ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 48: 1 - 49:7
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 48: 1 – 49:7
நிகழ்ச்சி எண்: 0064

வாசியுங்கள்

கர்த்தருடைய வசனத்திற்காக ஆவலோடு காத்திருந்து எங்களோடு இணைந்திருக்கும் உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
இன்று நாம் ஆதியாகமம் 48 ஆம் அதிகாரம் முதல் வசனம் முதல் 49 ஆம் அதிகாரம் ஏழாம் வசனம் வரை பார்க்க போகிறோம்.
யாக்கோபு அடைந்த ஆன்மீக வளர்ச்சியின் சான்றுகளைக் காண இந்த அதிகாரம் நமக்கு உதவி செய்கிறது., ஆன்மீக வாழ்க்கை என்பது ஏதோ ஒரு நொடியில் நடக்கும் பரபரப்பான அனுபவம் அல்ல; மாறாக, இது ஆவியானவருக்குள் நடக்கும் ஒரு “நடைப்பயணம்” என்று வேதம் விவரிக்கிறது. யாக்கோபு வாலிபனாக இருந்தபோது அவரிடம் பழைய சுபாவம் அதிகமாக இருந்தது; அவர் முதிர்ந்த வயதை எட்டும்போதுதான் அந்தப் புதிய சுபாவம் அவரிடம் தெளிவாகத் தெரிகிறது.
பேதுரு தனது இரண்டாவது கடிதத்தில் 3:18 இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஆவியின் கனிகள் உருவாவதற்கு நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்பதை யாக்கோபின் வாழ்க்கையின் மூலம் நாம் படித்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்வில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்கும், அதற்கு அனுமதிக்கும் தேவனுடைய நீடிய பொறுமைக்கும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மேலும், நாம் மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது போல, தேவன் நம்மிடம் வந்து வளர்ச்சியை வலுக்கட்டாயமாக திணிப்பதில்லை என்பதற்காகவும் நாம் அவருக்கு நன்றி கூறலாம். தேவன் யாக்கோபை மிகவும் பொறுமையுடன் நடத்தினார்; அதேபோல் உங்களையும் என்னையும் அவர் மிகுந்த பொறுமையுடன் நடத்துவார்.
ஆதியாகமம் 48:1-3

‘1அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான். 2இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத்திடப் படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 3யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து: ‘
……………………..

இந்த வயதான யாக்கோபின் இதயம் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இதோ, அவருக்கு மிகவும் பிடித்த மகனான யோசேப்பு, தனது இரண்டு சிறுவர்களுடன் வருகிறார். யோசேப்பு இறந்துவிட்டதாக நினைத்ததால், அவரை மீண்டும் பார்ப்போம் என்று யாக்கோபு கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இப்போது, யோசேப்பு எகிப்தில் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பதைக் பார்க்கிறார்; தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவன் எப்படியெல்லாம் தன்னை வழிநடத்தினார் என்பதை இப்பொழுது அவரால் உணர முடிகிறது.
யாக்கோபு எகிப்திற்கு வந்து பதினேழு வருடங்கள் ஆகிவிட்டன. அவர் மிகவும் முதிர்ந்தவராக, மரணப்படுக்கையில் இருக்கிறார்; இருந்தாலும் தன் முழு பலத்தையும் திரட்டி படுக்கையின் ஓரத்தில் எழுந்து உட்காருகிறார். அவர் யோசேப்பிடம், “சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூசிலே எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்தார்” என்று கூறுகிறார்.
யாக்கோபு இப்போது வெகுதூரம் முன்னேறி வந்துவிட்டார். அவருடைய விசுவாசத்தை நாம் இப்போது பார்க்கிறோம். அவர் இப்போது தேவனை முழுமையாக நம்புகிறார்;”தேவன் அங்கே எனக்குக் காட்சியளித்தார், தேவன் என்னை ஆசீர்வதித்தார்” என்று அவர் கூறுகிறார்.
இப்போது யாக்கோபின் விசுவாசத்தை — உங்களால் பார்க்க முடிகிறதா??
ஆதியாகமம் 48:4
‘4நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார். ‘
…………………….

