ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 4: 1-7
நிகழ்ச்சி எண்: 0020
வாசியுங்கள்
பாதைக்கு வெளிச்சமாம் வேத வசனங்களை எங்களோடு ஆராய்ந்து கற்றுக்கொள்ள இணைந்து இருக்கிற உங்களை அன்போடு வாழ்த்துகிறோம். சாத்தானால் ஏமாற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் தேவனை விசுவாசியாமல் போனதால் தேவன் அவர்களுக்கு கொடுத்த தண்டனை குறித்தும், பூமியின் மேல் தேவனுடைய சாபம் பற்றியும் கடந்த நிகழ்ச்சியில் சிந்தித்தோம்.
ஆதியாகமம் நான்காம் அதிகாரம் முதல் ஏழு வசனங்களை இன்று நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். இந்த அதிகாரத்தில்
காயீன் மற்றும் ஆபேலின் பிறப்பு; காயீன் ஆபேலைக் கொலை செய்தல்; காயீனுக்கு கடவுள் கொடுக்கும் இரண்டாவது வாய்ப்பு; காயீனின் பிள்ளைகளும், ஒரு தெய்வீகமற்ற நாகரிகமும்; சேத்தின் பிறப்பு பற்றியும் இந்த அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். மூன்றாம் அதிகாரத்தில் பாவத்தின் வேர் எது என்பதைப் பார்த்தோம். நான்காம் அதிகாரத்தில் பாவத்தின் கனியை பார்க்கிறோம். இந்த அதிகாரத்தில் ஆதாம் நன்மை தீமை அறியத்தக்க கவர்ச்சியின் கனியை புசித்ததினால் எவ்வளவு துன்பப்பட்டான் என்று மாத்திரம் நாம் பார்க்கப் போவதில்லை. இந்த 4ஆம் அதிகாரத்தில் அவனுக்கு எவ்வளவாக கேடு சம்பவித்தது என்றும் பார்க்கப் போகிறோம். அவனுடைய அவிசுவாசத்தினாலும் கீழ்படியாமையினாலும் அவன் தேவனை விட்டு திரும்பி பாவம் செய்தான். இதன் மூலமாக அவன் மீதும் மனித இனத்தின் மீதும் தேனுடைய நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தான். இதனால்தான் உங்களுக்கும் எனக்கும் இந்த சுபாவம் வந்தது. நம்முடைய தகப்பனாகிய ஆதாமின் அதே பாவ சுபாவம் நமக்கு வந்துவிட்டது. இவை எல்லாமே ஆதாம் ஏவாளின் இரண்டு குமாரர்களின் கதையில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவர்களுக்கு அதிக குழந்தைகள் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு இங்கு இரண்டு குமாரர்களுடைய காரியங்கள் மட்டுமே முதலாவது சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆதியாகமம் 4:1
‘ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். ‘
…………………………..
இது மனித குலத்தின் முதல் பிறப்பு. ஏவாள் இதை தேவனுடைய அற்புதமாகப் பார்க்கிறாள். “காயீன்” என்ற பெயரின் அர்த்தம் எபிரெய மொழியில் “பெற்றெடுத்தேன்” அல்லது “உண்டாக்கினேன்” என்பதாகும். ஏவாள் தன் பெயரிடுதலில் தேவனையும் சேர்த்துச் சொல்கிறாள்: “கர்த்தரோடு சேர்ந்து நானும் ஒரு மனிதனை உண்டாக்கினேன்” என்ற பெருமிதம் தொனிக்கிறது.
போராட்டம் நீண்ட காலம் நீடிக்கும் என்று ஆதாமும் ஏவாளும் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது. காயீன் பிறந்தபோது, ஏவாள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் -. பெண்ணின் வித்து பாம்பின் தலையை நசுக்கும் என்று கடவுள் சொன்னார் – இதோ அவன் இருக்கிறான்!” என்று சொல்லியிருக்க வேண்டும், ஆனால் காயீன் அந்த நபர் அல்ல. அவன் ஒரு கொலைகாரன், அவன் ஒரு மீட்பர் அல்ல.// உண்மையான இரட்சகர் வருவதற்கு நீண்ட காலம் ஆகும். குறைந்தபட்சம் ஆறாயிரம் ஆண்டுகள் ஆகலாம் – அல்லது அதை விட நீண்ட காலம் என்று நான் நினைக்கிறேன் – பெண்ணின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் இடையே போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆதியாகமம் 4:2
‘பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். ‘
…………………………
“ஆபேல்” என்றால் “மூச்சு”, “ஆவி”, “மாயை”, “ஒன்றுமில்லாமை” என்று அர்த்தம். இது அவன் வாழ்க்கை மிகக் குறுகியதாக முடியும் என்பதற்கு முன்னறிவிப்பு போல உள்ளது.
