ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 30:1-31:16
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 30:1-31:16
நிகழ்ச்சி எண்: 0048

வாசியுங்கள்

பிரியமானவர்களே இன்று நாம் ஆதியாகமம் 30 ஆம் அதிகாரம் முதல் வசனம் முதல் 31 ஆம் அதிகாரம் 16ஆம் வசனம் வரைக்கும் கற்றுக் கொள்ளப் போகிறோம்.

முப்பதாம் அதிகாரத்தில், யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு; ராகேலுக்கு யோசேப்பு பிறந்தது; லாபானை விட்டுப் பிரிய யாக்கோபு ஆயத்தமாகுதல் இந்த எல்லா காரியங்களையும் பார்க்க போகிறோம்.
இந்த அதிகாரத்திற்கு நாம் வரும்போது, யாக்கோபின் பாவத்திற்கு மத்தியிலும் தேவன் கிரியை செய்வதை பார்க்கிறோம். தேவன் அவனுடைய பாவத்தினால் அல்ல, மாறாக அந்தப் பாவத்தையும் மீறிச் செயல்படுகிறார். இந்த அதிகாரத்தின் மையக்கருப்பொருள் யாக்கோபின் குடும்பமும், அவனுடைய குமாரர்களின் பிறப்பும் என்று சொல்லலாம். லாபானை விட்டு வெளியேற யாக்கோபுதிட்டமிடுகிறார், மேலும் அவனுடன் ஒரு தந்திரமான உடன்படிக்கையையும் செய்கிறார்.
ஆதியாகமம் 30:1 பாருங்கள்.
‘1ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். ‘
………………
ராகேல் ஏன் இப்படி பேசுகிறாள்? ஏனென்றால், அந்த நாட்களில் ஒரு பெண்ணிற்கு மகப்பேறு இல்லை என்றால் அது அவளுக்கு அவமானமாகக் கருதப்பட்டது; மேலும், ஒரு பெண்ணிற்கு எத்தனை அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவளுடைய கௌரவம் அந்த சமுதாயத்தில் உயர்ந்ததாகக் கருதப்பட்டது.”
ஆதியாகமம் 30:2-3
‘2அப்பொழுது யாக்கோபு ராகேலின் மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். 3அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி, ‘
………………………
யாக்கோபும் ராகேலும் அந்தக்கால வழக்கத்தையே மீண்டும் கையாளுவதை இங்கே நாம் பார்க்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? ஆபிரகாமும் சாராளும் இதையேதான் செய்தார்கள் தேவன் அன்று அதை அங்கீகரிக்கவில்லை, இப்போதும் அவர் அதை அங்கீகரிக்கப் போவதில்லை. பரிசுத்த வேதம் நமக்கு ஒரு துல்லியமான பதிவைத் தருகிறது, ஆனால் அதற்காக அதில் பதிவு செய்யப்பட்ட எல்லாவற்றையும் தேவன் அங்கீகரித்தார் என்று அர்த்தமல்ல. உண்மையில், அவர் இதை வெறுத்தார் என்பதும் மிகத் தெளிவாய் தெரிகிறது. ஆபிரகாமின் குடும்பத்தில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய அந்தப் போராட்டங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அது ஈசாக்கின் குடும்பத்திலும் இருந்தது. இப்போது யாக்கோபின் குடும்பத்திலும் அது ஏற்கனவே தொடங்கிவிட்டது—அவர் இன்னும் பலப் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க போகிறார்.
இந்த அதிகாரத்தின் அடுத்த வசனங்கள், ராகேலின் பணிப்பெண்ணான பில்காள் மூலம் யாக்கோபிற்குப் பிறந்த இரண்டு குமாரர்களைப் பற்றியும்; லேயாளின் பணிப்பெண்ணான சில்பா மூலம் பிறந்த இரண்டு குமாரர்களைப் பற்றியும்; அதன் பிறகு லேயாளுக்குப் பிறந்த இன்னும் இரண்டு குமாரர்களைப் பற்றியும் நமக்குச் சொல்கிறது.