யாக்கோபு குறிப்பிடும் தேவனுடைய வாக்குறுதியை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; இது பழைய ஏற்பாடு முதல் புதிய ஏற்பாடு வரை தொடர்ந்து வருகிறது. இந்த வாக்குறுதியை விசுவாசத்தின் தந்தைகளான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு இவர்களின் வம்சாவளிக்கு தேவன் கொடுத்தார். இந்த உடன்படிக்கையில் (Covenant) மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கின்றன: (முதலாவதாக) ஒரு தேசம், (2) ஒரு நிலம், (3) ஆசீர்வாதம்.
ஆனால், இந்த இடத்தில் யாக்கோபுக்கு மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் இவைதான்:
“நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னை அநேக ஜனக்கூட்டமாக்குவேன்.” என்பதும்
“உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை அதாவது கானான் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன்.” என்பதும் தான்.
இந்த உடன்படிக்கையின் மூன்றாவது பகுதி நமக்கு மிக முக்கியமானது: “உனக்குள் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தேவன் செய்த இந்த உடன்படிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) வாக்குறுதிகள் நிறைவேறியிருப்பதால்தான், நீங்களும் நானும் இப்போது பரிசுத்த வேதத்தை கையில் ஏந்தி இருக்கிறோம். ஆனால், இன்னும் ஒரு பங்கு (1/3) நிறைவேறாமல் இருக்கிறது. யூதர்களுக்கு இன்னும் இஸ்ரவேல் தேசம் (முழுமையாக) கிடைக்கவில்லை. ஆம், அவர்கள் அதன் ஒரு சிறிய எல்லையைத்தான் இப்போது வைத்திருக்கிறார்கள்;
தேவனுடைய கரத்திலிருந்து அவர்கள் அந்த தேசத்தைப் பெறும்போது, அங்கே அவர்கள் சமாதானத்துடன் வாழ்வார்கள். ஒவ்வொரு மனுஷனும் தன் திராட்சைச் செடியின் கீழும், தன் அத்திமரத்தின் கீழும் குடியிருப்பான். அவர்கள் சொத்துக்களை வைத்திருப்பார்கள், ஆனால் வரிகள் (Taxes) செலுத்த வேண்டியிருக்காது. இது கேட்பதற்கு “ஆயிரம் வருட அரசாட்சி” (Millennium) போலத் தெரிகிறது அல்லவா? ஆம், அது அப்படித்தான் இருக்கும்.
ஆதியாகமம் 48:5-6
‘5நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். 6இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள். ‘
………………………
யாக்கோபின் பேரப்பிள்ளைகளான யோசேப்பின் இந்த இரண்டு மகன்கள் ஒவ்வொருவரும் ஒரு கோத்திரமாக மாறுவார்கள். யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருக்க, இப்போது யோசேப்பின் இரண்டு மகன்களும் தனித்தனி கோத்திரங்களாக மாறினால், இஸ்ரவேலில் மொத்தம் பதிமூன்று கோத்திரங்கள் இருப்பதாக ஒருவர் முடிவுக்கு வரலாம். யோசேப்பு என்ற பெயரில் தனியாக ஒரு கோத்திரம் இருக்கவில்லை; ஆனால் எப்பிராயீம் மற்றும் மனாசே ஆகிய பெயர்களில் இரண்டு கோத்திரங்கள் இருந்தன. யாருடைய கணக்கின்படியும் இது பதிமூன்று என்றுதான் வரும்.
இருந்தபோதிலும், வேதாகமம் பன்னிரண்டு கோத்திரங்கள் என்றுதான் கணக்கிடுகிறது. ஏனென்றால், லேவி கோத்திரம், நிலப்பகிர்வில், ஒரு தனி கோத்திரமாக எண்ணப்படவில்லை. அவர்கள் ஆசாரியக் கோத்திரமாக மாறினார்கள்; அவர்கள் மற்ற கோத்திரங்களுக்கு இடையே ஆசாரியர்களாகச் சிதறி வாழ்ந்தார்கள்.. இது ஒரு விசித்திரமான கணக்கீட்டு முறையாகத் தோன்றலாம், ஆனால் தேவனுடைய வார்த்தை அவ்வாறுதான் கணக்கிடுகிறது. தேவன் அதை அப்படி விரும்பினார், அப்படியே செய்தார்.
இப்போது கவனியுங்கள், யாக்கோபின் எண்ணம் அவருக்கு மிகவும் பிரியமானவளும், யோசேப்பின் தாயுமான ராகேலை நோக்கித் திரும்புகிறது.
ஆதியாகமம் 48:7
‘7நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான். ‘
…………………..
யாக்கோபு பெத்லகேமை நினைக்கும் பொழுது தனது அன்பிற்கும் அழகிற்கும் உரிய ராகேலின் மரணத்தைப் பற்றித்தான் நினைக்கிறார். இதோ, அவர் தனது மரணப்படுக்கையில் இருக்கிறார்; அவர் ராகேலை அடக்கம் செய்த அந்த இடத்திற்கு அவருடைய எண்ணங்கள் பின்னோக்கிச் செல்கின்றன. அதுதான் அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இருதயத்தின் வேதனையாக இருந்தது.
ஆதியாகமம் 48:8-9
‘8இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான். 9யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். ‘
…………………………
ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகிய இருவருக்குமே வயது முதிர்ந்த காலத்தில் கண் பார்வை மங்கியதைக் கவனித்தீர்களா? அந்தப் பகுதியில் அடிக்கும் கடும் வெயில் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் கண் நோய்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்கள் முற்றிலும் பார்வையற்றவர்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் அவர்களால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அதேபோலத்தான் இங்கும், யாக்கோபு யோசேப்பின் பிள்ளைகளை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதியாகமம் 48:10
’10முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான். ‘
……………………

