ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 31:17-32:6
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 31:17-32:6
நிகழ்ச்சி எண்: 0049

வாசியுங்கள்

விருப்பத்தோடு வேத ஆராய்ச்சி நேரத்தில் பங்குபெறும் உங்களை அன்போடு வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம். உங்கள் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் தவறாமல் கர்த்தருடைய வார்த்தையை கற்றுக்கொள்ள எங்கள் விருப்பமுள்ளவர்களாக இருப்பதற்காக கர்த்தரை துதிக்கிறோம். இன்றும் இந்த வார்த்தை மூலமும் கர்த்தர் உங்களை வழிநடத்த ஆயத்தம் உள்ளவராய் இருக்கிறார்.

இன்று நாம் ஆதியாகமம் 31 ஆம் அதிகாரம் 17 ஆம் வசனம் முதல் தொடர்ந்து கற்றுக் கொள்வோம். வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 31:17-19
’17அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, 18தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான். 19லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். ‘
………………….

இங்கே ஒரு சுவாரசியமான விஷயம் வெளிப்படுகிறது. யாக்கோபு எழுந்து மீண்டும் மிகத் தீவிரமாய் அங்கிருந்து புறப்படுகிறார்.யாக்கோபு தன் சகோதரனுக்குத் தப்பி ஓடியபோது எப்படி வீட்டை விட்டுப் போனாறோ, அதைப் போலவே இப்போதும் போகிறார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது யாக்கோபு தன் மாமாவை விட்டுப் பிரிகிறார்—ஆனால் இந்த முறை முழுக்குற்றமும் யாக்கோபுவினுடையதல்ல. ஆனால் யாக்கோபு இதற்கு ஆயத்தமாய் இருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது. தன் ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் பிரயாணத்திற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறார்.
மேலும், “ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.”என்று வாசிக்கிறோம். அவர்கள் விக்கிரக ஆராதனை நிறைந்த ஒரு வீட்டில் இருந்தார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம். யாக்கோபின் குமாரர்கள் அங்கே வளர வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை. ஆனால், பாருங்கள், ராகேல் ஒரு விக்கிரக ஆராதனை உள்ள வீட்டிலேயே வளர்ந்தவள், அதனால் அவள் தன் தேவர்களையும் தன்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினாள். அவளுடைய அறியாமையை கவனித்தீர்களா??
யாக்கோபு கூட வாலிபனாக தன் வீட்டை விட்டு வெளியேறியபோது, தேவனிடமிருந்து தப்பி ஓடிவிடலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் பெத்தேலில் தேவன் யாக்கோபுக்குத் தரிசனமானார். தேவனிடமிருந்து தன்னால் ஓடிவிட முடியாது என்பதை அவர் கண்டுகொண்டார்.
உண்மையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது இவ்வாறு எழுதினார்: கவனியுங்கள் வாசிக்கிறேன்
(சங்கீதம் 139:7–8).
“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், இதோ, நீர் அங்கேயும் இருக்கிறீர்”
……………………
அதாவது, மரணம் கூட உங்களை கடவுளிடமிருந்து பிரிக்க முடியாது.
தொடர்ந்து (சங்கீதம் 139:9–10ஆம் வசனங்களும் இதே உண்மையைச் சொல்கிறது.
அருமையானவர்களே நீங்கள் சந்திரனுக்கே சென்றாலும் தேவனிடமிருந்து தப்பிக்க முடியாது. உங்களால் அவரை விட்டு விலகிச் செல்லவே முடியாது.
கவனியுங்கள்/ / லாபான் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கச் செல்லும் வரை யாக்கோபு காத்திருந்தார். அந்த நாட்களில் ஆடுகள் மேய்வதற்குப் பெரிய நிலப்பரப்பு தேவைப்பட்டதால், லாபான் தன் வீட்டை விட்டுப் பல மைல்கள் தூரம் சென்றிருக்கக்கூடும். இப்போதும் கூட ஆடுகளுக்குப் பெரிய மேய்ச்சல் நிலம் தேவைப்படுகிறது. லாபான் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது, தான் போகிறதை அவனுக்குச் சொல்லாமல் யாக்கோபு திருட்டளவாய் ஓடிப்போனார்.
