ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 24:31-67
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 24:31-67
நிகழ்ச்சி எண்: 0042

வாசியுங்கள்

அருமையான நேயர்களே உங்களை கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன். இப்பொழுது நாம் ஆதியாகமம் 24 ஆம் அதிகாரம் 31 முதல் 67 ஆம் வசனம் வரைக்கும் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
பாருங்கள் ஆதியாகமம் 24:31
‘அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான். ‘

இங்கே நாம் வாசிப்பது போல லாபானும் – கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று கூறுகிறார். இது எதை நமக்கு காட்டுகிறது ராபானும் சகலத்தையும் சிருஷ்டித்த ஒரு தேவன் உண்டு என்பதை உணர்ந்தவனாயிருக்கிறான்.
ஆதியாகமம் 24:32
‘அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். ‘
………………………
மீண்டும், இங்கே கால்களைக் கழுவும் சம்பிரதாயத்தை பார்க்கிறோம். ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் இன்னும் சில மனிதர்கள் வந்திருப்பதை கவனியுங்கள். இந்த வீட்டில் அந்த ஊழியக்காரன் மிகச்சிறப்பாக உபசரிக்கப்படுகிறான்— லாபான் அதை எல்லாம் பொறுப்போடு செய்கிறார்.
கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இடையே உள்ள உறவைப் பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை இங்கே நாம் காண்கிறோம். புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களில் ஒன்று என்னவென்றால், சபை ஒரு நாள் கிறிஸ்துவின் மணவாட்டியாகப் போகிறது என்பதுதான். பிதாவும் குமாரனும் இந்த உலகத்திற்கு அனுப்பிய பரிசுத்த ஆவியானவர் மூலமாகவே இன்று சபை மணவாட்டியாக ஆதாயப்படுத்தப்படுகிறது. ஆபிரகாமின் ஊழியக்காரனைப் போலவே, தேவனுடைய ஆவியானவரும் வேறொருவரைப் பற்றிப் பேசவும், கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து நமக்குக் காண்பிக்கவும் வந்திருக்கிறார்.
இந்த ஊழியக்காரன் ஈசாக்கிற்கு ஒரு மணவாட்டியை அழைத்து வரச் சென்றது போலவே, தேவனுடைய ஆவியானவரும் கிறிஸ்துவுக்கு ஒரு மணவாட்டியை அதாவது சபையை அழைப்பதற்காக இந்த உலகத்தில் இருக்கிறார். இங்கே இருக்கும் அற்புதமான நாடகத் தன்மையைக் கவனியுங்கள். இது மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு கதையாகவும், அக்காலத்தைப் பற்றிய ஒரு உன்னதமான பதிவாகவும் இருக்கிறது.
ஆதியாகமம் 24:33
‘பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான். ‘
………………………
ஆபிரகாமின் ஊழியக்காரன், “நான் சாப்பிடுவதற்கு முன்பாக, நான் வந்த நோக்கத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்று சொல்கிறான். இது, மற்றொருவரைப் பற்றி அறிவிப்பதற்காக இவ்வுலகிற்கு வந்த பரிசுத்த ஆவியானவரின் பண்பையும் நமக்குக் காட்டுகிறது. தேவனைப் பொறுத்தவரை இதுவே முதன்மையான பணியாகும். நம்முடைய அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஊடகங்களின் பெரும்பணிகள், மாபெரும் நிறுவனங்கள், வாகனம் மற்றும் விமான நிறுவனங்கள் என மிக முக்கியமான பல தொழில்கள் மற்றும் செயல்பாடுகள் இன்று உலகில் இருக்கிறது. இவை அனைத்தும் முக்கியமானவை, பெரிய காரியங்கள்தான்.
