ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 37:5 – 36
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 37:5 – 36
நிகழ்ச்சி எண்: 0055

வாசியுங்கள்

இந்த வேதாராட்சி தொடரை கவனிக்கும் உங்களுக்காக கர்த்தரை துதிக்கிறோம், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ள கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக.
இன்று நாம் ஆதியாகமம் 37 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வோம்.
ஆதியாகமம் 37:5-6
‘5யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். 6அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: ‘
…………………..
யோசேப்பின் இந்த செயலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? தன் சகோதரர்களைப் பற்றித் தந்தையிடம் போட்டுக் கொடுத்தால் அவர்கள் தன்னை வெறுப்பார்கள் என்று தெரிந்தும், அவர் ஏன் அவர் கண்ட அந்த சொப்பனத்தையும் அவர்களிடத்திலே போய் சொல்லிக் கொண்டிருக்கிறார்?
நிச்சயமாகச் சொல்லப்போனால், இந்த உலகம் எவ்வளவு மோசமானது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தன் சகோதரர்களும் எவ்வளவு கொடியவர்கள் என்பதும் அவருக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் அவர் எதையும் எளிதில் நம்பிவிடும் ஒரு அப்பாவியாக இருந்தார் என்று சொல்லலாம். உலகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள அவருக்கு நீண்ட காலம் பிடித்தது, ஆனால் இறுதியில் மனிதன் மனிதனுக்குச் செய்யும் கொடுமைகளைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் மற்றவர்களை விடவும் அவர் நன்றாகவே தெரிந்து கொண்டார்
யோசேப்பு (Joseph) எவ்வளவு பாதுகாப்பாக வளர்ந்திருப்பார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா??. யாக்கோபு (Jacob) தனது முழு அன்பையும் ராகேலின் மீதே வைத்திருந்தார். அவளுக்காகப் பதினான்கு ஆண்டுகள் உழைத்தார்.
அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்தே ராகேலுக்கு யோசேப்பு பிறந்தார். அது யாக்கோபிற்கு பெரிய ஒரு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! ஆனால் இப்போது ராகேல் உயிருடன் இல்லை; அதனால் அவர் தனது முழு அன்பையும் இந்தச் சிறுவன் மீது காட்டுகிறார். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது—ஏனென்றால் அவருக்கு வளர்க்க வேண்டிய இன்னும் பிற மகன்களும் இருக்கிறார்கள்
ஆதியாகமம் 37:7-8
‘7நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். 8அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம் பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். ‘
……………………….
அவர்கள் எவ்வளவு ஏளனமாகப் பேசியிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்களுக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்பது உறுதி. யோசேப்பு தங்களை ஆள்வான் என்பதை அவர்கள் உண்மையில் நம்பவில்லை. ஆனாலும், இப்படி ஒரு கனவு இருந்ததாலேயே அவர்கள் யோசேப்பை இன்னும் வெறுத்தார்கள்.
இருந்தாலும் , இதோடு கனவுகள் முடிந்துவிடவில்லை. யோசேப்புக்கு இன்னொரு கனவும் வந்தது.
ஆதியாகமம் 37:9-11
‘9அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். 10இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்து கொண்டான். 11அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். ‘
……………………
யோசேபு இந்த கனவையும் அவர்களிடம் சொன்னார், அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். இதே போன்ற ஒரு காட்சி வெளிப்பதின விசேஷம், 12:1-லும் வருகிறது; அங்கே ஒரு பெண் சூரியனை ஆடையாக அணிந்திருப்பார், நிலவு அவள் கால்களுக்குக் கீழும், பன்னிரண்டு நட்சத்திரங்கள் கொண்ட கிரீடம் அவள் தலையிலும் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது.
இப்பொழுது யோசேப்பு தங்களைப் பற்றிதான்—அதாவது இஸ்ரவேலின் குமாரர்களைப் பற்றிதான்—சொல்கிறார் என்பதை அவருடைய சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள்.