ஆதியாகமம் 30:22-24
’22தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். 23அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், 24இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். ‘
……………………
எகிப்து தேசத்திற்குச் செல்லப்போகிற சிறுவன் இவன்தான்.இவன் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் வியக்கத்தக்க ஆளுமை கொண்டவன் என்பதால், ஆதியாகமப் புத்தகத்தின் பிற்பகுதியில் நாம் அவனைப் பின்தொடர்ந்து கவனிப்போம்.
பிற்காலத்தில் ராகேலுக்கு பென்யமீன் பிறப்பான். யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களும் மிக முக்கியமானவர்கள் என்பதால், அவர்களைப் பட்டியலிட்டு இந்த அதிகாரத்தை நாம் நிறைவு செய்வோம். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் இவர்களிடமிருந்தே உருவாகின்றன, இறுதியில் இதுவே இஸ்ரவேல் தேசமாக மாறுகிறது.
ஆதியாகமம் 30:25-26
’25ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். 26நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். ‘
……………………
“இப்போது மாமா லாபான் சொல்வதைக் கேளுங்கள்—அவர் இன்னும் தன் வேலையை முடித்துவிடவில்லை, அதை நீங்கள் உறுதியாக நம்பலாம்!” தொடர்ந்து வசனம் 27 பாருங்கள்.
ஆதியாகமம் 30:27
’27அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். ‘
……………………
கவனியுங்கள் இது மிகவும் சுவாரசியமானது. கேராரின் ராஜாவான அபிமெலேக்கு, – ஈசாக்கு தன்னோடு இருந்தபோது தான் ஆசீர்வதிக்கப்பட்டதைக் கண்டுகொண்டது உங்களுக்குஞாபகம் இருக்கலாம். இப்போது மாமா லாபான், தேவன் யாக்கோபோடு இருப்பதையும், யாக்கோபின் நிமித்தம் தன்னை கர்த்தர் ஆசீர்வதித்திருப்பதையும் கண்டுபிடித்துவிட்டார். அதனால் மாமா லாபான், “மகனே, அவசரப்பட்டு ஓடிவிடாதே; என்னை விட்டுப் போகாதே. நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், உன் சம்பளத்தை நான் உயர்த்தித் தர விரும்புகிறேன்,” என்று கூறுகிறார்.
வாசிக்கிறேன் ஆதியாகமம் 30:28
’28உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான். ‘
…………………
மாமா லாபான் எப்போது ஒரு ஒப்பந்தம் செய்தாலும், அதில் அவரே வெற்றி பெறுவார் என்பது இப்போது யாக்கோபுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது எனவே அவர் அங்கிருந்து இப்பொழுது வெளியேற விரும்புகிறார்.
ஆதியாகமம் 30:29-30
’29அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். 30நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். ‘
………………..
யாக்கோபின் புலம்பலைக் கேளுங்கள். அவர் தன் சோக கீதத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்! அவர் சொல்வதை கவனித்தீர்களா?? “உமக்காக நான் செய்த இந்த அத்தனை வேலைக்கும் எனக்குக் கிடைத்தது என்னவோ இரண்டு மனைவிகளும், அவர்களின் இரண்டு பணிப்பெண்களும், வீடு நிறைய சிறுவர்களும்தான்.” என்று சொல்கிறார். / / சொல்லப்போனால், இந்த நேரத்தில் அவருக்குப் பதினொரு மகன்கள் இருக்கிறார்கள். அவர் என்னதான் செய்வார்? அவர்களுக்கு எப்படி சாப்பாடு கொடுப்பது? அவர் சொல்கிறார், “தேவன் உம்மை ஆசீர்வதித்தார், உம்மைத் தழைக்கச் செய்தார், ஆனால் என்னிடம் எதுவுமே இல்லை.” – என்பது போல பேசுகிறார்.
