ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 33
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 33
நிகழ்ச்சி எண்: 0051

வாசியுங்கள்

கர்த்தருடைய வசனத்தின் மேல் விருப்பத்தோடு தொடர்ந்து எங்களோடு இணைந்து கொள்ளும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இன்று நாம் ஆவியாகமம் 33 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.

கடந்த அதிகாரத்தில் யாக்கோபின் வாழ்வின் மிக உயர்ந்த தருணத்தைப் பார்த்தோம். அது அவர் தேவனோடு நேருக்கு நேர் சந்தித்த ஒரு சந்திப்பாகும். ஆதியாகமம் 32:’24ல் -யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, ‘ என்று வாசிக்கிறோம். அன்று இரவு “ஒரு புருஷன்” அவரோடு போராடினார். அந்தப் புருஷன்தான் யாக்கோபுடன் போராடினார், யாக்கோபு தானாகப் போராட்டத்தைத் தேடிப் போகவில்லை. யாக்கோபு அப்போது இன்னொரு சண்டையை விரும்பும் நிலையில் இல்லை. அவருக்குப் பின்னால் மாமா லாபானும், முன்னால் அண்ணன் ஏசாவும் இருந்தார்கள். கடைசியாக அவர்களைப் பார்த்தபோது, அவர்கள் இருவருமே யாக்கோபுக்கு எதிராக மிகுந்த கோபத்தோடு இருந்தார்கள்.
எனவே, யாக்கோபு இன்னொருவருடன் மோதுகிற சூழ்நிலையில் இருக்கவில்லை. அதனால் அந்த “புருஷன்” தான் முதலில் முன்வந்து அவரோடு போராடினார். நாம் ஏற்கனவே பார்த்தபடி, அவர் மனிதனாக அவதரிக்கும் முன்னரே காட்சியளித்த கிறிஸ்து ஆவார். தேவன் அவரைத் தொட்டு முடக்கும் வரை யாக்கோபு அவரை எதிர்த்தார். ஆனால் வந்தவர் யார் என்று உணர்ந்தவுடன், அவர் தன்னை ஆசீர்வதிக்கும் வரை யாக்கோபு அவரை விடாமல் பற்றிக்கொண்டார்.
நம்முடைய வாழ்க்கையிலும் நாம் சொந்தமாக போராடிக் கொண்டு இல்லாமல், முழுவதும் நம்மை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து விசுவாசத்தோடு அவரை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளும் பொழுது இந்த உலகத்தை ஜெயிக்க அவர் நம்மை பலப்படுத்த வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.
இந்தத் தருணத்திலிருந்து யாக்கோபுவிடம் ஒரு மாற்றத்தைப் பார்ப்போம். இந்த அதிகாரத்தில் அவருடைய வாழ்க்கையைப் பின்தொடரும்போது, நாம் ஒரு புதிய மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், இப்பொழுது அவர் ஒரு புதிய மனிதர்தான்.
ஆதியாகமம் 33:1 வாசிக்கிறேன்
‘1யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரி களிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து, ‘
………………
யாக்கோபு தனது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இப்பொழுது அவர்களை தனியாக பிரித்து வைக்கிறார்.
ஆதியாகமம் 33:2-3
‘2பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி: 3தான் அவர்களுக்கு முன்னாக நடந்து போய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். ‘
…………………..
யாக்கோபு தனது சகோதரன் ஏசாவைச் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு படத்தை நாம் பார்த்தால் நன்றாக இருக்கும்.! ஏசா ஒரு மைல் தொலைவில் இருக்கும்போதே, யாக்கோபு குனிந்து வணங்கத் தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். ஏசாவுடன் நானூறு மனிதர்கள் வருவதால், அவர் நண்பராக வருகிறாரா அல்லது எதிரியாக வருகிறாரா என்று தெரியாமல், யாக்கோபு மிகவும் பணிவோடு ,தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்திருப்பார் என்றால் அதை கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்.
ஆதியாகமம் 33:4 பாருங்கள்.
