ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 3:1-6
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 3:1-6
நிகழ்ச்சி எண்: 0018

வாசியுங்கள்

பிரியமான வேத ஆராய்ச்சி அன்பர்களே, இன்று நாம் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் முதல் ஆறு வசனங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
இந்த மூன்றாம் அதிகாரத்தில் நாம் பார்க்க இருப்பது சர்ப்பம் கடவுளின் வார்த்தையை மறுக்கிறது. இதனால் ஆதாமும் ஏவாளும் கர்த்தருடைய வார்த்தையை மீறுகிறார்கள். இதன் விளைவாக எதிர்காலத்திற்கான கடவுளின் மீட்பின் கோட்பாடு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தை பலர் வேத புத்தகத்தில் உள்ள முக்கியமான அதிகாரங்களுள் ஒன்று என்று சொல்லுகிறார்கள். அனைத்து பழமை வாத விளக்க உரையாளர்களும் இதை ஒத்துக் கொள்கிறார்கள். டாக்டர் Griffith தாமஸ் என்பவர் , இதுவே வேதத்தின் ஆதாரம் அல்லது மையம் என்று சொல்லுகிறார். இதில் உங்களுக்கு சந்தேகம் வரும் என்றால் ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்களையும் வாசித்து விட்டு மூன்றாம் அதிகாரத்தை தாண்டி நான்காம் ஐந்தாம் அதிகாரங்களை வாசித்து பாருங்கள் அப்பொழுது அங்கே ஒரு இடைவெளி இருப்பதை ஒரு வெற்றிடம் இருப்பதையும் அங்கே ஏதோ நடந்திருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக ஆதியாகமம் ஒன்று மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் மனிதன் குற்றம் அற்றவனாய் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. எல்லாமே பரிபூரணமாய் இருக்கிறது. மேலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலே நல்ல ஒரு அன்பு ஐக்கியம் காணப்படுகிறது. நீங்கள் இதை படிக்கும் நிமிடத்திலேயே பொறாமை, கோபம், கொலை, பொய், துன்மார்க்கம், ஊழல், கிளர்ச்சி, மற்றும் நியாய தீர்ப்பு ஆகியவற்றை தெளிவாக பார்க்க முடியும். இங்கே கேள்வி என்னவென்றால் இவை அனைத்தும் எங்கிருந்து வந்தன?? அது எங்கிருந்து தொடங்கியது? பாவம் எங்கே ஆரம்பமானது? உண்மையில் அது ஆதியாகமம் மூன்றாவது அதிகாரத்தில் தோன்றியது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பொதுவாக மனிதனை பொறுத்தவரை அது தொடங்கிய இடம் இங்கே தான்.
மூன்றாம் அதிகாரத்தைப் பற்றிய மற்றும் ஒரு உண்மையையும் உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன் இங்கே தெய்வீக சத்திய நதிகளில் பலவற்றின் ஆரம்பத்தை பார்க்க முடிகிறது. மேலும் 6 ஆயிரம் ஆண்டுகளாக நிறைவடையாத மாபெரும் நாடகம் இங்கே தொடங்குகிறது. மனுக் குலத்தின் தற்போதைய வீழ்ச்சி அடைந்த மற்றும் பாழடைந்த நிலைமையின் தெய்வீக விளக்கத்தை இங்கே நாம் பார்க்கிறோம். நமது எதிரியான பிசாசின் நுட்பமான சூழ்ச்சிகளை பற்றி இங்கே நாம் கற்றுக் கொள்கிறோம். தெய்வீக கிருபை அவனிடமிருந்து தடுக்கப்படும் பொழுது நீதியின் பாதையில் நடக்க மனிதனின் முழுமையான சக்தியற்ற தன்மையை இங்கே நாம் பார்க்க முடிகிறது. பாவத்தின் ஆன்மீக விளைவுகளை எங்கே நாம் தெளிவாக பார்க்கிறோம். மனிதன் கடவுளிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்கிறான். மேலும் குற்றவாளியான மனிதனைப் பற்றிய கடவுளின் அணுகுமுறையை இங்கே நாம் தெளிவாக உணர முடிகிறது. மனிதனின் சொந்த கைவேலையின் ஒரு சாதனத்தால், தன் அவமானத்தை மறைக்க முயலும், மனித இயல்பின் உலகளாவிய போக்கை இங்கே நாம் பார்க்க முடிகிறது. நமது மாபெரும் தேவையை பூர்த்தி செய்ய, கடவுள் செய்த கருணை உள்ள ஏற்பாட்டை பற்றியும் இங்கே நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. பரிசுத்த வேதம் முழுவதும் ஓடும் அந்த அற்புதமான சத்திய நீரோடை இங்கேதான் தொடங்குகிறது என்று சொல்லலாம். ஒரு மத்தியஸ்தர் மூலம் தவிர மனிதன் கடவுளை மீண்டும் அணுக முடியாது என்பதை இங்கே நாம் தெளிவாக கற்றுக் கொள்ள முடிகிறது.
