ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 4: 8 – 5:5
நிகழ்ச்சி எண்: 0021
வாசியுங்கள்
கர்த்தருடைய வேதம் என் மன மகிழ்ச்சி என்பதை அறிந்தவர்களாய் இன்றும் நீங்கள் எங்களோடு இணைந்து இருப்பதற்காக கர்த்தரை துதிக்கிறோம்.
இன்று நாம் ஆதியாகமம் 4:8 – 5:5 வசனம் வரை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 4:8,9
[8] காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
………………..
இது நடைமுறையில் ஒரு துணிச்சலான பதில். வெளிப்படையாக, காயீனுக்கு தனது சகோதரன் மீதோ அல்லது கடவுள் மீதோ சிறிதும் அக்கறை இல்லை என்பதை இந்த பதில் காட்டுகிறது. அவன் தனது செயலை மறைக்க முயற்சிக்கிறான், ஆனால் வேதம் என்ன கூறுகிறது ?
மத்தேயு 10:26 பின்பகுதியை பாருங்கள்.
[26] ; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
உங்களிடம் ஏதேனும் ரகசிய பாவங்கள் இருந்தால் அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் அவற்றை இப்பொழுதே சரி செய்வது நல்லது, ஏனென்றால் அவை அனைத்தும் ஒரு நாள் கடவுளின் முன்னிலையில் வெளிவரப் போகின்றன. ஏற்கனவே தேவன் அவற்றைப் பற்றி அறிந்திருக்கிறார். எனவே நீங்கள் அவரிடம் அதைக் குறித்து அறிக்கை செய்து மன்னிப்பைப் பெற்றுக் கொள்வது சிறந்தது. . காயீன், – தான் எந்த எந்த குற்றமும் செய்யவில்லை என்று சொல்ல முயற்சிக்கிறான். “நான் என் சகோதரனின் காவலாளியா?”என்று கேட்கிறான் . இது எவ்வளவு துணிச்சலான ஒரு பதில் என்பதை கவனித்தீர்களா?
மேலும் ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் காணப்பட்ட ஆதாம் ஏவாளுடைய பாவத்தின் நேரடி விளைவை இங்கேப் பார்க்கிறோம். பாவம் ஏதேன் தோட்டத்தில் தனிப்பட்டதாகத் தொடங்கி, குடும்ப உறவுகளில் வன்முறையாக வெளிப்படுகிறது. இங்கே ‘சகோதரன்’ என்ற சொல் அடிக்கடி வருகிறது. இது சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. அதே சமயம் சகோதர உறவு எவ்வாறு உடைக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.
ஆதாமிடம், “நீ எங்கே இருக்கிறாய்?” என்ற கேட்ட அதே கர்த்தர், இப்பொழுது காயீனிடம், “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?” என்று கேட்கிறார். கர்த்தரின் கேள்விகள் அவருடைய கரிசனையைக் காட்டுகிறது. ஆனால் அதே சமயம், இது மனுதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வையும் சுட்டிக் காட்டுகிறது என்பதையும் நாம் மறந்து போகக்கூடாது.
ஆதியாகமம் 4:10
[10] அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
……………..
இந்த உண்மையை எபிரெய ஆக்கியோனும் எப்படி எழுதி இருக்கிறார் என்பதை கவனியுங்கள் எபிரேயர் 12:24
[24] புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
……………..
ஆபேலின் ரத்தம், செய்யப்பட்ட கொலையை குறித்து பேசுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மீட்பை குறித்தும் இரட்சிப்பை குறித்தும் பேசுகிறது.
ஆதியாகமம் 4:11-12
[11] இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். [12] நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
……………….
நாம் வாழும் இந்த காலத்திலும் மனிதனின் பாவத்தினாலே பூமி சபிக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம், ஒரு காலத்தில் இருந்த செழிப்பு எல்லாம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் செழிப்பான இடங்களிலேயும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.
இந்த பூமியில் மிகுதியாக உற்பத்தி செய்ய மனிதனுக்கு மிகுந்த முயற்சியும் புத்திசாலித்தனமும் தேவை. நிச்சயமாகவே சகோதரனால் கொலை செய்யப்பட்ட ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து அழுகிறது.
