ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 43:16- 44:34
நிகழ்ச்சி எண்: 0061
வாசியுங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை அன்போடு வாழ்த்துகிறோம். கடந்த நிகழ்ச்சியிலே யாக்கோபு யோசேப்பின் சகோதரனான பென்யமீனை எகிப்திற்கு அனுப்பி வைப்பதிலே விருப்பம் இல்லாதவராய் இருந்தார் என்று சிந்தித்தோம்.
ஆனால், யூதா முன்வந்து பென்யமீனை பத்திரமாக திரும்பி அழைத்து வர பொறுப்பு ஏற்கிறார் என்றும் பார்த்தோம். தொடர்ந்து அங்கே என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 43:16-17
’16பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான். 17அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். ‘.
……………………….
யோசேப்பு அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்ததற்கான காரணம் மிகத் தெளிவானது. அவர் தனது சொந்த வீட்டின் தனிமையில் அவர்களுடன் பேச விரும்பினார்..
ஆதியாகமம் 43:18
’18தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி, ‘
…………………………………
இந்த மனிதர்கள் இப்போது உண்மையிலேயே பீதியடைந்திருக்கிறார்கள். அவர் தங்களை ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காக வீட்டிற்கு அழைக்கிறார் என்று அவர்களால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. இதற்கு முன்பு அவர் அவர்களிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார், ஆனால் இப்போது மதிய உணவிற்கு அழைக்கிறார்!
சாதாரண சூழ்நிலையாக இருந்தால், இது பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருந்திருக்கும். இந்திய ஜனாதிபதி உங்களை ஒரு விருந்துக்கு அழைத்தால், நீங்கள் அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வீர்கள் இல்லையா? அதை ஒரு சிறந்த பாக்கியமாக நீங்கள் கருதுவீர்கள். ஆனால், இந்த மனிதர்களுக்கோ இத்தகைய ஒரு பாக்கியம் எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. காரணம், அவர்களுக்குள் இருந்த குற்ற உணர்வு. (Guilt complex) நடக்கும் ஒவ்வொரு கெட்ட காரியத்திற்கும் தங்கள் சகோதரனை விற்றுப்போட்டதே காரணம் என்று அவர்கள் குற்ற உணர்ச்சியால் வாதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பயத்தில் பலவாறாகக் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். “சாக்குகளில் இருந்த பணத்திற்காக இந்த மனிதன் நம்மை அடிமைகளாக்கத் திட்டம் போடுகிறானோ?” என்று நினைக்கிறார்கள். முன்பொரு காலத்தில், யோசேப்பை இஸ்மவேலர்களிடம் அடிமையாக விற்க தயங்கவே இல்லை என்பதை யோசிக்கிறார்களோ??
ஆதியாகமம் 43:19-22
’19யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனண்டையிலே சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி: 20ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே; 21நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம். 22மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள். ‘
………………………….
தங்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அந்த அதிகாரியிடமே இந்த மனிதர்கள் இப்போது தங்களை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும், கெஞ்சவும் தொடங்குகிறார்கள். அவர் ஒரு முக்கியமான எகிப்திய அதிகாரி என்பது வெளிப்படையாக தெரிவதால் அவரிடத்தில் இவ்வாறு பேசுகிறார்க்ள்.
ஆதியாகமம் 43:23
’23அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான். ‘
………………………….
வெளிப்படையாகப் பார்த்தால், இந்த அதிகாரி யோசேப்பின் சாட்சியான வாழ்க்க மூலமாக உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவனைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நடக்கும் காரியங்களைப் பற்றி ஓரளவாவது யோசேப்பு இந்த மேலாளரிடம் (Steward) சொல்லியிருப்பார் என்று தெரிகிறது. அந்த அதிகாரி, “உங்கள் பணம் என்னிடம் வந்தது” என்று சொன்னபோது, அது அந்தச் சகோதரர்களை இன்னும் அதிகமாகப் பயப்பட வைத்திருக்கும்.
