ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 49:8-50:26
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 49:8-50:26
நிகழ்ச்சி எண்: 0065

வாசியுங்கள்

அருமையானவர்களே, நாம் ஆதியாகம வேத ஆராய்ச்சியின் கடைசி பாடத்திற்கு வருகிறோம். ஆதியாகமம் 49 ஆம் அதிகாரத்தில் மரணப்படுக்கையில் யாக்கோபு கொடுத்த ஆசீர்வாதமும் தீர்க்கதரிசனமும்;/ யாக்கோபின் இறுதி வார்த்தைகளும் / மரணமும். சொல்லப்பட்டிருக்கிறது, இன்று ஆதியாகமம் 49 8 முதல் 50 26 வரை படித்துக் கொள்வோம்.

ரூபன் முதலிடத்தை இழந்தார்; சிமியோனும் லேவியும் கூட முதலிடத்தை இழந்தார்கள். இந்த கோத்திரங்களில் இருந்து ராஜா வரமாட்டார். பாவஞ்செய்த இன்னொரு சிறுவனும் அங்கே இருந்தான். அதுதான் யூதா. தேவனுடைய கிருபை அவனுக்கு என்ன செய்தது என்று நாம் பார்ப்போம்:

ஆதியாகமம் 49:8

‘8யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். ‘
……………………

இதன் விளக்கம் என்ன? யூதாவின் வம்சத்தில் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வந்தார். ஒரு நாள் அவர் முன் அனைவரும் பணிவார்கள்.

ஆதியாகமம் 49:9, 10 ஆம் வசனங்கள்.

‘9யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? ‘
’10சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். ‘
…………………………