ஆதியாகமம் 30:31-32 பாருங்கள்
’31அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். 32நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். ‘
………………
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், சுத்தமான இனங்கள் லாபானுக்குச் சேரும்; ஆனால் கலப்பினங்கள் அல்லது தரம் குறைந்த கால்நடைகள் யாக்கோபுக்குச் சேரும். யாக்கோபு, “இவற்றை மட்டும் எனக்குக் கொடுத்துவிடும், அதுவே எனது கூலியாக இருக்கட்டும்,” என்றார். இது லாபானுக்கு மிகவும் சாதகமான, ஒரு நல்ல திட்டமாகத் தெரிந்தது.
ஆதியாகமம் 30:33-35
’33அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான். 34அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, 35அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, ‘
…………………..
அவைகள் மற்றவைகளுடன் இனப்பெருக்கம் செய்ய முடியாது. யாக்கோபு கலப்பினங்களை (off-breeds) எடுத்துக்கொள்வார், இதன் மூலம் யாக்கோபு இனங்கள் (full breeds) மட்டுமே இணைந்து குட்டிகளை ஈனும், அவை மாமா லாபானைச் சேரும். மற்றவை யாக்கோபுக்கு சொந்தமாகும். யாக்கோபு மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்கிறார்.
ஆதியாகமம் 30:36-39
’36தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். 37பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, 38தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. 39ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. ‘
………………………
இந்த வசனங்களுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது வெறும் மூடநம்பிக்கை தவிர வேறொன்றுமில்லை என்று சொல்பவர்கள் உண்டு. மற்றவர்கள் இது ஒரு பழைய பாட்டி கதையென்றும், நிச்சயமாக இது வேத புத்தகத்தில் இருக்கக்கூடாத ஒன்று என்றும் கூறுகிறார்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையில் இது காணப்படுவதால் இது முக்கியமானது என்று நாம் கூறலாம், இதில் மரபணு காரணிகள் (genetic factors) சம்பந்தப்பட்டிருந்தன, ஆனால் இதை வெறும் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. முக்கியமான விஷயம் என்னவென்றால், கோல்களில் உரித்த வெள்ளை வரிகள் குட்டிகளை வரிவரியானவையாக மாற்றும் என்று லாபான் மற்றும் ஜேக்கப் (யாக்கோபு) இருவருமே நம்பினர். அதுதான் கதையின் முக்கிய பகுதி. ஒருவேளை நீங்கள் இதை நம்ப முடியாத அளவுக்கு புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் இந்த இரண்டு பேரும் அதை நம்பினார்கள். இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி, யாக்கோபு இங்கே தந்திரத்தைப் பயன்படுத்துகிறார். அவர் ஒரு பெரிய தந்திரக்காரராகவே இருந்து வந்திருக்கிறார், ஆனால் அவரை விடச் சிறந்த தந்திரக்காரரான ஒரு மாமாவை அவர் சந்தித்தார்; இப்போது யாக்கோபு அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சி செய்கிறார்.
இந்தக் கட்டத்தில் இதைப் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும், அடுத்த அதிகாரம் இந்த முழுச் சம்பவத்தின் மீதும் புதிய ஒரு வெளிச்சத்தைப் நமக்கு கொடுக்கப் போகிறது.
இப்போது, இஸ்ரவேல் தேசத்தின் பன்னிரண்டு கோத்திரங்களாக உருவாகப்போகும் யாக்கோபின் பன்னிரண்டு மகன்களின் விபரங்களை தாருகிறேன் கவனியுங்கள்.