ஆனால், அரசியல் கட்சிகளை குறித்தோ, உலகத்தில் உள்ள மற்ற காரியங்களை குறித்தோ, பங்குச் சந்தையைப் பற்றியோ, பரலோகத்தில் பெரிய அக்கறை எதுவும் இல்லை. தேவனைப் பொறுத்தவரை முதன்மையான விஷயம் என்னவென்றால், இந்த உலக மக்களுக்கு நற்செய்தியை (Gospel) கொண்டு செல்வதுதான். இதற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே தேவனுடைய ஆவியானவர் இங்கே இருக்கிறார். அதுபோலவே இங்கே ஆபிரகாமின் ஊழியக்காரன் தான் வந்த நோக்கத்தைப் பேசி முடிக்கும் வரை சாப்பிட மறுக்கிறான்; எனவே அவர்கள் அவனைப் பேசச் சொல்கிறார்கள்.
ஆதியாகமம் 24:34
‘அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். ‘
……………………..
கவனித்தீர்களா? இந்த இடத்திலும் அந்த ஊழியக்காரனுடைய பெயர் கொடுக்கப்படவில்லை. அதைப் போலவே, பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் தம்மைப் பற்றிப் பேசாமல், என்னுடையவைகளை எடுத்து உங்களுக்குத் தெரிவிப்பார் என்று யோவான் 16ல் கர்த்தராகிய இயேசு சொல்லி இருக்கிறார். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், பரிசுத்த ஆவியானவரின் பெயர் என்ன? அவருக்குப் பெயர் இல்லை. அவர் தம்மைப் பற்றிப் பேச வரவில்லை; அவர் மற்றொருவரைப் பற்றி, அதாவது கிறிஸ்துவைப் பற்றிப் பேசவே வந்திருக்கிறார். அதேபோல, இந்த ஊழியக்காரருக்கும் பெயர் குறிப்பிடப்படவில்லை, அவர் வெறுமனே ஆபிரகாமின் ஊழியக்காரர் என்றே அழைக்கப்படுகிறார்.
ஆதியாகமம் 24:35
‘ கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். ‘
………………………..
அந்த ஊழியக்காரன் தனது எஜமானுடைய வீட்டைப் பற்றிப் பேசுகிறான். இதையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவரும் விரும்புகிறார். அவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டிக்கிறார்—இந்த மூன்று காரியங்களைப்பற்றியே, அவர் வழிதப்பிப்போன உலகத்திடம் பேசுகிறார். பாவம் நிறைந்த இந்த பூமியின் மீதும், மனிதகுலத்தின் மீதும் நியாயத்தீர்ப்பு இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இன்று மனிதர்கள் பாவம் செய்திருப்பதாலேயே வழிதப்பிப்போயிருக்கிறார்கள். மனிதர்கள் கிறிஸ்துவை நிராகரிப்பதால்தான் வழிதப்பிப்போயிருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் கிறிஸ்துவை நிராகரிப்பதால் அவர்கள் வழிதப்பிப்போகவில்லை; மாறாக, அவர்கள் பாவிகளாக இருப்பதாலேயே வழிதப்பிப்போயிருக்கிறார்கள். அவர்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் வழிதப்பிப்போன பாவிகளே. இதுவே இன்றைய மனிதனின் நிலை. நம்முடைய நியாயத்தீர்ப்பைச் சுமந்த ஒரு இரட்சகர் இருக்கிறார் என்பதையும், அவரே நமக்கு நீதியாக மாற்றப்பட்டிருக்கிறார் என்பதையும், அதன் மூலம் நமக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு என்பதையும் அறிவிக்கவே பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார். கவனியுங்கள் மற்றொருவரைப் பற்றிப் பேசுவதற்காகவே அதாவது கிறிஸ்துவை பற்றி பேசுவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் வந்திருக்கிறார்.
“கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார்” (என்று ஊழியக்காரன் சொல்கிறான். என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே, நம்முடைய பரம பிதா இன்றும் ஆடுமாடுகளிலும் சொத்துக்களிலும் செல்வந்தராக இருக்கிறார். ஆயிரம் மலைகளிலுள்ள மிருகஜீவன்கள் அனைத்தும் அவருடையவை. நம்முடைய பிதா எவ்வளவு பெரியவர்!
