ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 45:1-46:28
நிகழ்ச்சி எண்: 0062
வாசியுங்கள்
எங்களுக்கு மிகவும் அருமையான நேயர்களே,
இன்று நாம் ஆதியாகமம் 45 ஆம் அதிகாரம் முதல் வசனம் முதல் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
முந்தைய அதிகாரங்களின் சரித்திரம் இந்த அதிகாரத்திலும் தொடர்கிறது. யோசேப்பு தன் சகோதரர்களிடம் தன்னை வெளிப்படுத்தி, தான் யார் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.
ஆதியாகமம் 45:1
‘1அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. ‘
……………………
இப்பொழுது யோசிப்பு அந்த அறையில் இருந்த அத்தனை பேரையும் வெளியே போக முடியாது சொல்லுகிறார்.
ஆதியாகமம் 45:2
‘2அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். ‘
………………………
இந்த முறை யோசேப்பால் அந்த அறையை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அவர் மனமுடைந்து அழத் தொடங்குகிறார். யோசேப்பைத் தவிர வேறு யாருக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை. இப்போது யோசேப்பு தன் அடையாளத்தை அவர்களிடம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அவர் தன் சகோதரர்களை முழுமையாகச் சோதித்துவிட்டார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது சகோதரர்களாகிய யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தப்போகும் ஒரு நாள் வரும் என்பதை நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். அவர் முதல்முறை வந்தபோது, ‘அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (யோவான் 1:11).
உண்மையில், அவர்கள் அவரை சிலுவையில் அறைவதற்காக ஒப்புக்கொடுத்தார்கள். ஆனால், அவர் இரண்டாம் முறை வரும்போது, தம்முடைய மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவார். என்று சகரியா 13:6l (திரையில்) வாசிக்கிறோம். மேலும்
(சகரியா 13:1) ல்
‘அக்காலத்திலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் ஒரு ஊற்று திறக்கப்படும்’ ……..
என்றும் பார்க்கிறோம்.
அது கர்த்தராகிய இயேசுவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இடையிலான ஒரு குடும்ப நிகழ்வாக இருக்கும். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்திய அந்தச் சம்பவம், கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தப்போகும் அந்த நாள் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறு அடையாளத்தைக் காட்டுகிறது.
பார்வோனின் வீட்டிலுள்ளவர்களுக்கே அந்த அழுகுரல் கேட்கிறது. யோசேப்பின் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆதியாகமம் 45:3
‘3யோசேப்பு தன் சகோதரரைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். ‘
…………………
நமது மொழிபெயர்ப்பில் உள்ள கலக்கமுற்றிருந்ததினாலே’ (Troubled) என்ற வார்த்தை போதுமானதாக இல்லை. உண்மையில், யோசேப்பின் முன்னிலையில் அவரோடு இருந்தபோது அவர்கள் ‘திகிலடைந்து’ (Terrified) போயிருந்தார்கள். இதற்கு முன்பு அவர்களுக்கு இருந்த பயந்ததை விட, இப்போது இன்னும் அதிகமாகப் பீதியடைந்தார்கள்.
அவர்கள் யோசேப்பை இஸ்மவேலர்களிடம் விற்று ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் கண்டிப்பாகப் பழிவாங்குவார் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அவர்கள் அடைந்த அதிர்ச்சியிலும் பயத்திலும், அவர்களால் பேசக்கூட முடியவில்லை.”
ஆதியாகமம் 45:4
‘4அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். ‘
………………………….
யோசிப்பு, நான்தான் உங்கள் சகோதரன்.’ என்று கூறிய பொழுது இது எவ்வளவு ஒரு உணர்ச்சிகரமான ஒரு நேரமாய் இருந்திருக்கும்?? அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இங்கே யோசேப்பின் எதிர்வினையைக் கவனியுங்கள். அவர் கோபப்படவில்லை, அவர் பழிவாங்கவும் நினைக்கவில்லை. பொதுவாக ஒரு மனிதன் அப்படித்தான் நடந்திருப்பான். பிறகு ஏன் அவர் பழிவாங்க நினைக்கவில்லை?
