ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 40:1-41:13
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 40:1-41:13
நிகழ்ச்சி எண்: 0058

வாசியுங்கள்

அருமையானவர்களே மீண்டும் தொடர்ந்து கர்த்தருடைய வசனத்தை கற்றுக்கொள்ள எங்களோடு நீங்கள் இணைந்திருப்பதற்காக கர்த்தரை துதிக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் இன்றும் நாம் கற்றுக் கொள்ளப் போகிற வேத வசனங்கள் உங்களுக்கு நிச்சயமாய் பயனுள்ளதாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.

இந்த அதிகாரம், இதுவரை பரப்பரப்பாக சென்று கொண்டு இருந்த யோசேப்பின் வாழ்க்கை மேலும் யோசேப்பை அடுத்த கட்டத்திற்கு வேகமாகக் கொண்டு செல்லாமல் அதன் நகர்வையே முற்றிலுமாக நிறுத்திவிட்டது போலத் தெரிகிறது. யோசேப்பு சிறையில் இருப்பதையும், பார்வோனின் பானபாத்திரக்காரன் காட்டிய நன்றியற்ற செயலால் யோசேப்பின் விடுதலை தாமதமாவதையும், அவர் ஒரு எல்லைக்குள் முடக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம். “இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று வேளை நாம் யோசிக்கலாம்.
இவை அனைத்துமே யோசேப்பின் வாழ்க்கையில் கடவுளுடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன என்று திட்டமாய் நாம் சொல்ல முடியும். நாம் இந்த அதிகாரத்தை தொடர்ந்து ஆழமாகச் படிக்கும் பொழுது, இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.
ஆதியாகமம் 40:1-3
‘1இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். 2பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு, 3அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான். ‘
………………
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையானவர்களே,இது தற்செயலாக நடந்தது அல்ல!
இது எதைக் காட்டுகிறது? எகிப்திய பார்வோன் மன்னர்கள் எவ்வளவு தன்னிச்சையாகவும், சர்வாதிகாரப் போக்கோடும் ஆட்சி செய்தார்கள் என்பதை இது நமக்குத் தெளிவாக்குகிறது. அந்தச் சுயம்பாகி அதாவது சமையல்காரர் என்ன தவறு செய்தார் என்று நமக்குத் தெரியாது—ஒருவேளை அவர் காலை உணவை சற்று கருகச் செய்திருக்கலாம். பார்வோன் தனது ஏதோ ஒரு மனப்போக்கினால் அவரைச் சிறையில் தள்ளிவிட்டார்.
பானபாத்திரக்காரன் என்ன செய்தார்? ஒருவேளை அவர் பார்வோனுக்குத் திராட்சரசம் கொண்டு வரும்போது கால் தடுக்கி, அங்கிருந்த விலையுயர்ந்த கம்பளத்தின் மீது அதைச் சிந்தியிருக்கலாம். நமக்குத் தெரியாது. அவர்கள் இருவரும் ஏன் சிறைக்கு வந்தார்கள் என்று வேதம் நமக்குச் சொல்லவில்லை. ஆனால், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் யோசேப்பு இருந்த அதே இடத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள் என்பதுதான்.
சிறையிலும் கூட யோசேப்பு ஒரு நல்ல நிலையிலேயே இருந்தார். அவர் சென்ற இடமெல்லாம் அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டது. “‘ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். ‘என்று நீதிமொழிகள் 18:16ல் நாம் வாசிப்பது யோசேப்பின் வாழ்க்கையில் உண்மையானது. கடவுள் ஒரு மிகத்தெளிவான நோக்கத்திற்காக அவருடைய வாழ்க்கையில் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
ஆதியாகமம் 40:4
‘4தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்து வந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள். ‘
…………………
யோசேப்பு அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்ததால், அவரோடு அவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சிறையில் இருந்த காலத்தில், அவர்களைப் பராமரிப்பது யோசேப்பின் கடமையாக இருந்தது.
ஆதியாகமம் 40:5-6
‘5எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள். 6காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். ‘
……………………
யோசேப்பு எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்தி கூர்மையுடனும், எதையும் நேர்மறையாகப் பார்க்கும் குணம் கொண்டவராகவும் இருந்தார். ஆனால், பார்வோனிடத்தில் உயர் பதவியில் இருந்த இந்த இருவர் மட்டும், முகத்தில் மிகுந்த கவலையுடனும், இருண்ட சோகத்துடனும் உட்கார்ந்திருப்பதை அவர் கவனித்தார்.