இது தேவனுடைய வார்த்தையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும்.
“உனக்கும் ஸ்திரீயுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்று ஆதியாகமம் 3:15 ல் வாசிக்கிறோம்
ஸ்திரீயின் அந்த “வித்து” தான் சர்ப்பத்தின் தலையை நசுக்குபவர். அவரே வெற்றியைப் பெறுவார். இதுவே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனம்:
பிறகு அந்த ‘வித்து’ ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இப்போது அது யூதாவிற்கு உறுதிப்படுத்தப்படுகிறது — யூதாவின் வம்சத்திலிருந்தே அவர் வருகிறார். சமாதானம் என்ற வார்த்தைக்கு “அமைதி மற்றும் இளைப்பாறுதல்” என்று பொருள். கிறிஸ்துவே அமைதியைக் கொண்டு வருபவர்.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). என்று இரட்சகராக உல்கில் வந்த இயேசு கூறினார்.
கிறிஸ்து சமாதான கர்த்தர் மாத்திரமல்ல, அவரே இந்தப் பிரபஞ்சத்தின் செங்கோலைப் பிடிப்பவர். ஆணிகளால் துளைக்கப்பட்ட கைகளில் அது இருக்கும். இந்த அதிகாரத்தின் 24-வது வசனத்தின் கடைசிப் பகுதியில், தேவனிடமிருந்து மேய்ப்பரும், இஸ்ரவேலின் கன்மலையும் வருவார் என்று வாசிக்கிறோம். எனவே, இந்த சமாதான கர்த்தர் ஒரு மேய்ப்பராகவும், கன்மலையாகவும் இருக்கிறார்.
எண்ணாகமம் 24:17-க்கு நாம் வரும்போது, ஒரு ‘நட்சத்திரம்’ பற்றிய தீர்க்கதரிசனத்தைக் பார்ப்போம். கிறிஸ்துவின் வருகை எதையெல்லாம் குறிக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்:
அவர் ஸ்திரீக்கும் பிதாக்களுக்கும் வாக்குறுதி அளிக்கப்பட்ட வித்து.
அவர் இளைப்பாறுதலைத் தரும் சமாதான கர்த்தர்.
அவர் செங்கோலை ஏந்தியுள்ள ராஜா.
அவர் தமது உயிரைக் கொடுத்த மேய்ப்பர், ஒருநாள் வரப்போகிற பிரதான மேய்ப்பர்.
அவர் வீடுகட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட, ஆனால் இப்போது மூலைக்குத் தலைக்கல்லாக மாறியுள்ள கன்மலை.
அவர் தமது சபைக்கான பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரம்.
ஆதாம் முதல் சேத் வரை இந்த வம்சம் சென்றது. சேத் முதல் நோவா வழியாக சேம், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்று கடந்து, இப்போது யூதாவிற்கு வந்துள்ளது. அருமையானவர்களே , தேவன் இங்கே ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்படியும் ஒழுங்கின்படியும் செயல்படுகிறார்
ஆதியாகமம் 49:11-12
’11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். 12அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும். ‘
…………………………
யாரைப் பற்றி இங்கே சொல்லப்படுகிறது? அவரே இயேசு கிறிஸ்து! ஒரு சிறிய கழுதையின் மேல் ஏறி எருசலேமுக்குள் வந்தவர்; தம்மையே மேசியாவாகவும், ராஜாவாகவும், இரட்சகராகவும் முதல் முறை அர்ப்பணித்தவர்.
தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். ? என்பது இயேசுவின் சொந்த இரத்தம். ஆனால், ஏசாயா 63:2 ல் இயேசு மீண்டும் உலகத்தில் 2ஆம் முறை வரும்போது ”உம்முடைய உடுப்பு சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன? ‘
என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அந்த நேரத்தில், அது அவருடைய சொந்த இரத்தமாக இருக்காது, மாறாக அவருடைய பகைவர்களின் இரத்தமாக இருக்கும்.
கிறிஸ்து நியாயத்தீர்ப்பு கொடுக்க மீண்டும் வரும்போது என்ன நடக்கும் என்பதை இது முன்னறிவிக்கிறது.
ஆதியாகமம் 49:13ல் பார்க்கும்பொழுது செபுலோன் கோத்திரம் நாட்டின் வடக்குப் பகுதியில் கடற்கரையோரம் வாழப்போகிறது என்று கூறுகிறார்.
திரையில்
’13செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும். ‘
ஆதியாகமம் 49:14-15
’14இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. 15அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான். ‘
…………………………..
இசக்கார் கோத்திரமும் கடைசியில் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது. ஒரு தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் பெரும்பாலான வேலைகளைச் செய்தவர்கள் இவர்களே. இவர்கள் கடினமாக உழைப்பவர்கள்,
நாம் சாதாரணமாகக் கருதி கடந்து செல்லும் செபுலோன் மற்றும் இசக்கார் போன்ற சிறிய கூட்ட மக்களே இன்றும் தேசங்களின் முதுகெலும்பாய் இருக்கிறார்கள்.
ஆதியாகமம் 49:16-18
’16தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். 17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். 18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். ‘
………………………….
