ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 3: 7-24
நிகழ்ச்சி எண்: 0019
வாசியுங்கள்
வேத ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கேட்கும் உங்களுக்காக கர்த்தரை துதிக்கிறோம். அவ்வப்பொழுது நீங்கள் எங்களோடு தொடர்பு கொண்டு பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளுக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறோம். உங்கள் மூலமாய் வேத ஆராய்ச்சிக்கு அறிமுகம் செய்யப்பட்ட பலர் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாரதத்தோடு தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.
இதற்கு முந்திய நிகழ்ச்சியில் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் முதல் ஆறு வசனங்களை கற்றுக் கொண்டோம். அந்த வேத பகுதியில் சாத்தான் வழக்கமாக எப்படி தந்திரமாக மனிதனை சோதிக்கிறான் என்று படித்தோம். அதே வழிமுறைகளைதான் இன்றும் அவன் பயன்படுத்துகிறான். முதலாவது கண்களுக்கு ஒரு அழைப்பு கொடுக்கிறான், இரண்டாவதாக மனதை கவரும் ஒரு காரியத்தை பற்றி கூறுகிறான். இறுதியாக ஆவிக்குரிய வாழ்க்கையை தலைகீழாய் மாற்றும் படி தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் செல்ல வழி நடத்தி விடுகிறான். எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கவும் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிசாசை அடையாளம் கண்டு அவனுக்கு எதிர்த்து நிற்கவும் கவனமாய் இருப்போம்.
இன்று நாம் ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் ஏழாம் வசனம் முதல் 24 ஆம் வசனம் வரை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
தேவன் ஆதாமிடம் தோட்டத்தின் எல்லா விருட்சங்களின் கனியையும் பூசிக்கலாம் ஆனால் தோட்டத்தில் நடுவில் இருக்கும் அந்த ஒரு மரத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் ஏவாள் தனியாக இருந்த நேரத்தில் சாத்தான் ஏவாளை ஏமாற்றி அந்த கனியை பறித்து சாப்பிட வைத்தான். அவள் சாப்பிட்டது மட்டுமல்ல தன் கணவனுக்கும் அதை கொடுத்தாள். அவனும் சாப்பிட்டான். தொடர்ந்து அங்கே என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 3:7
‘அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். ‘
…………………………………………
இங்கே அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். இது அவர்களுடைய மனசாட்சியை குறிக்கிறது. மனிதன் பாவம் செய்யும் முன்னதாக அவனுக்கு மனசாட்சி இல்லை அவன் நிரபராதி குற்றமற்றவன் என்பது தீமையை அறியாத ஒரு நிலைமை. மனிதன் மனசாட்சியை உண்டாக்கவில்லை. நம்மை குற்றம் சாட்டும் ஒருவன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்பொழுது வாழ்கிறான். கல்லூரி பேராசிரியரான ஒரு கிறிஸ்தவ மனோதத்துவ நிபுணர் இவ்வாறு கூறியிருக்கிறார். குற்ற மனசாட்சி என்பது ஒரு மனிதனுடைய உடலிலே அவனுடைய வலது கையை போல முக்கியமான ஒரு அங்கமாய் இருக்கிறது. மனோதத்துவ வழிகளினால் ஒரு மனிதன் தன் குற்ற மனசாட்சையில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்ள முடியாது, என்று கூறுகிறார்.
அடுத்து ஆதியாகமம் 3 : 7ல் நாம் வாசிப்பது என்ன?
அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
…………………….
