ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 42:5-43:15
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 42:5-43:15
நிகழ்ச்சி எண்: 0060

வாசியுங்கள்

பிரியமானவர்களே நம் கடந்த நிகழ்ச்சியில் இறுதியில் ஆதியாகமம் 42 ஆம் அதிகாரத்தை படிக்க துவங்கினோம்.

அந்த நாட்களில் எகிப்தைச் சுற்றி எல்லா இடங்களிலேயும் மிகவும் பெரிய பஞ்சம் உண்டானது. ஆனால் யோசேப்பின் ஆலோசனையின்படி செயல்பட்டதால் அங்கே போதுமான உணவு தானியங்கள் இருந்தது. இதை அறிந்த கானானிலிருந்து யாக்கோபு தனது குமாரர்களில் 10 பேரை தானியம் கொள்ளும்படியாக எகிப்துக்கு அனுப்புகிறார் பென்யமீனை மட்டும் அனுப்பவில்லை என்று பார்த்தோம்.
தொடர்ந்து ஆதியாகமம் 42 ஆம் அதிகாரம் 5 வசனம் பாருங்கள்,
ஆதியாகமம் 42:5

‘5கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். ‘
……………………
இப்பொழுது ஒரு அற்புதமான நாடகத்தின் முதல் காட்சியை பார்க்க போகிறோம்..
ஆதியாகமம் 42:6

‘6யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். ‘
…………………

யோசேப்பு அவர்கள் எல்லாரையும் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூட்டமாய் மக்கள் தானியம் வாங்க வந்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால், பஞ்சம் உலகெங்கிலும் இருந்தது. எனவே அவ்வாறு யோசேப்பு கவனித்துக் கொண்டிருந்தபொழுது அந்த பத்து மனிதர்களும் வருகிறார்கள். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்புக்கு முன்பாக வந்து தரையிலே விழுந்து வணங்கினார்கள்.

அவர் எப்படி உணர்ந்திருப்பார்? இல்லையா?? இந்த காட்சியைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யோசேப்புடைய சொப்பனம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை உண்மையாகிறது. சிறுவனாய் இருக்கும்போது யோசேப்பினுடைய அரிக்கட்டு நின்றுகொண்டிருக்க மற்றவர்களுடைய அரிக்கட்டு விழுந்து வணங்கியதை அவr கனவு கண்டார்..

இப்பொழுது அது அங்கே நடைபெறுகிறது.
ஆதியாகமம் 42 : 7,8
7யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ளவந்தோம் என்றார்கள்.
8யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.
………………….
அவர் ஏன் அவர்களைக் கடுமையாக நடத்தினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் அவர்களைச் சோதிக்கிறார். அவர் அவர்களிடம் சில ஆழமான கேள்விகளைக் கேட்கப் போகிறார்.

ஆதியாகமம் 42:9-11

‘9யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். 10அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். 11நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். ‘
……………
இப்பொழுது யோசேப்பு அவர்களுக்கு பரீட்சையின் மேல் பரீட்சை வைக்கிறார்.
ஆதியாகமம் 42:12-13

’12அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். 13அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். ‘
………………………
அவர் யார் என்று அவர்களுக்குத் தெரியாதபடி, தனது குடும்பத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்ட அவர் முயல்கிறார். அவர்களை அவர் வேவுபார்ப்பவர்கள் (ஒற்றர்கள்) என்று குற்றம் சாட்டுகிறார்.
அவருக்கு முன்னால் பத்து பேர் மட்டுமே இருக்கிறார்கள். தாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் என்றும், ஒருவன் தந்தையுடன் வீட்டில் இருப்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இன்னொருவன் “இல்லை” என்று அவர்கள் நினைக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், யோசேப்பு இறந்துவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்,
இப்போது மூன்றாவது முறையாக, யோசேப்பு அவர்களை வேவுபார்ப்பவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.
ஆதியாகமம் 42:14-16

’14யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. 15உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். 16இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, ‘

………………..
யோசேப்பு தனது தம்பி பென்னியமீனுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். இந்த மனிதர்கள் உண்மையில் யோசேப்பின் மாற்றாந்தாய் சகோதரர்கள், ஆனால் பென்னியமீன் அவருடைய உடன்பிறந்த தம்பி. அவரைப் பார்க்க யோசேப்பு ஆசைப்படுகிறார். அதை நிறைவேற்றவே அவர் இந்த வழியில் முயற்சிக்கிறார்.

