ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 38
நிகழ்ச்சி எண்: 0056
வாசியுங்கள்
பிரியமானவர்களே
இந்த நாளின் வேத ஆராய்ச்சியில் நாம் கற்றுக்கொள்ள இருக்கும் வேத பகுதி ஆதியாகமம் 38 ஆம் அதிகாரம்.
இந்த அதிகாரம் ஒரு பசு மாட்டிற்கு ஐந்தாவது கால் இருப்பதைப் போலத் தேவையற்ற ஒன்றாகத் தோன்றலாம். நீங்கள் இந்தக் கதையைப் படித்து முடித்த பிறகு, இது பரிசுத்த வேதத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கலாம். “இந்த அதிகாரம் ஏன் கடவுளுடைய வார்த்தையில் இருக்கிறது?” என்பது பலருடைய கேள்வி. இது விவிலியத்தில் உள்ள மிக மோசமான அதிகாரங்களில் ஒன்று என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தோன்றிய யூதா கோத்திரத்தைப் பற்றிய சில பின்னணிகளை இது நமக்குத் தருகிறது. இந்த ஒரு காரணத்தினாலேயே இது வேதத்தில் இடம்பெறுவது முக்கியமானது.
இந்த அதிகாரத்தில் யூதா, தாமார், பாரேஸ் மற்றும் சேரா போன்ற பெயர்களை நீங்கள் படிப்பீர்கள். இந்தப் பெயர்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை போலத் தோன்றினால், அதற்கு நீங்கள் மத்தேயு முதல் அதிகாரத்தைப் படித்ததே காரணம். இவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் வருகிறார்கள்.
அருமையானவர்களே, இது ஒரு வியக்கத்தக்க விஷயம்! நம்முடைய ஆண்டவர் பாவமுள்ள ஒரு வம்சாவழியில் வந்து பிறந்தார். அவர் எல்லா விதத்திலும் நம்மைப் போலவே படைக்கப்பட்டார், ஆனால் அவர் பாவம் இல்லாதவராக இருந்தார். அனைவரும் பாவம் செய்து, தேவனுடைய மகிமையை இழந்த அந்த மனித வம்சத்தில் இயேசு வந்து பிறந்தார்.
இந்த அதிகாரம் யூதாவின் பாவம் மற்றும் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறது. இதைப் பார்க்கும்போது, யாக்கோபின் மகன்கள் அவருக்குப் பெரிய ஆறுதலாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. யோசேப்பு மற்றும் பெஞ்சமீனைத் தவிர, மற்ற மகன்கள் அனைவரும் அவருக்குப் பிரச்சினைகளைத் தரும் பிள்ளைகளாகவே இருந்திருக்கிறார்கள். யோசேப்பும் அவருக்கு ஆறுதலாய் இருக்க முடியவில்லை, ஏனென்றால் அவன் காணாமல் போனது யாக்கோபின் இதயத்தை உடைத்திருந்தது.
இவை எல்லாமே நமக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது: அதாவது யாக்கோபு தன் பிள்ளைகளுக்கு நற்போதனைகளைச் சொல்லிக்கொடுப்பதை விட, பதான்-அராமில் சொத்து சுகங்களைச் சேர்ப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார். அவர் ஆபிரகாமிடமிருந்து எவ்வளவு மாறுபட்டவராக இருந்தார்! ஆபிரகாமைப் பற்றிக் கடவுள் கூறியது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா??