ஒருவேளை, அந்த வாலிபர்கள் தங்கள் தாத்தா காட்டிய அந்த அதிகமான பாசத்தைக் கண்டு சற்றே வெட்கப்பட்டு இருக்கலாம்”
ஆதியாகமம் 48:11-12
’11இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான். 12அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். ‘
……………………..

தாத்தா தன் பாசத்தை அவர்கள் மேல் பொழிந்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும் அவரிடமிருந்து சற்றே விலகிச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது.

ஆதியாகமம் 48:13

’13பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான். ‘
…………………………
அந்தக் கால வழக்கப்படி, ஒரு தந்தை ஆசீர்வதிக்கும்போது தனது வலது கையை யாருடைய தலை மேல் வைக்கிறாரோ, அவரே அந்த வம்சத்தின் தலைமைத்துவத்தையும் அதிகப்படியான ஆசீர்வாதத்தையும் பெறுவார்.
யோசேப்பு இதைக் கருத்தில் கொண்டு, தனது மூத்த மகனாகிய மனாசேயை யாக்கோபின் வலது கைக்கு நேராகவும், இளைய மகனாகிய எப்பிராயீமை இடது கைக்கு நேராகவும் நிறுத்துகிறார். ஆனால், இங்கேதான் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் நடக்கிறது! கவனியுங்கள் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 48:14
’14அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலது கையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். ‘
………………………
மனாசேயை விட எப்பிராயீமே தலைவனாகப் போகிறார். பின்நாட்களில் வனாந்தரப் பயணத்தின்போது, ‘எண்ணாகம’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, மனாசே கோத்திரத்தினர் எப்பிராயீம் கோத்திரத்தின் கொடியின் கீழேயே அணிவகுத்துச் சென்றதைக் பார்ப்போம். சொல்லப்போனால், புகழ்பெற்ற யோசுவா எப்பிராயீம் கோத்திரத்திலிருந்துதான் வந்தார்; இன்னும் பல சிறந்த மனிதர்கள் இந்தக் கோத்திரத்தில் தோன்றினர்கள்.
இங்கே என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? யாக்கோபுக்குக் கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றாலும், யோசேப்பு என்ன செய்கிறார் என்பதை அவரால் உணர முடிந்தது. மூத்த மகனை (மனாசே) யாக்கோபின் வலது கைக்கும், இளைய மகனை (எப்பிராயீம்) இடது கைக்கும் நேராக யோசேப்பு நகர்த்திக் கொண்டிருந்தார். அப்போது முதியவரான யாக்கோபு என்ன செய்தார் தெரியுமா? அவர் அப்படியே தன் கைகளை மாற்றிக்கொண்டார். அவர் தனது கைகளைக் குறுக்காக வைத்து (Crossed hands), தனது வலது கையை இளைய மகனின் தலை மேல் வைத்தார்.
அவர்கள் அவருக்கு மிகவும் பிடித்த மகனான யோசேப்பின் பிள்ளைகள். அவர் தெரிந்தே இளையவனுக்கு அந்த முதன்மை ஆசீர்வாதத்தை கொடுக்கிறார். இதற்கு ஒரு காரணம், ஒருவேளை யாக்கோபும் ஒரு இளைய மகனாக இருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றதினால் இருக்கலாம்.
இது வேதாகமம் முழுவதும் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான கொள்கை ஆகும். உதாரணமாக, தாவீதைத் தேர்ந்தெடுத்தபோது, அவர் ஈசாயின் மகன்களிலேயே மிக இளையவர். தேவன் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்தார்? தேவன் நமக்காக ஒரு பெரிய ஆன்மீக உண்மையை இங்கே விளக்குகிறார். தேவன் தலைச்சன் உரிமை (Primogeniture) என்ற இயற்கை பிறப்புரிமையை அங்கீகரிப்பதில்லை. அங்கே ஒரு மறுபிறப்பு (New birth) இருக்க வேண்டும். தேவன் ஒரு மனிதனை அவனது இயல்பான திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை.
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேவனால் ஒருவருடைய திறமையைப் பயன்படுத்த முடியும், ஆனால் அது அவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்! ஒரு எழுப்புதலைக் கொண்டுவருவதற்குத் திறமை மட்டுமே போதுமானதாக இருந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் இருக்கும் தேசத்தில் எழுப்புதல் வந்திருக்கும். தேவன் ஒருவரைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் அவரிடம் முழுமையாகத் சரணடைய வேண்டும்.
முதியவரான யாக்கோபு, தனது பேரப்பிள்ளைகளின் தலைகள் மீது கைகளை வைக்கும்போது, இளையவனுக்கு முன்னுரிமை கிடைக்கும்படி தனது கைகளைக் குறுக்காக வைத்தார்.
ஆதியாகமம் 48:15
’15அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், ‘
……………………….
கவனியுங்கள்.
நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்து வந்த தேவன்.” என்று சொல்லும் பொழுது யாக்கோபு தனது ஆன்மீக வாழ்க்கையின் உன்னத சிகரத்தை எட்டுகிறார் என்று கூற முடியும்..

