ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 29
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 29
நிகழ்ச்சி எண்: 0047

வாசியுங்கள்

நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை அன்போடு வாழ்த்துகிறோம்.
இன்று நாம் ஆதியாகமம் 29 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.

இந்த அத்தியாயத்திற்கு மேலாக கலாத்தியர் 6:7-8 ஆம் வசனங்களை எழுதலாம். அந்த வசனம் என்ன சொல்கிறது??
“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மை பரியசம்பண்ணவொட்டார் ; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினால் நித்திய ஜீவனை அறுப்பான்”
இந்த அத்தியாயத்திற்கு நாம் வைக்கக் கூடிய பொருத்தமான தலைப்பு: “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில், யாக்கோபு தான் செய்த தீய செயல்களுக்கான அறுவடையைப் பெறுவதைக் பார்க்கப் போகிறோம். கலாத்தியர் நிருபத்தில் உள்ள இந்தப் பகுதி முதன்மையாகக் கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும், இது எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய தேவனுடைய உலகளாவிய விதியாகும். இது வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் பொருந்தும். நீங்கள் சோளத்தை விதைத்தால், சோளத்தை அறுப்பீர்கள். பருத்தியை விதைத்தால், பருத்தியை அறுப்பீர்கள். கோதுமையை விதைத்தால், கோதுமையை அறுப்பீர்கள். களைகளை விதைத்தால், களைகளையே அறுப்பீர்கள்.
இந்தக் கோட்பாட்டிற்கான உதாரணங்கள் வேதாகமம் முழுவதும் நிறைந்துள்ளன. உதாரணமாக, பார்வோன் எபிரெய ஆண் குழந்தைகளைக் கொன்றான்; காலப்போக்கில் அவனுடைய மகனும் சங்காரத் தூதனால் கொல்லப்பட்டான். ஆகாப், பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாபோத்தைக் கொன்றான், நாய்கள் அவன் இரத்தத்தை நக்கின. நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கியது போலவே, ஆகாபின் இரத்தத்தையும் நக்கும் என்ற செய்தியுடன் தேவன் தமது தீர்க்கதரிசியாகிய எலியாவை அவனிடம் அனுப்பினார். அது அப்படியே நிறைவேறியது.
தாவீது கூட இது தன் சொந்த வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடிய ஒரு மாறாத விதி என்பதைக் கண்டுகொண்டார். அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்தார். தேவன் அவருடைய பாவத்தை மன்னித்தார். இருப்பினும், அவர் எதை விதைத்தாரோ அதையே அறுக்க வேண்டியிருந்தது. அவருடைய சொந்த மகளே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள், அவருடைய மகன் கொல்லப்பட்டான். அப்போஸ்தலனாகிய பவுல் கூட இந்த விதியின் பாரத்தை உணர்ந்தார். ஸ்தேவான் கல்லெறியப்பட்டபோது அவர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். பின்னர், பவுல் லீஸ்திரா பட்டணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு, கல்லெறியப்பட்டு, செத்துப்போனான் என்று நினைத்து அப்படியே போட்டு விட்டு போய் விட்டார்கள்.
இந்த மாறாத விதிக்கு Q ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். யாக்கோபு தனது சொந்த புத்திசாலித்தனத்தை நம்பி வாழ்ந்தவர். அவர் ஓரளவு கர்வமும் சாமர்த்தியமும் கொண்டவராக இருந்தார். அவர் ஏமாற்று வேலைகளையும் செய்திருந்தார். தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அவர் மட்டமான முறைகளைக் கையாளவும் தயங்கவில்லை. தனது சாமர்த்தியத்தைக் குறித்து அவர் பெருமிதமும் கொண்டிருந்தார். ஆனால், அவர் எதை விதைத்தாரோ, அதையே அவர் அறுக்கப் போகிறார்.
நாம் இந்த அத்தியாயத்திற்கு வரும்பொழுது, யாக்கோபு பெத்தேலை விட்டுப் புறப்பட்டு தனது பயணத்தைத் தொடர்கிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு – (அது எவ்வளவு காலம் என்று தெரியவில்லை), அவர் ஆரான் ஊருக்கு வந்து சேர்கிறார்.