ஆதியாகமம் 18:19
’19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ‘
……………………
ஆனால், யாக்கோபு ஆபிரகாமைப் போலச் செய்யவில்லை. அவர் அங்கே தன் மாமா லாபானுடன் போட்டியிடுவதிலேயே) மிகவும் பிசியாக இருந்ததால், தன் மகன்களுக்காகச் செலவிட அவரிடம் அதிக நேரம் இருக்கவில்லை. இது ஒரு சோகமான விஷயம், ஏனென்றால் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பெரிய பாவமான காரியத்தில் சிக்கிக்கொண்டது போலத் தெரிகிறது. இந்த இடத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் உண்டு, நம்முடைய குடும்பங்களிலேயும் ஒரு கணவனோ ஒரு மனைவியோ பிள்ளைகளுடைய ஒழுக்கத்தை குறித்து அவர்களிடத்திலே பேச அவர்களை கண்டிக்க அவர்களுக்கு ஆலோசனை சொல்ல கொடுக்க வேண்டிய நேரத்தை, மற்ற காரியங்களுக்கு கொடுப்பார்கள் என்றால் எதிர்காலத்தில் பிள்ளைகளை குறித்து அவர்கள் வேதனை பட வேண்டியது இருக்கும் என்பதை மறந்து போகக்கூடாது. (Teaser)
இந்த அதிகாரம் விவிலியத்தில் இந்த இடத்தில் இடம்பெறுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அடுத்த அதிகாரத்திலிருந்து, நாம் யோசேப்புடன் எகிப்து தேசத்திற்குப் செல்கிறோம். தன் வாழ்வில் நடந்த தற்செயலான நிகழ்வுகளின் மூலம் யோசேப்பு தெளிவாகப் புரிந்துகொண்டபடி, இஸ்ரவேல் புத்திரர் எகிப்திற்கு வருவதற்கான வழியை ஆயத்தம் செய்யவே கடவுள் அவரை முன்னதாகவே அங்கு அனுப்பினார்.
இது கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது அவர்களின் உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அருவருப்பான கானானியர்களிடமிருந்து அவர்களைப் பிரித்து, எகிப்திலுள்ள கோசேன் நாட்டில் தனித்து வாழச் செய்தது. யாக்கோபும் அவரது குடும்பத்தினரும் கானானிலேயே தொடர்ந்து தங்கியிருந்தால், அவர்களும் கானானியர்களின் அதே கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். கானானியர்களின் சீரழிந்த தாக்கத்திலிருந்து யாக்கோபின் குடும்பத்தை வெளியேற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த அதிகாரம் நமக்குக் காட்டுகிறது.
இது யூதாவின் கதை; இவருடைய வம்சாவழிதான் இஸ்ரவேல் கோத்திரங்களின் அரச குலமாக (ராஜ வம்சம்) மாறும்.
ஆதியாகமம் 38:1-2
‘1அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். 2அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். ‘
………………….
யூதா அதுல்லாம் ஊரைச் சேர்ந்த ஒருவருடன் வியாபாரம் செய்யச் சென்றார்; அங்கே அவர் ஒரு கானானியப் பெண்ணைப் பார்த்தார், அவளுடன் தவறான உறவு கொண்டார்.
ஆதியாகமம் 38:3
‘3அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். ‘
………………
யூதா பாவம் செய்துவிட்டார். யூதா தன் மகனுக்கு ‘ஏர்’ (Er) என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 38:4-6
‘4அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். 5அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். 6யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். ‘
…………………..
தாமார் முதன்முதலில் இங்கேதான் அறிமுகமாகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையின் மூலமாகத்தான் அவர் கிறிஸ்துவின் வம்சாவளியில் இடம்பெறுகிறார்! இப்போது இந்தக் குடும்பத்தைப் பாருங்கள். இது பாவத்தினால் அப்படியே நிறைந்து போயிருக்கிறது.
ஆதியாகமம் 38:7-10
‘7யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். 8அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். 9அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். 10அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
………………….
இது, பாலியல் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற இந்த தற்காலச் சூழலை நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஆதியாகமம் 38:11
’11அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்தது போலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். ‘………………….
அந்தக் காலத்தில், ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய சகோதரன் அந்த விதவையைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது வழக்கமாக இருந்தது. ஓனான் அப்படிச் செய்ய மறுத்ததால், அவன் மரணத்தால் தண்டிக்கப்பட்டான்.
இப்போது யூதாவிற்கு வளர்ந்து வரும் இளம் பருவத்தில் இன்னொரு மகன் இருக்கிறாரன்; எனவே, அந்த இளைய மகன் திருமண வயதை அடையும் வரை, தன் மருமகளிடம் அவளுடைய தந்தை வீட்டுக்குச் சென்று முறைப்படி காத்திருக்குமாறு யூதா கூறுகிறார்.
