ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 22 :15 – 23:20
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 22 :15 – 23:20
நிகழ்ச்சி எண்: 0040

வாசியுங்கள்

அருமையானவர்களே நாம் இன்றைக்கு ஆதியாகமம் 22 :15 முதல் 23 :20 வரை பார்க்கப் போகிறோம்.
வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 22:15-16
[15] கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:
[16] நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;
………………….
இங்கே நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது, உண்மையாகவே ஆபிரகாம் அதை செய்தாரா? ஆபிரகாம் தன்னுடைய குமாரனை பலியிடவில்லை, ஆனால் தேவன் அவரிடத்திலே நீ இந்த காரியத்தை செய்தபடியினால் என்று கூறுகிறார். பாருங்கள் – ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். தேவன் ஏற்கனவே இதை அறிந்திருந்தாலும், நீங்களும் நானும் அறிந்து கொள்ளும் படிக்கும், படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சம், அவர் தன் மகனை கொடுக்க சித்தமாய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் படிக்கும், அவர் அந்த அளவுக்கு சென்றார். எனவே அவர் அதை செய்து முடித்ததாகவே தேவன் கணக்கில் வைத்துக்கொண்டார். ஆபிரகாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டார். ஆனால் அவர் செய்த கிரிகையினாலே மனுஷர் முன்பாகவும் நீதிமானக்கப்பட்டார். தன்னிடம் அந்த விசுவாசம் இருந்ததை அவர் நிரூபித்து காட்டினார்.
மேலும் உன் புத்திரன் என்றும், ஏக சுதன் என்றும் பாராமல் என்று இங்கே கூறியிருக்கிறார். புதிய ஏற்பாட்டிற்கு நாம் வரும்பொழுது, இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் பொழுது, தேவனும், தமது ஒரே பேரன குமாரனை நமக்காக ஒப்புக்கொடுத்தார் என்பதை அறிந்து கொள்கிறோம்.
இந்த சம்பவம் மூலமாக யார் இரட்சிக்கப்பட வேண்டும் என்றாலும், இந்த இடத்திலே பதிலாக ஒரு மனிதன் அனுப்பப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறார். அதாவது, அங்கே திறப்பில் நிற்க ஒரு மனிதன் தேவை, இந்த மனித இனத்தின் இரட்சகராக மாற, தகுதி உள்ள ஒரு மனிதன் தேவை என்பதை தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த அதிகாரத்தில் நமக்கு கொடுக்கப்படும் ஒரு பெரிய பாடம் இதுதான். . தேவன் தமக்கு ஒரு ஆட்டுக்குட்டியை பார்த்துக் கொள்வார் என்று ஆபிரகாம் கூறினார். அங்கே அவர்கள் ஒரு ஆட்டுக்கடாவை கண்டு, அதை பலியிட்டார்கள். ஆனால் தேவன் 1900ம் ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துவில் ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட்டு இருப்பான் என்றால் அது தவறாக இருந்திருக்கும். எனவே தேவன் ஆபிரகாமின் கையை தடுத்து, ஈசாக்கை பலியிட அனுமதிக்கவில்லை. தேவன் ஆபிரகாமின் மகனை தப்புவித்தார், ஆனால் தேவன் தமது சொந்த குமாரனை தப்ப விடாமல், நம் அனைவருக்காகவும், அவரை தாராளமாய் ஒப்புக்கொடுத்தார்.

‭ஆதியாகமம் 22:17-18
[17] நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
[18] நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும், ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
…………………..
இங்கே உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் இங்கே எந்த சந்ததியை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்? கலாத்தியர் 3:16ல் அந்த சந்ததி என்பதன் பொருளை பவுல் விளக்கி இருக்கிறார்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭கலாத்தியர் 3:16
[16] ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.
………………..
கவனித்தீர்களா?? ஆதியாகம புத்தகத்தில் தேவன் சந்ததி என்று சொல்வதற்கான விளக்கத்தை பரிசுத்த வேதமே நமக்கு தெளிவாக காட்டுகிறது.
மேலும் கலாத்தியர் மூன்றாம் அதிகாரம் எட்டாம் வசனம் என்ன சொல்கிறது பாருங்கள்.