மேலும் ஆதியாகமம் 4:11,12:ல்
பாவத்தின் வளர்ச்சியை நாம் பார்க்கிறோம். பொறாமை, கோபம், பொய், கொலை என்று பாவம் படிப்படியாக வளர்கிறது. இதைத்தான் யாக்கோபு 1:15ல் வாசிக்கிறோம்:
“பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”
காயீனுக்கு நிலத்தின் சாபம் கொடுக்கப்படுகிறது. நிலம் .தன் பலனை இனி அவனுக்குக் கொடுக்காது. கர்த்தர் ஆதாமுக்குக் கொடுத்த சாபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆதியாகமம் 3:17:
“பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.”
காயீனுக்குக் கிடைத்த சாபம் ஆதாமின் சாபத்தை தீவிரப்படுத்துகிறது.
ஆபேலின் இரத்தம் நிலத்தைத் தீட்டுப்படுத்துகிறது. எண்ணாகமம் 35ஆம் அதிகாரம் 33ஆம் வசனத்தை கவனியுங்கள்
“நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.”
ஆதியாகமம் 4:13
[13] அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
……………..
காயீனின் தண்டனை, அவனால் தாங்க முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தால், அவன் ஏன் கடவுளிடம் திரும்பி, தன் பாவத்தை அறிக்கையிட்டு, கடவுளின் கருணையை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இல்லை? அது அவனால் தாங்க முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தது, உண்மைதான் ஆனால் அவன் கடவுளிடம் திரும்பினால் அவனுக்கு ஒரு இரட்சகரை அவனுக்கு கொடுப்பார் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லை. உங்கள் வாழ்க்கை உங்கள் பாவத்தை குறித்த மனவேதனையை உங்களுக்கு உண்டாகும் என்றால், தண்டனையை குறித்த மனவேதனை உங்களுக்கு உண்டாகும் என்றால், ஐயோ கர்த்தரை நான் துக்கப்படுத்தி விட்டேனே என்ற வேதனை உங்களுக்கு வரும் என்றால், என்னை கேட்டுக் கொண்டிருக்கிற அருமையானவர்களே நீங்கள் தேவன் இடத்தில் மனம் திரும்பி மன்னிப்பை பெற்று கொள்ள முடியும்.
ஆதியாகமம் 4:14
[14] இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
…………….
காயீன், தான் தேவனுடைய முகத்திற்கு மறைக்கப்பட வேண்டும் என்று கேட்கிறான். உண்மையில் அதுதான் நடந்தது. என்றாலும் தேவன் அவனை பாதுகாக்கிறதையும் இங்கே நாம் பார்க்கிறோம்.
இது மிகவும் வினோதமான காரியம். தேவன் ஒரு கொலைகாரனை மறைத்து பாதுகாக்கிறார்.
ஆதியாகமம் 4:15
[15] அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
……………….
தேவன் காயீன் மேல் எந்த அடையாளத்தை போட்டார் என்பதை நாம் கூற முடியாது. அநேகர் இதைக் குறித்து பல காரியங்களை கூறுகிறார்கள். ஆனால் தேவன் காயினை பாதுகாத்தார் என்பதையே இங்கே நாம் பார்க்கிறோம். அந்த நாட்களில், எந்த நியாயப்பிரமாணமும் கொடுக்கப்படவில்லை. காயின் ஒரு பாவியாக இருந்தான். ஆனாலும் கொலை குறித்து எந்த ஒரு நியாயபிரமாணமும் அப்பொழுது கொடுக்கப்படாதபடியினால் அவன் மீறுதலுக்கு உட்படவில்லை. அவனுடைய பெரிய பாவம் என்னவென்றால் அவன் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய காணிக்கையை கொண்டு வராததுதான். அவன் தேவனுக்கு காணிக்கையை கொண்டு வந்த விதத்திலே பொல்லாப்பு இருந்தது. அவன் தனது தீமையான சுபாவத்தை தன் சகோதரனை கொலை செய்ததன் மூலமாக வெளிப்படுத்தி விட்டான்
தொடர்ந்து காயீனுடைய பிள்ளைகள் எப்படி தேவனற்ற ஒரு சமுதாயமாய் பெருகினார்கள் என்று பார்க்கிறோம்.
