ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 41:14-42:4
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 41:14-42:4
நிகழ்ச்சி எண்: 0059

வாசியுங்கள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
இந்த நாட்களில் நாம் யோசேப்பின் வாழ்க்கை வரலாற்றை கற்று வருகிறோம்.
கடந்த நிகழ்ச்சியில் நாம் பார்த்தது போல, இரண்டு ஆண்டு காலம் யோசேப்பை மறந்து போன பானபாத்திரக்காரன், இப்பொழுது பார்வோன் சொப்பனம் கண்டவுடன் தனது சொப்பனத்திற்கான அர்த்தத்தை சரியாக கொடுத்தது யோசேப்பு என்பதை நினைவு படுத்தி பார்க்கிறான். உடனே பார்வோனிடத்தில் யோசேப்பைக் குறித்து சொன்னான்.
தொடர்ந்து என்ன நடக்கிறது பாருங்கள்.

ஆதியாகமம் 41:14

’14அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். ‘
……………………..

கவனித்தீர்களா? யோசேப்பு சவரம் (shave) செய்து கொண்டார். கவனியுங்கள். அக்காலத்தில் எபிரேயர்கள் சவரம் செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் எகிப்தியர்களின் சிலைகளையும் ஓவியங்களையும் கவனித்திருக்கிறீர்களா? அவை எகிப்தியர்கள் சுத்தமாக சவரம் செய்தவர்களாக இருந்ததைக் காட்டுகின்றன. பல ஆட்சியாளர்கள் தங்களுக்கு ஒரு கௌரவத்தைச் சேர்ப்பதற்காக ஒரு சிறிய தாடியை (goatee) வைத்திருந்தார்கள். அவர்களால் சொந்தமாக வளர்க்க முடியாவிட்டால், ஒரு செயற்கை தாடியை அணிந்து கொண்டார்கள். ஆனால் பொதுவாக, எகிப்தியர்களின் முகத்தில் முடி இருக்காது.
இதில் ஒரு மிகச்சிறந்த செய்தி இருக்கிறது. இந்த மனிதன் இப்போது சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப்படுகிறான். அவன் சவரம் செய்துகொண்டு, சிறை ஆடைகளை மாற்றிவிட்டு, அரசவைக்கு ஏற்ற பொருத்தமான உடைகளை அணிந்து கொள்கிறான். அவனுக்கு முன்னால் ஒரு புதிய வாழ்க்கை இருக்கிறது. இது யோசேப்புக்கு ஒரு மறுபிறவி போல இருக்கிறது; இப்போது யோசேப்பு பிற இனத்தவர்களிடம் செல்கிறார். இதுவும் கிறிஸ்துவைப் பற்றிய ஒரு சித்திரத்தை நமக்குக் காட்டுகிறது என்று சொல்லலாம்!
ஆதியாகமம் 41:15,16
’15பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். ‘
’16அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான், ‘
………………………..
நாம் செய்யும் ஒவ்வொரு சாதனைக்கும் பெருமை கடவுளையே சேரும்படி மிக கவனமாக பேச வேண்டும். நாம் செய்யும் ஒரு காரியம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக அமைகிறது என்றால், அதற்கு நம் மூலம் கடவுள் செயல்படுகிறார் என்பதுதான் காரணம்.
யோசேப்பு இதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர், தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்று கூறுகிறார்.
இதையடுத்து, பார்வோன் தான் கண்ட கனவுகளை யோசேப்பிடம் கூறுகிறார். உண்மையில், அது இரண்டு பகுதிகளாகக் கண்ட ஒரே கனவுதான்;
ஆதியாகமம் 41:25
’25அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். ‘
……………………….

அந்தக் கனவுகள் இரண்டு அல்ல, ஒன்றுதான் —இரண்டுமே ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசுகின்றன. மேலும், இந்தக் கனவு பார்வோனுக்கு இரண்டு முறை மீண்டும் மீண்டும் வந்திருப்பதற்குக் காரணம் இது மிகவும் முக்கியமானது.

ஆதியாகமம் 41:26-31

’26அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. 27அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். 28பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். 29எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். 30அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். 31வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். ‘
………………….