ஆவியாகமம் மூன்றாம் அதிகாரம் முதல் பகுதியில் மனிதன் சோதிக்கப்படும் சூழ்நிலையை பார்க்கிறோம்.
வாசிக்கிறேன், ஆதியாகமம் 3:1
‘தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ‘
……………………………
இந்த வேத பகுதியை நாம் வாசிக்கும் பொழுது நம் உள்ளத்தில் எழும்பும் கேள்வி மனிதனுக்கு ஏன் இந்த சோதனை. ஆதியாகமம் முதலாம் இரண்டாம் அதிகாரங்களை நாம் வாசித்து பார்க்கும் பொழுது மனிதன் குற்றம் அற்றவனாக படைக்கப்பட்டான். ஆனால் ஆதாமும் ஏவாளும் நீதிமான்களாக படைக்கப்படவில்லை, என்பதை பார்க்கிறோம். நீதி என்றால் என்ன? நீதி என்பது சோதனையின் முன்னிலையிலும் உறுதியோடு நிற்கும் குற்றமற்ற தன்மை. சோதனை ஒன்று உங்களை வளர்க்கும் அல்லது உங்களை அழிக்கும் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒன்று சோதிக்கப்படும் பொழுது அதை மேற்கொண்டு நாம் வளர்ச்சி அடைவோம் அல்லது, சோதனைக்கு தப்பிக் கொள்ள முடியாமல் சோதனையில் விழுந்து அழிவை சந்திக்கிறோம். இந்த இரண்டில் ஒன்று எப்பொழுதும் நடைபெறுகிறது. சோதனையின் மத்தியில் மட்டுமே மனிதனுடைய குணம் வளர்ச்சி அடைய முடியும். மனிதன் ஒரு பொறுப்புள்ள உயிரினமாக படைக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் மகிமைப்படுத்தவும் கீழ்ப்படியவும் சேவை செய்யவும் தெய்வீக அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவும் பொறுப்புள்ளவனாக இருக்கிறான். மனிதன் – மனிதனை படைக்கவில்லை தேவனே மனிதனை படைத்தார். மேலும் அவர் தன்னிச்சையாக செயல்படவில்லை. அவர் மனிதனிடத்திலே நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க கூடாது ஏனென்றால் நீ அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கூறியிருந்தார்.(ஆதி2:17) ஏதேன் தோட்டத்தில் சாப்பிடுவதற்கான பழம் தரும் அந்த ஒரே ஒரு மரம் மட்டும் இல்லை. அந்த மரத்தின் கனியை சாப்பிட முடியாவிட்டால் மனிதன் பட்டினியால் இறந்து இருப்பான் என்பது அல்ல. தோட்டத்தில் மனிதன் சாப்பிடக்கூடிய கனியை கொடுக்கும் ஏராளமான மரங்கள் இருந்தன. எனவே இந்த குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிட வேண்டியது அவசியம் இல்லை. எனவே இந்த சூழ்நிலையில் மனிதனை பார்க்கும் பொழுது அவன் பொறுப்புள்ள உயிரினமாக தோன்றுவதை நாம் பார்க்கிறோம்.
