ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 32 : 7 - 32
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 32 : 7 – 32
நிகழ்ச்சி எண்: 0050

வாசியுங்கள்

அருமையானவர்களே தொடர்ந்து இந்த வேத ஆராய்ச்சியில் பங்கு பெற்று மேலும் எங்களோடு தொடர்பு கொள்ளும் உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக கர்த்தரை துதிக்கிறோம், உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
இந்த வார்த்தைகள் இன்னும் பலருக்கு ஆசீர்வாதமாய் அமைய தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். இந்த நாளில் நாம் ஆதியாகமம் 32 ஆம் அதிகாரம் 7ஆம் வசனம் முதல் பார்க்கப் போகிறோம்.
வசிக்கிறேன், ஆதியாகமம் 32:7-8
‘7அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப்பிரித்து: 8ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்ற பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான். ‘
………………………….
யாக்கோபு நிலைமை மோசமாக இருப்பதாக நினைக்கிறார். தம்முடைய சகோதரன் ஏசா தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதால், யாக்கோபு தன்னுடைய குழுவை இரண்டாகப் பிரிக்கிறார். அவர் சாமர்த்தியமாகச் செயல்படுகிறார். தன் சகோதரன் ஒரு குழுவைத் தாக்கினால், மற்றொரு குழு தப்பித்துக்கொள்ளலாம் என்று யோசிக்கிறார்.
இப்பொழுது யாக்கோபு மனவேதனையோடு ஜெபிக்கிறார்
ஆதியாகமம் 32:9-10
‘9பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, 10அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். ‘
……………………
யாக்கோபு இப்போது தம்முடைய தந்தை ஆபிரகாமின் தேவனாகவும், ஈசாக்கின் தேவனாகவும் இருக்கிற இறைவனிடம் முறையிட்டு கதறுகிறார். யாக்கோபின் வாழ்க்கையில் இப்போது ஒரு சிறிய மாற்றத்தை நம்மால் பார்க்க முடிகிறது. முதல் முறையாக அவர், “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல என்று சொல்வதைப் பார்க்கிறோம்.
#########
கடவுளின் பார்வையில் தாம் ஒரு பாவி என்பதை அவர் இப்போதுதான் ஒப்புக்கொள்கிறார்.
பல “கிறிஸ்தவர்கள்” தங்களை பாவிகள் என்று ஒத்துக்கொள்வதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் ஒருவரை நீண்ட காலம் அறிவேன்; அவரை பாவி என்று சொன்னாலே அவருக்குக் கோபம் வரும். அவர் தாம் செய்த நற்காரியங்களைப் பட்டியலிட்டு, இப்போது தாம் பாவி அல்ல என்று வாதிடுவார். அருமையான சகோதரனே சகோதரியே, அவர் ஒரு பாவிதான். நாம் அனைவரும் கடவுளின் கிருபையால் ரட்சிக்கப்பட்ட பாவிகளே. நாம் இந்த வாழ்க்கையில் இருக்கும் வரை, நம்மிடம் இருக்கும் அந்தப் பழைய சுபாவம் பரலோகத்திற்குச் செல்லத் தகுதியற்றது.
கடவுள் அந்தப் பழைய சுபாவத்தை ஒருபோதும் பரலோகத்தினுள் அனுமதிக்க மாட்டார். உதாரணமாக, என்னால் அங்கே அப்படியே செல்ல முடியாது. அதனால்தான் கடவுள் எனக்கு ஒரு புதிய சுபாவத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது; பழையதைச் சரிசெய்யவே முடியாது. இப்போது யாக்கோபு தாம் தகுதியற்றவர் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். எந்த ஒரு மனிதனும் இந்த மனநிலயோடு கடவுளை நோக்கிச் செல்லும்போது, நிச்சயம் கடவுள் அவரோடு பேசுவார்.
யாக்கோபு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்கிறார்: “வெறும் கோலோடு இந்த யோர்தானைக் கடந்து வந்தேன்; இப்போது நான் இரண்டு கூட்டங்களாகப் பெருகியிருக்கிறேன்.” அவர் வெறும் கைத்தடியுடன் மட்டும் வந்தவர், இப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தோடு திரும்புகிறார். இதுதான் யாக்கோபு!