ஆதியாகமம் 40:7-8
‘7அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான். 8அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். ‘
……………………….
யோசேப்பு இதில் முழு மகிமையையும் கடவுளுக்கே கொடுக்கிறார். பிற்காலத்தில், மற்றொரு அந்நிய நாட்டு அரண்மனையில் இருந்த தானியேல் என்ற எபிரேய இளைஞனும் இதையே செய்ததை நாம் காணலாம்—தானியேலும் மகிமையைக் கடவுளுக்கே செலுத்தினார். நாமும் இதேயே செய்ய வேண்டும் என்று தான் கர்த்தர் விரும்புகிறார்
நீங்களோ அல்லது நானோ கர்த்தருக்காகச் செய்யும் எதுவுமே கடவுளைப் புகழும் விதமாகவே செய்யப்பட வேண்டும். அதன் மகிமை கடவுளுக்கே சேருகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கர்த்தர் நமக்குக் கொடுக்க விரும்பும் ஆசீர்வாதங்களை நம்மில் பலர் முழுமையாகப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. நமக்கு அற்புதமான காரியம் ஏதாவது நடக்கும் பொழுது, அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்; அதற்காகக் கடவுளுக்கு மகிமை செலுத்துவதில்லை. – நாம் கடவுளுக்கு மகிமையைச் செலுத்த வேண்டும். யோசேப்பு அதைச் செய்ய வேண்டும், ஆம் அவர் செய்கிறார்! “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” என்று அவர் கேட்கிறார்.
ஆதியாகமம் 40:9-13
‘9அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். 10அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. 11பார்வோனுடைய பாத்திரம் என்கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான். 12அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். 13மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; ‘
………………
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கடவுள் சொப்பனங்களை (கனவுகளை) ஒரு கருவியாகப் பயன்படுத்தியது சுவாரஸ்யமானது. இன்று வேதாகமம் முழுமையடைந்துவிட்டது. நம்மோடு உறவாடும் படியாக பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார். நமக்கு இன்று சொப்பனங்கள் தேவையில்லை, ஆனால் அன்று கடவுள் சொப்பனங்கள் மூலம் பேசினார். மேலும், அந்த நபர்களுக்குப் புரியக்கூடிய அடையாளங்களையே அவர் பயன்படுத்தினார்.
ஒரு பானபாத்திரக்காரனுக்குத் திராட்சரசம் பரிமாறுவது பற்றி நன்றாகத் தெரியும்—ஏனெனில் அதுதான் அவன் பார்வோனுக்குச் செய்த வேலை. பிற்காலத்தில், நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு சிலையைக் கனவு கண்டதைப் பார்ப்போம். அவருக்குச் சிலைகளையும் விக்கிரகங்களையும் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், அந்த அடையாளம் அவருக்கு எளிதாகப் புரிந்தது.
யோசேப்பு அந்தப் பானபாத்திரக்காரனின் கனவுக்கு விளக்கம் கொடுத்தார்; மேலும் இன்னும் மூன்று நாட்களில் அவர் மீண்டும் பழைய பதவிக்கே திரும்புவார் என்றும் உறுதியளித்தார்.
ஆதியாகமம் 40:14
’14இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். ‘
………………
கவனியுங்கள் அவர் என்ன சொல்லுகிறார், இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் இங்கிருந்து வெளியேறிவிடுவீர்கள். ஆனால், எனக்காக யாராவது ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்றால், நான் அழுகிப்போகும் வரை இங்கேயே கிடக்க வேண்டியதுதான். நான் உங்கள் கனவுக்குப் பொருள் சொல்லியிருக்கிறேன்—தயவுசெய்து என்னை மறந்துவிடாதீர்கள்!”
இப்பொழுது யாக்கோபு தனது பின்னணியைப் பற்றி சில காரியங்களை அவர்களிடத்தில் சொல்கிறார்.
ஆதியாகமம் 40:15
’15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான். ‘
…………………….
வேத புத்தகம் நமக்கு சொல்லவில்லை , என்றாலும், அந்தப் பானபாத்திரக்காரன் தான் வெளியே சென்றதும் யோசேப்புக்காகப் பார்வோனிடம் பேசுவதாக நிச்சயம் வாக்குறுதி அளித்திருப்பான்.