இங்கே நாம் இஸ்ரவேல் தேசத்தின் ஆரம்பத்தைக் பார்க்கிறோம். முதியவரான யாக்கோபு இதைச் சரியாகப் புரிந்துகொண்டார். அவர் யோசேப்பைக் கண்டித்து, “உன் தகப்பனும், உன் தாயும், உன் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என்றா இதற்கு அர்த்தம்” என்று கேட்டார். அதற்கு யோசேப்பால், “அதுதான் கனவு” என்று மட்டுமே பதிலளிக்க முடிந்தது. அதன் பொருள் மிகத் தெளிவாக இருந்ததால், அவர் அதற்கு விளக்கம் அளிக்க முயலவில்லை. அவருடைய சகோதரர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஒதுக்கிவிட்டார்கள். இது நடப்பதற்குச் சாத்தியமே இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். தங்களில் ஒருவர்கூட யோசேப்பை வணங்கப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆனால் யாக்கோபோ, அந்த வார்த்தைகளைத் தன் மனதிலேயே வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஆதியாகமம் 37:12
’12பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். ‘
………………
அக்காலத்தில், யாக்கோபும் அவரது குடும்பத்தினரும் எருசலேமுக்குத் தெற்கே சுமார் இருபது மைல் அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் உள்ள எப்ரோன் பகுதியில் வசித்து வந்தார்கள். சீகேம் என்பது எருசலேமுக்கு வடக்கே அவ்வளவு தொலைவில் இருக்கிறது; எனவே, இந்த வாலிபர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெகு தூரம் சென்றே ஆடுகளை மேய்த்தார்கள். அவர்கள் அந்தப் பகுதி முழுவதும் தங்கள் ஆடுகளை மேய்த்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆதியாகமம் 37:13
’13அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். ‘
……………………
யோசேப்பு ஒரு இளம் வாலிபனாக இருந்த போதிலும் தந்தை கூறிய உடனேயே தன் தந்தைக்கு எவ்வளவு கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார் என்பதை பாருங்கள்.
ஆதியாகமம் 37:14
’14அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். ‘
………………………
யோசேப்பு எப்ரோனிலிருந்து சீகேம் வரை நீண்ட தூரம் பயணம் செய்திருந்தார். தன் சகோதரர்களைத் தேட ஆரம்பித்தார். அந்தப் பகுதி மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பு என்பதால், அவரால் அவர்களை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதியாகமம் 37:15
’15அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். ‘
………………….
அந்த மனிதன் யோசேப்பு பலமுறை தனது கூடாரத்தைக் கடந்து செல்வதைப் பார்த்திருப்பார் என்று நாம் ஊகிக்கலாம்.; எனவே யோசேப்பு யாரைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று அந்த மனிதன் கேட்கிறார்.
ஆதியாகமம் 37:16-17
’16அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். 17அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். ‘
…………………
தோத்தான் என்பது சீகேமிற்கு வடக்கே வெகு தூரத்தில் இருக்கிறது. இது எஸ்ரேலோன் (Esdraelon) பள்ளத்தாக்கிற்கு அருகில் இருக்கிறது; அங்கேதான் அந்தச் சகோதரர்கள் ஆடுகளை ஓட்டிச் சென்றிருந்தார்கள். ஒரு வழியாக, யோசேப்பு அவர்களைக் கண்டுபிடித்துவிட்டார்—அவர்கள் அங்கேதான் இருந்தார்கள்.
ஆதியாகமம் 37:18-20
’18அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, 19ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், 20நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். ‘
……………………….
இப்போது அவர்கள் வீட்டிலிருந்து சுமார் நூறு மைல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “இப்போது இவனைத் தீர்த்துக்கட்டிவிடுவோம், பிறகு இவனுடைய கனவுகள் என்னவாகிறது என்று பார்ப்போம்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
இந்தக் சம்பவத்தை தொடர்ந்து நாம் பார்க்கும் முன், யோசேப்புக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒற்றுமைகளை நீங்கள் தவறவிடவே கூடாது:
யோசேப்பின் பிறப்பு ஜெபத்திற்குப் பதிலாக தேவனுடைய தலையீட்டால் நிகழ்ந்த ஒரு அற்புதம். கர்த்தராகிய இயேசு கன்னி மரியாளிடத்தில் பிறந்தார். அவருடைய பிறப்பு நிச்சயமாக ஒரு மகத்தான அற்புதம்!