சற்று முன் நான் வாசித்த ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் முதல் வசனத்தில் சர்ப்பத்தை பற்றிய ஒரு அறிமுகம் நமக்கு கிடைக்கிறது. உடனே உலகில் அவன் எங்கிருந்து வந்தான் என்ற கேள்வியை நாம் நியாயமாக கேட்கலாம். இந்த வசனத்தை நாம் பார்க்கும் பொழுது , அந்த சர்ப்பமானது இப்பொழுது நாம் பார்க்கும் சர்ப்பத்தைப் போல வழுக்கும் உயிரினமாக இங்கே காணப்படவில்லை. மேலும் அது எப்படி அங்கே வந்தது என்பது நமக்கு சொல்லப்படவில்லை. ஆனால் அது அங்கே இருந்தது என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளின் வார்த்தை பல காரியங்களை சொல்லாமல் விட்டு செல்கிறது. சர்ப்பம் சாத்தானால் பயன்படுத்தக்கூடிய ஒரு உயிரினமாய் இருக்கிறது. அதாவது சாத்தான் சர்ப்பத்தை பயன்படுத்தினான். இன்றும் சாத்தான் இப்படித்தான் செயல்படுகிறான் கவனியுங்கள் வாசிக்கிறேன்.
2 கொரிந்தியர் 11:14
‘அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ‘
………………………..
மேலும், வேதாகமத்தில் வேறு எங்கும் சொல்லப்படாத அளவுக்கு வெளிப்படுத்தின விசேஷம் சாத்தானை பற்றி அதிகம் சொல்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 12:9 பாருங்கள்.
‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். ‘
……………………………………….
இன்று நாம் நினைப்பது போல இந்த சர்ப்பம் வழுவழுப்பான ஒரு உயிரினம் அல்ல. பரிசுத்த வேதம் சாத்தானை குறித்த எந்த ஒரு படத்தையும் நமக்கு கொடுக்கவில்லை. சாத்தானை குறித்து சொல்லப்பட்டிருக்கும் மற்றும் ஒரு வசனத்தை வாசிக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:2
‘பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். ‘……………………………….
இந்த சர்ப்பம் மிகப்பெரிய திறமை கொண்ட ஒரு உயிரினம். இந்த சர்ப்பம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்பதை பற்றிய எந்த விபரமும் ஆதியாகமத்தில் நமக்கு சொல்லப்படவில்லை. ஏசாயா 14-ஆம் அதிகாரம் மற்றும் எசேக்கியேல் 28 ஆம் அதிகாரம் இந்த வலுசர்ப்பத்தின் ஆரம்பத்தை நமக்குச் சொல்கிறது. ……
ஆதியாகமம் 3:2-3
‘ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். ‘
………………………………….
பிரியமானவர்களே அன்று ஏதேன் தோட்டத்தில் அந்த சர்ப்பம் ஏன் ஏவாளை அணுகியது அது ஏன் ஆதாமை சந்தித்து பேசவில்லை?? தேவன் ஆதாமை தான் முதலிலே படைத்திருந்தார் அவர் ஆதாமின் இடத்திலே நீ தோட்டத்தின் எல்லா மரங்களில் இருந்தும் கனியை சாப்பிடலாம் என்று அவனிடத்தில் சொல்லியிருந்தார். மேலும் இந்த குறிப்பிட்ட மரத்திலிருந்து அவன் சாப்பிடக்கூடாது என்பதையும் அவனுக்கு சொல்லி இருந்தார். பார்க்கப் போனால் பெண் இரண்டாவதாக படைக்கப்பட்டிருந்தாள் எனவே அவள் இந்த தகவலை இரண்டாம் நிலையாக பெற்றால் என்று சொல்லலாம் அதாவது ஆதாம் தான் ஏவாளிடத்திலே இதை சொல்லி இருக்க வேண்டும். அதை எப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லி ஏவாளிடம் கூறினான் என்பது நமக்கு தெரியவில்லை. . ஆதாம் மூலமாய் அறிந்துகொண்டு அந்த செய்தியை குறித்து ஏவாள் எப்படிப்பட்ட தீர்மானத்தை உள்ளத்திலே வைத்திருந்தால் என்பதும் தெரியவில்லை. எனவே தான் அந்த சர்ப்பம் ஆதாமை அணுகாமல் ஏவாள் இடத்திலே வந்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் பெண் ஆணை விட நேர்த்தியாக படைக்கப்பட்டாள் என்று சொல்லலாம் அதாவது ஏவாளை பார்க்கும் பொழுதே அவளுக்கு அதிக இரக்கமும் அனுதாபமும் இருந்திருக்க வேண்டும். மேலும் அவள் ஆணை விட ஆலோசனைக்கு திறந்தவளாக இருந்திருக்கலாம். பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு ஆணை விட அதிகமாக எதையும் விசாரிக்க வேண்டும் என்ற இயல்பு இருப்பதை நீங்கள் கவனத்திருப்பீர்கள். இன்று பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக புதிய மதங்களை உருவாக்கி ஆண்களையும் அதில் வழி நடத்தி இருக்கிறார்கள். உண்மையிலே வழிபாட்டு முறைகளையும் மதங்களையும் நிறுவியவர்களில் பலர் பெண்களாக இருந்திருக்கிறார்கள். சாத்தான்- தான் என்ன செய்கிறான் என்பதை அறிந்தே செயல்படுகிறான். அவன் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள். அவன் ஏவாளிடத்தில் வந்து மிக நுட்பமான முறையிலே அவளோடு பேசுகிறான் கடவுளின் வார்த்தையின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு கேள்வியை அவளிடத்திலே கேட்கிறான்.
ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் முதல் வசனத்தின் பின்பகுதியை மீண்டும் வாசிக்கிறேன் கவனியுங்கள்.
அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ‘
…………………………….
அதாவது சாத்தான் ஏவாளுடைய உள்ளத்திலே ஒரு சந்தேகத்தை உருவாக்கி அவளுடைய ஆர்வத்தை தூண்டுகிறான் அவள் என்ன பதில் சொல்லுகிறாள் என்பதை கவனியுங்கள் .
ஆதியாகமம் 3:3
‘ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். ‘……………
இங்கே தேவன் சொல்லாத ஒரு காரியத்தை ஏவாள் சேர்த்துச் சொல்கிறாள். அதைத் தொடவும் வேண்டாம் என்று சொல்லுகிறாள். ஆனால் தேவன் இப்படி ஆதாம் இடத்தில் சொல்லவில்லை. இந்த வார்த்தையை ஏவாள் அதிகப்படுத்தி பேசினாளா அல்லது. ஏவாளின் ஆர்வங்களை கண்ட ஆதம் ஏவாளிடத்தில் இப்படி கூறி வைத்தானோ நமக்கு தெரியவில்லை.
இந்த காரணத்தினால் தான் கர்த்தருடைய வசனத்தில், எதையும் நாம் கூட்டவும் கூடாது , குறைக்கவும் கூடாது என்று பரிசுத்த வேதம் நமக்கு கட்டளையிடுகிறது. உபாகமம் 4: 2 பாருங்கள்
நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்
…………………………..
எல்லா சூழ்நிலைகளிலும் உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும் சொல்வதே சிறந்தது.
ஆதியாகமம் 3:4-5வசனக்களைப் பாருங்கள்.
‘அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ‘……………………………..
இங்கே சர்பம் ஸ்திரியை பார்த்து நீங்கள் சாவதே சாவதில்லை என்று சொல்லும் பொழுது, நீங்கள் நிச்சயமாக சாகவே சாக மாட்டீர்கள் என்ற கருத்தில் கூறுகிறது. தேவன் அப்படி செய்வார் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்? அதை அவர் செய்ய முடியாது; ஏனென்றால் அது அவருடைய அன்பையும் நன்மை செய்யும் குணத்தையுமே கேள்விக்குறியாக்கும் என்பது போல சர்ப்பம் பேசுகிறது. பிரியமானவர்களே இந்த நாட்களிலும் நமக்கு வரும் சோதனை நேரத்தில் இதே காரியத்தை சாத்தான் சொல்ல முடியும். இந்த ஒரு காரியத்தை நீ செய்வதால் தேவன் உன்னை நரகத்தில் போடப்போவதில்லை , அவர் மிகவும் அன்புள்ளவர் என்று அவர் கூறலாம் . சாத்தானுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பெயர் அவன் பொய்க்கு பிதா
நீங்கள் சாகவே சாவதில்லை என்று சொல்லும் பொழுது இங்கே சாத்தான் சொல்ல வருவது என்ன?? தேவன் உங்களை நேசிக்கிறார் என்றால் இப்படி ஒரு கட்டளையை அவர் கொடுத்திருக்க மாட்டார் ., தேவன் நீதி உள்ளவர் இல்லை என்பதை போல் சாத்தான் கூறுகிறான். அது மட்டுமல்ல, நீங்களே கடவுள்களாக இருப்பீர்கள் ஏனென்றால் நீங்கள் அதை சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார், என்று பொய் சொல்லுகிறான். இங்கே சாத்தான் தேவனுடைய