ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 39
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 39
நிகழ்ச்சி எண்: 0057

வாசியுங்கள்

வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்கிற உங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்போடு வரவேற்கிறோம். இன்று நாம் ஆதியாகமம் 39 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
ஆதியாகமம் 38-ஆம் அதிகாரத்தின் இடைவேளைக்குப் பிறகு, 39ஆம் அதிகாரத்தில் நாம் மீண்டும் யோசேப்பின் கதைக்குத் திரும்புகிறோம். யூதாவைப் பற்றிய ஒரு அருவருப்பான கதையைச் சொன்ன அந்த அதிகாரத்தை, விவிலியத்தின் மிக மோசமான அதிகாரங்களில் ஒன்று என்று நாம் அதை வகைப்படுத்தினோம்.
யூதாவிலிருந்து யோசேப்பு முற்றிலும் மாறுபட்டவர் என்பதை நாம் இங்கே பார்க்கப் போகிறோம். யோசேப்பும் பெஞ்சமினும் மற்ற பத்து சகோதரர்களுக்குக் கிடைக்காத பல போதனைகளையும், அறிவுரைகளையும், தனிப்பட்ட கவனிப்பையும் பெற்றதாக நாம் சொல்ல முடியும். யாக்கோபு இந்த இரு மகன்கள் மீது மட்டுமே அதிக ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது.
தன் சகோதரர்களின் வெறுப்பு மற்றும் பகையினால், யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்து தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பதினேழு வயது சிறுவனுக்கு, அந்நிய தேசத்தில் அடிமையாக விற்கப்படுவது என்பது மிகவும் இருண்ட எதிர்காலமாகும். அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் வெளிப்படையாக எதுவுமே அங்கே இருக்கவில்லை. யோசேப்பு ஒரு துரதிர்ஷ்டவசமான சிறுவனைப் போலவே காணப்பட்டார். எகிப்தில் கூட, காரியங்கள் அவருக்குச் சாதகமாகத் தொடங்கும் போதெல்லாம், ஏதோ ஒன்று குறுக்கிடும். நிச்சயமாக, அவை அனைத்தும் ஒரு நோக்கத்திற்காகவே நடந்தன, ஆனால் யோசேப்பு அதை அந்த நேரத்தில் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.
பழைய ஏற்பாட்டிலேயே, யோசேப்பின் வாழ்க்கையில் தெரிவது போல கடவுளின் நோக்கம் வேறு யாருடைய வாழ்க்கையிலும் இவ்வளவு தெளிவாகத் தெரிந்ததில்லை. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கடவுளின் பராமரிப்பு (Providence) வெளிப்படையாக பார்க்க முடியும். கடவுளின் கரம் அவர் மீது இருந்தது, கர்த்தரின் வழிநடத்துதல் தெளிவாகத் தெரிந்தது; ஆனால் வேத வசனங்களின்படி, கடவுள் நேரடியாகத் தரிசனம் தராத ஒரே பிதாவாக யோசேப்பு இருக்கிறார். கடவுள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குத் தரிசனமானார், ஆனால் யோசேப்புக்கு அப்படித் தோன்றவில்லை. இருப்பினும், மற்றவர்களை விட இவருடைய வாழ்க்கையில் கடவுளின் வழிநடத்துதல் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ரோமர் 8:28-க்கு அவர் ஒரு பழைய ஏற்பாட்டு உதாரணமாகத் திகழ்கிறார்: “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டுள்ளாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”
