ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 28
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 28
நிகழ்ச்சி எண்: 0046

வாசியுங்கள்

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். ‘

இந்த உண்மையை அறிந்தவர்களாய் மீண்டும் எங்களோடு இணைந்து இருக்கிற உங்களை வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்.
இன்று நாம் ஆதியாகமம் 28 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம். .

கடந்த அதிகாரத்தில், ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகக் கேவலமான காரியங்களில் ஒன்றை யாக்கோபு செய்ததைக் படித்தோம். யாக்கோபு அதைத் தன் தாயின் தூண்டுதலின் பேரில் செய்தான். பொதுவாக, சிலர் தாங்கள் மோசமாக நடந்துகொள்வதற்கு, “சிறுவயதில் என் தாய் என் மீது அன்பு காட்டவில்லை” என்று சாக்குப்போக்கு சொல்வார்கள். ஆனால், யாக்கோபால் அப்படிச் சொல்லவே முடியாது. யாக்கோபு மிகுந்த அன்புடன் செல்லமாக வளர்க்கப்பட்டவரன். ஒரு கௌரவமற்ற காரியத்தைச் செய்யுமாறு அவனிடம் கேட்கப்பட்டபோது, யாக்கோபு அதைச் செய்தான். அவர் தன் சகோதரனிடமிருந்து தலைமகனுக்குரிய உரிமையைப் பறித்துக்கொண்டான்.
உண்மையில், அந்த உரிமை ஏற்கனவே அவருடையதாகத்தான் இருந்தது. அவருடைய தந்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற சடங்கு முறையே அவசியமில்லாத ஒன்று. ஆபிரகாம் ஈசாக்கை ஆசீர்வதிக்கவில்லை—தேவனே ஆசீர்வதித்தார்! அதேபோல யாக்கோபுக்கு அந்த ஆசீர்வாதத்தைக் கொடுத்ததும் தேவன்தான். யாக்கோபின் தந்திரமான செயல் தேவையற்றது. – அதுமட்டுமல்ல, அதற்காக தேவன் அவரை நிச்சயமாகத் தண்டிப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
இப்போது ரெபெக்காள் தீட்டியுள்ள திட்டம் நம்பக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சூழநிலையில் அது சரியான செயலாகவும் இருக்கலாம். ஏசாவின் கோபத்திலிருந்து யாக்கோபு தப்பிக்க வேண்டும் என்பதற்காக யாக்கோபை தன் சகோதரனிடம் அனுப்ப விரும்புவதை அவள் ஈசாக்கிடம் தெரிவிக்கவில்லை. மாறாக, அங்கே தன் குடும்பத்திலிருந்தே யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை மட்டும் அவள் கூறினாள்.
இந்த அதிகாரத்தில், யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுவதைப் பார்க்கிறோம். அவன் பெத்தேலுக்கு வருகிறான், அங்கே தேவன் அவனுக்குத் தரிசனமாகி, ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை யாக்கோபுக்கு உறுதிப்படுத்துகிறார்.

ஆதியாகமம் 28:1
‘1ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், ‘
…………………
பழைய ஏற்பாடு முழுவதிலும், தேவபக்தியுள்ளவர்கள் தேவ பக்தியற்றவர்களைத் திருமணம் செய்வதை தேவன் விரும்புவதில்லை என்பதை பார்க்கிறோம். இதைக் காரணமாகக் கொண்டே, ஆதியாகமம் ஆறாம் அதிகாரத்தில் “தேவகுமாரர்கள் மனுஷகுமாரத்திகளை தங்களுக்குத் தெரிந்து கொண்டார்கள்” என்று சொல்லப்படும்போது, தேவபக்தியுள்ள சந்ததியினர், காயீனின் வழியில் வந்த பக்தியற்ற சந்ததியினருடன் திருமண உறவு கொண்டதையே அது குறிக்கிறது என்று கற்றுக் கொண்டோம். இதன் விளைவாகவே, இறுதியில் ஜலப்பிரளயம் எனும் நியாயத்தீர்ப்பு உண்டானது; அப்பொழுது ஒரே ஒரு தேவபக்தியுள்ள மனிதன் (நோவா) மட்டுமே எஞ்சியிருந்தார் என்பதையும் பார்த்தோம்.