ஏதேன் தோட்டத்திலிருந்த எந்த மரத்தின் பெயரும் நமக்கு கூறப்படவில்லை. பெயர் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ள ஒரே மரம் அத்திமரம் என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா?? நன்மை தீமை அறியத் தக்க கனியை கொண்ட மரம் ஒரு ஆப்பிள் மரம் அல்ல. அது என்ன மரம் என்று நமக்கு சொல்லப்படவில்லை. ஆதாமும் ஏவாளும் தாங்கள் நிர்வாணங்கள் என்று அத்தி இலைகளை அறையில் கட்டி கொண்டார்கள். ஆனால் அது அவர்கள் பாவத்தை மூடவில்லை. அவர்கள் தங்கள் பாவத்தை ஒத்துக் கொள்ள ஆயத்தமாக இல்லை. அதை மறைக்க முயற்சி எடுத்தார்கள் என்று நாம் சொல்லலாம். அவர்கள் தாங்கள் இழந்த நிலைமையை ஒப்புக் கொள்ள ஆயத்தமாகி அந்த நேரத்திலேயே கர்த்தரை தேடி இருப்பார்கள் என்றால் அது மிக வித்தியாசமான ஒரு காரியமாய் மாறியிருக்கும்.
இன்றய மனிதனின் நிலைமையும் இப்படியே இருக்கிறது. சமயம் என்னும் பெயரிலே மனிதன் பின்பற்றிச் செய்யும் சடங்குகள் எல்லாமே இதே போல தான் இருக்கிறது . மனிதன் தன் குற்ற உணர்வை எடுத்து போடுவதற்காக ஆலயங்களில் வந்து சடங்காச்சாரங்களை பின்பற்றி சமாதானத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான்., சன்மார்க்க வாழ்க்கை மனிதனை விடுதலை செய்யாது. இந்த இடத்தில் மற்றும் ஒரு காரியத்தையும் நாம் கவனிக்க வேண்டும், இயேசு கிறிஸ்து தனது ஊழிய காலத்தில் ஒரு அத்தி மரத்தை சபித்தார் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா? மேலும் அத்தி மரத்தைப் போல அந்த நாட்களிலே செயல்பட்டு வந்த சமயத்தை, சடங்கா சாரங்களை அவர் கண்டித்தார். சமயம் என்பது பாவத்தின் மீது போடப்படும் ஒரு போர்வையாகவே அதை மூடத்தான் பயன்படுத்தப்படுமே ஒழிய அது மனிதனின் பாவத்தை அவனை விட்டு நீக்க முடியாது. இயேசு கிறிஸ்துவிடம் வரும் மனிதனுக்கு மட்டும் பாவ மன்னிப்பு உண்டு.
இந்த சோதனையில், சாத்தான் மனிதனின் ஆத்துமாவுக்கும் கடவுளுக்கும் இடையிலே வர விரும்பினான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் அவன் மனிதனை கடவுளை சார்ந்து இருக்கும் நிலைமையில் இருந்து பிரித்து மனிதனை தன் பக்கம் சேர்த்துக் கொள்ளவும் மனிதனின் கடவுளாக மாறுவதற்கும் விரும்பினான் என்று சொல்லலாம். அன்று மாம்சத்திற்கு அடுத்த சோதனை அவனுக்கு கவர்ச்சிகரமாக இருந்திருக்காது. அன்று, சாத்தான் ஏவாளுக்கு கொடுத்த சோதனை திருடும்படியாகவோ, பொய் சொல்லும் படியாகவோ, பொருள் ஆசை கொள்ளும்படியாகவோ சோதிக்கவில்லை. மனிதன் தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கும் படியாகவே சோதிக்கப்பட்டான்.
ஒரு பணக்கார வாலிபன் ஒருவன் இயேசுவனிடத்தில் வந்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். இயேசு அவனிடத்தில் உனக்குரியவைகளை விற்று தரித்திரர்க்கு கொடுத்துவிட்டு என்னை பின்பற்றி வா என்று அவனை அழைத்தார். ஆனால் அவனைக் குறித்து அதற்கு பின் நாம் வேதத்தில் வாசிக்கிறது இல்லை? ஏன் அவன் இயேசுவை பின்பற்றி வரவில்லை. அதற்கு காரணம் என்ன? அவன் தேவனை விசுவாசிக்கவில்லை. அவன் தேவனை விசுவாசித்து இருப்பான் என்றால் அவர் சொன்னபடியே தனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்குக் கொடுத்து விட்டு அவரை பின்பற்றி வந்திருப்பான். பிரியமான சகோதரனை சகோதரியே பல சமயங்களில் நமக்கும் வரும் சோதனை தேவனை நாம் விசுவாசித்து இருக்கும் காரியங்களில், நம்முடைய நம்பிக்கையை சிதற பண்ணுவதே பிசாசின் நோக்கமாய் இருக்கும்.