ஆதியாகமம் 40:16-17
’16அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; 17மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். ‘
……………….
அந்தச் சுயம்பாகி அல்லது அப்பம் சுடுபவர் கண்ட கனவும் அவருக்குப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அடையாளமாகவே இருந்தது. சிறிய பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்புப் பலகாரங்கள் நிறைந்த ஒரு கூடையைப் பற்றி அவரால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆதியாகமம் 40:18-19
’18அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். 19இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். ‘
……………………..
யோசேப்பு அந்தக் கனவுக்கும் விளக்கம் அளித்தார், ஆனால் அது அவருக்குச் சாதகமாக இருக்காது என்றும் எச்சரித்தார். இன்னும் மூன்று நாட்களில் அவர் சிறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு, தூக்கிலிடப்படுவார் என்றும், பறவைகள் அவருடைய மாமிசத்தைத் தின்னும் என்றும் யோசேப்பு கூறினார்.

ஆதியாகமம் 40:20-23

’20மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, 21பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். 22சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. 23ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.’

……………………….
பாவம் யோசேப்பு! இப்போது அவர் ஒரு நம்பிக்கையற்ற இக்கட்டான நிலையில் இருப்பது போலத் தெரிகிறது. அவர் வெறும் அடிமை மட்டுமல்ல, அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்ட ஒரு கைதி. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், அவர் ஏதோ, ஒரு குற்றம் செய்திருந்தால் அந்த சிறைக்கம்பிகள் எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்குமோ, அதே அளவு வலி நிறைந்ததாகவே இப்போதும் அவருக்கு இருந்தன.
யோசேப்பை அப்படியே சிறையில் மறக்கடிக்கச் செய்வதுதான் போத்திப்பாரின் திட்டமாக இருந்தது. தன் வீட்டில் நடந்த அந்த அவமானத்தை (Scandal) மூடி மறைக்க அவர் கையாண்ட வழி அதுதான். போத்திப்பார் செய்த அந்தத் தவற்றை மறைக்க, யோசேப்பு விலை கொடுக்க வேண்டியதாயிருந்தது. யோசேப்பிற்கு இருந்த ஒரே ஒரு சிறு வெளிச்சம், அந்தப் பானபாத்திரக்காரன் பார்வோனிடம் தன்னைப் பற்றிப் பேசுவான் என்ற் எண்ணம் மட்டும்தான். பார்வோனின் கவனத்தை பெற்றுக்கொள்ள இது ஒரு அற்புதமான வழியாகத் தெரிந்தது.
ஆனால், அந்தப் பானபாத்திரக்காரனோ மீண்டும் தன் வேலை கிடைத்த மகிழ்ச்சியிலும், பார்வோனின் தயவைப் பெற்ற உத்வேகத்திலும், பாவம் யோசேப்பை முற்றிலுமாக மறந்துபோனான். ஆனால் கடவுள் ஒரு நோக்கத்திற்காக அவரை அங்கேயே விட்டுவைக்க விரும்புகிறார். ஒருவேளை அந்தப் பானபாத்திரக்காரன் பார்வோனிடம் சென்று, “அங்கே ஒரு நிரபராதி கைதியாக இருக்கிறார்” என்று சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்—
யோசேப்பு அங்கே சிறையில் இருக்கக் கூடாது—அவர் மீது வீணாகப் பழி சுமத்தப்பட்டுள்ளது. அவர் என் கனவுக்கு விளக்கம் அளித்தார். பார்வோன் ராஜாவே, நீங்கள் அவரை விடுதலை செய்தால் நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று ஒருவேளை அந்தப் பானபாத்திரக்காரன் சொல்லியிருந்து, பார்வோனும் அவரை விடுவித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! பார்வோன் தனது கனவுக்கு விளக்கம் தேவைப்பட்ட அந்த முக்கியமான நேரத்தில், யோசேப்பு கானான் தேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்திருப்பார்.