ஆதியாகமம் 32:11-12 பாருங்கள்
’11என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். 12தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான். ‘
………………
யாக்கோபு உண்மையிலேயே கடவுளிடம் கதறினார். அந்த இரவு அவருக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது; அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள அவரிடம் ஆஸ்பிரின் (aspirin) போன்ற எந்த மருந்தும் இல்லை.”
ஆதியாகமம் 32:13-15
’13அன்று இராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, 14இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், 15பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும் இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, ‘
…………………….
#############
அவர் தம்மிடம் இருந்த நூற்றுக்கணக்கான வெள்ளாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள் மற்றும் பசுக்களைப் பிரித்து, ஒவ்வொன்றையும் ஒரு தனிப் பரிசாகத் தம் சகோதரனுக்கு அனுப்பி வைத்தார். ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து பறித்தவர், இன்று மற்றவருக்குக் கொடுக்கும் நிலைக்கு மாறியது உண்மையாகவே ஒரு பெரிய மாற்றம் தான்.
ஆதியாகமம் 32:16
’16வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையை தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி, ‘
…………………..
இதுதான் யாக்கோபு செய்த தந்திரம். அவர் தன் சகோதரனுக்காக ஒரு மந்தையை—மிகவும் விலைமதிப்பற்ற ஒரு பரிசை—முன்னதாக அனுப்பி வைப்பார். அந்த முதல் மந்தை வந்தடைந்ததும், ஏசா “இது என்ன?” என்று கேட்பார். அதற்கு ஊழியர்கள், “உங்கள் சகோதரன் யாக்கோபு உங்களுக்கு அனுப்பிய பரிசு” என்று பதில் சொல்வார்கள்.
ஏசா அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டு இன்னும் சிறிது தூரம் பயணம் செய்யும்போது, அதே அளவுள்ள மற்றொரு மந்தையைச் சந்திப்பார். அங்கிருக்கும் ஊழியர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று அவர் கேட்பார். அவர்கள், “நாங்கள் ஏசாவைச் சந்தித்து அவருடைய சகோதரன் யாக்கோபு கொடுத்தனுப்பிய பரிசை வழங்கப் போகிறோம்” என்பார்கள். அதற்கு அவர், “நான்தான் ஏசா” என்று சொல்வார்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எப்படி, ஏசா பயணம் செய்து யாக்கோபையும் அவருடைய குடும்பத்தையும் அடையும்போது, இந்தத் தொடர் பரிசுகளால் அவருடைய மனம் நிச்சயம் மென்மையானதாய் இருக்கும்.
யாக்கோபு கடவுளிடம் ஜெபித்தார். அவரிடம், “என்னைத் தாய்நாட்டிற்குத் திரும்பச் சொன்னது நீங்கள்தான். என்னை நீங்களே பாதுகாப்பதாக வாக்குக் கொடுத்தீர்கள்,” என்று நினைவூட்டினார். ஆனால், அவர் கடவுளை உண்மையிலேயே நம்பினாரா? இல்லை. அவர் உடனடியாகத் தன் சொந்தத் திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்துவிட்டார். இது அவர் கடவுளை முழுமையாக நம்பவில்லை என்பதைக் காட்டுகிறது.
###########
நம்மில் பலரும் இதே நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.. நம்மில் பலரும் நம்முடைய சுமைகளை ஜெபத்தில் கடவுளிடம் கொண்டு செல்கிறோம். அவற்றை அவர் முன்னிலையில் இறக்கி வைக்கிறோம்—நானும் அப்படியே செய்கிறேன். ஆனால், ஜெபம் செய்து முடித்ததும், நாம் அப்படியே எழுந்து அந்த ஒவ்வொரு சின்னச் சின்னச் சுமைகளையும் மீண்டும் நம் முதுகிலேயே ஏற்றிக்கொண்டு நடக்கத் தொடங்குகிறோம். நாம் உண்மையிலேயே அவரை நம்புவதில்லை, இல்லையா? நாம் அவரை எப்படி நம்ப வேண்டுமோ, அப்படி நம்புவதில்லை. அவர் மேல் உண்மையான நம்பிக்கை வைத்திருப்போம் என்றால் நம்முடைய ஜெப தேவைகளை அவருடைய சமூகத்திலே வைத்த பிண் அதை குறித்த எண்ணம் வரும் பொழுது எல்லாம் கர்த்தாவே நீர் எனக்கு ஏற்ற நேரத்திலே சரியான பதில் தருவீர் உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்கிறவர்களாய் இருப்போம்.