யோசேப்பு தன் தந்தையினால் நேசிக்கப்பட்டார். கர்த்தராகிய இயேசுவும் தமது பிதாவினால் நேசிக்கப்பட்டார்;
தனித்துவம்: யோசேப்பு அணிந்திருந்த பலவண்ண அங்கி அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. கிறிஸ்து “பாவிகளிடமிருந்து விலகிப் பிரிந்தவராக” இருந்ததால் அவர் தனித்துவமானவராக இருந்தார்.
யோசேப்பு தன் சகோதரர்களை ஆளுவார் என்று அறிவித்தார். கர்த்தராகிய இயேசு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தினார். யோசேப்பின் செய்தியை அவர்கள் கேலி செய்தது போலவே, இயேசுவையும் கேலி செய்தார்கள்.
யோசேப்பு தன் தந்தையினால் தன் சகோதரர்களிடம் அனுப்பப்பட்டார். இயேசுவும் தம்முடைய சகோதரர்களிடமே,அத்ஹவது இஸ்ரவேலரிடமே அனுப்பப்பட்டார்.
யோசேப்பு தன் சகோதரர்களால் காரணமே இல்லாமல் வெறுக்கப்பட்டார், அதுபோலவே கர்த்தராகிய இயேசுவும் தம்முடைய சகோதரர்களால் காரணமே இல்லாமல் வெறுக்கப்பட்டார்.
சரி இப்பொழுது நாம் மீண்டும் அங்கே நடைபெற்ற காரியங்களை பார்ப்போம்; யோசேப்பு தன் சகோதரர்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார், அவர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் அந்தப் பலவர்ண அங்கியை அணிந்திருந்தார், யோசேப்பு தன் சகோதரர்களை விட வயதில் இளையவராக இருந்தாலும், அவர்களுக்கு மேலான ஒரு நிலையில் இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, அங்கே கொலை செய்யும் அளவிற்கு வெறுப்பும் பொறாமையும் நிறைந்திருந்தது!
ரூபன் ஏற்கனவே தனது தலைப்பிள்ளை உரிமையை இழந்துவிட்டார். இருந்தாலும், இந்தச் சூழ்நிலையில் அவர் ஒரு நல்ல மனிதராகத் காட்சியளிக்கிறார். மற்றவர்களை விட அவரிடம் முதிர்ந்த நிதானம் இருந்தது.
ஆதியாகமம் 37:21
’21ரூபன் அதைக்கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், ‘
………………..
ரூபன் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால், அவர்கள் அங்கேயே – யோசேப்பை கொலை செய்திருப்பார்கள்.
ஆதியாகமம் 37:22
’22அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். ‘
,…………………….
யோசேப்பைக் குழியில் போட்ட பிறகு, மீண்டும் அங்கே ரகசியமாகத் திரும்பி வந்து, அவரைத் தூக்கி தன் தந்தையிடம் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே ரூபனின் உறுதியான திட்டமாக இருந்திருக்க வேண்டும்.
ஆதியாகமம் 37:23
’23யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, ‘
…………………….
யோசேப்பு அணிந்திருந்த அந்த அங்கி, ஒரு கோபமான காளையின் முன்னால் சிவப்புக் கொடியை அசைப்பது போல இருந்தது. அவர்கள் அதை மிகவும் வெறுத்தார்கள். தலைப்பிள்ளைக்கு உரிய அதிகார சட்டத்தின்படி (law of primogeniture), மூத்த சகோதரர்களுக்கே முன்னுரிமை இருந்திருக்க வேண்டும்; அதனால் அவர்கள் வெறுப்புடன் யோசேப்பின் அந்த அங்கியை உரிந்து எடுத்தார்கள்.

ஆதியாகமம் 37:24-25
’24அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. 25பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள். ‘
……………………
கவனித்தீர்களா?? அங்கே அந்த வழியாக தங்கள் ஒட்டகங்களோடு வந்த ஒரு வியாபாரிகளின் கூட்டம் எகிப்தை நோக்கி போய் கொண்டிருந்தது.