ஆதியாகமம் 29:1-3
‘1யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். 2அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. 3அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். ‘
……………
அந்த நாட்டில் தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் இங்கே பார்க்கிறோம். இன்றும் கூட அது அங்கே மிக முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது, ஏனென்றால் பல இடங்களில் அங்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் பாதுகாப்பட வேண்டும்; அதனால்தான் பகல் பொழுதில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கிணற்றின் மேலிருக்கும் கல் அகற்றப்பட்டது, அப்போது அனைவரும் தங்கள் தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினார்கள்—ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொண்டார்கள். பின்னர், கிணற்றை மூடுவதற்காக அந்தக் கல் மீண்டும் அதன் மேல் வைக்கப்பட்டது.
இப்போது, கிணற்றிலிருந்து கல்லை அகற்றுவதற்கு முன்பே யாக்கோபு அந்த இடத்திற்கு வந்து சேருகிறார். நன்றாக கவனியுங்கள், அவர் எப்போதும் போலவே இப்போதும் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் (cocky) கர்வத்துடனும் இருக்கிறார்.
ஆதியாகமம் 29:4-5
‘4யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். 5அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா? என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். ‘
………………….
அங்கே நின்ற மேய்ப்பருக்கு லாபணை தெரியும். ஆனால் யாக்கோபுக்கு லாபணை குறித்து தெரியாது. இனிமேல் தான் லாபான் யார் என்பதை யாக்கோபு கண்டு கொள்ளப் போகிறார்.
ஆதியாகமம் 29:6-7
‘6அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். 7அப்பொழுது அவன்: இன்னும் வெகு பொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். ‘
………………
யாக்கோபு சொல்வதை கவனித்தீர்களா? முதல் முறையாக புதிய ஒரு இடத்திற்கு வருகிறான். இப்படி வந்து கொண்டு, அவர்கள் எப்பொழுது ஆட்டிற்கு தண்ணீர் காட்ட வேண்டும். எப்பொழுது அதை மேய விட வேண்டும், என்று அவர்களுக்கு சொல்லி கொடுக்கிறான் இது அவனுடைய குணத்தை மேலும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
ஆதியாகமம் 29:8
‘8அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். ‘
…………………..
யாக்கோபு தனது தகப்பன் வீட்டிலே அவர்களுக்கென்று வைக்கப்பட்டிருந்த துரவுகளிலே தண்ணீர் காட்டி ஆடுகளைத் திரும்பத்திரும்ப மேய விடுவதை கவனித்திருக்கலாம். ஆனால் இங்கே பெரிய ஒரு ஊரிலே அநேகருடைய மந்தைகள் இருப்பதினாலே அவர்களுடைய பழக்கம் அறியாதவராய் இருந்தானர். சரியான சூழ்நிலையை, சரியானபடி அறிந்து கொள்ளாமல் அவசரப்பட்டுப் பேசுவது யாக்கோபுடைய அறிவீனத்தை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.
நம்முடைய வாழ்க்கையிலேயும் எந்த ஒரு காரியத்தையும் பரிபூரணமாய் அறிந்துகொள்ளாமல் பேச முற்படுவோமென்றால் நமக்கிருக்கிற கொஞ்ச அறிவைக் கொண்டுதான் நாம் அந்த சூழ்நிலையை மதிப்பிடுவோமே ஒழிய நம்முடைய மதிப்பீடு சரியான மதிப்பீடாய் இருக்காது. தொடர்ந்து அங்கே என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 29:9
‘9அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். ‘
……………….
ராகேல் ஆடு மேய்க்கிற ஒரு பெண்மணி. இந்த நாட்களைப் போல அந்த நாட்களிலும் பெண்கள் ஆடுகளை மேய்க்க சென்று இருக்கிறார்கள்.
ஆதியாகமம் 29:10
’10யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ‘
………………..
லாபானுடைய மந்தைக்குத் தண்ணீர் காட்டும்படி யாக்கோபிடம் யார் சொன்னார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் அதைச் செய்தார். யாக்கோபு யாருடைய சட்டத்தையும் பின்பற்றுபவர் அல்ல, அவர் எப்போதும் தனது சொந்த சட்டத்தையே பின்பற்றுகிறார். தனது வாழ்க்கைப் பயணத்தில்—அதாவது, அவரது வாழ்க்கையின் முற்பகுதியில்—விளையாட்டிற்கான விதிகளை அவரே உருவாக்கிக்கொண்டார். அவர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம் இருக்கிறது, அதை அவருக்குக் கற்றுக்கொடுக்கப் போகிறவர் மாமா லாபான் தான்.