ஆதியாகமம் 32:17-20
’17முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், 18நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான். 19இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி, 20இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான். ‘
………………..
ஒவ்வொரு மந்தையும் ஏசாவின் கோபத்தை அலை அலையாகத் தணிக்கும் என்று யாக்கோபு நம்பினார். ஒரு பரிசுக்குப் பின் மற்றொரு பரிசு எனத் தொடர்ந்து வரும்போது, ஏசாவின் உள்ளத்தில் இருந்த வஞ்சகம் மறைந்து, அவருக்குத் தன் சகோதரன் மீது இரக்கம் வரும் என்று அவர் கணக்குப் போட்டார்.

ஆதியாகமம் 32:21-23
’21அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று இராத்திரி பாளயத்திலே தங்கி, 22இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். 23அவர்களையும் சேர்த்து, ஆற்றைக்கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். ‘
……………………
யாக்கோபுடை ய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்ட இரவு இது. அவர் யாப்போக்கு (Jabbok) ஆற்றைக் கடந்த அந்த இடம் மிகவும் பாழடைந்த, ஆள் அரவமற்ற ஒரு பகுதி.
ஜோர்டான் நாட்டுக்காக மற்றொரு நாடு ஒரு அழகான சாலையை அமைத்திருக்கிறது. அந்தச் சாலை மட்டும் இல்லையென்றால் அந்தப் பகுதியில் இருக்கும் பல விஷயங்களை உங்களால் பார்க்க முடியாது, ஏன்னெனில் அது அவ்வளவு அடர்ந்த வனாந்தரப் பகுதி. யாப்போக்கு ஆற்றங்கரையில் ஆடுகள் தண்ணீர் குடிப்பதை இன்றும் நீங்கள் அங்கே பார்க்கலாம். இரண்டு மலைகளுக்கு இடையே இருக்கும் அந்த ஆற்றைக் கடக்கும் இடம், மிகவும் கரடுமுரடான மற்றும் மலைப்பாங்கான ஒரு பாழடைந்த இடமாகும்.
அன்று இரவு யாக்கோபு இங்குதான் வந்தார். அவர் மகிழ்ச்சியாக இல்லை; அவர் பயத்தாலும் சந்தேகத்தாலும் நிறைந்திருந்தார். அவர் செய்த பழைய தவறுகள் இப்போது அவரைத் துரத்தத் தொடங்கியிருந்தன. அவர் தம் சகோதரன் ஏசாவைத் தவறாக நடத்தியிருந்தார்.
பரம்பரை உரிமையையோ அல்லது ஆசீர்வாதத்தையோ யாக்கோபு செய்த அந்தத் தந்திரமான முறையில் பெறும்படி கடவுள் அவருக்குச் சொல்லவே இல்லை. கடவுளே அதை அவருக்கு எப்படியாவது பெற்றுத் தந்திருப்பார். அன்று இரவு யாக்கோபு தமக்கு இருந்த அனைத்தையும் யாப்போக்கு ஆற்றைக் கடக்கச் செய்தார். ஆனால், ஒருவேளை ஏசா வந்து தாக்கினால், அவர் தம்மை மட்டும் கொன்றுவிட்டுத் தன் குடும்பத்தை விட்டுவிடட்டும் என்ற எண்ணத்தில் அவர் ஆற்றின் மறுபக்கமே தங்கிவிட்டார்.
இவ்வாறு, யாக்கோபு அங்கே தனிமையாக விடப்பட்டார்.
ஆதியாகமம் 32:24
’24யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, ‘
இந்த மல்யுத்தம் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாக்கோபுதான் மற்போர் புரிந்தார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையில், யாக்கோபுக்கு யாருடனும் மற்போர் புரியும் எண்ணமே இல்லை.
அவருக்குப் பின்னால் அவரைத் துரத்திக் கொண்டு வரும் மாமா லாபான் இருக்கிறார்; அவர் நல்ல எண்ணத்தோடு வரவில்லை. அவருக்கு முன்னால் சகோதரன் ஏசா காத்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு பேருக்குமே யாக்கோபு ஈடாக முடியாது. அவர் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறார், எந்தப் பக்கம் திரும்புவது என்றே அவருக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்று இரவு அவர் மூன்றாவது ஒரு எதிரியைச் சமாளிக்க விரும்புவார் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது.
