ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 36: 1 - 37:4
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 36: 1 – 37:4
நிகழ்ச்சி எண்: 0054

வாசியுங்கள்

அருமையானவர்களே, இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? யாக்கோபின் வாழ்க்கையில் இருந்து அனேக சிறந்த காரியங்களை நாம் கற்று வருகிறோம். பல காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த நீங்களும் திட்டமிட்டு இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. உங்கள் கண்கள் மூடி இருந்தாலும் உங்களுடைய காதுகள் கர்த்தருடைய வார்த்தைக்கு நேராய் இருந்தாலே நிச்சயம் இது உங்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் .

இன்று நாம் ஆதியாகமம் 36 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.

இந்த அதிகாரமானது ஏசாவுடைய குடும்பத்தைப் பற்றியது; இவர்களே பின்னாளில் ஏதோம் தேசமாக மாறினார்கள். இது சாதாரண வாசகர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாகத் தோன்றாவிட்டாலும், இந்தப் பெயர்களையும் அவற்றிலிருந்து உருவான மக்களையும் பற்றி ஆழமாகப் படிக்க விரும்புவோருக்கு இது ஒரு அற்புதமானப் பகுதியாகும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சில பெயர்களை இன்றும் அந்தப் பெரிய அரேபியப் பாலைவனத்தில் நீங்கள் கேட்கலாம். கூடாரத் தொழிலாளியான ஓமர் (Omar), தேமான், செப்போ, கேனாஸ் மற்றும் கோராகு போன்ற பெயர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவை. ஏசாவின் குடும்பத்தினர் இப்போதும் அந்தப் பகுதியில்தான் வசிக்கிறார்கள்.
ஏசாவின் குடும்பத்தினர் சவக்கடலுக்குத் (Dead Sea) தெற்கிலும் கிழக்கிலும் உள்ள ஏதோம் பகுதியில் குடியேறினர். இது ஒரு மலைப்பாங்கானப் பிரதேசம். ஏதோமின் தலைநகரான, பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்ட ‘பெத்ரா’ (Petra) நகரம் இன்றும் அங்கே இருக்கிறது. ஏதோமைக் குறித்து ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் ஒபதியா ஆகிய புத்தகங்களில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் வியக்கத்தக்க வகையில் நிறைவேறியுள்ளன.
ஏதோம் என்னும் தேசம் ஏசாவிடமிருந்து உருவானது. இந்த அதிகாரத்தில் மூன்று முறை ஏசாவே ஏதோமின் தந்தை என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது—உண்மையில், இவ்விரு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன (உதாரணமாக, வசனம் 8-ஐக் கவனியுங்கள்)/ / . அப்படியானால், ஏசாவுக்கும் ஏதோமுக்கும் என்ன வித்தியாசம்? நாம் முதலில் ஏசாவைச் சந்தித்தபோது, ஈசாக்கின் குடும்பத்தில் ஒரு சிறுவனாகப் பார்த்தோம். அவர் வெளியில் சுற்றக்கூடிய, கரடுமுரடான மற்றும் அழகான விளையாட்டு வீரரைப் போன்ற உடல்வாகு கொண்ட வாலிபனாக வளர்ந்தார். வெளித்தோற்றத்தில் அவர் கவர்ச்சியாகத் தெரிந்தாலும், மாம்சத்தின்படி அதாவது (உடல் இச்சைகளின்படி) வாழ்ந்த ஒரு மனிதர் யாராவது உண்டென்றால், அது ஏசாதான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிறிஸ்தவப் பெண் தான் சந்தித்த ஒரு அழகான இளைஞனைப் பற்றி தன்னுடைய போதகரிடத்தில் வந்துபேசினாள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் இருவருமே பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தார்கள். அந்தப் பெண் சீனாவில் பிறந்தவள். அவளுடைய தந்தை எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டு பெரும் செல்வந்தராக இருந்தவர். பொதுவாக பல வங்கி ஊழியர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்யக் காத்திருப்பார்கள்.. வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மகள்களை அவர்கள் கவனிப்பார்கள்.