ஆதியாகமம் 48:16

’16எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான். ‘
………………………..
ஆம், ஒரு அற்புதமான மீட்பரைத் தவிர, தற்பெருமை பேச அவரிடம் வேறொன்றும் இல்லை. அவர் சொன்னபடியே, அவர்கள் “பூமியின் நடுவில் ஒரு பெருங்கூட்டமாகப் பெருகினார்கள்.

ஆதியாகமம் 48:17-18 வசனங்களில் நாம் பார்ப்பது போல

18என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின் மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான். ‘
……………………….

ஆனால் யாக்கோபின் எதிர்வினையை இப்போது கவனியுங்கள்.
ஆதியாகமம் 48:19

’19அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். ‘
…………………………..

யோசேப்பு இதை ஏற்றுக்கொள்வதே நல்லது, ஏனென்றால் அவரும் கூட மூத்தவர் கிடையாது. அவர் இளையவர்களில் ஒருவராக இருந்தபோதிலும், அவருடைய மகன்களுக்கே இந்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது.
ஆதியாகமம் 48:20-21
’20இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான். 21பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும், ‘
………………………
இப்பொழுது யாக்கோபின் விசுவாசத்தை கவனியுங்கள்.
ஆதியாகமம் 48:22
’22உன் சகோதரருக்கு கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.’
……………………
அதாவது, யோசேப்பு தனது இரண்டு மகன்கள் மூலமாக, மற்ற சகோதரர்களைக் காட்டிலும் பெரிய அளவிலான நிலத்தைப் பெற்றார்.
(யோவான் 4:5-ல் பார்ப்பது போல. இது சீகார் (Sychar) ஊருக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பகுதியாகும்; இங்கேதான் யோசேப்பு அடக்கம் செய்யப்பட்டார். யோசேப்பிடமிருந்து இரண்டு கோத்திரங்கள் உருவானதால், அவர்களுக்கு அதிக நிலப்பரப்பு தேவைப்பட்டது; அதை ஈடுகட்டவே இந்த நிலம் வழங்கப்பட்டது. முதலில் யாக்கோபு இந்த நிலத்தை எமோரியர்களிடமிருந்து வாங்கினார், பின்னர் அவர்கள் அதை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டனர். அதற்குப் பதிலடியாக, யாக்கோபு மீண்டும் தனது பலத்தைப் பயன்படுத்தி அந்த நிலத்தை மீட்டெடுத்தார்.
தொடர்ந்து 49 ஆம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களை பார்ப்போம்.
முதியவரான யாக்கோபின் மரணப்படுக்கைக் காட்சியாகும். உண்மையில், முந்தைய அதிகாரத்திலேயே அவர் தனது பலத்தைத் திரட்டி, படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து யோசேப்பின் மகன்களை ஆசீர்வதித்ததைப் பார்த்தோம்.
இப்போது அவரைச் சுற்றி அவருடைய பன்னிரண்டு மகன்களும் நிற்கிறார்கள். அவர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரியாவிடை செய்தியை வைத்திருக்கிறார். அவர் மூத்த மகனில் தொடங்கி வரிசையாக ஒவ்வொருவருக்கும் கூறுகிறார். பொதுவாக ஒரு மனிதன் தனது மரணப்படுக்கையில் எதைக் கூறினாலும் அது முக்கியமானது; ஏனெனில் ஒரு மனிதன் எப்போதாவது உண்மையைச் சொல்கிறான் என்றால், அது அவன் மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான். இந்த மரணப்படுக்கை செய்தி மிகவும் வியக்கத்தக்கது, ஏனெனில் இது ஒரு தீர்க்கதரிசனமாகும். யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களும் கோத்திரங்களாக மாறும்போது அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை இது சொல்கிறது. அன்று தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டவை, இன்று பெரும்பாலும் வரலாற்று உண்மைகளாகிவிட்டன.
யாக்கோபின் வாழ்க்கையில் விசுவாசத்திற்கான மற்றொரு ஆதாரத்தைக் காண இதுவே நமக்குக் கடைசி வாய்ப்பு. இஸ்ரவேல் தேசத்தில் பன்னிரண்டு கோத்திரங்களாக மாறி, கானான் தேசத்தில் குடியேறப்போகும் தனது பிள்ளைகளிடம் அவர் பேசுகிறார். என்ன ஒரு விசுவாசம்! அவர் இதை பேசும்போது கானான் தேசம் கானானியர்களின் பிடியில் இருந்தது என்பதையும், யாக்கோபின் குடும்பம் எகிப்தில் மிகவும் வசதியான நிலையில் இருந்தது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆதியாகமம் 49:1
‘1யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். ‘
…………………….
பரிசுத்த வேதத்தில் சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதை நாம் காணலாம். அதில் ஒன்றுதான் இந்த ‘கடைசி நாட்களில்’ என்ற வார்த்தை.