ஆதியாகமம் 37:26-27
’26அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? 27அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். ‘
…………………
சில வியாபாரிகள் அந்த வழியாகச் செல்வதைக் கண்ட யூதா, இதில் தலையிடுகிறார். அவர் முன்வைத்தது முழுக்க முழுக்க ஒரு சுயநலமான பணம் சார்ந்த திட்டம், ஆனால் உண்மையில் குறிப்பாக ஒரு கொலை நடக்கக்கூடாது என்பதில் இவரும் உறுதியாக இருந்தார். யோசேப்பின் இரத்தம் தங்கள் கைகளில் படிவதை அவர் விரும்பவில்லை.
சகோதரர்களுக்கு இந்த யோசனை திருப்தியாக இருந்தது; ஏனென்றால், எப்படியாவது அவரைத் தொலைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது— இஸ்மவேலர்கள் அவரை எகிப்திற்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு அடிமையாக விற்றுவிடுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். பெரும்பாலான இடங்களில் அடிமைத்தனம் என்பது “மரணத்தில் வாழ்வதற்கு” சமமானது; எனவே, இனி அவரைப் பற்றி நிச்சயமாக எந்தச் செய்தியும் தங்களுக்கு வராது என்று அவர்கள் நம்பினார்கள்.
ஆதியாகமம் 37:28
’28அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்து போகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள். ‘
…………………
இந்தக் கட்டத்தில், ஆதியாகமத்தை எழுதிய மோசே ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். முதலில் அவர் அவர்களை இஸ்மவேலர்கள் என்கிறார், பிறகு மீதியானியர்கள் என்கிறார், மீண்டும் அவர்களை இஸ்மவேலர்கள் என்றே அழைக்கிறார். அப்படியானால் அவர்கள் யார்? இது வேதாகமத்தில் உள்ள ஒரு பிழையா?

இது மிகவும் சுவாரசியமான ஒரு கருத்து, இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். வேதாகமத்தை விமர்சிப்பவர்களும் வெறுப்பவர்களும், அதன் துல்லியத்தன்மையை நிரூபிக்கும் ஒரு விஷயத்தை எப்படிப் பிழை என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
இஸ்மவேலர்கள் யார்? அவர்கள் ஆபிரகாமின் மகனான இஸ்மவேலின் வம்சாவளியினர். மீதியானியர்கள் யார்? அவர்கள் ஆபிரகாமின் மகனான மீதியானின் வம்சாவளியினர். ஆகார் மூலம் ஆபிரகாமுக்கு பிறந்தவர் இஸ்மவேல்; சாராளின் மறைவுக்குப் பிறகு ஆபிரகாம் திருமணம் செய்துகொண்ட கேத்தூராள் மூலம் பிறந்தவர்கள் மீதியானியர்.
இவர்கள் அனைவரும் உறவினர்களே—உண்மையில், தங்கள் சகோதரனை விற்கத் துணிந்த அந்தப் பன்னிரண்டு சகோதரர்களுக்கும் இவர்கள் தூரத்து உறவினர்கள்! அந்த நேரத்தில் ‘இஸ்ரவேலர்’ என்று சொல்லிக்கொள்ள பன்னிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் இஸ்மவேலர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? ஈசாக்கை விட இஸ்மவேல் மூத்தவர் என்பதால், ஒருவேளை நூறு அல்லது அதற்கு மேற்பட்டோர் இருந்திருக்கலாம். அக்காலத்தில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. பாலைவனத்தைக் கடந்து எகிப்திற்குச் செல்லும்போது, பாதுகாப்புக்காகவும் பொதுவான வியாபார நோக்கத்திற்காகவும் இந்தச் சிறிய குழுக்கள் ஒன்றாக இணைந்து கொண்டன. அவர்கள் உறவினர்கள் என்பதால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒன்றாகப் பயணம் செய்தார்கள்.
தேவனுடைய வார்த்தையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள அனுமதித்தால், அது மிகச் சிறந்த அர்த்தத்தைத் நமக்குத் தரும். நாம்தான் பல நேரங்களில் சரியாகச் சிந்திப்பதில்லை. வேதாகமத்தில் முரண்பாடுகள் இருப்பதாக மக்கள் நினைப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம். மோசே அந்தச் சூழ்நிலையை தெளிவாகப் புரிந்து கொண்டுதான், துல்லியமாக எழுதியிருக்கிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
எனவே, அந்தச் சகோதரர்கள் யோசேப்பை இஸ்மவேலர்களிடம் விற்றுவிட்டார்கள்; அவர்கள் அவரை எகிப்திற்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள்.