‭கலாத்தியர் 3:8
[8] மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
…………………
தேவன் எப்பொழுது ஆபிராமுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்? தன் குமாரனாகிய ஈசாக்கை பலிபீடத்தின் மேலே பலியிட தேவன் ஆபிரகாமை அழைத்த பொழுது, அவருக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார். அங்கே உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று தெளிவாகத் தேவன் கூறியிருக்கிறார். அந்த சந்ததி கிறிஸ்துவே, உங்களுக்கு விருப்பம் என்றால் இதுதான் ஆபிராமுக்கு கொடுக்கப்பட்ட சுவிசேஷம் என்று தெளிவாகச் சொல்லலாம்.
வழக்கமாக கவனிக்கப்படாமல் விடப்படும் ஒரு காரியத்தை பற்றி இங்கே ஒரு கருத்தை நாம் பார்க்க வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அனைவரும் பெரிய மனிதர்கள். ஆனால் அவர்கள் நம்மை போல புத்திசாலிகள் அல்ல. நமக்குத் தெரிந்த அளவு அவர்களுக்கு தெரியாது என்று சொல்லலாம். இருந்தாலும் கிறிஸ்துவின் வருகையை பற்றியும், சுவிசேஷத்தை பற்றியும், நாம் ஆபிரகாமுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை விட, அவர் மிக அதிகமாக அறிந்திருந்தார் என்பதை,
யோவான் 8:56ல் இயேசு கூறியிருக்கிறார்.
‘உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ‘
…………………
எனவே நாம் நினைப்பதை விட, அவர் நிச்சயமாக அதிகம் அறிந்திருக்க வேண்டும். தேவன் ஆபிரகாமுக்கு பல காரியங்களை வெளிப்படுத்தியிருந்தார், ஆனால் ரட்சகர் இன்னும் வரவில்லை, அவர் வருவதற்கு இன்னும் 1900 ஆண்டுகள் ஆகும் என்பது இன்று நமக்கு தெரியும், ஆனால் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட்ட மோரியா மலையின் உச்சியிலே கிறிஸ்துவின் பலி மற்றும் உயிர்த்தெழுதலின் ஒரு நிழல் இருந்தது. ஈசாக்கை பலியிட தேவன் ஆபிராமை அழைத்த பின், அவர் மோரியாவுக்கு செல்வதற்கு மூன்று நாட்களானது. மூன்றாம் நாளில் தேவன் ஈசாக்கை, ஆபிராமுக்கு உயிரோடு திரும்ப கொடுத்தார். இது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய இரண்டிற்கும் ஒரு அடையாளமாய் இருக்கிறது. தேவன் ஆபிராமுக்கு சுசேஷத்தை பிரசிங்கித்தார் என்று பவுல் கூறுகிறார். நிச்சயமாய் அது இங்கே தான் செய்யப்பட்டது.
அடுத்ததாக, உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று அன்று சொல்லப்பட்டது. எனவேதான் கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகம் எங்கும் சென்று கொண்டே இருக்கிறது என்றாலும், இந்த நல்ல செய்தியை கேட்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி உள்ள மக்கள் மத்தியிலும் இது உண்மைதான் இருந்தபோதிலும், ஆசீர்வாதம் எல்லா ஜாதிகளுக்கும் வந்துவிட்டது. அவர்கள் பெற்றுள்ள ஒரே ஆசீர்வாதம் கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.
அடுத்ததாக, அந்த வசனத்திலே நீ என் சொல்லுக்கு கீழ்ப்படிந்தபடியினால் என்று தேவன் சொல்லுகிறார், அந்த கீழ்படிதல் ஆபிரகாமின் விசுவாசத்தின் மேல் தங்கியிருந்தது, விசுவாசம் எப்பொழுதும் செயலுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது, கிரியை இல்லாத விசுவாசம் செத்தது.
இந்த அதிகாரத்தின் மீதி உள்ள பகுதி, ஆபிரகாம் குடும்பத்தை பற்றிய இன்னும் சில கூடுதல் விவரங்களை நமக்கு தருகிறது. ஆபிரகாம் தனது சகோதரனாகிய நாகூரை அங்கேயே ஆரான் தேசத்தில் விட்டு விட்டு வந்திருந்தார். வம்சாவளி வேதாகமத்தில் தொடர்ந்து விவரிக்கப்பட போவதில்லை. ஆனால் அது சற்று காலத்திற்கு பிறகு ஆபிரகாமின் வம்சாவளியோடு இணையும் என்பதை நாம் பார்க்க போகிறோம். நாம் அந்த பகுதிக்கு வரும்பொழுது அதை விவரமாக பார்ப்போம். பெயர்களை உச்சரிப்பதில் உங்களுக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைக்கும்.