ஆதியாகமம் 31:20-21
’20யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான். 21இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான். ‘
……………………
அவர்கள் இப்பொழுது யோர்தான் நதிக்குக் கிழக்கே இருக்கிற கீலேயாத் மலைக்கு அருகாமையில் வந்துவிட்டார்கள். அவர்கள் குறுகிய காலத்தில் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள்.

ஆதியாகமம் 31:22-23
.’22யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது. 23அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்து போய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். ‘
……………………
லாபான் யாக்கோபைப் பிடிப்பதற்காக மிகத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வந்தார். யாக்கோபைப் பொறுத்தவரை லாபான் எந்த நன்மையையும் செய்ய நினைக்கவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். சொல்லப்போனால், யாக்கோபைக் கொல்லுமளவிற்கு மிகுந்த கோபத்துடன் இருந்தார் என்று கூட சொல்லலாம். ஆனால் தேவன் குறுக்கிட்டார்— பாருங்கள் வாசிக்கிறேன்.
(ஆதியாகமம் 31:24).
’24அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். ‘
…………………….
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “நீ அவரிடம் என்ன பேசுகிறாய், என்ன செய்கிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு” என்று தேவன் எச்சரித்தார்.
என்றாலும் அதன்பின்னும் லாபான் யாக்கோபைப் பின்தொடர்ந்து வந்து பிடித்தான்.
ஆதியாகமம் 31:25.
’25லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். ‘
………………….
சொல்லப்போனால், அவர் ஒரு தந்திரக்காரன். அவன் மிகுந்த ஆவேசத்துடன், நெருப்பைக் கக்கிக்கொண்டு, யாக்கோபு கொண்டு சென்ற அனைத்துச் சொத்துக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துகொண்டிருந்தான். அவர் அநேகமாக யாக்கோபைக் கொன்றுவிட்டு, தன்னுடைய இரண்டு குமாரத்திகளையும் பேரப்பிள்ளைகளையும் திரும்ப அழைத்துச் செல்லவே விரும்பியிருப்பார்.
ஆனால், லாபான் யாக்கோபைச் சந்தித்தபோது எவ்வளவு தந்திரமாகப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள்:
(ஆதியாகமம் 31:26–27).
’26அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? 27நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. ‘
…………………….
மாமா லாபான் எவ்வளவு தந்திரமானவர், எவ்வளவு ராஜதந்திரமாகப் பேசுகிறார் பாருங்கள்! ஒரு அருமையான வழிஅனுப்பு விழாவை நடத்தவிடாமல் தடுத்ததற்காக, யாக்கோபை மனவுளைச்சலுக்கு உள்ளாக்க அவர் முயற்சி செய்கிறார். தான் ஒரு பெரிய கொண்டாட்டத்தையும், பாசமான விடைபெறுதலையும் நடத்தியிருப்பேன் என்று அவர் கூறுகிறார். அவர் அவ்வாறு சொல்லலாம், ஆனால் உண்மையில் அவர் அப்படிச் செய்திருப்பார் என்று நாம் நம்ப முடியாது. தொடர்ந்து லாபான் உணர்ச்சிகரமான விஷயங்களைப் பேசி யாக்கோபை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்.
ஆதியாகமம் 31:28
’28என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். ‘
…………………
இங்கே என் பிள்ளைகள் என்று அவர் குறிப்பிடுவது அவருடைய பேரப்பிள்ளைகளைத்தான். இந்த உலக வரலாற்றைப் பொறுத்தவரை, அவர்கள் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகிறவர்கள்.
அடுத்து லாபான் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துகிறார்:
ஆதியாகமம் 31:29
’29உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார். ‘
…………………
தான் யாக்கோபுக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் வரவில்லை என்பதையும், தேவன் தடுத்ததால்தான் தீமை செய்யாமல் இருக்கிறேன் என்பதையும் லாபான் யாக்கோபின் இடத்தில் ஒத்துக் கொள்கிறார்.
தொடர்ந்து லாபன் சொல்வதை கவனியுங்கள் :
ஆதியாகமம் 31:30
’30இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான். ‘
………………….