பல வருடங்களுக்கு முன்பு, டைம் என்ற ஒரு பத்திரிக்கையின் விளையாட்டுப் பகுதியில் உலகின் சிறந்த மற்போர் வீரர்கள் குறித்த வாக்கெடுப்பு பற்றி எழுதியிருந்தது. வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான மற்போர் வீரரான யாக்கோபுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த வாசகர் ஒருவர் அந்த இதழுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “யார் அந்த மற்போர் வீரர் யாக்கோபு? அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். அந்த வாசகர் யாக்கோபைப் பற்றி அதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை; அவர் வேத புத்தகத்தையும் வாசித்ததே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் ஒன்று, யாக்கோபு ஒன்றும் பெரிய மற்போர் வீரர் கிடையாது—ஆரம்பத்திலேயே இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்வோம். அன்று இரவு அவர் தனிமையாக இருக்க விரும்பியதால் மட்டுமே அங்கிருந்தார்; அவர் யாரிடமும் சண்டை போடத் தயாராக இருக்கவில்லை.
அன்று இரவு யாக்கோபுடன் மற்போர் புரிந்தது யார்? இதுதான் முக்கியமான கேள்வி. அவர் யார் என்பது பற்றிப் பல யூகங்கள் உள்ளன, ஆனால் அவர் மனுவுருவெடுப்பதற்கு முந்தைய கிறிஸ்து (Preincarnate Christ) அன்றி வேறெவரும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
ஓசியா தீர்க்கதரிசனத்தில் இதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன:
ஓசியா 12:1-5 வாசிக்கிறேன் கவனியுங்கள்
‘1எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கைபண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. 2யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். 3அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். ‘
#################################################…
“கர்த்தர் என்பது அவருடைய நாமம்”—அன்று இரவு யாக்கோபுடன் மற்போர் புரிந்தது யெகோவாவாகிய, மனுவுருவெடுப்பதற்கு முந்தைய கிறிஸ்துவைத் தவிர வேறு யாருமல்ல.
ஆதியாகமம் 32:25
’25அவனை மேற்கொள்ளாததைக்கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. ‘
……………………
பழைய சுபாவம் கொண்ட யாக்கோபு அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுப்பவர் அல்ல; அவர் அப்படிப்பட்ட மனிதரும் கிடையாது. அவர் அந்த நபரோடு கடுமையாகப் போராடினார். இறுதியில், அவரோடு மற்போர் புரிந்த அந்த நபர், யாக்கோபை முடமாக்கினார்.
ஆதியாகமம் 32:26
’26அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். ‘
……………………..
இப்பொழுது என்ன நடக்கிறது? யாக்கோபு இப்போது மற்போர் புரியவில்லை, அவர் அந்த நபரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். போராடுவதாலோ அல்லது எதிர்ப்பதாலோ கடவுளிடம் எதையும் சாதிக்க முடியாது என்பதை அவர் இப்போது கண்டுகொண்டார். அவரிடம் எதையாவது பெற வேண்டுமென்றால், நம்மை அவரிடம் முழுமையாக ஒப்படைத்து (yielding), அவரைப் பற்றிக்கொள்வது மட்டும்தான் ஒரே வழி.
ஆபிரகாம் இதைக் கற்றுக்கொண்டார், அதனால்தான் அவர் கடவுளுடைய வார்த்தைக்கு “ஆமென்” என்று சொன்னார். அவர் கடவுளை நம்பினார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆபிரகாம் தன் சொந்த பலத்தின் எல்லைக்கே சென்றுவிட்டபோது, கடவுளைத் தழுவிக்கொண்டார்.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே, நீங்களும் அந்த நிலைக்கு வரும்போதுதான் கடவுளை உண்மையாகவே நம்புகிறீர்கள். நீங்கள் அவரைப் பற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, உங்களுக்கு உதவ அவர் அங்கே காத்திருக்கிறார்.

ஆதியாகமம் 32:27-28
’27அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். 28அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். ‘
………………..