அப்படித்தான் இந்த இளைஞன் அந்தப் பெண்ணைச் சந்தித்தான். அவன் கட்டுமஸ்தான உடலமைப்போடு, மிகவும் கவர்ச்சியாக இருந்தான். சொல்லப் போனால் அவன் பார்ப்பதற்கு ஏசாவைப் போலவே இருந்தான். அந்தப் பெண் சீனாவில் இருந்தபோது ஒரு மிஷனரி மூலம் கர்த்தரை ஏற்றுக்கொண்ட அருமையான கிறிஸ்தவப் பெண். அந்த இளைஞன் கர்த்தரிடம் வருவான் என்ற நம்பிக்கையில் அவனையே திருமணம் செய்துகொள்வதில் அவள் பிடிவாதமாக இருந்தாள். அந்தப் பெண்ணின் போதகர் அவனிடம் பேசியபோது, அவனுக்குக் கர்த்தரிடம் வரும் எண்ணமே இல்லை என்பதையும், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதில் மட்டுமே ஆர்வம் இருப்பதையும் அவன் வெளிப்படுத்தினான். அவள் அழகாகவும், வசதியாகவும் இருந்தாள்—அவனோ ஒரு மாம்சத்துக்குரிய மனிதன்.
அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்க முடியாது என்று அவளுடைய போதகர் கூறிவிட்டார்.. அதனால் அவள் அந்த போதகர் மீது மிகவும் கோபப்பட்டாள். ஆனால் சில காலம் கழித்து, தான் விவாகரத்து பெற்றுவிட்டதாகச் சொல்ல போதகரிடத்தில் வந்தாள். உலக விஷயங்களிலும், உடல் இச்சைகளிலும் ஒரு மனிதன் இவ்வளவு மூழ்கியிருப்பான் என்று தான் அறிந்ததே இல்லை என்று அவள் கூறினாள். தனது வாழ்நாளில் ஒருமுறை கூட உயரிய, உன்னதமான அல்லது ஆவிக்குரிய சிந்தனைகளே இல்லாத ஒரு மனிதனாக இருப்பான் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் அவள் கூறினாள். அவன் அவ்வளவு தரம் தாழ்ந்தவனாக இருந்தான். வெளிப்பார்வைக்கு அவன் நல்லவனாகவும், காதலித்த காலத்தில் கண்ணியமாகவும் நடந்துகொண்டான். ஆனால் அந்த முகமூடிக்கு பின்னால் அவன் மிகவும் முரடனாகவும் பண்பற்றவனாகவும் இருந்தான்.
ஏசாவும் அப்படிப்பட்டவன்தான். நீங்கள் ஏசாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணாக இருந்து அவனைச் சந்தித்திருந்தால், அவனுடன் பழக நிச்சயம் ஆசைப்பட்டிருப்பீர்கள். அவன் ஒரு கவர்ச்சியான இளைஞன், ஆனால் முற்றிலும் ஒரு மாம்சத்தின் மனிதன்.
ஏசாவுக்குப் பதிலாக யாக்கோபை இறைவன் தேர்ந்தெடுத்தது குறித்து ஒருவேளை யாராவது கடவுளிடம் வாதிட விரும்பலாம். ஏனெனில், ஏசா வெளித்தோற்றத்திற்கு அவ்வளவு நல்லவராகத் தெரிந்தார். கடவுள் ஏதேனும் தவறு செய்திருக்க முடியுமா? ஆனால், ஓபதியா என்கிற சிறிய தீர்க்கதரிசனப் புத்தகத்தில் ஏசாவின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். ஒரு சிறிய ஏசா, இப்போது சுமார் ஒரு லட்சம் ஏதோமியர்களாகப் பெருகியிருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறிய ‘ஏசா’ தான். இப்போது அந்த தேசத்தைப் பாருங்கள், ஏசாவிடமிருந்து உருவானது எது என்பதை நீங்கள் காண்பீர்கள். இது ஏசாவை ஒரு நுண்ணோக்கியின் (microscope) கீழ் வைத்துப் பார்ப்பது போன்றது; அவர் இப்போது பெரிதாக்கிக் காட்டப்படுகிறார். அங்கே நாம் காண்பது என்ன? அந்த தேசம் முழுவதும் அகந்தையால் நிறைந்திருப்பதை நாம் பார்க்க முடியும்.