லேயாளுக்குப் பிறந்தவர்கள்:
ரூபன்
சிமியோன்
லேவி
யூதா
இசக்கார்
செபுலோன்
தீனாள் (மகள்)
ராகேலின் பணிப்பெண்ணான பில்காலுக்குப் பிறந்தவர்கள்:
தான்
நப்தலி
லேயாளின் பணிப்பெண்ணான சில்பாளுக்குப் பிறந்தவர்கள்:
காத்
ஆசேர்
ராகேலுக்குப் பிறந்தவர்கள்:
யோசேப்பு
பென்யமின்
கவனியுங்கள், இந்த பன்னிரண்டு சிறுவர்களையும் கையாள்வதில் யாக்கோபுக்கு பெரும் சவால்கள் இருந்தன! மேலும், அங்கே தீனாள் என்ற ஒரு மகள் இருந்ததையும் நாம் காண்கிறோம்.
அடுத்த அதிகாரத்தில், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு தான் வாக்குறுதி அளித்த தேசத்திற்குத் திரும்புமாறும், ஆரானை விட்டு வெளியேறுமாறும் தேவன் யாக்கோபை அழைப்பதைக் பார்ப்போம். தேவன் யாக்கோபின் பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்கிறார் என்று நான் நம்புகிறேன்—அவர்கள் லாபானின் வீட்டு சூழலில் வளருவதை அவர் விரும்பவில்லை என்றும் கூறலாம்.
தொடர்ந்து 31 ஆம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை பார்ப்போம்,
இந்த அதிகாரத்தில், யாக்கோபு லாபானிடம் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுச் செல்வதைக் பார்க்கிறோம். அவர்கள் அவருக்கு ஒரு விடைபெறும் விழாவைக் கூட நடத்தவில்லை. லாபான் அவரைத் துரத்திச் சென்று பிடித்துவிடுகிறார். இறுதியில், யாக்கோபும் லாபானும் ஒருவரை ஒருவர் ஏமாற்றவோ அல்லது தீங்கு செய்யவோ கூடாது என்று ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்கிறார்கள். அதற்கு பிறகு, அவர்கள் வெளிப்புறமாக ஒரு நட்பு ரீதியான முறையிலே பிரிந்து செல்கிறார்கள்.
யாக்கோபு அந்த தேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தேவன் விரும்புவதை நாம் பார்க்கிறோம். லாபானுடைய குடும்பத்தின் தாக்கம் யாக்கோபுக்கும் அவனது வளர்ந்து வரும் குடும்பத்திற்கும் நல்லதல்ல என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அந்தச் சிறுவர்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்குத் தலைவர்களாகப் போகிறார்கள், எனவே அவர்களை அந்தச் சூழலில் இருந்து வெளியேற்றி, அவர் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்த நாடான ஆபிரகாமின் தேசத்திற்குத் திரும்ப அழைத்துச் செல்ல தேவன் ஆர்வமாக இருக்கிறார்.
நமது தேவைகளுக்கு நமக்கு ஊழியம் செய்வதற்காக தேவன் கொடுத்த திருவசனத்தின் ஒரு பகுதியில் நாம் இருக்கிறோம். இது பல வழிகளில் மிகவும் பாவியான ஒரு மனிதனைப் பற்றியும், தேவன் கைவிட விரும்பாத ஒரு மனிதனைப் பற்றியும் பேசுகிறது. இதிலிருந்து நீங்களும் நானும் தைரியம் பெற்றுக் கொள்ளலாம். நாம் அவரிடம் திரும்பி வரும் வரை கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார். அவர் எப்போதும் நம்மை ஏற்றுக்கொள்வார். யாக்கோபு போன்ற ஒருவரையும், என்னைப்போன்ற ஒருவரையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், அருமையான சகோதரனை சகோதரியே அவர் உங்களையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.