‘4அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். ‘
……………………
“அவர்கள் இரட்டையர்கள், அவர்கள் உடன்பிறந்த சகோதரர்கள். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். யாக்கோபைக் கொல்லப்போவதாக ஏசா சபதம் செய்திருந்தார், ஆனால் இப்போது அவருடைய இதயம் மாறியிருப்பதைப் பார்க்கும்போது, நிச்சயமாக தேவன் ஏசாவின் இருதயத்தைத் தொட்டிருக்கிறார் என்றுதான் தெரிகிறது.”
ஆதியாகமம் 33:5-7

‘5அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். 6அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 7லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். ‘
……………………….
யாக்கோபு தனது சகோதரனாகிய இயேசுவுக்கு தன் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்கிறார்.
ஆதியாகமம் 33:8

‘8அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். ……………………..
தனது சகோதரனை சந்திப்பதற்காக தான் வகுத்த தந்திரமான திட்டங்கள் வேலை செய்துவிட்டன என்று யாக்கோபு ஒரு நிமிடம் நம்புகிறார் போலிருக்கிறது. ஆனால், உண்மையில் அந்தத் திட்டங்கள் எதுவுமே தேவையற்றதாகிவிட்டது. சரி இப்பொழுது ஏசா பேசுவதைக் கேளுங்கள்—அவரிடம் எவ்வளவு பெரிய மாற்றம்!”??
ஆதியாகமம் 33:9
‘9அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான். ‘
…………………
ஏசாவின் தாராள மனப்பான்மை ஆச்சரியமானதாக இருக்கிறது. இவைகளையெல்லாம் நீ எனக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்னிடத்திலேயே போதுமானது இருக்கிறது .
கவனியுங்கள், ஆதியாகமம் 33:10-11
’10அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. 11தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். ‘
…………………..
இது பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையான காட்சி போல இருக்கிறது. இதுவரை, ஒருவரிடமிருந்து மற்றவர் எதையாவது பறிக்கவே முயற்சி செய்தார்கள். குறிப்பாக யாக்கோபு அப்படித்தான் இருந்தார். ஆனால் இப்போது, யாக்கோபை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் பார்க்கிறோம். இங்கே அவர் தன் அண்ணனிடம் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகிறார். ஏசாவோ, “நீ இதைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, என்னிடமே ஏராளமாக இருக்கிறது” என்கிறார். ஆனாலும் யாக்கோபு விடாமல் வற்புறுத்துகிறார். உண்மையைச் சொல்லப்போனால், யாக்கோபுவிடம் ஏதோ ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கிறது!
இப்பொழுது யாக்கோபு நமக்கு புதிய ஏற்பாட்டில் வரும் சகேயுவை நினைவுபடுத்துகிறார். ஆண்டவர் அவரை மரத்திலிருந்து கீழே அழைத்து, அவர் வீட்டுக்குச் சென்றபோது சகேயுவிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த மரத்தில் ஏறிய அதே மனிதராக அவர் கீழே இறங்கி வரவில்லை. தான் இனி மக்களிடம் திருடுகிற அல்லது நேர்மையற்ற வரி வசூலிப்பவராக இருக்க மாட்டேன் என்று அவர் கூறினார். தான் தவறான வழியில் எதையாவது எடுத்திருந்தால், அதைத் திரும்பக் கொடுப்பது மட்டுமல்லாமல், நான்கு மடங்காகத் தருவதாகவும் கூறினார். எவ்வளவு பெரிய மாற்றம்! இல்லையா இயேசு எந்த வீட்டுக்குச் சென்றார் என்பதை அந்த வீட்டில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே ஒருவரால் சொல்லிவிட முடியும்.
நிச்சயமாக யாக்கோபுவிடமும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்னொரு காலத்தில், ஒரு கிண்ணம் கூழுக்காகச் சேஷ்டபுத்திர பாகத்தை (birthright) விலைக்கு வாங்கியவர் அவர்; ஆனால் இப்போது, தன் மந்தைகளை எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் அண்ணனுக்கு கொடுக்க முன்வருகிறார்! சொல்லப்போனால், அதைப் பெற்றுக்கொள்ளும்படி யாக்கோபு கட்டாயப்படுத்துகிறார். இறுதியில் ஏசா அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் அக்கால வழக்கப்படி, ஒருவர் வற்புறுத்திக் கொடுக்கும் பரிசை மறுப்பது அவமானமாகக் கருதப்பட்டது. எனவே, ஏசா அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டார்.