ஆதியாகமம் 38:12-13
’12அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். 13அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. ‘
…………………..
இப்பொழுது யூதா, ஈரா என்ற அந்த அதுல்லாம் ஊர்க்காரருடன் சேர்ந்து செய்த வியாபாரம் ஆடுகளைப் பற்றியது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து மிகப் பெரிய ஆட்டு மந்தையை வளர்த்து வந்திருக்க வேண்டும். அந்த ஆடுகளின் ரோமத்தை வெட்டுவதற்காக யூதா அங்கே செல்கிறார்.
இதற்கிடையில், தாமார் இவ்வளவு காலமாகத் தன் வீட்டில் காத்திருக்கிறாள். ஆனால், யூதா தன் இளைய மகனான சேலாவைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.
ஆதியாகமம் 38:14
’14சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். ‘
…………………….
சேலாதான் யூதாவின் மூன்றாவது மகன். யூதா தன்னை அவருக்குத் திருமணம் செய்து கொடுக்கப்போவதில்லை என்பதைத் தாமார் புரிந்துகொள்கிறார்; எனவே, அவர் ஒரு முடிவெடுக்கிறார். அவர் தன் விதவை கோலத்தைக் மாற்றிக்கொண்டு, அக்காலத்து விலைமாதர்களின் வழக்கப்படி தன் முகத்தை மூடிக்கொண்டு வழியோரத்தில் உட்கார்ந்திருக்கிறாள்.
ஆதியாகமம் 38:16
’16அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். ‘
…………………….
யூதாவைப் பற்றிய ஒரு விளக்கம் இங்கே நமக்குக் கிடைக்கிறது. அவர் ஏற்கனவே சூவா என்ற கானானியப் பெண்ணுடன் தவறான உறவு கொண்டிருந்தார்; இப்போது தாமாரிடமும் அதையே செய்கிறார். நாம் இங்கே காண்பது மிகவும் இருண்ட மற்றும் ஒரு விகாரமான கதையாகும். யூதா அவளை ஒரு விலைமாது என்று நினைத்தார். தாமார் தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றினாள்.
ஆதியாகமம் 38:17-20
’17அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். 18அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, 19எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். 20யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், ‘
……………………
யூதா தன் நண்பனை அந்த ஊருக்கு அனுப்பி, “இங்கே இருந்த அந்த விலைமாதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லச் சொன்னார்.
ஆதியாகமம் 38:21-24
’21அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். 22அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். 23அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்திவராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். 24ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். ‘
…………………..
பிரியமானவர்களே கவனித்தீர்களா, இதுதான் யூதாவின் குணம். இங்கே ஒரு ‘இரட்டை நிலைப்பாட்டை’ அதாவது (double standard) உள்ள மனிதனை நாம் பார்க்கிறோம். நம்மைப் படைத்த கடவுள் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. இது அவருடைய வார்த்தையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்காக, அவர் இதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமல்ல. அவருடைய மக்கள் கானானியர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள்; அதனால்தான் அவர் அவர்களை இந்த தேசத்திலிருந்து வெளியேற்றி, எகிப்து தேசத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறார். அங்கே அவர்களைத் தனிமைப்படுத்தி, கோசேன் நாட்டில் வைத்து, இந்த மோசமான சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாக்கப்போகிறார். இந்தச் சம்பவம், கடவுள் ஏன் அப்படிச் செய்ய வேண்டியிருந்தது என்பதற்கான அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
யூதா விவரிக்க முடியாத அளவிற்கு மிக மோசமாக நடந்துகொள்கிறார். சொல்லப்போனால், மற்றவர்களிடம் உள்ள பாவத்தை உடனே பார்க்கும் அவர், தன்னிடம் இருக்கும் பாவத்தைக் காணத் தவறிவிட்டார். இது தீர்க்கதரிசியான நாத்தான் தாவீதிடம் சென்று சொன்ன கதையை நமக்கு நினைவூட்டுகிறது இல்லையா??. ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த ஒருவனைப் பற்றிய கதையை நாத்தான் சொன்னபோது, அந்த ஆட்டுக்குட்டியைப் பிடுங்கிக்கொண்ட செல்வந்தனைத் தாவீது உடனே கண்டித்தார். இங்கே யூதா செய்வது போலவே தாவீதும் அந்த செல்வந்தனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று சொன்னார். அப்போது நாத்தான், ” நீயே அந்த மனுஷன்” என்று அறிவித்தார். மற்றவர்களிடம் உள்ள பாவத்தை நம்மால் எவ்வளவு தெளிவாகப் பார்க்க முடிகிறது, ஆனால் நமக்குள் இருக்கும் பாவத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை என்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு காரியம்.
