மனஸ்தாபத்தோடு கூட என்னுடைய பாவத்தை தெளிவாக கர்த்தரிடத்தில் அறிக்கை செய்வோம். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறானோ இரக்கம் பெருவான் என்று வேத வசனம் தெளிவாகச் சொல்வதினாலே , நாம் அறிக்கை செய்து பாவங்களை தேவன் நமக்கு மன்னித்து பாவம் மன்னிப்பின் நிச்சயத்தை நமக்குத் தருவார்.
பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்று, உண்மையான விருப்பம் உள்ளாய் அவர் மேல் பூரண விசுவாசமுள்ளவராய் வாழும் பொழுது பரிசுத்த ஆவியானவரே அந்த வெற்றி உள்ள வாழ்க்கையையும் உங்களுக்கு கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறார்.
இந்த எல்லா கிருபைகளையும் கர்த்தர் தாமே உங்களுக்கும் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