இஸ்ரவேல் தேசத்தின் ‘கடைசி நாட்களும்’, திருச்சபையின் ‘கடைசி நாட்களும்’ வெவ்வேறானவை. மீண்டும் கூறுகிறேன். இஸ்ரவேல் தேசத்தின் ‘கடைசி நாட்களும்’, திருச்சபையின் ‘கடைசி நாட்களும்’ வெவ்வேறானவை. இவை இரண்டிற்கும் இடையே உள்ள காலமுறை மாற்றத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இங்கே அவர் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நாட்களைப் பற்றியும், அவருடைய குமாரர்கள் மூலம் உருவாகப்போகும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.”
இந்தக் கோத்திரங்களைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு ஆச்சரியமாக நிறைவேறியிருக்கின்றன இன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிய சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன என்று பலர் பேசுகிறார்கள், அது உண்மைதான். ஒட்டுமொத்த தேசத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு கோத்திரத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியுள்ளன., இது உண்மையிலேயே ஆச்சரியமானது.!
நமக்கு முன்பாக இருக்கும் இந்த அதிகாரத்தில், ‘கடைசி நாட்களில்’ ஒவ்வொரு கோத்திரத்திற்கும் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைக் பார்க்கிக்றோம். அவற்றில் சில ஏற்கனவே நிறைவேறிவிட்டன, ஆனால் பெரும்பாலானவை இனிமேல்தான் முழுமையாக நிறைவேற வேண்டியதிருக்கிறது. நான் இதில் முக்கியமானவற்றை மட்டுமே விளக்கப் போகிறேன். நீங்கள் இன்னும் விரிவாகப் படிக்க விரும்பினால், டேவிஸ் என்பவர் எழுதிய ‘Paradise to Prison’ மற்றும் மோரிஸ் என்பவர் எழுதிய ‘The Genesis Record’ ஆகிய புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்.
ஆதியாகமம் 49:2
‘2யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். ‘
………………………..
இதோ, முதியவரான யாக்கோபு இப்போது படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். எபிரெயர் 11:21-ல் நாம் காண்பது போல, அவர் தனது கோலின் (staff) மேல் சாய்ந்திருந்தார்.
உண்மையைச் சொல்லப்போனால், பழைய யாக்கோபு தனது வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தவர், அவர் தொடர்ந்து ஓடவே விரும்பினார். நாம் இன்னும் ஓட வேண்டும் என்று நினைக்கும் போது, மரணம் மிக வசதியற்ற நேரத்தில் வந்துவிடுகிறது.
அவருக்குத் தொடர்ந்து செல்ல ஆசை இருந்தது, ஆனால் அவரால் முடியவில்லை. பல வழிகளில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மனிதராக இருந்தார்.
ஆதியாகமம் 49:3-4
‘3ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். 4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. ‘
………………………….
விசுவாசத் தலைவர்கள் (patriarchs), இன்று நாம் அதிகம் பேசுகிற ‘பரம்பரைத் தன்மை’ (heredity) என்ற விஷயத்தை அன்றே நன்கு அறிந்திருந்தார்கள். ‘தந்தையைப் போல மகன்’ என்பது போல, யாக்கோபு தன் மகன் ரூபன் தன்னைப் போலவே இருப்பதை உணர்கிறார்.
‘தண்ணீரைப்போல நிலையற்றவன்’ என்ற வார்த்தை யாக்கோபின் இளமைக் காலத்திற்குப் பொருந்தும்; அதுவே அவருடைய மூத்த மகனுக்கும் உண்மையாக இருந்தது. ‘நீ மேன்மை அடைய மாட்டாய்’ (Thou shalt not excel) என்று யாக்கோபு கூறுகிறார். ரூபன் ஒருபோதும் மேன்மையடையவில்லை.
அவன் சில இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் (red and white ribbons) பிடித்திருக்கலாம், ஆனால் அவனால் ஒருபோதும் முதலிடத்திற்கு வர முடியவில்லை.”
இன்றும்கூட இப்படிப்பட்ட மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குக் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்து விடுகிறார்கள், எதிலும் சிறந்து விளங்க (excel) விரும்புவதில்லை. ஒரு அருமையான போதகர் ஒருவர் இருந்தார். அவர் நினைத்திருந்தால் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராக உருவாகியிருக்க முடியும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை. அவர் இரண்டு சிறிய துண்டுப் பிரசுரங்களை (pamphlets) மட்டுமே எழுதினார்.
அவர் இரண்டாம் இடத்தைப் (red ribbon) பிடித்ததிலேயே திருப்தி அடைந்துவிட்டார், ஒருபோதும் முதலிடத்திற்கான (blue ribbon) முயற்சியை எடுக்கவில்லை.”
ரூபனைப் பற்றி யாக்கோபு இங்கே குறிப்பிடும் கதை ஒரு அருவருப்பான (sordid) கதை
நாம் மனிதனுடைய பாவங்களிலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புவதில்லை. உண்மையில், அவர் நமக்கு இந்த அறிவுரையைத் தருகிறார்:
பிலிப்பியர் 4:8. வாசிக்கிறேன்