ஆதியாகமம் 37:29-31
’29பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 30தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான். 31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, ‘
……………………….
அவர்கள் செய்த உண்மையான காரியத்தை ரூபனிடம் சொன்னார்களா என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். அநேகமாக அவர்கள் ரூபனிடம், “வியாபாரிகள் இப்போது வெகுதூரம் சென்றிருப்பார்கள், அவர்களைத் துரத்திச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை; எனவே யாக்கோபிடம் சொல்வதற்கு ஒரு நல்ல கதையைத் யோசிக்க எங்களுக்கு உதவுவதே மேல்” என்று சொல்லி இருப்பார்கள்.
ஆதியாகமம் 37:32
’32பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். ‘
…………………..
தாங்கள் யோசேப்பைப் பார்க்கவே இல்லை என்பது போல அவர்கள் நடிக்கிறார்கள். அந்த அங்கியை ஏதோ இப்போதுதான் தற்செயலாகக் கண்டெடுத்தது போலப் பாவனை செய்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் வெறுத்த அந்த அங்கி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனால், அதைத் தங்களுக்கு அடையாளம் தெரியாதது போல நடித்து, தங்கள் தந்தையிடம் காட்டி இது யாருடைய அங்கி என்று அவருக்குத் தெரியுமா? என்று கேட்கிறார்கள்.
உண்மையில், தங்கள் தந்தை எந்த முடிவுக்கு வர வேண்டும் என்று அந்தச் சகோதரர்கள் நினைத்தார்களோ, அதே முடிவுக்கு அவர் வருகிறார்.
ஆதியாகமம் 37:33
’33யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பி, ‘
………………………..
சற்று நிதானமாக இதை மீண்டும் ஒருமுறை கவனிப்போம். அவர்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அந்த அங்கியில் பூசினார்கள். ……/ / இதே போல ஒரு ஆட்டை வைத்துத் தந்தையை ஏமாற்றும் இந்தச் செயல், இதற்கு முன்பு நாம் கேள்விப்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்துகிறதா? ஆமாம்
ரெபெக்காளும் யாக்கோபும் இணைந்து சூழ்ச்சி செய்தபோது, அவர்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை வைத்து ருசியான உணவைத் தயாரித்தார்கள்; பிறகு அந்த ஆட்டின் தோலை யாக்கோபின் கைகளிலும் கழுத்திலும் போட்டு ஈசாக்கை ஏமாற்றினார்கள்.. இப்போது, யோசேப்பின் சகோதரர்கள் அதே வெள்ளாட்டின் இரத்தத்தைப் பயன்படுத்தித் தங்கள் தந்தையை ஏமாற்றுகிறார்கள்—அந்தத் தந்தை வேறு யாருமல்ல, அதே யாக்கோபுதான்!
அவர்கள் அந்த அங்கியை அவரிடம் கொடுத்து, “இதை உமக்குத் தெரிகிறதா? அங்கே மலைப்பகுதியில் இதைக் கண்டெடுத்தோம். ஏதோ ஒரு காட்டு மிருகம் அவனைத் தாக்கியிருக்கும் போலத் தெரிகிறது,” என்று கூறுகிறார்கள். முதியவரான யாக்கோபு, தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டுவிட்டான் என்ற முடிவுக்கு வருகிறார்.
யாக்கோபு எப்படி ஏமாற்றினாரோ, அதே வழியில் அவரும் ஏமாற்றப்படுகிறார். “மோசம் போகாதீர்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7) — நன்றாக கவனியுங்கள், வேறொன்றை அல்ல, அதற்கு நிகரான ஒன்றையும் அல்ல, அதே காரியத்தையே அவன் அறுவடை செய்வான். பல ஆண்டுகளுக்கு முன்பு தன் தந்தையை அவர் எப்படி ஏமாற்றினாரோ, அதே வழியில் இப்பொழுது அவரும் ஏமாற்றப்படுகிறார்.