ஏதோமை நோக்கி கர்த்தர் கூறியது என்ன? கவனியுங்கள் வாசிக்கிறேன்.
ஒபதியா 1:3-4
‘3கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. 4நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘
………………….
. அவர்களின் இருதயத்தில் இருந்த அந்த அகந்தை, கடவுள் இல்லாமல் என்னால் வாழ முடியும், எனக்குக் கடவுளின் தேவை இல்லை என்று கூறும் ஒரு தன்னிச்சையான சுபாவமாகும். – அதுதான் ஏசா.
பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகத்தில் கடவுள், “நான் யாக்கோபை நேசித்தேன், ஏசாவையோ வெறுத்தேன்” என்று கூறுகிறார். இந்த மனிதர்கள் வாழ்ந்து முடிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே கடவுள் இதைச் சொன்னார். ஆனால், ஏசாவின் இருதயம் எப்படிப்பட்டது என்பதை ஆரம்பத்திலேயே அவர் அறிந்திருந்தார். வரலாறு முழுவதும் அவர்கள் வாழ்ந்த விதத்தைப் பார்த்த பிறகு, கடவுளின் கணிப்பு எவ்வளவு சரியானது என்பது இப்போதும் நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
ஆதியாகமம் 36:1
‘1ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்ச வரலாறு: ‘
……………….
ஏசா என்றால் ஏதோமைத்தான் குறிக்கிறது.
ஆதியாகமம் 36:2-3
‘2ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும், 3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணியிருந்தான். ‘
………………………..
ஏசா ஏற்கனவே இரண்டு கானானியப் பெண்களையும், அதோடு ஒரு இஸ்மவேலியப் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆதியாகமம் 36:6-7
‘6ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப்போனான். 7அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. ‘
……………….
ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கும் இதே போன்ற ஒரு பிரச்சனை இருந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அவர்களுக்குப் போதுமான மேய்ச்சல் நிலம் அங்கு இருக்கவில்லை. இருவரிடமும் ஏராளமான கால்நடைகள் இருந்தன. அதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றார்கள். இப்போது ஏசாவும், பொருளாதாரச் சூழல் காரணமாக, வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்தை விட்டுத் தானாகவே வெளியேறுகிறார்.
ஆதியாகமம் 36:8
‘8ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர். ‘
……………………
யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபோது, ஏசா கானான் தேசத்தில் இருந்த “சேயீர் சீமையில்” வசித்து வந்தார் .(ஆதியாகமம் 32:3). இப்போது அவர் அங்கிருந்து இடம்பெயர்ந்து, நான் ஏற்கனவே விவரித்த “சேயீர் மலைப்பகுதிக்கு” போகிறார்.
ஆதியாகமம் 36:12
’12திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர். ‘
…………………
அமலேக்கியர்களின் ஆரம்பம் இதுதான். பல நூற்றாண்டுகளாக, இந்தப் பாலைவனத்தில் இருந்த அந்தப் பழங்குடியினர் பல திசைகளிலும் பரவினார்கள். அவர்களில் பலர் வட ஆப்பிரிக்கா முழுவதும் பரவிச் சென்றனர். அனைத்து அரேபியப் பழங்குடியினரும் ஆபிரகாமிடமிருந்தே வந்தார்கள்—எகிப்தியப் பெண்ணான ஆகார் மூலமாகவும், சாராள் இறந்த பிறகு அவர் திருமணம் செய்துகொண்ட கேத்தூராள் மூலமாகவும் அவர்கள் உருவானார்கள். இந்தப் பழங்குடியினருக்கு இடையே இனக்கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. இவர்களும் இஸ்ரவேலர்களைச் சார்ந்த அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே..