இப்போது அவர் திருடப்பட்ட விக்கிரகங்களைப் பற்றிக் கேட்கிறார். உண்மையில், ராகேல் அந்த விக்கிரகங்களைத் திருடினார் என்பது யாக்கோபிற்குத் தெரியாது. அவர் லாபானுக்குப் பதிலளிக்கும்போது, லாபானுக்குத் தெரிவிக்காமல் தான் ஏன் ஓடிவந்தார் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்:
ஆதியாகமம் 31:31
’31யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். ‘
…………………..
யாக்கோபிற்குத் தன் மாமனின் குணம் நன்றாகத் தெரியும். தான் போவதைச் சொல்லியிருந்தால், லாபான் தன்னுடைய மனைவிகளையும், பிள்ளைகளையும், அவருக்குச் சொந்தமான உடைமைகளையும் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதித்திருக்க மாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆதியாகமம் 31:32
’32ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான். ‘
…………………….

லாபானிடமிருந்து அவற்றை எவரும் திருடியிருக்க மாட்டார்கள் என்பதில் யாக்கோபு அவ்வளவு உறுதியாக இருந்தார். பாருங்கள், யாக்கோபு லாபானை நம்பவில்லை. ஆனால் லாபான் மட்டும் யாக்கோபை நம்பினார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. அவர்கள் இருவருக்கும் ஒருவர்பேரில் ஒருவருக்குச் துளியும் நம்பிக்கை இல்லை. இந்த இருபது ஆண்டுகால உறவு எப்படிப்பட்டதாய் இருந்திருக்கிறது கவனித்தீர்களா?
ஆதியாகமம் 31:33-35
’33அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான். 34ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. 35அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. ‘
………………….
தன்னுடைய குமாரத்திகளில் யாராவது ஒருவரிடம் அவை இருக்கும் என்று அவர் உண்மையாகவே லாபான் எதிர்பார்த்தார். ராகேலும் ஒரு புத்திசாலிப் பெண் தான், இல்லையா? அவள் தன் அப்பாவைப் போலவே தந்திரமான குணம் கொண்டவள்! அவள் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகத்தின் மீது வைக்கும் சேணத்துக்குள்ளே (camel’s furniture) வைத்துவிட்டாள். அதன் பிறகு, அதின் மீது உட்கார்ந்து கொண்டு, தன் அப்பாவிடம் ஒரு சாக்குப்போக்குச் சொல்கிறாள்.
இந்த சம்பவம் இந்தக் குடும்பத்தைப் பற்றி எவ்வளவு உண்மையான ஒரு சித்திரத்தை காட்டுகிறது பாருங்கள்.
ராகேல் தன் தகப்பனிடமிருந்து அந்தச் சுரூபங்களைத் திருடியது நாம் நினைப்பதை விட மிகவும் தீவிரமான விஷயம். அந்த நாட்களில், ஒரு குடும்பத்தின் இந்த ‘வீட்டுத் தெய்வங்களை’ (Teraphim) யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கே அந்தக் குடும்பத்தின் தலைமைத்துவமும், சொத்துக்களில் உரிமையும் உண்டு என்று கருதப்பட்டது. அதாவது, இந்தச் சிலைகள் யாக்கோபிடம் இருந்தால், லாபானுக்குச் சொந்தமான அனைத்தையும் யாக்கோபு சுதந்தரித்துக்கொள்ள முடியும்! இதனால்தான் லாபான் இவ்வளவு பதற்றமடைந்தார். யாக்கோபு ஏற்கனவே தன்னிடம் இருந்ததை விட அதிகமாகச் சம்பாதித்துவிட்டதாக லாபான் கருதினார்; எனவே தன் முழு சொத்தும் யாக்கோபிடம் போவதை லாபான் விரும்பவில்லை.
இப்போது யாக்கோபுக்குச் கொஞ்சம் தைரியம் வருகிறது. அவர்களால் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே அவை அங்கே இல்லை என்பதில் யாக்கோபு உறுதியாக இருந்தார். இப்போது அவர், தன்னைத் துரத்தி வந்த தன் மாமனாரைக் கடிந்துகொள்ளத் தொடங்குகிறார்.