நாம் எதை விதைக்கிறோமோ அதையே துல்லியமாகப் பெறுகிறோம். இன்று நீங்கள் எந்தத் துறையில் செயல்பட்டாலும் இதுவே உண்மை. இது பௌதிக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் உண்மையானது. விசுவாசிக்கும் இது பொருந்தும். நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் பாவத்திலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். சொல்லப்போனால், தேவன் பட்சபாதம் இல்லாதவர் என்பதால், அந்த எண்ணத்தை விட்டுவிட்டுப் பாவம் செய்யாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. விதிகள் இப்படித்தான் இருக்கும் .என்று அவர் கூறியிருக்கிறார், இதில் நீங்கள் விதிவிலக்கு அல்ல.
வேறொருவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு போதகர், தான் கர்த்தருக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற அடிப்படையில் தன்னை நியாயப்படுத்த முயன்றார். தான் ஒரு முக்கியமான நபர் என்பதால், மற்றவர்களை விடத் தனக்கு வேறு விதமான விதிகளும், வேறு தகுதிகளும் இருப்பதாக அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், தேவன் பட்சபாதம் இல்லாதவர் என்பதை கடைசியாக அவர் கண்டுகொண்டார்.
, யாக்கோபின் துயரத்தை இப்பொழுது கவனியுங்கள்—
ஆதியாகமம் 37:34-35
’34தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான். 35அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். ‘
…………………
சிலர் யாக்கோபின் இந்தத் துயரம், அவர் தன் மகன் யோசேப்பின் மீது வைத்திருந்த அளவற்ற அன்பின் வெளிப்பாடு என்று கூறலாம். ஆனால் அருமையான சகோதரனை சகோதரியே, யாக்கோபு இன்னும் விசுவாசத்தால் நடக்கக் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. பெனியேலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவுபடுத்துங்கள். அது அவருடைய பழைய அகங்காரம் (ego) தகர்க்கப்பட்ட இடமாகும். அங்கே அவருடைய மாம்சம் ஒடுக்கப்பட்டது, ஆனால் இப்போது அவர் விசுவாசத்தால் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் இன்னும் அதைக் கற்றுக்கொள்ளவில்லை.
சொல்லப்போனால், எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் யாக்கோபின் விசுவாசத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய மரண காலம் வரை அவர் செய்த எந்த ஒரு செயலும் விசுவாசத்திற்கு உதாரணமாக அங்கே குறிப்பிடப்படவில்லை. மரணத்தின் தறுவாயில்தான் அவருடைய விசுவாசம் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டது.
அவருடைய இந்தத் துயரத்தை தாவீது போன்ற ஒரு மனிதனின் துயரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள் (2 சாமுவேல் 12:15–23). தாவீது தனது இறந்த பச்சிளம் குழந்தைக்காக அழுது புலம்பினார். யாக்கோபு யோசேப்பை நேசித்தது போலவே, தாவீதும் அந்தச் சிறுவனை நேசித்தார். ஆனால் தாவீது விசுவாசமுள்ள மனிதராக இருந்தார். அந்தச் சிறுவன் தன்னிடம் திரும்பி வரமாட்டான் என்பதும், என்றாவது ஒருநாள் தான் அந்தச் சிறுவனிடம் செல்லப்போகிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. எப்படிப்பட்ட ஒரு விசுவாசம்! இல்லையா?? ஆனால் அருமையானவர்களே யாக்கோபு இங்கே விசுவாசத்தால் நடக்கவில்லை. இது வழக்கத்திற்கு மாறான ஒரு வேதனை.
ஒருவேளை நீங்கள் உங்களுக்குப் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம். உங்களால் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் இருக்கலாம். நான் உங்களிடம் மிகக் கனிவாக, சொல்ல விரும்புகிறேன்: விசுவாசத்தால் நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள். துக்கப்படுவதால் மட்டும் அவர்களைத் திரும்பக் கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் உணரும்போதுதான், உங்கள் விசுவாசம் வெளிப்படுகிறது. துக்கப்படுவதால் எந்த நன்மையும் இல்லை. நீங்கள் ஒரு தேவபிள்ளையாக இருந்து, தேவபிள்ளையாக மரித்த ஒருவருக்காகத் துக்கப்படுகிறீர்கள் என்றால், விசுவாசத்தால் நடங்கள். நீங்கள் அவர்களை மீண்டும் சந்திப்பீர்கள், இனி ஒருபோதும் பிரியமாட்டீர்கள். விசுவாசம் இல்லாத இவ்வுலக மக்கள், நம்பிக்கை இல்லாதவர்களைப் போலத் துக்கப்படுகிறார்கள். ஆனால் அன்பானவர்களே, உங்களால் விசுவாசத்தால் நடக்க முடியும்.
