ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 46:29-47:31
நிகழ்ச்சி எண்: 0063
வாசியுங்கள்
அன்பானவர்களே கடந்த நிகழ்ச்சியில் நாம் ஆதியாகமம் 46 ஆம் அதிகாரம் 28 வது வசனம் வரைக்கும் கற்றுக் கொண்டோம்.
இன்று ஆதியாகமம் 46 29 ஆம் வசனம் முதல் பார்ப்போம்.
வாசிக்கிறேன் ஆதியாகமம் 46:29
’29யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான். ‘
……………………..
யோசேப்பு தன் தந்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார். அவர் நெடுநேரம் அங்கேயே அழுதுகொண்டிருந்ததாக வேதம் சொல்கிறது. அந்த “வெகுநேரம் ” என்பது எவ்வளவு காலம் என்று நமக்குத் தெரியாது, அங்கு வெளிப்பட்ட உணர்ச்சிகள் மிகவும் உண்மையானவை. ஆம் அது எவ்வளவு அற்புதமான ஒரு சந்திப்பு!
ஆதியாகமம் 46:30
’30அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான். ‘
…………………….
இது முதியவரான யாக்கோபுக்கு எவ்வளவு பெரிய ஒரு சந்தோஷம்! இல்லையா?? உண்மையைச் சொன்னால் இவர் மரணத்திற்கு அருகில் இருந்தார். அவர் மிகவும் சிரமப்பட்டுத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பார், ஆனால் தேவன் அவரைத் தாங்கினார். அவர் இன்னும் சில ஆண்டுகள் எகிப்து தேசத்தில் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டதையும் நாம் பார்க்கிறோம்.
இப்போது யாக்கோபு “விசுவாசத்தால் வாழும் தேவனுடைய பிள்ளை” என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான், அவர் ‘இஸ்ரவேல்’ என்று இப்பொழுது அழைக்கப்படுகிறார்.
ஆதியாகமம் 46:31-34
’31பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். 32அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன். 33பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், 34நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.’
………………….
வேதத்தில் மேய்ப்பர்களைப் பற்றி இவ்வளவு அதிகமாகக் கூறப்பட்டிருப்பது மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை வளர்க்கும் மேய்ப்பர்களாக இருந்தார்கள்; இன்றும் இஸ்ரவேல் தேசத்தில் அப்படியே இருக்கிறார்கள். நம்முடைய ஆண்டவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு உருவகம் தான் “மேய்ப்பன்”. அவர் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுத்த நல்ல மேய்ப்பன். இன்று ஆடுகளைப் பாதுகாத்து வழிநடத்தும் பெரிய மேய்ப்பன். அவர் இனிமேல் வரப்போகும் பிரதான மேய்ப்பன். அவரே தன்னை மேய்ப்பன் என்று அழைத்துக் கொள்கிறார்.
ஆனால் அருமையானவர்களே, இந்த உலகம் அவரை ஒரு அருவருப்பாகவே பார்க்கிறது. இன்று இயேசு கிறிஸ்து உலகத்தால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் அதே நேரம் “லிபரலிசம்” அல்லது (தாராளமயக் கொள்கையானது இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு போலி இயேசுவை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் பரிசுத்த வேதத்தில் உள்ள இயேசுவைப் போல் அல்லாமல், ஒரு சிலையைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த நபர் கன்னி மரியாளிடம் பிறந்தவர் அல்ல; அவர் அற்புதங்களைச் செய்ததில்லை; உலகத்தின் பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரிக்கவில்லை; அவர் உடலோடு உயிர்த்தெழவும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயேசு வாழவே இல்லை. அப்படி ஒருவரைப் பற்றி எந்த வரலாற்றுப் பதிவும் கிடையாது.
வரலாற்றுப் பதிவுகளில் உள்ள ஒரே இயேசு: கன்னி மரியாளிடம் பிறந்தவர், அற்புதங்களைச் செய்தவர், உலகத்தின் பாவங்களுக்காக மரித்தவர் மற்றும் கல்லறையிலிருந்து உடலோடு உயிர்த்தெழுந்தவர். இந்த மேய்ப்பனைத்தான் உலகத்திற்குப் பிடிப்பதில்லை. அவர் இன்றும் உலகிற்கு அருவருப்பாகவே இருக்கிறார்.