கவனித்தீர்களா?? இது ஒரு தீர்க்கதரிசனம் அதாவது முன்கூட்டியே சொல்லப்படும் செய்தி. முதலில் ஏழு ஆண்டுகள் மிகுந்த செழிப்பு இருக்கும், அதைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கடும் பஞ்சம் ஏற்படும்.”

ஆதியாகமம் 41:32

’32இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. ‘
…………………….
இந்தப் பஞ்சம் கடவுளால் தீர்மானிக்கப்பட்டது, அதை பார்வோன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இப்போது, பார்வோனுக்கு யோசேப்பு நல்ல ஒரு ஆலோசனையும் கொடுக்கிறார்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்,

ஆதியாகமம் 41:33-37

’33ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. 34இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக, 35அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக. 36தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான். 37இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. ‘
…………………….
“ஏழு செழிப்பான ஆண்டுகளில் கிடைக்கும் அதிகமான் தானியங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, பஞ்சம் வரப்போகும் பற்றாக்குறையான வருடங்களுக்காகச் சேமித்து வைக்குமாறு யோசேப்பு பார்வோனுக்கு ஆலோசனை கொடுக்கிறார்.
ஆதியாகமம் 41:38-41
’38அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். 39பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. 40நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். 41பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, ‘
………………………..
கவனித்தீர்களாக?? ஆரம்பத்தில் இந்த இளைஞன் சிறைச்சாலையின் ஒரு மூலையில், அனைவராலும் மறக்கப்பட்டு, கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் இருந்தார். ஆனால், இப்போது சரியான நேரத்தில் அவர் வெளியே கொண்டு வரப்படுகிறார்; ஏனென்றால் பார்வோனின் கனவுக்கு யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை. யோசேப்பு அதற்கு விளக்கம் கொடுத்தது மட்டுமல்ல ஒரு திறமையான மனிதராகத் தனக்கிருந்த ஆர்வத்தினால், பார்வோன் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறுகிறார். நிச்சயமாக, இவை அனைத்திலும் கடவுளே யோசேப்பை வழிநடத்துகிறார்.
உலகம் முழுவதும் ஒரு பஞ்சம் ஏற்படப் போகிறது, அந்தப் பஞ்சம் எகிப்தையும் பாதிக்கும் அளவுக்கு மிகக் கொடூரமாக இருக்கும். எகிப்து ஒரு நீர்ப்பாசனமுள்ள நாடு என்பதால், அது மழையை மட்டும் நம்பி இருப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வரும் மேல் நைல் / மற்றும் நீல நைல் நதிகள் எகிப்துக்குத் தேவையான நீரை வழங்குகின்றன. ஒரு நல்ல ஆண்டிலேயே எகிப்தில் ஒரு அங்குல அளவுதான் மழை பெய்யும்; எனவே மழையைப் பொறுத்தவரை அது எப்போதும் பஞ்சம் நிலவும் இடம்தான். ஆனால், நைல் நதி ஒவ்வோர் ஆண்டும் நிலத்தில் பொங்கிப் பாய்ந்து, தண்ணீரைத் தருவதுடன், மண்ணை வளப்படுத்தும் வண்டல் மண்ணையும் கொண்டு வருகிறது. இருந்தாலும், எகிப்தையும் பாதிக்கக்கூடிய வகையில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரும் என்று கர்த்தர் எச்சரித்தார்.
யோசேப்பு சொல்வதை கவனித்துக் கொண்டிருந்த பார்வோனுக்கு யோசேப்பு கூறிய காரியங்கள் அர்த்தம் நிறைந்தது என்பது புரிந்தது.
மேல்நாடு ஒன்றிலே அரசாங்கத்திலே இருந்த உயர் அதிகாரியான கிளாட்ஸ்டன் என்பவரைப் பார்த்து சிறந்த ஒரு மனிதனுக்கான அளவுகோல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?. அடுத்த 50 ஆண்டுகளாக தேவன் எப்படி செயல்படப்போகிறார் என்பதை அறிந்திருக்கிற மனிதனே சிறந்தவன் என்று கூறினார்.