மத்திய கிழக்கில் சுற்றுலா பயணம் சென்ற பொழுது போதகர் ஒருவர் ஒரு அரேபியரைச் சந்தித்தார். அவரோடு சென்ற சுற்றுலா குழுவினருக்கு போதகர் அளித்த செய்தியில், இஸ்ரவேல் தேசத்தைப் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்தை அந்த அரேபியர் கடுமையாக எதிர்த்தார். அவர் ஒரு கிறிஸ்தவ அரேபியராக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்தை தான் எவ்வளவு வெறுக்கிறேன் என்று போதகரிடத்திலே சொன்னார். உடனே போதகர் அவரிடத்தில், “ஆனால் அவர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லவா?” என்று கேட்டார். கவனியுங்கள் அது அவரை இன்னும் அதிகமாக கோபப்படுத்தியது! “அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறினார். ஆனால் போதகர் தொடர்ந்து, “நீங்கள் இருவருமே செமித்திய (Semitic) இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எவ்வளவு தூரம் செமித்தியர்களோ, அதே அளவு நீங்களும் ஒரு செமித்தியர்தான்” என்று திட்டவட்டமாய் எடுத்துக் கூறினார். . இறுதியில், அது உண்மைதான் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே, அருமையானவர்களே இந்த உறவுமுறைகளைக் காட்டுவதில் இந்த அதிகாரம் மிக முக்கியமானது. இதைப் பற்றி நமக்குச் சொல்வதற்காகப் பரிசுத்த ஆவியானவர் (வேதாகமத்தில்) அதிக இடத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த அதிகாரத்தில் சில நகைச்சுவையான விஷயங்களையும் நாம் பார்க்க முடியும்.
ஆதியாகமம் 36:15
’15ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, ‘
……………………
உலகத்தில் இவர்களுக்கு இந்த – பிரபுக்கள் என்ற பட்டங்கள் எங்கிருந்து கிடைத்தன? உயர்குடிப் பிரபுத்துவம் இங்கேதான் தொடங்குகிறது—அவர்கள் தாங்களாகவே இந்தப் பட்டங்களைச் சூட்டிக்கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபுவாக மாறினார்கள். இது ஏதோ சும்மா வைக்கப்பட்ட பட்டப்பெயர் அல்ல—அவர்கள் அதை மிகவும் கௌரவமாகக் கருதினார்கள். பிரபுக்களின் வம்சாவளி என்பது ஏசாவின் குடும்பத்திலிருந்தே தொடங்கி இருக்கிறது.
ஆதியாகமம் 36:19
’19இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். ‘
…………………
இப்போது அவர்களின் குடும்பத்தில் பிரபுக்கள் உருவாகிவிட்டார்கள். ஏசாவின் வம்சத்தினர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள இத்தகையப் பட்டங்களைத் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டதை பார்க்கிறோம்.
. பிரபு என்பது பொதுவாக ஐரோப்பிய உயர்குடியினரைக் குறிக்கும் சொல். இதை அவர்களே பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது ஒரு சந்தேகம் வருகிறது—ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களில் யாரும் திராட்சைத் தோட்டங்களில் / மண்பாண்டங்கள் செய்யும் இடத்தில் வேலை செஇதவர்களாகவோ அல்லது செருப்புக் கடைகள் நடத்தியவர்களாகவோ இல்லையோ? பார்த்தால் எல்லாருமே அரச வம்சத்திலிருந்து வந்தவர்களாகத் தெரிகிறார்கள்! என்று ஆச்சரியப்பட வேண்டியதிருக்கிறது
சரி, ஏசா அத்தகையப் பிரபுக்கள் பலரை உருவாக்கிக் காட்டினார். சொல்லப்போனால், அவர் பிரபுக்களை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை—

ஆதியாகமம் 36:31
’31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: ‘
…………………..