ஆதியாகமம் 43:24
’24மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான். ‘
……………………………
இங்கே மீண்டும் கால்களைக் கழுவும் பழக்கத்தை நாம் பார்க்கிறோம். இந்தப் பழக்கத்தை நாம் ஏற்கனவே ஆபிரகாமின் வாழ்க்கையிலும், பின்னர் சோதோம் நகரத்திலும் பார்த்திருக்கிறோம். அது அக்காலத்தின் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது.
ஆதியாகமம் 43:25-26
’25தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். 26யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். ‘
…………………………….
வயதான யாக்கோபு “அந்த மனுஷனுக்கு” பரிசுப் பொருளைக் (Present) கொண்டு போகும்படி தன் மகன்களிடம் சொல்லியிருந்ததை நினைத்துப் பாருங்கள். அவர்கள் யோசேப்பைக் கண்டபோது, “தரைமட்டும் குனிந்து அவரை வணங்கினார்கள்” என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதன் மூலம், யோசேப்பு சிறுவயதில் கண்ட அந்தத் சொப்பனங்கள் மீண்டும் ஒருமுறை நிறைவேறுகிறது.
ஆதியாகமம் 43:27
’27அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். ‘…………………………….
நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த மிகச்சிறந்த நாடகத்தின் முக்கியமான ஒரு காட்சி இது.! யோசேப்பு ஒருவேளை அரியணையில் இல்லாவிட்டாலும், ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்; அவருடைய சகோதரர்கள் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்குகிறார்கள். அவர்கள் எழுந்து நின்றபோது, யோசேப்பு அவர்களை நேருக்கு நேர் பார்க்கிறார், அவர்களும் அவரைப் பார்க்கிறார்கள். யோசேப்பு அவர்களிடம், “நீங்கள் சொன்ன அந்த முதிர்வயதான உங்கள் தகப்பன் நலமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்கிறார். பாருங்கள், யோசேப்பு இதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார், ஏனென்றால் அவர் யோசேப்புக்கும் தகப்பன் இல்லையா??!
ஆதியாகமம் 43:28
’28அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள். ‘
……………………….
இங்கே அவர்கள் மீண்டும் ஒருமுறை தரைமட்டும் குனிந்து வணங்குகிறார்கள். இந்தக் காட்சியை ஒரு புகைப்படமாகப் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா? இப்போது பென்யமீனும் அவர்களோடு இருக்கிறான்; அவனும் அவர்களுடனே சேர்ந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்குகிறான்.
ஆதியாகமம் 43:29
’29அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். ‘
……………………….
யோசேப்பு தனது சகோதரன் பென்யமீனைப் பார்க்கிறார், அவன் “தன் தாயின் மகன்.” மற்றவர்கள் அனைவரும் அவனது மாற்றாந்தாய் சகோதரர்கள் (Half-brothers), ஆனால் இந்த பென்னியமீன் அவனுடைய சொந்த தம்பி,. அவர், “நீங்கள் என்னிடம் சொன்ன உங்கள் இளைய தம்பி இவன்தானா?” என்று கேட்கிறார். அந்தச் சகோதரர்கள் “ஆம்” என்பது போலத் தலையசைத்திருப்பார்கள். யோசேப்பு பென்யமீனை நோக்கி, “என் மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்வாராக” என்று கூறுகிறார். என்ன ஒரு உணர்ச்சிகரமான தருணம்! இல்லையா?? இப்பொழுது யோசேப்பால் தனது உணர்ச்சிகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆதியாகமம் 43:30
’30யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். ‘
……………………………
— அதாவது, அவன் உள்ளம் உருகி, அன்பு பொங்கியது. / தன் சகோதரர்களிடம், “என்னைச் சற்று மன்னியுங்கள், யாரோ என்னை அவசரமாக அழைக்கிறார்கள்” என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு, அங்கிருந்து விரைவாக வெளியேறியிருப்பார்.
யொசேப்பு தனது தனி அறைக்குச் சென்று அழுது தீர்த்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தம்பி பென்னியமீனைப் பார்க்கிறார். சுமார் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது யோசேப்பிற்கு கிட்டத்தட்ட நாற்பது வயது, பெஞ்சமின் ஒரு வாலிபனாக இருக்கிறான்.
ஆதியாகமம் 43:31
’31பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான். ‘
………………………..