யோசேப்பு இதையே மிகத் தெளிவான மொழியில் வெளிப்படுத்தினார். தன் தந்தை இறந்த பிறகு, யோசேப்பு தங்களைப் பழிவாங்குவார் என்று நினைத்த சகோதரர்கள் அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டனர். தான் அவர்கள் மீது எந்தக் கோபமும் கொள்ளவில்லை என்று கூறிய யோசேப்பு, “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ… அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதியாகமம் 50:20) என்று கூறினார். அவருக்கு எதிராக எல்லாம் தவறாக நடப்பது போலவும், எதிர்காலம் இருண்டது போலவும் தெரிந்தாலும், ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு படியாகவே இருந்தது.
அருமையான சகோதரனை சகோதரியே, நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் நாம் ஒரு உண்மையை உணர வேண்டும்: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபிரெயர் 12:6). நாம் கடவுளின் பிள்ளைகளாகவும், அவருடைய சித்தத்திலும் இருந்தால், அவருடைய அனுமதி இல்லாமல் எதுவும் நம்மை அணுகாது என்ற உறுதி நமக்கு உண்டு. கடவுள் எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்கிறார். நம்முடைய துரதிர்ஷ்டங்கள், மனவேதனைகள் மற்றும் துன்பங்கள் கூட நம்முடைய நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவுமே அமைகின்றன.
கடவுளின் ஒவ்வொரு பிள்ளையையும் சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி இருக்கிறது; கடவுளின் அனுமதி இல்லாமல் எதுவும் அதைத் தாண்டி வர முடியாது. சாத்தான் யோபுவைச் சோதிக்க விரும்பியபோது கடவுளிடம் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும்: “நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றிலும் வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்…” (யோபு 1:10). அந்த வேலியை நீக்கும்படி சாத்தான் கேட்டான். ஒருவேளை நம்மைச் சோதிக்கச் சாத்தானுக்குக் கடவுள் அனுமதி அளித்தாலும், அதுவும் நம் நன்மைக்காகவே முடியும்.
டாக்டர் டோரி (Dr. Torrey) என்னும் ஊழியக்காரர் அடிக்கடி சொல்வது இதுதான். “ரோமர் 8:28 என்பது களைப்படைந்த இதயத்திற்கான ஒரு மென்மையான தலையணை.”
மற்றொருவர் இதை: பற்றி சொல்லும் பொழுது “கடவுள் எதையும் செய்வதில்லை, அல்லது எதையும் நடக்க அனுமதிப்பதில்லை; ஒருவேளை நம்மால் கடவுளைப் போலவே எல்லாவற்றையும் பார்க்க முடிந்தால், நாமும் அதையேதான் செய்திருப்போம்.” என்று கூறி இருக்கிறார்.
யோசேப்பின் வாழ்க்கையில் கடவுளின் பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் மற்றொரு அம்சம் உள்ளது. இன்று கடவுளின் பிள்ளைகள் யாருமே கடவுளிடமிருந்து நேரடி வெளிப்பாட்டைப் (Direct Revelation) பெறுவதில்லை. சில நவீன போலித் தீர்க்கதரிசிகள் இதற்கு மாறாக உரிமை கொண்டாடினாலும், கடவுள் இன்று யாருக்கும் நேரடியாகத் தோன்றுவதில்லை. கடவுள் யோசேப்புக்கு நேரடியாகத் தோன்றவில்லை என்பது நமக்கு ஊக்கமளிக்கிறது; என்றாலும், அவர் நம்மை இன்றும் வழிநடத்துகிறார் என்பதை இதன் மூலம் நாம் உறுதியாக அறியலாம்.
கடைசியாக நாம் யோசேப்பை குறித்து கற்றுக் கொண்ட பொழுது யோசேப்பு தன் சகோதரர்களால் எகிப்திற்கு சென்ற வியாபாரிகளிடத்திலே விற்கப்பட்டார் என்று பார்த்தோம். தொடர்ந்து யோசேப்புக்கு என்ன நடக்கிறது பார்ப்போம்.