மாமா லாபானுடன் யாக்கோபு இருபது ஆண்டுகள் மிகக் கடுமையான சோதனையை அனுபவித்ததை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். மாமா லாபான் அவருக்கு “கடினமான அனுபவங்கள்” (college of hard knocks) எனும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார், தான் அனுபவித்த அனைத்து அழுத்தங்களினாலும் யாக்கோபு இப்போது திகைக்கத் தொடங்கியிருக்கிறார். இருந்தாலும், கால்நடை வளர்ப்பு தொடர்பாக லாபானுடன் அவர் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி, இப்போது மாமா லாபானை விட யாக்கோபு அதிக லாபம் பெற்று வருகிறார். இது மாமா லாபானுக்கோ அல்லது அவருடைய மகன்களுக்கோ பிடிக்கவில்லை.

ஆதியாகமம் 31:1-2
‘1பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். 2லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். ‘
…………………
கவனியுங்கள் இப்படிப்பட்ட நேரத்திலே கர்த்தர் யாக்கோபோடு பேச விரும்புகிறார்.
ஆதியாகமம் 31:3-4
‘3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். 4அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, ‘
…………………..
தேவன் யாக்கோபை அங்கிருந்து புறப்படும்படி அழைத்தார், எனவே அவர் இப்போது அதற்கான ஆயத்தங்களைச் செய்து வருகிறார். அவர் ராகேலையும் லேயாளையும் வீட்டிற்கு வெளியே ஒரு வயல்வெளியில் சந்திக்கும்படி அழைக்கிறார்; ஏனென்றால், வீட்டில் வைத்து இதைப் பற்றிப் பேசினால் ஏதேனும் ஒரு வேலைக்காரனோ அல்லது ஒருவேளை லாபானோ அல்லது அவரது மகன்களோ ஒட்டுக் கேட்டுவிடுவார்களோ என்று அவர் பயப்படுகிறார். தான் ராகேல் மற்றும் லேயாளோடு சேர்ந்து திட்டம் தீட்டுவதை அவர்கள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை.
ஆதியாகமம் 31:5-6
‘5அவர்களை நோக்கி உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். 6என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ‘
…………………………..
இந்த ஒரு விஷயத்தில் நாம் யாக்கோபுடன் உடன்படலாம், அதற்காக அவரைப் பாராட்டவும் செய்யலாம். ஏன்? அவர் கடினமாக உழைத்தார், ஆனால் இதற்கான பெருமையில் ஒரு பகுதியை நாம் லாபானுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறலாம். தன்னிடம் வேலை செய்த எவரிடமிருந்தும், தான் கொடுத்த பணத்திற்கு ஏற்ற உழைப்பை லாபான் கறாராகப் பெற்றுக்கொண்டார் என்று திட்டமாய் சொல்லலாம்.
ஆதியாகமம் 31:7
‘7உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. ‘
……………………..
இருபது ஆண்டுகால அந்தப் பணியில், வயது சென்ற லாபான் பத்து முறை யாக்கோபின் கூலியை மாற்றியிருப்பதை கவனியுங்கள்! பாவம் யாக்கோபு. ஆனால் எங்கு செல்வது என்று தெரியாமல் அவர் குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தபோது, தேவன் தலையிட்டார்.
ஆம் நண்பர்களே உங்கள் வாழ்க்கையிலும் குழப்பமான சூழ்நிலையில் கர்த்தர் உங்களோடு பேச விரும்புகிறார் என்ற சத்தியத்தை உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். மேலும் குழப்பமான சூழ்நிலைகளில் வேத வசனத்தை வாசிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ மறந்து போக வேண்டாம் ஏனென்றால் தேவன் இன்றும் அவருடைய வசனத்தின் மூலமாகவே நம்மோடு பேசுகிறார்.

ஆதியாகமம் 31:8-9
‘8புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது. 9இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். ‘
……………………
யாக்கோபு, லாபானும் அவனது மகன்களும் தன் மீது மிகுந்த பொறாமை கொள்ளும் அளவிற்கு தேவன் தன்னை ஆசீர்வதித்திருப்பதை ராகேலுக்கும் லேயாளுக்கும் விளக்குகிறார்; உண்மையில், அவர்கள் இப்போது லாபானை வெறுக்கிறார்கள்.