காயீன் தேவனை விட்டு தூரமாய் போய் தேவன் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டு பண்ணுகிறான். காயினுடைய பிள்ளைகள் தேவனற்ற சமுதாயமாய், கடவுள் பயம் இல்லாத மனிதர்களாய் பெருகி வந்தார்கள்.
மேலும் இந்த வசனத்தில் கர்த்தரின் நீதி மற்றும் இரக்கத்தையும் பார்க்கிறோம். கொலையாளிக்குக் கூட மரண தண்டனை இல்லை. கர்த்தர் அவனுக்கு அடையாளம் கொடுத்து அவனைப் பாதுகாக்கிறார். இது கர்த்தரின் அளவில்லாத இரக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் பின்னர், நோவாவின் காலத்தில் கொலை செய்கிறவனுக்குக் கர்த்தர் மரண தண்டனை விதிக்கிறார். ஆதியாகமம் 9:6:
“மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.”
கர்த்தரின் நீதி இங்கே வெளிப்படுகிறது.
காயீன் தன் தண்டனையால் யாராவது தன்னைக் கண்டு கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறான். அக்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், ஆதாமுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருக்கலாம் என்று கொள்ளலாம். அல்லது எதிர்காலத்தில் தன்னைத் தேடி பழிவாங்க வருவார்கள் என்ற பயம் காயீனுக்கு இருந்தது.
கர்த்தர் அவனது பயத்தை நேரடியாகப் புறக்கணிக்காமல், பாதுகாப்பு அளிக்கிறார்: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்கிறார். ஏழு என்ற எண் முழுமை அல்லது தீவிரத்தைக் குறிக்கும். இங்கே முழுமையான அல்லது தீவிரமான பழிவாங்குதலைக் குறிக்கிறது.
யாரும் தனிப்பட்ட முறையில் பழிவாங்க அனுமதிக்கப்படவில்லை. பழிவாங்குதல் கர்த்தருக்கே உரியது. உபாகமம் 32ஆம் அதிகாரம் 35ஆம் வசனத்தில் தேவன்,
“பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது” என்று சொல்கிறார்.
ரோமர் 12:19ஐ எடுத்து, வாசித்துப் பாருங்கள்:
“பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” ………….
காயீன் மேல் போடப்பட்ட அடையாளம் தண்டனையின் அடையாளம் அல்ல. அது பாதுகாப்பின் அடையாளம். “காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு” என்று வாசிக்கிறோம். இது கொலையாளியைக் கூட கர்த்தர் பாதுகாக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
காயீன் கொலை செய்ததற்கு தண்டனை உண்டு. நிலத்தின் சாபம், அலைந்து திரிதல் போன்ற தண்டனைகள் உண்டு. ஆனால் மரண தண்டனை இல்லை. கர்த்தர் கொலையாளியைக் கூட முழுமையாகக் கைவிடவில்லை. இது அவரின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது. பாவிக்கு மனந்திரும்ப அவர் வாய்ப்பு அளிக்கிறார்.
இது பாவியான மனிதனுக்கு மனந்திரும்புதலுக்கும் மீட்புக்குமான தேவனின் திட்டத்தின் ஆரம்ப அறிகுறி. இயேசு கிறிஸ்துவில் இந்த இரக்கம் முழுமையாக வெளிப்படும். அவர் நமக்காக சிலுவையில் மரித்து, நம்மை மரணத்திலிருந்து பாதுகாத்தார்.
ஆதியாகமம் 4:16
[16] அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
……………….
நோத் என்ற வார்த்தையின் பொருள் அலைந்து திரிதல். உண்மையில் அந்த இடம் எங்கே இருந்தது என்பதே நமக்கு தெரியவில்லை. ஆனால் வேதம் நமக்கு சொல்வது போல காயீன் அங்கே சென்று வாழ்க்கை நடத்தினான்.