ஆதியாகமம் 24:36
‘என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். ‘
அருமையானவர்களே இதைக் காட்டிலும் எல்லையற்ற பெரிய அளவில், கர்த்தராகிய இயேசுவே சுதந்தரவாளியாய் இருக்கிறார், இன்று நாம் அவரோடுகூடச் சேர்ந்த உடன் சுதந்தரவாளிகளாய் இருக்கிறோம். இங்கே எல்லாவற்றையும் சுதந்தரிக்கப்போகிற தன் எஜமானுடைய குமாரனுக்கு ஒரு மணவாட்டியைத் தேடி வந்திருப்பதாக, ஆபிரகாமின் ஊழியக்காரன் இந்தக் குடும்பத்தாரிடம் சொல்ல வந்திருக்கிறான்.

ஆதியாகமம் 24:37
‘என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், ‘
…………………
அருமையானவர்களே பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது பாவிகளை அழைக்கிறார் ஆனால் அவர்கள் மனம் திரும்பிய பாவிகள். எப்படி மனம் திரும்பியவர்கள்??
1 பேதுரு 1:23
‘அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. ‘
……………………
இவர்களைத்தான் அவர் அழைக்கிறார்—ஆம், பாவிகளையே அழைக்கிறார் —ஆனால் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். “… ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான் என்று 2 கொரி. 5:17 வாசிக்கிறோம். தேவன் “கானானியர்களை” அப்படியே எடுத்துக்கொள்வதில்லை; அவருடைய பிள்ளைகள் மறுரூபமாக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து கவனியுங்கள்,
ஆதியாகமம் 24:38 – 49
நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.
39அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
40அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.
41நீ என் இனத்தாரிடத்துக்குப்போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.
42அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
43இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்று கேட்கும்போது:
44நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.
45நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
46அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.
47அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;
48தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
49இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப்போவேன் என்றான்.
இதற்கு பதிலாக அந்த குடும்பத்தின் சார்பில் லாபான் என்ன சொல்கிறான் பாருங்கள்.
ஆதியாகமம் 24: 50, 51
‘அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள். ‘
……………………..
இங்கே அவர்கள் சொல்வதென்ன?? எங்களை பொறுத்தமட்டிலையும் இது கர்த்தரால் வந்ததுதான். எனவே நீங்கள் ரெபெக்காளை அழைத்துச் செல்லலாம் என்று கூறுகிறார்கள்.
ஆதியாகமம் 24: 52 , 53
‘ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரை மட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான். பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான். ‘
…………………
இப்படித்தான் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கிறவராய் இருக்கிறார். நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, ஆவியானவர் நமக்கு ஓர் அச்சாரமாகவும் (earnest), பிணையாகவும் (guarantee) இருக்கிறார் என்று சொல்லலாம். விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற நாம், தேவனோடு சமாதானத்தைப் பெற்றிருக்கிறோம்; அவரிடத்தில் சேரும் சிலாக்கியத்தையும், சந்தோஷத்தையும், நம்பிக்கையையும், பரிசுத்த ஆவியானவரையும் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1முதல் 5 வசங்கள் இதை தெளிவாக விளக்குகிறது. இவை அனைத்தும் இன்று விசுவாசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது எவ்வளவு அற்புதமான காரியங்கள் இல்லையா??.
ஆதியாகமம் 24:54-55
‘பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான். அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள். ‘
………………….
அடுத்த நாள் காலையிலேயே அந்த வேலைக்காரன், “நான் கிளம்ப வேண்டும்,” என்று சொல்கிறார். ஆம் வந்த வேலை முடிந்து விட்டது, ஒரு பெரிய காரியத்தை செய்து முடித்து விட்டார்., இது அவருக்குப் பெரிய விஷயம்! அதற்கு அவளுடைய சகோதரன், “உனக்கு என்ன அவசரம்? அவள் எங்களிடம் விடைபெற குறைந்தது பத்து நாட்களாவது கொடுங்கள்/. எல்லாவற்றிற்கும் மேலாக, இதைப் பற்றி அவளிடம் கலந்தாலோசிப்பதுதான் நல்லது,” என்று சொல்கிறான்.