தேவன் அவரை அருகிலேயே வைத்திருக்க விரும்புகிறார், அதற்குச் சிறைச்சாலை ஒரு வசதியான இடமாக இருந்தது—பார்வோனுக்குத் தேவைப்படும்போது யோசேப்பைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகவே யோசேப்பை கர்த்தர் அங்கே வைத்திருந்தார். இத்தனை மனச்சோர்வுகளுக்கு மத்தியிலும், தேவன் தனது வாழ்க்கையில் கிரியை செய்கிறார் என்பதை யோசேப்பு நம்பினார். அந்த விசுவாசத்தின் கனிகள் அவருடைய வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிந்தன. அவர் தனது வாழ்வின் ஒவ்வொரு உறவிலும் உண்மையுள்ளவராக இருந்தார். அவர் போத்திபாருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். சிறையில் இருந்தபோது சிறைச்சாலை அதிகாரிக்கு உண்மையுள்ளவராக இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, எப்போதும் மகிமையை இறைவனுக்கே செலுத்தி, தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
பிற்காலத்தில் அவர் பார்வோனுக்கும் உண்மையுள்ளவராக இருப்பார், தன்னைத் துரோகம் செய்த தன் சகோதரர்களுக்கும் உண்மையுள்ளவராக இருப்பார் என்பதை நாம் காண்போம். யோசேப்பின் விசுவாசமே அவரை உண்மையுள்ளவராக மாற்றியது. என் நண்பரே, நீங்களும் உண்மையான ஒரு விசுவாசியாக இருந்தால், நிச்சயமாக எந்தச் சூழ்நிலையிலும் உண்மையுள்ளவராகவே இருப்பீர்கள்.
நாம் வாழும் இந்த காலங்களில் வெகு சில கிறிஸ்தவர்களே நம்பத்தக்கவர்களாயிருக்கிறார்கள்.
நிஜமாகவே உண்மையைச் சொல்லப்போனால், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாக இருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.. அப்படி இருப்பவர்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் எங்கெல்லாம் சென்றேனோ, அங்கெல்லாம் எனக்குத் துணையாக ஒரு சில உண்மையான மனிதர்களை தேவன் கொடுத்திருக்கிறார். அவர்கள் எங்களுக்கு பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறார்கள்.
யோசேப்பு (Joseph) அப்படிப்பட்ட ஒரு மனிதர். கடவுள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரை உண்மையுள்ளவராக மாற்றியது. அந்த நம்பிக்கைதான் சோதனைகளிலும் கஷ்டங்களிலும் அவருக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தைக் கொடுத்தது. மற்றவர்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளவும் அதுவே காரணமாக இருந்தது.
சிறையில் இருந்தபோது பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகி ஆகிய அதிகாரிகளிடம் அவர் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதைப் பாருங்கள். பிறகு, தன்னைக் கொடுமைப்படுத்திய தன் சகோதரர்களிடமும் அவர் அன்பு காட்டினார். அவரது நம்பிக்கையின் மற்றொரு சிறப்பு, அது அவரை ஒரு எளிமையான மனிதராக மாற்றியது. தனது எல்லா வெற்றிகளுக்கும் அவர் கடவுளுக்கே மகிமைய செலுத்தினார். அவர் எவ்வளவு சிறந்த மனிதர்! இல்லையா??
இதற்கெல்லாம் எது காரணம்? அவர் கடவுளை முழுமையாக நம்பினார். தன்னுடைய முன்னோரான ஆபிரகாமைப் போலவே கடவுள் மீது மாறாத நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் பலன்தான் அவரிடத்தில் காணப்பட்ட இந்த அழகான குணங்கள்.
இப்பொழுது யோசேப்பு—சிறையில் எல்லாராலும் மறக்கப்பட்டு கிடக்கிறார். ஆனால் ஒருவர் மட்டும் அவரை மறக்கவில்லை; அவர் தான் கர்த்தர். – கர்த்தர் அவரை மறக்கவில்லை, அவருடைய வாழ்வில் தொடர்ந்து கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
அருமையான சகோதரனே சகோதரியே , இதில் உங்களுக்கும் எனக்கும் ஒரு செய்தி இருக்கிறது. இப்போது நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்களோடு தொடர்புகொள்ளும்பலருடைய வாழ்க்கையை கவனித்தால், பலரும் கடினமான நிலையில் இருப்பதை எங்களால் உணர முடிகிறது. ஒரு மனிதர் கூறும்பொழுது: “நான் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கிறேன். எல்லாமே இருட்டாகத் தெரிகிறது.” என்றார். உங்களுக்கு வெளியே செல்லும் வழி தெரியாமல் இருக்கலாம், ‘கடவுளுக்கு என் மேல் அக்கறை இருக்கிறதா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.