பரிசுத்தத்தையே கேள்விக்குறியாக்குகிறான்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, தேவன் சொல்லாத ஒரு காரியத்தை ஏவாள் தேவன் சொல்லியது போல கூறுகிறாள். அது என்ன ? அந்த மரத்தின் கனியை தொடவும் கூடாது என்று தேவன் சொல்லியதாக பொய் சொல்கிறாள். அதாவது அவள் கடவுளுடைய வார்த்தையோடு தன்னுடைய சொந்த வார்த்தைகளையும் கூட்டி சொல்லுகிறாள். தாராள வாதிகளும் நாத்திகர்களும் கடவுளுடைய வார்த்தையில் இருந்து சில வார்த்தைகளை எடுத்துக் கொள்விடுகிறார்கள். அதற்கு எதிராக கடவுள் எச்சரிப்பு கொடுத்து இருக்கிறார். தேவனை வழிபடும் காரியத்திலும் தேவன் சொல்லாத சில காரியங்களை மக்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். அதற்கு எதிராகவும் கடவுள் நம்மை எச்சரிக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
மேலும் சிலர் கட்டளைகளை கை கொள்வதாலே இரட்சிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். அவர்களுடைய வாக்குவாதம் என்ன,? ஆம் விசுவாசத்தினாலே தான் இரட்சிப்பு: ஆனால் அதோடு கூட சில காரியங்களையும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டு அவர்கள் விரும்பும் அந்த காரியத்தையும் சேர்த்து சொல்கிறார்கள்.
யோவன் 6:29ல் இயேசு கூறுவதை கவனியுங்கள். யோவான் 6:29
‘இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். ‘
………………………………..
இது எவ்வளவு முக்கியமானது இல்லையா?
இங்கே ஆதியாகமத்தில் சர்ப்பம் மிக நுட்பமாக கடவுளுக்கு முரணாக பேசுகிறது. கர்த்தருடைய எண்ணத்தையும் வார்த்தையையும் சொல்வதற்கு பதிலாக அது தனது கருத்தை வெளிப்படுத்துகிறது. ரோமர் நிருபத்தில் எப்படி நாம் விசுவாசத்தினாலே கீழ்ப்படிய வேண்டும் இந்த உண்மை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. விசுவாசம் கீழ்படிதலுக்கு வழிவகுக்கிறது. எப்பொழுதுமே அவிசுவாசம் கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கிறது. மீண்டும்சொல்கிறேன்.( திரையில் காட்டவும்)
விசுவாசம் கீழ்படிதலுக்கு வழிவகுக்கிறது. இப்பொழுதுமே அவிசுவாசம் கீழ்ப்படியாமைக்கு வழிவகுக்கிறது.
ஆறாம் வசனம் பாருங்கள் அங்கே ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறார்கள்.
வாசிக்கிறேன். ஆதியாகமம் 3:6
‘அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். ‘
……………………………………….
அந்தக் கனியை புசிக்க கூடாது என்று தேவன் ஆதாமிடத்திலே தான் கூறியிருந்தார், ஆனால் இப்பொழுது அதே கனியை ஏவாள் கொடுத்த பொழுது ஆதாம் எப்படி அதை புசித்து இருப்பான்? ஆதாமுக்கும் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சந்தேகம் வந்ததா? என்ற கேள்வி நமக்குள் எழும்புகிறது.