இப்போது, இந்த அதிகாரத்தின் இறுதி வசனம் யோசேப்பைத் தொடர்ந்து எகிப்திற்குச் செல்கிறது—
ஆதியாகமம் 37:36
’36அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.’
தொடர்ந்து அடுத்த அதிகாரத்தில் யோசேப்பின் சரித்திரத்தை நாம் மீண்டும் பார்ப்போம்.
யோசேப்பின் வாழ்க்கை வெறும் ஒரு கதை அல்ல, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வழங்கும் ஒரு பாடம்.
ஆதியாகமம் 37-ஆம் அதிகாரத்தை நாம் சிந்திக்கும்போது, மூன்று முக்கியமான உண்மைகள் நம் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருகின்றன:
1. தேவனின் திட்டம் மனித சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது
யோசேப்பின் சகோதரர்கள் அவருடைய கனவுகளை அழிக்க நினைத்தார்கள். “இவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம்” என்று ஏளனமாகப் பேசினார்கள். ஆனால், அவர்கள் யோசேப்பை ஒழிக்க எடுத்த அதே முயற்சிதான், தேவன் அவரை எகிப்தின் அதிபதியாக உயர்த்தப் பயன்படுத்திய வழியாக மாறியது. உங்கள் வாழ்க்கையில் மனிதர்கள் உங்களுக்கு எதிராகச் செய்யும் தீமைகளையும் தேவன் நன்மையாக மாற்ற வல்லவர்.
2. விதைப்பும் அறுப்பும் பற்றிய மாறாத நியதி
யாக்கோபின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கையைத் தருகிறது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆட்டை வைத்துத் தன் தந்தையை ஏமாற்றினார்; இப்போது அவருடைய பிள்ளைகள் ஒரு ஆட்டின் இரத்தத்தை வைத்து அவரையே ஏமாற்றுகிறார்கள். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். எனவே, நம்முடைய அன்றாடச் செயல்களில் நேர்மையையும் உண்மையையும் மட்டுமே விதைக்கக் கற்றுக்கொள்வோம்.
3. விசுவாசத்தால் நடக்கும் வாழ்க்கை @@@@@@@
யோசேப்பு குழியில் தள்ளப்பட்டபோதும், அடிமையாக விற்கப்பட்டபோதும் தேவன் அவரோடு இருந்தார். அதே சமயம், யாக்கோபு சூழ்நிலையைப் பார்த்து நம்பிக்கையற்றுத் துக்கப்படுவதைக் காண்கிறோம். விசுவாசம் என்பது கண்ணுக்குத் தெரிவதைச் சார்ந்தது அல்ல, மாறாக “தேவன் என்னோடு இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்வார்” என்ற உறுதியைச் சார்ந்தது. தாவீது தன் குழந்தையை இழந்தபோது கொண்டிருந்த விசுவாசம் நமக்கும் தேவை.
ஜெபம் செய்வோம்:
“அன்புள்ள பரலோகப் பிதாவே, யோசேப்பின் வாழ்க்கையின் மூலம் நீர் எங்களோடு பேசியதற்காக நன்றி. சூழ்நிலைகள் எங்களுக்கு எதிராக இருக்கும்போது, உம்முடைய திட்டத்தின் மேல் நம்பிக்கை வைக்க எங்களுக்கு உதவி செய்யும். எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்ற உண்மையை உணர்ந்து, உம்மைப் பிரியப்படுத்தும் நற்கிரியைகளைச் செய்ய கிருபை தாரும். யாக்கோபைப் போலச் சூழ்நிலைப் பார்த்துச் சோர்ந்து போகாமல், விசுவாசத்தோடு முன்னேறிச் செல்ல எங்களைப் பலப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே, ஆமென்!”

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top