கர்த்தர் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுடன் திருமண உறவு எப்போதும் பக்தியற்ற நிலைக்கே கொண்டு செல்லும். இதை நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இன்றைய இளைஞர்கள் ஒரு முதிய போதகரின் ஆலோசனையை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நான் அறிவேன். “இவருக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவர்கள் நினைக்கலாம். உண்மையைச் சொல்லப்போனால், இந்த விஷயத்தைப் பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். பல ஆண்டுகளாக நான் ஆலோசனைகளை (Counseling) வழங்கி வருகிறேன்; எண்ணற்ற தம்பதியினர் என்னிடம் வந்திருக்கிறார்கள், அவர்களைப் பல ஆண்டுகளாக நான் கவனித்தும் வந்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் கதை பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஒரு இளம் பெண்ணோ அல்லது வாலிபனோ, தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்வார்கள். ஆனால் அந்த நபர் கர்த்தரை அறிந்தவராக இருக்க மாட்டார்கள். இருந்தாலும், அவர்களையே திருமணம் செய்து கொண்டு கர்த்தருக்குள் வழிநடத்திவிடலாம் என்று அவர்கள் நினைப்பார்கள். அருமையான வாலிப பெண்ணே, உனக்கு நான் ஒன்றைச் சொல்லவா? திருமணத்திற்கு முன்பே அவரை நீ கர்த்தரிடம் கொண்டுவர முடியாவிட்டால், திருமணத்திற்குப் பிறகு உன்னால் நிச்சயமாக அதைச் செய்ய முடியாது. அருமையான வாலிப தம்பி, உனக்கும் இதுதான் பொருந்தும்.
பக்தியுள்ளவர்கள் பக்தியற்றவர்களைத் திருமணம் செய்வதை தேவன் தடை செய்திருக்கிறார். இது எப்போதும் துயரத்தையே தரும். நான் அநேக உதாரணங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இது போன்ற திருமணங்கள் வெற்றிகரமாக அமைந்ததில்லை. உங்களால் தேவனை மிஞ்ச முடியாது. “பக்தியுள்ளவர்கள் பக்தியற்றவர்களைத் திருமணம் செய்யக்கூடாது” என்பதை தேவன் தனது வேதம் முழுவதிலும் அழியாத வகையில் பலமுறை பதிவு செய்திருக்கிறார். “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” என்றுதான் (2 கொரிந்தியர் 6:14).ல் பவுல் எழுதியிருக்கிறார்.
விசுவாசிகள் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது என்று புதிய ஏற்பாடு கண்டிப்பாகக் கூறுகிறது. ஒரு பொதுக் கூட்டத்தில் மேடையில் அவிசுவாசியுடன் அமர்ந்திருப்பதன் மூலம் நீங்கள் “அந்நிய நுகத்தில்” பிணைக்கப்படுவதில்லை! ஆனால் அவிசுவாசிகளை திருமணம் செய்வதன் மூலமாகவே நீங்கள் அவர்களோடு இணைகிறீர்கள். இதை தேவன் கண்டிப்பாகத் தடை செய்கிறார்.
ஆதியாகமம் 28:2-4
‘2எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 3சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; 4தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; ‘
………………………..
ஆபிரகாமுக்குக் கடவுள் வழங்கிய ஆசீர்வாதத்தை, கடவுள் இப்போது தன்னிடம் மாற்றியுள்ளார் என்பதையும், இந்த ஆசீர்வாதம் தனது மகன் யாக்கோபுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஈசாக்கு இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்.
ஆதியாகமம் 28:5
‘5ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான். ‘
…………………….
இந்தக் குடும்பத்தின் தேசி பின்னணி பற்றிக் கூற வேண்டுமானால், அவர்கள் சீரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனெனில் வேதவசனங்களில் அவர்கள் அவ்வாறே அழைக்கப்படுகிறார்கள். “ஆபிரகாம் ஒரு யூதரா? அவர் ஓர் இஸ்ரவேலரா?” என்ற கேள்வி சில நேரங்களில் கேட்கப்படுகிறது. இல்லை, உண்மையில் அவர் அப்படி இல்லை. யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படும் வரை இஸ்ரவேலர்கள் என்று யாருமில்லை. யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களே இஸ்ரவேலர்கள். ஆபிரகாமின் வழியில்தான் இந்த இனம் உருவானது, அவரே இந்த இனத்தின் தந்தை; ஆனால் நீங்கள் ஆபிரகாமை ஒரு மீதியானியர் என்று அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், ஆனாலும் அவரே மீதியானியர்களுக்கும் தந்தை ஆக இருக்கிறார்.