தற்போது, தான் அங்கிருந்து வெளியேற விரும்புவதற்கான உண்மையான காரணத்தை யாக்கோபு கூறுகிறார்—
ஆதியாகமம் 31:11-12
’11அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். ‘
……………………….
முந்தைய அதிகாரத்தில் கால்நடை வளர்ப்பில் நடந்தவை குறித்து நாம் பார்த்த கருத்துக்கள் ஒருவேளை உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இங்கே நாம் தெளிவாக பார்க்கும் சத்தியம் என்ன?? “நானே இதைச் செய்தேன்!” என்று தேவன் இங்கே கூறுகிறார். இதற்கான காரணங்களை நாம் இயற்கையான விளக்கங்களுக்குள் தேட வேண்டிய அவசியமில்லை. தேவன் அத்தகைய இயற்கை விதிகளில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருப்பார் என்று நான் நம்பினாலும், அவர் எதைப் பயன்படுத்தினார் என்று நமக்குச் சொல்லாததால், நமக்கு அது தெரியாது. இதற்குப் பல விளக்கங்கள் இருக்கலாம், நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், ஆனால் நான்: “லாபான் உனக்குச் செய்து வந்ததை நான் கண்டேன், அதனால் நான் உன்னை ஆசீர்வதித்தேன்” என்று தேவன் கூறிய உண்மையையே விரும்புகிறேன்.
ஆதியாகமம் 31:13
’13நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். ‘
……………………
லாபான் வீட்டை நோக்கி வரும்பொழுது பெத்தேலில் யாக்கோபை சந்தித்த தேவன் மீண்டும் யாக்கோபின் வாழ்க்கையில் தன்னுடைய திட்டத்தை வெளிப்படுத்தி வழி நடத்துகிறார்.
“இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ.” தேவன் அவரை ஆரானை (Haran) விட்டு வெளியேறச் சொல்கிறார்; ஏனென்றால், வளர்ந்து வரும் பதினொரு மகன்கள் அவரிடம் உள்ளனர். அவர்கள் ஏற்கனவே கற்கக்கூடாத சில காரியங்களைக் கற்கத் தொடங்கிவிட்டார்கள். ஆபிரகாமை எப்படி தவறான் ஆராதனை நிறைந்த வீட்டிலிருந்து தேவன் வெளியே கொண்டு வந்தாரோ, அதேபோல யாக்கோபையும் அவனது மகன்களையும் இந்த தவறான ஆராதனைச் சூழலிலிருந்து வெளியே கொண்டுவர தேவன் விரும்புகிறார்.
ஆதியாகமம் 31:14-15.
’14அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ? 15அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார். ‘
…………………….
அவருடைய மகள்கள் என்ற முறையில் தங்களுக்குத் தந்தையின் சொத்தில் நிச்சயமாக ஒரு பங்கு கிடைக்க வேண்டும் என்றும், அதுவே லாபானின் பகையுணர்வைக் குறைக்கப் போதுமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அருமையானவர்களே, லாபானை ஒருபோதும் நம்ப முடியாது.
துரதிர்ஷ்டவசமாக, இன்று பல கிறிஸ்தவர்கள் தங்களுடைய பணத்தையும் மற்றவர்களின் பணத்தையும் கையாளும் விதத்தைப் பார்க்கும்போது, அவர்களையும் நம்ப முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது ஒரு தனிமனிதனின் குணாதிசயத்திற்கு விடப்படும் உண்மையான சோதனை என்று நாம் கூறலாம். . உங்களை மயிர் கூச்செறியச் செய்யும் (hair stand on end) அளவுக்குப் பல கதைகளை என்னால் சொல்ல முடியும். கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவத் தலைவர்களும் பண விஷயத்தில் செய்யக்கூடாத பல காரியங்களைச் செய்கிறார்கள்.