இயேசு கிறிஸ்து சொன்ன உவமை ஒன்றில் களைகளைப் பற்றி அவர் பேசுகிறார். அந்த களைகள் என்பது தேவனை விசுவாசிக்காதவர்களை குறிக்கிறது. சாத்தானுடைய தந்திரமான வழிமுறைகளை கவனியுங்கள். முதலாவதாக ஏவாள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதாக கண்டாள் / இரண்டாவதாக அது பார்வைக்கு இன்பமும் மூன்றாவதாக புத்தியை தெரிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாக இருக்கிறது என்று கண்டாள். கவனித்தீர்களா? சாத்தான் வெளிப்புறத்தில் இருந்து உள்நோக்கி செல்லுகிறான்.
ஆனால் தேவன் மனிதனுடைய இருதயத்திலிருந்து ஆரம்பித்து வெளியே அவனுடைய முழு வாழ்க்கையும் மாற்றி அமைக்கிறார். சமயத்தை நீங்கள் வெளிப்புறத்தில் இருந்து துடைத்து தூக்கி வீசி எறிந்து விடலாம் .ஆனால் தேவன் சமயத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இல்லை. நீங்கள் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்றால் அதைச் செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என்று வெளிப்புற காரியங்களை நீங்கள் மாற்ற வேண்டும் என்று சிலர் சொல்லுவார்கள். தேவன் அப்படி ஒரு பொழுதும் சொல்கிறது இல்லை. உண்மையாகவே உங்களுடைய உள்ளம் மாற்றம் பெரும்பொழுது, இருதயத்தின் ஆழத்தில் இயேசுவை நீங்கள் விசுவாசிக்கும் பொழுது வெளியே நீங்கள் செய்யும் செயல்கள் தானாக மாற்றம் பெரும்.
தேவன் சமய சடங்காச்சாரங்களில் இருந்து தொடங்குவதில்லை. கிறிஸ்தவம் என்பது ஒரு சமயம் அல்ல கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற தனி நபரை குறிக்கிறது. அந்த நபரோடு உங்களுக்குள்ள உறவை குறிக்கிறது. எனவேதான் இயேசு கிறிஸ்து எல்லா வேத சாஸ்திரங்களையும் கற்று அறிந்திருந்த நிக்கோதேமு என்ற மனிதரிடத்தில் பேசும் பொழுதும், அவன் பின்பற்றி வந்த சமய சடங்குகள் அவனை ரட்சிக்காது என்பதை அவன் புரிந்து கொள்ளும்படியாக, நீ மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்னார்.
மேலும் சமயச் சடங்குகளை கைக்கொள்வதில் சிறந்து விளங்கிய மற்றும் ஒரு பரிசேயர் கூட்டத்தைப் பார்த்து இயேசு இவ்வாறு கூறினார்.
பாருங்கள் வாசிக்கிறேன், மத்தேயு 23:25-27
‘மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். ‘
……………………………….