ராஜாக்கள் ஆட்சி முறை என்பது கடவுள் தனது மக்களுக்காக வைத்திருந்த திட்டம் இல்லை. ஆனால், இது ஏதோமியர்களின் (Edom) வாழ்க்கை முறையாக இருந்தது. அவர்களுக்கு மேல் பிரபுக்களும் ராஜாக்களும் இருந்தார்கள். நீங்கள் ஏசாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு ஒரு பட்டம் (Title) தேவைப்பட்டிருக்கும்; ஏனென்றால் அவர்கள் அப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தார்கள்.
இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாக்கள் உருவாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஏசாவின் வம்சத்தினருக்கு ராஜாக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், பிற்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் சாமுவேலிடம், ‘…மற்ற எல்லா நாடுகளையும் போல எங்களை நியாயந்தீர்க்க ஒரு ராஜாவை ஏற்படுத்திக் கொடும்’ (1 சாமுவேல் 8:5) என்று கேட்பார்கள். ஒருவேளை அவர்கள், ‘தெற்கே இருக்கும் எங்கள் சகோதரர்களான ஏதோமியர்களுக்கு ராஜாக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போலவே எங்களுக்கும் ராஜாக்கள் வேண்டும்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆதியாகமம் 36:40-43
’40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு, 41அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 42கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு. 43மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.’
………………….
இது நிராகரிக்கப்பட்ட ஒரு வம்சத்தின் குடும்ப வரலாறு. இந்த அதிகாரம் அதன் இறுதிச் சுருக்கத்தைக் கொடுக்கும்போது, ஏசாவின் வழியில் வந்த பிரபுக்களை மீண்டும் ஒருமுறை பட்டியலிடுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடும்போது, ஒருவருக்கொருவர் குனிந்து வணங்கி உபசரிப்பதிலேயே அதிக நேரம் போயிருக்கும். ‘என் சகோதரரைச் சந்தியுங்கள், இவர் பிரபு ஆல்வா’ என்றும், ‘என் நண்பரைச் சந்தியுங்கள், இவர் பிரபு திம்னா’ என்றும் அறிமுகம் செய்திருப்பார்கள். அங்கிருந்த ராஜாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்—அவர்களை நேரில் பார்ப்பதே அரிதான காரியமாக இருந்திருக்கும்!
மானிடவியல் (Anthropology) அல்லது இனவியல் (Ethnology) பற்றிப் படிக்க ஆர்வமுள்ள எவருக்கும் இந்த அதிகாரம் மிகவும் சுவாரஸ்யமானது. வேறெந்த வரலாற்று ஆதாரங்களாலும் எட்ட முடியாத மிகப்பழமையான ஒரு குடும்ப வரலாற்றை இத்தகைய அதிகாரம் நமக்குக் கொடுக்கிறது.
இந்த அதிகாரம் பிரபுக்களின் பட்டியலோடு முடிகிறது; மேலும் அவர்கள் குடியிருந்த இடம் அவர்களுக்குச் சொந்தமான ‘ஏதோம்’ தேசம் என்பதையும் மீண்டும் குறிப்பிடுகிறது. ‘இவரே ஏதோமியர்களின் தகப்பனாகிய ஏசா.//’ ஒபதியா மற்றும் மல்கியா தீர்க்கதரிசனங்களில் இதன் விளைவுகள் செயல்படுவதை நாம் பார்க்க முடியும். ஆம் அருமையானவர்களே, இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, இதை நாம் சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது.
37 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை கற்றுக் கொள்வோம்.
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோரின் வம்ச வரலாற்றைத் தொடரும்போது, ஆதியாகமத்தின் இந்தப் இறுதிப் பகுதியில் நான்காவது முக்கியமான நபரை நாம் சந்திக்கிறோம். இங்கிருந்து ஆதியாகமப் புத்தகம் முடியும் வரை, மையக்கருத்தாக இருப்பவர் யோசேப்புதான் . ஆபிரகாம், ஈசாக்கு அல்லது வேறு யாரையும் விட யோசேப்பைப் பற்றித்தான் அதிக அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால், ஆதியாகமம் 1 முதல் 11 வரையிலான ஒட்டுமொத்த முதல் காலப்பகுதியை விட, யோசேப்பின் வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் யோசேப்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று சிந்திக்கும் மாணவர்கள் கொஞ்ஜம் நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒன்று, யோசேப்பின் வாழ்க்கை ஒரு நன்மையான மற்றும் நேர்மையான வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கை பிலிப்பியர் 4:8க்கு ஒரு மாதிரியாய் இருந்தது. அந்த வசனம் சொல்வது என்ன?