ஆதியாகமம் 4:17
[17] காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.
………………..
இதே காரியத்தை மக்கள் காலம் காலமாய் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த பெயரில் அல்லது தாங்கள் நேசிக்கும் ஒருவருடைய பெயரிலே தெருவின் பெயருரோ அல்லது பட்டணத்தின் பெயரோ இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். திருச்சபையில் இருக்கும் மனிதர்களும் காயீனை போன்ற இந்த விருப்பம் உடையவர்களாய் இருக்கிறார்கள்.
நகர வாழ்க்கை, அல்லது பட்டண வாழ்க்கை இங்குதான் தொடங்கியது: “அவன் ஒரு நகரத்தைக் கட்டி, தன் குமாரனாகிய ஏனோக்கின் பெயரால் அந்த நகரத்திற்குப் பெயரிட்டான்.”/ / இன்று மனிதன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக நகரங்கள் மாறிவிட்டன. நகரங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள், ஆனாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் நகரங்களை நோக்கியே படையெடுத்துச் செல்கிறார்கள்.
ஆதியாகமம் 4:18-19
[18] ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். [19] லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
……………..
ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்யும் பழக்கம் இங்கே தான் ஆரம்பமாகிறது. லாமேக்கு இரண்டு பெண்களை திருமணம் செய்தான் என்று வாசிக்கிறோம். இது தேவனுடைய விருப்பத்திற்கு முரணான ஒரு செயல். தேவன் மனிதனுக்கு என்று வைத்திருந்த திட்டத்துக்கு எதிராக செயல்படுகிறான். பலரைத் திருமணம் செய்வதை தேவன் அங்கீகரித்தார் என்று நாம் கூற முடியாது. நன்றாக கவனித்து பார்த்தால் அவர் அதை கண்டிக்கிறார் என்பதை நாம் பார்க்க முடியும். ஆதியாகம புத்தகத்தில் வரலாறு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே லாமேக் செய்ததும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தான் நாம் இங்கே வாசிக்கிறோம்.
ஆதாள் என்றால் இன்பம் அல்லது அலங்காரம் என்று அர்த்தம். அழகு நிலையத்திற்கு சென்ற முதல் பெண் அவள் தான் என்று சொல்லலாம்.. அடுத்து சில்லால் என்றால் ஒளிந்து கொள்வது என்று அர்த்தம் . ஆண்கள் தன்மீது ஆசை கொள்ளும்படியாய் மினுக்கிக்கொண்டு திரியும் ஒரு பெண்ணாக இவள் இருந்திருக்கலாம். இரண்டு மனைவிகளை அவன் திருமணம் செய்ததற்கு காரணம் என்ன? அவனுக்கு சில பிரச்சனைகள் இருந்திருக்க வேண்டும். சற்று நேரம் கழித்து என்ன நடந்தது என்பதை நாம் பார்ப்போம். இங்கே நாம் பார்ப்பது காயீனின் நாகரீகம் வளர்ந்து வருகிறது.
ஆதியாகமம் 4:20
[20] ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
…………. …..
ஆதாள் பெற்றெடுத்த பையன் யாபேல்,.இவன்தான் கூடாரங்களில் தங்கி வாழும் மக்கள் கூட்டத்தின் முதல் மனிதன் என்று சொல்லலாம். மேலும் மந்தைகளை மேய்க்கிறவனாயும் இவனை நான் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 4:21
[21] அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர், நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
,………………
இசை அமைப்பாளர்களின் ஆரம்பத்தை நாம் இங்கே பார்க்கிறோம். எப்படிப்பட்ட இசைகளை இந்த காலத்திலே நாம் கேட்டாலும் இதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் இருக்கிறது என்பதை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 4:22
[22] சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
……………….
இங்கே நான் வாசிப்பது போல தூபால் இரும்பு பித்தளை ஆக ஆகியவற்றில் பொருட்களைச் செய்யக்கூடிய ஆசாரியனாகிறான். அவனுக்கு சகோதரியாய் பிறந்த பெண் நாமாள் என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 4:23,24
[23] லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்.