எகிப்தியர்களுக்கு மேய்ப்பர்கள் என்றாலே அருவருப்பாக இருந்தது. எனவே, யோசேப்பு தன் சகோதரர்களிடம், “பார்வோனிடம் நாம் மேய்ப்பர்கள் என்றும், கால்நடைகளை வளர்ப்பவர்கள் என்றும் சொல்லுங்கள்” என்று கூறுகிறார். உண்மையில், அவர்களிடம் ஆடுகளும் மாடுகளும் இருந்தன. பின்னர், பார்வோன் அவர்களுக்குக் ‘கோசேன்’ நாட்டை கொடுப்பதையும், தன் ஆடுகளைப் பராமரிக்க அவர்களைக் கேட்டுக்கொள்வதையும் நாம் பார்க்கிறோம். இதன் மூலம், இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தின் மேய்ப்பர்களாக மாறினார்கள்.
இப்போது யாக்கோபின் குடும்பத்தினர் கோசேன் நாட்டில் வசிப்பதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எகிப்து நீண்ட காலத்திற்கு வாழப் போகும் ஒரு இடமாக இருக்கப் போகிறது. யோசேப்பின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக மாறுவார்கள்; ஆனாலும் அந்த காலம் முழுவதும் தேவன் அவர்களுடனேயே இருப்பார். அங்கே அவர்கள் ஒரு பெரிய தேசமாக உருவெடுப்பார்கள், பின்னர் தேவன் அவர்களை மோசேயின் தலைமையில் அங்கிருந்து வெளியே அழைத்து வருவார்.
தேவன் யோசேப்புக்கு நேரடியாகத் தரிசனமாகிப் பேசினார் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை, ஆனாலும் யோசேப்பின் வாழ்க்கையில் தேவனுடைய பராமரிப்பை (Providence) நாம் தெளிவாகக் காண முடிகிறது. யாக்கோபின் முழுக் குடும்பமும் எகிப்து தேசத்தில் தப்பிப்பிழைப்பதற்காக, யோசேப்பு முன்னதாகவே வந்து வழியை ஆயத்தம் செய்ய வேண்டியிருந்தது என்பது இப்போது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.
தொடர்ந்து 47 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
யாக்கோபும் அவரது குடும்பத்தினரும் எகிப்து தேசத்திற்கு வந்து சேர்ந்ததை நாம் பார்த்தோம். யோசேப்பு ஒரு சாதுர்யமான திட்டத்தின்படி அவர்களை கோசேன் நாட்டிற்கு அழைத்து வந்தார். அந்த காலத்தில் அதுதான் மிகவும் செழிப்பான நிலப்பகுதியாக இருந்தது; ஆனால், இப்போது ஒரு பெரிய பஞ்சம் நிலவுவதால், நிலத்தின் உரிமையாளர்களுக்கு எந்த நிலமும் பெரிய மதிப்பைத் தருவதாக இல்லை.
யாக்கோபின் வாழ்க்கையைக் குறித்து இதுவரை நாம் பார்த்ததிலேயே இதுதான் மிகச் சிறந்த பகுதியாக அமையப்போகிறது. அவர் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வரை, அவர் ஒரு விசுவாசமுள்ள மனிதராக மாறியதை நம்மால் பார்க்க முடிவதில்லை. மற்ற எல்லா அதிகாரங்களையும் விட, இந்த அதிகாரம் அதை நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பஞ்சம் முடிவுக்கு வரும் நேரத்தில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகிறது. உலக மக்கள் அனைவரும் இதில் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேதத்தின் சரித்திரத்திற்கு முக்கிய இடங்கள் என்பதால் கானான் மற்றும் எகிப்து தேசங்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆதியாகமம் 47:1
‘1யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான் தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி; ‘
…………………..
யோசேப்பு தன் தந்தையையும் சகோதரர்களையும் எகிப்தின் பார்வோனுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப் போகிறார். அவர்களுக்கு ஒரு இடத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, அவர் அவர்களைக் கோசேன் நாட்டில் தங்க வைத்தார். இதில் உள்ள ஒரு சாதுர்யமான திட்டத்தை (Strategy) உங்களால் பார்க்கமுடியும்.
அவர்கள் ஏற்கனவே அங்கே தங்கியிருந்தால், அந்த நிலத்தையே அவர்களுக்கு வழங்க பார்வோன் எளிதாகச் சம்மதிப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் ஏற்கனவே அங்கே குடிபுகுந்து, தங்கள் உடைமைகளை இறக்கி வைத்திருப்பார்கள் என்பதால் அந்த இடத்தை அப்படியே அவர்களுக்குக் கொடுத்துவிடுவது பார்வோனுக்கு எளிதாக இருக்கும்.