ஆதியாகமப் புத்தகத்திலே அடுத்த பதினான்கு ஆண்டுகள் என்ன நடைபெறப் போகிறது என்பதை தேவன் பார்வோனுக்கு வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவர்கள் இன்றும் நம்முடைய தேசத்திற்கும், உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்திற்கும் தேவை. பிரியானவர்களே, நம்முடைய தேசத் தலைவர்களுக்காக நாம் ஒவ்வொருவரும். ஒவ்வொரு நாளும் கர்த்தரை நோக்கி ஜெபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் தேவனுடைய சித்தத்தையும் தேவனுடைய நோக்கங்களையும் அறிந்து கொள்ளும் மனமுடையவர்களாய் வாழவேண்டும்.
சரி, இப்பொழுது இவ்வளவு பொறுப்புகளையும் யோசேப்பைத் தவிர வேறு யார் எடுத்துச் செய்யமுடியும்? யோசேப்பின் வார்த்தைகளைக் கேட்ட பார்வோன் உடனடியாக யோசேப்பின் திறமைகளைப் புரிந்து கொள்கிறான். எப்படி தேவன் யோசேப்புக்கு போத்திபாரின் வீட்டிலே பயிற்சி கொடுத்தார். கவனித்தீர்களா? பல வேளைகளிலே அவன் வீட்டிற்குள்ளே ஏன் போயிருக்க வேண்டும் என்று கூட நாம் யோசித்தோம். ஆனால் போத்திபாரின் வீட்டிலே யோசேப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி இருந்தது. எல்லாம் தனக்கு சொந்தமாயிருக்கும் வேளையிலேயும் யோசேப்பு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.
இப்பொழுது ஒரு வீடு மட்டுமல்ல. ஒரு தேசம் முழுவதும் யோசேப்பின் கரங்களின் கீழே வருகிறது. அவனுடைய வாழ்க்கையிலே எத்தனை அற்புதமான ஒரு மாற்றம் இல்லையா?. சிறையின் பின்னாலே கிடந்தவர் பார்வோனின் அரியணைக்கு பக்கத்து அரியணைக்கு வந்துவிட்டார்.
உங்களையும் கர்த்தர் உயர்த்தும் முன்பாக, தாழ்வான இடங்களை நீங்கள் கடந்து வரும்படியாகச் செய்வார். அப்படிப்பட்ட எல்லா இடங்களிலேயும் நீங்கள் உண்மை உள்ளவர்களாய் இருக்கும்பொழுதுதான் தேவன் உங்களை நம்பி பெரிய காரியங்களைக் கொடுக்க முடியும்.
ஆதியாகமம் 41:42
’42பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, ‘
……………………….
, அந்த மோதிரத்தில் ஒரு முத்திரை (Signet) இருந்தது. அதை மெழுகில் பதிக்கும்போது, அது பார்வோனின் கையெழுத்திற்கு இணையான அதிகாரத்தைக் கொடுக்கும். இப்பொழுது பார்வோன் யோசேப்பைத் தனது பிரதிநிதியாக (Agent) மாற்றுகிறார். இதன் மூலம் பார்வோனின் கையெழுத்தைப் பயன்படுத்தும் உரிமை யோசேப்புக்குக் கிடைக்கிறது.
ஆதியாகமம் 41:43-45
’43தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்; 44பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான். 45மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். ‘
…………………………
யோசேப்பு என்ற பெயர் நமக்குச் சொல்ல நன்றாக இருக்கிறது. ஆனால் பார்வோன் சாப்நாத்பன்னேயா என்ற பெயரைக் கொடுத்தான். இது ஒரு காப்டிக் (Coptic) மொழிப் பெயர்; இதற்கு ‘மறைபொருள்களை வெளிப்படுத்துபவர்’ என்று அர்த்தம்.