ஆதியாகமம் 45:5
‘5என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ‘
……………………
கவனியுங்கள், தனக்கு நேரிட்ட எல்லா காரியங்களிலேயும் யோசேப்பு ஒரு காரியத்தைத் தெளிவாகக் கண்டார்: தேவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இவையனைத்தையும் அனுமதித்திருந்தார். தேவன் அவருடைய வாழ்க்கையில் கிரியை செய்துகொண்டிருந்தார்.
ஆதியாகமம் 45:6-8
‘6தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். 7பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். 8ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். ‘
……………………….
நீங்களும் நானும் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைப் பார்க்க முடிந்தால், நாம் கோபப்படுவோமா அல்லது பழிவாங்க நினைப்போமா? நிச்சயமாக நாம் அப்படிச் செய்ய மாட்டோம் என்றே நான் நினைக்கிறேன். இங்கேயும் யோசேப்பு தேவனுக்கே மகிமையை செலுத்துகிறார்.
யோசேப்பு எகிப்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவருக்கு பதினேழு வயது. அவர் பார்வோனுக்கு முன்பாக நின்றபோது அவருக்கு முப்பது வயது. அதன் பிறகு ஏழு செழிப்பான ஆண்டுகள் கடந்தன, இப்போது இரண்டு பஞ்ச கால ஆண்டுகளும் கடந்துவிட்டன. எனவே, இப்போது யோசேப்பிற்கு முப்பத்தொன்பது வயது; அவர் இருபத்திரண்டு ஆண்டுகளாக எகிப்து தேசத்தில் வாழ்ந்து வருகிறார். இவை அனைத்திலும் அவர் தேவனுடைய கரத்தைக் பார்க்கிறார். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே உங்கள் வாழ்க்கையில் கடினமான காலங்கள் என்று நீங்கள் கணக்கிட்ட காலங்களிலும் கர்த்தருடைய கரத்தை உங்களால் பார்க்க முடிந்ததா?
ஏன்?? இப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் காரியங்களையும் கர்த்தர் அறிந்திருக்கிறார்.
ஆதியாகமம் 45:9-11
‘9நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். 10நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். 11உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். ‘
……………………
யாக்கோபும் அவரது குடும்பத்தினரும் அந்தச் சமயத்தில் கானான் தேசத்திலேயே தங்கியிருந்தால், அவர்களால் பிழைத்திருக்க முடியாது; அவர்கள் அழிந்து போயிருப்பார்கள். எனவே, எகிப்தின் மிகச்சிறந்த பகுதியாகிய கோசேன் நாட்டிற்கு அவர்களை அழைத்து வர யோசேப்பு விரும்புகிறார். அந்தத் தேசத்தில்தான், உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, ஒரு பெரிய தேசமாக தேவன் அவர்களை உருவாக்கப்போகிறார். சகோதரர்களின் வாழ்க்கை முறையை வைத்துப் பார்க்கும்பொழுது, அவர்கள் கானான் தேசத்தை விட்டு வெளியேற வேண்டியது அவசியமானதாக இருந்தது.
ஆதியாகமம் 45:12
’12இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. ‘
…………………….
யோசேப்பு சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அவர்களுக்குப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. அந்த வார்த்தைகள் அவர்களுக்கு நம்ப முடியாதவையாக இருந்தன—யோசேப்பு நேரில் அங்கே அவர்கள் முன் நிற்காமல் இருந்திருந்தால், அவர்கள் ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்.
ஆதியாகமம் 45:13-14
’13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி; 14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். ‘
…………………
உடன் பிறந்த இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையிலான மிக உருக்கமான காட்சி இது. யோசேப்பும் பென்யமீனும் ஒன்று சேர்ந்து மிகச் சிறந்த மனிதர்களாகத் காணப்படுகிறார்கள்.
ஆதியாகமம் 45:15
’15பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள். ‘
………………………
மற்ற சகோதரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் மெதுவாக அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஒருவரோடு ஒருவர் பேசத் தொடங்குகிறார்கள்.