ஆதியாகமம் 24:56-57
’56அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பி விடவேண்டும் என்றான். 57அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ‘
அன்பர்களே, இந்த வேத பகுதியில் இது ஒரு முக்கியமான பகுதி எதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களையும் தவற விட்டுவிடக்கூடாது.
ஆதியாகமம் 24:58
’58ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். ‘
……………………..
“இந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை கூர்ந்து கவனிப்போம். இது ஒரு நாட்டுப்புறக் காட்சி; மனிதகுலத்தின் ஆரம்ப காலங்களில் நடந்த ஒன்று. மனிதன் இந்த பூமியில் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன என்று நான் நம்பினாலும், நம்மைப் பொறுத்தவரை இது சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். இந்தக் குடும்பம் ஒரு விருந்தினரை, ஒரு அந்நியரை உபசரித்துக் கொண்டிருக்கிறது—அதுவும் ஒரு அரசனைப் போல கௌரவமாக உபசரிக்கிறார்கள். அவர்கள் அந்த விருந்தினரின் ஒட்டகங்களுக்குத் தீவனம் அளித்து, அவருடைய வேலைக்காரர்களையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் அவருக்கு முன்னால் ஒரு பெரிய விருந்தையே வைத்தார்கள், ஆனால் அவரோ தான் வந்த காரியத்தை முதலில் சொல்ல விரும்பினார்.”
அதன்பின் அவர் தனது விசித்திரமான வருகைக்கான காரணத்தைக் கூறினார். தனது எஜமானரின் மகனான ஈசாக்கிற்கு ஒரு மணப்பெண்ணைத் தேடி அவர் வந்திருக்கிறார். அந்த வேலைக்காரன் தன் பையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியிலான அணிகலன்களை எடுத்து அந்தக் குடும்பத்தினருக்குப் பரிசாக கொடுக்கிறார். ஆபிரகாம் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் என்பதை நீங்கள்நினைவில் வைத்திருக்க வேண்டும். அதற்கு பிறகு, அந்த வேலைக்காரன் தன் எஜமானரைப் பற்றி விவரிக்கத் தொடங்குகிறான். அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒருவேளை ஒரு மூட்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருக்கலாம்; அவர்களுக்குப் பின்னால், சற்றே தள்ளி நின்று கொண்டிருக்கும் ஆழமான பழுப்பு நிறக் கண்களைக் கொண்ட ஒரு அழகான பெண்ணும் நின்று கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆபிரகாமைப் பற்றியும், ஈசாக்கு எப்படிப் பிறந்தார் என்பதைப் பற்றியும் அந்த வேலைக்காரன் சொல்வதை அவள் கேட்கிறாள். ஈசாக்கின் அற்புதப் பிறப்பைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் அவன் கூறுகிறான். பிறகு, ஒருநாள் அவருடைய தந்தை அவரை மோரியா மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்று பலிகொடுக்கத் துணிந்ததையும், ஆனால் கடவுள் எப்படி அவரைத் தடுத்து, அவர் உயிரைப் பறிக்காமல் மீண்டும் தந்தையிடமே உயிருடன் ஒப்படைத்தார் என்பதையும் அவன் விவரிக்கிறான். இறுதியாக, தந்தை தன்னை ஈசாக்கிற்கு ஒரு மணப்பெண்ணைத் தேடி அனுப்பியிருப்பதைச் சொல்கிறான். கானானியப் பெண்களுக்கு இடையில் அவருக்கு ஒரு மணப்பெண்ணைத் தேடக்கூடாது என்பதையும் கூறுகிறார். அவருக்கு இணையான சிந்தனை கொண்ட, அதே ஜீவனுள்ள தேவன் மீது நம்பிக்கை கொண்ட, ஒரு பெண்ணையே அவர் தேடுகிறார். இதற்காகவே தான் வந்ததை விவரமாக எடுத்துச் சொல்கிறார்.