ஆதியாகமம் 41:46
’46யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். ‘
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இங்கே யோசேப்பின் வயது நமக்குக் குறிப்பிடப்படுகிறது; அவர் எகிப்து தேசத்திற்கு வந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். பானபாத்திரக்காரர் மற்றும் சுயம்பாகியின் (butler and baker) சம்பவத்திற்குப் பிறகு, அந்த ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார் என்பது நமக்குத் தெரியும். அதற்கு முன்பே அவர் ஓராண்டு அல்லது அதற்கு மேல் சிறையில் இருந்திருக்கலாம். எனவே, அவர் போத்திப்பார் வீட்டில் சுமார் பத்து ஆண்டுகள் இருந்திருக்கக்கூடும். எகிப்து தேசத்தில் அவர் இருந்த காலக்கட்டம் எப்படிப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதலை இது நமக்கு கொடுக்கிறது.
எகிப்தில் கழிந்த இந்தப் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யோசேப்பு ஒரு நாட்டின் ‘பிரதம மந்திரிக்கு’ இணையான பதவியில் அமர்கிறார். யோசேப்பை ஏற்றுக்கொள்வதற்கு பார்வோன் ஏன் இவ்வளவு தயாராக இருந்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அதற்கான முதல் காரணம், நிச்சயமாக கடவுள் அவரோடு இருந்தார் என்பதுதான். ஆரம்பத்திலிருந்தே நாம் அதைத் தான் பார்த்து வருகிறோம். கடவுளின் கரம், அவரது பராமரிப்பின் மூலம், யோசேப்பை வழிநடத்தியது.
யோசேப்பை பார்வோன் இவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டதற்கு மற்றொரு நடைமுறை காரணமும் இருக்கலாம். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, அந்த காலத்தில் எகிப்தை ஆண்ட பார்வோன் மன்னர் ‘ஹைக்சோஸ்’ (Hyksos) இனத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஹைக்சோஸ் மன்னர்கள் எகிப்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள் அரேபியப் பாலைவனத்திலிருந்து வந்த நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்கள். (இவர்கள் பெடோயின்கள் என்றும் அழைக்கப்படுகிறர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவர்கள் எகிப்திற்குள் புகுந்து, அதன் அரியணையைக் கைப்பற்றினார்கள். இது உண்மையாக இருக்கும்என்றால், தேசிய இன அடிப்படையில் அந்த பார்வோன் எகிப்தியர்களை விட யோசேப்பிற்கு மிகவும் நெருக்கமானவர். இதுவே யோசேப்பின் மீது மன்னருக்கு நம்பிக்கை வரக் காரணமாக இருந்தது.
உண்மையில், இந்த ஹைக்சோஸ் மன்னர்களுக்கு தங்களுக்கு உண்மையாக இருக்கக்கூடிய ஆட்களை எகிப்தியர்களிடையே கண்டறிவது கடினமாக இருந்தது. ஆனால், யோசேப்பு மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். தன் வாழ்வில் கடவுள் செயல்படுகிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை யோசேப்பிடம் இருந்ததால், தான் யாரிடம் பணியாற்றினாலும் அவர் உண்மையுள்ளவராக இருந்தார்.
சுருக்கமாகச் சொன்னால், மன்னருக்கும் யோசேப்பிற்கும் இடையிலான இன ரீதியான தொடர்பு, யோசேப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கலாம். அதேபோல், யோசேப்பும் மன்னருக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதை நாம் இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.
பிற்காலத்தில் இந்த ‘ஹைக்சோஸ்’ மன்னர்கள் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
யாத்திராகமம் 1:8-பாருங்கள்.
, “‘8யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். ‘
………………….
எபிரெய மக்களைஒடுக்கிய அந்தப் புதிய பார்வோனுக்கு, எபிரேய மக்கள் மீது எந்தவிதமான இன உணர்வோ அல்லது பரிவோ நிச்சயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை!
மேலும் பார்வோன் யோசேப்பின் கழுத்தில் பொன் சரப்பணியை அணிவித்தார். இது பார்வோனுக்கு இருந்த அதே அதிகாரத்தை யோசேப்பிற்கும் வழங்கியது. மேலும், பார்வோன் அவருக்கு ‘ஓன்’ (On) பட்டணத்து பூசாரியின் மகளைத் திருமணம் செய்து வைத்தார்.