[24] காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
……………….
இங்கே லாமேக்கு சொல்வதை கவனித்தீர்களா? லாமேக்கின் பாடல் வன்முறையின் தீவிரத்தைக் காட்டுகிறது. ஒரு கொலை செய்துவிட்டு காயின் தப்பித்துக் கொள்வான் என்றால் நானும் தப்பித்துக் கொள்வேன் என்பது போல பேசுகிறான். காயீன் சுய பாதுகாப்புக்காக கொலை செய்யவில்லை . ஆனால் லாமேக்கு சுய பாதுகாப்புக்காகவே கொலைகளை செய்தது போல தெரிகிறது. இந்த பிரச்சனைகளுக்கும் அவன் மனைவிகளுக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் இவர்களில் ஒருவரை பாதுகாப்பதற்காக அவன் இவ்வாறு செய்திருக்கலாம். எப்படி இந்த கொலைகள் நடந்தன என்பது நமக்கு சொல்லப்படவில்லை. லாமேக்கு தன்மேல் 77 பழி சுமரும் என்று சொல்கிறான். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேதுருவிடத்திலே கூறும் பொழுது, தன் பகைவர்களையும் கணக்கில் வைக்காமல் மன்னிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்.
ஆதியாகமம் 4:25-26
[25] பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். [26] சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
……………………
வேத புத்தகத்தில் இப்பொழுதுதான் முதல்முறையாக மக்கள் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ள துவங்குவதை பார்க்கிறோம்.
தொடர்ந்து ஐந்தாம் அதிகாரத்திலும் சில வசனங்களைப் பார்ப்போம். ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்களில் உலக அளவில் நடைபெற்ற காரியங்களை நாம் பார்க்கிறோம். முதலாவது தேவன் உலகத்தை சிருஷ்டித்ததை படித்தோம் அதன் பின்
ஆதாம் ஏவாள் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்ததை பார்த்தோம். ஐந்து முதல் ஒன்பது அதிகாரங்களிலே மனிதன் தேவனை விட்டு தூரமாய் போவதையும் பெருவெள்ளத்தால் தேவன் உலகத்தை அழித்ததை குறித்தும் பார்க்கிறோம்.
ஐந்தாம் அதிகாரம் முதல் ஆதாமின் தலைமுரை பற்றிய
சரித்திரம் இருக்கிறது. குறிப்பாய் காயீனின் வம்ச வரலாறை பார்க்கிறோம். மீண்டும் காயீனின் வம்சம் பற்றி, அவர்கள் தேவனுடைய திட்டத்தை மீறும் சமயங்களில் நாம் பார்க்க போகிறோம். இந்த முறையில் தான் தொடர்ந்து ஆதியாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரம் ஒரு வகையில் ஊக்கமளிக்கும் ஒரு அதிகாரம் மற்றும் ஒரு வகையில் சோர்வடைய செய்யும் அதிகாரம் என்று சொல்லலாம். காரணம் அது ஒரு கல்லறை தோட்டத்தின் வழியாக நடந்து செல்வது போல இருக்கிறது. ஆதியாகமம் இரண்டு 17 இல் நாம் வாசித்தது போல தேவன் ஆதாமிடத்தில் நீ அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று சொல்லியிருந்தார். அது மட்டுமல்ல ஆதாமின் மகன்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். இதைத்தான் பவுல் இவ்வாறு கூறியிருக்கிறார்.
1 கொரிந்தியர் 15:22
[22] ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல,…..
மேலும் ஆதாம் ஏவாளுக்கு மூன்றாவது மகனாகிய சேத் பிறக்கிறான். இவன் ஆபேலுக்கு மாற்று. இந்தப் பகுதி மனித குல வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. பாவத்தால் உடைந்த உலகில் கர்த்தரின் மீட்புத் திட்டம் தொடர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
“தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார்” என்று ஏவாள் சொல்கிறாள். ஆங்கிலத்தில் இது ‘seed’ என்று இருக்கிறது. இதற்கு சரியான மொழிபெயர்ப்பு ‘வித்து’ என்பதாகும். ‘வித்து’ என்ற சொல் மிக முக்கியமானதாகும். ஆதியாகமம் 3:15ல் கர்த்தர் சாத்தானிடம் இவ்வாறு கூறினார்:
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.”