அவர் இனி யாக்கோபு அல்ல—அதாவது மற்றவர்களைப் பிடுங்குகிறவனோ அல்லது ஏமாற்றுக்காரனோ அல்ல—மாறாக அவர் இஸ்ரவேல். “நீ தேவனோடும் மனுஷரோடும் போராடி மேற்கொண்டாயே” என்பதுதான் அதற்குரிய அர்த்தம். இப்போது, இந்த மனிதரின் வாழ்க்கையில் இஸ்ரவேல் என்ற அந்தப் புதிய சுபாவம் வெளிப்படத் தொடங்கும்.
ஆதியாகமம் 32:29-30
’29அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். 30அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். ‘
………………..
நிச்சயமாக, யாக்கோபு அங்கே கண்டது சாதாரண மனிதரை அல்ல, அவர் கர்த்தருடைய தூதனை, அதாவது மனுவுருவெடுப்பதற்கு முந்தைய இயேசு கிறிஸ்துவையே (Preincarnate Christ) தரிசித்தார்.
அதனால்தான் அந்த இடத்திற்கு அவர் “பெனியேல்” என்று பெயரிட்டார். “பெனியேல்” என்றால் “தேவனுடைய முகம்” என்று பொருள். “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் பிழைத்தேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆதியாகமம் 32:31-32
’31அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான். 32அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.’
………………………….
கடவுள் யாக்கோபைப் பிடிப்பதற்காக அவரை முடமாக்க வேண்டியிருந்தது, இறுதியில் அவரைப் பிடித்தும் விட்டார். ஆரம்பத்தில் யாக்கோபு அடிபணிய மறுத்தார்—அதுதான் அவருடைய இயல்பு. அவருக்குச் சில மற்போர் நுணுக்கங்கள் தெரிந்திருந்தன; கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அந்த நபரை வீழ்த்திவிடலாம் என்று அவர் கணக்குப் போட்டார். இறுதியாகத் தன்னால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்த பிறகும், அவர் சரணடையத் தயாராக இல்லை.
அப்போது கடவுள் என்ன செய்தார்? நிச்சயமாக, தம்முடைய மேலான பலத்தினால் ஒரே நொடியில் யாக்கோபின் தோள்களைத் தரையோடு அழுத்தி அவரை அடக்கியிருக்க முடியும்—ஆனால் அப்படிச் செய்திருந்தால் யாக்கோபின் மன உறுதியை (will) அவரால் அடக்கியிருக்க முடியாது.
யாக்கோபின் நிலை அந்தச் சிறுவனின் கதையைப் போன்றது: ஒரு சிறுவனை அவனுடைய அம்மா அறையின் மூலையில் உட்காரச் சொன்னார். சிறிது நேரம் கழித்து உள்ளே சத்தம் கேட்கவே, அந்த அம்மா “வில்லி, நீ உட்கார்ந்திருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆமாம், நான் வெளியே உட்கார்ந்திருக்கிறேன், ஆனால் என் உள்ளுக்குள் நான் இன்னும் நின்று கொண்டுதான் இருக்கிறேன்!” என்றான். யாக்கோபுக்கும் அதுதான் நடந்திருக்கும். அவர் வெளியே தோற்றுப்போயிருந்தாலும், உள்ளுக்குள் இன்னும் நின்றுகொண்டுதான் இருந்திருப்பார்—அவர் இன்னும் சரணடையத் தயாராகவில்லை. அருமையானவர்களே
கடவுள் நம் உடலை மட்டும் அடக்குவதை விரும்புவதில்லை; நம்முடைய உள்ளமும் மனமும் அவருக்கு முன்பாகப் பணிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
யாக்கோபை வலுக்கட்டாயமாக அடக்குவதை விட, அவர் தம் பலவீனத்தை உணர்ந்து கடவுளையே பற்றிக்கொள்ளும் நிலைக்கு வரும்வரை கடவுள் காத்திருந்தார் என்று சொல்லலாம்.
கடவுள் அவரை எப்படிக் கையாள்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் யாக்கோபின் தொடைச் சந்தைத் தொடுகிறார். கடவுளுடைய விரலின் ஒரு சிறு தீண்டல் போதும், அந்த வலிமையான மனிதர் அப்படியே உதவியற்றவர் ஆகிவிடுகிறார். ஆனால், இங்கே கடவுள் அவருடைய தோள்களை அழுத்தி அவரை அடக்கவில்லை என்பதைப் பாருங்கள். இப்போது யாக்கோபு அவரைப் பற்றிக்கொள்கிறார்.