இதே போலத்தான்,அன்று ஆதாம் ஏவாளும் தங்கள் பாவத்தை வெளிப்படையாய் சொல்வதற்காக தேவனை தேடுவதற்கு பதில், அத்தி இலைகளை கொண்டு தங்களுக்கு ஒரு உடையை மட்டும் செய்து கொள்கிறார்கள். அன்று அவர்கள் அத்தி ஏழைகளை பயன்படுத்தியது இன்று மனிதன் சமய சடங்குகளை செய்வதற்கு ஒப்பானதாய் இருக்கிறது. உள்ளத்தில் ஆழத்தில் பாவத்தை குறித்த வேதனையோ கவலையோ உண்டாகும் பொழுது கடவுளுடைய பாதத்தில் வந்து அதை அறிக்கையிடுவதற்கு பதிலாக, சமய சடங்குகளால் அந்த குற்ற உணர்வை எடுத்துப் போட முயற்சிக்கிறான். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே , உங்கள் குற்ற உணர்வுகளிலிருந்து நீங்கள் விடுதலை பெற, உங்கள் பாவத்தை கடவுளிடம் அறிக்கை செய்கிறீர்களா?. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இழைப்பாருதல் தருவேன் என்று இயேசு கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
ஆதியாகமம் 3:8-9
‘பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். ‘
……………………………….
வெறும் பக்தியானது ஒன்றுக்கும் உதவாது. அது உங்களை தேவனிடத்தில் இருந்து பிரித்து விடும். ஆதாம் அவ்வாறே இறைவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டான். அவன் அவரை விட்டு விலகிப் போனான். தேடிப் போக வேண்டியவன் தேவனை விட்டு ஓடிப் போனான். ஆனால் தேவன் மனிதனை தேடி வருகிறார். இன்றும் அவ்வாறுதான் அவர் மனிதனை தேடிவருகிறார். ஆனால் மனிதன் தேவனைத் தேடுகிறது இல்லை.
ஆதியாகமம் 3:10-12
‘அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். ‘
…………………………..
கவனித்தீர்களா? இங்கே ஆதாம் தன்னுடைய பாவத்தை அறிக்கை யிடவில்லை. தனக்கு அந்த பழத்தை புசிக்க கொடுத்த தன் மனைவியை குற்றம் சாட்டுகிறான். அதாவது பழியை அவள் மீது போடுகிறான். தான் குற்றம் செய்தவன் என்பதை அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. இன்றும் கூட அநேகர் இவ்விதமே காணப்படுகிறார்கள். நான் சரியாக செய்தேன். அவர்கள்தான் சரியில்லை என்று சொல்கிற மனப்பக்குவம் பலரிடத்தில் இருக்கிறது. அருமையான சகோதரனை சகோதரியே நீங்கள் தேவனிடத்திலே வந்து ஆண்டவரே நான் ஒரு பாவி என்று தேவனிடத்திலே ஒத்துக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் என்னுடைய பாவங்களுக்கு காரணம் அவர்கள்தான். அல்லது இவர்கள்தான் என்று பழியை மற்றவர்கள் மேலே போட முயற்சிக்கிறோமா? யோசித்துப் பார்ப்போம்.
ஆதியாகமம் 3:13
‘அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். ‘
…………………………….
ஆதாம் பழியை ஏவாள் மேல் போட்டது போலவே இப்பொழுது ஏவாள் அவள் செய்த பாவத்திற்கான பழியை சர்ப்பத்தின் மேலே போடுகிறாள். இது இன்றைக்கும் மனிதனுடைய இயற்கை சுபாவமாய் இருக்கிறது. பள்ளியிலோ, கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஆஸ்பத்திரியிலோ நீங்கள் எங்கு பணி செய்து கொண்டிருக்கிறீர்களோ, அங்கே தவறுகளை ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளிலே உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமா?