இது ப்ரோட்டோ-ஏவாஞ்சலியம் (Protoevangelium) என்று அழைக்கப்படும் முதல் நற்செய்தி. மீட்பர் வருவார் என்ற வாக்குத்தத்தம் இங்கே கொடுக்கப்படுகிறது.
ஆபேல் கொல்லப்பட்டதால் அந்த “வித்து” அதாவது மீட்பின் வழி அழிந்துவிட்டது போலத் தோன்றியது. ஆனால் கர்த்தர் சேத்தைத் தந்து அந்த வாக்குத்தத்தத்தைத் தொடரச் செய்கிறார். சேத் ஆபேலுக்கு “பதிலாள்” அதாவது replacement ஆவான்.
“தேவன் … கொடுத்தார்” என்று ஏவாள் கூறுகிறாள். ஏவாளின் வார்த்தைகளில் தேவனின் செயல்பாடு வெளிப்படையாகக் கூறப்படுகிறது. இது தேவனின் இறையாண்மையையும் இரக்கத்தையும் காட்டுகிறது. பாவத்தின் விளைவுகளுக்கு நடுவிலும் தேவன் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார்.
‘சேத்’ என்ற பெயருக்கு எபிரெய மொழியில் ‘நியமித்தல்’ அல்லது ‘அடித்தளம் போடுதல்’ என்று பொருள். ஏவாளே இந்தப் பெயரை வைத்தது கர்த்தரின் நியமிப்பை அங்கீகரிக்கிறது
இதுமட்டுமல்ல : சேத்துக்கு ஏனோஸ் என்ற மகன் பிறக்கிறான். “ஏனோஸ்” என்றால் “மனிதன்” அல்லது “பலவீனமானவன்” என்று பொருள். இது மனிதனின் பலவீனத்தையும் மரணத்தையும் நினைவூட்டுகிறது.
மனிதன் தன் பலவீனத்தை உணர்ந்து கடவுளின் நாமத்தை அழைக்கிறான். இது இன்றும் பொருந்தும். உண்மையான வழிபாடு தாழ்மையுடன் கடவுளைத் தேடுவதிலிருந்து தொடங்குகிறது.
“அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.” – இது மிகவும் முக்கியமான ஒரு வாக்கியம். ஏனோஸின் காலத்தில் மக்கள் முறையாக தேவனை வழிபடத் தொடங்கினார்கள். ஆபேலும் முறையாக வழிபாடு செய்திருப்பான். அதனால்தான் தேவன் அவன் காணிக்கைகளை அங்கீகரித்தார். ஆனால் அவன் கொலை செய்யப்பட்ட பின் அது தடைபட்டது. சேத் வழியில் தேவனை ஆராதிப்பது மறுமலர்ச்சி அடைந்தது.
இப்பொழுதுதான் முதன் முறையாக மக்கள் கடவுளுக்கு ‘யெகோவா’ என்ற திருநாமத்தைப் பயன்படுத்தி, ஆராதனை செய்யத் தொடங்கினார்கள்.
………………
தொடர்ந்து ஐந்தாம் அதிகாரத்தை பார்ப்போம் ஆதாமின் வம்ச வரலாற்றின் கடைசி அதிகாரம் இது.
வாசிக்கிறேன்
ஆதியாகமம் 5:1-2
[1] ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். [2] அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.
……………..
கவனித்தீர்களா? தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்தார். ஆதமை மட்டுமல்ல ஏனென்றால் ஏவாள் ஆதாமின் மறுபாதி.