அவருடைய பெயரான ஆஸ்நாத் (Asenath) என்பதற்கு “நீத் தேவதைக்கு அதாவது எகிப்திய மினெர்வா தேவதைக்கு அர்ப்பணிக்கப்பட்டவள்” என்று பொருள். தெளிவாகச் சொல்வதென்றால், அவள் அந்நிய வழிபாட்டுப் பின்னணியில் இருந்து வந்தவள்……..
சரி, யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையோடு மற்றொரு சுவாரஸ்யமான ஒற்றுமையைக் காட்டுகிறது.
யோசேப்புக்கு ஒரு புறஜாதிப் பெண் (எகிப்தியர்) மணமகளாகக் கிடைத்தார். அதேபோல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தற்போது இந்த உலகத்திலிருந்து ஒரு புறஜாதி மணமகளைத் தமக்காக அழைத்துக்கொண்டிருக்கிறார்; அதையே நாம் ‘சபை’ (The Church) என்று அழைக்கிறோம்.
இதே வசனத்தில் மற்றுமொரு ஒற்றுமையும் இருக்கிறது. யோசேப்பு பார்வோன் மன்னன் முன்பாக நின்றபோது அவருக்கு முப்பது வயது. நமது கர்த்தராகிய இயேசுவும் தமது ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்கு முப்பது வயதுதான்.
ஆதியாகமம் 41:47-48
’47பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. 48அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். ‘
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கவனியுங்கள் – யோசேப்பு தானியங்களை “அந்தந்த நகரங்களிலேயே சேமித்து வைத்தார்”. பின்னாளில் மக்களுக்கு எளிதாக விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் முன்கூட்டியே திட்டமிட்டார்.
1930-களில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியின் (The Great Depression) போது, சிகாகோ மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களிலும் கூட மக்கள் உணவிற்காக நீண்ட வரிசையில் நின்றார்கள். அந்த நேரத்தில் உணவு ஏராளமாக இருந்தபோதிலும், அதைச் சரியாக விநியோகம் செய்வதில் (Distribution) சிக்கல் இருந்தது.
ஆனால், யோசேப்பு மிகவும் நடைமுறைக்கு உகந்த ஒரு காரியத்தைச் செய்கிறார்:
ஆதியாகமம் 41:49
’49இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. ‘
……………………
யோசேப்பின் சிறந்த நிர்வாகத்தின் கீழ் எகிப்து தேசம் அந்த காலத்திலேயே உலகின் ‘உணவுக் கிண்ணமாக’ (Breadbasket) இருந்தது.
சரி, இப்பொழுது யோசேபின் குடும்பத்தைக் குறித்த சில குறிப்புகளைப் பார்ப்போம்.
பாருங்கள். ஆதியாகமம் 41:50-52
’50பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். 51யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். 52நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். ‘
……………………..
பஞ்சக்காலம் தொடங்குவதற்கு முன்பே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவர் தனது மூத்த மகனுக்கு ‘மனாசே’ (Manasseh) என்று பெயரிட்டார். இதற்கு “கடவுள் என்னை மறக்கச் செய்தார்” என்று பொருள்.
வேடிக்கையாகச் சொல்லப்போனால், அவனுக்கு ‘அம்னீஷியா’ அல்லது (Amnesia – நினைவாற்றல் இழப்பு) என்று கூடப் பெயரிடலாம்! ஏனென்றால், யோசேப்பு தனது பணிகளில் எவ்வளவு மூழ்கிப்போயிருந்தார் என்றால், அவர் தனது தந்தையின் வீட்டையே மறந்துவிட்டார். ஆரம்பத்தில் அவர் வீட்டை நினைத்து ஏங்கிய (Homesick) ஒரு சிறுவனாக இருந்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை.
அடுத்த மகனுக்கு அவர் ‘எப்பிராயீம்’ (Ephraim) என்று பெயரிட்டார். இதற்கு “செழிப்பு” (Fruitful) என்று பொருள். முதல் மகனை ‘அம்னீஷியா’ என்று அழைத்தது போலவே, இந்தப் பையனை நீங்கள் ‘அம்ப்ரோசியா’ அதாவது (Ambrosia – தேவாமிர்தம் போன்ற இனிமையும் செழுமையும்) என்று அழைக்கலாம்!