ஆதியாகமம் 28:6-9.
‘6ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், 7யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும், 8கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், 9ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம் பண்ணினான். ‘
………………………
இஸ்மவேலின் வம்சாவளியை நாம் கடந்து வந்துவிட்டோம் என்று நான் கூறியதன் பொருளை யாராவது தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் இதை விளக்குகிறேன் கவனியுங்கள்; வேதாகமம் இனி அவருடைய வம்சாவளியைத் தொடர்ந்து பின்தொடராது. – இருந்தாலும், கிறிஸ்துவின் பிறப்புக்கு இட்டுச் செல்லும் வம்சாவளியோடு குறுக்கிடும் இடங்களில் மட்டும் இஸ்மவேலின் வம்சத்தைக் குறித்த குறிப்புகள் வரும்.
இங்கே, ஏசா வெளியே சென்று இஸ்மவேலின் மகளைத் திருமணம் செய்து கொள்கிறான். இது தன் தந்தையைப் பிரியப்படுத்தும் என்று அவன் நினைக்கிறான். அவனிடம் ஆன்மீகப் புரிதல் (Spiritual perception) எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை கவனித்தீரக்ளா??. கானானியர்களோ அல்லது பெலிஸ்தியர்களோ எவ்வாறு நிராகரிக்கப்பட்டார்களோ, அதுபோலவே இஸ்மவேலர்களும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 28:10-11
’10யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். ‘
………………………
பிரயாணப்பட்டு வருகிற யாக்கோபு தங்கிய இடத்தின் பெயர்தான், பெத்தேல். அது தேவனுடைய வீடு எனப்படும். இந்த பெத்தேல் எருசலேமிலிருந்து 12 மைல் தூரம் வடக்கே இருக்கிறது. யாக்கோபு விட்டுவந்த அவனுடைய வீடு 25 லிருந்து 35 மைல் எருசலேமிற்கு தெற்கே இருக்கிறது. கிட்டத்தட்ட முதல் நாளிலேயே 40 மைல் தூரம் யாக்கோபு கடந்து சென்றுவிட்டார். ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறார்? ஏசாவின் கைக்குத் தப்பிப்போய்க் கொண்டிருக்கிறான்.. ஏசாவை விட்டு எவ்வளவு தூரமாகச் செல்கிறானோ, அவ்வளவு தூரமாய் தன்னுடைய வீட்டை விட்டே யாக்கோபு போகிறான்..

அருமையானவர்களே அன்று இரவிலே யாக்கோபு என்ன நினைத்திருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மிகவும் அதிகமான ஒரு தனிமையை உணர்ந்திருப்பான் இல்லையா? நிச்சயமாய் அப்படித்தான் உணர்ந்திருப்பான். வீட்டு எண்ணமே சுற்றி சுற்றி வந்திருக்கும். வேத வசனங்களிலே எழுதப்பட்டிருக்கிறதின்படி யாக்கோபு வீட்டை விட்டு தூரமாய்ப் போகும் முதல் நாள். மற்றும் முதல் இரவு அதுதான்.

நீங்கள் உங்கள் வீட்டைவிட்டு வெளியிடத்திலே முதன்முறையாக தங்கவேண்டிய சூழ்நிலை வந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? முதன்முறையாக நீங்கள் வீட்டைவிட்டு ஒருவேளை ஒரு மைல் தூரம் போயிருந்தாலும், அது ஐந்து மைல் தொலைவு போல தெரிந்திருக்கும்.

இப்பொழுது நீங்கள் அதே இடத்திற்கு செல்வீர்கள் என்றால் இவ்வளவு பக்கத்தில் இருக்கிறதா என்று நீங்கள் நினைப்பீர்கள். முதல் முறையாக கல்லூரிப் படிப்பிற்காக வீட்டைவிட்டுப் போன நீங்கள் அந்த இரவிலே எப்படி உங்கள் வீட்டைக்குறித்து சிந்தித்தீர்கள் என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள். அதே போலத்தான் யாக்கோபும் அந்த இரவிலே வீட்டின் எண்ணத்தோடு படுத்துக் கொண்டிருந்திருப்பான்.