‘8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். ‘
…………………………
. எதெல்லாம் நன்மையானதோ, உன்னதமானதோ, மேன்மையானதோ அவைகள் நம் கண்முன் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்; யோசேப்பின் வாழ்க்கையும் அப்படித்தான் அமைந்திருந்தது.

இரண்டாவது ஒரு மிக முக்கியமான காரணமும் உண்டு. வேதாகமத்தில் உள்ள நபர்களில், தனது குணாதிசயங்களிலும் அனுபவங்களிலும் இயேசு கிறிஸ்துவைப் போலவே இருக்கக்கூடிய ஒருவர் உண்டென்றால் அது யோசேப்புதான். புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் யோசேப்பு, கிறிஸ்துவின் ‘நிழலாட்டம்’ (Type of Christ) என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் இந்த ஒற்றுமைகள் தற்செயலாக அமைந்தவை அல்ல./ நாம் அவரது கதையைத் தொடர்ந்து படிக்கும்போது, இத்தகைய பல ஒற்றுமைகளை நாம் கவனிக்கப் போகிறோம். அவைகளை கவனித்துப் பார்த்து பட்டியல் இடுவோம் என்றால் குறைந்தது முப்பது ஒற்றுமைகளாவது இவர்களுக்குள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, இப்போது மெசியாவாகிய கிறிஸ்து பிறக்கப்போகும் யாக்கோபின் வம்ச வரலாற்றைத் தொடர்ந்து கற்றுக் கொள்வோம்.
யோசேப்பின் கதை ஆரம்பிக்கும்போது, யாக்கோபு கானான் தேசத்தில் வசித்து வருகிறார்.
ஆதியாகமம் 37:1 பாருங்கள்
‘1யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். ‘
……………………..
“யாக்கோபு இப்போது பெத்லகேமுக்குத் தெற்கே நகர்ந்து, எபிரோன் (Hebron) பகுதிக்கு வந்திருக்கிறார். ஆபிரகாம் வாழ்ந்து வந்த இடமும் இதுதான். இது ஐக்கியத்திற்கும், இறைவனுடன் உரையாடுவதற்கும் உரிய ஒரு இடம் என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 37:2
‘2யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். ‘
……………………….
யாக்கோபின் மகன்களான யோசேப்பு மற்றும் பென்யமீனைத் தவிர.மற்றவர்கள் உண்மையிலேயே பெரும் பிரச்சனையான பிள்ளைகளாக இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. கடவுள் அவர்களுக்குக் கற்பிக்க விரும்பிய பாடங்களைக் கற்றுக்கொள்ள இந்த மனிதர்களுக்கு நீண்ட காலம் பிடித்தது.
கவனியுங்கள் இப்பொழுது நம்முடைய கவனம் யாக்கோபிடமிருந்து யோசேப்பிற்கு மாறுகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது யோசேப்புக்கு வெறும் பதினேழு வயதுதான், அதாவது ஒரு பதின்ம வயதுச் சிறுவன். ஒரு அருமையான டீன் ஏஜ் Boy.. மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த அந்த ஆண்களில் யோசேப்புதான் மிக இளையவன். பென்யமீன் இன்னும் மிகச் சிறியவனாக இருந்ததால் வீட்டில் தங்கியிருந்தான். யோசேப்பு தனது சகோதரர்களைப் பற்றிய ஒரு கெட்ட செய்தியைத் தன் தந்தையிடம் கொண்டு வந்தான். நிச்சயமாக, இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அவனை ‘கோள் சொல்லி என்று அழைத்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”
‘3இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். ‘
………………………..