அந்த மனிதர், “என்னை விட்டுவிடு” என்கிறார்; ஆனால் யாக்கோபு, “இல்லை, உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்” என்கிறார். அவர் இப்போது கடவுளைக் கட்டியணைத்துக் கொள்கிறார். அவருடைய போராட்டங்களும் முரண்பாடுகளும் முடிவுக்கு வருகின்றன. இங்கிருந்து யாக்கோபு ஒரு ஆன்மீக சுபாவத்தையும், கடவுளைச் சார்ந்திருக்கும் குணத்தையும் வெளிப்படுத்தத் தொடங்குகிறார்.
இந்த மாற்றம் ஒரே நொடியில் நடந்துவிடாது. நம்முடைய நரம்பு மண்டலத்தில் சில பழக்கவழக்கங்கள் (synaptic connections) ஆழமாகப் பதிந்துவிடுவதால், நாம் பழக்கத்தின் அடிமைகளாகவே இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த மனிதர் பலமுறை தன் பழைய வழிகளுக்குத் திரும்பக் கூடும், ஆனால் இப்போது அவரிடம் ஒரு வித்தியாசமான மாற்றத்தைக் காண முடிகிறது. நாம் இவருடைய வரலாற்றை முழுமையாகப் பார்த்து முடிக்கும்போது, அவர் உண்மையிலேயே ஒரு இறைமனிதனாக (Man of God) மாறியிருப்பதை உணர்வோம்.
ஒரு மனிதன் ஒரே நாளில் முழுமையாக மாறிவிடுவதில்லை; பழைய சுபாவங்கள் எட்டிப் பார்த்தாலும், கடவுளைப் பற்றிக்கொண்ட யாக்கோபு மெல்ல மெல்ல இஸ்ரவேலாக மலர்கிறார்.
முதலில், யாக்கோபு தன் வீட்டில் இருந்தபோதும், பின்னர் ஆரான் (Haran) தேசத்தில் இருந்தபோதும், அவர் முற்றிலும் தம்முடைய சுயவிருப்பத்தின்படி (Man of the flesh) வாழ்ந்த மனிதராக இருந்தார். இங்கே பெனியேலில், யாப்போக்கு ஆற்றங்கரையில், அவர் போராடிக்கொண்டிருக்கும் (Fighting) ஒரு மனிதராக இருக்கக் காண்கிறோம். இதற்குப் பிறகு, அவர் எகிப்துக்குச் செல்லும் வரையிலான மீதமுள்ள பயணத்தில், அவர் ஒரு விசுவாசத்தின் மனிதனாக (Man of faith) மாறுகிறார். முதலில் மாம்சத்தின்படி வாழ்ந்தவர், பின்னர் போராடி மற்போர் புரிந்தவர், இறுதியாக விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்—இதுவே யாக்கோபின் பரிணாம வளர்ச்சி.
புதிய ஏற்பாட்டில், யாக்கோபின் சந்ததியில் ஒருவரான தர்சு பட்டணத்து சவுல் (பவுல்), ரோமர் 7-ஆம் அதிகாரத்தில் தம்முடைய சொந்தப் போராட்டத்தைப் பற்றி விளக்குகிறார். அவருடைய வாழ்க்கையிலும் மூன்று காலகட்டங்கள் இருந்தன. அவர் மதம் மாறியபோது, தன்னால் கிறிஸ்தவ வாழ்க்கையைச் சிறப்பாக வாழ முடியும் என்று நினைத்தார்.
இன்று பலருடைய பிரச்சனையும் இதுதான் தங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, நானே இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிடுவேன்” என்று வெளிப்படையாகவே நினைக்கிறார்கள். அது சுலபம் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள், ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை—அதுதான் கடினமான பகுதியாக இருந்தது.
அங்கேதான் பவுலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது:கவனியுங்கள் வாசிக்கிறேன் ரோமர் 7:19).
’19ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். ‘
………………
வுல் ஒரு முக்கியமான உண்மையைக் கண்டுகொண்டார்: அவருடைய பழைய சுபாவத்தில் (old nature) எப்படி நன்மை எதுவும் இல்லையோ, அதேபோல அவருடைய புதிய சுபாவத்திலும் (new nature) சொந்தமாகச் செயல்பட எந்த பலமும் வல்லமையும் இல்லை. இறுதியில் அவர், எப்படி கதறுகிறார் என்று பாருங்கள்.