தொடர்ந்து 23 ஆம் அதிகாரத்தை பார்ப்போம். இங்கே சாராளின் மரணம் மற்றும் அடக்கத்தை குறித்து வாசிக்கிறோம். சாரளை அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா என்ற இடத்திலே ஒரு குகையை விலை கொடுத்து வாங்குகிறார்.
‭ஆதியாகமம் 23:1-2
[1] சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது.
[2] கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
………………….
இங்கே நாம் பார்ப்பது போல சாராள் 127 வருடங்கள் உயிரோடு இருந்திருக்கிறாள், அவளுக்கு ஈசாக்கு பிறந்த பொழுது சராளுக்கு வயது 90. அதாவது ஈசாக்கை பலியிட கொண்டு சென்ற நிகழ்ச்சிக்கு பின் சில ஆண்டுகள் கழித்து சாராள் மரித்திருக்க வேண்டும். இப்பொழுது ஈசக்கிற்கு 37 வயதாகி இருந்தது.

சாராள் எபிரோன் ஊராகிய கீரியாத்அர்பாவிலே மரித்ததாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் ஆபிராமுக்கு கொடுத்த அதே தேசத்தில் , தன் குடும்பத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இப்பொழுது ஒரு குகையை, அவர் விலைக்கு வாங்க வேண்டியது இருந்தது. ஆபிரகாம் சாராளை அடக்கம் செய்ய, வேறு எங்காவது ஏன் கொண்டு செல்லவில்லை, ஏனென்றால், அவர்களின் எதிர்கால நம்பிக்கை அந்த தேசத்திலே தான் இருந்தது. இந்த அதிகாரத்தின் அடுத்த அடுத்த பகுதிகளுக்கு நாம் செல்லும்பொழுது, இங்கே ஒரு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதை பார்க்கிறோம். இது சிலருக்கு மிகவும் உற்சாகமானதாகவோ அல்லது சுவாரஸ்யமானதாகவோ இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை சற்று மனசோர்வை தரும் காரியமாக கூட தெரியலாம். ஆனால் இங்கே ஒரு உன்னதமான சத்தியத்தை படிக்க வேண்டியது மிக முக்கியமானது.
‭ஆதியாகமம் 23:3-4
[3] பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
[4] நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறை பூமியைத் தரவேண்டும் என்றான்.
………………..
அருமையானவர்களே, தேவன் அவனுக்கு சொந்தமாகும் என்று வாக்குத்தத்தம் பண்ணின, அந்த இடத்திலையும் தன்னைக் குறித்து ஆபிரகாம் – தான் ஒரு அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன் என்று கூறுகிறான்.
‭ஆதியாகமம் 23:5-6
[5] அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
[6] எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள்.
……………………
ஏத்தின் புத்திரர் இங்கே ஆபிரகாமுக்கு மனம் உவந்து ஒரு கல்லறையை கொடுக்க முன் வருகிறார்கள். எந்த இடத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள், அதுமட்டுமல்ல அதை நாங்கள் உமக்கு சந்தோஷமாக தருகிறோம் என்றும் சொல்லுகிறார்கள், இது எதைக் காட்டுகிறது? ஆபிரகாமினுடைய வாழ்க்கை ஏத்தின் புத்திரருடைய இருதயத்தை தோட்டு இருக்கிறது. அவர்கள் ஆபிராமை குறித்து சொல்லும் பொழுது என்ன சொல்கிறார்கள்? நீர் மகாபிரபு என்று அவரை அழைக்கிறார்கள்.
‭ஆதியாகமம் 23:7-9
[7] அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
[8] அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்,
[9] தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான்.
…………………..
ஆபிரகாம் தெரிந்தெடுத்த இடம் மக்பேலாகுகை, ஆனால் அவர் அதை விலைக்கு வாங்க விரும்பினார். தனக்கு எதுவும் இலவசமாக கொடுக்கப்படுவதை அவர் விரும்பவில்லை, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், தேவன் அந்த தேசத்தையே அவருக்கு கொடுக்கும் வரை, அவருக்குத் தேவையானதை விலை கொடுத்து வாங்குவார், இப்பொழுது அவர் சாராளை அடக்கம் செய்ய ஒரு இடத்தை உண்மையில் விலைக்கு வாங்குகிறார்.