இந்த வசனத்தில் இருவருடைய தொழில்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இருவருடைய தொழில்களும் முக்கியம்.
காயீன் ஒரு விவசாயி. பூமியைப் பண்படுத்துதல் அவன் வேலை. இது ஆதாமுக்கு கொடுக்கப்பட்ட சாபத்துடன் (3:17-19) நேரடியாகத் தொடர்புடையது. ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட சாபம் என்ன? ஆதியாகமம் 3:17,18:
“பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.”
…………………………
காயீன் முள்ளுடனும், குருக்குடனும் போராட வேண்டிய நிலத்தில் உழைக்கிறான்.
ஆனால் ஆபேல் ஒரு ஆடுமேய்ப்பவன். இது அதிக சுதந்திரமும், தியாகத்திற்கான வாய்ப்பும் கொண்ட தொழில்.
இவர்கள்தான் ஆதாமின் குமாரர்கள். இவர்களை குறித்துதான் நாம் தொடர்ந்து பார்க்க போகிறோம். இது ஏதோ வரலாறு என்று மட்டும் நாம் நினைக்க கூடாது. என்றும் எத்தனையோ குடும்பங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 4:3
‘சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ‘
……………………….
“சிலநாள் சென்றபின்பு,” என்பது உண்மையில் “நாட்களின் முடிவில்” என்று பொருள்படும், அதாவது ஓய்வுநாளில், கடவுள் ஓய்வெடுத்த நாளில்.
“காயீன் கொண்டுவந்தான்” – “என்பது ஒரு நியமிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்தான் என்று பொருள். அவர்கள் தேவனை வழிபட நியமிக்கப்பட்ட இடத்திற்கு காணிக்கையை கொண்டு வருகிறார்கள். இவை அனைத்தும் அவர்கள் பெற்ற வெளிப்படுத்தல் மூலம் செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் எபிரெயர் 11:4 ல் வாசிப்பது என்ன?
‘விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். ‘
………………..
எப்படி ஆபேல் விசுவாசத்தினாலே காணிக்கையை செலுத்த முடிந்தது? ?
இதைத்தான் ரோமர் 10 :17 இல் பார்க்கிறோம்.
‘ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ‘
………………………..
தேவன் தனக்கு காணிக்கை கொண்டு வருவதைப் பற்றி காயின் ஆபேலுக்கு கூறி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபேல் ஒரு பொழுதும் விசுவாசத்துடன் காணிக்கையை கொண்டு வந்திருக்க முடியாது. இவ்வாறே காயீனும் விசுவாசத்தோடு காணிக்கை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் காயின் அவ்வாறு கொண்டு வரவில்லை. காயின் நிலத்தின் கனிகளை கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வந்தான். அவன் கொண்டுவந்த கனிகளில் எந்த பழுதும் இல்லை. அவன் ஏதோ மீதியாக இருந்தவைகளை கொண்டு வந்தான் என்று நாம் நினைத்து விடக்கூடாது. சிலர் ஊழியர்களுக்கு, ஏழைகளுக்கு பழைய துணிகளை கொடுப்பது போன்ற செயல் அல்ல காயினுடைய செயல். அவன் சிறந்த கனிகளையே கொண்டு வந்தான். செழிப்பான காய்கறிகளுக்கான போட்டி வைக்கப்பட்டிருந்தால் அவனுக்கு பரிசு கிடைத்திருக்கும். ஆனால் காயின் விசுவாசத்தோடு தன் காணிக்கையை கொண்டு வரவில்லை. நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரியே, கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வரும் பொழுது நீங்கள் என்ன எண்ணத்தோடு கொண்டு வருகிறீர்கள்?.