இது எல்லாவற்றையும் ரெபெக்காள் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் இப்பொழுது அவர்கள் எல்லாரும் அவளை எட்டி பார்க்கிறார்கள். இந்த நேரம் வரை அவளை யாரும் கவனிக்கவில்லை. இந்த நேரம் வரை அவளை யாரும் கவனிக்கவில்லை இப்பொழுது எல்லாருடைய கண்களும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. “ரெபெக்கா இதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? இந்த மனிதனோடு போகிறாயா?” என்ற கேள்விக்கு அவள் சுற்றி வளைத்து பதில் சொல்லவில்லை. “சரி, நான் போகிறேன்” என்று உடனடியாக அவள் சொல்கிறாள்.
எனக்கு அருமையான சகோதரனே. சகோதரியே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றி வரும்படியாக அழைப்புக் கொடுத்த ஒவ்வொரு நேரத்திலேயும் பலர் உடனடியாக அவரைப் பின்பற்றும் தீர்மானத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலைகளை விட்டு விட்டு அவரைப் பின்பற்றி இருக்கிறார்கள். இரண்டொருமுறை சிலர் பின்வாங்கிப் போனார்கள். ஆனால், அவருடைய சீடர்கள் மிகத் தெள்ளத் தெளிவாக பரிபூரணமாய் எல்லாவற்றையும் விட்டு அவருக்குப்பின் சென்றிருக்கிறார்கள்.
இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மையும் அழைத்துக்கொண்டு இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே இந்த ஊழியக்காரனைப் போலப் பணி செய்கிறார். பிதாவானவரும் பரிசுத்த ஆவியானவரும் குமாரனை இந்த உலகத்தில் நமக்காக மரிக்கும்படியாக அனுப்பிவைத்தார்கள். அந்த குமாரன் மீண்டுமாக பரலோகத்திற்குச் சென்ற பொழுது தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரை அனுப்பி வைத்தார்.
இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்திற்குள்ளே வந்திருக்கிறார். அவர் திருச்சபையாகிய மனவாட்டியை உலகத்தை விட்டு வெளியே அழைக்கிறார். அருமையான சகோதரனே சகோதரியே. இயேசுவே உங்களுக்காகவும் மரித்தார். அவரே உங்களை இரட்சிப்பார். நீங்கள் அவருடைய மீட்பைப் பெற்றுக் கொள்ளும்பொழுது நீங்கள் மற்றவரிடத்திலே போய் இந்த பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராய் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழைப்பை கொடுக்க வேண்டும்.
இப்படி தூய ஆவியானவர் கொடுக்கும் அழைப்பிற்குக் கீழ்படிந்து செல்லும்பொழுது மறுபடியும் பிறந்த அனுபவத்தை மனிதர்கள் பெறுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் மணவாட்டியாகிய திருச்சபையின் அனுபவத்திற்குள்ளே வருகிறார்கள்.
அருமையான சகோதரனே. சகோதரியே, தூய ஆவியானவரின் அழைப்பிற்கு கீழ்படிவீர்களா? இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்களா? இந்த காரியத்திலே நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானத்தைக் குறித்து, சுற்றிவளைத்துப் பேசத் தேவையில்லை. ஒன்று நீங்கள் அவரை இரட்சகராக விசுவாசிக்க வேண்டும், இல்லையென்றால் இல்லை என்று சொல்ல வேண்டும். இதற்கு இடைப்பட்ட ஒரு நிலையை நீங்கள் எடுக்க முடியாது.
ஊழியர் ஒருவர் ஒரு ஆலயத்திலே கர்த்தருடைய வசனத்தை பிரசிங்கத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டார் ஒரு இளைஞன் தன்னுடைய இருதயத்திலே தெளிவான ஒரு தீர்மானம் எடுத்தவனாய், தான் இருந்த இடத்தில் எழுந்து நின்றான் பின் அவனே முன்னாலே வந்தான். அவன் அப்படி வந்தது கூட்டத்தில் உள்ள அனேகருடைய இருதயத்தை தொட்டது. அவன் தன்னுடைய தீர்மானத்தை குறித்து அத்தனை உறுதியும் தெளிவும் உள்ளவனாய் இருந்தான்.
ஆம் பிரியமானவர்களே அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை செய்யத்தான் ஆண்டவர் உங்களுடைய வாழ்க்கையிலையும் எதிர்பார்க்கிறார் அவருடைய ஏற்றுக் கொள்வார்.