ஆதியாகமம் 33:12 வாசிக்கிறேன்
’12பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான். ‘
………………..
ஏசா யாக்கோபை நோக்கி: ‘இப்போது நீ மீண்டும் உன் சொந்த தேசத்திற்குத் திரும்பும்போது, நான் உனக்கு முன்னால் சென்று, உனக்கு வழிகாட்டியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்’ என்று கூறுகிறார்.”
யாக்கோபு வழியில் தனக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று பயந்துகொண்டிருந்தார். ஆனால், தேவன் அவருடைய எதிரியையே அவருக்குப் பாதுகாப்பாளராக மாற்றியிருக்கிறார்.
ஏசா இப்போது யாக்கோபை ஒரு எதிரியாகப் பார்க்கவில்லை; மாறாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தன் தம்பியைத் தனது பாதுகாப்பில் பத்திரமாக அழைத்துச் செல்ல விரும்புகிறார்.
ஆதியாகமம் 33:13
’13அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். ‘
……………………..
யாக்கோபு இப்போது ஒரு பொறுப்பான குடும்பத் தலைவராக யோசிக்கிறார். பலவீனமான குழந்தைகளும், விலங்குகளும் துன்பப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
நான் என் குடும்பத்தோடு பயணம் செய்கிறேன், என்னோடு சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள்; அதுமட்டுமல்ல, ஆடு மாடு மந்தைகளிலும் குட்டிகள் இருக்கின்றன. எங்களால் மிக வேகமாகச் செல்ல முடியாது. நீங்கள் உங்கள் நானூறு வீரர்களோடு வேகமாகச் செல்ல விரும்புவீர்கள்; எனவே, நீங்கள் எங்களுக்கு முன்னால் செல்லுங்கள்’ என்று கூறுகிறார்.”
ஆதியாகமம் 33:14
’14என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான். ‘
…………………..
யாக்கோபு சொல்வது என்ன? ஏசாவே, என்னால் உங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. எனக்கேற்ற வேகத்தில்தான் நான் மெதுவாக வர வேண்டும். எனவே, நீங்கள் முன்னால் செல்லுங்கள்’.”சொல்கிறார்.
ஆதியாகமம் 33:15-16
’15அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான். 16அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான். ‘
……………….
“அந்தக் காலகட்டத்தில், ஏசா தெற்கு கானான் பகுதியில் இருந்த ‘ஏதோம் தேசம்’ என்று அழைக்கப்படும் சேயீர் பகுதியில் வாழ்ந்து வந்தார். பின்னர், தந்தை ஈசாக்கு மரித்த பிறகு, அவர் சேயீர் மலைப்பகுதிக்குக் குடிபெயர்ந்தார். உபாகமம் 2:5 வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது போல,அந்த இடத்தை தேவன் ஏசாவிற்குச் சொந்தமாகக் கொடுத்தார்.
யாக்கோபுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை தேவன் கொடுத்தது போல, ஏசாவிற்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேவன் ஒதுக்கிக் கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது.
: சகோதரர்கள் இருவரும் சமாதானமாகிவிட்டாலும், அவர்களின் சொத்துக்களும் மந்தைகளும் பெருகியதால், அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் குடியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
ஏசா சேயீர் மலைக்குச் சென்ற பிறகு, அவருடைய சந்ததியினர் ‘ஏதோமியர்’ என்று அழைக்கப்பட்டனர்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 33:17
’17யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான். ‘
…………………..