ஆதியாகமம் 31:16
’16ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ‘
……………….
உண்மையாகவே இந்த இரண்டு பெண்களையும் நாம் பாராட்ட வேண்டும். . யாக்கோபு என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்யும்படி அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அவருக்குத் துணையாக நிற்கிறார்கள், மேலும் தங்கள் தந்தை தங்களை ஏமாற்றிவிட்டதாகவே அவர்கள் வெளிப்படையாக உணருகிறார்கள்.
இந்த நீண்ட நெடிய பயணத்தில் யாக்கோபின் வாழ்வு நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், “மனிதர்களின் தந்திரங்களை விட தேவனுடைய திட்டமே மேலானது” என்பதே. லாபான் மற்றும் யாக்கோபு ஆகிய இருவருமே தந்திரசாலிகள் என்றாலும், அவர்களுக்கு இடையே தேவன் நீதியுள்ள நடுவராகச் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.
தேவனின் இறையாண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் (God’s Sovereignty): யாக்கோபு மரக்கிளைகளைப் பயன்படுத்தித் தந்திரம் செய்தாலும், இறுதியில் தேவன் “நானே இதைச் செய்தேன்” என்று பொறுப்பேற்கிறார். நமது உழைப்புக்கு மேலாக, தேவனுடைய ஆசீர்வாதமே நம்மை உயர்த்துகிறது.
மேலும் : லாபானின் வீட்டில் நிலவிய தவறான ஆராதனை மற்றும் பொறாமைச் சூழல் யாக்கோபின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை தேவன் அறிந்தார். நாமும் ஆவிக்குரிய வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், சில பழைய மற்றும் தவறான சூழல்களை விட்டு வெளியேறத் துணிய வேண்டும்.
நாம் கற்றுக் கொண்ட இந்த வேத பகுதியில்: லாபானின் முகம் மாறியதையும், யாக்கோபு குழப்பமடைந்ததையும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. அதே தருணத்தில் கர்த்தர் யாக்கோபுக்குத் தரிசனமாகி வழி காட்டுகிறார். உங்கள் வாழ்க்கையிலும் மனிதர்கள் உங்களை வெறுக்கும்போது, தேவன் உங்களுக்காகப் பேசவும் உங்களை வழி நடத்தவும் ஆயத்தமாக இருக்கிறார்.
மேலும் லாபானைப் போல கூலியைப் பத்து முறை மாற்றும் சுபாவமோ அல்லது பணத்தைக் கையாளுவதில் நேர்மையற்ற தன்மையோ ஒரு விசுவாசிக்கு அழகல்ல. பணத்தைக் கையாளும் விதமே ஒருவனின் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காட்டும் அளவுகோல் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
யாக்கோபு ஒரு பாவியாக, தந்திரக்காரனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினாலும், தேவன் அவனைப் பெத்தேலில் சந்தித்து, அவனது இருபது ஆண்டுகால போராட்டத்திலும் அவரோடு இருந்தார். “யாரையும் நான் கைவிடுவதில்லை” என்று சொன்ன தேவன், இன்று உங்களையும் உங்கள் போராட்டங்களின் நடுவே ஆசீர்வதிக்கவும், சரியான இடத்திற்கு வழிநடத்தவும் வல்லவராயிருக்கிறார்.
உங்கள் வாழ்க்கையின் சூழ்நிலை இன்று எப்படிப்பட்டதாய் இருந்தாலும் முற்றிலுமாய் கர்த்தரை நம்பி அவரை சார்ந்து கொள்ள அவர் வழியில் நடக்க நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? நீங்கள் அப்படி செய்வீர்கள் என்றால் உங்களையும் கர்த்தர் முடிவுபரியந்தம் கரம் பிடித்து அருமையாய் நடத்திச் செல்வார். அப்படிப்பட்ட கிருபையே நீங்களும் அனுபவிக்க உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top