அதற்காகத்தான் கடவுள் யோசேப்பின் இந்தக் கதையை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கு உங்கள் மேல் அக்கறை இருக்கிறது என்பதையும், / உங்கள் வாழ்விலும் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். நீங்கள் அவருடைய பிள்ளையாக இருந்தால், உங்களுக்குப் புரியாத ஆனால் உங்கள் நன்மைக்காகவே சில காரியங்கள் நடக்க அவர் அனுமதிக்கிறார். அவர் கொடுக்கும் தண்டனைகள் அல்லது சோதனைகள் எப்போதும் நமது நன்மைக்கே. நண்பர்களே, நாம் என்றுமே தோற்றுப்போக மாட்டோம்! நம் ஆண்டவர் எவ்வளவு அற்புதமானவர் இல்லையா??

தொடர்ந்து 41 ஆம் அதிகாரத்திலும் சில வசனங்களை பார்ப்போம்.
கடந்த அதிகாரத்தில் யோசேப்பு சிறையில் மறக்கப்பட்டு, தனித்துவிடப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்தோம். அதற்கும் இந்த அதிகாரத்திற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! ஆனால், இவை அனைத்தும் அவருடைய வாழ்வில் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றவே நடந்தன. இன்று நம் வாழ்விலும் கடவுளின் கரம் இருப்பதை நாம் உணர்ந்தால், அது வாழ்க்கையைப் பார்க்கும் நம் பார்வையை அப்படியே மாற்றிவிடும்!
இந்த அதிகாரத்தில், பார்வோன் மன்னனின் கனவுகளுக்கு யோசேப்பு விளக்கம் சொல்லும்போது, அவர் சிறையிலிருந்து விடுதலையாவதை நாம் காண்போம். அவர் எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். மேலும், ஓன் (On) பட்டணத்துத் ஆசாயரின் மகளான ஆஸ்நாத்தை (Asenath) திருமணம் செய்கிறார். அவர்களுக்கு மனாசே (Manasseh) மற்றும் எப்பிராயீம் (Ephraim) என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள்.
இது ஏழ்மையிலிருந்து பெரும் செல்வந்தராக உயர்ந்த ஒரு மனிதனின் கதை என்று சொல்லலாம். கற்பனையாக எழுதப்பட்ட கதைகளை விடவும், யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் விறுவிறுப்பானது. இந்த அதிகாரத்தில், அவருடைய வாழ்க்கையில் கடவுளின் கரம் இருப்பதை நாம் தெளிவாகக் பார்க்க முடியும். கஷ்டமான நேரங்களிலும் கடவுள் தன்னைத் தாங்குகிறார் என்பதை யோசேப்பு உணர்ந்திருந்தார்.
இது அவரிடம் பல நல்ல குணங்களை வளர்த்தது; இவை ‘ஆவியின் கனிகள்’ ஆகும். அவற்றில் ஒன்றுதான் பொறுமை. “உபத்திரவம் பொறுமையை உண்டாக்கும்” என்று ரோமர் 5:3-ல் சொல்லப்பட்டுள்ள உண்மைக்கு, யோசேப்பின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.
பிற்காலத்தில் தானியேல் எப்படி நேபுகாத்நேச்சார் மன்னனுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டாரோ, அதேபோல இந்த இளைஞன் யோசேப்பும் எகிப்திய மன்னரான பார்வோனுக்கு முன்னால் கொண்டு வரப்படுகிறார். இவர்கள் இருவருமே மன்னர்களின் கனவுகளுக்கு விளக்கம் சொல்லப் போகிறார்கள்.
அடுத்ததாக, இந்த அதிகாரத்தின் இறுதியில் வரும் பஞ்சத்தைப் பற்றிப் பார்ப்போம். அந்த பஞத்தினால் கடவுள் எதைச் சாதிக்கப் போகிறார்? யாக்கோபின் குடும்பத்தை கானான் தேசத்திலிருந்து வெளியே கொண்டுவர கடவுள் இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறார். கானானியர்களின் பாவங்களிலிருந்து அவர்களைப் பிரித்து, எகிப்தில் உள்ள ஒதுக்குப்புறமான கோசேன் (Goshen) என்ற இடத்தில் அவர்களைக் குடியேற்றுவதே கடவுளின் நோக்கம். இது அவர் வைத்திருந்த குறிக்கோள்களில் ஒன்று. எனக்குத் தெரிந்தவரை கடவுளிடம் இன்னும் பல காரணங்கள் இருந்திருக்கும், ஆனால் இது ஒன்று நமக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நாம் தொடர்ந்து படிக்கும்போது, யோசேப்பின் வாழ்க்கை எந்தெந்த விதங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒத்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த ஒப்பீடுகளைப் பற்றி நாம் பிறகு விரிவாகப் பார்ப்போம்.