ஆதியாகமம் 42:17

’17அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். ‘
……………….

அவர் அவர்களை அந்த ஊர்ச் சிறையில் அடைத்து வைக்கிறார். இப்போது அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகத் தெரிகிறது, அடுத்து என்ன நடக்கும் என்று அவர்கள் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதியாகமம் 42:18

’18மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். ‘
ஆதியாகமம் 42:18
………………….
இப்பொழுது யோசேப்பு யார் என்பதைக் குறித்து அவருடைய சகோதரர்களுக்கு ஏதாவது ஒரு சிறு குறிப்பு (Inkling) கிடைத்திருக்க வேண்டும் என்றால், – அது இந்த வார்த்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும். யோசேப்பு, “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்” என்கிறார். அந்த நாட்களில் யாக்கோபின் குடும்பத்தைத் தவிர, தேவன் மேல் பக்தி கொண்ட வேறு சிலரும் இருந்தார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. பலி செலுத்துவதன் மூலமே தேவனை நெருங்க முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இருப்பினும், இந்த விஷயம் அந்த சகோதரர்களுக்குப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. எது எப்படியோ, இப்பொழுது யோசேப்பு தேவனைக் குறித்து ஒரு சாட்சியை (Testimony) பகிர்ந்து கொள்கிறார். தனது வாழ்க்கையை வழிநடத்துபவர் தேவன்தான் என்பதையும், அவருக்குரிய மகிமையையும் (Glory) கொடுக்க அவர் ஒருபோதும் தவறுவதில்லை. “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்” என்ற அவரது கூற்று, தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்தச் சகோதரர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆதியாகமம் 42:19-20
’19நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, 20உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்கு இசைந்து: ‘
……………………