‘8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். ‘
…………………………….
இருந்தாலும், மனித இனத்தைப் பற்றிய ஒரு துல்லியமான சித்திரத்தை நமக்குக் காட்டுவதற்காகவே தேவன் மனிதர்களின் பாவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
அடுத்த இரண்டு பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்த்து வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் லேயாளின் மகன்கள், அதாவது ஒரு தாய் வயிற்றுப் பிறந்த சகோதரர்கள்.”
ஆதியாகமம் 49:5
‘5சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். ‘
………………………
“சீகேம் ஊரிலுள்ள சாலேமுக்கு அவர்கள் சென்று, அந்த ஊரில் இருந்த அனைவரையும் எப்படிக் கொன்று குவித்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். ஒருவன் செய்த குற்றத்திற்காக, அதாவது தங்கள் சகோதரியைச் சீரழித்ததற்காக, அந்த முழு ஊரையே அவர்கள் பழிவாங்கினார்கள்!
நிச்சயமாக அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது; இதையே யாக்கோபு இப்போது அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
ஆதியாகமம் 49:6-7
‘6என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. 7உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன். ‘
…………………………..
லேவியின் வாழ்க்கையில், தேவனுடைய அற்புதமான கிருபையின் வெளிப்பாட்டை நாம் காண்கிறோம். அவர்கள் இஸ்ரவேல் எங்கும் சிதறடிக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் ‘ஆசாரியக் கோத்திரமாக’ (priestly tribe) மாற்றப்பட்டதால்தான் அப்படி நடந்தது. லேவி போன்ற ஒரு கொடூரமான மனிதனைத் தேர்ந்தெடுத்து, அவனை ஆசாரியக் கோத்திரத்தின் தலைவனாக மாற்றியது தேவனுடைய கிருபைதான்.
இன்று விசுவாசிகள் அனைவரும் ஆசாரியர்களே. அவர்களுக்குள் திருந்தின குடிகாரர்கள், திருந்தின விபச்சாரிகள், திருந்தின கொலைகாரர்கள் எனப் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி தேவனுடைய ராஜ்யத்தில் ஆசாரியர்களானார்கள்? நாம் அனைவரும் ஆனது போலவே – தேவனுடைய அந்த அற்புதமான கிருபையினால் மட்டுமே!
1 பேதுரு 1:18–19
’18உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், 19குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. ‘
………………….
தொடர்ந்து 1 பேதுரு 2:5-ல் அவர் இவ்வாறு கூறுகிறார்:
‘5ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். ‘
…………………
அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார்? கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களைப் பற்றித்தான் இன்றய விசுவாசிகளைப் பற்றிதான் அவர் பேசுகிறார்!”