நான் மீண்டும் அந்த கேள்வியை கேட்க விரும்புகிறேன் ஆபிரகாம் சாராளை அடக்கம் செய்ய, ஏன் வேறு எங்கும் எடுத்துச் செல்லவில்லை? அவர்கள் சாராளை ஏன் இங்கே அடக்கம் செய்தார்? ஏனென்றால், இது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம், மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கை இங்கே தான் இருக்கிறது. வேதத்தை நீங்கள் படித்து பார்க்கும் பொழுது, தேவனிடத்தில் இரண்டு பெரிய நம்பிக்கைகளும், இரண்டு பெரிய நோக்கங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவருக்கு ஒரு பூமிக்குரிய நோக்கமும் உண்டு, ஒரு பரலோக நோக்கமம் இருக்கிறது
பூமிக்குரிய நோக்கம் என்பது நீங்களும் நானும் வாழும் இந்த பூமி நித்தியத்திற்குள் செல்ல போகிறது என்பதாகும், இது ஒரு புதிய மாதிரியாக மாற்றப்பட போகிறது. ஒரு புதிய வானம் புதிய பூமியும் உண்டாகப் போகிறது, ஆனால் ஒரு பூமி இருக்கும் அது நித்திய முழுவதும் குடியேற்றப்பட்டு இருக்கும், இதுதான் தேவன் ஆபிரகாமுக்கும், அவருக்கு பின் வந்தவர்களுக்கும், கொடுத்த வாக்குத்தத்தம். இன்று தேவன் செயல்படுத்தி வரும் திட்டத்தை முடித்த பிறகு, நீங்களும் நானும் வாழும் இந்த பூமியை, அவர் குப்பைத் தொட்டில் போடப்போவதில்லை, அல்லது பழைய மற்றும் சிறந்த கார்களை போடும் இரும்பு கடைக்கு அவர் அனுப்பப் போவதில்லை, தேவன் இதை அகற்றப் போவதில்லை, அவர் இதை ஒரு புதிய மாதிரியாக மாற்ற நினைத்து இருக்கிறார். புதிய பூமி நித்தியத்திற்குள்ளே செல்லும், அதில் மக்கள் வசிப்பார்கள் இதுவே ஆபிரகாமின் நம்பிக்கையாய் இருந்தது, உயிர்த்தெழுதல் வரும் பொழுது, தானும் சாராளும் அந்த தேசத்திலேயே எழுப்பப்பட வேண்டும் என்பதற்காகவே ஆபிரகாம் அந்த தேசத்திலே சாராளை அடக்கம் செய்ய விரும்பினார். அவருக்கு பின் எத்தனை பேர் வரப்போகிறார்கள் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை, ஆனால் அவ்விடத்திலிருந்து லட்சக்கணக்கானோர் எழுப்பப்பட போகிறார்கள், இதுவே அவர்களின் நம்பிக்கை, இது ஒரு பூமிக்குரிய நம்பிக்கை, இது கட்டாயம் நிறைவேற்றப்படும்.
இயேசு கிறிஸ்துவும், சீடர்களும் மேல் வீட்டு அறையில் இருந்த பொழுது, பழைய ஏற்பாட்டில் பயிற்சி பெற்ற, மற்றும் பழைய ஏற்பாட்டு நம்பிக்கையை கொண்டிருந்த, தன் சீடர்களிடத்திலே இயேசு கிறிஸ்து என்ன சொன்னார் கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭யோவான் 14:1-3
[1] உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
[2] என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
[3] நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
…………………..