இந்தச் சகோதரர்கள் இப்போது பெரியவர்கள், அவர்களில் சிலருக்கு ஐம்பது வயதுக்கு மேல் ஆகிறது. இப்போது அவர்கள் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் (Predicament) சிக்கியிருக்கிறார்கள். தேவனுக்குப் பயப்படுகிற ஒருவரால் அவர்கள் நடத்தப்படுகிறார்கள், ஆனாலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாததால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
அவர்கள் உண்மையானவர்களா என்று சோதிப்பதாக யோசேப்பு ஒரு சாக்குப்போக்கு (Pretext) சொல்கிறார். ஆனால், உண்மையில் அடுத்த முறை அவர்கள் வரும்போது தனது தம்பியான பெஞ்சமினை அழைத்து வர வேண்டும் என்பதே யோசேப்பின் விருப்பம்.
ஆதியாகமம் 42:21
’21நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
………………………..
இங்கே நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை./ அவர்கள் எபிரேய (Hebrew) மொழியில் பேசிக்கொள்கிறார்கள், அதை யோசேப்பால் புரிந்துகொள்ள முடிகிறது. யோசேப்பு இதுவரை ஒரு மொழிபெயர்ப்பாளர் (Interpreter) மூலமாகவே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அதன் அவசியம் இல்லை என்றாலும், தான் ஒரு எகிப்தியனைப் போலக் காட்டிக்கொள்வதற்காக (Posing) யோசேப்பு அப்படிச் செய்தார். இப்போது அவர்கள் தங்கள் குற்றத்தை உண்மையிலேயே ஒப்புக்கொள்கிறார்கள் (Confession).
ஆதியாகமம் 42:22
’22அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான். ‘
……………………
தாங்கள் ஒரு காலத்தில் யோசேப்பை நடத்திய விதத்திற்காகவே இப்போது தங்களுக்கு இந்தத் தண்டனை கிடைப்பதாக உணருகிறார்கள். இது தேவனுடைய பழிவாங்குதல் (Vengeance of God) என்று அவர்கள் யோசிக்கிறார்கள்.
ஆதியாகமம் 42:24.
’24அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். ‘
அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் யோசேப்பு கேட்கிறார், அது அவருடைய உள்ளத்தை உருகச் செய்கிறது. அவர் ஓடிப் போய் அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து, “சகோதரரே” என்று அழைக்க ஆசைப்படுகிறார். ஆனால், அப்படிச் செய்தால் பெஞ்சமினை இங்கே வரவழைக்க முடியாது என்பதால் அவர் அதைச் செய்யத் துணியவில்லை.
யோசேப்பு இப்போது அவர்களுக்கு ஒரு உண்மையான சோதனையை (Test) வைக்கிறார். அவர்கள் சகோதரர்களில் ஒருவரை இங்கே விட்டுச் செல்ல வேண்டும்; அப்படித் தங்கி இருப்பவர் சிமியோன் (Simeon). இதைக் கேட்டபோது யோசேப்பு மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் (Emotionally charged), அதனால் அவர் அழ வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஒருபுறம் ஒதுங்கிச் சென்று முகத்தைக் கழுவிவிட்டு, எதுவும் நடக்காதது போலத் திரும்பி வருகிறார்.
அவர்கள் ஏன் சிமியோனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. யோசேப்பு அறையை விட்டு வெளியே சென்றிருந்தபோது, சிமியோன் அங்கே தங்கி இருக்கும்படி அவருடைய சகோதரர்களே அந்தத் முடிவை எடுத்திருக்கலாம், அதை யோசேப்பு ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
ஆதியாகமம் 42:25 – 28
’25பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. ‘
’26அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள். 27தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு, 28தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள். ‘
………………….
இது தங்களுக்குக் கடவுள் கொடுத்த தண்டனை (Judgment) என்றே அவர்கள் நினைக்கிறார்கள். பொதுவாக, நாம் கொடுத்த பணம் நமக்கே திரும்பக் கிடைப்பது ஒரு நல்ல செய்தியாகவும், அற்புதமான விஷயமாகத்தான் இருக்கும் இல்லையா?
ஆனால், இந்த மனிதர்களுக்கு அது அப்படித் தோன்றவில்லை. எகிப்தில் இருக்கும் அந்தத் ஆட்சியாளர் ஏற்கனவே தங்களை இக்கட்டான நிலையில் வைத்திருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இப்போது இந்தப் பணம் திரும்பக் கிடைத்தது அவர்களுடைய கவலையை (Concern) மேலும் அதிகமாக்குகிறது.
அவர்கள் ஏன் உடனடியாக எகிப்திற்குத் திரும்பவில்லை என்று நாம் ஒருவேளை ஆச்சரியப்படலாம். அந்தச் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அவர்கள் ஒருவேளை உடனே திரும்பிப் போனால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும் (In hot water) என்று பயந்தார்கள் என்று சொல்லலாம். அந்த மனிதர் தங்களைத் திருடர்கள் என்று குற்றம் சாட்டுவார்கள் என்று அவர்கள் பயப்பட்டார்கள். அடுத்த முறை வரும்போது இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.