ஆதியாகமம் 39:1
‘1யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். ‘
,,,,,,,,,,,,,,,,,,,,

பதினேழு வயதான, பார்ப்பதற்கு அழகாக இருந்த இந்த இளைஞன், அடிமைச் சந்தையில் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாகத் தெரிந்தார். காவலர் படைத்தலைவரான போத்திபார் இவரை விலைக்கு வாங்கினார். போத்திபார் ராணுவத்தில் இருந்தார்; அவர் ஒரு உயர்மட்ட ராணுவ அதிகாரி மற்றும் எகிப்து அரசாங்கத்தில் மிக முக்கியமான ஒரு நபர்.

ஆதியாகமம் 39:2
‘2 கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். ‘
…………………..

யோசேப்பு பார்வோனின் அதிகாரியான போத்திபாரின் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, கர்த்தர் அவரோடு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. யோசேப்பு அந்த வீட்டிற்கு வந்தபோது, அந்த குடும்பத்திற்கு ஆசீர்வாதம் கிடைத்தது.

ஆதியாகமம் 39:3

‘3 கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; ‘
………………..

இதுவரை வாழ்க்கை மிகவும் சிறப்பாகச் சென்றது. அவர்கள் அனைவரும் அதன் பிறகு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று சொல்லி முடிக்க நாம் விரும்பலாம், ஆனால் அப்படி நடக்கவில்லை. இது ஒரு கற்பனைக் கதை அல்ல; இதுதான் நிஜம். கடவுளின் பிள்ளைகள் இந்த உலகில் சோதனைகளையும், துயரங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும். யோசேப்பின் வாழ்க்கையிலும் இதுதான் நடக்கப்போகிறது.

ஆதியாகமம் 39:4

‘4யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். ‘
…………………
சற்று சிந்தித்துப் பாருங்கள்! யோசேப்பு தன் வேலையைச் செய்த விதம் அவரை ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. போத்திபாரின் அசையும் சொத்துக்கள் மற்றும் நிலபுலன்கள் என அனைத்து உடைமைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு யோசேப்க்குக் கிடைத்தது. போத்திபார் எல்லாவற்றிலும் யோசேப்பை முழுமையாக நம்பினார்.

ஆதியாகமம் 39:5-6

‘5அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. 6ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். ‘
…………………

யோசேப்பை போத்திபார் எந்த அளவுக்கு நம்பினார் என்றால், அவர் ஒருபோதும் யோசேப்பிடம் கணக்குக் கேட்கவில்லை. கணக்குகளைச் சரிபார்க்க அவர் ஒரு தணிக்கையாளரை ) நியமிக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்த இளைஞனின் நேர்மையை அவர் அவ்வளவு நம்பினார். பார்வோனின் அதிகாரியான போத்திபார் கவலைப்பட்டதெல்லாம், பார்வோனைத் திருப்திப்படுத்தி தன் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். தன் சொந்த விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்பை அவர் யோசேப்பிடமே விட்டுவிட்டார். அவர் உணவருந்த அமரும்போது, அவருக்கு முன்னால் உணவு வைக்கப்படும்; அவ்வளவுதான். யோசேப்பை முழுமையாக நம்பியதால், அந்த அளவுக்கு அவர் நிம்மதியாக இருந்தார்.

அங்கே என்ன நடக்கிறது பாருங்கள்.

ஆதியாகமம் 39:7

‘7சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். ‘
…………………….
போத்திபார் தனது வீட்டை நிர்வகிக்கும் முழு அதிகாரத்தையும் யோசேப்பிடம் கொடுத்திருந்தார்; எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பாக இருந்தார். யோசேப்பு வேலையில் மும்முரமாக இருந்தபோது, போத்திபாரின் மனைவியும் மும்முரமாக இருந்தாள். அவள் சதி செய்வதில் குறியாக இருந்தாள். யோசேப்பு ஒரு அழகான இளைஞனாக இருந்தார். ஒருவேளை போத்திபார் வயது முதிர்ந்தவராக இருந்திருக்கலாம், ஏனென்றால் அந்த காலத்தில் முதியவர்கள் இளவயது பெண்ணை திருமணம் செய்வது ஒரு வழக்கமாக இருந்தது. அவள் யோசேப்பைப் பார்த்து, அவரைத் தவறான வழிக்குத் தூண்ட முயற்சி செய்தாள்.

ஆதியாகமம் 39:8-9

‘8அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்கையில் ஒப்பித்திருக்கிறார். 9இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். ‘
……………………