ஆதியாகமம் 29:11
’11பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, ‘
……………..
இந்த வசனம் ஒரு வினோதமான வசனமாகவே தெரிகிறது. மாமாவின் மகளை முத்தம் செய்கிறார் – சரி, / ஏன் அழவேண்டும்? ஒருவேளை – வீட்டை விட்டு மிக நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறார். தன்னந்தனியாக வந்திருக்கிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெத்தேலில் இருந்து புறப்பட்டு கலிலேயா கடல் வரை வந்து மீண்டுமாக சீரியா வந்து சேர வேண்டும். வழியிலே அதிகமான பாலைவனமான பகுதி உண்டு. எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறார். வழியிலே பல அனுபவங்களை பெற்றிருந்திருக்கலாம். வந்த உடனேயே அவர் கண்ட மனிதரிடத்திலே மிகச் சாதாரணமாக பல நாள் பழகியவன ஒருவரைப் போல பேசுகிறார். அவர்களிடத்தில் பல கேள்விகளை கேட்கிறார். யாரும் எதுவும் கூறாமல் மாமாவின் ஆடுகள் வந்த பொழுது கிணற்றின் கல்லை புரட்டி தண்ணீர் காட்டுகிறார். எனவே அவர் மாமாவின் மகளை முத்தம் செய்து வாழ்த்திய போது தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரை கண்ட அந்த உணர்ச்சி பெருக்கில் அழுதிருக்கலாம்.
இது ஒன்றே இந்த பகுதிக்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரு விளக்கம்.
ஆதியாகமம் 29:12
’12தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். ‘
……………..
எபிரேய மொழியில் யாக்கோபு தன்னை அவளுடைய தகப்பனின் சகோதரன் என்று சொல்வதாக கூறப்பட்டிருக்கிறது. எபிரெய மொழியானது நாம் இன்று கடைப்பிடிப்பது போன்ற பல உறவுமுறை வேறுபாடுகளைப் பயன்படுத்தவில்லை. இன்று நாம் உறவுமுறைகளை மிக நுணுக்கமாகப் பிரித்து வைத்திருக்கிறோம், ஆனால் அக்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உறவினர் என்றால், அவர்கள் ‘சகோதரன்’ என்றே அழைக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் இது மிகச் சரியாகவே மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.
ஆதியாகமம் 29:13
’13லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். ‘
………………..
யாக்கோபு பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்திருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இரவு உணவின் போது, தனது அண்ணனை ஏமாற்றி எப்படி சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற்றார் என்றும், ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு அவர் கையாண்ட தந்திரங்கள் என்னென்ன என்றும், தான் எவ்வளவு சாமர்த்தியசாலி என்றும் அவர் அவர்களிடம் கதை கதையாகச் சொல்லி சந்தோஷப்பட்டு இருப்பார்.. அநேகமாக அவர் பெத்தேலில் கழித்த அந்த இரவைப் பற்றியும் சொல்லியிருப்பார்.
“இந்தக் காரியங்களையெல்லாம் அவன் லாபானுக்கு விவரித்துச் சொன்னான்.” என்று இங்கு வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 29:14
’14அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். ‘
……………
இவன் தன் மருமகன்தான் என்று இப்போது லாபான் உறுதி செய்துகொள்கிறான், “நீ என் உறவினன், எனவே உள்ளே வா, உன் சொந்த வீடாக நினைத்துத் தங்கு” என்று கூறுகிறான்.