ஆதியாகமம் 42:29-34
’29அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: 30தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான். 31நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல. 32நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம். 33அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து, 34உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள். ‘
………………………….
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது அவர்கள் தங்கள் சகோதரனாகிய சிமியோனை அங்கு எகிப்திலே விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.
ஆதியாகமம் 42:35
’35அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். ‘
இதில் ஏதோ தந்திரம் இருக்கிறது / சூழ்ச்சி இருக்கிறது என்று தான் அவர்கள் நினைத்தார்கள்.
ஆதியாகமம் 42:36
’36அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான். ‘
…………………..
பாவம் இந்த யாக்கோபு! நாம் முன்பு பார்த்த அந்தத் தந்திரமான மனிதராக அவர் இப்போது இல்லை; அதே சமயம், பின்னாட்களில் நாம் பார்க்கப்போகும் அந்த அசைக்க முடியாத விசுவாசம் கொண்ட மனிதராகவும் அவர் இன்னும் மாறவில்லை. ஆனால், அவர் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இப்போது அவர் தற்பெருமை பேசவில்லை, மாறாக மிகுந்த விரக்தியில் இருக்கிறார். “இவை அனைத்தும் எனக்கு எதிராகவே நடக்கின்றன” என்று அவர் புலம்புகிறார். அவருடைய மகன் யோசேப்பு இப்படிச் சொல்லியிருக்க மாட்டார், ஆனால் யாக்கோபு அப்படிச் சொல்கிறார்.
ஆதியாகமம் 42:37-38
’37அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான். 38அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றான்.’
………………….
யாக்கோபின் வாழ்க்கை அந்தச் சிறுவன் பென்யமீனைச் சுற்றியே அமைந்திருந்தது. உங்களுக்குத் தெரியும், யாக்கோபு மிகவும் நேசித்த ராகேலுக்குப் பிறந்த முதல் மகன் என்பதால் யோசேப்புதான் அவருக்குப் பிடித்தமான பிள்ளையாக இருந்தான். இப்போது யோசேப்பு காணாமல் போனது அவருக்குப் பெரும் வேதனையை தந்துவிட்டது.
தற்போது, ராகேலுக்குப் பிறந்த மற்றொரு மகனையும் இழக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்றதும், அப்படி நடந்தால் தான் இறந்துவிடுவேன் என்று அவர் கூறுகிறார். உண்மையைச் சொல்லப்போனால், அவர் இறந்தே போயிருப்பார். அந்த அளவிற்கு யாக்கோபின் உயிர் பென்யமீனோடு இரண்டறக் கலந்திருந்தது. பென்யமீன் அவருடைய வலது கை போலவும், முதிய வயதில் அவருக்கு ஒரு ஊன்றுகோல் போலவும் இருந்தான். கடந்த சில ஆண்டுகளாக யாக்கோபு அவனைத்தான் முழுவதுமாகச் சார்ந்திருந்தார்.
அதே வேளையில், பாவம் சிமியோன் அங்கே சிறையில் கவலையுடன் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார்!
தொடர்ந்து 43 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
பஞ்சம் மிகவும் கொடூரமாக இருந்ததால், யாக்கோபின் மகன்கள் பென்யமீனை அழைத்துக் கொண்டு மீண்டும் எகிப்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளே தள்ளப்பட்டார்கள். அங்கே அவர்கள் மீண்டும் யோசேப்பைச் சந்தித்து, பென்யமீனை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த முறையும் யோசேப்பு தான் யார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
ஆதியாகமப் புத்தகத்திலேயே இதுதான் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் விறுவிறுப்பான அதிகாரம் என்பதில் சந்தேகமில்லை. யோசேப்பிற்கு முன்பாக பென்யமீன் வந்து நின்ற அந்தத் தருணத்தைப் போல மனதைத் தொடும் ஒரு காட்சியை நாம் பார்க்கவே முடியாது.
உண்மையில், பஞ்சத்தின் கொடுமைதான் அவர்களை மீண்டும் அந்தத் தேசத்திற்கு வரவழைத்தது. ஒருவேளை பஞ்சம் தீர்ந்திருந்தால், பாவம் சிமியோன் தன் வாழ்நாள் முழுவதையும் எகிப்து சிறையிலேயே கழித்திருக்க வேண்டியிருக்கும்—அல்லது யோசேப்பாகப் பார்த்து அவரை விடுதலை செய்யும் வரை அவர் அங்கேயே இருந்திருப்பார்.
ஆதியாகமம் 43:1-2