ஆதியாகமம் 41:53
’53எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், ‘
………………..
இப்போது அந்த ஏழு ஆண்டுகால அபரிமிதமான விளைச்சல் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல் கொடிய பஞ்சக்காலம் (Famine) தொடங்கப்போகிறது.
ஆதியாகமம் 41:54-55
’54யோசேப்பு சொல்லியபடி ஏழுவருஷ பஞ்சம் தொடங்கினது; சகலதேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. 55எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான். ‘
………………
பஞ்ச காலத்தில் உலகமே பசியால் தவித்தபோது, யோசேப்பிடம் மட்டுமே உணவு இருந்தது. இது இயேசு கிறிஸ்துவோடு மற்றுமொரு அற்புதமான ஒற்றுமையைக் காட்டுகிறது.
யோசேப்பு எப்படி எகிப்தியர்களுக்கும் மற்ற தேசத்தாருக்கும் அழியக்கூடிய உணவை வழங்கி அவர்களைக் காப்பாற்றினாரோ, அப்படியே இயேசு கிறிஸ்துவும் தன்னிடம் வருகிறவர்களுக்கு அழிவில்லாத நித்திய வாழ்வைத் தரும் ‘ஜீவ அப்பமாக’ இருக்கிறார்.
ஆதியாகமம் 41:56-57
’56தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. 57சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.’
…………………….
கவனித்தீர்களா??
இந்த பஞ்சம் சகல தேசத்தையும் பாதித்திருந்தது.

தொடர்ந்து 42 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
யோசேப்பின் வாழ்க்கையில் இப்போது மிக முக்கியமான, விறுவிறுப்பான சம்பவங்கள் அரங்கேறத் தொடங்குகின்றன. பஞ்ச காலத்தில் இஸ்ரவேல் இனத்தையே காப்பாற்ற யோசேப்பை கடவுள் எப்படிப் பயன்படுத்தினார் என்ற திட்டம் இப்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
சிறையிலே அடைப்பட்டு கிடந்த பொழுது இந்த காரியங்களையெல்லாம் யோசேப்பின் கண்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் தேவன் ஏதோ நன்மைக்காக இதையெல்லாம் அனுமதிக்கிறார் என்பதை மட்டும் யோசேப்பால் விசுவாசித்து காத்திருக்க முடிந்தது..
அந்த விசுவாசத்தின் உற்சாகம் எதையுமே சாதிக்க முடியும் என்ற தைரியத்தைக் கொடுத்தது,
நம்முடைய வாழ்க்கையிலேயும் விசுவாசம் இருக்குமென்றால் உற்சாகம் இருக்கும். விசுவாசம் இருக்குமென்றால் எதையுமே நாம் செய்யமுடியும் என்ற உறுதியும் நமக்கு இருக்கும். எந்த மழையோ மேகமோ நம்மை தடைசெய்ய முடியாது. இன்று நம்மிலே அநேகர் சின்ன சின்னக் காரியங்கள் வந்தாலும் திட்டமிடுகிற காரியங்களிலே பின்வாங்கிப் போய் விடுகிறோம்.
பஞ்சகாலமானது உலகெங்கும் பரவிவிட்டது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்து மக்கள் எகிப்துக்கு வருகிறார்கள். பஞ்சமானது யாக்கோபையும் தனது பத்து குமாரர்களையும் உணவு வாங்குவதற்காக எகிப்திற்கு அனுப்பச் செய்கிறது.
ஏன்? பத்துக் குமாரர்கள் மட்டும்?? ஏன்? பென்யமீனை யாக்கோபு அனுப்பவில்லை. பென்யமீனையும் அவன் இழந்துபோக விரும்பவில்லை. பென்யமீனை இழந்து போனால் யாக்கோபும் மரித்துப் போவார். அதுதான் நிலைமை. இப்படி யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்கு வந்தபொழுது யோசேப்பு அவர்களை இனம் கண்டுகொள்கிறார். ஆனால் அவர்கள் யோசேப்பை இனம் கண்டுகொள்ளவில்லை. ஏன்? அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன,
முதலாவதாக யோசேப்பு மரித்துப் போனான் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். யோசேப்பை அவர்களுடைய கண்கள் தேடவேயில்லை, மீண்டுமாக சந்திக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், யோசேப்போ அவர்களை சந்திப்பேன் என்று எதிர்பார்த்திருந்தார்.