ஆதியாகமம் 47:2ஆம் -3ஆம் வசனங்களைப் பாருங்கள்.
‘2தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். 3பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி, ‘
……………………
அந்தக் காலத்தில் ஆடு மேய்ப்பவர்களுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு இருக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம். எகிப்தியர்களுக்கு மேய்ப்பர்களைப் பிடிக்காது, அதேபோல் ஆடு மேய்க்கும் தொழிலையும் அவர்கள் விரும்பவில்லை.
இது இஸ்ரவேல் புத்திரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது; அதாவது, எகிப்தியர்கள் செய்ய விரும்பாத ஒரு தொழிலைச் செய்து, அங்கேயே தங்குவதற்கு அவர்களுக்கு ஒரு வழி பிறந்தது.
ஆதியாகமம் 47:4-6 வரை வாசிக்கிறேன்.
‘4கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். 5அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. 6எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான். ‘
……………………….
எகிப்தியர்களிடையே ஆடு மேய்க்கும் தொழில் பிரபலமாக இல்லாததால், பார்வோன் தனது கால்நடைகளைப் பராமரிக்க யாராவது ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார்.
இப்போது யோசேப்பு தனது சொந்தத் தந்தையை பார்வோனுக்கு அறிமுகப்படுத்துகிறார். இது உண்மையிலேயே மிகவும் வியக்கத்தக்க ஒரு நிகழ்வு. நாம் யாக்கோபைப் பற்றிப் படிக்கும்போது, இதுவரை பார்த்ததிலேயே மிகச்சிறந்த மற்றும் கண்ணியமான நிலையில் அவர் இப்போது இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஆதியாகமம் 47:7
‘7பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். ‘
……………………..
யாக்கோபு இப்போது பார்வோனை ஆசீர்வதிப்பதைக் கவனியுங்கள். அவர் தனது பெயருக்கு (இஸ்ரவேல்) ஏற்றவாறு வாழத் தொடங்கியிருக்கிறார். அவர் இப்போது தேவனுக்கான ஒரு சாட்சியாக நிற்கிறார். பொதுவாக, சிறியவர் பெரியவரிடம் ஆசி பெறுவதே முறை; ஆனால் இங்கே, யாக்கோபு தேவனுடைய சாட்சியாக நின்று பார்வோனை ஆசீர்வதிக்கிறார்.
ஆதியாகமம் 47:8
‘8பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான். ‘
………………….
பார்வோனின் முன்னிலையில் யாக்கோபு பழைய சுபாவத்துடன் இருந்திருந்தால், அவர் பேசிய விதம் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். “பார்வோனே, எனக்கு 130 வயதாகிறது; என் வாழ்க்கையில் நான் சாதித்தவை ஏராளம். இளமையில் என் சகோதரனை எப்படித் தந்திரமாக வென்றேன், என் மாமனாரை மிஞ்சி எப்படி பெரும் செல்வந்தன் ஆனேன் என்று பாருங்கள்” என்று தற்பெருமை பேசியிருக்கலாம். “எனக்கு பன்னிரண்டு மகன்கள் இருக்கிறார்கள்” என்று தன் குடும்பத்தைப் பற்றியும் அவர் பெருமையாகப் பேசியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், இப்போது யாக்கோபு முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். இப்போது அவர் என்ன சொல்லுகிறார் என்றுகவனியுங்கள்:
ஆதியாகமம் 47:9
‘9அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான். ‘
……………………….
முதலாவதாக, யாக்கோபு எகிப்து தேசத்திற்கு வந்தபோது அவருக்கு 130 வயது என்பதை கவனியுங்கள்; அவர் இறக்கும் போது அவருக்கு 147 வயதாக இருக்கும். எனவே, அவர் எகிப்தில் 17 ஆண்டுகளைக் கழிப்பார். அவர் எகிப்திற்கு வந்தபோது மரணத்தின் விளிம்பில் இருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்—அதாவது ஒரு கால் கல்லறையிலும், மறு கால் வாழைப்பழத் தோலிலும் – மிகவும் தள்ளாடிய நிலையில் – இருந்தது போன்ற ஒரு நிலை. ஆனால், யோசேப்பு உயிரோடு இருப்பதைக் கண்ட மகிழ்ச்சியும், அவரோடு எகிப்தில் இருந்ததும் அவரது ஆயுளை 17 ஆண்டுகள் நீட்டித்தன.