கவனியுங்கள். ஆதியாகமம் 31:36
’36அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன? ‘
…………………
இப்பொழுது, யாக்கோபு தன் மனக்குறைகளை வெளிப்படுத்துகிறார். “கஷ்டங்கள் நிறைந்த கல்லூரி”யின் பாடத்திட்டத்தை அவர் வெற்றிகரமாக முடித்துவிட்டார், இப்போது அவர் தனது பட்டத்தைப் பெறுகிறார். அதாவது, இத்தனை காலமும் லாபானிடம் பட்ட அவமானங்களுக்கும் கஷ்டங்களுக்கும் இப்போது அவர் தகுந்த பதிலடி கொடுக்கிறார்.
ஆதியாகமம் 31:38
’38இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. ‘
………………….
ஆம், அந்த இருபது ஆண்டுகளில் யாக்கோபு எவ்வளவு தூரம் சுரண்டப்பட்டார் என்பதை இது காட்டுகிறது. அவருக்குத் தகுந்த உணவுகூட லாபானால் வழங்கப்படவில்லை; அதற்கும் அவரே விலை கொடுக்க வேண்டியிருந்தது.
ஆதியாகமம் 31:39

’39பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். ‘
………………..
அவருக்கு இன்சூரன்ஸ் மாதிரி எந்தவிதமான பாதுகாப்பும் இருக்கவில்லை. ஒரு ஆட்டுக்குட்டி திருடப்பட்டாலும் அல்லது காட்டு மிருகத்தால் அடித்துக் கொல்லப்பட்டாலும், அதற்குரிய நஷ்டத்தையும் யாக்கோபே தன் கையிலிருந்து கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், இந்த லாபான் ஒரு மிகக் கொடுமையான முதலாளி என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 31:40

’40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். ‘
………………….
யாக்கோபுக்கு கோடை விடுமுறை என்பதே கிடைக்கவில்லை. காலநிலை மிகக் கடுமையாகக் குளிர்ந்து போனபோதும், அவர் வெளியிலேயே தங்கி ஆடுகளையும் மற்ற மிருகங்களையும் பராமரிக்க வேண்டியிருந்தது. மந்தைகளைப் பாதுகாப்பதற்காக அவர் பல இரவுகள் தூங்காமல் விழித்திருக்க வேண்டியிருந்தது.
ஆதியாகமம் 31:41
’41இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். ‘
……………………
யாக்கோபின் வாழ்வில் நடந்தது இதுதான். தான் மிகவும் புத்திசாலி என்றும், பாவம் செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றும் அவர் நினைத்தார். ஆனால் தேவன் அவரை அப்படி விட்டுவிடவில்லை. ஏனென்றால், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7) என்பதைத் தேவன் மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.
யாக்கோபு தன் வீட்டில் தேவனுக்குப் பணிந்து நடக்க மறுத்தார்; அதனால் அவர் தன் மாமனிடம் அடிமையாகப் பணிந்து நடக்க வேண்டியிருந்தது.
யாக்கோபு கௌரவமாக ஒரு மனைவியைப் பெற வந்தவர், ஆனால் ஒரு வேலைக்காரனாக மாற்றப்பட்டார். தேவன் தலைச்சன் பிள்ளையின் உரிமையை மதிப்பவர் என்பதால், அந்த ஒழுங்குமுறை யாக்கோபின் வாழ்வில் குறுக்கிட்டது.
யாக்கோபு தன் அப்பாவை ஏமாற்றினார்; அதனால் அவர் தன் மாமனாரால் ஏமாற்றப்பட்டார்.
யாக்கோபு இளையவர் என்ற முறையை மீறி மூத்தவரைப் போல ஆசீர்வாதம் பெற முயன்றார். அதன் விளைவாக, திருமணத்தில் இளையவள் (ராகேல்) கிடைப்பாள் என்று அவர் நினைத்தபோது, மூத்தவளே (லேயாள்) அவருக்குத் தந்திரமாகக் கொடுக்கப்பட்டாள்.
யாக்கோபு, தனது அம்மாவின் யோசனைப்படி ஆட்டுக்குட்டியின் தோலைத் தன் கைகளில் போர்த்திக்கொண்டு, தன் அப்பாவை ஏமாற்றிச் சேஷ்டபுத்திர சுதந்தரத்தைப் பெற்றார். பின்னாளில், அதே ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் யோசேப்பின் பலவர்ண அங்கியைத் தோய்த்து, அவருடைய மகன்களே அவரை ஏமாற்றுவதை நாம் படிக்கப் போகிறோம்.