அதுமட்டுமல்ல அநேக வருடங்கள் உருண்டோடிவிட்டன. யோசேப்பு விற்கப்பட்டபோது, பதினேழு வயதுடையவனாய் இருந்தார். இப்பொழுது பஞ்சம் ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் ஓராண்டிற்குப் பிறகு அவர்கள் வருகிறார்கள். எனவே 21 வருடங்களாக யோசேப்பை அவர்கள் பார்க்கவில்லை. யோசேப்பிற்கு இப்பொழுது கிட்டத்தட்ட 40 வயதாகிறது. யோசேப்பு எகிப்தியனைப் போல உடையணிந்திருக்கிறார். எகிப்தியர்களின் மொழியிலே பேசுகிறார். எகிப்தியனைப் போலவே நடந்து கொள்கிறார்.
அங்கே தொடர்ந்து யாக்கோபின் வீட்டில் என்ன நடக்கிறது பாருங்கள்.
ஆதியாகமம் 42:1
‘1எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? ‘
………………….
“அவர்கள் எங்கே போவது அல்லது என்ன செய்வது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் மிகவும் சோகமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆதியாகமம் 42:2
‘2எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். ‘
……………………..
அருமையானவர்களே, இது யாக்கோபின் விசுவாசத்தை நமக்குக் காட்டுகிறது. இன்று அநேகர் விசுவாசம் என்றாலே எங்களுக்குப் புரியாததாக இருக்கிறது. எப்படி விசுவாசிக்க என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று சொல்வார்கள்.

ஒருமுறை ஊழியர் ஒருவர் விசுவாசிக்க மனதில்லாத ஒரு மனிதனிடத்திலே பேசும்பொழுது அவனுடைய வாக்குவாதம் என்ன தெரியுமா? நான் எப்படி விசுவாசிக்க வேண்டும் என்று கேட்டான். இங்கே கவனியுங்கள், யாக்கோபு எப்படி விசுவாசித்தார்? ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் குறித்துக் கேள்விப்படுகிறார். அதாவது எகிப்திலே தானியம் உண்டு என்று கேள்விப்படுகிறார். அதை அவன் விசுவாசித்தார்.. அந்த உணவு அவர்கள் ஜீவனைக் காக்கும் என்று விசுவாசித்தார். அந்த விசுவாசத்தின் அடிப்படையிலே செயல்பட ஆரம்பித்தார்..
அங்கே போய் நமக்காக தானியம் கொள்ளுங்கள் என்று தனது குமாரர்களிடத்திலே சொன்னார். இதுதான் இரட்சிக்கும் விசுவாசம் என்பது. நான் எப்படி இயேசுவினிடத்திலே விசுவாசம் வைப்பது என்று சிலர் கேட்பார்கள். சற்றே கற்பனை செய்து பாருங்கள். யாக்கோபு தனது பத்துக் குமாரர்கள் முன்னாலும் நின்று, எகிப்திலே தானியம் உண்டு என்று கேள்விப்படுகிறேன். ஆனால் அதை எப்படி விசுவாசிப்பது என்று அவர்
கேட்கவில்லை. விசுவாசிப்பது என்றால் அதைக் குறித்து செயல்படுவதுதான் விசுவாசம்.
வேதம் என்ன சொல்கிறது?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி; அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
நீங்கள் ஒரு குறிப்பிட்டக் காரியத்தைக் கேட்கிறீர்கள். அதை விசுவாசிக்கிறீர்கள்.. இதைப் போலத்தான் நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினாலே நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறீர்கள்.