இங்கு ஆதாமின் வம்ச வரலாறு என்று துவங்குவதை பார்க்கிறோம் இந்த வினோதமான ஆரம்பம் மீண்டும் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கும் பொழுது மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் 1:1ல் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு என்று ஆரம்பம் ஆகிறது. நாம் அறிந்து கொள்ளுகிற படி இந்த இரண்டு புத்தகங்களும் இரண்டு வம்சங்களின் வரலாறு ஆகிறது. இரண்டு வித்துக்களின் வம்சம் ஆனால் ஒன்றுக்கொன்று எதிரானது. சாத்தானின் வழி வருகிறவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியில் வருகிறவர்களுக்கும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இப்பொழுது நாம் பார்க்கிற சேத்தின் வம்ச வழியில் தான் இறுதியாக இயேசு கிறிஸ்துவும் உலகத்தில் தோன்றுகிறார்.
ஆதியாகமம் 5:3
[3] ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.
……………..
இங்கே ஆதாம் 130 வயதானபோது என்று வாசிக்கிறோம். தேவன் ஆதாமை உண்டாகும் பொழுது அவனுக்கு என்ன வயது நமக்கு அது தெரியாது. எந்த வயதுடையவனாகவும் ஆதாமை தேவன் உண்டாக்கி இருக்கலாம். இதை நாம் சொல்லும் பொழுது இது பல கேள்விகளுக்கு நமக்கு பதில் கொடுக்கிறது. சில பாறைகள் எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் உள்ளது என்று சிலர் சொல்லுகிறார்கள் அல்லவா? அதேபோலத்தான் இதுவும். அந்தப் பாறைகள் அதற்கு முன்னரும் பல கோடி வருடங்களுக்கு முன்னுள்ளதாய் இருக்கலாம். அதுபோல தேவன் பூமியில் ஆதாமை உண்டாகிய காலத்தில் இருந்து 130 ஆண்டுகள் கழித்து, கண் சாயலின் படியும் தன் ரூபத்தின் படியும் ஒரு மகனை பெற்றெடுத்தான் ஆதாம் படைக்கப்படும் பொழுது தேவ சாயலில் படைக்கப்பட்டான் ஆனால் இப்பொழுது ஆதாமுடைய மகன் ஆதாமின் சாயலிலே பிறக்கிறான்.
தொடர்ந்து அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
ஆதியாகமம் 5:4-5
[4] ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். [5] ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
……………….
இப்பொழுது தொடர்ந்து நாம் அந்த கல்லறை தோட்டத்திலே கடந்து செல்கிறோம் என்று சொல்லலாம். ஆதாம் மகன்களையும் மகள்களையும் பெற்றெடுக்கிறான். வசனம் ஐந்துல் என்ன வாசித்தோம். ஆதாம் உயிரோடு இருந்த நாளெல்லாம் 930 வருஷம். பின் என்ன நடந்தது அவன் மாரித்தான். மேலும் எட்டாம் வசனத்தில் சேத் மரித்தான் என்று வாசிக்கிறோம், அவனுக்கும் ஏனோஸ் என்று ஒரு மகன் இருந்தான் அவனுக்கு என்ன நடந்தது வசனம் 11 அவனும் இறந்து விட்டான் என்று நமக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுடைய பெயர் கேனான். அவனும் இறந்து விட்டான். அவனுக்கு மகலாலெயேல் எnற ஒரு மகன் இருந்தான் 17 ஆம் வசனத்தில் நாம் பார்ப்பது போல அவனும் இறந்து விட்டான் அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவன் பெயர், யாரே. அவனும் இறந்து விட்டான். அவனுக்கும் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் யாரேத். அவனுக்கு 962 வருடமான பொழுது அவனும் மரித்துப் போனான்.
தொடர்ந்து வரும் வம்ச வரலாற்றை அடுத்த நிகழ்ச்சியில் நாம் பார்ப்போம்.