தான் கோத்திரத்தினர் கர்த்தருடைய இரட்சிப்பைத் தேட வேண்டியிருக்கும், ஏனென்றால் அவர்கள் உண்மையில் கலகத்திற்குத் தலைமை தாங்கும் கோத்திரங்களில் ஒன்றாக இருப்பார்கள். நாம் வேதவசனங்களைத் தொடர்ந்து படிக்கும்போது இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
ஆதியாகமம் 49:19
’19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். ‘
………………………..
இது நாட்டின் வடக்குப் பகுதியில் குடியேறிய மற்றொரு கோத்திரமாகும். உண்மையில், தான் கோத்திரம் மிக வடக்கே இருந்ததால், இஸ்ரேவேல் நாட்டின் எல்லையை விவரிக்கும் போது அது ‘தான் முதல் பெயெர்செபா வரை’ என்று குறிப்பிடப்படுகிறது.
ஆதியாகமம் 49:20-21
’20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான். 21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். ‘
……………………….
நீங்கள் ஒரு வேதாகம மாணவராக இருந்தால், இத்தகைய ஆராய்ச்சி உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். விவிலியத்தின் மீதமுள்ள பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆதியாகமம் 49:22
’22யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். ‘
……………………….
யோசேப்பு கானான் தேசத்தை விட்டு எகிப்திற்குச் சென்றார், ஆனால் அங்கேயும் அவர் தேவனுக்கு ஒரு சாட்சியாக விளங்கினார். பிற்காலத்தில், அவருடைய குமாரர்களான எப்பிராயீமும் மனாசேயும் சமாரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் குடியேறினார்கள். கிறிஸ்துவின் காலத்தில் அந்தப் பகுதி ‘புறஜாதியினரின் தேசம்’ என்று அழைக்கப்பட்டது. அது சாட்சி பகர்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது, நற்செய்தியும் (Gospel) அந்தப் பகுதிக்குச் சென்றது. நம்முடைய கர்த்தராகிய இயேசுவே அங்கு ஊழியங்களைச் செய்தார். யோவான் 4-ஆம் அதிகாரத்தில், கிணற்றருகே இருந்த ஒரு பெண்ணிடமிருந்து தொடங்கி, சமாரிய மக்களுக்கு அவர் சாட்சி பகர்ந்ததை பார்க்கிறோம்.
ஆதியாகமம் 49:23-25
’23வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். 24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். 25உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். ‘
……………………….
யோசேப்பின் குமாரர்களான எப்பிராயீம் மற்றும் மனாசே ஆகியோரிடமிருந்து உருவான இரண்டு கோத்திரங்களும் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான கோத்திரங்களாக மாறின. எந்தளவுக்கு என்றால், இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாகப் பிரிவதற்கு இவர்களே முக்கியக் காரணமாக இருந்தார்கள். அந்தளவுக்கு அவர்கள் வலிமைமிக்கவர்களாக இருந்தார்கள்.
ஆதியாகமம் 49:26
’26உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. ‘
…………………………
“யாக்கோபு, யோசேப்பையும் அவரிடமிருந்து வரப்போகும் இரண்டு கோத்திரங்களையும் இஸ்ரவேலின் தேவனும், சிருஷ்டிகரும், மீட்பருமானவரிடம் மீண்டும் இணைக்க முயற்சிப்பதைக் கவனியுங்கள். ஏன்? ஏனென்றால், இந்த கோத்திரங்கள், குறிப்பாக எப்பிராயீம் கோத்திரம், இஸ்ரவேலர்களை உருவ வழிபாட்டிற்குள் (Idolatry) வழிநடத்தியது. கலகத்திற்குத் தலைமை தாங்கி, இஸ்ரவேலின் எல்லைகளில் இரண்டு பொற்கன்றுகளை நிறுவிய எரோபெயாம், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவர். எனவே, தனது மரணப் படுக்கையில் இருக்கும் யாக்கோபு, அவர்களை மீண்டும் தன் பிதாக்களின் தேவனானவரிடம் திரும்பி வரும்படி அழைக்கிறார்.”
ஆதியாகமம் 49:27ல் சொல்லப்பட்டிருக்கிற
’27பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். ‘
………………………..திரையில் வசனம்
பென்யமீனைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனம் சற்று விசித்திரமானது. பென்யமீன் கோத்திரம் யூதா கோத்திரத்துடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது; எந்த அளவுக்கு என்றால், ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தபோது பென்யமீன் கோத்திரம் யூதாவோடு நின்றது. அதாவது தாவீதின் வம்சத்தோடு (House of David) நிலைத்திருந்த ஒரே கோத்திரம் பென்யமீன் மட்டுமே.
ஆதியாகமம் 49:29
’29பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; ‘
……………………..
யாக்கோபைப் பொறுத்தவரை, மரணம் என்பது எல்லாவற்றின் முடிவும் அல்ல. அவர் மரித்தபின் தன் முன்னோர்களுடன் சேரப்போவதாக நம்பினார். ஆபிரகாம் விலை கொடுத்து வாங்கிய அந்த நிலத்திலுள்ள குகையிலேயே தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து – அதே தேசத்தில் வாழும் நாள் வரும் வரை, தனது உடல் அந்தத் தேசத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் யாக்கோபு உறுதியாக இருந்தார்.