‘1தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. 2எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். ‘
…………………….
பஞ்சம் அத்தனை கொடியதாக இருந்தது. ஒருவேளை அவர்கள் மீண்டும் எகிப்திற்குச் செல்லாவிட்டால், தாங்கள் அனைவரும் பட்டினியால் இறந்துவிடுவோம் என்பதை யாக்கோபு உணர்ந்தார். தன் அருமை மகன் பென்யமீனைப் பிரிவது அவருக்குப் பயத்தைக்கொடுத்தாலும், குடும்ப மக்ககள் உயிர் பிழைப்புக்காக வேறு வழியின்றி அந்த கடினமான முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது.
ஆதியாகமம் 43:3-5
‘3அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். 4எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். 5அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான். ‘
……………………….
அவர்கள் குறிப்பிடும் அந்த “ம்னிதன்” வேறு யாருமல்ல, அவர்களது சகோதரன் யோசேப்புதான்; ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. அந்த மனிதன் மிகத் தெளிவான நிபந்தனை ஒன்றை அவர்களுக்கு விதித்திருந்தார், அவர் அதைச் சும்மா சொல்லவில்லை என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
யூதா தன் தந்தையிடம் மிகவும் உறுதியாகச்: “நாங்கள் அங்கே, (எகிப்திற்கு) செல்ல வேண்டுமென்றால், பென்யமீன் கட்டாயம் எங்களோடு வரவேண்டும். முன்பு நீங்கள் அவனை அனுப்ப மறுத்துவிட்டீர்கள். ஆனால், இந்த முறை அவன் எங்களோடு வரவில்லை என்றால், அங்கே போவதில் எந்தப் பயனும் இல்லை; ஏனென்றால், பென்யமீன் இல்லாமல் அந்த மனிதர் எங்கள் முகத்திலேயே விழிக்க மாட்டார்.” என்று சொல்கிறார்.
ஆதியாகமம் 43:6-7 வாசிக்கிறேன்.
‘6அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான். 7அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள். ‘
……………………….
பாவம், முதியவர் யாக்கோபு நிஜமாகவே மிகுந்த விரக்தியில் இருக்கிறார். அவர் தன் மகன்களிடம், “உங்களுக்கு இன்னும் ஒரு தம்பி இருக்கிறான் என்று அந்த மனுஷனிடம் முதலில் ஏன் தான் போய்ச் சொன்னீர்களோ?” என்று புலம்புகிறார்.
யோசேப்பிற்கு ஏற்கனவே அந்த விஷயம் தெரியும் என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனால், தன் மகன்கள் அந்த உண்மையைச் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாமே என்று யாக்கோபு ஆதங்கப்படுகிறார்.
ஆதியாகமம் 43:8-9
‘8பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும். 9அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. ‘
………………………..
யாக்கோபின் மகன்கள் தங்கள் தந்தைக்கு கொடுத்த பதில் மிகவும் நியாயமானதாக இருந்தது. அந்த “மனிதனிடம்” எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்பது அவர்கள் எண்ணமல்ல; ஆனால், அவர் அவர்களைத் துருவித் துருவி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார். தங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் அவர் வாங்கும் வரை விடப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
அப்போது, பென்யமீனுக்காக யூதா முன்வந்து பொறுப்பேற்றுக்கொள்கிறான்.
எங்களுக்கு அருமையான சகோதர சகோதரி, உங்களுக்கும் எனக்கும் இன்று ஒரு உத்தரவாதவாதி இருக்கிறார், அவர் யூதா கோத்திரத்திலிருந்து வந்தவர். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ,அவரே என் இரட்சகரானார்; என் இடத்தைப் பிடித்து, எனக்கான தண்டனையையும் இயேசு கிறிஸ்துவே ஏற்றுக்கொண்டார்.
அவருடைய எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவருடைய தகுதிக்கு என்னால் உயர்ந்து நிற்கவும் முடியவில்லை. ஆனால், கர்த்தராகிய இயேசு எனக்காக முன்வந்து, என் பிணைக்கைதியாக (Surety) மாறி, எனக்காகத் தன் உயிரையே கொடுத்தார். கிறிஸ்துவைப்பற்றிய எவ்வளவு அழகான ஒரு சித்திரத்தை நாம் இங்கே பார்க்கிறோம் இல்லையா??
ஆதியாகமம் 43:10
’10நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான். ‘
யூதா தன் தந்தை யாக்கோபிடம், “நீங்கள் ஒருவேளை பென்யமீனை எங்களுடன் வர அனுமதித்திருந்தால், இந்நேரத்திற்கு நாங்கள் எகிப்திற்குப் போய்விட்டு, மீண்டும் வீட்டிற்கே வந்து சேர்ந்திருப்போம்” என்று கூறுகிறார்..
ஆதியாகமம் 43:11
’11அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். ‘