சரி, இப்பொழுது கடந்த அதிகாரத்தில் நடந்தவற்றை நினைவுபடுத்திக் கொள்வோம். பார்வோன் மன்னனின் திராட்சைரச அதிகாரியும் (பானபாத்திரக்காரன்) மற்றும் சமையல் அதிகாரியும் (சுயம்பாகி), யோசேப்பு இருந்த அதே சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
யோசேப்பு அவர்களின் கனவுகளுக்குச் சரியாக விளக்கம் சொன்னார்—அதன்படியே சமையல் அதிகாரி தூக்கிலிடப்பட்டார், திராட்சைரச அதிகாரி மீண்டும் பழைய பதவிக்கே திரும்பினார். தான் படும் கஷ்டத்தைப் பற்றி மன்னனிடம் சொல்லும்படி யோசேப்பு அந்த அதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டிருந்தார். ஆனால் அந்த அதிகாரி அதை மறந்துவிட்டார். இப்போது, கடவுளே பார்வோனுக்கு ஒரு கனவைக் கொடுக்கிறார்—
ஆதியாகமம் 41:1
‘1இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். ‘
……………………..
கடந்த அதிகாரம் முடிந்து இப்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதைக் கவனியுங்கள். ஏதோ ஒரு மாற்றம் நடக்கும் என்று காத்திருந்த யோசேப்பு, இன்னும் இரண்டு நீண்ட ஆண்டுகளை அந்தச் சிறையிலேயே கழிக்க வேண்டியதிருந்தது.
ஆதியாகமம் 41:2-3
‘2அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களண்டையிலே நின்றது. ‘
……………………..
இங்கே நாம் மாடுகளைப் பற்றிப் வாசிக்கிறோம். பார்வோன் தனது கனவில் ஏழு பசுக்களைக் கண்டார்; அவை பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல தீவனம் உண்டு கொழுத்தவைகளாகவும் இருந்தன. அதன் பிறகு, மிகவும் ஒல்லியான மற்றும் விகாரமான ஏழு பசுக்களையும் அவர் பார்த்தார்.
ஆதியாகமம் 41:4
‘4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். ‘
……………….
ஆம், பார்வோன் திடுக்கிட்டு விழித்தெழுந்து, அந்தக் கனவுக்கு என்ன அர்த்தம் என்று யோசித்தார். அவருக்கு அதன் விளக்கம் தெரியவில்லை; அதுமட்டுமல்ல, அன்றைய நாளில் அவருக்கு உதவி செய்ய அங்கேயும் யாரும் இல்லை.
ஆதியாகமம் 41:5-8
‘5மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம் விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. 6பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. 7சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான். 8காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று. ‘
…………………….
இந்த மந்திரவாதிகள் மற்றும் அறிஞர்கள் எல்லாரும் உள்ளே அழைக்கப்பட்டு, பார்வோன் அவர்களுக்குத் தன் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தபோது, அந்தப் பானபாத்திரக்காரன் அங்கேயே நின்று கேட்டுக்கொண்டிருந்தான். எப்பொழுதும் பார்வோனுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பதே அவனது வேலை என்பதால் அவன் அங்கேயே இருந்தான். அந்த அறிஞர்கள் யாராலும் பார்வோனின் கனவுக்கு விளக்கம் சொல்ல முடியாதபோது, பானபாத்திரக்காரன் பேசத் தொடங்கினான். கவனியுங்கள் வாசிக்கிறேன்,
ஆதியாகமம் 41:9
‘9அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. ‘
………………….
இதை ஒரு சிறிய “குறை” அல்லது “தவறு” என்று சொல்வதை விட மேலான ஒன்று எnறு கூறலாம்! இது ஒரு பாவம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், பாருங்கள், இவை அனைத்தும் கடவுளின் திட்டப்படியே (Providence of God) நடந்தன. நாம் இதைச் “சூழ்நிலைகளின் தற்செயலான சங்கமம்” என்று சொல்லலாம். யோசேப்பு அனுபவித்த அந்த இக்கட்டான நேரங்களில் அதன் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கடவுள் ஒரு நோக்கத்திற்காகவே அவற்றை அனுமதித்தார்.