இப்போது ஒரு மாதம் கடந்துவிட்டது, என்ன நடக்கிறது என்று பாருங்கள். யாக்கோபு வேலை எதுவும் செய்யவில்லை. அவர் வெகு தூரத்திலிருந்த ஒரு தேசத்திலிருந்து வந்த மருமகன், தன் மாமாவைப் பார்க்க வந்திருக்கிறார். அங்கே தங்குவதற்கும் உணவிற்கும் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று அவர் நினைத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் அவர் மாமாவின் மகளான ராகேலை நேசிக்க துவங்குகிறார். குறைந்தபட்சம், அவர் அவளை ஒரு கண் வைத்தே கவனித்து வந்திருக்கிறார். அவளும் அவரை அதேபோல கவனித்து வந்திருப்பாள் என்று வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக நடந்த அந்தச் சம்பவம், ஒரு நாள் காலை உணவின் போது நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆதியாகமம் 29:15
’15பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். ‘
………………
இந்த மாமா லாபான் மிகவும் சாமர்த்தியசாலி. வேலைக்குச் சேருவதைப் பற்றி இங்கே யார் பேசினார்கள்? யாக்கோபு அதைப் பற்றிப் பேசவே இல்லை. எனவே, மாமா லாபான் மிகவும் தந்திரமாக, யாக்கோபு தனக்காகச் சும்மா வேலை செய்வதை தான் விரும்பவில்லை என்று கூறுகிறார். யாக்கோபுக்குச் சம்பளம் தருவதாகவும் அவர் சொல்கிறார். உண்மையைச் சொல்லப்போனால், சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் லாபானுடன் ஒரு மாதம் கூட உங்களால் தங்கியிருக்க முடியாது. மாமா லாபானும் உண்மையாகவே ஒரு கில்லாடிதான், இப்போது அவர் தனது மருமகனைத் தன் பாணியில் கையாளப்போகிறார்.
ஆதியாகமம் 29:16
’16லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். ‘
…………………….
இந்த வசனத்தில்தான் நாம் முதன்முதலாவதாக லேயாளை குறித்து வாசிக்கிறோம். தனது இளைய மகளான ராகேலோடு யாக்கோபு நன்றாக பேசுவதையும் அவள் மேல் அவனுக்கு விருப்பம் இருப்பது போல் நடந்து கொள்வதையும் லாபான் கவனித்து இருக்க வேண்டும். ஏன் யாக்கோபு ராகேல் மேல் விருப்பமுள்ளவராய் நடந்து கொண்டார் என்பதை அடுத்த வசனம் கூறுகிறது.
ஆதியாகமம் 29:17
’17லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். ‘
………………
(Euripides) யூரிபிடஸ் என்பவர் கிரேக்க நாடகங்களை எழுதி இருக்கிறார் அதில் ஒரு நாடகத்தில் வரும் ஒருவன் தன் காதலியைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூற நினைத்தால், அவளை ‘பசு போன்ற கண்களைக் கொண்டவள்’ என்று அழைப்பதாக எழுதியிருக்கிறார். இதைப் படிக்கும்போதெல்லாம் சில மாணவர்கள் சிரிப்பதுண்டு; ‘இதை ஒரு புகழ்ச்சியாக ஏற்பதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்’ என்று பலர் யோசித்து இருக்கிறார்கள்.
அதைக் குறித்து ஒருவர் சொல்லும் பொழுது, அடுத்த முறை நீங்கள் ஒரு பசுவைப் பார்க்கும்போது அதன் கண்களை உற்றுப் பாருங்கள், அவை எவ்வளவு அழகானவை என்பது உங்களுக்குப் புரியும். அந்த நாடகத்தைப் படித்ததிலிருந்து, அழகான கண்கள் இல்லாத ஒரு பசுவைக்கூட நான் பார்த்ததில்லை.” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த வசனத்தில் நாம் வாசிப்பது போல ராகேல் மிக அழகான ஒரு பெண்ணாய் இருந்திருக்கிறாள். லேயால் கூச்சப் பார்வை உள்ளவளாய் இருந்தாள் என்று சொல்லும் பொழுது அவள் அழகானவளாக இல்லை என்று வேறு வார்த்தைகளிலே கூறப்பட்டிருக்கிறது.

ஆதியாகமம் 29:18
’18யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான். ‘
……………….
யாக்கோபு லேயாளை அதிகமாக நேசித்ததை நாம் பார்க்கிறோம். அன்று காலை நேரத்தில் காலை உணவின் போது, மாமா லாபான் (Laban) அவரிடம் வேலைக்குச் செல்லுமாறு யோசனை கூறியபோது, லாபானின் மனதில் ஒரு திட்டம் இருந்தது. யாக்கோபு தன் மகள் மீது அன்பு வைத்திருந்ததை அவர் அறிந்திருந்தார்; எனவே, உனது ஊதியம் என்னவாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டபோது, யாக்கோபு சொன்ன பதிலைக் கேட்டு அவர் ஆச்சரியப்பட்டிருப்பார் என்று நாம் சொல்ல முடியாது..