ஆதியாகமம் 4:4-5
‘ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. ‘
………………….
தேவன் தன்னுடைய காணிக்கையை அங்கீகரிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டவுடன் முதலாவது அவன் உள்ளத்தில் எரிச்சல் உண்டாகிறது அதன் விளைவாக அவனுடைய முக நாடி வேறுபடுகிறது. அருமையானவர்களே நாம் வேலை செய்யும் இடத்தில் அல்லது சில குடும்ப சூழலில், நாம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள், அங்கீகாரம் பெறுகிறார்கள் வாழ்த்து பெறுகிறார்கள் என்பதை உணர்வது நமக்குள்ளே எரிச்சலை உண்டாகிறதா? நம்முடைய முக நாடி வேறுபடுகிறதா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி என்றால் பாவம் நம்முடைய வாசற்படியில் படுத்து இருக்கிறது என்றுதான் பொருள்.
காயின் செய்ததில் எந்த தவறும் இல்லை என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால் விசுவாச துரோகத்தை குறித்து பேசும் பொழுது யூதா தனது நிருபத்தில் 11-ம் வசனத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார். கவனியுங்கள் வாசிக்கிறேன்.
இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து
…………..……
சரி , காயீனுடைய வழி என்றால் என்ன??
காயின் தேவனுக்கு காணிக்கை கொண்டு வந்த பொழுது அதை விசுவாசத்தோடு அவன் கொண்டு வரவில்லை. அவன் தனக்கு விருப்பமானபடி வந்தான். அவன் கொண்டு வந்த காணிக்கை மனித சுபாவம் – பாவம் உள்ளது என்பதை மறுக்கிறதாய் இருந்தது.
உலகிற்கு வரவிருக்கும் மீட்பரை சுட்டிக்காட்டும் அந்த சிறிய இரத்த பலியை கொண்டு வாருங்கள். உங்கள் சொந்த கைகளின் பிரயாசங்களைக் கொண்டு வராதீர்கள்” என்று தேவன் கூறி இருக்க வேண்டும்.
மேலும் தேவனிடத்திலிருந்து மனிதன் பிரிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும் காயினுடைய காணிக்கை மறுக்கிறது. எல்லாமே சரியாக இருக்கிறது என்பது போல அவன் செயல்பட்டான். அருமையானவர்களே இன்றும் தாராளமயம் பற்றி பேசுகிறவர்கள் உலகளாவிய சகோதரத்துவம், பற்றி பேசுகிறவர்கள் எல்லாருக்குமே ஒரே பிதா போன்ற தத்துவங்களை அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் இன்று நம்முடைய காரியங்கள் எல்லாம் சரியாக இல்லை. உலகத்தில் உள்ள எல்லாருமே தேவனுடைய பிள்ளைகளாக பிறக்கவில்லை. ஒருவர் தேவனுடைய பிள்ளையாக வேண்டும் என்றால் அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். மறுபடி பிறந்தாலே ஒருவர் தேவனுடைய பிள்ளை ஆக முடியும். உலகத்தில் உள்ள யாவருக்கும் ஒரே தந்தை – ஒரே பிதா இல்லை. மனிதன் தேவனிடத்தில் இருந்து பிரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் காயின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் அநேகர் இவ்விதமாகவே காணப்படுகிறார்கள்.
காயீன் மறுத்த மூன்றாவது விஷயம் மனிதனால் தேவனுக்கு தன்னுடைய கிரியைகளை காணிக்கையாக கொடுக்க முடியாது என்பதை காயீனுடைய காணிக்கை மறுக்கிறதாக இருக்கிறது- காயீன் தன்னால் முடியும் என்று நினைத்தான். வேதம் என்ன கூறுகிறது:?
தீத்து 3:5 வாசிக்கிறேன்.
‘நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். ‘
…………………………….