இங்கே நடந்த காரியங்களைக் கவனிக்காமல் நாம் அவ்வளவு சீக்கிரம் கடந்து சென்றுவிடக் கூடாது. யாக்கோபு என்ற இந்த மனிதனிடம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன் சகோதரன் ஏசாவிற்குப் பரிசுகளை வழங்கி அவனைச் சமாளிக்க யாக்கோபு போட்ட தந்திரமான திட்டங்கள் அனைத்தும் இங்கே அர்த்தமற்றதாகிப் போனதை நீங்கள் பார்க்கலாம். யாக்கோபுவிற்கு எந்தத் தீங்கும் செய்யாதபடி லாபானின் இதயத்தை தேவன் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அதேபோல யாக்கோபை ஏற்றும்கொள்ளும்படி ஏசாவின் இதயத்தையும் தேவன் மாற்றியிருந்தார். இப்பொழுது யாக்கோபுக்கு இருபுறமிருந்தும் முன்னால் ஏசா, பின்னால் லாபான் இருவருடனும் சமாதானம் கிடைத்துவிட்டது.
ஏசாவிடமே ஏராளமான பொருட்கள் இருந்ததால், அவருக்கு யாக்கோபுவின் பரிசு தேவைப்படவில்லை. ஆனால் யாக்கோபு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், ஒரு மரியாதையாக அவர் அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டார். இந்தச் சகோதரர்கள் இருவருமே தங்கள் சமாதானத்தில் மிகவும் தாராள குணத்தோடும் உண்மையோடும் இருப்பதாகத் தெரிகிறது. அதைச் சந்தேகிக்க நமக்கு எந்தக் காரணமும் இல்லை. ஏசாவும் இப்போது செல்வாக்கோடும் செழிப்போடும் இருக்கிறார், மேலும் அவர் தனது சேஷ்டபுத்திர பாகத்திற்கு (Birthright) எப்போதுமே பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்பதால், தன் இரட்டைச் சகோதரனுடன் அவர் சமாதானமாவதற்கு வேறு எந்தத் தடையும் இருக்கவில்லை.
இப்பொழுது யாக்கோபின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான பொற்காலம் தொடங்குகிறது என்று சொல்லலாம். ஒருபுறம் லாபான் சமாதானமானார், மறுபுறம் ஏசாவும் அவரோடு உறவாடினார். தேவன் இவை அனைத்தையும் யாக்கோபுக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்தார். ஒருவேளை யாக்கோபு தனது சொந்த தந்திரங்களையும், சுயநலத்தையும் மட்டுமே நம்பியிருந்தால், அவர் ஒரு கொடூரமான மரணத்தைச் சந்திக்க நேரிட்டிருக்கும். இன்னும் சில காலம் கழித்து யாக்கோபு தனது கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அதில் தேவனுடைய கரம் இருந்ததை உணர்ந்து, தேவனுக்கு மகிமை செலுத்துவார். இருந்தாலும் அவர் விதைத்த தீய செயல்கள் இன்னும் முழுமையான அறுவடையைத் தர வேண்டியிருக்கிறது. அவர் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அவருக்குத் தெரியாமலேயே இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றன.
ஏசா தனது வீரர்களுடன் சேயீர் பகுதிக்குச் செல்கிறார்; இப்போதைக்கு அவரைக் குறித்து பார்ப்பதை நிறுத்திக் கொள்வோம். ஆனால், 35-ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கப்போகிறபடி, தனது தந்தை ஈசாக்கின் அடக்க ஆராதனைக்காக அவர் மீண்டும் வருவார்.
சரி இப்பொழுது ஆதியாகமம் 33:18-19 பாருங்கள்
’18யாக்கோபு பதான்அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். 19தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, ‘
………………….
யாக்கோபு பெத்தேலுக்குச் செல்லாமல், சுக்கோத்திலும் சாலேமிலும் தங்கியதற்காகச் சிலர் அவரை விமர்சிப்பதுண்டு. ஆனால், உண்மையில் இந்தச் சமயத்தில் யாக்கோபிடமிருந்து நாம் அளவுக்கு அதிகமாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அவர் ஊனமுற்றிருக்கிறார், இப்போதுதான் தனது ஆன்மீகக் கால்களால் நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.
ஆதியாகமம் 33:20
’20அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.’
…………………..
தன் தாத்தா ஆபிரகாம் சென்ற இடமெல்லாம் பலிபீடம் கட்டுவதைப் போலவே, யாக்கோபும் இங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார். இதில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், யாக்கோபு தனது புதிய பெயரை இறைவனின் பெயரோடு இணைத்துப் பார்க்கிறார். அவர் அதற்கு ‘எல்-எலோஹே-இஸ்ரவேல்’ என்று பெயரிடுகிறார்; இதற்கு “தேவனே, இஸ்ரவேலின் தேவன்” என்று பொருள்.