யாக்கோபு: தான் ஒரு பிரியமான மகன் என்று தன் தந்தையிடம் பொய் சொல்லி ஏமாற்றினார்; பின்னாளில் தமக்கு மிகவும் பிரியமான மகனாகிய யோசேப்பைக் குறித்து அவரே ஏமாற்றப்படுவார்.
உண்மையிலேயே, ஒரு மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அவன் அறுவடை செய்வான் என்பதற்கு யாக்கோபின் வாழ்க்கை இன்று வாழும் நமக்கும் ஒரு பெரிய பாடம் என்பதை மறந்து போகக்கூடாது.
ஆதியாகமம் 31:42
’42என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பி விட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். ‘
…………………
இத்தனை காலமாய் தன் மனதில் இருந்த ஆதங்கங்களை அவர் கொட்டித் தீர்த்துவிட்டார். நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, லாபானும் யாக்கோபும் சமாதானமாகப் பிரிவதற்கு முடிவு செய்கிறார்கள். இனி ஒருவருக்கொருவர் தீமை செய்யக்கூடாது என்பதற்காக ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்கிறார்கள்.
ஆதியாகமம் 31:43-44
’43அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? 44இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். ‘
…………………..
யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை ஒரு தூணாக நிறுத்தினார். பின்னர் ஒரு பெரிய கல்குவியல் சேர்க்கப்பட்டது. பின் அங்கே அவர்கள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 31:48-49
’48இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது. 49அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணி னாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; ‘
…………………
இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை இளைஞர் குழுக்களும் பிற அமைப்புகளும் ஒரு ஆசீர்வாதமான விடைபெறுதல் (benediction) போலப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது அப்படிப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், இது ஒருவரிடமிருந்து ஒருவர் திருடுவதை நிறுத்திவிட்டு, வேறு யாரிடமாவது தங்கள் கைவரிசையைக் காட்டப் போகிற இரண்டு தந்திரக்காரர்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்!
1. “மிஸ்பா” என்பதன் உண்மையான அர்த்தம்: “கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிப்பாராக” என்பது. இதன் உண்மையான பொருள் என்னவென்றால்: “நீ இனிமேல் என்னிடமிருந்து எதையும் திருடாதபடி தேவன் உன் மீது ஒரு கண்ணாக இருக்கட்டும்” என்பதுதான். சரியாக – இதைத்தான் அந்த இரு மனிதர்களும் அங்கே சொல்லிக்கொள்கிறார்கள்.
2. இதற்குப் பிறகு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். லாபானுக்கும் யாக்கோபுக்கும் இடையே ஒரு எல்லைக் கோடாக அந்தக் கல்குவியல் மிஸ்பாவிலேயே இருந்தது. “நான் உன் பக்கம் வரமாட்டேன், நீ என் பக்கம் வரக்கூடாது” என்று அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதி அளித்துக் கொண்டார்கள்.

தொடர்ந்து 32 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
ஆதியாகமம் 32 யாக்கோபின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாகும், இதை அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்றும் அழைக்கலாம். இருந்தாலும், எந்த வகையிலும் இது யாக்கோபின் மனமாற்றம் (conversion) கிடையாது. அவர் மாம்சத்தின்படி வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், இன்னும் தேவனுடைய மனுஷனாகவே இருந்தார்.
1. இதன் காரணமாகவே, ஒருவரை அவர் கிறிஸ்தவரா இல்லையா என்று நியாயந்தீர்ப்பதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. கிறிஸ்தவர்கள் போலத் தெரியாத பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் விசுவாசிகளாக இருக்க வாய்ப்புண்டு. அவர்கள் கிறிஸ்தவர்களா இல்லையா என்பது கர்த்தருடைய கையில் உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்களைப் போல நடந்துகொள்வதில்லை, அவ்வளவுதான்; அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.
2. இந்த யாக்கோபும் அத்தகைய ஆதாரங்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை. தேவன் அவருக்குத் தரிசனமான சில அபூர்வமான தருணங்களில் மட்டும் அவர் ஓரளவுக்குப் செயல்பட்டார் அவ்வளவுதான்.