முதல் முறையாக ரெபெக்காளைவிட்டுத் தனியாக புறப்பட்டுப் போகிறான். இங்கே என்ன நடக்கிறது பாருங்கள். அங்கேயிருந்த கற்களிலே ஒன்றை எடுத்து தலையனையாக வைத்துப் படுத்துக்கொள்கிறான். பெத்தேல் என்கிற இந்த இடம் பாறைகளால் நிறைந்த ஒரு இடம் கடல் மட்டத்தைவிட 1200 அடி உயரமான ஒரு இடம். அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே உன்னதமான ஒரு இடம் இது என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 28:12-13
’12அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். ‘
…………………..
யாக்கோபு அந்த இரவில் அந்த சொப்பனத்தை பெற்றுக் கொள்கிறான். ஆபிரகாம் இந்த கானானுக்குள் வந்த பொழுதும் முதல் முறையாக தரிசனமான பொழுதும் இரவிலே தான் தரிசனமானார்.
ஆதியாகமம் 28:14
’14உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ‘
……………………
ஆபிரகாமுக்குக் கடவுள் எதை வாக்குக் கொடுத்தாரோ, அதையே அவர் யாக்கோபுக்கும் கொடுக்கிறார்; அதை அவர் ஈசாக்கிடம் மீண்டும் ஒருமுறை கூறினார், இப்போது மீண்டும் நான் இதைச் செய்வேன் என்று யாக்கோபிடம் அவர் ஒருமுறை உறுதியளிக்கிறார்.
ஆதியாகமம் 28:15
’15நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத்திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். ‘
………………….
அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்த, தனிமையில் வாடும், வீட்டின் நினைவால் ஏங்கும் யாக்கோபுக்கு இது எவ்வளவு ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்திருக்கும் என்பதை உங்களால் யோசித்துப் பார்க்க முடிகிறதா?. அவன் ஒரு தொலைதூர தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கிறான், அந்த முதல் இரவிலேயே கடவுள் அவனிடம், “யாக்கோபே, நான் உன்னுடனே இருப்பேன், உன்னைத் திரும்பவும் இந்தத் தேசத்திற்கு அழைத்து வருவேன்,” என்று கூறுகிறார்.
கடவுள் அவனுக்குக் கனவில் அளித்த அந்தத் தரிசனம், பரலோகம் வரை எட்டுகிற ஒரு ஏணியைப் பற்றியது. அந்த ஏணி எதைக் குறிக்கிறது? யோவான் 1:45-51-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு நாத்தான்வேலை அழைத்தபோது இதற்கு விளக்கம் அளித்தார். சொல்லப்போனால், நாத்தான்வேல் தன்னைத்தானே அறிவாளியாகக் கருதுபவர்; அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, “நாசரேத்திலிருந்து ஏதேனும் நன்மை உண்டாகக்கூடுமா?” என்று கேட்டார். இயேசு அவனிடத்தில் பக்குவமாக நடந்துகொண்டார். “என்னை நீர் எப்படி இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்?” என்று நாத்தான்வேல் கேட்டார். அதற்கு இயேசு, “பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பே, நீ அத்திமரத்தின் கீழிருந்தபோது உன்னைக் கண்டேன்,” என்றார். நாத்தான்வேல் முதலில் சந்தேகப்பட்டவராக இருந்தாலும், மிக எளிதில் நம்பிக்கை கொண்டார். அவர், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்; நீர் இஸ்ரவேலின் ராஜா,” என்று பதிலளித்தார்.
அதற்கான சரியான வசன வரிகளை வாசுகிறேன். (யோவான் 1:50-51).
“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் சொன்னதினாலவா விசுவாசிக்கிறாய்? இதிலும் பெரிய காரியங்களைக் காண்பாய் என்றார். பின்னும் அவர் அவனை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதற்குப் பின்பு வானம் திறந்திருக்கிறதையும், தேவகதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுவதையும் இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்”
…………………..