ஆதியாகமம் 49:30

’30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறை பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். ‘
………………………….

கவனித்தீர்களா யாக்கோபு தனது குடும்ப வரலாற்றை எவ்வளவு ஆழமாகத் தெரிந்து வைத்திருந்தார்?? அந்த நேரத்தில் அவர் கையில் எந்த ஒரு எழுதப்பட்ட ஆவணத்தையும் (Written record) வைத்திருந்திருப்பார் என்று சொல்ல முடியாது; ஆனாலும், இந்தத் தகவல்கள் அனைத்தையும் அவர் தனது நினைவிலேயே வைத்திருந்தார்.

ஆதியாகமம் 49:31

’31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். ‘
…………………………

அவர் லேயாளுக்கு அருகில் பெத்லகேமில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. உயிர்த்தெழுதலின் பொழுது தான் எங்கே எழுப்பப்பட வேண்டுமோ, அந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட விரும்பினார். அதன் மூலம், இஸ்ரவேல் தேசத்திற்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றும் போது, அவர் அங்கேயே இருக்க முடியும் என்று நம்பினார்.

ஆதியாகமம் 49:32-33

’32அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். 33யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.’
………………………..

யாக்கோபு தனது கடைசி நிமிடம் வரை தரையில் கால்களை ஊன்றி இருந்ததைக் காண்பது சுவாரஸ்யமானது. அவர் தனது வாழ்க்கையை ஒரு உலகப்பற்றுள்ள மனிதனாகவே தொடங்கினார். பிறக்கும்போதே தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு பிறந்ததால், அவருக்கு ‘யாக்கோபு’ என்று பெயரிடப்பட்டது. அவர் அந்தப் பெயருக்கு ஏற்றவாறு, எதை எதையெல்லாம் பிடிக்க முடியுமோ அதையெல்லாம் பிடித்துக்கொண்டு, எப்போதும் முதன்மையானவராக இருக்கவே முயன்றார்.
தன் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் ஒரு விலங்கைப் போல நான்கு கால்களிலும் (தவழ்ந்து) தொடங்கி, தனக்கு வேண்டியதை எந்த வழியிலாவது அடைய முயன்றார். ஒரு இளைஞனாக, அவர் தனது சொந்த பலத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்துத் தனது கால்களால் நடந்தார். அவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தையும் தந்திரத்தையுமே நம்பியிருந்தார். தன்னால் தன்னைக் கவனித்துக்கொள்ள முடியும் என்றும், தனக்குத் தேவன் தேவையில்லை என்றும் அவர் நினைத்தார். அவர் தன்னிறைவு கொண்டவராகவும், சுயத்திற்காக முயற்சி செய்கிறவராகவும், அடாவடி செய்பவராகவும், பிறரால் வெறுக்கத்தக்க மற்றும் இழிவான குணமுடையவராகவும் இருந்தார்.
பெனியேலில் தேவன் யாக்கோபை முடமாக்கினார். அவரைத் தன் வசப்படுத்த தேவன் அவரை ‘உடைக்க’ வேண்டியிருந்தது; ஒருவேளை அவர் கழுத்தையே உடைக்கவும் தேவன் ஆயத்தமாக இருந்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன்! அதற்குப் பிறகு, அவர் தனது வாழ்நாள் முழுவதும் நொண்டி நடந்தார். அவரால் இனி தானாக நடக்க முடியாததால், ஊன்றுகோலைப் பயன்படுத்தி ‘மூன்று கால்களில்’ நடக்க வேண்டியிருந்தது. இங்கே, அவரது மரணத்திற்கு முன்பாக, அவர் தனது கோலின் மேல் சாய்ந்து படுக்கையில் அமர்ந்திருக்கிறார். இப்போது நேரம் வந்துவிட்டது. அவர் தனது கால்களைப் படுக்கைக்குள் இழுத்து வைத்துக்கொண்டு, ஊன்றுகோலைக் கீழே போட்டுவிட்டு, மரிப்பதற்காகப் படுத்துக் கொள்கிறார். இப்படித்தான் யாக்கோபு. அவர் வாழ்க்கையில் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி, தான் மீண்டும் அந்தத் தேசத்தில் உயிர்த்தெழுப்பப்படும் நாளை எதிர்நோக்கி, விசுவாசத்தின் ஒரு இறுதிச் செயலோடு தனது வாழ்வை முடிக்கிறார்.
எபிரெயர் 11:13 பாருங்கள்.
’13இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
………………………………
இறுதியாக ஆதியாகமம் ஐம்பதாம் அதிகாரத்தையும் நாம் பார்ப்போம்.
ஆதியாகமத்தின் இந்த கடைசி அதிகாரம் ஒருவித சோகமான உணர்வைத் தருகிறது. ஆதியாகமப் புத்தகத்தில் மரணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கனவே கவனித்திருக்கிறோம். ‘நீ இதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்’ (ஆதி. 2:17) என்று தேவன் ஆதாமிடம் கூறியிருந்தார்.