யூதாவின் மீதான குற்றம் உண்மையில் இரண்டு மடங்கு பெரியது. விபச்சார பாவம் என்பதே ஒரு பயங்கரமான காரியம்; அதுவும் அவர் தன் சொந்த மருமகளுடனேயே அந்தப் பாவத்தைச் செய்திருக்கிறார்! கானானியர்கள் இப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள். இந்த காலங்களிலும் நாம் ஒரு பாலியல் புரட்சி நடப்பதாகவும், புதிய பாலியல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் நினைக்கிறோம். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே, பல நூற்றாண்டுகளாகவே தேவனை அறியாத கானானியர்கள் இத்தகைய பாலியல் சுதந்திரத்தைக் கொண்டிருந்தார்கள். அது அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது; அதனால்தான் அவர்கள் அவ்வளவு கீழ்த்தரமான நிலையில் வாழ்ந்தார்கள். அந்த காரணத்தினால்தான் அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டு, பூமியிலிருந்து அகற்றப்பட்டார்கள். கானானியர்கள் இப்போது இல்லை, அவர்கள் மறைந்துவிட்டார்கள்; கடவுள் அவர்களை நியாயந்தீர்த்தார்.
இது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எச்சரிக்கை செய்தியாக அமைய வேண்டும். இருப்பினும், பலருக்கு—ஏன் பல கிறிஸ்தவர்களுக்குக் கூட—இந்தச் செய்தி புரிவதில்லை! இந்த அதிகாரம் ஏன் வேதத்தில் இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இது நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவே வேத புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கடவுள் பாவத்தை அங்கீகரிக்கவில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கவும், எதற்காக இஸ்ரவேலர்களைப் பாலஸ்தீன தேசத்திலிருந்து வெளியேற்றி எகிப்து தேசத்திற்கு அவர் கொண்டு சென்றார் என்பதை விளக்கவும் இது இங்கே எழுதப்பட்டிருக்கிறது.
அதன்பின், தாமார் தன் மாமனாராகிய யூதாவின் முன்னிலையில் கொண்டு வரப்படுகிறாரள்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 38:25
’25அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். ‘
…………………
தாமார் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று யூதா கட்டளையிட்டார். ஆனால் அவளோ, “சரி, இந்தக் குழந்தையின் தந்தை யார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்; இதோ நான் காண்பிக்கும் இந்தப் பொருட்கள் யாருடையதோ, அவரே அந்தக் குழந்தையின் தந்தை” என்று கூறினாள். யூதா அந்தப் பொருட்களைப் பார்த்தபொழுது, அவை தன்னுடையவைதான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
ஆதியாகமம் 38:26
’26யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. ‘
……………………
இந்தச் செயல் யூதாவிற்கே அருவருப்பான ஒன்றாக இருந்தது. ஆனால், கானானியர்களின் பழக்கவழக்கங்கள் எந்த அளவிற்கு அவர் வாழ்க்கையிலும் இருந்தது என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தைச கவனிப்போமா? வேத புத்தகத்தில் உள்ள எல்லாமே நாம் கற்றுக்கொள்வதற்காகவே எழுதப்பட்டிருக்கின்றன; இவை நமக்கு ஒரு எச்சரிக்கையான உதாரணங்களாகும். “இன்றைய தலைமுறைக்கு நாம் சாட்சியாக இருக்க வேண்டுமானால் அல்லது அவர்களிடம் பேச வேண்டுமானால், நாமும் அவர்களின் கீழ்த்தரமான நிலைக்கு இறங்கிப் போக வேண்டும்” என்று இன்று பலர் சொல்கிறார்கள்.அது உண்மை இல்லை பிரிவானவர்களே. கடவுள் தனக்கு சாட்சியாக இருக்கும் யாரையும் அந்த முறையைப் பயன்படுத்தச் சொன்னதே இல்லை. எந்தச் சூழ்நிலையிலும், தன் மக்கள் உயர்ந்த மற்றும் தூய்மையான நிலையில் வாழ வேண்டும் என்றுதான் கடவுள் எப்போதும் விரும்புகிறார்.