அதற்கு பிறகு, இந்தச் செய்தி எங்கும் பரவத் தொடங்குகிறது.
ஆதியாகமம் 45:16
’16யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். ‘
………………….
இது பார்வோனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. ஏன் அது அவருக்கு அவ்வளவு சந்தோஷம்? அந்தப் பார்வோன் ஒரு ‘ஹிக்சோஸ்’ (Hyksos) மன்னராக இருந்திருக்கலாம்; அதாவது யோசேப்பின் குடும்பத்தைப் போலவே அவரும் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கக்கூடும். அவரால் எகிப்தியர்களை முழுமையாக நம்ப முடியவில்லை. யோசேப்பின் உண்மையான குணத்தைக் கண்டு அவர் வியந்திருந்தார்; எனவே, யோசேப்பைப் போல இன்னும் பல குணவான்கள் எகிப்துக்கு வரப்போகிறார்கள் என்பதை அறிந்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
ஆதியாகமம் 45:17-19
’17பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான் தேசத்துக்குப் போய், 18உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்து தேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். 19நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். ‘
…………………..
பார்வோன் வண்டிகளை (Wagons) அனுப்பி வைக்க உத்தரவிடுவதைக் கவனியுங்கள். சக்கரம் என்பது அக்காலத்தில் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு. கானானிலிருந்து வந்த அந்த மனிதர்கள் இன்னும் வண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை, ஆனால் எகிப்தியர்கள் அந்த விஷயத்தில் மிகவும் முன்னேறியவர்களாக இருந்தார்கள்.
ஆதியாகமம் 45:20
’20உங்கள் தட்டுமுட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான். ‘
…………………
நீங்கள் எதையும் கூடுதலாகக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை; உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்களே உங்களுக்கு கொடுக்கிறோம் என்று பார்வோன் கூறுகிறான்.
ஆதியாகமம் 45:21-26
’21இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள், யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், 22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். 23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். 24மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். 25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து: 26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. ‘
………………………
கவனித்தீர்களா? யாக்கோபால் இது உண்மை என்று நம்பவே முடியவில்லை.
ஆதியாகமம் 45:27
’27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. ‘
……………………………
இறுதியாக முதியவராகிய யாக்கோபு தன் மகன் உயிருடன் இருக்கிறான் என்பதை நம்பினார்; அவரிடம் ஒரு புதிய உற்சாகம் பிறக்கத் தொடங்கியது.”
ஆதியாகமம் 45:28
’28அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.’
………………………..
கவனித்தீர்களா?? எவ்வளவு விறுவிறுப்பான மாற்றங்களைக் இங்கே பார்க்கிறோம்! யோசேப்பைப் பார்க்கப் போகிறோம் என்ற அந்த எதிர்பார்ப்புதான், எகிப்திற்குச் செல்ல வேண்டும் என்ற முடிவை யாக்கோபு எடுக்க முக்கியமான காரணமாக இருந்தது. அவர் எகிப்திலேயே தங்கிவிட வேண்டும் என்று நினைத்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. பஞ்ச காலம் முடிந்ததும், தன் மகனை ஒருமுறை பார்த்துவிட்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்றுதான் அவர் நினைத்திருப்பார்..
ஆனால், அவர் தனது அடக்க ஆராதனைக்காகத் தவிர, மீண்டும் உயிருடன் கானான் தேசத்திற்குத் திரும்பவே இல்லை. அவர் எகிப்து தேசத்திலேயே காலமானார். அவருடைய முழு குடும்பமும் அங்கேயே வாழ்ந்தாலும், அவர் கானான் தேசத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.
இப்பொழுது ஆதியாகமம் 46 ஆம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை படிப்போம்.
யாக்கோபு சில ஆண்டுகள் மட்டுமே எகிப்தில் இருக்கப்போவதாக நினைத்திருக்கலாம்; அதனால்தான் அங்கெ செல்ல அவர் சம்மதித்தபோதும் அவரிடம் ஒருவித தயக்கமும் யோசனையும் இருந்தது. எகிப்திற்குப் போக வேண்டாம் என்று தேவன் ஆபிரகாமுக்கு முன்பே அறிவுறுத்தியிருந்தார், இதே காரியத்தை தேவன் ஈசாக்கிடமும் சொல்லியிருந்தார்.