ரோமர் 7:24
’24நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ‘
…………………..
பிறகு ஒரு மாற்றம் ஏற்படுகிறது 25 வது வசனம் பாருங்கள்
’25நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.’
” என்கிறார். உங்கள் நன்றிகள் அனைத்தும் அவர் மூலமாகவே இருக்க வேண்டும், ஏனென்றால் உங்களுக்குத் தேவையான உதவி அவர் மூலமாகத்தான் வரப்போகிறது. பவுல் தொடர்ந்து, “…ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்” என்கிறார்.
இதுதான் நம் எல்லோருடைய நிலையும். நமக்குள் அந்தப் பழைய சுபாவம் இருக்கிறது, அது கடவுளுக்குப் பிரியமான எதையும் செய்ய முடியாது. உண்மையில், அந்தப் பழைய சுபாவம் கடவுளுக்கு விரோதமானது என்று பவுல் விளக்குகிறார்.
நமக்குள்ளே ஒரு போராட்டம் நடக்கிறது. ஒன்று கடவுளைப் பின்தொடர விரும்புகிறது, மற்றொன்று பாவத்திற்கு அடிமையாக இருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?
யாக்கோபு எப்படித் தன் சொந்த பலத்தால் போராடித் தோற்று, இறுதியில் கடவுளைப் பற்றிக்கொண்டாரோ, அதேபோல நாமும் நம் பலவீனத்தை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைச் சாரும்போதுதான் வெற்றி பெற முடியும்.
ஆம்: மாம்சம் (Flesh) எப்போதும் கடவுளுக்கு விரோதமாகவே செயல்படும். ஆவியின் துணையின்றி நம்மால் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.
(ரோமர் 8:7-8)
‘7எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். ‘
………………
. நம்முடைய சொந்த பலத்தாலோ அல்லது மாம்ச சிந்தையாலோ நாம் ஒருபோதும் கடவுளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்ய முடியாது. பவுல் இறுதியாகத் தன்னைத் தேவ ஆவியானவரிடம் ஒப்படைத்ததன் (yielding) மூலமே வெற்றியை அடைந்தார். நியாயப்பிரமாணத்தால் செய்ய முடியாததை, ஆவியானவர் இப்போது நம் வாழ்வில் செய்ய வல்லவராக இருக்கிறார்.
இதை ஒருவர் எப்படிச் செய்ய முடியும்? நீங்களும் நானும் அவரிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்கும் வரை அவருக்குப் பிரியமானவர்களாக மாற முடியாது. “ஒப்படைத்தல்” (Yield) என்பது, மறுபடியும் பிறந்த ஒரு நபர், தன்னுடைய மன உறுதியை (will) கடவுளுடைய சித்தத்திற்கு அடக்கிக் கொடுப்பதாகும்.
யாக்கோபு சரியாக இதையேதான் செய்தார். யாக்கோபு வென்றார், ஆனால் அவர் அந்த வெற்றியைப் போராடியதாலோ அல்லது மற்போர் புரிந்ததாலோ பெறவில்லை; மாறாகத் தன்னைத் தாழ்த்தி ஒப்படைத்ததன் மூலமே பெற்றார். யாக்கோபின் வாழ்வில் நமக்கு எவ்வளவு பெரிய ஒரு பாடம் கிடைத்திருக்கிறது!
1 கொரிந்தியர் 10:11 ல் பதில் சொல்வதை கவனியுங்கள்
’11இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. ‘
யாக்கோபின் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டது போல எந்த ஒரு காரியத்திலும் நம்முடைய சொந்த அறிவினாலே திறமையினாலே நம்மால் வெற்றியோடு வாழ முடியாது என்பதை ஒத்துக் கொண்டு அவருடைய கிருபைக்காக காத்திருக்கும் பொழுது கர்த்தர் உங்களுக்கும் நிச்சயம் வெற்றி உள்ள ஒரு வாழ்க்கையை தருவார்.
மீண்டும் அடுத்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியில் சந்திப்போம் நேயர்களே அதுவரை கர்த்தருடைய மாறாத கிருபை உங்களை தொடர்ந்து தாங்குவதாக, ஆமென்.

.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top