நாம் விட்ட இடத்தில் அந்த சரித்திரம் முடியவில்லை, அவர்கள் புறப்பட்டு ஈசாக்கு இருக்கும் இடத்திற்கு வர வேண்டும். தொடர்ந்து அங்கே என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 24:59-60
’59அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, 60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். ‘
………………………..
ஆம் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டது இன்னைக்கும் ஈசாக்கின் சந்ததியால் கோடா கோடியாய் பெருகியிருக்கிறார்கள்.
ஆதியாகமம் 24:61
’61அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான். ‘
………………………
மிகத் தொலைதூரத்திலே இருக்கும் ஆபிரகாமுடைய குடும்பத்தை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள், திரும்பி அவர்கள் எப்படி வந்தார்கள் என்பது குறித்த விபரங்கள் நமக்கு இல்லை. ஆனால் ஒட்டகத்தின் மேலே ஏறி அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யவேண்டுமென்றால் அது நிச்சயமாய் கடினமான ஒரு பயணம்தான்.

ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் என்று அழைக்கிறார்கள். இன்றும் கெய்ரோவிலிருந்து பிரமிடுகள் இருக்கும் இடத்திற்கு ஒட்டகம்நான் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. பகலிலே நீண்ட தூரம் பாலைவனத்திலே பயணம் செய்து இரவிலேதான் அது இளைப்பாரும்படியாகத் தங்குகிறது. ரெபெக்காளும் ஆபிரகாமுடைய வேலைக்காரனும் இணைந்து போகும்பொழுதும் ஒட்டகங்களிலே போய் வழியிலே இரவிலே அவர்கள் ஆங்காங்கே தங்கியிருப்பார்கள். தூங்கும் முன் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள். அப்பொழுது ரெபெக்காள் அந்த வேலைக்காரனிடம் ஈசாக்கைக் குறித்து இன்னமும் சொல்லுங்கள் என்று கேட்டிருப்பாள்.
அப்பொழுது நான் எதைக் குறித்து சொல்ல என்று கேட்டபொழுது, ஈசாக்குடைய பிறப்பு எப்படி நடைபெற்றது எப்படி, எப்பொழுது அவனுடைய தகப்பனார் அவனை பலியிடக் கொண்டு போனார். இதையெல்லாம் குறித்துச் சொல்லுங்கள் என்று அவள் கேட்டிருப்பாள்.
ஒவ்வொரு நாள் இரவு தங்கும்பொழுதும் அதைக் குறித்து அவள் கேட்டிருப்பாள். “நேற்றுத்தான் கூறினேனே” என்று அவன் சொல்லியிருப்பான். அதற்கு ரெபெக்காள், “சரி இன்னொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டிருப்பாள். எனவே மீண்டும் மீண்டுமாக வேலைக்காரன் தன்னுடைய எஜமானின் மகனான ஈசாக்கைக் குறித்தும், அவனுடைய பிறப்பைக் குறித்தும், எப்படி பலிபீடத்திலே ஆண்டவர் அவனைக் காப்பாற்றினார் என்பதைக்குறித்தும் சொல்லி வந்திருப்பான்.
இந்த உன்னதமான மனிதனை எப்பொழுது சந்திப்பேன் என்று சொல்லி அவள் எண்ணியவளாக படுக்க போய் இருப்பாள் இவ்வாறாக நீண்ட தூரம் அவர்கள் பயணம் செய்து வாக்குத்த பூமியை அடைந்தார்கள்.
ஆதியாகமம் 24:62-63
’62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தான். 63ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ‘
இந்த இடம் எபிரோன் மற்றும் பெயர்செபாவின் இனிமையான நாட்டுப் பகுதிக்கு வெகு தொலைவில் இருந்தது.