இவை எல்லாவற்றிற்கும் நடுவில், இந்த இளைஞன் கர்த்தருக்கு ஊழியம் செய்வதை நீங்கள் கவனிக்கிறீர்களா? யோசேப்பு எகிப்திற்குச் சென்றபோது, அந்த தேசம் பாபிலோனைப் போலவே கர்த்தரை அறியாதவர்களின் வழிபாடுகளால் நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில், யோசேப்பு உண்மையான மற்றும் உயிருள்ள இறைவனுக்குச் சாட்சியாக வாழ்ந்து, மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். அந்தப் பெண் யோசேப்பைத் தூண்டிய பொழுதும், யோசேப்பு சொன்னதை கவனியுங்கள்: “நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். ‘
திருமணத்தைப் பற்றி யோசேப்பு எவ்வளவு உயர்வான எண்ணம் கொண்டிருந்தார் என்பதைப் பாருங்கள்! இன்றைக்கும் பலர் மற்றவர்களுடைய வாழ்க்கை துணையை குறித்த சோதனையில் அகப்படும் பொழுது, தேவன் திருமணத்தை ஏற்படுத்திய உன்னதமான நோக்கத்தை மறந்து போய்விடுகிறார்கள்.
பாருங்கள், கடவுள் திருமண வாழ்வை மனிதகுலம் முழுவதற்கும் கொடுத்திருக்கிறார். ஒருவன் திருமண வாக்குறுதிகளை மதிக்கத் தவறும்போது, அவன் கடவுளையே மதிக்கத் தவறுவதாக அர்த்தம். திருமண ஒப்பந்தத்தை மீறும் ஒருவன், கடவுளுக்கு அளித்த எந்தவொரு வாக்கையும் மீறத் துணிவான்.
தனது துணையை ஏமாற்றி விவாகரத்து செய்தவர்கள், பெரும்பாலும் கடவுளை விட்டு வெகுதூரம் விலகிச் செல்வதை நீங்கள் பார்க்க முடியும்.
இங்கே யோசேப்பு, கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்க முயற்சி செய்கிறார். யோசேப்பின் சிந்தனை எவ்வளவு உயர்வானது! கவனித்தீர்களா?? ஆனால், அந்த உண்மையான கடவுளைப் பின்பற்ற முயற்சிப்பதால் அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்.
ஆதியாகமம் 39:10
’10அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. ‘
………………….
பார்வோன் மன்னரின் அதிகாரியான இந்தப் போத்திப்பார், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கக் கூடும். ஒருவேளை அவர் மிக அதிக காலம் வெளியில் தங்கியிருந்தாரோ என்னவோ நமக்குத் தெரியவில்லை. இந்த பெண் யோசேப்பை ஒருமுறை மட்டும் சோதிக்கவில்லை, மீண்டும் மீண்டும் சோதித்துக் கொண்டே இருந்தாள். இது யோசேப்புக்குத் தொடர்ச்சியான ஒரு போராட்டமாக இருந்தது, ஆனாலும் இந்த இளைஞன் அதற்கு அடிபணியவில்லை.
இதனால் அந்தப் பெண்ணுக்குள் யோசேப்பின் மீது ஒரு கொதிப்பான ஆத்திரமும் வெறுப்பும் உருவாகத் தொடங்கியதை உங்களால் கற்பனை செய்ய முடியும். “புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் கோபத்தை விடக் கொடுமையானது நரகத்தில் கூட இல்லை” என்று ஒரு பழமொழி உண்டு. கவனியுங்கள் , அவள் நிச்சயமாக யோசேப்பைப் பழிவாங்கப் போகிறாள்.
ஆதியாகமம் 39:11-14
’11இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. 12அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். 13அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, 14அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். ‘
………………………
போத்திப்பாருக்கும் அவர் மனைவிக்கும் இடையே உறவு அவ்வளவு சீராக இல்லை. அவள் அவனை எவ்வளவு மட்டமாகவும், கேவலமாகவும் பேசுகிறாள் என்பதைப் பாருங்கள். தங்களை அவமானப்படுத்துவதற்காகவே அவன் ஒரு எபிரேயனைக் கொண்டு வந்ததாக அவள் கூறுகிறாள். இதன் பொருள், அந்த மனைவி இதற்கு முன்பும் இது போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.
இங்கே நான் அதிகம் பரிதாபப்படுவது போத்திப்பாரைப் பார்த்துதான். அவர் ஒரு ஏமாளியாகவே இருந்திருக்கிறார். ஒருவேளை, ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ஏதோ சந்தேகம் இருந்திருக்கலாம். இப்போது அவள் தன் தவற்றை மறைக்க, வழிகளைத் தேடத் தொடங்குகிறாள்—
ஆதியாகமம் 39:15-16
’15நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். 16அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, ‘
………………..
பதின்ம வயதில் இருக்கும் வாலிபனான யோசேப்பு, எகிப்தில் ஆதரவற்ற நிலையில் தனியாக இருக்கிறார். அவர் மிக மோசமான முறையில் ஒரு சதியில் சிக்க வைக்கப்படுகிறார். அந்தப் பெண் மற்ற ஆண்களிடம் யோசேப்புக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறாள். அவளுடைய கணவன் வீட்டில் இல்லாததால், அவர் வரும்போது சொல்வதற்காக இப்படி ஒரு கதையை அவள் தயார் செய்து வைத்திருக்கிறாள்.
ஆதியாகமம் 39:17-19
’17அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். 18அப்பொழுது நான் சத்தமிட்டுக்கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். 19உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. ‘
……………………
மேலோட்டமாகப் பார்த்தால், போத்திப்பார் அவள் சொன்ன கதையை நம்பியது போலத் தெரிகிறது, அது அந்த நிமிடம் அவருக்குக் கோபத்தை உண்டாக்கியது. பார்வோனின் படையில் ஒரு அதிகாரியாக இருந்த அவர், உயர் அதிகாரிகளுக்கு இடையே செல்வாக்கோடு இருக்க வேண்டுமானால் நிச்சயம் புத்திசாலியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கணவனாக அவர் முட்டாளாகவே இருந்திருக்கிறார்.
தன்னுடைய மனைவி எப்படிப்பட்டவள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என்பதே பலருடைய கருத்து. யோசேப்பைச் சிறையில் தள்ளிவிட்டு, இந்த விஷயத்தை அப்படியே மறந்துவிடுவதுதான் அப்போதைக்குச் சரியான முடிவு என்று அவர் நினைத்திருக்கலாம். இந்தப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவள் இதற்கு முன்பும் பலமுறை உண்மையற்றவளாக இருந்திருக்கக் கூடும் என்பதும், யோசேப்பு அவள் அடைய நினைத்த பலரில் ஒருவன் என்பதே உண்மையாயிருக்கலாம். ஆனால், யோசேப்பிடம் அவளது விளையாட்டு பலிக்கவில்லை, அதனால் அவரைப் பழிவாங்க இப்படி ஒரு சதியைச் செய்தாள்.
ஆதியாகமம் 39:20