ஆதியாகமம் 42:3, 4
மோசம் வந்தால் என்ன ஆகும்? இந்தப் பத்துக் குமாரர்களும் பெரியவர்கள். அதுமட்டுமல்ல, பென்யமீனுக்கு மோசம் வந்தால் யாக்கோபால் அதைத் தாங்க முடியாது. ஏனென்றால், பென்யமீனும் யோசேப்பும் தான் யாக்கோபு அதிகமாக நேசித்த அவனுடைய மனைவியாகிய ராகேலின் பிள்ளைகள். எனவே, பென்யமீனைத் தன்னோடு வைத்துக் கொண்டு, மற்ற பத்துக் குமாரர்களையும் அனுப்புகிறார்.
ஆதியாகமம் 42:3-4
‘3யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். 4யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. ‘
…………………………
ஒருவேளை மற்ற பத்து பிள்ளைகளுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது? சரி, ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் பெரியவர்கள் ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், மற்றவர்களை இழப்பதை விட பென்யமீனை இழப்பதுதான் யாக்கோபை அதிகம் பாதிக்கும்.
ஏனென்றால், பென்யமீனும் யோசேப்பும் ராகேலின் பிள்ளைகள். ராகேல் தான் யாக்கோபு ஆழமாக நேசித்த மனைவி. அதனால்தான், இப்போது அவர் மற்ற பத்து பேரையும் வெளியே அனுப்பிவிட்டு, பென்யமீனை மட்டும் தன்னுடனேயே வைத்துக்கொள்கிறார்.
யோசேப்பின் வாழ்க்கை வரலாறு நமக்கு வெறும் கதையல்ல, அது ஒரு விசுவாசியின் பயணத்திற்கான வழிகாட்டி. இந்த அதிகாரத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் மூன்று முக்கிய ஆவிக்குரிய உண்மைகளை, நினைவு படுத்திக் கொள்வோம்.
பார்வோன் யோசேப்பின் திறமையைப் பாராட்டியபோது, அவர் “நான் அல்ல, தேவனே…” என்று கூறி கர்த்தருக்கே மகிமை செலுத்தினார். நம் வாழ்வில் நாம் பெறும் வெற்றிகள், உயர்வுகள் மற்றும் அங்கீகாரங்களின் போது, நம்மை முன்னிலைப்படுத்தாமல் நம் மூலம் செயல்படும் தேவனை உயர்த்துவதே உண்மையான விசுவாசம். யோசேப்பு சிறையிலும் சரி, அரியணையிலும் சரி, கர்த்தரை மறக்கவில்லை.
யோசேப்பு தனது பழைய சிறை ஆடைகளைக் களைந்து, சவரம் செய்து, புதிய உடைகளை அணிந்து பார்வோன் முன் நின்றது, நம்முடைய ஆவிக்குரிய மாற்றத்திற்கு ஓர் அடையாளம். கிறிஸ்துவுக்குள் நாம் ஒரு புதிய சிருஷ்டியாக மாறும்போது, நமது பழைய பாவ இயல்புகளையும், கவலைகளையும் களைந்துவிட்டு, ஒரு புதிய அடையாளத்துடன் (Resurrection Life) புறப்பட வேண்டும்.
3வதாக
யாக்கோபு எகிப்தில் தானியம் உண்டு என்று கேள்விப்பட்டபோது, அதை அப்படியே நம்பி சும்மா இருந்துவிடவில்லை. தன் குமாரர்களை அனுப்பினார். “கேள்விப்படுதல், நம்புதல், செயல்படுதல்” — இதுவே இரட்சிப்புக்கான விசுவாசம். நாம் இயேசு கிறிஸ்துவே ‘ஜீவ அப்பம்’ என்று கேள்விப்படுகிறோம்; அதை விசுவாசித்து அவரிடம் வரும்போது, பஞ்சமான இந்த உலகில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம்.
: யோசேப்பு இருண்ட சிறையில் இருந்தபோது எகிப்தின் அரியணையை அவர் பார்க்கவில்லை, ஆனால் அரியணையைத் தரப்போகும் தேவனைப் பார்த்தார். இன்று உங்கள் சூழ்நிலைகள் இருளாகத் தோன்றினாலும், தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களைத் தாழ்விலிருந்து உயர்த்துவார்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top