இது எதிர்காலத்தில் நிறைவேறவிருக்கும் ஒரு அற்புதமான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வின் சித்திரமாகும். இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு நாள் இயேசு கிறிஸ்து தம்மைத் தம்முடைய சகோதரர்களுக்கு வெளிப்படுத்துவார் என்று தீர்க்கதரிசியாகிய சகரியா 13 : 6ல் நமக்குச் சொல்கிறார். அவர்களின் பாவங்களுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவரும் அவரே.
இது எப்பொழுது நிகழும்? கர்த்தராகிய இயேசு மீண்டும் இந்த பூமிக்கு வரும்போது இது நடக்கும். அவர் இஸ்ரவேல் தேசத்தாராகிய தம் சகோதரர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவார். அங்கே எஞ்சியிருக்கும் மக்கள் (remnant) அவரை அறிந்துகொள்வார்கள். அவர் முதல் முறை வந்தபோது அவருடைய சகோதரர்களில் பலர் அவரை நம்பவில்லை, ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் அவரை முழுமையாகத் தெரிந்துகொள்வார்கள்.
அதேபோல், யோசேப்பின் சகோதரர்கள்தான் யோசேப்பை அடிமையாக விற்றார்கள். ஆனால், இப்போது அவர் தன்னைத் தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தப் போகிறார்.
அருமையானவர்களே, இன்று இஸ்ரவேல் தேசம் எவ்வளவு குருட்டுத்தன்மையுடன் இருந்தாலும் சரி, அல்லது அவர்கள் எத்தகைய செயல்களில் ஈடுபட்டாலும் சரி, அவர்கள் அனைவரும் அன்பானவர்களாக இல்லாவிட்டாலும் கூட—அவர்கள் நம் கர்த்தருடைய சகோதரர்கள் என்பதுதான் உண்மை. அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும் நாள் வரப்போகிறது. இது ஒரு குடும்ப விஷயம். அவருடைய குடும்ப விவகாரத்தில் நாம் தலையிடாமல் இருப்பதே நல்லது. ஒரு உண்மையான விசுவாசி ஒருபோதும் யூத எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருக்க முடியாது.
சரி யோசேப்பு தனி அறைக்குச் சென்று அழுது முடித்த பிறகு, தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவன் தன் முகத்தைக் கழுவிவிட்டு, மீண்டும் தன் சகோதரர்களிடம் வந்து “சரி, நாம் சாப்பிடலாம்” என்று கூறினார்.
ஆதியாகமம் 43:32
’32எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள். ‘
……………………….
அந்த உணவின் போது, யோசேப்பின் (Joseph) சகோதரர்கள் மிகுந்த அச்சத்தில் இல்லையென்றால், அங்கே நடந்த சில முக்கியமான விஷயங்களை அவர்கள் கவனித்திருப்பார்கள்.
முதலாவதாக, யோசேப்பு எகிப்தியர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ணவில்லை. எகிப்தியர்கள் தனியாகவே சாப்பிட்டார்கள்; யோசேப்பும் அவர்களிடமிருந்து பிரிந்தே அமர்ந்திருந்தார். ஒருவேளை, அவர் அந்த இடத்தின் மிக உயரிய அதிகாரியாக (the brass) இருந்ததால் தான் இப்படித் தனியாக அமர்ந்திருக்கிறார் என்று அவருடைய சகோதரர்கள் நினைத்திருக்கலாம்.
இப்போது, அங்கே கவனிப்பதற்கு இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது.
ஆதியாகமம் 43:33
’33அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ‘
……………………….
யோசேப்பு (Joseph) அந்த விருந்தில் அனைவருடைய இடங்களையும் முன்கூட்டியே முடிவு செய்திருந்தார். அவர் ரூபனை (Reuben) அவனுக்குரிய இடத்திலும், பென்னியமீனை (Benjamin) அவனுக்குரிய இடத்திலும் அமரவைத்தார்கள்; இப்படி எல்லாச் சகோதரர்களையும் அவர்களின் வயது வரிசைப்படியே சரியாக உட்கார வைத்தார்கள்.