“இந்த மனித நிகழ்வின் ஊடாக, கிறிஸ்து தமது மணவாட்டிக்காக அதாவது சபைக்காக மீண்டும் வருவதைப் பற்றிய ஒரு காட்சியை நாம் பார்க்கலாம்.. ‘கர்த்தர் வரும்போது நாம் அவரோடு எடுத்துக் கொள்ளப்படுவது எவ்வளவு அற்புதமாக இருக்கும்!’ என்று அநேகர் சொல்கிறார்கள். உண்மைதான். இதில் மற்றொரு கோணமும் உண்டு, அதாவது அவர் வரும்போது அவரோடு கூட இருப்பவர்கள் யார் என்பதுதான்./ / பெரும்பான்மையான விசுவாசிகள் ஏற்கனவே மரணம் என்னும் வாயிலைக் கடந்து சென்றுவிட்டார்கள்; அவர் வரும்போது அவர்கள் அவரோடு கூட வருவார்கள். அவர்களுடைய சரீரங்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு, ஆவியும் சரீரமும் ஒன்றாக இணைக்கப்படும். உயிரோடு இருப்பவர்கள், மரித்தவர்களோடு சேர்ந்து கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்க மேகங்களில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்..
மரணமடைந்து ஏற்கனவே சென்றவர்கள், பிதாவின் வலது பாரிசத்திலிருந்து கர்த்தர் எழுந்து, தமது சபையை ஆகாயத்தில் சந்திக்க அழைக்கும்போது அவரை முதலில் காண்பார்கள். இதுவே அந்த மகிமையான் சித்திரம்.
ஆதியாகமம் 24:64-65
’64ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, 65ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். ‘
அருமையானவர்களே, கிறிஸ்துவின் மணவாட்டியாகிய நாம் இயேசுவின் நீதியின் வஸ்திரத்தினாலே உடுத்தப்பட்டவர்களாய் இருக்கிறோம். அவர் நமக்காக நீதியானார். நம்முடைய பாவங்களுக்காக அவர் ஒப்புக்ககொடுக்கப்பட்டார். நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும்படியாக, நம்மைத் தகுதிபடுத்தும் நீதியை நமக்கு கிடைக்கப்பண்ணும் பொருட்டு அவர் உயிரோடு எழுப்பப்பட்டார். / /

தங்களை நோக்கிவரும் ஒரு மனிதனை ரெபெக்காள் பார்த்து, “அது யார்?” என்று கேட்க, ஊழியக்காரன். “அதுதான் ஈசாக்கு” என்று அறிமுகப்படுத்துகிறான்.
பிரயாணப்பட்டு வரும்பொழுது ஈசாக்கைக் குறித்து எல்லாக் காரியங்களையும் கேட்டு அறிந்து கொண்டவள், இப்பொழுது முகமுகமாய் சந்திக்கிறாள். இது நாம் இன்று வாழும் நமது நிலமைக்கு ஒத்ததாய் இருக்கிறது. இதை அப்போஸ்தலனாகிய பேதுரு எவ்வாறு கூறுகிறாரென்றால்,
1 பேதுரு 1ஆம் அதிகாரம் 8ஆம் வசனம் பாருங்கள்.
“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து. சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து”.
ஆம். அருமையானவர்களே, அவர் வரும்பொழுது அவருடைய கரங்களிலேயும் விலாவிலேயும் நமக்காக அவர்பட்ட தழும்புகளினாலே நாம் அவரை அறிந்து கொள்ளக் கூடியவர்களாய் இருக்கிறோம்.

ஆதியாகமம் 24:66
’66ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான். ‘
அருமையானவர்களே, பரிசுத்த ஆவியானவர் இப்போது நம்முடைய வாழ்க்கையை முத்திரைபோட்டு இருக்கிறார். ஒரு நாள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரும்பொழுது அவருடைய கரத்திலே நம்மை ஒப்புவிப்பார்.
ஆதியாகமம் 24:67
’67அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.’