இங்கே இயேசு கிறிஸ்து, அவர் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் புதிய எருசலேமை பற்றி பேசுகிறார், இதுவே சபை செல்ல போகும் இடமாகும். புதிய எருசலேம் விசுவாசிகளின் நித்திய வாசஸ்தலமாக இருக்கும், இந்த போதனை சீடர்களுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது, இது இன்னும் கூட பல கிறிஸ்தவர்களுக்கு ஒரு புதிய விஷயமாகவே இருக்கிறது. தேவன் ஆபிரகாமை இந்த பூமியை விட்டு பரலோகத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை, மாறாக நான் உனக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்றுதான் அவரிடத்திலே தொடர்ந்து கூறிக் கொண்டே வந்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் அதுவே சாராளை அந்த தேசத்திலே அவர் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கான காரணம், அதுவே அவர் தன் குடும்பத்திலே மரித்தவர்களை எல்லாரையும் அடக்கம் செய்யும் இடமாக மாறியது, தானும் அங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார், அவரும் அங்கே அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆபிரகாமின் கல்லறை இருக்கும் சரியான இடம் எருசலேமிற்கு தெற்கு சுமார் 20 மைல் தொலைவில் உள்ள ஏபிரோனில் இருக்கிறது. இன்றைக்கும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை சென்று பார்க்க முடியும், இப்பொழுது அந்த இடத்தின் மேல் ஒரு இஸ்லாமிய மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. அங்கே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அங்கே மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த உணர்வு எபிரோன் தவிர வேறு எந்த இடத்திலையும் அந்த சுற்று வட்டாரத்தில் இல்லை. அங்கே தங்கள் தேசத்தை சேராத சுற்றுலா பயணிகள் அனைவர் மீதும் பகைமை நிலவி வருகிறது, நிச்சயமாக சுற்றுலா பயணிகளின் பணம் அந்த தேசத்திற்கு கிடைப்பதால் அவர்கள் வருகிறவர்களை அங்கே உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது அங்கே தரையிலே இருக்கும் ஒரு சிறிய துவாரத்தின் வழியாக கீழே பார்த்தால், அங்கே ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள் இவர்கள் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும், இவர்கள் அனைவரும் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் அந்த தேசத்திலேயே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோம் என்ற அவர்களின் நம்பிக்கையேயாகும். ராகேல் மட்டும் பெத்லகேமிலே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார், இவர்களுக்கு இருந்த இந்த நம்பிக்கை பூமிக்குரிய நம்பிக்கை. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கோ பரலோக நம்பிக்கை இருக்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்திலே ஆபிரகாமுக்கு இந்த அடக்கம் ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலே நான் கொடுத்த விபரங்கள் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆபிரகாம் இப்பொழுது இந்த குகை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்கிறார் அந்த பண பரிமாற்றத்தை கவனியுங்கள்.
‭ஆதியாகமம் 23:10-12
[10] எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
[11] அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான்.
[12] அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து,
……………………
ஆபிரகாமையும் இந்த மக்களின் பெருந்தன்மையையும் குறிப்பாக எப்பெரோனையும் கவனியுங்கள். அக்காலத்தில் அவர்கள் நிச்சயமாக மிகவும் கண்ணியமானவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதற்காக தடியை சுமந்து தெரியும் குகை மனிதர்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்,- ஏன் இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள் கூட இப்பொழுது நாம் வாழும் காலத்திற்கு வந்து, திரும்பிச் சென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள், என்றால் ஐயோ எங்கள் சந்ததியினர் ஒரு கூட்டம் குகை மனிதர்களாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா, அவர்கள் மிகவும் நாகரிகம் அற்றவர்கள், அவர்கள் முரட்டுத்தனமானவர்கள், பண்பற்றவர்கள் மற்றும் அவமானத்திற்குரியவர்கள் என்று நம்மைப் பற்றி அவர்கள் சொல்வார்கள் என்று நாம் சொல்லலாம். ஆனால் அவர்களைப் பற்றி பேசும் வசதி நமக்கு இருக்கிறது, அவர்கள் எவ்வளவு கண்ணியமாக இருந்தார்கள் என்பதை கவனிப்பது, சுவாரஸ்யமானதாக இருக்கிறது. கவனியுங்கள் அப்பொழுது ஆபிரகாம் தேசத்து ஜனங்களுக்கு முன்பாக குனிந்து வணங்குகிறார்.
‭ஆதியாகமம் 23:13-16
[13] தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான்.
[14] அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
[15] என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம் பண்ணும் என்றான்.
[16] அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
……………………..
கவனித்தீர்களா, ஆபிரகாம் அந்த நிலமும் குகையும் அந்த நாளில் எவ்வளவு விலை பெருமோ, அதை – அதாவது 400 சேக்கல் நிறை வெள்ளியை நிறுத்திக் கொடுக்கிறார்.
‭ஆதியாகமம் 23:17-20
[17] இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும்,
[18] அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.
[19] அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எபிரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான்.
[20] இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.
………………….
பல இடங்களில் இருக்கும் மசூதிகள் அழகானவயாய் இருக்கின்றன. வெளிப்படையாக தெரிய வருகிறபடி எபிரோனில் மசூதி கட்டப்பட்டுள்ள இடம் இதுதான். இது உலகத்திலே இரண்டாவது அல்லது மூன்றாவது மிக முக்கியமான மசூதியாக கருதப்படுகிறது. எனவே இது எவ்வளவு முக்கியமான ஒரு இடம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அரேபியர்கள் அனைவரும் தங்கள் வம்சாவழியை ஆபிரகாம் வரை பின்னோக்கி தேடிச் செல்கிறார்கள்.