அந்தக் கனியை குறித்து சர்ப்பம் சொன்ன காரியங்கள், ஏவாளின் உள்ளத்தில் ஏற்படுத்திய எண்ணங்கள் சுவாரசியமானது. முதலாவது மாம்சத்திற்கு ஒரு வேண்டுகோள் கொடுக்கிறது அதாவது அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லது என்று சொல்கிறாள். அது மட்டுமல்ல மேலும் அது பார்வைக்கு இன்பம் உள்ளதாய் இருக்கிறது, கண்களால் அதை பார்க்கும் பொழுது அதில் இருக்கும் ஒரு ஈர்ப்பு சக்தியை அவள் வெளிப்படுத்துகிறாள். இதுவும் மாம்சம் தொடர்பான ஒரு ஈர்ப்பு தன்மை மட்டுமல்ல இது மனதையும் ஈர்க்கும் ஒரு காரியம்.. பொதுவாக பெண்கள் வெளிப்பார்வைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் பொழுதும் அது எப்படி பயனுள்ளதாய் இருக்கிறதா என்பதை பார்ப்பதை விட அது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை குறித்து பல பெண்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இன்று அனேக காரியங்கள் வெளி பார்வைக்கு அவர்களை ஈர்க்கும் வண்ணமாய் இருக்கும் ஆனால், அதை வாங்கிய பிண் தான் அது எத்தனை பயனற்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அடுத்ததாக அங்கே ஏவாள் கூறும் காரியம் என்ன ? புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது, என்று சொல்கிறாள். இது மனிதனின் ஆவிக்குரிய தன்மை தொடர்பான காரியமாய் இருக்கிறது.
நற்செய்தி புத்தகங்களிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சோதனையை குறித்து வாசிக்கிறோம். மத்தேயு நான்காம் அதிகாரம், மாற்கு முதலாம் அதிகாரம் மற்றும் லூக்கா நான்காம் அதிகாரத்தில் இது விபரமாய் சொல்லப்பட்டிருக்கிறது. தனது ஊழிய காலத்திற்காக உபவாசம் இருந்து ஆயத்தமாகி கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவிடம் பிசாசு கொண்டு வந்த சோதனையும் இதே போன்றவை தான்.
இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன?
லூக்கா 4:3
‘அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். ‘
…………………….
இதுவும் உடல் ரீதியான சோதனை தான், இதே போலத்தான் சர்ப்பம் ஏவாளிடத்தில் பேசியதை கவனித்த ஏவாளும், இப்பொழுது அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லது, என்று சொல்கிறாள்.
இரண்டாவதாக இயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனையை கவனியுங்கள்.
லூக்கா 4:5-6
‘பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். ‘
இது மனதை ஈர்க்கும் ஒரு சோதனை, இதே போல தான் ஏதேன் தோட்டத்திலே சோதிக்கப்பட்ட ஏவாள், அந்த கனி பார்ப்பதற்கு இன்பமானது என்று சொல்கிறாள்.
இயேசு கிறிஸ்துவுக்கு வந்த மூன்றாம் சோதனையை கவனியுங்கள்.
லூக்கா 4:9-11
‘அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். ‘…………………….
இதுதான் ஆவிக்குரிய சோதனை, இதே போல தான் சர்ப்பம் சோதித்த பொழுது ஏவாள் உள்ளத்தில் உண்டான எண்ணம்,
புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதைப் பறித்து புசித்து தனது கணவனுக்கும் கொடுக்கிறாள்.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே பிசாசு இன்றும் இந்த விதமான தன்னுடைய தந்திரத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று நாம் திட்டமாய் சொல்லலாம். என்னிடத்திலும் உங்களிடத்திலும் இந்த அடிப்படைகளைக் கொண்டே சோதனைகளைக் கொண்டு வருகிறான். எனவே பல சமயங்களில் நாமும் ஏவாளை போல விழுந்து போகிறோம்.
இது தொடர்பாக புதிய விசுவாசிகளுக்கு யோவான் தனது கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கவனியுங்கள்.
1 யோவான் 2:16 வசனம்
‘ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். ‘
…………………………
இங்கே மாம்சத்தின் இச்சை என்று குறிப்பிடப்படுவது – அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லது என்று ஏவாள் கூறியதை நினைவுபடுத்துகிறது.
அடுத்ததாக கண்களின் இச்சையும், பார்வைக்கு இன்பமானது என்று ஏவாள் கூறியதை நமக்கு நினைவு படுத்துகிறது.
மூன்றாவதாக ஜீவனத்தின் பெருமையுமாகிய என்று சொல்லப்படுவது – புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று ஏவாள் கூறியதற்கு இணையானதாய் இருக்கிறது.