பார்வோனைச் சந்திக்கும் இந்தத் தருணம் அந்த முதியவர் (யாக்கோபு) தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேச ஒரு சிறந்த வாய்ப்புதான். ஆனால், யாக்கோபு எவ்வளவு மாறியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்! தனக்கு 130 வயதாகிறது என்றும், தனது வாழ்க்கையில் பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். “என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் தீமையுமானவைகள்” என்று சொல்கிறார்.
தன் முதிய தந்தையை ஏமாற்றிய தந்திரத்தைப் பற்றி அவர் இங்கே பெருமையடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தான் தன் முன்னோர்களுக்கு நிகரானவர் அல்ல என்றே கூறுகிறார். “என் பிதாக்கள் தங்கள் பரதேசிப் பிரயாணத்தில் வாழ்ந்த நாட்களுக்கு என் ஆயுசுநாட்கள் எட்டவில்லை” என்கிறார். இது பழைய யாக்கோபைப் போலத் தெரியவில்லை, அல்லவா? முற்றிலும் மாறிய ஒரு மனிதனாக தெரிகிறார்?அவர் தனது வாழ்க்கையைத் தேவனுடைய மகிமைக்கே அர்ப்பணிக்கிறார்; தான் எதோ பெரிய காரியங்களைச் சாதித்துவிட்டதாக அவர் தற்பெருமை பேசவே இல்லை.
ஆதியாகமம் 47:10
’10பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான். ‘
………………………
உண்மையைச் சொல்லப்போனால், யாக்கோபு அங்கே வந்து சேர்ந்ததையே நான் பெரிய விஷயமாக சொல்லலாம். தனக்குத்தானே பெருமை பேசிக்கொள்ள அவருக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் அதைப் பயன்படுத்தவில்லை. முற்காலமாக இருந்திருந்தால், “பார்வோன் ஒரு பெரிய மன்னராக இருக்கலாம், ஆனால் கானான் தேசத்தில் தானும் ஒரு பெரிய ஆளாகத்தான் இருந்தேன் என்பது அவருக்குத் தெரிய வேண்டாமா?” என்று நினைத்திருப்பார்.
ஆனால் யாக்கோபு இப்பொழுது தற்பெருமை பேசவில்லை—அவர் தன்னை ஒரு சாதாரணப் பாவியாகவும், கடவுளின் கிருபையால் இரட்சிக்கப்பட்டவராகவும் மட்டுமே கருதுகிறார்.
இன்று பலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதை நாம் அதிகம் கேட்கிறோம். சில நேரங்களில் நம்முடைய வட்டாரங்களிலேயே, சிலர் செய்த காரியங்களுக்காக அவர்களைப் புகழ்ந்து தள்ளுகிறோம். உண்மையைச் சொல்வதென்றால், நாம் அனைவருமே பாவிகள் தான். இத்தனை ஆண்டுகளாக நம்மிடம் அன்பாகவும், பொறுமையாகவும் இருந்த அந்த அற்புதமான இரட்சகரைப் (இயேசு) பற்றிப் பெருமைப்படுவதைத் தவிர, நம்மிடம் தற்பெருமை பேச எதுவுமே இல்லை. நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரே விஷயம் அவர் மட்டும்தான். அதே நேரம் , நம் முன்னோர்களை விட நாம் சிறந்தவர்கள் என்றும் நாம் சொல்லிவிட முடியாது.
ஆனால், இந்த இடத்தில் யாக்கோபு அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் இப்போது முற்றிலும் மாற்றமடைந்த ஒரு மனிதராக இருப்பதால், தன்னைத் தாழ்த்தி மிகவும் எளிமையான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார்.
ஆதியாகமம் 47:11
’11பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்திரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். ‘
……………………
ராம்சேஸ் நாடு என்பது கோசேன் நாடுதான்
ஆதியாகமம் 47:12-13
’12யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். 13பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று. ‘
………………………
இந்தக் கதையில் எகிப்தும் கானானும் மட்டுமே குறிப்பிடப்படுவதற்குக் காரணம், இந்த இரண்டு இடங்கள் மட்டுமே கதையோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. யாக்கோபு தன் குடும்பத்துடன் கானான் தேசத்திலேயே தங்கியிருந்தால், அவர்கள் அனைவரும் அழிந்து போயிருப்பார்கள். எகிப்து தேசத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன, ஆனால் அங்கேயும் இப்போது புதிதாகத் தானியம் விளையவில்லை.