இங்கே நீங்கள் கவனித்துப் பார்த்தால், அவர்களிடம் இல்லாத ஒரே விஷயம் தானியம் மட்டும்தான் என்பது புரியும். வாழ்வாதாரத்திற்குத் தேவையான அப்பம் (உணவு) அவர்களிடம் இல்லை. ஆனால், அவர்களிடம் தேன், பருப்பு வகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை போதுமான அளவு இருந்தன.
எனவே, அந்த அதிகாரியைச் சமாதானப்படுத்த சில பரிசுகளைக் கொடுத்து அனுப்பும்படி யாக்கோபு கூறுகிறார். “அந்த மனுஷனை எப்படியாவது தாஜா பண்ணி, அவர் மனதைக் குளிர வைப்போம்” என்பதுதான் அந்தப் பரிசுகளின் மூலம் அவர் சொல்ல வரும் உண்மையான விஷயம்.
ஆதியாகமம் 43:12-14
’12பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும். 13உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள். 14அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான். ‘
……………………..
இறுதியாக, முதியவர் யாக்கோபு வேறு வழியின்றி பென்யமீனைத் தன் மூத்த சகோதரர்களுடன் அனுப்பி வைக்க சம்மதிக்கிறார்.
இப்போது, அந்த விறுவிறுப்பான நேரம் வந்துவிட்டது—அவர்கள் அனைவரும் மீண்டும் யோசேப்பிற்கு முன்பாக வந்து நிற்கிறார்கள்!
ஆதியாகமம் 43:15
’15அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள். ‘
……………………
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, யோசேப்பின் கண்கள் அந்தப் பெரிய கூட்டத்தில் தன் தம்பி பென்யமீனை மட்டும் தனியாகக் கண்டெடுத்தபோது, அவருடைய உள்ளம் எவ்வளவு தவித்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா??!
ஒரு அதிகாரியாக அங்கே அமர்ந்திருந்தாலும், உள்ளுக்குள் தன் உடன்பிறந்த தம்பியைப் பார்த்த அந்த மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் கட்டுப்படுத்தப் போராடிக்கொண்டிருந்தார்.
யோசேப்பு மற்றும் அவருடைய சகோதரர்களின் இந்த நெகிழ்ச்சியான வரலாறு, வெறும் ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல; இந்த வேத பகுதியில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆழமான சத்தியங்கள் உண்டு.
: யாக்கோபு தன் சூழ்நிலையைப் பார்த்து, “இவை எல்லாம் எனக்கு எதிராக நடக்கிறது” என்று புலம்பினார். ஆனால், திரைமறைவில் தேவன் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகச் செய்து கொண்டிருந்தார்.
நம் வாழ்க்கையிலும் போராட்டங்கள் வரும்போது, தேவன் கைவிட்டுவிட்டார் என்று நாம் நினைக்கலாம். ஆனால், ரோமர் 8:28-ன் படி, அவர் நம் வாழ்வில் நற்கிரியையைத் தொடங்கினவர், அதை நிச்சயம் செய்து முடிப்பார். நீங்கள் கவலையை விடுங்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் செய்த பழைய பாவங்களை நினைத்து வருந்தினார்கள். அவர்கள் எபிரேய மொழியில் பேசியபோது, தங்களுக்கு நேர்ந்த துன்பம் தங்கள் தவறுக்கான பலன் என்று ஒப்புக்கொண்டனர். நம்முடைய வாழ்க்கையிலும் மெய்யான ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு முன்னால், நம்முடைய பாவங்களை தேவன் முன் அறிக்கையிட்டு மனந்திரும்புவது அவசியம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
மேலும் பென்யமீனுக்காகத் தன் தந்தையிடம் யூதா தன்னை ‘உத்தரவாதவாதியாக’ (Surety) ஒப்புக்கொடுத்தார். “அவனை நான் கொண்டு வராவிட்டால், அந்தக் குற்றம் எந்நாளும் என்மேல் இருக்கட்டும்” என்று பொறுப்பேற்றார். இதைப் போலவே, நமக்காகத் தம்மைக் கொடுத்தவர் யூதா கோத்திரத்துச் சிங்கமாகிய இயேசு கிறிஸ்து.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே, நம்முடைய பாவக் கடனைத் தீர்க்கவோ, தேவனுடைய பரிசுத்தத் தரத்திற்கு உயர்ந்து நிற்கவோ / நம்மால் முடியாது. ஆனால், நமக்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முன்வந்து, நம்முடைய தண்டனையைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு, நமக்காகத் பிணையாக (Surety) மாறித் தன் உயிரையே தந்தார். யோசேப்பு எப்படித் தன் சகோதரர்களைச் சோதித்தாலும் இறுதியில் அவர்கள் மேல் அன்பு கூர்ந்தாரோ, அப்படியே தேவன் நம்மைச் சோதனைகள் மூலம் புடமிட்டு, தம்முடைய அளவற்ற அன்பிற்குள் வழிநடத்துகிறார்.”
இப்படிப்பட்ட உன்னதமான இயேசு கிறிஸ்துவயை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? சிந்தித்துப்பாருங்கள்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top