கடவுளுடைய மக்கள் அவருடைய வார்த்தையை அறிவித்து, நற்செய்திக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தால், கடவுளே அவர்களின் சாட்சி வாழ்க்கையை சக்திவாய்ந்ததாக மாற்றுவார் என்பதில் இந்த சந்தேகமும் இல்லை. நம் காலத்தில் பல போதகர்கள் தங்கள் சபைக்கு வரும் கூட்டத்தை இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள்; மக்களைக் கவர்வதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்—இதனால் அவர்களில் சிலர் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். ஆனால், கடவுள் நம்மை ஒருபோதும் விட்டுக்கொடுத்துப் போக அதாவது compromise பண்ணச் சொல்லவில்லை. சபையின் எண்ணிக்கை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, கடவுளுடைய வார்த்தையை உண்மையாக அறிவிக்க வேண்டும் என்று மட்டுமே அவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார்.
பிரசித்தி பெற்ற ஊழியர் ஒருவரை பற்றிய ஒரு கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஒருமுறை அவர் ஒரு பெரிய சபையில் மூன்று நாட்கள் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் இரவு மழை பெய்துகொண்டிருந்ததால், அவருடைய பேச்சைக் கேட்க மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்திருந்தனர். இதனால் அந்தச் சபையின் போதகர், “உங்களைப் போன்ற ஒரு சிறந்த மனிதரின் பேச்சைக் கேட்க இவ்வளவு குறைவான மக்களே வந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.
அதற்கு அந்த ஊழியர் அந்தப் போதகரிடம், “என் ஆண்டவர் (இயேசு) பேசுவதற்கு அவரிடம் பன்னிரண்டு மனிதர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு சிறிய கூட்டத்திற்காகப் புகார் செய்வதற்கு இந்த ஊழியன் எம்மாத்திரம்?” என்று பதிலளித்தார்.
அருமையானவர்களே , மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால்தான் அங்கே கடவுள் இருக்கிறார் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஒருவேளை, ஒரு சிலருக்கு மட்டும் சாட்சியாக இருக்கும்படி கடவுள் நம்மை அழைத்திருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன் கவனியுங்கள்: நீங்கள் கடவுளுடைய வார்த்தையை அறிவித்தால், அது நிச்சயமாகத் தன் வேலையைச் செய்யும் அது அதைக் கேட்பவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அருமையான சகோதரனே சகோதரியே, கடவுளுடைய வார்த்தை வல்லமை உள்ளது; அதை அறிவிப்பதற்குச் சுத்தமான பாத்திரங்களையே கடவுள் தேடுகிறார்.
இப்போது யூதாவைப் பாருங்கள், அவர் நிச்சயமாகக் கானானியர்களின் அதே கீழ்த்தரமான நிலைக்குத் தன்னையே தாழ்த்திக்கொண்டார்; அதன் விளைவுகளையும் பாருங்கள்.
ஆதியாகமம் 38:27-30
’27அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப்பிள்ளைகள் இருந்தன. 28அவள் பெறுகிறபேது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். 29அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. 30பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.’
………………..
இப்பொழுது நாம் புதிய ஏற்பாட்டிற்குத் திருப்பிப் பார்த்தால், அங்கே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியை மத்தேயு முதல் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
கவனியுங்கள் வாசிக்கிறேன் மத்தேயு முதலாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்கள்.
மத்தேயு 1:1-3
‘1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 2ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; 3யூதா பாரேசையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ‘
………………….
நாம் அந்த வம்சாவளியைத் தொடர்ந்து கவனிக்கும்போது, 16ஆம் வசனத்திற்கு வருகிறோம்: அது என்ன சொல்லுகிறது பாருங்கள்.