இங்கே ஆதிகாலத்தில் காயீனுக்கும் ஆபேலுக்கும் இடையிலான வேறுபாடு குணாதிசய வேறுபாடு அல்ல, ஆனால் அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளில்தான் வித்தியாசம் இருந்தது. காயீனின் அப்பா வழி தாத்தா ஒரு குடிகாரர் என்று சொல்ல முடியாது. அவனுக்கு தாத்தாவே இல்லை. ஆபேலுக்கு தாய் வழி பாட்டி மிகவும் சிறந்தவர்கள் என்று கூற முடியாது. அவனுக்கு பாட்டி யாரும் இல்லை. அவர்கள் இருவரும் ஒரே குடும்ப சூழலில் தான் வளர்ந்தார்கள். அவர்களுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்கள் கொண்டுவந்த காணிக்கையில் வித்தியாசம் இருந்தது.
இந்த நாட்களில் மக்கள் கொண்டு வருகிற காணிக்கை மக்களை வேறுபடுத்தும். எந்த ஒரு கிறிஸ்தவனும் மற்றவர்களை விட சிறந்த ஒரு இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு மனிதனை கிறிஸ்தவன் ஆக்குவது எது? நானும் ஒரு பாவி என்று உணரும் பொழுதே அவன் ஒரு கிறிஸ்தவன் ஆக முடியும். அந்த மனிதனுக்கும் ஒரு பலி தேவையானதாக இருக்கிறது. அந்த மனிதனுடைய இடத்தை இன்னும் ஒருவர் எடுத்து அவனுடைய இடத்தில் மரிக்க வேண்டும். ஏனென்றால் பாவத்திற்கு தண்டனை உண்டு. அந்த தண்டனையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டுமென்றால், நம்முடைய இடத்திலே நம்முடைய பாவத்திற்கான தண்டனையை ஒருவர் பெற்று நிறைவேற்ற வேண்டும். அதைத்தான் இயேசு கிறிஸ்து செய்தார். இதை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் என்ன எழுதி இருக்கிறார் பாருங்கள். ரோமர் 3:26.
‘கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். ‘
…………………………
இந்த காரணத்தினாலேயே பவுல் தொடர்ந்து ரோமர் 10:3 இப்படி எழுதி இருக்கிறார்.
‘எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ‘
…………………………..
இன்றைக்கும் ஏராளமான மக்கள் இப்படியே இருக்கிறார்கள் என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாக கூறுகிறது. இவர்கள் தேவனை பிரியப்படுத்துவதற்காக – சமயத்தின் மூலமாக முயற்சி செய்கிறார்கள். சிலர் சபையில் சேர்கிறார்கள். சிலர் நற்காரியங்களை செய்வதன் மூலமாக இதைப் பெற்றுவிட முடியும் என்று நம்புகிறார்கள். தேவனுடைய நீதி மட்டுமே உங்களுக்கு வர முடியும். இது பரிபூரணமான நீதியாக இருக்க வேண்டும். இது கிறிஸ்துவின் மூலமாக உங்களுக்கு கொடுக்கப்படும் .
ரோமர் 4:25 என்ன சொல்லுகிறது கவனியுங்கள்.
‘அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.’
………………………..
கவனித்தீர்களா? இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படாமல் இருந்திருப்பார் என்றால் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட முடியாது. ஏனென்றால் நம் பாவங்களுக்காக மரித்த அவர் நாம் நீதிமான்கள் ஆக்கப்படும் படியாக உயிரோடு எழுப்பப்பட்டார்.
மேலும் அப்போஸ்தலர் பவுல் 2கொரிந்தியர் 5: 21 இல் இவ்வாறு கூறியிருக்கிறார்.
‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.’
……………………….
மேலும் பிலிப்பி திருச்சபைக்கு எழுதும் பொழுது பவுல் இன்னும் சற்று தெளிவாக எழுதுகிறார். பிலிப்பியர் 3:9 வாசிக்கிறேன்.
‘நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், ‘
…………………..