எனவே, இப்போது யாக்கோபுக்கு எகிப்து தேசத்திற்குப் போகலாமா? என்ற கேள்வி எழுகிறது. தன் மகன் யோசேப்பு அல்லது பார்வோன் ராஜா விடுத்த அழைப்பை விட, அவருக்கு இன்னும் கூடுதலான ஒரு ஊக்கம் தேவைப்பட்டது. அதாவது, ‘நீ போகலாம்’ என்று தேவனிடமிருந்து ஒரு பச்சைக்கொடி அனுமதி அவருக்குத் தேவைப்பட்டது.
ஆதியாகமம் 46:1
‘1இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். ‘
……………………….
இங்கே ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்: அவர் தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுக்குப் பலியிட்டார். அவர் முதன்முறை கானான் தேசத்தை விட்டு ஆரான் ஊருக்குப் புறப்பட்டபோது, பெத்தேலுக்கு வந்திருந்தார். அப்போது அவர் தேவனைத் தேடினாரா? இல்லை, அவர் தேவனுடைய விருப்பத்தையோ அல்லது அவருடைய வழிநடத்துதலையோ நாடவில்லை.
இளம் வயது யாக்கோபுக்கும், ஆபிரகாமின் வேலைக்காரனுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்! ஆபிரகாமின் வேலைக்காரன் தேவனை நோக்காமல் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஆனால் யாக்கோபோ, தன் வாழ்க்கைக்கு தேவன் தேவையில்லை என்றே நினைத்தார். வாழ்க்கையை நடத்துவதற்கு அது சரியான வழிமுறை அல்ல என்பதைக் கற்றுக்கொள்ள அவருக்கு நீண்ட காலம் பிடித்தது.
இன்றைய காலத்திலும் எத்தனை கிறிஸ்தவர்கள் வாரத்தின் முழு நாட்களிலும் தேவனைத் தங்கள் திட்டங்களில் சேர்க்காமல் வாழ்கிறார்கள்! அவர்கள் தங்களுக்கு வேண்டிய முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள், பிறகு ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்கு வந்து, மிகுந்த பக்தியோடு நடந்துகொள்கிறார்கள். தேவாலயத்திற்குச் செல்வதும், ஒருவேளை ஞாயிறு பள்ளி (Sunday school) பாடம் எடுப்பதும் மட்டுமே தேவனுடைய சித்தம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
வாரத்தின் மற்ற நாட்களில் தேவன் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருப்பதில்லை.
யாக்கோபைப் பொறுத்தவரை, அவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதி தேவனைத் தேடாமல் இருந்தார். ஆனால் இப்போது, அவர் பெயெர்செபாவிற்கு வந்தபோது, தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுக்குப் பலியிடுகிறார்.
இப்போது தேவன் அவர்மேல் கிருபை கூர்ந்து, அவருக்குக் காட்சியளிக்கப் போகிறார்—
ஆதியாகமம் 46:2-3
‘2அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான். 3அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். ‘
………………………..
“இங்கே தேவன், எகிப்து தேசத்தில் யாக்கோபை ஒரு பெரிய தேசமாக்குவேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். தேவன் உண்மையில் அப்படிச் செய்தாரா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதற்கான பதிலை வேதாகமத்தின் அடுத்த புத்தகத்தில் (யாத்திராகமம்) நாம் பார்க்கலாம்: ‘இஸ்ரவேல் புத்திரர் பலுகி, எங்கும் பரவி, மிகுதியாய் பெருகி, மிகவும் பலத்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்திருந்தது’ (யாத்திராகமம் 1:7). எகிப்து தேசத்தில் இஸ்ரவேலர்களின் ஜனத்தொகை அங்கே மிக வேகமாகப் பெருகியது. இதற்கு என்ன காரணம்? தேவன் யாக்கோபுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 46:4-5
‘4நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார். 5அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, ‘
………………………
யாக்கோபை பார்வோன் அனுப்பியிருந்த அந்த வண்டிகளில் ஒன்றில் ஏற்றி, பயணத்தைத் தொடங்கினார்கள்.