இவர்களுக்கு எப்படி நம்முடைய வயது விவரங்கள் அனைத்தும் தெரியும் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள்.
ஆதியாகமம் 43:34
’34அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.’
………………………….
அடுத்ததாக கவனிக்க வேண்டியது, யோசேப்பு (Joseph) அவர்கள் அனைவருக்கும் தட்டில் உணவைப் பரிமாறிய விதம். மீண்டும் ஒருமுறை, தன் சொந்தத் தம்பியான பென்னியமீன் மீதிருந்த பாசத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், மற்றவர்களை விட பெஞ்சமினுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணவை கொடுக்க யோசேப்பு ஒழுங்கு செய்திருந்தார். அந்த இளைஞன் நீண்ட காலமாகப் பஞ்சத்தில் வாடிக்கொண்டிருந்தான்; நீண்ட காலத்திற்குப் பிறகு அவனுக்குக் கிடைத்த முதல் முழுமையான விருந்து அதுதான்.
“அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள் – ஆம்,” அது ஒரு மிகச்சிறந்த கொண்டாட்டமாக இருந்தது. யோசேப்பு இறுதியாகத் தன்னைத் தன் சகோதரர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தும் நாள் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்! இல்லையா??
தொடர்ந்து 44 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
மீண்டும் ஒரு அற்புதமான மற்றும் நாடகமான ஒரு பகுதியை நாம் பார்க்கப் போகிறோம்.. தன் சகோதரர்களைத் தானியங்களோடு அனுப்பிவைக்கும்போது, யோசேப்பு (Joseph) தனது மனதில் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பென்னியமீன் மீதும், தனது தந்தை மீதும் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும் உறவையும் சோதிக்க அவர் விரும்பினார்.
முன்பு அவர்கள் தன்னையே அடிமையாக விற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அவர்கள் மாறியிருக்கிறார்களா? தங்களைக் காத்துக்கொள்ள பெஞ்சமினை அடிமையாக விட்டுச்செல்ல அவர்கள் சம்மதிப்பார்களா? தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு முன்பாக, இந்த விஷயத்தில் யோசேப்பு தெளிவுபெற வேண்டியிருந்தது. தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பென்னியமீனுக்கு மீண்டும் நேராது என்பதற்கான முழுமையான ஆதாரத்தை இந்தச் சோதனை அவருக்குத் கொடுக்கும்.
இப்பொழுது ஆதியாகமம் 44 ஆம் அதிகாரம் முதல் ஐந்து வசனங்களை வாசிக்கிறேன் கவனியுங்கள்.
ஆதியாகமம் 44:1-5
‘1பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு, 2இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான். 3அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள். 4அவர்கள் பட்டணத்தை விட்டுப்புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? 5அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான். ‘
…………………..
யோசேப்பு அவர்களை அனுப்பி வைக்கிறார். எல்லாம் சுமூகமாக முடிந்தது என்று நினைத்து சகோதரர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள். பென்யமீனின் சாக்கில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருப்பதை அவர்கள் அறியவில்லை. ஆனால், யோசேப்பின் வீட்டுப் மேற்பார்வையாளர் அவருக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட உத்தரவுகளுடன் அவர்களைத் துரத்திச் செல்கிறார். சகோதரர்கள் சிறிது தூரம் சென்றதும், அவர்கள் மறிக்கப்படுகிறார்கள். ஒரு பெரிய கூட்டமே அவர்களைத் தேடி வருகிறது. யோசேப்புக்குச் சொந்தமான பாத்திரத்தைத் திருடியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆதியாகமம் 44:6-7
‘6அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான். 7அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம். ‘
…………………….
யோசேப்பு ஞான திருஷ்டியினால் கிண்ணம் களவு செய்யப்பட்டதை அறிந்தார் என்று யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரன் கூறுகிறார். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி என்பதையும், அவரால் வருங்காலத்தைக் கணிக்க முடிந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
யோசேப்பின் தீர்க்கதரிசன வரம் என்பது கடவுள் அவருக்குக் கொடுத்த ஒரு கொடை. இது வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்பே அவருக்கு அருளப்பட்டது. அதற்காக, நாம் இன்று ஒரு கிண்ணத்தை எடுத்து ஜாதகத்தைப் (horoscope) பார்ப்பது ஆவிக்குரிய காரியம் அல்ல. கடவுளை அறிந்திருக்கிறோம் என்பவர்களும் இது போன்ற காரியங்களை நம்புவது, அவர்கள் மோசமான ஆன்மீக நிலையைத்தான் காட்டுகிறது.