உலகிற்கு முன்பாக தேவனுடைய பிரதிநிதியாகவும் சாட்சியாகவும் இருக்க வேண்டிய யாக்கோபு, ஒரு மோசமான சாட்சியாகவே வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் அப்படியே தொடர்ந்து வாழ தேவன் அனுமதிக்கவில்லை. எனவே, தேவன் அவரோடு இடைபடப் போகிறார். உண்மையைச் சொல்லப்போனால், யாக்கோபை வழிக்குக் கொண்டு வர தேவன் அவரை ஊனமாக்க வேண்டியிருந்தது.
கர்த்தர் நம்மை ஒழுங்குபடுத்துகிறார்: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து…” (எபிரெயர் 12:6). இதுவே அவருடைய வழிமுறை. அவர் இப்படித்தான் நம்மைப் பக்குவப்படுத்துகிறார்.
லோத்துவைப் பார்த்தால் அவர் தேவனுடைய பிள்ளை போலத் தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நீதிமான் என்று 2 பேதுரு 2:7-8 பேதுரு குறிப்பிடுகிறார்;
லோத்தும் சோதோம் கொமோராவின் அக்கினியிலிருந்து தப்பினார், ஆனால் கர்த்தர் அவரைச் சோதனையாகிய அக்கினிக்குள் நடத்தினார்.
இதுதான் யாக்கோபின் அனுபவமும் கூட. அவர் ‘கஷ்டங்கள் நிறைந்த கல்லூரியில்’ (College of Hard Knocks) தனது பட்டத்தைப் பெற்றார். மாமா லாபான் அந்தக் கல்லூரியின் தலைவராகவும் (President) முதல்வராகவும் (Dean) இருந்தார். பட்டமளிப்பு விழாவில், யாக்கோபு மிகவும் பரிதாபகரமான ஒரு உரையை நிகழ்த்தினார்.
இந்தப் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு யாக்கோபுக்கு இருபது ஆண்டுகள் ஆனது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.
யாக்கோபு பட்டம் பெறுவதற்கான தகுதிகளை லாபான், பத்து முறை மாற்றினார். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும், யாக்கோபு மாமா லாபானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் போட வேண்டியிருந்தது, அது எப்போதும் யாக்கோபுக்கு நஷ்டத்தை விளைவிப்பதாகவே இருந்தது.
இவ்வளவு கசப்பான அனுபவங்களுக்குப் பிறகுதான் யாக்கோபு பக்குவப்பட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்ற நியதி யாக்கோபின் வாழ்வில் மிகத் தெளிவாக நிறைவேறியது.

தொடர்ந்து 32 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
யாக்கோபு இப்போது ஒரு மாபெரும் சோதனையை எதிர்கொள்கிறார். அவர் உலகிற்கு முன்பாக தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியவர் என்பதால், தேவன் அவரோடு இடைபட வேண்டியிருந்தது. இந்த 32-ஆம் அதிகாரத்தில் தேவன் யாக்கோபை நெருங்கி வருகிறார்.
இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில், ஒரு முக்கியமான வேத வசனத்தை நாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்:
ஏசாயா 40:29
’29சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். ‘
………………………..
ஆம் பிரியமானவர்களே இன்றும் நீங்கள் சோர்ந்து போகும் நேரத்திலே கர்த்தர் உங்களுக்கு பலன் கொடுத்து உங்களுடைய சத்துவத்தை பெறுக பண்ணுவார்.
ஆதியாகமம் 32:1-2
‘1யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 2யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். ‘
………………..
தேவன் இப்போது யாக்கோபுடன் நேரடியாக இடைபடத் தொடங்குகிறார். அவரை ஆவிக்குரிய கனி கொடுக்கும் நிலைக்குக் கொண்டுவரவும், உண்மையான, ஜீவனுள்ள சேவையைச் செய்யவும், அவருக்குச் சாட்சியாக நிறுத்தவும் தேவன் அவரைப் பக்குவப்படுத்துகிறார்.
ஆதியாகமம் 32:3-5
‘3பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து: 4நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான். ‘
………………..
இந்த யாக்கோபு இன்னும் தந்திரமாகவே செயல்படுகிறார், இல்லையா? லாபானுடன் அவ்வளவு அனுபவப்பட்ட பிறகும் கூட, அவரால் தன் பழைய சுபாவத்தை விட முடியவில்லை. இப்பொழுது யாக்கோபு மீண்டும் தன் சொந்த தேசத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்; இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக ஏசாவைப் பார்த்தபோது, ஏசா தன்னைக் கொலை செய்ய வெறியோடு இருந்ததை நினைத்துப் பார்க்கிறார்.