யாக்கோபின் வாழ்க்கையை மூன்று புவியியல் இடங்களாகப் பிரிக்கலாம்: ஆரான் தேசம், கானான் தேசம் மற்றும் எகிப்து தேசம். இவை வெறும் இடங்கள் மட்டுமல்ல, இவை அவருடைய மூன்று ஆன்மீக நிலைகளைக் குறிக்கின்றன. யாக்கோபு வெறும் ஒரு கோலோடுதான் கானான் தேசத்தை விட்டு வெளியேறினார். அவர் ஆரான் ஊருக்கு வந்தபோது, அவர் ஒரு தேவனுடைய மனிதனாக இருந்தாலும் தன் சொந்த அறிவின்படி வாழ்ந்து கொண்டிருந்தார். ஆரானிலிருந்து வெளியே வரும்போது அவர் தனது மாமனாரிடமிருந்து தப்பித்து ஓடினார், தன் சொந்த சகோதரன் ஏசாவைச் சந்திக்கவும் பயந்தார்.
அதன்பிறகு கானான் தேசத்தில் யாக்கோபு ஒரு மல்யுத்தம் செய்தார்; ஆனால் இங்கே அவர் தேவனுடைய மனிதனாகத் தன் சொந்த பலத்தில் போராடுகிறார். இப்போது அவர் எகிப்திற்குச் செல்கிறார். இங்கே அவர் தன் சொந்த பலத்தில் நடக்கவில்லை, அவர் எதற்கும் பயந்து ஓடவும் இல்லை. அவர் இப்போது ‘விசுவாசத்தினால்’ நடக்கிறார்.”
ஆதியாகமத்தின் இந்தப் பகுதியில் யோசேப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், யாக்கோபின் வாழ்க்கையில் ஒரு விசுவாசமுள்ள ஆவிக்குரிய மனிதனுக்கான அடையாளங்கள் தென்படுவதைக் கவனியுங்கள். தேவன் யாக்கோபை எப்படிப்பட்டவராக மாற்ற விரும்பினாரோ, அப்படிப்பட்ட ஒரு மனிதனாக அவர் இப்போது மாறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் தேவனால் மட்டுமே உருவாக்க முடியும்.
“இதை நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்: ஆரான் (Haran) தேசத்தில் யாக்கோபு வாழ்ந்த வாழ்க்கை, மாம்சத்தின்படி (சுய விருப்பத்தின்படி) வாழ்கிற ஒரு தேவ மனுஷனுக்கு உதாரணமாக இருக்கிறது. கானான் (Canaan) தேசத்தில் யாக்கோபு வாழ்ந்த வாழ்க்கை, தன் சொந்த பலத்தினால் போராடுகிற ஒரு தேவ மனுஷனுக்கு உதாரணமாக இருக்கிறது. எகிப்து (Egypt) தேசத்தில் யாக்கோபு வாழ்ந்த வாழ்க்கை, விசுவாசத்தினால் நடக்கிற ஒரு தேவ மனுஷனுக்கு உதாரணமாக இருக்கிறது.”
இன்று நம்மில் பலருடைய வாழ்க்கையில் இதுவே உண்மை என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வில் ஒரு காலத்தில் சுவிசேஷத்தையும், தேவனுடைய வார்த்தையையும் கேட்டு, நாம் அவரிடம் திரும்பினோம். அதன் பிறகு, நம்முடைய சொந்த பலத்திலேயே நம் வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைத்துப் போராடிய ஒரு காலம் இருந்தது; அது ஒருவேளை பல ஆண்டுகளாய் நீடித்திருக்கலாம். அதன் பின்னரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் நாம் வளர்ந்து, விசுவாசத்தினால் நடக்கிறோம்…
ஆதியாகமம் 46:6-7
‘6தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான்தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள். 7அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். ‘
………………………..