ஆனால் ஆதியாகம புத்தகத்தில் நாம் பார்க்கிற காயீனின் நீதி சுயநீதியாகும். ஆனால் ஆபேலின் காணிக்கை விசுவாசத்துடன் கொண்டுவரப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பலியை எதிர்பார்த்து செய்யப்பட்டதாக இருந்தது. காயீனும் ஆபேலும் சேர்ந்து வந்து தேவனை தொழுது கொண்டார்கள் என்று நாம் பார்த்தோம். இந்த இரண்டு பேரும் முழுவதும் ஒன்று போலவே இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் தான். Dr. Harry Rimmer. என்ற வேத விரிவுரையாளர் இவர்கள் – இரண்டு பேரும் ரெட்டை பிள்ளைகள் என்று சொல்லுகிறார். அவர்களுக்குள் ஒரே ரத்தம் தான் ஓடியது. என்றாலும் அவர்கள் காணிக்கையில் வித்தியாசம் உண்டானது. இதற்கு காரணம் குணநலன் வேறுபாடு அல்ல. ஆபேல் அதை விசுவாசத்துடன் படைத்தபடியால் தேவன் அதை அங்கீகரித்துக் கொண்டார். ஆனால் காயீன் அப்படி அல்ல அவனுடைய காணிக்கை தேவ அங்கீகரிப்பை பெறவில்லை. ஏனென்றால் தேவன் கூறியது போல, இயேசு கிறிஸ்துவின் சிலுவை பலியை எதிர்பார்த்த ஒரு காணிக்கையாய் அது இல்லை.
ஆதியாகமம் 4:6-7
‘அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். ‘
……………………….
இது வேதாகமத்தில் தேவன் ஒரு பாவியோடு நேரடியாகப் பேசி, அவனுக்கு மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்கும் முதல் சம்பவம்.
“நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?” – இது கிருபையின் வெளிப்பாடு. அவன் மனம் திரும்ப தேவன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார் என்று சொல்லலாம் இன்னும் தாமதமில்லை; மனம் திரும்பினால் எல்லாம் சரியாகும்.
காயின் ஏன் அந்த அளவு எரிச்சல் அடைந்தான்? அவன் தன்னுடைய சகோதரனை கொலை செய்யும் அளவிற்கு செயல்பட்டான். எந்த இடத்தில் கொலை நடக்கின்றதோ அங்கே கோபம் உண்டாயிருக்கும். ஆனால் ஆண்டவராக இயேசு கிறிஸ்து என்ன சொல்லி இருக்கிறார்? நீ உன் சகோதரரிடத்தில் காரணம் இல்லாமல் கோபம் கொண்டாயானால் நீ கொலை குற்றத்திற்கு ஏதுவாய் இருப்பாய் என்று கூறியிருக்கிறார். கோபத்திற்கு பின்னால் பொறாமை இருக்கிறது. பொறாமைக்கு பின்னால் பெருமை இருக்கிறது கவனியுங்கள்.
யாக்கோபு 1:15
‘பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். ‘
……………………..
காயீனுடைய கோபம் அவனைக் கொலை செய்ய தூண்டியது. அந்த கோபத்திற்கு பின்னால் பொறாமை இருந்தது. அந்த பொறாமைக்கு பின்னால் அவனுடைய பெருமை இருந்தது.
கடவுள் அவனை அவன் செயலின்படியே நடத்துகிறார். அவர் காயீனிடம், “ நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?” என்று கேட்கிறார். உண்மையில், இதன் அர்த்தம், “உனக்கு மேன்மை இல்லையா?” என்பதுதான், மூத்த மகன் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான், இப்போது அதை இழப்பேன் என்று காயீன் நினைக்கிறான். அவன் நல்லது செய்தால் அதை இழக்க எந்த காரணமும் இல்லை என்று கடவுள் அவனிடம் கூறுகிறார். நல்லது செய்வது என்பது கடவுள் ஆபேலிடமிருந்து ஏற்றுக்கொண்ட, ஒரு பலியையும், அவன் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்வதையும் குறிக்கும். ஆனால் காயீன் நன்மை செய்ய இடம் கொடுக்காமல் கோபத்திற்கு இடம் கொடுத்தான்.