இப்பொழுதுதான் நடக்கப் பழகிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரிடம் ஏற்பட்டுள்ள உண்மையான ஆன்மீக வளர்ச்சியையே இது காட்டுகிறது. இதை இப்படிச் சொல்லலாம்: இந்த மனிதர் பெத்தேலை நோக்கிய பயணத்தில் இருக்கிறார், ஆனால் இன்னும் அங்கு போய்ச் சேரவில்லை. அதற்கு முன், அவர் சுக்கோத்திற்குப் பயணம் செய்கிறார்.
அடுத்த பேதாராய்ச்சி நேரத்தில் நாம் ஆவியாகவும் 34 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம் அதற்கு முன் சில காரியங்களை கவனிப்போம்.
உண்மையைச் சொல்லப்போனால், சாலேமில் தங்கியது யாக்கோபு செய்த ஒரு தவறு. ஏனெனில், அங்கே அவருடைய குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய அவமானம் ஏற்படப்போகிறது. லேயாளின் மூலம் பிறந்த யாக்கோபின் மகளான தீனாள், ஏவியனான ஏமோரின் மகன் சீகேமினால் தீட்டுப்படுத்தப்படுகிறாள். இதற்குப் பழிவாங்கும் விதமாக, தீனாளின் உடன் பிறந்த சகோதரர்களான சிமியோனும் லேவியும், அந்த நகரத்தில் இருந்த ஆண்கள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்கள்.
இந்தச் செயலை நியாயப்படுத்த முடியாது; இது யாக்கோபின் குடும்ப வரலாற்றில் ஒரு கறை. லாபானை விட்டு ஆரான் தேசத்திலிருந்து யாக்கோபு ஏன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தேவன் விரும்பினார் என்பதற்கு இதுவே சாட்சி. அந்தச் சூழலிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்ததில் தேவன் சரியாகவே செயல்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆதியாகமத்தில் தேவன் இரண்டு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்:
ஒன்று வம்சாவளி – அதாவது ஒரு விசுவாசி ஒரு விசுவாசியையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் தேவன் அக்கறையாக இருக்கிறார். இது தொடர்ந்து வரும் தலைமுறைகளின் தூய்மைக்கு முக்கியமானது.
இரண்டாவதாக ஒரு விசுவாசி வாழ வேண்டிய சூழ்நிலை – : ஒரு தனிநபரைச் சுற்றியுள்ள சூழ்நிலை எவ்வளவு முக்கியம் என்பதை யாக்கோபின் வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். யாக்கோபிற்குப் பெரிய குடும்பம் இருந்தது; 12 மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களும் இருந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தில் தீனாளின் பங்கு இருப்பதால் மட்டுமே அவள் பெயர் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதியாகமப் புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் உண்டு: அது அந்தக் குடும்பங்களுக்குள் இருந்த பிரச்சினைகள். அதை நீங்கள் கவனித்தீர்களா?
ஆபிரகாமின் குடும்பத்தில்: அங்கே பிரிவினையும் போராட்டமும் இருந்தது.
ஈசாக்கின் குடும்பத்தில்: அங்கும் சண்டைகளும் சிக்கல்களும் இருந்தன. ஈசாக்கிற்கு ஏசாவின் மேல் தனிப்பிரியம், ரெபெக்காளுக்கோ தன் மகன் யாக்கோபின் மேல் அதிகப் பிரியம் — இது அந்தக் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கியது.
யாக்கோபின் குடும்பத்தில்: இப்போது யாக்கோபின் குடும்பத்திலும் இதேபோன்ற மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாவதை நாம் பார்க்கப்போகிறோம்.