”12இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. ‘என்று
(ரோமர் 5:12) பவுல் பின்னர் எழுதினார். பாவம் என்ற உண்மையும், மரணம் என்ற யதார்த்தமும் ஆதியாகமப் புத்தகத்தில் முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஏதேன் தோட்டத்தில் தேவனோடும் மனிதனோடும் தொடங்கும் இந்தப் புத்தகம், எகிப்தில் ஒரு சவப்பெட்டியில் முடிகிறது. இந்தப் புத்தகம் மனிதக் குடும்பத்திற்குள் பாவம் நுழைந்ததை விவரிப்பதோடு மட்டுமல்லாமல், மனிதன் வாழ்வதற்கான வழியைத் தேவன் உண்மையுடன் ஏற்படுத்திக் கொடுத்ததையும் விவரிக்கிறது.
ஆதியாகமம் 50:1ன்றை வாசிக்கும்போது
‘1அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். ‘
………………………. திரையில் மட்டும்
யோசேப்பு தன் தகப்பனை அதிகம் நேசித்ததால் மிகவும் அழுதார்.
ஆதியாகமம் 50:2 வாசிக்கிறேன்
‘2பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். ‘
……………………..
எகிப்தியர்கள் உடல்களைப் பாதுகாப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும். எகிப்திய ‘மம்மிகள்’ பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உடல்கள் சிதையாமல் பாதுகாக்க அவர்கள் கையாண்ட முறை இன்று வரை நமக்குத் தெரியாத ஒரு ரகசியமாகும். அதனால் தான், யோசேப்பு தன் தந்தையின் உடலைப் பதப்படுத்துவதற்காக மருத்துவர்களை அழைத்தார்.
யாக்கோபு தன்னை ‘மக்பேலா’ குகையில் அடக்கம் செய்யச் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய நம்பிக்கை இந்த பூமி சார்ந்தது. அவர் உயிர்த்தெழும்போது, இஸ்ரவேல் தேசத்தில் அந்த மண்ணிலேயே இருப்பார். ஆனால் இன்று விசுவாசிகளின் நம்பிக்கை வேறானது; நாம் ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்பட்டு, விண்வெளியில் உள்ள ‘புதிய எருசலேம்’ என்ற இடத்திற்குச் செல்வோம். இவை இரண்டுமே வெவ்வேறு நம்பிக்கைகள் என்றாலும், இரண்டுமே மகிமையானவைகள்தான்.
ஆதியாகமம் 50:3 – ல் நாம் பார்ப்பது போல
‘3சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள். ‘
……………………………( கீழே உள்ள நான்கு வரிகள் பேசப்படும் பொழுது மேலே உள்ள வசனத்தை ஸ்கிரீனில் போடவும் )
உடலைப் பதப்படுத்த அவர்களுக்கு நாற்பது நாட்கள் தேவைப்பட்டது. இதிலிருந்து, அந்த முறையில் பல கட்டங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது. மேலும், எகிப்தியர்கள் அவருக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இது ஏதோ கடமைக்காகச் செய்யப்பட்ட துக்கம் என்று நான் நினைக்கவில்லை. எகிப்து தேசத்தில் அவர் ஒரு உண்மையான பரிசுத்தவானாக வாழ்ந்திருக்க வேண்டும்; குறிப்பாக யோசேப்பின் தந்தை என்பதால் அவர் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். யோசேப்பு அந்த தேசத்தின் இரட்சகராக இருந்தார், ஆனால் அவருடைய தந்தை யாக்கோபு அந்த நேரத்தில் தேவனுடைய உண்மையான மனிதராக திகழ்ந்தார் என்று நாம் நம்பலாம்.
ஆதியாகமம் 50:4-7 வசனங்களில்……. யாக்கோபு ஏற்கனவே கேட்டுக்கொண்டது போல் இப்பொழுது கானானில் கொண்டு அடக்கம் செய்ய பார்வோனிடத்திலே அனுமதி கேட்டு எகிப்து தேசத்தில் உள்ள முக்கியமான பலரோடு சேர்ந்து யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்ய புறப்பட்டு போனார் என்று வாசிக்கிறோம்.
…………………..
யாக்கோபு எகிப்து தேசத்தில் அதிகமாக மதிக்கப்பட்டார், நேசிக்கப்பட்டார் மற்றும் கௌரவிக்கப்பட்டார். உலகிலேயே மிக நீண்ட தூரம் சென்ற இறுதிச் சடங்கு ஊர்வலம் இதுவாகத்தான் இருக்கும். இது எகிப்திலிருந்து தொடங்கி கானானில் உள்ள எப்ரோன் வரை நீண்ட தூரம் சென்றது. ஆதியாகமம் 50:8ல் நாம் பார்ப்பது என்ன??
‘8யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும் மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள். ‘
…………………….( கீழே உள்ள நான்கு வரிகள் பேசப்படும் பொழுது மேலே உள்ள வசனத்தை ஸ்கிரீனில் போடவும் )