ஆதியாகமம் 44:8-9
‘8எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான் தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா? 9உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள். ‘
…………………
அவர்கள் யாரிடத்திலும் யோசேப்பின் பாத்திரம் இல்லை என்பதை குறித்து உறுதியாக இருந்தார்கள்.
ஆதியாகமம் 44:10-12
’10அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான். 11அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள். 12மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது. ‘
…………………
நிச்சயமாக, அந்தப் பாத்திரத்தை பென்யமீனின் சாக்கில் போடுமாறு யோசேப்புதான் தனது வீட்டு விசாரணை காரனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆதியாகமம் 44:13
’13அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள். ‘
…………………….
“அவர்கள் மிகுந்த மனவேதனையின் அடையாளமாகத் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். பென்யமீன் இல்லாமல் அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்பது உறுதி; அதனால் அவர்கள் அனைவரும் மீண்டும் நகரத்திற்குத் திரும்பினார்கள். அங்கே யோசேப்பின் முன்னால் மீண்டும் தரையில் விழுந்து வணங்கினார்கள். இந்த முறை அவர்கள் மிகுந்த திகைப்போடும், சொல்ல முடியாத வேதனையோடும் யோஏப்பின் முன் நின்றார்கள்.
ஆதியாகமம் 44:14-15
’14யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். 15யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான். ‘
…………………….
யூதா இப்போது முன்னால் வருகிறார். இந்த மனிதரின் உயரிய பண்பு இப்போது மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இரட்சகர் (இயேசு கிறிஸ்து) யூதாவின் கோத்திரத்திலிருந்துதான் வரப்போகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பதியப்பட்ட உரைகளிலேயே மிகச்சிறந்த உரைகளில் ஒன்றை இவர் நிகழ்த்துகிறார். தங்கள் பாவத்தின் காரணமாகவே இந்தத் துன்பம் தங்களுக்கு நேர்ந்தது என்பதை அவர் முழுமையாக ஒப்புக்கொள்கிறார்.”
ஆதியாகமம் 44:16-17
’16அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான். 17அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான். ‘
…………………….
தன் சகோதரர்கள் தங்கள் தம்பி மீது வைத்திருக்கும் அன்பைச் சோதிக்க யோசேப்பு இப்போது விரும்புகிறார். பென்யமீன்தான் குற்றவாளி, அதனால் அவன் மட்டுமே இங்கே தங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். முன்பு ஒருமுறை அவர்கள் யோசேப்பையே அடிமையாக விற்றார்கள்; இப்போது அவர், ‘பென்யமீனை மட்டும் இங்கே விட்டுவிட்டுச் செல்லுங்கள், அவன் எனக்கு அடிமையாக இருக்கட்டும். மற்றவர்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்குச் செல்லலாம்’ என்கிறார். இப்போது யூதா சொல்வதைக் கவனியுங்கள்.
ஆதியாகமம் 44:18
’18அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். ‘
…………………..
எகிப்தில் யோசேப்பு எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருக்கிறார் என்பதை இப்போது உங்களால் கணிக்க முடிகிறதா??
ஆதியாகமம் 44:19-29
’19உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். 20அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். 21அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 22நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். 23அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 24நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம். 25எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார். 26அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம். 27அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; 28அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 29நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார். ‘
……………………………..