ஆதியாகமம் 3:14
‘அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; ‘
……………………………
தேவனால் படைக்கப்பட்ட மனிதன் தேவனை விட்டு விலகிப் போகிறான், எனவே அவன் நியாயம் தீர்க்கப்பட வேண்டியவனாய் இருக்கிறான். தேவனால் படைக்கப்பட்ட சர்ப்பம் நீங்கள் நினைப்பது போல அன்று தனது வயிற்றினால் ஊர்ந்து நெளிந்து செல்லும் ஒரு மிருகமாக இருக்கவில்லை. அது பார்வைக்கு வசீகரமான தோற்றம் உடையதாக இருந்திருக்க வேண்டும், எனவே தான் ஏவாள் அதோடு பேசிக் கொண்டிருக்கிறாள். இன்று இருப்பது போல ஒரு சர்ப்பமாய் அன்று அது இருந்திருக்கும் என்றால் அதை அவள் பொருட்படுத்தியிருக்க மாட்டாள். இன்றும் சாத்தான் மனிதனை வசீகரிக்க கூடிய காரியங்களையே தனது ஆயுதமாக பயன்படுத்துகிறான். தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு பின்னரே சர்ப்பம் இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு வந்தது. தேவன் சாத்தான் மீது நியாயத்தீர்ப்பை கூறினார். அது மனிதனையும் மிகப் பெரும் அளவு பாதித்தது. ஆதியாகமம்3:15 நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு வசனம். இது மேசியாவாகிய இரட்சகரின் வருகையை குறித்த முதலாவது தீர்க்க தரிசனம்.
வாசிக்கிறேன். ஆதியாகமம் 3:15
‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ‘
………………………….
இங்கு தேவன் சர்ப்பத்தை பார்த்து பேசுகிறார். உனக்கும் – என்பது சாத்தானை குறிக்கிறது. உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார் என்பது கிறிஸ்து சாத்தானின் தலையை நசுக்கப் போகிறார் என்பதை முன் அறிவிக்கிறது. இது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு அற்புதமான தீர்க்கதரிசன வசனம் ஆகும். இங்கே இறுதியான வெற்றி சொல்லப்பட்டிருந்தாலும் தொடர்ந்து யுத்தம் இருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த உலகத்தில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இதைத்தான் வேதத்தின் மீதி உள்ள பக்கங்களிலே நாம் பார்க்கிறோம். இதைக் குறித்து இயேசு கிறிஸ்து யோவான் 8:44 லே இவ்வாறு கூறியிருக்கிறார்.
கவனியுங்கள். யோவான் 8:44
‘நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். ‘
……………………………
இங்கே பிசாசு என்று சொல்லப்பட்டு இருப்பது சாத்தானையை குறிக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கும் சாத்தானுடைய பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே இயேசு கிறிஸ்து கூறுகிறார். யோவான் மீண்டும் இந்த போராட்டத்தை குறித்து தனது நிருபத்தில் இவ்வாறு எழுதி இருக்கிறார். கவனியுங்கள், வாசிக்கிறேன்.
1 யோவான் 3:10
‘இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. ‘
…………………………………
இவ்வாறே இந்த உலகத்தில் இன்றைக்கும் ஒரு போராட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இங்கே இரண்டு விதைகள் இருக்கின்றன. இந்த உண்மையை நமக்கு முன் இந்த வசனம் கொண்டு வருகிறது. இறுதியாக தேவனுடைய பிள்ளைகளுக்கு வெற்றி நிச்சயம். ஆனால் நீண்ட காலம் தொடர்ந்து போராட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் சோதனைகளை சந்தித்து அதில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இயேசு இந்த உலகத்திற்கு முதல் முறையாக வரும் முன்னர் வெற்றி என்பது விசுவாசத்தினால் கீழ்ப்படுவதின் மூலமாக கிடைத்தது. இப்பொழுது இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்/ /. சரி இரட்சிக்கப்படுதல் என்றால் என்ன? கிறிஸ்துவில் இருப்பதே இரட்சிப்பாகும். சிருஷ்டிப்பின் மூன்று வரிசைகளில் மனிதனும் ஒருவனாக இருக்கிறான். தேவதூதர்கள், மனிதர்கள் மற்றும் மிருகங்கள் எல்லாமே தேவனுடைய சிருஷ்டிப்பு. மிருகங்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை ஆனால் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் இந்த உரிமை இருக்கிறது. அவன் தீர்மானம் எடுக்கிறான் அவன் எடுத்த தீர்மானத்திற்கு அவனே பொறுப்புடையவனாய் இருக்கிறான்.