எகிப்தின் விவசாயத்திற்கு நைல் நதி பொங்கி வழிவது மிகவும் அவசியம். ஆனால் அப்போது நைல் நதி பொங்கி வழியாததால், பஞ்சம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆதியாகமம் 47:14
’14யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். ‘
…………………..
இப்போது நாம் யோசேப்பு விமர்சிக்கப்படும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். மக்கள் பசியால் வாடியதைப் பயன்படுத்தி, அவர் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கிவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். அதாவது, அடமானத்தில் இருந்த நிலங்களை அவர் அபகரித்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், யோசேப்பு மீதான இந்த விமர்சனம் நியாயமற்றது என்றே சொல்லலாம்.
முதலாவதாக, அவர் பார்வோனின் ஒரு பிரதிநிதியாக மட்டுமே செயல்பட்டார். அவர் செய்த எதுவும் அவருக்காக அல்ல; தன்னைத் தானே செல்வந்தராக்கிக் கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் எந்த விதத்திலும் நேர்மையற்றவராக நடந்து கொள்ளவில்லை. இந்தப் பஞ்சத்தைப் பயன்படுத்தி அவர் தனிப்பட்ட முறையில் எந்த லாபமும் அடையவில்லை.
யோசேப்பு பார்வோனுக்காக நிலங்களை வாங்கினார், அதே சமயம் மக்களுக்குத் தேவையான உணவை வழங்கி அவர்கள் உயிர்வாழவும் உதவிசெய்தார். யோசேப்பு அந்தக்கால ‘தேவை மற்றும் விநியோகம்’ (Law of Supply and Demand) என்ற பொருளாதார விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டார் என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 47:15-20
’15எகிப்துதேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள். 16அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான். 17அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். 18அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. 19நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள். 20அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று. ‘
…………………….
அந்தப் பஞ்சம் ஒரு பயங்கரமான விஷயமாக இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆதியாகமம் 47:21
’21மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான். ‘
……………………
தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடங்களுக்கு அருகிலேயே இருப்பதற்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை நோக்கி வரத் தொடங்கினர். யோசேப்பு ஆரம்பத்திலேயே எகிப்து முழுவதும் இதற்கான மையங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது மக்கள் உணவைப் பெறுவதற்கு வசதியாக, அந்த உணவு மையங்களுக்கு அருகிலேயே அவர்களை அவர் கொண்டு வருகிறார்.
ஆதியாகமம் 47:23-24
’23பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள். 24விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான். ‘
…………………
அடுத்த ஆண்டோடு பஞ்சம் முடிவுக்கு வந்துவிடும் என்பதை யோசேப்பு அறிந்திருந்தார்; எனவே, மக்கள் தங்கள் நிலங்களில் தானியங்களை விதைக்கும்படி அவர் கூறுகிறார்.
ஆதியாகமம் 47:25-26
’25அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள். 26ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது. ‘
………………………
மோசேயின் காலம் வரை யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே நடந்து வந்திருக்கிறது;
ஆதியாகமம் 47:27-31
’27 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள். 28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருஷம். 29இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் பண்ணாதிருப்பாயாக. 30நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான். 31அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.’
……………………
யாக்கோபு தான் இறந்த பிறகு கானான் தேசத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்குப் பின்னால் சில காரணங்கள் இருந்ததாக நான் நினைக்கிறேன்.
முதலாவதாக, அவருக்கு இப்போது 147 வயதாகிறது. தான் எகிப்து தேசத்திலேயே இறந்துவிடுவோமோ என்ற அச்சம் அவருக்கு உண்டாகிறது; அது இப்போது அவருக்குத் தெளிவாகத் தெரிகிறது. இரண்டாவதாக, யோசேப்பு எகிப்தின் நிலங்கள் அனைத்தையும் பார்வோனுக்காக வாங்கிய விதம், தன் குடும்பத்தினர் எகிப்திலேயே வசதியாகத் தங்கிவிடுவார்களோ என்றும், மீண்டும் ஒருபோதும் கானான் தேசத்திற்குத் திரும்ப விரும்ப மாட்டார்களோ என்றும் அவரை நினைக்க வைக்கிறது. அவரது முதுமை, தான் விரைவில் இறந்துவிடுவோம் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தியது.