பஞ்சத்தின் காரணமாக, யாக்கோபு தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. பஞ்சத்தில் எஞ்சியிருக்க வாய்ப்பே இல்லை என்பதால், அவர்களுடைய கால்நடைகள் அனைத்தையும் அவர்களுடனேயே கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
பின்வரும் வசனங்கள் யாக்கோபின் வம்சவரலாற்றைக் கொடுக்கின்றன. இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இந்த வம்சவரலாறுதான் இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கிறது; மேலும் வேதாகமம் முழுவதும் இதுவே பின்தொடரப்படுகிறது. யாக்கோபின் சந்ததியினர் அனைவரையும் பட்டியலிட்ட பிறகு, நாம் இதைப் படிக்கிறோம்:
ஆதியாகமம் 46:26
’26யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர். ‘
……………………
யாக்கோபோடு கானானிலிருந்து எகிப்திற்கு வந்தவர்கள் மொத்தம் அறுபத்தாறு பேர்.
ஆதியாகமம் 46:27
’27யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். ‘
……………………..
யாக்கோபின் ஒவ்வொரு குமாரனும், அவருடைய சந்ததியினரும் பெயர் வாரியாகப் பட்டியலிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்த பெயர்ப்பட்டியல்கள் ஏன் வேதாகமத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன? இதைவிட முக்கியமான தகவல்கள் தேவனிடம் இல்லையா?அருமையான சகோதரனே சகோதரியே , நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விட முக்கியமானது எதுவுமே இல்லை; அவரை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வம்சவரலாறு இதுவே. புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், மத்தேயு முதலாம் அதிகாரத்தில் உள்ள வம்சவரலாற்றில் இந்தப் பெயர்களில் சிலவற்றை நாம் பார்ப்போம். மீண்டும், லூக்கா 3-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வம்சவரலாற்றிலும் இந்தப் பெயர்களில் சிலவற்றை நாம் பார்க்கலாம். அந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் பெயர்ப்பட்டியல்கள் மிக முக்கியமானவை.
இதற்குப் பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது, அது மிகவும் தனிப்பட்ட விஷயம். ‘ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகம்’ (Lamb’s Book of Life) என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்வி என்னவென்றால்: உங்கள் பெயர் அங்கே எழுதப்பட்டிருக்கிறதா? என்பதுதான்.
நீங்கள் ஆதாமின் வம்சவரிசையில் எப்படிப் பிறந்தீர்களோ (நாம் அனைவரும் அந்த வம்சத்தில்தான் இருக்கிறோம்), அதேபோல கிறிஸ்துவினுடைய வம்சவரிசைக்குள் நீங்கள் ம்று பிறப்பின் வழியாகவே நுழைகிறீர்கள். ஆனால், ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தைப் பொறுத்தவரை, கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதன் மூலம் ஏற்படும் ‘மறுபிறப்பின்’ (New Birth) மூலமாகவே நீங்கள் அதில் இடம்பெறுகிறீர்கள். நீங்கள் அப்படிச் செய்யும்போது, தேவனுடைய பிள்ளையாக மாறுகிறீர்கள்.
நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்? எனக்கு உங்களைத் தெரியாது—உங்கள் பெயரைக்கூட நான் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை—ஆனால் தேவனுக்கு உங்களைத் தெரியும். சொல்லப்போனால், உங்கள் தலைமுடியைக்கூட அவர் எண்ணி வைத்திருக்கிறார்! வேறு யாரைக் காட்டிலும் அவர் உங்களை நன்கு அறிவார். உங்கள் தாய் உங்களை நேசித்ததை விடவும் அதிகமாக அவர் உங்களை அறிகிறார், நேசிக்கிறார்—உங்கள் தாய் உங்கள் தலைமுடியை என்றாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை! ஆனால் தேவன் அதைச் செய்திருக்கிறார். தேவன் உங்களைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்.”
யாக்கோபின் வம்சவரலாற்றில் எனக்கு எந்த அர்த்தமும் தராத பல பெயர்கள் இருக்கின்றன. உங்கள் கண் காணும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக தேவன் அறிந்திருக்கிறார், ஒவ்வொருவர் மேலும் அன்பு காட்டுகிறார்.’ அவர்கள் தேவனைப் பற்றி நினைக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்; அவர்களில் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து மரித்தார்.