சரி அன்பர்களே இன்று நாம் பார்த்த
ஆதியாகமம் 22 மற்றும் 23-ஆம் அதிகாரங்கள் நமக்கு வெறும் சரித்திர நிகழ்வுகளை மட்டும் தறாமல், ஒரு விசுவாசியின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உன்னத பாடத்தை கற்றுத் தருகிறது.
1. கிரியையில் வெளிப்படும் விசுவாசம்
ஆபிரகாம் தன் ஒரே மகனைப் பலியிடத் துணிந்தபோது, தேவன் அவருடைய இருதயத்தின் கீழ்ப்படிதலை அங்கீகரித்தார். விசுவாசம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது செயலில் காட்டப்படும் அர்ப்பணிப்பு. “கிரியையில்லாத விசுவாசம் செத்தது” (யாக்கோபு 2:26) என்ற வசனத்திற்கு ஆபிரகாம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். நாமும் நம் வாழ்வில் தேவன் கேட்கும் பலிகளை (அன்பு, நேரம், கீழ்ப்படிதல்) போன்றவைகளை மனமுவந்து கொடுக்கும்போது, அது தேவனுக்கு முன்பாக நீதியாகக் கருதப்படுகிறது.
2. கிறிஸ்துவின் நிழலாட்டம்
ஈசாக்கு பலிபீடத்திற்குச் சென்றதும், மூன்றாம் நாளில் அவன் ஒரு புதிய வாழ்வைப் பெற்றுத் திரும்பியதும், 1900 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருந்த இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் அடையாளமாக இருக்கிறது. ஆபிரகாம் மோரியா மலையில் கண்ட அதே காட்சியை, தேவன் கல்வாரி மலையில் தன் சொந்தக் குமாரனை நமக்காகக் கொடுத்ததன் மூலம் நிறைவேற்றினார். “தேவன் தமக்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார்” என்ற ஆபிரகாமின் தீர்க்கதரிசன வார்த்தை, கிறிஸ்துவாகிய தேவ ஆட்டுக்குட்டியின் மூலம் இன்று நமக்கும் இரட்சிப்பைக் கொண்டு வந்திருக்கிறது.
3. நாம் இங்கே அந்நியர்களும் பரதேசிகளுமாய் இருக்கிறோம்.@@@@
சாராளின் மரிப்பிற்குப் பிறகு, ஆபிரகாம் தான் வாழும் தேசத்தில் ஒரு கல்லறையை விலை கொடுத்து வாங்குகிறார். தேவன் அந்தத் தேசத்தை அவருக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தாலும், அவர் தன்னை ஒரு “அந்நியன் மற்றும் பரதேசி” என்றே அழைத்துக்கொள்கிறார். இதுவே ஒரு விசுவாசியின் உண்மையான அடையாளம். இந்தப் பூமி நமக்குச் சொந்தமானதல்ல; நாம் ஒரு நித்திய நகரத்தைத் தேடிப் பிரயாணம் செய்பவர்கள்.
4. உயிர்த்தெழுதலின் மேலான நம்பிக்கை@@@@
ஆபிரகாம் ஏன் மக்பேலா குகையை அவ்வளவு முக்கியமாகக் கருதினார்? அது வெறும் ஒரு கல்லறை அல்ல, அது உயிர்த்தெழுதலின் நம்பிக்கை. எங்கே மரிக்கிறோமோ அங்கேயே கிறிஸ்து வரும்போது உயிரோடு எழுந்திருப்போம் என்ற அந்தப் பூமிக்குரிய நம்பிக்கை பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும் இருந்தது. இன்று நமக்கோ, பரலோகத்தில் ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் செய்திருக்கிற கிறிஸ்துவோடு இருக்கும் மேலான பரலோக நம்பிக்கை இருக்கிறது.
அந்த நித்திய வாசஸ்தலத்தை அடையும் வரை இந்தப் பூமியில் கண்ணியத்தோடும், விசுவாசத்தோடும் நம் பயணத்தைத் தொடர்வோம்.
ஆபிரகாமுக்குக் காண்பிக்கப்பட்ட அந்த “சுவிசேஷம்” இன்று நமக்கும் கிடைத்துள்ளது. அந்தச் சந்ததியாகிய கிறிஸ்துவின் மூலமாக நாமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்! அதற்காக என்றும் கர்த்தருக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top