மத்தேயு 1:16
’16யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். ‘
…………………..
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மாம்சத்தின்படி யூதா மற்றும் தாமாரின் வம்சாவழியில் வந்தார் என்பது ஒரு வியக்கத்தக்க விஷயம்! அவர் இந்த மனிதக் குடும்பத்தில் பிறந்தபோது, பாவம் நிறைந்த ஒரு வம்சாவழியின் வழியாகவே வந்தார்.
2 கொரிந்தியர் 5:21 பாருங்கள்
’21நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.’
…………………..
ஆதியாகமம் 38-ஆம் அதிகாரம் ஒரு இருண்ட அத்தியாயம் போலத் தோன்றினாலும், அது நமக்குச் சொல்லும் செய்தி மகத்தானது. யூதாவின் வீழ்ச்சியும், தாமாரின் துணிச்சலும், அந்தப் பாவம் நிறைந்த வம்சாவழியில் இயேசு கிறிஸ்து வந்து பிறந்ததும் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தருகிறது.
இயேசு கிறிஸ்து ஒரு பரிசுத்தமான வம்சத்தில் வந்து பிறக்கவில்லை. மாறாக, நம்மைப் போன்ற பாவிகளும், தவறு செய்தவர்களும் நிறைந்த ஒரு குடும்ப வரிசையில் அவர் வந்து பிறந்தார். இது எதைக் காட்டுகிறது? “பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரிந்தியர் 5:21) என்ற வசனத்தின்படி, நம்முடைய அழுக்குகளைச் சுமக்க அவர் ஆயத்தமாக இருந்தார் என்பதையே இது உணர்த்துகிறது. உங்கள் கடந்த காலம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், இறைவனின் கிருபை உங்களை மீட்டெடுக்க வல்லது.
யாக்கோபு தன் பிள்ளைகளை வளர்ப்பதை விட சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்தியதன் விளைவை நாம் யூதாவின் வாழ்வில் காண்கிறோம். இன்றைய பரபரப்பான உலகில், நாமும் நம் பிள்ளைகளின் ஆவிக்குரிய வளர்ச்சியை விட உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
கானானியர்களின் தீய தாக்கத்திலிருந்து இஸ்ரவேல் குடும்பத்தைப் பாதுகாக்கவே கடவுள் அவர்களை எகிப்திற்கு அனுப்பினார். நம் வாழ்வில் ஏற்படும் சில கசப்பான நிகழ்வுகளும், இழப்புகளும் கூட நம்மைப் பெரிய அழிவிலிருந்து காக்க கடவுள் போடும் திட்டமாக இருக்கலாம்.
என்றாலும் யூதாவின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிப்பு. நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் போல நாம் அஜாக்கிரதையாக வாழாமல் தேவனை அறிந்தவர்கள் / – தேவனுடைய பிள்ளைகள் என்ற சுய அறிவோடு கூட எந்த ஒரு காலத்திலும் உலகத்தோடு விட்டுக் கொடுத்து வாழாமல் கர்த்தருக்காக தனித்து வாழ நம்மை அனுதினமும் அர்ப்பணம் செய்வோம்.
இந்த நாளிலும் கர்த்தர் எந்த எந்த காரியங்களை குறித்து நம்முடைய உள்ளத்தில் தெளிவாய் பேசினாரோ தொடர்ந்து அதைக் குறித்து சிந்தனை செய்து கர்த்தருடைய கரத்திலே நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்வோமா? உங்கள் வாழ்க்கையின் எந்த பாவத்தை குறித்தாவது ஆண்டவர் உணர்த்தி இருப்பார்கள் என்றால், உண்மையான மனஸ்தாபத்தோடு அவருடைய பாதத்திலே அதை அறிக்கை செய்யுங்கள், மேலும் உங்களால் அதை மேற்கொள்ள முடியாது என்பதை ஒத்துக் கொண்டு அவருடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்காக அவரை நோக்கிப் பாருங்கள் அவரே உங்களுக்கு பூரண வெற்றி தருவார் என்று விசுவாசித்து அனுதினமும் அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்.
உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். குமாரன் விடுதலை ஆக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