யாக்கோபுவின் இந்தக் கோரிக்கையை, கடவுள் தன் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் (Covenant) மீது அவர் வைத்திருந்த விசுவாசத்தின் அடையாளமாக நாம் பார்க்க வேண்டும். நாம் வேதாகமம் முழுவதையும் படிக்கும்போது இது பலமுறை வருவதால், இதை நாம் கவனிப்பது அவசியம். பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை என்பது பூமியைச் சார்ந்த ஒரு நம்பிக்கையாகும்.
ஆபிரகாம் கானான் தேசத்திலேயே உயிர்த்தெழுப்பப்படுவார் என்று நம்பினார், அதனால் அங்கேயே அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஈசாக்கும் அதையே நம்பினார். இப்போது யாக்கோபும் அதே விசுவாசத்தைத்தான் வெளிப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை என்பது, திருச்சபையின் நித்திய வாசஸ்தலமான புதிய எருசலேம் நகரத்திற்குள் நுழைவதற்கோ அல்லது ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவதற்கோ உரியது அல்ல.
பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை என்பது, இந்தப் பூமியில் அமையப்போகும் கிறிஸ்துவின் அரசாட்சியைப் பற்றியது. அது நடக்கும்போது, இஸ்ரவேல் மக்களின் பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறும்; அந்த அரசாட்சிக்காக இந்த மக்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அதன் முதல் ஆயிரம் ஆண்டுகள் ஒரு சோதனைக் காலமாக இருக்கும், அதன்பிறகு அந்த நித்திய அரசாட்சி என்றென்றும் தொடரும்.
இதன் காரணமாகவே யாக்கோபு எகிப்தில் அடக்கம் செய்யப்பட விரும்பவில்லை. கடவுள் தமக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மீது அவருக்கு விசுவாசமோ அல்லது நம்பிக்கையோ இல்லையென்றால், அவர் எங்கே அடக்கம் செய்யப்பட்டால், அவருக்கு என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?. எனவேதான் அவர் கானானில் அடக்கம் செய்யப்பட விரும்பினார்.
இன்றைய விசுவாசிகளுக்கு நாம் எங்கே அடக்கம் செய்யப்படுகிறோம் என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. ‘இரகசிய வருகையின்’ (Rapture) போது, நாம் எங்கிருந்தாலும் உயிர்த்தெழுப்பப்படுவோம்; நம்முடைய உடல்கள் நம் ஆத்துமாக்களோடு ஒன்றிணையும். அதாவது, அந்த வருகைக்கு முன்பே நாம் இறந்திருந்தால் இது நடக்கும். ஒருவேளை நாம் உயிரோடு இருந்தால், நாம் மறுரூபமாக்கப்பட்டு ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்க மேகங்கள் மேல் எடுத்துக்கொள்ளப்படுவோம்.
எனவே, நாம் எகிப்திலோ, கானானிலோ, இலங்கையிலோ, இந்தியாவிலோ எங்கே அடக்கம் செய்யப்பட்டாலும் கவலையில்லை. இந்த எல்லா இடங்களிலும் “கிறிஸ்துவுக்குள்” மரித்தவர்களும், உயிரோடிருப்பவர்களும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். நாம் விண்ணில் பாய்வதற்கு எந்த ஏவுதளத்திற்கும் போக வேண்டிய அவசியமில்லை. ஆம், நம்முடைய நம்பிக்கை என்பது ஒரு பரலோக நம்பிக்கை!
ஆனால், பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை என்பது பூமிக்குரிய நம்பிக்கை. யாக்கோபு தான் கானான் தேசத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புவது, உயிர்த்தெழுதலின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசத்திற்கு ஒரு சான்றாகும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் தான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோம் என்று அவர் நம்புகிறார். யாக்கோபு இப்போது முழுமையான விசுவாசம் கொண்ட ஒரு மனிதராக மாறி வருகிறார்.
அருமையானவர்களே, நாமும் ஒரு காலத்தில் யாக்கோபை போல நம்முடைய திறமையை குறித்து பெருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாம் இருப்பதும் நடப்பதும் தேவனுடைய கிருபை என்பதை மறந்து போகாமல் எப்பொழுதும் மன தாழ்மை உள்ளவர்களாக நடந்து கொள்வோம்.
கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் எல்லா இக்கட்டான நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டதை பார்க்கிறோம். நமது வாழ்க்கையிலும் நம் பொறுப்புகளிலும் தேவனை சார்ந்து நம் வழிகளில் எல்லாம் அவரை நினைத்து அநேகருக்கு ஆசீர்வாதமாய் கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