அந்த ஏணி எதைக் குறிக்கிறது? தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்; அவர்கள் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். அந்த ஏணியின் உச்சியிலிருந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்ற தேவனுடைய சத்தத்தை நாத்தான்வேல் கேட்பார். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே, நம்முடைய காலத்தில் கடவுள் கிறிஸ்துவின் மூலமாகவே மனிதகுலத்திடம் பேசுகிறார். நாம் நேரடியாகப் பிதாவினிடத்தில் வர முடியாது. அவ்வப்போது யாராவது சாட்சி சொல்லும்போது, “நான் மனமாற்றம் அடைந்தபோது, நேரடியாகக் கடவுளிடம் வந்தேன். எனக்குக் கடவுளிடம் நேரடி அணுகல் (access) உள்ளது” என்று சொல்வார்கள். ஆனால் பிரியமானவர்களே நமக்கு அப்படி இல்லை. நாம் கிறிஸ்துவின் மூலமாகவே வருகிறோம்; கிறிஸ்துவின் மூலமாகவே பிதாவினிடத்தில் சேரும் உரிமையைப் பெறுகிறோம். தேவனுடைய சமுகத்திற்குள் நாம் செல்லக்கூடிய ஒரே வழி இதுதான். கர்த்தராகிய இயேசு என்ன சொன்னார்:
(யோவான் 14:6)
“…நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்”
,,,,,,,,,,,,,,,,
. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அந்த ஏணி—நாம் ஏறிச் செல்வதற்கான ஏணி அல்ல, நாம் நம்புவதற்கான (trust) ஏணி.
இந்த உண்மை முதலில் ‘ஏமாற்றுக்காரனாக’ இருந்த யாக்கோபுக்குதான் கொடுக்கப்பட்டது. நாத்தான்வேலைப் பார்த்து இயேசு, “இதோ, கபடு இல்லாத உத்தம இஸ்ரவேலன்” என்றார்—அதாவது, அவனிடம் ‘யாக்கோபுத்தனம்’ அதாவது (வஞ்சகம்) இல்லை. நாத்தான்வேல் ஒரு அறிவாளி, நகைச்சுவை உணர்வு மிக்கவர், ஆனால் அவர் யாக்கோபைப்போல ஏமாற்றுக்காரர் அல்ல. ஆனால் இந்த மனிதனாகிய யாக்கோபுவை—கடவுள் கையாள வேண்டியிருக்கிறது. கடவுள் இவனுக்கு இந்த அற்புதமான, மகிமையான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார், ஆனால், யாக்கோபு இன்னும் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!
இது இன்று நம் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானது இல்லையா? கடவுள் நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கடவுள் நம்மை ஒழுங்குபடுத்த (discipline) வேண்டியிருப்பதிலும் வியப்பில்லை. அவர் தாம் ஏற்றுக்கொள்கிற ஒவ்வொரு மகனையும் தண்டிக்கிறார் (scourges). அவர் நம்மைச் சீர்படுத்துகிறார். அவர் அதை ஆபிரகாமுக்கும் செய்தார், ஈசாக்குக்கும் செய்தார். இப்போது யாக்கோபுக்கும் அதைச் செய்யப்போகிறார். இதுவரையில், அனைத்தும் யாக்கோபுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டிருந்தன./ / / /
ஒரு இரவு திடீரெனத் தங்களது இரண்டு வயது சிறுவனை இழந்த ஒரு தம்பதியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதுவரை எல்லாமே அவர்களுக்குச் சாதகமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சபையில் உறுப்பினர்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் வேஷதாரிகளாக (hypocrites) இருந்தார்கள். பலர் சபையில் உறுப்பினர்களாக மட்டுமே இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஆண்டவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆண்டவர் நம்மை உலுக்க வேண்டியிருக்கிறது. நம்மைச் சீர்படுத்துவதற்காக சோதனைகள் நம்மிடம் வர அவர் அனுமதிக்கிறார். அவை நம் முதுகெலும்பில் இரும்பு போன்ற உறுதியைத் தருகின்றன; அவை நம் வாழ்வில் தைரியத்தைத் தந்து, கடவுளுக்காக உறுதியுடன் நிற்க நமக்கு உதவுகின்றன.
யாக்கோபு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள்—
ஆதியாகமம் 28:16-17
’16யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். ‘
………………….