யாக்கோபு தன் சொந்த வீட்டிலிருந்தே ஒரு பாடத்தைக் கற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது (favorites) பிரச்சனையை உண்டாக்கும் என்று அவர் அறிந்திருந்தார். அவருடைய தந்தை மூத்த மகனுக்கு (ஏசா) முக்கியத்துவம் கொடுத்ததை அவர் அறிவார்; அதனால் தான் புறக்கணிக்கப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், இங்கும் அவர் அதே தவறைத்தான் செய்கிறார். ராகேல்தான் அவர் உண்மையிலேயே நேசித்த மனைவி—அவர் வாழ்க்கையில் கிடைத்த ஒரே உயரிய செல்வம்—என்பதையும், யோசேப்பு ஒரு மிகச்சிறந்த பையன் என்பதையும் வைத்துப் பார்க்கும்போது யாக்கோபின் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும், அது ஒரு காரணமாகாது. அவர் யோசேப்புக்கு அந்தப் பலவண்ண அங்கியைச் செய்திருக்கக் கூடாது.
இந்த ‘பலவர்ண அங்கி’ (coat of many colours) என்பதற்கு ‘நீண்ட கை வைத்த அங்கி’ (coat with sleeves) என்பதும் மற்றொரு பொருத்தமான மொழிபெயர்ப்பாக இருக்கலாம். அந்த நாட்களில் சாதாரண உடைகள் என்பவை பத்து அடி நீளமுள்ள ஒரே துணியால் ஆனவை. அதன் நடுவில் ஒரு துளையிட்டு, அதன் வழியாகத் தலையை நுழைப்பார்கள். பாதி துணி உடலின் முன் பக்கமும், மீதி பாதி பின் பக்கமும் தொங்கும். இடுப்பைச் சுற்றி அதைக் கட்டிக்கொள்வார்கள் அல்லது பக்கவாட்டில் தைத்துக் கொள்வார்கள்; இதுதான் அவர்களின் அங்கி. அதில் கைகள் (sleeves) இருக்காது. எனவே, ஒருவருடைய அங்கியில் கைகளை இணைப்பது அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதேபோல், பல வண்ணங்களைக் கொண்ட அங்கியாக இருந்தாலும் நிச்சயமாக அது அவரைத் தனித்துக் காட்டும்.
ஆதியாகமம் 37:4
‘4அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்ட போது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். ‘
……………………
இயல்பாகவே, தந்தை அவனுக்கு மட்டும் காட்டிய அந்த விசேஷித்த அன்பினால் சகோதரர்கள் அவனை வெறுத்தார்கள். அவர்களால் அவனிடம் அமைதியாகக் கூட பேச முடியவில்லை. எனவே, இங்கும் அந்தக் குடும்பத்திற்குள் ஒரு பெரிய மோதல் உருவாவதைக் பார்க்கிறோம். அருமையானவர்களே, அது யாருடைய குடும்பமாக இருந்தாலும் சரி, ‘பாவம்’ குடும்பத்தை பாழாக்கிவிடும். பாவம் வாழ்க்கையைச் சீரழிக்கும், குடும்பங்களைச் சிதைக்கும், சமூகங்களையும், நாடுகளையும் கூட அழித்துவிடும். இன்று நம் குடும்பங்களிலும், நகரங்களிலும், நாடுகளிலும் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அடிப்படை காரணம்தான் இருக்கிறது: அதைத்தான் கடவுள் ‘பாவம்’ என்று அழைக்கிறார்.
இங்கு சிறுவன் யோசேப்பு பாரபட்சத்தின் இலக்காக இருப்பதை நாம் காண்கிறோம். அவனது தந்தை அன்பு செலுத்துவதில் பாரபட்சம் காட்டினார்; அவனது சகோதரர்களோ வெறுப்பதில் பாரபட்சம் காட்டினார்கள்..