’20யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். ‘
……………………
நிச்சயமாக இந்தச் இளைஞனுக்கு நேரம் சரியில்லை, இல்லையா? வீட்டில் தன் தந்தையின் செல்லப் பிள்ளையாக, பலவண்ண அங்கியை அணிந்து மகிழ்ந்திருந்தான். ஆனால் அடுத்த கணமே, அவனது சகோதரர்கள் அந்த அங்கியைப் பிடுங்கிக்கொண்டு அவனை ஒரு குழியில் தள்ளினார்கள். தன்னை வியாபாரிகளிடம் அவர்கள் பேரம் பேசி விற்பதை அவன் தன் சொந்த காதுகளால் கேட்கிறான், பிறகு எகிப்திற்கு அடிமையாகக் கொண்டு செல்லப்படுகிறான். அ ப்போது அவனுக்கு வெறும் பதினேழு வயதுதான். வழியிலும், அங்குச் சென்ற பிறகும், அவன் பல இரவுகள் கண்ணீர் சிந்தித் தலையணையை நனைத்திருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. அவன் தன் வீட்டை நினைத்து அத்தனை அதிகமாக ஏங்கியிருப்பான்.
இப்போது இந்த ஒரு புதிய இடத்தில் அவன் ஓரளவு முன்னேறி வருகிறான். திறமையானவனாகவும், அழகானவனாகவும் இருந்ததால் உயர் பதவிக்கு உயர்த்தப்படுகிறான். அப்போதுதான் போத்திப்பாரின் மனைவி அவனைப் பாவத்திற்குத் தூண்ட முயல்கிறாள். அவனுடைய உயர்ந்த ஒழுக்க நெறி அவளைப் பணியவிடாமல் தடுக்கிறது. அதன் விளைவாக, அவள் அவன் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறாள். பாவம், இந்தச் இளைஞனுக்குத் தப்பிக்க எந்த வழியுமே இல்லாமல் போகிறது.
யோசேப்பு போத்திபார் வீட்டில் உயரிய பதவிக்கு வந்திருந்தாலும், இன்னும் ஒரு அடிமைதான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். போத்திப்பாரின் மனைவி ஒரு செல்வாக்குமிக்க அதிகாரியின் மனைவி என்பதால், அவளுக்கு எதிராக யாரும் எதுவும் பேசத் துணியமாட்டார்கள். இயல்பாகவே அவளுடைய வார்த்தைதான் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். பாவம் யோசேப்பு! தன் வாயைத் திறக்கக்கூட அவசியமில்லை. தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு முன்பே குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறார். உடனடியாக அவர் சிறையில் தள்ளப்படுகிறார்; அதுவும் பார்வோன் மன்னரின் கைதிகள் அடைக்கப்படும் சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.
ஆதியாகமம் 39:21-23
’21கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். 22சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். 23 கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.’
………………….