ராகேலுக்காக (Rachel) ஏழு ஆண்டுகள் உழைக்க யாக்கோபு தயாராக இருந்தார். இந்த லாபான் மிகவும் கடினமான ஒரு பேரம் பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்லலாம்.”
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 29:19
’19அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். ‘
………………………
“லாபான் அந்தப் பேரத்திற்குச் சம்மதித்தார். இப்பொழுது, அடுத்து வரும் வசனம் யாக்கோபைப் பற்றிச் சொல்லப்பட்ட மிக அழகான விஷயங்களில் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. உண்மையைச் சொல்லப்போனால், யாக்கோபின் ஆரம்பகால வாழ்க்கையில், மிக அழகானதாகவோ, நேர்த்தியானதாகவோ அல்லது உன்னதமானதாகவோ தென்படும் ஒரே விஷயம் ராகேல் மீது அவர் கொண்டிருந்த அன்பு மட்டும்தான்.” என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 29:20
’20அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது. ‘
…………………
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். லாபான் சொன்ன எல்லா வேலையும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் யாக்கோபு செய்து கொண்டிருக்கிறார். கடினமாக உழைக்கிறார் வெளியே குளிரிலே போய் உழைக்கிறார் – வெயிலிலே உழைக்கிறார் – பகல் முழுவதும் கடினமாய் வேலை செய்துவிட்டு மாலையில்தான் அவளை அவர் சந்திப்பார். அத்தனை அதிகமாக அவர் அவளை நேசித்ததால் அந்த ஏழு வருடங்கள் அவருக்கு கொஞ்ச நாட்களாய் தெரிந்தது.
நம்முடைய வாழ்க்கையில் கூட இப்படிப்பட்ட அன்பிலே கடினமான உழைப்பு கடினமான உழைப்பாய் தெரியாத காலங்களை நாம் கவனித்திருக்கலாம். மனைவியின் மேலே வைத்த அன்பினாலோ பிள்ளைகள் மேல் வைத்த அன்பினாலோ எத்தனை பேர் இரவு பகல் பாராமல் கடினமாக உழைக்கிறார்கள் இல்லையா?
ஆதியாகமம் 29:21-22
’21பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான். 22அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். ‘
………………….
தொடர்ந்து லாபான் செய்த காரியத்தை கவனியுங்கள்.
ஆதியாகமம் 29:23-26
’23அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். 24லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். 25காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். 26அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. ‘
……………………..
அந்தக் காலத்துத் திருமணச் சடங்குகளில், மணப்பெண் ஒரு திரையினால் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பார், அவளைப் பார்க்கவே முடியாது. பாவம் யாக்கோபு, தனக்குக் கிடைக்கப்போகும் பெண்ணை அடுத்த நாள் காலை வரை பார்க்கவில்லை. என்ன ஆச்சரியம்! அங்கே இருந்தது ராகேல் அல்ல—அது லேயாள்! தான் ஏமாற்றப்பட்டதை அந்த நிமிடம்தான் அவர் உணர்ந்தார்.
யாக்கோபு தானே மூத்தவன் என்று நடித்துத் தன் தந்தையை ஏமாற்றியது அவருக்கு அப்போது நினைவுக்கு வந்திருக்குமா வந்திருக்காதா என்பது நமக்கு தெரியவில்லை. யாக்கோபு அவருடைய அப்பாவை ஏமாற்றினார், அதுவே அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதற்குக் காரணமாக இருந்தது. பாருங்கள், தேவன் இத்தகைய நடத்தையை அங்கீகரிப்பதில்லை. செய்த வினை இப்போது அவருக்கே திரும்பி வந்தது. யாக்கோபு இளையவனாக இருந்தபோது மூத்தவன் என்று நடித்தார். இப்போது இளையவள் கிடைக்கும் என்று அவர் நினைக்கையில், அவருக்கு மூத்தவள் கொடுக்கப்பட்டாள். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது, இது யாக்கோபுக்கு ஒரு பயங்கரமான விஷயமாக அமைந்தது.