இவையெல்லாம் எப்படி இருக்கிறது? யோவான் கூறியிருப்பது போலவே – இவைகளில் எதுவும் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். ‘
இந்த பாவ சோதனைகள் எல்லாம் எங்கே இருந்து வருகிறது என்று இயேசு கூறியிருக்கிறார் தெரியுமா? இருதயத்தில் இருந்து தான் வருகிறது.
எரேமியா சொல்லும் பொழுதும், எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? என்று கேட்கிறார்.
மார்க்கு ஏழாம் அதிகாரத்தில் இயேசு கூறிய வார்த்தைகளையும் வாசிக்கிறேன்.
மாற்கு 7:20-22
‘மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். ‘
……………………………
பிசாசானவன் இருதயத்திலேயே வேண்டுதல்களை வைக்கிறான், மனிதனுடைய இருதயம் அதற்கு பதில் சொல்ல துவங்கும் பொழுது, ஏவாளின் நிலைமை தான் ஏற்படுகிறது. இன்றும் நம்மை தேவனை விட்டு தூரமாய் எடுத்துச் செல்வதற்கு – வழி தவறிச் செல்ல செய்ய அவன் பயன்படுத்தும் முறை இதுதான். இதை நாம் உணரத்தவறும்போது அவன் வெற்றி பெறுகிறான். நன்மை தீமைகளை அவர்கள் அறியத்தக்கவர்கள் ஆவார்கள் என்று அன்று பிசாசு ஏவாள் இடத்தில் கூறினான். ஆனால் நடந்தது என்ன? மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் இன்று வரை நம்மையும் தொடர்ந்து வருகிறது.
கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே, இன்று நாம் வெவ்வேறு சூழ்நிலைகளிலே வைக்கப்பட்டிருந்தாலும், நமக்கு வரும் சோதனைகள் வித்தியாச வித்தியாசமானதாய் இருந்தாலும். இந்த அடிப்படைகளைக் கொண்டே சாத்தான் நம்மை சோதிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலாவது சோதனை கண்களுக்கு வருகிறது, இதைக் குறித்து தான் டாக்டர் பில்லிகிரகம் அவர்கள் சொல்லும் பொழுது, இரண்டாவது முறை ஒரு பெண்ணை நீ பார்க்க வேண்டும் என்று வருகிற எண்ணமே உனக்கு வருகிற சோதனை என்பதை புரிந்து கொள் என்று கூறி இருக்கிறார். பார்வையில் வரும் சோதனையில் தோற்றுப் போகும் பொழுது, தொடர்ந்து அடுத்த படிக்கட்டுகளில் இறங்குவது ஒரு மனிதனுக்கு எளிதானதாய் போய்விடுகிறது. எனவே முதலாவது கண்களுக்கு வரும் சோதனையை ஜெயிப்பது மிக முக்கியமானது. இதை யோபு மிகத் தெளிவாக கூறுகிறார். யோபு 31:1 பாருங்கள்
1என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
இரண்டாவதாக பார்வையில் கண்ட காட்சிகளை சாத்தான், ஏவாளின் மனதிலே அசைபோட வைக்கிறான், மனது அந்த காரியங்களை விரும்பும்படி செய்கிறான், ஏனென்றால் மனதில் இருந்தே அத்தனை பாவங்களும் உருவாகி வெளி வருகிறது என்று இயேசு நினைப்பூட்டினார், இந்த நிலையை தாண்டி , மிக எளிதாக தேவனுக்கு கீழ்ப்படியாத செயல்களைச் செய்ய வழிநடத்தி வருகிறான்.
இன்று உங்கள் வாழ்க்கையில் இந்த மூன்று படிகளில் எந்த நிலையில் இன்று நீங்கள் சோதனையோடு போராடிக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்து உங்கள் பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டபடியினாலே,, பிசாசின் இந்த சோதனைகளை நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்பதை உணர்ந்தவர்களாய். என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு என்று உறுதி பூண்டு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே வெற்றியோடு வாழ ஆண்டவர் உங்களுக்கும் கிருபை செய்வாராக ஆமென்.

பாடல்: உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகோவா
எமில் அண்ணன்

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top