அடுத்ததாக தேவன், பாவம் வாசற்படியில் படுத்திருக்கும் என்று சொல்லுகிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் சிலர் பாவ நிவாரண பலி வாசற்படியில் படுத்து இருக்கும் என்று தேவன் சொல்கிறார் என்று சொல்வார்கள். அதாவது பலிக்கான ஒரு ஆட்டுக்குட்டி வாசற்படியில் படுத்து இருக்கும் என்பார்கள். இது ஒரு வகையில் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் இது அவ்வளவு சரியானதாக தெரியவில்லை. மோசேயின் காலம் வரைக்கும் பாவ நிவாரண பலி கொடுக்கப்படவில்லை என்றே வேதத்தின் மூலம் அறிகிறோம். லேவியராம புத்தகத்தில் பாவ நிவாரண பலியை குறித்து சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த புத்தகத்தின் முதல் பகுதியில் ஐந்து விதமான பலிகளைப்பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் முன் பாவ நிவாரண பலி செலுத்தப்படவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 3:20 என்ன சொல்கிறார்.பாருங்கள். ரோமர் 3:20
‘இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், ……
மேலும், நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் வரை தகன பலியையே மக்கள் செலுத்தினார்கள். மோசேயின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த யோபு நாட்களில் தகன பலியையே செலுத்தினான். அது பாவ நிவாரண பலி அல்ல. நீங்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் இது உண்மை என்று தெரியும்.
எந்த அளவு பாவம் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையில் காயீன் இருந்தான் என்பதை அவன் அறியாமல் இருந்தான். பாவம் வாசற்படியில் படுத்து இருக்கும் என்று சொல்வதற்கு அர்த்தம் அது ஒரு பயங்கரமான மிருகத்தை போல வாசற்படியில் படுத்திருந்து அவன் மீது பாய்வதற்காக பதுங்கிக் கொண்டு இருக்கிறது. அவன் வெளியே வரும் பொழுது அது அவன் மீது பாய்கிறது. இதற்காகவே தேவனால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பலியை காயின் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருந்தது. இயேசு கிறிஸ்துவின் பலியை அர்த்தப்படுத்துவதற்காக – பாவத்திற்காக செலுத்தப்படுகிற பலியாக அது இருக்க வேண்டும்.
காயினை குறித்து யோவான் தனது முதல் நிறுவத்தில் என்ன எழுதி இருக்கிறார் கவனியுங்கள். 1 யோவான் 3:12
‘பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. ‘
………………………
மேலும் , நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; என்று தேவன் கூறுவதற்கான காரணம். காயினும் நன்மை செய்ய வேண்டும். எப்படி?? ஆபேல் கொண்டு வந்த காணிக்கையை போல காயீனும் கொண்டு வருவதே நன்மை செய்வது.
ஆபிரகாம் தகன பலியையே செலுத்தினான் என்று பார்க்கிறோம். ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா??. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுகிற வரையில் மீறுதல் என்பது இருந்திருக்க முடியாது. அதாவது, நியாயப்பிரமாணத்தை மீறுவதால் உண்டாகும் பாவம் வரவில்லை. ஆகவே தேவன் காயினை பாதுகாத்தார் என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
ஏனென்றால் நியாயப்பிரமாணத்தின்படி பார்த்தால், காயீன் கொல்லப்பட வேண்டும்.
கர்த்தருடைய வசனங்களை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனே, சகோதரியே இன்று நான் கேட்ட சத்தியங்களை சற்றே நாம் சிந்தித்துப் பார்ப்போம். கர்த்தர் இடத்தில் நாம் வரும்பொழுது அவர் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான காரியம் நாம் பாவிகள், நம்மிடத்தில் எந்த நன்மையும் இல்லை என்ற உணர்வுடன் அவரிடம் வரவேண்டும். நாம் திருச்சபையின் அங்கமாய் இருப்பதினால் அவர் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாம் அதிகம் காணிக்கை கொடுப்பதினாலே தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளப் போகவில்லை. நாம் பல நற்குரியைகளை மட்டும் செய்வதினாலே தேவனுடைய அங்கீகாரம் நமக்கு கிடைப்பதில்லை.