இங்கே அவள் வித்து என்று சொல்லப்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். மனிதனுடைய வித்து என்று சொல்லப்படவில்லை. இது இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பை குறித்து சொல்லப்படும் ஒரு குறிப்பு, என்வே அவளுடைய வித்து என்று கூறப்பட்டுள்ளது. தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தினுள் வந்து ஆதாமையும் ஏவாளையும் தேடிய பொழுது. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய் என்று தேவனே அவனை தேடினார். மனிதன் உண்டாக்கிய சமயங்களில், மனிதன் கடவுளை தேடுவதை குறித்து நாம் பார்க்க முடியும். ஆனால் பரிசுத்த வேதம் இங்கே அவ்வாறு சொல்லவில்லை. தேவன் மனிதனை தேடி வருவதே இரட்சிப்பு. மனிதன் தேவனை விட்டு ஓடிப் போய்விட்டான். இப்பொழுது அவர் அவனை நீ எங்கே இருக்கிறாய் என்று தேடிக் கொண்டு வருகிறார். இதைக் குறித்து ஒரு தேவ மனிதர் கூறும் பொழுது அந்த அழைப்பு தேவனுடைய நீதியின் அழைப்பாக இருக்கிறது; ஏனெனில் அந்த நீதி பாவத்தை கண்டு கொள்ளாமல் விடாது. இது தேவனுடைய துயர அழைப்பின் சத்தம். அது பாவிக்காக வருந்துகிறதாய் இருக்கிறது. இது தேவ அன்பின் அழைப்பு. அது பாவத்திற்கு மீட்பளிக்கிறதாக இருக்கிறது என்று கூறுகிறார்.
இவைகளை குறித்துதான் ஆதியாகமம் 3: 15ல் நாம் பார்க்கிறோம். இதில் வரப்போகும் இரட்சகரை பற்றிய வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மனிதன் தேவனைத் தேடுகிறதில்லை. தேவனே மனிதனை தேடி வருவதை வேத புத்தகம் முழுவதும் நாம் பார்க்க முடியும். ரோமர் 3:11 பாருங்கள்
‘உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; ‘
………………………
இயேசு என்ன சொல்லுகிறார் கவனியுங்கள். யோவான் 15:16 முன்பகுதியை கவனியுங்கள்.
‘நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
………………………..
எனவே நாமும் அப்போஸ்தலனாகிய யோவானோடு கூட சேர்ந்து 1 யோவான் 4:19ல் அவர் கூறுவது போல
,அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூறுகிறோம்.
……………………….
என்று கூற முடியும். ஆம் பிரியமானவர்களே தேவன் மனிதனை தேடுகிறார். அவர் மனிதனுக்கு இரட்சிப்பை கொடுக்கிறார். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கும் சாத்தானுக்கும் இடையே நீண்ட யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆதியாகமம் 3:16 வாசிக்கிறேன்.
‘அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
…………………..
இதுவே பெண்ணிற்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயத்தீர்ப்பு.’ வேதனை இல்லாமல் அவள் குழந்தையை இந்த உலகத்திலே பெற்றெடுக்க முடியாது. இது இன்றைக்கும் உண்மையான ஒரு காரியமாய் இருக்கிறது இல்லையா?? ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு காரியம். குடும்ப வாழ்க்கையின் சந்தோஷம் வேதனையின் வழியாகவே வருகிறது.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 3:17-19
‘பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
………………………..
இதுதான் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நியாய தீர்ப்பு. இப்பொழுது மனிதனுக்கு மரணம் வருகிறது. மரணம் என்றால் என்ன? சரீர மரணம் என்பது, மனிதனை அவனுடைய ஆவியை – ஆன்மாவை உடலில் இருந்து பிரிப்பதாகும்.
பிரசங்கி 12:7 லே
‘இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகும்
……………………
என்று வாசிக்கிறோம்.