எனவே யாக்கோபு தன் வேலைக்காரர்களை அனுப்பி அவர்களுக்கு எப்படிக் கட்டளையிடுகிறார் என்று பாருங்கள்: – “நீங்கள் என் சகோதரனாகிய ஏசாவிடம் செல்லும்போது, அவரை ‘என் ஆண்டவனாகிய ஏசா’ என்று கூப்பிடுங்கள்” என்கிறார். என்ன ஒரு ஆச்சரியம்! பிறகு தன்னைக் குறிப்பிடும்போது, “உமது அடியான் யாக்கோபு” என்று சொல்லச் சொல்கிறார்.
யாக்கோபு இதற்கு முன்பு இப்படிப் பேசினதே இல்லை. அவர் சேஷ்டபுத்திர சுதந்தரத்தைப் பெற தந்திரம் செய்தவர், ஆசீர்வாதத்தைத் திருடியவர். அவர் ஒரு ஏமாற்றுக்காரராக (rascal) இருந்தார், ஆனால் இப்போது அவருடைய பேச்சு வேறாக இருக்கிறது. மாமா லாபானிடமிருந்து அவர் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நிச்சயமாய் நம்பலாம்.
ஆதியாகமம் 32:6
‘6அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள். ‘
…………………
இந்தச் செய்தி பாவம் அந்த யாக்கோபை முற்றிலும் பயப்பட வைத்துவிட்டது, ஏனென்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று அவருக்குத் தெரியவில்லை. ஏசா அந்த வேலைக்காரர்களிடம் தனது எண்ணம் என்ன என்பதைத் துளியும் வெளிப்படுத்தவில்லை.
யாக்கோபு அந்த வேலைக்காரர்களைத் துருவித் துருவி விசாரித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்: “அவன் பேச்சில் ஏதேனும் பகைமையோ, கசப்போ அல்லது என் மீது வெறுப்போ இருந்ததை நீங்கள் கவனித்தீர்களா?” என்று கேட்டிருப்பார். அதற்கு அந்த வேலைக்காரர்களில் ஒருவன், “இல்லை, நீங்கள் அவரைச் சந்திக்க வருகிறீர்கள் என்ற தகவலைக் கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்தது போலத்தான் தெரிந்தது, இப்போது அவரே உங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்” என்று சொல்லியிருப்பார்.
ஆனால், ஏசா மகிழ்ச்சியாகத் தெரிந்தான் என்ற விஷயம் யாக்கோபுக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை. ஒருவேளை பழிவாங்குவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து ஏசா மகிழ்ச்சியடைந்திருக்கலாம் அல்லவா? எப்படியோ, பாவம் யாக்கோபு இப்போது மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்.
யாக்கோபின் இருபது ஆண்டுகால “கஷ்டங்கள் நிறைந்த கல்லூரி” (College of Hard Knocks) வாழ்க்கை நமக்கு மிக முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது. அவர் லாபானிடமிருந்து தப்பித்து வந்திருக்கலாம், ஆனால் தேவனுடைய நீதிச் சட்டத்திலிருந்து எவரும் தப்ப முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.
யாக்கோபை மாற்றுவதற்கு தேவன் அவரை “ஊனமாக்க” வேண்டியிருந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்முடைய சுயபலத்தை நம்பி ஓடும்போது, கர்த்தர் சில தடைகளையும் போராட்டங்களையும் அனுமதிக்கலாம். அது நம்மை அழிப்பதற்கு அல்ல, நம்மை மாற்றுவதற்கே.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனே சகோதரியே, நம்முடைய வாழ்க்கையும் ஒருவேளை இத்தனை காலம் யாக்கோபின் வாழ்க்கை போல இருந்திருக்கும் என்றால் நமது வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தையும் ஒரு மெய்யான ஆசீர்வாதத்தையும் கொடுக்க தேவன் காத்துக் கொண்டிருக்கிறார், எந்த எந்த காரியங்கள் மூலமாய் தேவன் நம்மோடு இடைபடுகிறார் என்பதை உணர்ந்து புரிந்து அவரை நோக்கி திரும்ப கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top