இந்த இளைஞனின் வாழ்க்கையில் கடவுளின் கரம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அதற்கு நேர்மாறாக அவருக்குப் பயங்கரமான பல சம்பவங்கள் நடக்கின்றன. இப்போது அவர் சிறையில் இருக்கிறார். ஒரு சாதாரண மனிதருக்கு இது எவ்வளவு பெரிய மனச்சோர்வைத் தந்திருக்கும்! இல்லையா?? ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கர்த்தர் யோசேப்போடு இருக்கிறார். மற்ற கோத்திரப் பிதாக்களுக்குத் தோன்றியது போல கடவுள் இவருக்கு நேரடியாகத் தோன்றவில்லை என்றாலும், அவர் மீது இரக்கம் காட்டுகிறார்.
முதலில், சிறைச்சாலை அதிகாரிக்கு யோசேப்பைப் பிடிக்கவும், அவர் மீது நம்பிக்கை வரவும் கடவுள் செய்கிறார். யோசேப்பு இயற்கையிலேயே வசீகரமானவராகவும், மிகுந்த திறமைசாலியாகவும் இருந்தாலும், கடவுள் அவரோடு இல்லையென்றால் இவை அனைத்தும் வீணாகியிருக்கும் என்பதே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். கடவுள் அவரோடு இருந்து அவரை வழிநடத்துகிறார். இந்த அனுபவங்கள் யாவும், அந்த இளைஞனின் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கியே நகர்கின்றன.
யோசேப்பு இதை உணர்ந்திருந்தார், அது அவருக்கு ஒரு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையான மனப்பக்கத்தையும் (Optimism) தந்தது. சூழ்நிலைகள் அவரை வீழ்த்தவில்லை. அவர் தனது சூழ்நிலைகளுக்கு மேலாக வாழ்ந்தார்., இன்று பலருடைய வாழ்க்கையில் “சூழ்நிலைகள் எல்லாம் அவர்கள் தலைக்கு மேல் இருப்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை. நம்மில் பலர் அப்படித்தான் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் யோசேப்பு தனது சூழ்நிலைகளை ஆதிக்கம் செய்து அதற்கு மேலாக வாழ்ந்தவர்.
கர்த்தர் அவரோடு இருந்தார். தனது வாழ்க்கையில் கடவுளின் கரம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தார், எனவே அவர் சோர்ந்து போகவில்லை. சாத்தானிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதங்களில் ஒன்று ‘மனச்சோர்வு’ மற்றும் ‘ஏமாற்றம்’ ஆகும். இந்த இளைஞன் தனது எல்லாத் தடைகளையும் தாண்டி வந்திருப்பதாகத் தெரிகிறது. அவர் எபிரேயர் புத்தகத்தில் உள்ள இந்த வசனத்தை நமக்கு நினைவுபடுத்துகிறார்:
எபிரெயர் 12:11
’11எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். ‘
………………
ஆம், கர்த்தர் அனுமதிக்கும் பாடுகள், நிச்சயமாக அந்த வாலிபனின் வாழ்க்கையில் நீதியாகிய சமாதானத்தின் கனியைத் தரும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு என்று சாத்தான் சொல்கிறான் அதாவது, ஆசை காட்டியோ பயமுறுத்தியோ யாரையும் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்பது சாத்தானின் கணக்கு. ஆனால், சாத்தானால் விலைபேசி வாங்க முடியாத சில மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை யோசேப்பின் வரலாறு வெளிப்படுத்துகிறது. யோபு மற்றொருவர், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னுமொருவர். சாத்தான் மனிதகுலத்தை இழிவாக நினைக்கிறான், ஆனால் இவர்களையும் இன்னும் பலரையும் தன்னால் விலைக்கு வாங்க முடியாது என்பதை அவன் அறிந்திருக்கிறான்.