இவர்கள் அனைவரும் நிச்சயம் எகிப்திற்குத் திரும்பி வருவார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே, அவர்களுடைய குழந்தைகளையும் ஆடுமாடுகளையும் அங்கேயே விட்டுச் செல்லும்படி பார்வோன் கட்டளையிட்டாரோ என்று நமக்குத் தோன்றுகிறது. பார்வோன் யோசேப்பை இழக்க விரும்பவில்லை, ஏனென்றால் அவருக்கு இன்னும் யோசேப்பின் உதவி தேவைப்பட்டது.
ஆதியாகமம் 50:9 – 11 வசனங்களைப் பார்த்தால், அந்த அடக்க ஊர்வலம் யாக்கோபுக்காக துக்கம் கொண்டாடியதை காணானியர் பார்த்து இது எகிப்தியர்க்கு பெரிய துக்கம் கொண்டாடல் என்றார்கள் என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 50:12, 13 வாசிக்கிறேன்
12யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, 13அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். ‘
…………………………
ராகேல் அடக்கம் செய்யப்பட்ட பெத்லகேம் அங்கிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில்தான் இருந்தது. அப்படியிருந்தும், யாக்கோபு ஏன் அங்கு அடக்கம் செய்யப்படவில்லை என்று நமக்குத் தோன்றலாம். அதற்கான காரணம் இங்கே கூறப்பட்டுள்ளது: ஆபிரகாம் அந்த ‘மக்பேலா’ குகையை விலை கொடுத்து வாங்கியிருந்தார். தான் அந்த மண்ணிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக, தன் முன்னோர்கள் முறைப்படி காசு கொடுத்து வாங்கிய இடத்திலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று யாக்கோபு விரும்பினார்.
எனவே, அவருடைய முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே யாக்கோபு சேர்த்து அடக்கம் செய்யப்பட்டார். இவர்கள் அனைவருக்குமே உயிர்த்தெழுதல் குறித்த ஒரே விதமான நம்பிக்கை இருந்தது.
ஆதியாகமம் 50:14-17
’14யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள். 15தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒரு வேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, 16உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். 17ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். ‘
………………………..
தங்கள் தந்தை யாக்கோபு இறப்பதற்கு முன்பே, அவருடைய சகோதரர்கள் யோசேப்பிடத்தில் போய் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தந்தை மறைந்த பிறகு, யோசேப்பு தங்களுக்கு எதிராகத் திரும்பிப் பழிவாங்குவாரோ என்று அவர்கள் பயந்து கொண்டே இருந்தார்கள். அதனால், யாக்கோபு அவர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்து, அதை யோசேப்பிடம் சொல்லச் சொன்னார். யோசேப்பு தங்களைத் துன்புறுத்த மாட்டார் அல்லது பழிவாங்க மாட்டார் என்பதில் யாக்கோபு உறுதியாக இருந்தார்.
சகோதரர்கள் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தோடு யோசேப்பிடம் வந்தபோது, அதைக் கேட்டு யோசேப்பு தேம்பித் தேம்பி அழுதார். இப்போது அவர்கள் தங்கள் பாவத்திற்காக உண்மையாகவே மனம் வருந்துகிறார்கள்.
ஆதியாகமம் 50:18-19
’18பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். 19யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; ‘
………………………….
அவர்கள் (சகோதரர்கள்) யோசேப்பிற்கு முன்பாக விழுந்து பணிவார்கள் என்ற தீர்க்கதரிசனம் மீண்டும் மீண்டும் உண்மையானதை நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு முறையும் யோசேப்பு அந்தப் புகழைத் தேவனுக்கே செலுத்துகிறார். இப்போது இதோ, வேதத்தின் மிக முக்கியமான ஒரு வசனம்—
’20நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
………………………..