ஆதியாகமப் புத்தகத்தில் சிறிதும் அழகற்ற மூன்று அதிகாரங்கள் இருக்கின்றன, அவை அனைத்தும் யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட லாபானின் மூத்த மகளான லேயாளின் பிள்ளைகளைப் பற்றியவை. பலதார மணத்தை தேவன் அங்கீகரிப்பதில்லை என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு யாக்கோபின் மேல் திணிக்கப்பட்டது என்பது உண்மைதான் ஆனால், எந்த வகையிலும் அதைச் சரியானதாக ஆக்கிவிடாது—யாக்கோபும் அதற்கு உடன்பட்டுப்போனார். இந்தப் பகுதியில் லேயாளின் பிள்ளைகள் அனைவரும் பாவத்தில் ஈடுபட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அவளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள் இருந்தார்கள்.
இந்த அதிகாரத்தில் அது சிமியோன் மற்றும் லேவி. / 35-ஆம் அதிகாரத்தில் நாம் மற்றொரு மகனான, முதற்பேறான ரூபனிடம் வருகிறோம். 38-ஆம் அதிகாரத்தில் அது யூதாவாக இருக்கும். லேயாளின் மகன்கள் ஒவ்வொருவரும் மிகவும் மோசமானவர்களாக மாறினார்கள், அவர்களுடைய வாழ்க்கையில் வெளிப்படையான பாவம் இருந்தது.
இந்தக் குடும்பங்கள் அனைத்திலும் பெரும் சண்டைகள் இருந்ததை நாம் ஏற்கனவே கவனித்திருக்கிறோம், ஆனால் இப்போது மற்றொரு அம்சம் உள்ளே நுழைந்திருக்கிறது. ஆபிரகாம் அல்லது ஈசாக்கின் குடும்பத்தில் இல்லாத ஒரு அருவருப்பான தன்மையும், தரம் தாழ்ந்த நிலையும் யாக்கோபின் குடும்பத்திற்குள் ஊடுருவியிருக்கிறது. அவர்களுக்குப் பெரும் சிரமங்களும் பல பிரச்சினைகளும் இருந்தன, ஆனால் யாக்கோபின் குடும்பத்தில் நாம் காண்பது போன்ற எதுவும் இல்லை. மீண்டும் சொல்கிறேன், தேவன் இந்த மனிதனாகிய யாக்கோபையும் அவனது குடும்பத்தையும் லாபானின் வீட்டிலிருந்து, அந்தச் சூழலிலிருந்து வெளியேற்ற விரும்பினார், ஏனென்றால் அந்தச் சூழ்நிலையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த மோசமான பாவங்களுக்குப் பின்னணியாக இருந்தது.
யாக்கோபு மற்றும் ஏசாவின் சந்திப்பு, கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்வில் தேவன் செய்யும் இரண்டு மகத்தான காரியங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது:
1. தேவன் இருதயங்களை மாற்றுகிறவர்
யாக்கோபு தன் அண்ணன் ஏசாவைக் குறித்து மிகுந்த அச்சத்தில் இருந்தார். ஆனால், யாக்கோபு தேவனைச் சந்தித்த அந்த ஒரு இரவு, அவருடைய பயத்தை மாற்றியது மட்டுமல்லாமல், மறுபுறம் ஏசாவின் இருதயத்தையும் மாற்றியிருந்தது. பழிவாங்கத் துடித்த ஏசா, தழுவி அணைக்கும் சகோதரனாக மாறினார்.
இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: நம்முடைய சூழ்நிலைகளை விடவும், மனிதர்களின் மனதை விடவும் தேவன் பெரியவர். நாம் தேவனிடம் சரணடையும்போது, அவர் நமக்காக நம்முடைய எதிரிகளையும் சமாதானப்படுத்துகிறார்.
2. அடுத்ததாக வளர்ச்சி என்பது ஒரு பயணம் (Process)
யாக்கோபு ஒரே நாளில் ஒரு முழுமையான பரிசுத்தவானாக மாறிவிடவில்லை. அவர் பெத்தேலை நோக்கிப் பயணிக்கிறார், ஆனால் வழியில் சுக்கோத்திலும் சாலேமிலும் தங்குகிறார். அவர் இன்னும் “ஆன்மீக ரீதியாக நடக்கப் பழகும் ஒரு குழந்தை” போலவே இருக்கிறார்.