இப்போது அந்த அதிகாரி என்ன சொல்கிறான்??, “ஓ மற்ந்தே போனேனே, சிறையில் இருந்து நான் வெளியே வந்த போது, ஒரு வாலிபனைப் பற்றி உங்களிடம் பேசுவதாக நான் வாக்கு கொடுத்தது இப்போதுதான் ஞாபகம் வருகிறது. சொல்லப்போனால் பார்வோனே, அவனால் கனவுகளுக்கு விளக்கம் சொல்ல முடியும்.” என்று சொல்லி இப்போது அவன் தனக்கு நடந்த அனுபவத்தை பார்வோனிடம் விவரிக்கிறான்.

ஆதியாகமம் 41:10-13

’10பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், 11நானும் அவனும் ஒரே இராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். 12அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். 13அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். ‘
……………………..
உடனே பார்வோன் , “சரி, இங்கே இருப்பவர்கள் எல்லாரையும் நாம் சோதித்துப் பார்த்துவிட்டோம். அந்த வாலிபன் உன்னுடைய கனவிற்கும், சமையல் அதிகாரியின் கனவிற்கும் சரியாக விளக்கம் சொன்னான் என்றால், அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள். ஏனென்றால், என் கனவுகள் ஏதோ மிக முக்கியமான அர்த்தத்தைக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். என்றான்.
இன்று நாம் கற்றுக் கொண்ட வசனங்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் சத்தியம் என்ன?
இந்த பான பாத்திரக்காரணை போல மனிதர்கள் நம்மை மறக்கலாம், நம்முடைய நன்மைகளை மறந்து நன்றியற்றவர்களாக இருக்கலாம். ஆனால், பரலோகத்தின் தேவன் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. அந்த இரண்டு ஆண்டு கால தாமதம் யோசேப்புக்கு ஒரு தண்டனையல்ல, அது ஒரு பயிற்சிக் காலம். பார்வோன் கனவு காணும் அந்தச் சரியான வினாடிக்காக தேவன் காத்திருந்தார். உங்கள் வாழ்க்கையிலும் சில கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றால், தேவன் சரியான நேரத்திற்காக “காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்” என்று அர்த்தம். எனவே பதட்டப்படாமல் காத்திருங்கள்
யோசேப்புக்கு சிறைச்சாலை என்பது ஒரு முட்டுக்கட்டை போலத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதுதான் அவரை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் பாதையாக இருந்தது.
“உங்களைச் சுற்றியுள்ள சுவர்கள் உங்களை முடக்குவதற்காக அல்ல, உங்களை அடுத்த கட்டத்திற்குப் பக்குவப்படுத்துவதற்காகவே எழுப்பப்பட்டுள்ளன.” என்பதை மறந்து போகாதிருங்கள்.
யோசேப்பின் ஆன்மீக முதிர்ச்சி அவர் பேசும் ஒரு வார்த்தையில் வெளிப்படுகிறது: “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” என்று சொன்னார். தனக்குக் கிடைத்த ஞானத்தை அவர் தனதாக்கிக் கொள்ளவில்லை. இக்கட்டான சூழ்நிலையிலும் தேவனை உயர்த்துபவர்களை, தேவன் உலகிற்கு முன்பாக உயர்த்துகிறார்.
மேலும் “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்கும்” (ரோமர் 5:3-4) என்ற வசனத்திற்கு யோசேப்பு ஒரு உன்னதமான சாட்சி.
: அருமையானவர்களே, யோசேப்பின் சரித்திரம் வெறும் கடந்த காலக் கதை அல்ல; அது உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை. உங்கள் வாழ்வின் “இரண்டு ஆண்டுகால” காத்திருப்பு விரைவில் முடியப்போகிறது. தேவன் உங்களை மறக்கவில்லை. அவர் உங்களை உயர்த்துவார், அப்போது உலகம் வியக்கும்படி உங்கள் வாழ்வின் அர்த்தத்தை அவர் வெளிப்படுத்துவார்.
கர்த்தர் தாமே இந்த மேலான கிருபையை உங்களுக்கும் தருவாராக. ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top