இந்த அருமையான வேதப் பாடத்தின் முடிவில், யாக்கோபின் வாழ்வு நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான ஆன்மீக உண்மைகளைச் ஞாபகப்படுத்துகிறேன் கவனியுங்கள்:
1. ஆன்மீக முதிர்ச்சி என்பது ஒரு “நடைப்பயணம்”
யாக்கோபு தனது வாலிப காலத்தில் தந்திரசாலியாகவும், எதையும் தன் சுய பலத்தால் அடைய நினைப்பவராகவும் இருந்தார். ஆனால், அவரது முதிர்ந்த வயதில் அவர் தேவனை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஒரு “விசுவாச வீரராக” மாறினார். இது நமக்குச் சொல்லும் பாடம் என்னவென்றால், இரட்சிப்பு என்பது ஒரு நொடியில் நிகழ்ந்தாலும், ஆன்மீக வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு பயணம். நம்மிடம் உள்ள பழைய சுபாவங்கள் மறைந்து, கிறிஸ்துவின் புதிய சுபாவம் வளர நாம் தேவனுக்குக் காத்திருக்க வேண்டும்.

2. கிருபை நம் கடந்த காலத்தை மாற்றுகிறது
லேவி கோத்திரத்தைச் சபிக்கப்பட்ட நிலையில் இருந்து மாற்றி, அவர்களைத் தனது ஆசாரியக் கோத்திரமாகத் தேவன் உயர்தினார். இது தேவனுடைய அளவற்ற கிருபையைக் காட்டுகிறது. நம்முடைய கடந்த காலம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், கிறிஸ்துவின் இரத்தம் நம்மை மீட்டு, நம்மைத் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்த ஆசாரியர்களாக நிறுத்துகிறது.
3. தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்.
தேவன் மனிதர்களுடைய தகுதி, பிறப்புரிமை அல்லது உலகப் பிரகாரமான திறமைகளைப் பார்த்து ஆசீர்வதிப்பதில்லை. அவர் இருதயத்தைப் பார்க்கிறார். நம்மிடம் எவ்வளவு திறமை இருந்தாலும், அது தேவனிடம் முழுமையாகச் சரணடையும்போதுதான் ஆசீர்வாதமாக மாறுகிறது.
4. வாக்குறுதிகளில் உண்மையுள்ள தேவன்
ஆபிரகாமுக்குச் செய்த உடன்படிக்கையை யாக்கோபின் காலத்தில் அவர் நினைவு கூர்ந்தார். இன்றும் அந்த வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன.
முடிவுரை: > யாக்கோபு தனது கோலின் முனையில் சாய்ந்து கொண்டு, தேவனைத் தொழுதுகொண்டே தனது பயணத்தை நிறைவு செய்தார். நாமும் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நம் பலவீனத்தின் மத்தியிலும் தேவன் நம்மைப் பொறுமையுடன் நடத்துகிறார் என்பதை உணர்ந்து, அவரில் வளருவோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top