அருமையானவர்களே கவனித்தீர்களா?/ இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாய் இருக்கிறது? சில ஊழியர்கள் ஆலய பிரதிஷ்டை ஆராதனையில் கூட இந்த வசனத்தை பயன்படுத்துவார்கள். அதே வழியில் தேவனை சந்திக்க வாஞ்சையுள்ள பாவிகளுக்கு அது சந்தோஷமான ஒரு இடம். தேவனோடு முகத்திற்கு முகம் அவர்கள் சந்திக்கும் இடம். – எப்படி??
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த ஏணியின் மூலமாக, அதாவது கிறிஸ்து மூலமாகவே இது சாத்தியமாகிறது.
யாக்கோபு தன் வீட்டை விட்டு ஓடிவந்தபோது, கடவுளைப் பற்றிய அவனது பார்வை மிகவும் குறுகியதாக இருந்தது. தான் வீட்டை விட்டு ஓடும்போது, கடவுளை விட்டும் ஓடிவிடுவதாகவே அவன் நினைத்தான். ஆனால், தான் கடவுளை வீட்டில் விட்டுவிட்டு வரவில்லை என்பதை அவன் கண்டுகொண்டான். அவன் ஆச்சரியத்துடன், “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன்” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறான்.
ஆதியாகமம் 28:18-19
’18அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, 19அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.
…………………..
கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் அதிகமாக இருக்கின்றன அதற்கு ஒரு வெளிப்படையான அடையாளத்தை கவனியுங்கள்.
வாசிக்கிறேன் ஆதியாகமம் 28:20-21
’20அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; ‘
…………………
யாக்கோபு இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் கடவுளோடு பேரம் பேசுகிறான். “இப்போது, தேவனே, நீர் எனக்காக இதைச் செய்தால்…” என்று அவன் கூறுகிறான். ஆனால் கடவுள் ஏற்கனவே இவை அனைத்தையும் அவனுக்காகச் செய்யப்போவதாகச் சொல்லிவிட்டார்—”நான் உன்னைப் பாதுகாப்பேன்; உன்னைத் திரும்பவும் இந்தத் தேசத்திற்கு அழைத்து வருவேன்; இந்தத் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குச் சந்ததியையும் தருவேன்.” என்று கூறிவிட்டார். ஆனால் யாக்கோபோ அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவரிடம் பேரம் பேசுகிறான், “நீர் இதைச் செய்தால், நான் உம்மைச் சேவிப்பேன்.”
கடவுள் நம்முடன் அந்த முறையில் ஒரு பொழுதும் வியாபாரம் செய்வதில்லை. அவர் யாக்கோபுடனும் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை அவர் அப்படிச் செய்திருந்தால், யாக்கோபு ஒருபோதும் அந்தத் தேசத்திற்குத் திரும்பியிருக்க முடியாது. கடவுள் தமது கிருபையினாலும் இரக்கத்தினாலுமே அவனை மீண்டும் அந்தத் தேசத்திற்கு அழைத்து வந்தார். யாக்கோபு இறுதியாகப் பெத்தேலுக்குத் திரும்பியபோது, அவன் அதிக ஞானமுள்ள மனிதனாகத் திரும்பினான். அவன் எதற்காகத் திரும்பினான் தெரியுமா? கடவுளுடைய இரக்கத்திற்காக அவரைத் தொழுதுகொள்ளவும் துதிக்கவும் திரும்பினான். கடவுள் அவன் மீது மிகுந்த இரக்கம் காட்டினார்.
இன்றும்கூடப் பல மனிதர்கள், ஆண்டவர் தங்களுக்கு இன்னின்ன காரியங்களைச் செய்தால் அவரைச் சேவிப்பதாகச் சொல்கிறார்கள். அருமையானவர்களே, நீங்கள் அப்படி எதையும் செய்யப்போவதில்லை. அவர் அந்த முறையில் வியாபாரம் செய்வதில்லை. அவர் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்கு இரக்கம் காட்டுவார், கிருபை செய்வார். ஆனால், நீங்கள் அவரை நேசித்தால், அவரைச் சேவிக்க உண்மையிலேயே விரும்புவீர்கள் என்று அவர் கூறுகிறார். அது அன்பின் பிணைப்பாக (bondage of love) இருக்கும். ஒரு தாய் தன் சிறு குழந்தையிடம் வைத்திருக்கும் அதே போன்ற ஒரு அன்பு அது. அவள் அந்தக் குழந்தைக்குத் அடிமையாகவே ஆகிறாள். நீங்களும் நானும் அவ்வாறு இருக்கவே அவர் விரும்புகிறார்.