அவன் அவளை நேசித்தான் என்று வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவம் திருச்சபையை நேசித்தபடியினாலே திருச்சபைக்காக தம்மையே அவர் பலியாகக் கொடுத்தார். அதுமட்டுமல்ல தாயினுடைய மரணத்திற்குப் பிறகு இப்பொழுது ஈசாக்கு ஆறுதலைப் பெறுகிறான். ஆம், அருமையானவர்களே, இதைப்போலத் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் நாம் தேவை. நமக்காக அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார். நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்து எல்லா காரியங்களிலேயும் அவருக்கு கீழ்படிகிறவர்களாய் இருப்போமா? நாமல்ல அவரே நம்மைத் தெரிந்தெடுத்து இருக்கிறார். நம்முடைய முயற்சியினால் அல்ல, அவருடைய இரத்தத்தினாலே நம்முடைய மீட்பை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு ஈடாக, அவர் நமக்கு செய்த காரியங்களுக்கு பதிலாக நாம் என்னத்தைச் செலுத்த முடியும்?
எனவேதான் சங்கீதக்காரன் சொல்கிறான். “கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களுக் காகவும் நான் என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன்.” அருமையான சகோதரனே, சகோதரியே நீங்கள் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டுவிட்டீர்களா? ஒவ்வொரு நாளும் ஆவியோடும், கருத்தோடும் தேவனை ஆராதிக்கிறீர்களா?
அன்பான நேயர்களே, ஆதியாகமம் 24-ஆம் அதிகாரத்தின் இந்த இறுதிப் பகுதி, ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மட்டும் விவரிக்கவில்லை; இது கிறிஸ்துவுக்கும் சபையாகிய நமக்கும் உள்ள உறவின் தீர்க்கதரிசன நிழலாட்டமாக இருக்கிறது. இந்த ஆய்வின் நிறைவாக நாம் சில முக்கிய சத்தியங்களை நம் இதயத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்:
ஆபிரகாமின் பெயரிடப்படாத ஊழியக்காரனைப் போலவே, பரிசுத்த ஆவியானவர் இந்த உலகத்தில் தம்மைப் பற்றிப் பேசாமல், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசவும், அவருடைய மகிமையை நமக்கு அறிவிக்கவும் வந்திருக்கிறார். அந்த ஊழியக்காரன் எப்படி ஈசாக்கின் செல்வங்களையும், அவனது அற்புதப் பிறப்பையும் ரெபெக்காளிடம் விவரித்தானோ, அப்படியே ஆவியானவர் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், நமக்காக அவர் பரலோகத்தில் ஆயத்தம் செய்திருக்கும் உன்னத வாழ்வையும் நமக்கு அறிவிக்கிறார்.
மேலும்
ரெபெக்காளின் வாழ்வில் நாம் காணும் மிகச்சிறந்த பண்பு அவளுடைய உடனடி கீழ்ப்படிதல். “இந்த மனிதனோடேகூடப் போகிறாயா?” என்ற கேள்விக்கு, அவள் தயக்கமின்றி “போகிறேன்” என்று பதிலளித்தாள். காணாத ஈசாக்கின் மேல், ஊழியக்காரன் சொன்ன வார்த்தைகளை விசுவாசித்துப் பிறந்த அன்பு அது. இன்றைக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார். நாம் உலகத்தின் கவர்ச்சிகளையும், பழைய உறவுகளையும் விட்டுவிட்டு, “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றி வருகிறேன்” என்று ரெபெக்காளைப் போல உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்.
பயணத்தின் முடிவில், சாயங்கால வேளையிலே தியானம் பண்ணிக் கொண்டிருந்த ஈசாக்கை ரெபெக்காள் சந்திக்கிறாள். இது சபை இந்த உலகப் பயணத்தை முடித்துவிட்டு, ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்கப் போகும் ‘மகிமையின் வருகையை’ நமக்கு நினைவூட்டுகிறது.
“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து… களிகூருகிறீர்கள்” என்று தான் பேதுருவும் கூறி இருக்கிறார்.
ஈசாக்கு ரெபெக்காளை நேசித்தான், அவளால் ஆறுதலடைந்தான் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தம்முடைய சபைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார். நாம் அவருக்கு மணவாட்டியாக ஒப்புக் கொடுக்கப்படும்போது, அது அவருக்குப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. நாம் சுய முயற்சியால் அல்ல, அவருடைய கிருபையினாலும் இரத்தத்தினாலும் மீட்கப்பட்டிருக்கிறோம்.
அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் இன்றும் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இயேசுவை சந்திக்க ஆயத்தமா?

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top