மனிதன் இறுதியாக தேவனுக்கு பதில் கூற வேண்டியவனாய் இருக்கிறான். அவன் இரட்சிக்கப்பட்டவனாக இருந்தாலும் இரட்சிக்கப்படாதவனாக இருந்தாலும் அவன் தேவனுக்கு பதில் கூற வேண்டும். ஆதாம் அந்தக் கனியை சாப்பிட்ட நாளில் மரிக்கவில்லை அதன் பின் 900 ஆண்டுகளுக்கும் மேலாக அவன் வாழ்ந்தான். ஆதாம் கீழ்ப்படியாமல் போன அடுத்த நிமிடத்தில் ஆவிக்குரிய மரணத்தை அடைந்து விட்டான். அவன் தேவனை விட்டு பிரிக்கப்பட்டான். ஆம் மரணம் என்பது பிரிக்கப்படுதல். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு எழுதும் பொழுதும்,
அவர்கள் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்தார்கள்…….. என்று கூறியிருக்கிறார். இது அவர்களின் உடல் மரணத்தை குறிக்கவில்லை அவர்கள் தேவனிடத்தில் இருந்து ஆவியில் பிரிக்கப்பட்டார்கள்.
இயேசு கூறிய மனம் திரும்பிய மைந்தனின் கதையில் இளைய குமாரன் திரும்பி வந்த பொழுது, தகப்பன், மூத்த மகனை பார்த்து- என் குமாரனாகிய இவன் மரித்தான் திரும்பவும் உயிர்தான் .காணாமல் போனான் திரும்பவும் காணப்பட்டான் என்று சொல்லுகிறார். இங்கே அந்த இளைய மகன் மரித்தான் என்றால் பொருள் என்ன? சரீரத்தில் அல்ல ஆத்துமாவில் தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தான்.
மேலும் இயேசு கிறிஸ்து மார்த்தாளை பார்த்து யோவான் 11 25ல்
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்
…………………………..
என்று கூறினார். இங்கேயும் மரணம் என்பது ஆவிக்குரிய மரணத்தை குறிக்கிறது. அதாவது தேவனை விட்டு பிரிக்கப்பட்டிருப்பது. ஆதாம் அந்த கனியை சாப்பிட்ட மாத்திரத்தில் ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்து போனான். எனவேதான் அவன் தேவனை விட்டு ஓடி மறைந்தான். தன்னை மூடிக்கொள்ள அத்தி இலைகளை உண்டு பண்ணினான்.
ஆதியாகமம் 3:20
‘ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். ‘
……………………..
இவ்வாறு கூறப்பட்டிருப்பதால் காயினும் ஆபேலும் ஏதேன் தோட்டத்தில் பிறந்தார்கள் என்று பொருள் அல்ல. ஆதாம் ஏவாளின் வீழ்ச்சிக்கு பின்னரே அவர்கள் பிறந்தார்கள் என்பது உறுதி.
ஆதியாகமம் 3:21
‘தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். ‘
…………………..
தேவன் தோல் உடைகளை அவர்களுக்கு கொடுத்தார் என்றால் ஒரு விலங்கு கொல்லப்பட வேண்டும். இதுவே பலியின் ஆரம்பம் என்று கடவுள் மனிதனுக்கு தெளிவு படுத்தினார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் உடுத்து இருந்த அத்தி இலைகளை தேவன் நிராகரித்தார். எனவே தோலால் ஆன ஆடைகளை அவர்களுக்கு கொடுத்தார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறிய பொழுது அவர்கள் ரத்தம் சிந்தி கொடுக்கப்பட்ட பலியை பார்த்தார்கள். அவர்கள் திரும்பி பார்த்தபோது மோசேக்கு மகாபரிசுத்த ஸ்தலத்தில் உள்ள கிருபாசனத்தில் கடவுள் அனுமதித்ததை அவர்கள் சரியாக கண்டார்கள். இரண்டு கேரூபீன்கள் அங்கிருந்து ரத்தத்தை பார்த்தன. அதுவே தேவனை நோக்கிச் செல்லும் வழி.