யாக்கோபின் பார்வையில் லாபான் செய்தது ஒரு கிரிமினல் குற்றம், ஆனால் மாமா லாபான் அதை எவ்வளவு சாதாரணமாகக் எடுத்துக்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் இத்தகைய விஷயங்களில் வல்லவர். ஒப்பந்தத்தில் ஒரு சிறிய விஷயம் இருப்பதாகவும், சிறிய எழுத்துக்களில் இருந்த அந்த விதியை யாக்கோபிடம் சொல்ல மறந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். அந்த நாட்டில் மூத்த மகளுக்கு முதலில் திருமணம் செய்து வைப்பதுதான் வழக்கம் என்றும், மூத்தவளுக்குத் திருமணம் ஆகும் வரை இளையவளுக்குத் திருமணம் செய்ய முடியாது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், மாமா லாபான் தனது கொடுக்கல் வாங்கலில் மிகவும் தாராளமாக இருக்க விரும்புகிறார்; அதனால் அவர் இப்பொழுது ஒரு புதிய யோசனையை முன்வைக்கிறார்.
ஆதியாகமம் 29:27
’27இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்திலே வேலைசெய் என்றான். ‘
………………
இந்தப் புதிய வாரம், மற்றுமொரு ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மாமா லாபான் தன் உழைப்பிற்கேற்ற லாபத்தை) முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார், இல்லையா? பாவம் யாக்கோபு, இப்போதுதான் உண்மையான பாடத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் செய்திருக்கக் கூடாத ஒரு காரியத்தைச் செய்கிறார்—இரண்டு மனைவிகளை மணக்கிறார். இது முடிவதற்குள் அவர் இன்னும் பெரிய சிக்கலில் சிக்கப்போகிறார்.”
ஆதியாகமம் 29:28
’28அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். ‘
……………
மாமா லாபான், அவர் முதலில் ஒப்புக்கொண்டதை விட இரண்டு மடங்கு காலம் யாக்கோபை வேலை செய்ய வைத்தார். ஏழு ஆண்டுகளே நீண்ட காலம், இல்லையா?? ஆனால் பதினான்கு ஆண்டுகள் என்பது எவ்வளவு மிக நீண்ட காலம்!…….. இந்த ஏற்பாட்டினால் யாக்கோபுக்கு இரண்டு மனைவிகள் கிடைத்தனர்.
‘சரி, இது வேதத்தில் இருப்பதால், தேவன் பலதார மணத்தை அங்கீகரிக்கிறார் போலும்’ என்று நீங்கள் நினைக்கலாம். இல்லை, பைபிளில் இருக்கும் அனைத்தையும் தேவன் அங்கீகரிப்பதில்லை—இது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். உதாரணமாக, பிசாசின் பொய்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. தாவீதின் பாவத்தை தேவன் அங்கீகரிக்கவில்லை, அதற்காக அவரைத் தண்டிக்கவும் செய்தார். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவுகளும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவை —அதாவது, தேவனால் அருளப்பட்டவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எதைச் சொல்ல விரும்பினாரோ, அதை அப்படியே எழுத்தாளரான மோசே மூலம் சொல்ல வைத்தார். நாம் பரிசுத்த வேதம் என்று அழைக்கும் இந்த புத்தகத்தில் மோசே எழுதுவதற்காக தேவன் கொடுத்த வார்த்தைகளின் பதிவே ‘ஏவப்பட்டது’ ஆகும்.
ஆதியாகமம் 29-ஆம் அதிகாரத்தில் தேவன் ஒரு துல்லியமான பதிவைத் தந்திருக்கிறார்: யாக்கோபுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர், அது எப்படி நடந்தது என்பதையும் அது நமக்குச் சொல்கிறது. இங்கேதான் ‘தேவ ஆவி அருளிய பதிவு’ (Inspiration) என்பது வருகிறது. அதன் அர்த்தம் வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்தையும் தேவன் அங்கீகரித்தார் என்பதல்ல. நிச்சயமாக, யாக்கோபு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைப் பெற்றிருந்ததை தேவன் அங்கீகரிக்கவில்லை.
நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான் – , இந்த யாக்கோபு இதற்குப் பிறகு தனது குடும்பத்தில் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தார்; அவை அனைத்திற்கும் அவர் கையாண்ட முறைகளே மூல காரணமாக இருந்தன. அவர் எதை விதைத்தாரோ அதையே அறுத்தார்.
ஆதியாகமம் 29:31-32
’31லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். 32லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். ‘
………………….
லேயாள் துக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். தன் கணவன் தன்னைவிட ராகேலையே அதிகம் நேசிக்கிறார் என்பதை அவள் அறிவாள். அவள் ரூபனுக்குத் தாயானபோது, அது அவள் இதயத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது; இனிமேல் யாக்கோபு தன்னை நேசிப்பார் என்று அவள் உணர்கிறாள்.