யோசேப்பு சிறையில் இருப்பது கடவுளுடைய விருப்பமா? அருமையான சகோதரனே சகோதரியே, அவர் அங்கே இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை நாம் அடுத்த அதிகாரத்தில் தொடர்ந்து பார்ப்போம்.
யோசேப்பின் வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் மிக முக்கியமான பாடம் என்னவென்றால், “சூழ்நிலைகள் நம்மை ஆளக்கூடாது, நாம் சூழ்நிலைகளை ஆள வேண்டும்” என்பதுதான். குழியில் தள்ளப்பட்ட போதும், அடிமையாக விற்கப்பட்ட போதும், இப்போது அபாண்டமான பழி சுமந்து சிறையில் அடைக்கப்பட்ட போதும், யோசேப்பு ஒருபோதும் “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?” என்று கடவுளைக் குறை சொல்லவில்லை.
இந்த அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மூன்று முக்கியமான சத்தியங்கள் உண்டு.
தேவன் உங்களோடு இருக்கிறார்: யோசேப்பு குழியில் இருந்தபோதும், போத்திபாரின் வீட்டில் இருந்தபோதும், சிறையில் இருந்தபோதும் வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது: “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.” உங்கள் வாழ்க்கை இன்று எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும்—அது ஒருவேளை சிறை போன்ற இக்கட்டான சூழ்நிலையாக இருக்கலாம்—நீங்கள் நேர்மையாக இருக்கும்போது தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள்..
அடுத்ததாக தெய்வ பயம்- “தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்ற யோசேப்பின் கேள்வி, அவருடைய தூய்மையான குணத்தைக் காட்டுகிறது. மனிதர்கள் யாரும் பார்க்காத இடத்திலும் கடவுள் என்னைப் பார்க்கிறார் என்ற ‘தெய்வ பயம்’ நம்மிடத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும். இந்த பயமே நம்மையும் சோதனைகளில் விழாமல் காத்துக்கொள்ளும்.
சிறைச்சாலை தான் பயிற்சிக்களம்: கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் தற்காலத்தில் துக்கமாய்த் தெரியும் இந்தச் ‘சிட்சை’ அல்லது பாடுகள், ஒரு பெரிய நோக்கத்திற்காகத் தேவனால் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து போகக்கூடாது. யோசேப்பு சிறைக்குப் போகாமல் அடுத்த படிக்கட்டில் ஏற முடியாது. உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் சந்திக்கும் தடைகள், நாளை தேவன் உங்களை உயர்த்தப்போகும் படிக்கட்டுகள் என்பதை மறக்க வேண்டாம்.!
ஜெபம்: அன்புள்ள ஆண்டவரே, யோசேப்பைப் போல எத்தகைய சோதனைகள் வந்தாலும் உமக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க எங்களுக்குப் பலன் தாரும். சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்து போகாமல், நீர் எங்களோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து ‘சூழ்நிலைகளுக்கு மேலாக’ வாழ எங்களுக்கும் கற்றுக்கொடுத்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.
சரி நேயர்களே இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவு செய்வோம், உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றாலும் ஆலோசனை தேவை என்றாலும் எங்களோடு தொடர்பு கர்த்தருடைய மாறாத வல்லமை இன்றும் என்றும் உங்களையும் பரிசுத்தமாய் காத்துக் கொள்ளட்டும் ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top