அத்தி இலைகளை அகற்றி தோல் உடையை தேவன் கொடுத்ததில் இருந்து நான்கு பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முதலாவதாக மனிதன் தேவனை அணுக போதுமான அளவு தன்னை மூடி இருக்க வேண்டும். உங்கள் நற்செயல்களின் அடிப்படையில் நீங்கள் கடவுளிடம் வர முடியாது நீங்கள் இருப்பது போலவே நீங்கள் ஒரு பாவியாக அவரிடத்தில் வரவேண்டும்.
இரண்டாவதாக அத்தி இலைகளை தேவன் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களாலேயே தயாரிக்கப்பட்டது . அதையும் தேவன் ஏற்றுக் கொள்ள முடியாது.
மூன்றாவதாக தேவனே அந்த உடையை வழங்க வேண்டும்.
நான்காவதாக, இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மட்டுமே இந்த உடையை பெற்றுக் கொள்ள முடியும்.
தேவனுடைய கோபத்திற்கும் தனக்கும் இடையில் மனிதனுக்கு ஒரு பதில் ஆள் தேவையாய் இருக்கிறது. எந்த நாளிலும் மனிதன் இதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
ஒருவர் இவ்விதமாய் ஜெபிக்கிறார், கவனியுங்கள்.
அவன் சாதிப்பதற்காக வலிமை வேண்டும் என்று ஜெபித்தான் ஆனால் அவன் கீழ்படிவதற்காக பலவீனமாக்கப்பட்டான்.
அவன் பெரிய காரியங்களை செய்வதற்காக ஆரோக்கியத்திற்காக ஜெபித்தான் ஆனால் அவன் சிறந்த காரியங்களை செய்வதற்காக அவனுக்கு பலவீனம் கொடுக்கப்பட்டது.
அவன் மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள செல்வத்துக்காக ஜெபித்தான் அவன் ஞானவனாக அவனுக்கு தரித்திரம் கொடுக்கப்பட்டது.
அவன் மனிதர்களின் புகழ்ச்சியை பெற அதிகாரத்திற்காக ஜெபித்தான் தேவன் தனக்கு தேவை என்பதை உணர அவனுக்கு பலவீனம் கொடுக்கப்பட்டது.
அவன் வாழ்க்கையை அனுபவிப்பதற்காக எல்லாவற்றிற்காகவும் ஜெபித்தான் ஆனால் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக அவனுக்கு ஜீவன் கொடுக்கப்பட்டது.
அவன் நம்பியிருந்த அல்லது கேட்ட எதையுமே பெற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவன் ஜெபம் பதிலை பெற்று இருந்தது அவன் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டான்.
தேவனுக்கு முன் நாம் பாவிகள் என்பதை ஒத்துக் கொள்ளும் பொழுது அவருடைய இரட்சிப்பு நமக்கு கிடைக்கிறது.
வசனங்கள் 22 – 24 பாருங்கள்
‘பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.’
………………………
ஒரு காரியத்தை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் தேவன் மனிதனை நித்தியமாக பாவத்திலே வாழ்ந்துவிட விட்டுவிடவில்லை நம்மையும் அவ்வாறு அவர் விட்டுவிடவில்லை.
இங்கே தேவன் வழியை அடைத்துவிட்டார் என்று இதற்கு அர்த்தம் அல்ல. ஜீவனுக்கு போகிற வழி இன்னும் திறந்தே இருக்கிறது. மனிதன் தேவனிடத்தில் வரலாம். ஆனால் அந்த வழி இப்பொழுது ஜீவ விருட்சத்தின் மூலமாக இல்லை. இரட்சிப்பானது பலியின் மூலமாக வரவேண்டும். மனிதன் திரும்பிப் பார்க்கும் பொழுது அங்கே இரத்த பலி செலுத்தப்பட்டிருக்கிறது. நமக்காக இரத்தம் சிந்தி பலி கொடுத்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
s கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்போது நீங்களும் உங்கள் வீட்டார் இரட்சிக்கப்படுவீர்கள்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