கவனித்தீர்களா?? , உங்களுக்கும் எனக்கும் தெரியாத ஒரு தூரநோக்குத் திட்டம் கடவுளிடத்தில் இருக்கிறது. துன்பங்கள் வரும்போது என் மூக்கிற்கு முன்னால் இருப்பதைக்கூட என்னால் பார்க்க முடிவதில்லை; அந்தளவுக்கு நான் ஒரு சாதாரண மனிதனாகவே இருக்கிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். “ஏன் தேவன் இதை அனுமதிக்கிறார்?” என்று நான் கேட்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல நோக்கத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல காரியத்தை அது நிறைவேற்றும் என்றால் ஒழிய, கர்த்தர் எதையும் உங்களை நெருங்க விடமாட்டார்.
இப்போது யோசேப்பு சொல்வதைக் கேளுங்கள்—
ஆதியாகமம் 50:21-23
’21ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். 22யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான். 23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். ‘
…………………………….
இதன் மூலம் யோசேப்பு ஒரு கொள்ளுப் பாட்டனுக்கும் அடுத்த தலைமுறையைக் கண்டவர் (Great-great-grandfather) என்று கூறலாம்.
ஆதியாகமம் 50:24-26
’24யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; 25தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். 26யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.’
………………………..
ஆதியாகமப் புத்தகம் இப்படித்தான் முடிகிறது. இது ‘தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்’ என்று தொடங்கியது, ஆனால் ‘எகிப்தில் ஒரு சவப்பெட்டி’ (coffin) என்ற செய்தியுடன் முடிகிறது. மனித குலத்திற்கு என்ன ஆனது? தேவனுடைய படைப்பிற்குள் ‘பாவம்’ நுழைந்துவிட்டது.
யாக்கோபை எடுத்துச் சென்றது போல, யோசேப்பை ஏன் அப்போதே கானானுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யவில்லை? ஏனென்றால். யோசேப்பு எகிப்து தேசத்தின் மாபெரும் நாயகனாக இருந்தார். அந்த நேரத்தில் அவருடைய உடலை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல எகிப்தியர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், யோசேப்பு தன் சொந்த மக்களிடம், “நீங்கள் கானானுக்குத் திரும்பிப் போகும்போது, என் எலும்புகளை இங்கே விட்டுவிட்டுப் போகாதீர்கள்!” என்று கூறுகிறார். யாக்கோபிடம் நாம் கண்ட அதே நம்பிக்கையை யோசேப்பிடமும் காண்கிறோம்; அதாவது, தேவன் கானான் தேசத்தை தங்களுக்கு நித்திய சொத்தாகக் கொடுப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அது. தாங்கள் உயிர்த்தெழும் போது தங்கள் சொந்த மண்ணிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தேவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை விசுவாசிகளுக்குக் கொடுப்பார் என்று யோசேப்பு நம்பினார்.
எபிரெயர் புத்தகம் யோசேப்பின் வாழ்க்கையில் இந்தச் செயலை விசுவாசத்தின் உச்சகட்டமாகச் சொல்கிறது:
எபிரெயர் 11:22
“விசுவாசத்தினாலே யோசேப்பு தன் அந்தியகாலத்தில் இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்தை விட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றிப் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான்” .
இதன் நிறைவேறுதலை யாத்திராகமம் 13-ஆம் அதிகாரத்தில், நாம் படிக்கலாம்.. மோசேயும் இஸ்ரவேல் மக்களும் எகிப்தை விட்டுப் புறப்பட்டபோது, யோசேப்பின் எலும்புகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்கள்.
அன்பானவர்களே, கடவுள் உங்களோடு பேசிய வேதபகுதிகளை மீண்டும் படித்து சிந்தித்துப் பார்த்து அதற்குக் கீழ்படியுங்கள். கடந்த 65 நிகழ்ச்சிகளில் ஆதியாகம புத்தகத்தை கற்றுக்கொள்ள எங்களோடு நீங்கள் செலவு செய்த ஒவ்வொரு மணித்துளிகளுக்கும் தக்கதாக நித்தியமான ஆசீர்வாதங்களை கர்த்தர் உங்களுக்கு தந்தருள்வாராக.ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top