ரூபன் யாக்கோபின் முதற்பேறானவன் (தலைமகன்), ஆனால் கிறிஸ்துவுக்கு வழிவகுக்கும் வம்சாவளியைத் தொடங்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, லேயாளின் நான்காவது மகனான யூதாவே அந்த வம்சாவளியைத் தொடங்கினான். யூதா அரச பரம்பரையைச் சேர்ந்தவன். தாவீது இந்த வம்சாவளியில் வந்தவர், பின்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் மாம்சத்தின்படி யூதாவின் வம்சாவளியிலிருந்தே வந்தார். ரூபன் தான் செய்த பாவத்தினால் தனது முதற்பேறான நிலையை (தலைப்பிள்ளை உரிமையை) இழந்தான். லேவி ஆசாரிய கோத்திரமானார். யாக்கோபின் மிகச் சிறந்த மகன்கள் சிலருக்கு லேயாளே தாயாக இருந்தாள்.
யாக்கோபின் வாழ்க்கையை ஒரு கண்ணாடியாக வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய ஆவிக்குரிய பயணத்திற்குத் தேவையான ஒரு முக்கியமான முடிவை நாம் எடுக்க முடிகிறது.
யாக்கோபு ஒரு காலத்தில் ஏமாற்றுக்காரவராக இருந்திருக்கலாம், ஆனால் தேவன் அவனை ஒரு இஸ்ரவேலாக மாற்ற விரும்பினார். அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகவே, யாக்கோபு தான் செய்த அதே ஏமாற்று வேலையைத் தனது வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது தேவன் கொடுக்கும் தண்டனை என்பதை விட, அவர் நமக்குப் புகட்டும் ‘பரிசுத்தமான பாடம்’ என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
தேவனுடைய நீதி மாறாதது: கலாத்தியர் 6:7-ல் சொல்லப்பட்டபடி, நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுப்போம். யாக்கோபு தனது தந்தையை ஏமாற்றினார், இப்போது மாமனால் ஏமாற்றப்படுகிறார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு விதையைப் போன்றது; அது ஒருநாள் அறுவடைக்கு வரும் என்பதை நாம் மறக்கக் கூடாது.
மேலும் நமக்கு மன்னிப்பு உண்டு, ஆனால் விளைவுகள் உண்டு: தேவன் யாக்கோபை நேசித்தார், அவனை ஆசீர்வதித்தார். ஆனால், அவர் செய்த பாவத்தின் விளைவுகளை (Consequences) அவர் சந்திக்க வேண்டியிருந்தது. தேவன் நம் பாவங்களை மன்னித்தாலும், நாம் விதைத்த தவறான செயல்களின் பலனை அனுபவிக்க நேரிடும் என்பதை நாம் மறந்து போக கூடாது.
குழப்பங்களுக்கு மத்தியிலும் தேவன் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுவார்: யாக்கோபு, லாபான், லேயாள் என மனிதர்களுக்கிடையே தந்திரங்களும், ஏமாற்றங்களும், பொறாமைகளும் நிறைந்திருந்தாலும், தேவன் தம்முடைய மீட்பின் திட்டத்தை நிறுத்தவில்லை. ராகேலை விட லேயாள் அற்பமாய் எண்ணப்பட்ட போதும், அவளுடைய வம்சத்தின் வழியாகவே (யூதா) மேசியாவாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார்.
ஏழு ஆண்டுகளைச் சில நாட்களாகக் கருதி யாக்கோபு உழைத்த அந்த அன்பு, நாம் நம் தேவன் மேல் வைத்திருக்க வேண்டிய அன்பிற்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த அருமையானவர்களே இன்று நாம் எதை விதைத்துக் கொண்டிருக்கிறோம்? மாம்சத்தின் இச்சைகளையா அல்லது ஆவியின் கனிகளையா? யாக்கோபைப் போலச் சாமர்த்தியமாக வாழ்வதை விட, தேவனுடைய சித்தத்திற்குப் பணிந்து வாழ்வதே மேலானது. நம்முடைய கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொடுத்து, “ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினால் நித்திய ஜீவனை அறுப்பான்” என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக்கொள்வோம். கர்த்தர் நிச்சயம் உங்கள் வாழ்க்கையையும் ஆசீர்வதிப்பார்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top