என் நண்பரே, கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த ஜனத்தொகை பெருக்கத்திற்கு மத்தியில் நீங்கள் இருந்தாலும், தேவனுக்கு நீங்கள் ஒரு தனித்துவமான நபர். யாக்கோபின் வம்சவரலாற்றில் உள்ள பெயர்களை எனக்குத் தெரியாது, உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு அவர்கள் மேல் ஆர்வம் இல்லை. ஆனால் தேவனுக்கு உண்டு. அவர்கள் அனைவரும் அவருடையவர்கள் என்பதால், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். இது மீண்டும் உங்களை ஒரு கேள்வியைக் கேட்கத் தூண்டுகிறது: உங்கள் பெயர் ‘ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகத்தில்’ எழுதப்பட்டிருக்கிறதா?
ஆதியாகமம் 46:28
’28கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள். ‘
………………….
யாக்கோபு மற்றும் யோசேப்பின் இந்தச் சரித்திரம் வெறும் ஒரு குடும்பம் மீண்டும் இணைந்த கதை மட்டுமல்ல; இது ஒரு விசுவாசியின் வாழ்க்கைப் பயணத்தின் உன்னதமான பாடமாகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் 4 முக்கியசத்தியங்களை கவனியுங்கள்:
1. தேவனே மாற்றத்தை உருவாக்குகிறார்
யாக்கோபு தன் வாழ்நாள் முழுவதும் தந்திரக்காரனாக இருந்தார். ஆனால், எகிப்திற்குப் புறப்படும்போது அவர் ஒரு முதிர்ந்த ஆவிக்குரிய மனிதனாக, “விசுவாசத்தினால் நடக்கிறவராக” மாறினார். நம்முடைய போராட்டங்கள், தோல்விகள் மற்றும் நீண்ட காத்திருப்புகள் வழியாக தேவன் நம்மைச் செதுக்குகிறார். யாக்கோபை மாற்றிய தேவனால் உங்களையும் மாற்ற முடியும்.
2. தேவன் உங்களைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார்
யாக்கோபின் வம்சவரலாற்றில் உள்ள 70 பெயர்களும் நமக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு அவை முக்கியமானவை. கோடிக்கணக்கான மக்கள் வாழும் இந்த உலகில் நீங்கள் ஒரு கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் நீங்கள் அவருடைய கைரேகையைப் போன்ற தனித்துவமானவர். அவர் உங்கள் தலைமுடியையும் எண்ணி வைத்திருக்கிறார்! எனவே எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போய்விடாதீர்கள்.
3. ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகம்
யாக்கோபின் குடும்பப் பட்டியலில் பெயர் இருப்பது அவர்களுக்குப் பெருமை சேர்த்தது. ஆனால், உங்களுக்கு மிகவும் அவசியமானது ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதுதான். கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ‘மறுபிறப்பு’ அடைவதே அந்தப் பட்டியலில் சேருவதற்கான ஒரே வழி.
4. வாக்குத்தத்தத்தில் இளைப்பாறுங்கள்
பஞ்ச காலத்திலும், தெரியாத ஒரு தேசத்திற்கு (எகிப்து) சென்றபோதும் தேவன் யாக்கோபுக்கு “பயப்படாதே” என்று வாக்குக் கொடுத்தார். அதே தேவன் இன்றும் உங்களோடு இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு திருப்பத்திலும் தேவனுடைய கரம் இருப்பதை விசுவாசியுங்கள்.
சுருக்கமாகச் சொன்னால்: யாக்கோபு தன் சொந்தப் பலத்தில் போராடுவதை நிறுத்திவிட்டு, தேவனுடைய கிருபையைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டார். நாமும் இன்று நம் பலத்தைச் சார்ந்து போராடுவதை விட்டுவிட்டு, விசுவாசத்தினால் தேவனுடைய கிருபையில் நடக்க நம்மை இன்றே அர்ப்பணிப்போமா??
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