அப்படி என்றால் நாம் தேவனிடத்தில் வரும்பொழுது நம்முடைய பாவத்திற்காக இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை அறிந்தவர்களாகவும் அதை விசுவாசிப்பவர்களாகவும், நம்முடைய நீதி எல்லாம் கந்தை அவர் நமக்கு நீதியின் உடையை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் வரவேண்டும். உண்மையான இருதயத்தோடு வந்து நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும் பொழுது, அவர் நமது பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டபடியினாலே, நம்முடைய பாவங்களை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க அவர் உண்மை உள்ளவராய் இருக்கிறார். அப்படி நம்மை தாழ்த்தி அவரண்டை வரும் பொழுது, அவர் நம்மை பூரணமாய் ஏற்றுக் கொள்கிறார். தன்னைத்தான் தாழ்த்துகிற எவனையும் தேவன் உயர்த்துகிறார். அதுமட்டுமல்ல நாம் அவருடைய சொந்த பிள்ளைகள் இந்த பெரிய உண்மையை நம்முடைய உள்ளத்தில் தெளிவு படுத்துகிறார்.
மேலும் காயீனைப் போல , யாருடனாவது நம்முடைய காரியங்களை ஒப்பிட்டு அவர்கள் மேல் கோபமாய் இருக்கிறோமா? எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கிறோமா? சற்று சிந்தனை செய்வோம். கோபத்திற்கு பின்னால் பொறாமை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பொறாமைக்கு பின்னால் பெருமை இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவேதான் மூடனின் நெஞ்சில் கோபம் குடிகொள்ளும், என்று ஞானி கூறுகிறார்.
இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் நம் நினைவில் இருக்கட்டும்,
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
………………………….
இன்று இந்த ஏழு வசனங்களில் நாம் பார்த்தவற்றை சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன்:
- தேவன் காணிக்கையை மட்டுமல்ல, காணிக்கை செலுத்துகிறவனின் இதயத்தைப் பார்க்கிறார்.
- முதற்கனி மற்றும் சிறந்தது எல்லாமே தேவனுக்கே என்பது வேதம் நமக்குக் கற்றுத்தரும் சத்தியம்
- பொறாமை மற்றும் கோபம் ஆகியவை பாவத்தின் வாசலில் படுத்திருக்கும் “மிருகத்திற்கு” உணவளிக்கின்றன.
- பாவம் செய்வதற்கு முன்பாகவே தேவன் கிருபையோடு எச்சரிக்கை செய்கிறார்; மனிதனுக்கு எப்போதும் திரும்பி வர வாய்ப்பு உண்டு.
- “நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் ” – மனிதனுக்கு பாவத்தின் மேல் ஆளுகை செய்யும் பொறுப்பும் ஆற்றலும் தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏழு வசனங்களிலேயே மனிதனின் வீழ்ச்சி, பொறாமை, பாவத்தின் தூண்டுதல், தேவனுடைய கிருபையான எச்சரிக்கை, மற்றும் இலவச விருப்பம் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
ஜெபம் செய்வோம்
எங்களை அதிகமாக நேசிக்கிற எங்கள் அன்பின் கர்த்தாவே. என்றும் நாங்கள் கற்றுக் கொண்ட உம்முடைய சத்திய வசனங்களுக்காக ஒரு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். எங்களுக்கு நீர் வெளிப்படுத்தும் காரியங்களை நீங்கள் நினைவில் வைத்து உம்முடைய எதிர்பார்ப்பிற்கு கீழ்படிய எங்களுக்கு கிருபை செய்யும். காயினை போல எங்கள் கருத்தின் கிரியைகள் இரட்சிப்பிற்கு போதும் என்று நாங்கள் தவறாய் சிந்திக்காத படி எங்களை காத்துக் கொள்ளும். எப்பொழுது உம்முடைய பாதத்தில் வரும் பொழுதும் இயேசு கிறிஸ்து எங்கள் பாவத்திற்காக மரித்ததை விசுவாசிக்கவில்லை அவருடைய நீதியின் அடிப்படையில் உம்மிடத்தில் வர எங்களுக்கு ஞான இருதயத்தை தாரும்.
நாங்கள் என்ன எண்ணங்களோடு உமக்கு காணிக்கை கொடுக்கிறோம் என்பதை நீர் அறிந்திருக்கிறீர். அதை குறித்து எப்பொழுதும் நாங்கள் ஜாக்கிரதை உள்ளவர்களாக வாழ நீர் எங்களுக்கு கிருபை செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறோம் பிதாவே ஆமென்
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