இன்று நம்முடைய வாழ்க்கையிலும் சில பலவீனங்கள் இருக்கலாம். “ஏன் என்னால் இன்னும் முழுமையாக மாற முடியவில்லை?” என்று நாம் சோர்ந்து போகலாம். ஆனால், தேவன் நம்முடைய மெதுவான வளர்ச்சியைக் கண்டு நம்மைத் தள்ளிவிடுவதில்லை. அவர் நம்மைப் பொறுமையோடு வழிநடத்துகிறார்.

மேலும், யாக்கோபின் குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களும், லேயாளின் பிள்ளைகளிடம் காணப்பட்ட பாவங்களும் நமக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றன. பலதார மணம் மற்றும் தவறான சூழலில் வாழ்வது போன்ற தவறான முடிவுகள், தலைமுறைகளை பாதிக்கும் என்பதை வேதம் மறைக்காமல் காட்டுகிறது. ஆனாலும், இவ்வளவு குழப்பமான ஒரு குடும்பத்திலிருந்தே தேவன் “இஸ்ரவேல்” எனும் தேசத்தை உருவாக்கினார்.
: நம்முடைய கடந்த காலத் தவறுகள் அல்லது நம் குடும்பப் பின்னணி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், நாம் தேவனிடம் திரும்பும்போது அவர் நம்மை ஒரு “புதிய மனிதனாக” மாற்றுகிறார்.
யாக்கோபு கட்டிய பலிபீடத்திற்கு ‘எல்-எலோஹே-இஸ்ரவேல்’ (தேவனே, இஸ்ரவேலின் தேவன்) என்று பெயரிட்டார். “ஆபிரகாமின் தேவன்” என்றும் “ஈசாக்கின் தேவன்” என்றும் சொல்லிக்கொண்டிருந்த யாக்கோபு, இப்போது முதல்முறையாக “என் தேவன்” என்று உரிமை பாராட்டுகிறார்.
உங்களுடைய வாழ்க்கையிலும் தேவன் இத்தகைய ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்த விரும்புகிறார். உங்கள் பலவீனங்களோடு அவரிடம் வாருங்கள்; அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உங்கள் போராட்டங்களைச் சமாதானமாக மாற்றி, உங்களை முதிர்ச்சியுள்ள பிள்ளையாக வழிநடத்துவார்.
ஜெபம் செய்வோம்.
எங்களை நேசிக்கிற என் அன்பின் பரம பிதாவே, யாக்கோபை இஸ்ரவேலாக மாற்றியவரே , எங்களிலே யார் யார் இன்னமும் யாக்கோபாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளும் புரிந்து கொள்ளும் தெளிவை எங்களுக்கு தாரும். யாக்கோபை போல உம்மை நாங்கள் உறுதியாய் பற்றி பிடித்துக் கொள்ளவும் , எங்கள் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளுக்கும் உண்மையே சார்ந்து கொள்ளவும் நீரே எங்களுக்கு உதவி செய்யும். ஏசாவையும் யாக்கோபையும் மனம் பொருந்து செய்த கர்த்தாவே , இந்த வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிற குடும்பங்களில் இருக்கும் மனதாங்கல்களை மாற்றி அமைத்து, ஒருவரை ஒருவர் மன்னித்து ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள நீரே வழிநடத்த வேண்டும் என்று ஜெபிக்கிறோம்.
ஆவிக்குரிய வளர்ச்சி என்பது ஒரு இரவிலே நடக்கும் காரியமல்ல, உம்மை விசுவாசிக்க விசுவாசிக்க நீர் எடுத்துச் செல்லும் படிக்கட்டுகள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்ததற்காக உனக்கு நன்றி செலுத்துகிறோம். யாராவது தங்கள் வாழ்க்கையிலே விழுந்து போன நிலைமையில் சோர்ந்து போய் இருப்பார்கள் என்றால் அவர்கள் மறுபடியும் உம்மிடத்தில் வந்து, வாழ்க்கையின் எல்லா காரியங்களுக்கும் உண்மையே விசுவாசிக்க தீர்மானம் எடுக்க நீர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டதற்காக உனக்கு ஸ்தோத்திரம் நீர் பதில் கொடுப்பீர் உமக்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் வல்லமை உள்ள நாமத்தினாலே மனத்தாழ்மையோடு ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top