அருமையானவர்களே, இன்று நாம் ஏசா மற்றும் யோசேப்பு ஆகிய இருவருடைய வாழ்க்கைப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்தோம். இதிலிருந்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கான சில பாடங்களை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்.
ஏசா வெளித்தோற்றத்திற்கு ஒரு சிறந்த விளையாட்டு வீரராக, அழகான இளைஞனாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவனது வம்சமாகிய ஏதோமியர்களின் வாழ்க்கையை ஒரு நுண்ணோக்கி (Microscope) வழியாகப் பார்க்கும்போது, அங்கே தெரிந்தது அகந்தை./ / “என்னைக் கீழே தள்ளுபவன் யார்?” என்று அவர்கள் கேட்டது, கடவுளே தேவையில்லை என்ற அவர்களின் தன்னிச்சையான சுபாவத்தைக் காட்டியது.
பெருமை நிறைந்த ஏதோமை குறித்து கர்த்தர் கூறியதை நாம் மறந்து போகக்கூடாது.
ஒபதியா 1:3
‘3கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. ‘
………………….
இன்று நாமும் நம்முடைய திறமைகள், அழகு அல்லது செல்வாக்கைக் கண்டு “எனக்குக் கடவுள் எதற்கு?” என்று நினைக்கிறோமா? அந்த அகந்தை நம்மை மெதுவாக அழிவுக்கே வழிநடத்தும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.

யாக்கோபின் குடும்பத்தில் நாம் பார்த்தது போல, பாரபட்சமும் பொறாமையும் அந்த உறவுகளைச் சிதைத்தன. தந்தை காட்டிய அதிகப்படியான அன்பும், சகோதரர்கள் காட்டிய கடும் வெறுப்பும் ஒரு பெரும் மோதலுக்கு வழிவகுத்தது. இதற்கு அடிப்படை காரணம் ‘பாவம்’. அது தனிமனித வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையே சீரழிக்கும் வல்லமை கொண்டது.
மேலும் ஏசா மாம்சத்தின்படி வாழ்ந்த ஒரு மனிதன் ஆனால் யோசேப்பு பிப்பியர் 4:8-ன் படி உண்மையான, நீதியான மற்றும் நேர்மையான வாழ்வை வாழ்ந்தார். அதனால்தான், வேதாகமம் அவருக்கு அத்தனை முக்கியத்துவத்தை அளிக்கிறது. அவர் வரப்போகும் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு நிழலாட்டமாகத் திகழ்ந்தார்.
நம்மை நாமே சற்று ஆராய்ந்து பார்ப்போம்: நம்மிடம் இருப்பது ஏசாவின் அகந்தையா அல்லது யோசேப்பின் நற்பண்பா? வெளிப்பார்வைக்கு நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, நம் இருதயத்தின் ஆழத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதே கடவுளுக்கு முக்கியம்.
நாம் ஜெபிப்போமா?
எங்களை நேசிக்கிற என் அன்பில் ஆண்டவரே, ஏசாவைப் போல நாங்கள் அகந்தை உள்ளவர்களாக வாழாமல் யோசேப்பை போல உமக்கு உந்தவராய் வாழ நீர் எங்களுக்கு கிருபை செய்யும். இந்த என் சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கிற யார் குடும்பத்திலாவது இப்படி பாரபட்சமாய் பிள்ளைகள் நேசிக்கப்படுவார்கள் என்றால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள உதவி செய்யும். எந்த பிள்ளைகளை கண்டிக்க வேண்டுமோ அவர்களை கண்டிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டிய நேரத்திலே அது எந்த பிள்ளையானாலும் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து குடும்பத்தை உம்முடைய அன்பினாலே கட்டியெழுப்ப நீரே ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தாழ்மையோடு ஜெபிக்கிறோம் பிதாவே . ஆமென்

சரி நேயர்களே இன்றைய நிகழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாய் அமைந்திருக்கும் என்று விசுவாசிக்கிறோம், நீங்கள் கேட்ட சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்ப உறவுகளையும் ஆசிர்வதித்து காப்பாராக ஆமென்

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top