ஆதியாகமம் 28:22
’22நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.’
ஆம். தன் தலையின் கீழ் வைத்திருந்த அந்தக் கல்லை எடுத்து. அதைக் தூணாக நிறுத்தி அதின்மேல் எண்ணெய் வார்த்து இந்தக்கல் தேவனுக்கு வீடாகும் என்று சொல்கிறான். மீண்டுமாக தேவனிடத்தில் நீர் எல்லாவற்றையும் எனக்குச் செய்தால் நான் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லி பொருத்தனை பண்ணுகிறான்.
இன்றும் நம்மில் அநேகர், ஆண்டவரே நீர் எனக்கு இதைச் செய்தால் அதற்கு நான் இவ்வளவு ரூபாய் காணிக்கைக் கொடுப்பேன் என்று தேவனிடத்திலே பேரம் பேசுகிறோம். அருமையானவர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேலே நீங்கள் விசுவாசம் வைப்பதின் மூலமாக பிதாவாகிய தேவனின் பிள்ளைகளாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
இந்த அதிகாரத்திலே நாம் கற்றுக் கொள்கிற பாடம் என்ன? நீங்கள் தேவனைவிட்டு தூரமாய் ஓட முடியாது. யாக்கோபு வீட்டைவிட்டு ஓடினான். ஆனால் தேவன் அவனோடேயே சென்றார் என்பதை அவன் கண்டுகொள்கிறான். அவன் தனித்துப் படுத்திருந்த பொழுது தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனுடைய வாழ்க்கையிலே செய்யப்போகிற காரியங்களைக் குறித்து வாக்குக்கொடுத்தார்.
இன்றைக்கும் நீங்கள் வீட்டைவிட்டு எங்கோ ஒரு இடத்திலே தூரமாகப் போய் தனித்து நீங்கள் படுத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அங்கேயும் உங்கள் தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை மறந்துபோக வேண்டாம். உங்களுக்கு இன்று ஏற்கனவே தேவன் வாக்குப்பண்ணின ஆசீர்வாதங்களை நிச்சயமாக அவர் உங்களுக்குத் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் விசுவாசத்தில் குறைந்து போனதினாலே உங்களுக்கு அவர் வாக்குப்பண்ணியதைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறவர் அல்ல. அவர் உங்களோடு இருந்து நீங்கள் போகிற இடத்திலெல்லாம் உங்களைக் காத்து உங்களைத் திரும்பிவரப்பண்ணுவார்.
ஏனென்றால் அவர் சொன்னதைச் செய்யாமல் இருப்பவர் அல்ல. யாக்கோபு தேவனோடு வியாபாரம் பேசியது போல நம்மிலே ஒருவரும் வியாபாரம் பேசாமல் இருக்க வேண்டும்.
ஆண்டவரே நீர் இதை இதையெல்லாம் எனக்குச் செய்தால் நான் இதை இதையெல்லாம் உமக்குச் செய்வேன் என்று சொல்லாமல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிலே அன்புள்ளவராய், ஏற்கனவே நமக்காக நம்முடைய ஜீவனையே கொடுத்தவர் என்பதை விசுவாசித்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்முடைய அன்பை மட்டும் நாம் அவருக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருப்போமென்று சொன்னால், நம்முடைய வாழ்க்கையிலே அவர் வைத்திருக்கிற திட்டங்களையும் நோக்கங்களையும் அவருடைய நாம மகிமைக்காக அந்தந்தக் காலக்கட்டங்களிலே நிறைவேற்றுவார்.