இந்த அறிக்கையில் யூதா நடந்தவற்றையும், அவர்களின் தந்தையின் மனவேதனையையும் விவரிக்கிறார். உண்மையில், தந்தை யாக்கோபு இத்தனை காலமும் ஏமாற்றப்பட்டிருந்தார் என்பதை யோசேப்பு இப்போது உணர்ந்துகொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு என்ன நடந்தது என்று சகோதரர்கள் தன் தந்தையிடம் என்ன பொய் சொன்னார்கள் என்பது இப்போதுதான் யோசேப்புக்குத் தெளிவாகத் தெரிகிறது. சகோதரர்களில் ஒருவர் இவ்வளவு வெளிப்படையாக உண்மையைச் சொல்வது இதுவே முதல் முறை என்று நான் நம்புகிறேன். இதற்கு முன்பு அவர்கள் யோசேப்பு ‘இல்லாமல் போய்விட்டான்’ என்றே கூறி வந்தனர், அதாவது அவன் இறந்துவிட்டான் என்ற பொருளில் பேசினார்கள்.
இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யாக்கோபு கர்த்தருக்குள் வளர்ந்து வருகிறார், ஆனால் அவர் இன்னும் முழுமையை அடையவில்லை. அவர் இறைவனை முழுமையாக நம்புவதற்குப் பதிலாக, சிறுவன் பென்யமீனைத்தான் சார்ந்திருக்கிறார். பென்யமீனுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால், அது அவரைக் கொன்றிருக்கும்—அவர் மிகுந்த துயரத்துடன் மரணத்தைத் தழுவியிருப்பார்.
இன்றும் கூட, ஒரு அன்புக்குரியவர் இறக்கும்போது கடவுள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்களை நாம் பார்க்கிறோம். ஆனால் சிலர் அப்படி நடக்கும்போது முற்றிலும் உடைந்து போகிறார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும், நீங்கள் இருவரும் கடவுளின் பிள்ளைகளாக இருந்தால், ஒரு நாள் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். விசுவாசத்தோடு நடப்பவர் அத்தகைய நேரங்களில் சோர்ந்து விழுந்துவிட மாட்டார். எனவே, யாக்கோபு இன்னும் அந்தப் பரிபூரண நிலையை எட்டவில்லை என்பதை நாம் உணர முடிகிறது. அவர் கர்த்தரில் வளர்ந்து வந்தாலும், கடவுள் மீது அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை.
ஆதியாகமம் 44:30-31
’30ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், 31அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். ‘
………………………….
முதியவரான யாக்கோபின் மீது யூதா வைத்திருக்கும் அக்கறையை இங்கே உங்களால் பார்க்க முடிகிறதா??. யூதா இந்தக் குழுவின் சார்பாகப் பேசுகிறார். உண்மையில், மற்ற சகோதரர்களில் யார் பேசியிருந்தாலும் இதே கருத்தைத் தான் சொல்லியிருப்பார்கள்.
ஆதியாகமம் 44:32-34
’32இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். 33இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். 34இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.’
………………………….
சொல்லப்போனால், மீண்டும் யூதா இங்கே குழுவின் சார்பாகப் பேசுகிறார். மற்ற சகோதரர்களில் யார் கேட்டிருந்தாலும் தங்களை ஒரு அடிமையாகத் தர முன்வந்திருப்பார்கள். யோசேப்பு தன் சகோதரர்களைச் சோதித்தார், அவர்கள் அனைவரும் அந்தச் சோதனையில் வெற்றி பெற்றார்கள். பென்யமீன் அடிமையாகச் செல்வதைக் காண்பதை விட, அவனுடைய இடத்தைத் தாங்களே ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள்.
அருமையானவர்களே, பின்னாளில், இதே யூதாவின் வம்சத்தில் ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ (இயேசு கிறிஸ்து) வந்தார். அவரே பாவிகளாகிய நமக்காக தண்டனையை ஏற்றுக்கொண்டவர்.
ரோமர் 5:8 வாசிக்கிறேன் கவனியுங்கள்.
‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்’
……………………………
நம் பாவங்களுக்கான தண்டனையை இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டபடியால், அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் பாவ மன்னிப்பும் , நம் மரணத்திற்குப் பின் நித்தியமான வாழ்க்கையும் உண்டு, இந்த வார்த்தைகளை கவனமாய் கேட்ட உங்களுக்கும் கர்த்தர் தாமே அந்த ஆசீர்வாதத்தை தருவாராக ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