முடிவுரை:
நாம் பார்த்ததை ஒரு முறை சிந்தித்துப் பார்ப்போமா? ஆதியாகமத்தில் இன்று நாம் ஆராய்ந்த இப்பகுதி மனித வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் என்னவெல்லாம் நடந்தன என்பதை விவரிக்கின்றது. பாவத்தின் விளைவுகள், கொலை, தண்டனை, கடவுளின் இரக்கம், மற்றும் ஆதாமின் வம்சாவளியை கற்றறிந்தோம். முதலில் காயீன் – ஆபேல் கதை உச்சக்கட்டத்துக்குச் சென்றது. பின்பு காயீனின் வம்சாவளியைப் பார்த்தோம். பின்னர் சேத்தின் வழியான ஆதாமின் வம்சாவளியுடன் முடிகிறது. இப்பகுதி பாவம் மனிதகுலத்தை எவ்வாறு அழிக்கிறது என்பதையும், கடவுளின் திட்டம் எப்படி தொடர்கிறது என்பதையும் காட்டுகிறது.
காயீனின் வம்சத்தில் நாகரிகம் வளர்ச்சி அடைகிறது. பட்டணம் கட்டப்படுகிறது. கின்னரம், நாகசுர வாசிப்பவர்கள் அவன் வம்சத்தில் பிறக்கிறார்கள். பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் காணப்படுகிறார்கள். இவ்வாறு நாகரிகம் ஒரு பக்கம் வளர்ந்தாலும், வன்முறையும், பெருமையும் ஆதிக்கம் செலுத்தியது. இதை நாம் லாமேக்கின் பாடல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஆனால், இதற்கு மாறாக, சேத் வம்சத்தில் தெய்வீக உறவு மீண்டும் தொடங்குகிறது. சேத் வழியாகவே நோவா, ஆபிரகாம், தாவீது, இயேசு கிறிஸ்து வருகிறார்கள். லூக்கா 3:38ல், இயேசுவின் வம்ச வரலாறைப் பட்டியலிட்டுக் கூறும்பொழுது, முடிவில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:
“ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.”
ஆதாமின் வம்சா வழியில் சேத். – சேத்தின் வம்சா வழியில் இயேசு பிறக்கிறார். எனவே, ஆபேலின் மரணத்தால் மீட்பின் வாக்குத்தத்தம் அழியவில்லை. தேவன் அதை சேத்தின் பிறப்பின் மூலம் பாதுகாக்கிறார்.
இங்கே பாவத்துக்கு நடுவில் கிருபை பெருகுவதைப் பார்க்கிறோம். காயீன் வம்சம் வன்முறையிலும் பெருமையிலும் மூழ்கியது. சேத் வம்சம் கடவுளைத் தேடியது. இது ரோமர் 5:20ஐ நினைவூட்டுகிறது: ஆம்
“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.”
இந்தச் சிறிய பகுதி, மனிதகுலத்தின் இருண்ட காலத்திற்கு நடுவில் நம்பிக்கையின் ஒளியைக் காட்டுகிறது. காயீனின் வழியில் வன்முறையும் அழிவும் செல்ல, சேத் வழியில் கடவுளின் வாக்குத்தத்தமும் வழிபாடும் தொடர்கின்றன. இது இறுதியில் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறும் மீட்பின் அடித்தளத்தை அமைக்கிறது. கடவுள் பாவத்தை அனுமதித்தாலும், தமது இரக்கத்தினால் எப்போதும் ஒரு வழியை உருவாக்குகிறார் என்பதே இதன் மையச் செய்தி.
நம்முடைய வாழ்க்கையிலும் இன்று நாம் தேவனை விட்டு தூரமாய் சென்றவர்களாக இருந்தாலும், அவரிடத்திலே இரக்கமும் கிருபையும் மன்னிப்பும் உண்டு என்பதை நான் தாழ்மையோடு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உண்மையாகவே உங்கள் பாவத்தை குறித்த வேதனையோடு இருப்பீர்கள் என்றால் தேவன் உங்களையும் நேசிக்கிறார் உங்கள் பாவத்திற்காகவும் இயேசு தண்டிக்கப்பட்டார் என்பதை உணர்ந்தவராய் உங்கள் வாழ்க்கையை கர்த்தருடைய கரத்திலே அர்ப்பணிங்கள்.
கர்த்தர் தாமே உங்களுக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் நித்திய வாழ்க்கையையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