அவர் பொய்சொல்ல மனிதனல்ல. தாம் சொன்னதை நிச்சயமாய் செய்வார். ஆண்டவரிடத்திலே இதையெல்லாம் எனக்குச் செய்தால் நான் இதைத் தருவேன் என்று சொல்வதைவிட ஆண்டவரே என்னையே உமக்குக் கொடுக்கிறேன். எனக்கு நீர் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களை நான் உமக்கும், உம்முடைய ஊழியத்திற்கும், உம்முடைய திருச்சபைக்கும் கொடுக்கிறேன். நீரே தொடர்ந்து என்னை வழிநடத்தும் என்ற விசுவாசத்தோடு நம்மையும். நமக்குள்ளதையும் கர்த்தருக்கு நாம் கொடுக்கும்பொழுது ஆண்டவர் அதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறவராய் நம்மை நித்தமும் அவர் வழிநடத்த ஆவலுள்ளவராய் இருக்கிறார்.@@@@@@@
அருமையானவர்களே,
யாக்கோபு பெத்தேலில் கண்ட அந்த ஏணி, வானத்தையும் பூமியையும் இணைக்கும் ஒரு பாலம் மட்டுமல்ல; அது நம்மைத் தேடி இறங்கி வந்த இயேசு கிறிஸ்துவே ஆகும். நாம் நம்முடைய நற்கிரியைகளாலோ அல்லது தந்திரங்களாலோ பரலோகத்தை எட்ட முடியாது என்பதை யாக்கோபு கற்றுக்கொண்டார். நாம் முயற்சி செய்து மேலே ஏறுவதற்கு அது ஏணி அல்ல, நம்மைத் தூக்கிச் சுமக்க இறைவன் உலகத்திற்கு இறங்கி வர அமைத்த வழி.
1. நாம் ஓடினாலும் விலகாத தெய்வம் அவர்-: யாக்கோபு தன் பாவத்தாலும், பயத்தாலும் வீட்டை விட்டு ஓடினார். தான் தேவனையும் விட்டு ஓடிவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால், கல்லைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்த அந்தத் தனிமையான வனாந்தரத்திலும் தேவன் அவரோடு இருந்தார். “நான் உன்னைக் கைவிடுவதில்லை” என்ற வாக்குறுதி யாக்கோபுக்கு மட்டுமல்ல, இன்று தனிமையில் தவிக்கும் உங்களுக்கும் உரியது. நீங்கள் எங்கே சென்றாலும், தேவன் உங்களை முந்திக்கொண்டு அங்கே காத்திருக்கிறார்.
2. நாம் இன்று செய்ய வேண்டியது – வியாபாரம் அல்ல அர்ப்பணிப்பு: யாக்கோபு ஒரு ‘வியாபாரி’யைப் போல இறைவனிடம் பேரம் பேசினார்: “நீர் எனக்கு இதைச் செய்தால், நான் உம்மைச் சேவிப்பேன்.” ஆனால், தேவன் அவரோடு வியாபாரம் செய்யவில்லை; மாறாக, தமது கிருபையை ஊற்றினார். இன்று நாமும் “ஆண்டவரே, எனக்கு ஒரு அற்புதம் செய்தால் நான் காணிக்கை தருகிறேன்” என்று பேரம் பேசுகிறோமா? ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய பணத்தையோ அல்லது பொருள்களையோ அல்ல; நம்முடைய அன்பை மட்டுமே.
3. கடவுளுடைய அன்பின் பிணைப்பு (Bondage of Love): ஒரு தாய் தன் குழந்தையை நேசிப்பதால் அதற்கு அடிமையாகிப் பணிவிடை செய்வது போல, கிறிஸ்து நம் மீது கொண்ட அன்பினால் நமக்காகத் தம் ஜீவனையே தந்தார். அந்த அன்பை நாம் உணரும்போது, “நீர் இதைச் செய்தால் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்ற நிலை மாறி, “நீர் எனக்காக யாவையும் செய்து முடித்தீர், அதனால் நான் என்னையே உமக்குத் தருகிறேன்” என்ற உன்னத நிலைக்கு நாம் உயர்வோம்.
ஜெபம்: “அன்புள்ள ஆண்டவரே, யாக்கோபை அவன் இருந்த இடத்திலேயே சந்தித்தது போல, இன்று எங்களையும் சந்தித்ததற்காக உமக்கு நன்றி. நாங்கள் உம்மிடம் பேரம் பேசாமல், உம்முடைய நிபந்தனையற்ற கிருபையைச் சார்ந்து வாழக் கற்றுத்தாரும். நீர் எங்களுக்கு அமைத்துத் தந்த அந்த ‘ஏணியாகிய’ இயேசு கிறிஸ்துவின் வழியாகப் பிதாவண்டை வந்து சேர, இந்த சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தாழ்மையோடு ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.”

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top