ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 22: 1 - 14
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 22: 1 – 14
நிகழ்ச்சி எண்: 0039

வாசியுங்கள்

அருமையானவர்களே இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்??

இன்று நாம் ஆதியாகமம் 22 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம். இந்த அதிகாரத்தில் மற்றும் ஒரு உன்னதமான செய்தியை நாம் பார்க்கிறோம். சொல்லப்போனால் ஆதியாகம புத்தகத்தில் நாம் மலை சிகரங்களின் மேலே நடந்து கொண்டிருக்கிறோம். 22 ஆவது அதிகாரம், ஆபிரகாம் தன் சொந்த மகனை பலியிடுடப் போவதைப்பற்றிக் கூறுகிறது.
ஆபிராமுக்கு தேவன் ஏழாவது முறையாகவும், கடைசியாகவும் காட்சியளிப்பதை இந்த அதிகாரம் நமக்கு காட்டுகிறது. இதற்குப்பின் ஆபிரகாமிடம் தேவன் கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை, இந்த மனிதனுக்கு தேவன் வைத்த மிக பெரிய சோதனையத்தான் இங்கே நாம் பார்க்கிறோம்..

இந்த அதிகாரத்தை நாம் சங்கீதம் 22 மற்றும் ஏசாயா 53 ஆகிய அதிகாரங்களோடு ஒப்பிடலாம், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை சித்தரிக்கும் இந்த உன்னதமான உண்மைகளை, முதன் முதலில் இந்த அதிகாரத்தில் நாம் பார்க்கும் பொழுது, இது பிரம்மிக்கத்தக்க ஒன்றாய் இருக்கிறது. ஈசாக்கின் பிறப்பில் மட்டுமல்ல, இப்பொழுது ஈசாக்கின் பலியிலும், இயேசுவின் வாழ்க்கையோடு ஒரு விசித்திரமான ஒற்றுமை காணப்படுகிறது.

மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வேத புத்தகத்தின் பிற பகுதிகளுக்கு முரணாக தோன்றும் ஒரு கருத்தை இந்த சம்பவத்தை பற்றி யாக்கோபு குறிப்பிட்டு இருக்கிறார். கவனியுங்கள் வாசிக்கிறேன்.

யாக்கோபு 2:21
[21] நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
………………….

ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் இதே காரியத்தை குறித்து என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

ரோமர் 4:1-3

[1] அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
[2] ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
[3] வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
……………………..
சரி/ இங்கே யாக்கோபு சொல்வது சரியா அல்லது பவுல் சொல்வது சரியா? யார் சொல்வது சரி?

இரண்டு பேரும் சரியான காரியத்தைதான் சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் இருவரும் ஒரே விஷயத்தை பற்றிதான் பேசியிருக்கிறார்கள். அதுதான் விசுவாசம்.

யாக்கோபு விசுவாசத்தின் கிரியைகளைப் பற்றி பேசுகிறார். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை பற்றி அல்ல.
ஆனால் பவுல் ஒரு மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதை பற்றி பேசுகிறார். ஆதியாகமம் 15 ஆம் அதிகாரத்தை மேற்கோள்காட்டி ஆபிரகாம் விசுவாச பயணத்தை தொடங்கிய காலத்தைப் பற்றி பவுல் பேசுகிறார்.

அருமையானவர்களே, அந்த நேரத்தில் தேவனுக்கு மட்டுமே ஆபிரகாமின் இருதயம் தெரிந்திருந்தது, ஆபிரகாம் தன்னை விசுவாசித்ததை தேவன் கண்டார். இதைத்தான்.

ஆதியாகமம் 15 :6ல் நாம் வாசிக்கும் பொழுது

அவன் கர்த்தரை விசுவாசித்தான் அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் என்று வாசிக்கிறோம்.
………………….

இங்கே விசுவாசம் செயலில் வெளிப்படுவதை பார்க்கிறோம். ஆபிரகாம் பலமுறை தோல்வியடைந்ததை நாம் பார்த்தோம், அவருடைய அண்டை வீட்டார் – அவர் ஒன்றும் அவ்வளவு நீதி உள்ளவராக தெரியவில்லையே என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் தன் மகனை பலிபீடத்தில் பலியிட அழைத்துச் சென்ற நாளில், கடின இருதயம் கொண்ட பெலிஸ்தியர் கூட ஆபிரகாம் தனது செயல்களின் மூலம் தனது விசுவாசத்தை நிரூபித்து விட்டார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது இருந்தது.

யாக்கோபு என்ன சொல்லுகிறார்? ஆபிரகாம் கிரியைகளினால் நீதிமான் ஆக்கப்பட்டார் என்று சொல்லுகிறார், அவர் எப்பொழுது நீதிமான் ஆக்கப்பட்டார்? அவர் ஈசாக்கை பலியிட்டபோது, ஆனால் இங்கே ஒரு கேள்வி எழும்புகிறது, ஆபிரகாம் உண்மையில் ஈசாக்கை பலிபீடத்தில் பலியிட்டாரா? நிச்சயமாக அதற்கான பதில் இல்லை என்பதுதான், ஆனால் அவர் அதைச் செய்ய மனமுவந்து முன் வந்தார், அதற்காக செயல்பட்டார். அவர் மனமுவந்து – முன்வந்த செயலை பற்றித்தான் யாக்கோபு பேசுகிறார்.
சரி தொடர்ந்து அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

ஆதியாகமம் 22:1

[1] இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
……………………

“சோதித்தார்” என்று நாம் இங்கே வாசிக்கிற வார்த்தை சற்று அதிக வீரியமிக்கதாக ஒன்றாய் இருக்கிறது, உண்மையில் அந்த வார்த்தைக்கு “பரிசோதித்தார்” என்பதுதான் பொருளாகும். தேவன் ஒருபொழுதும் யாரையும் தீமையினால் சோதிப்பதில்லை என்பதை யாக்கோபு தனது நிருபத்தில் மிகத் தெளிவாகக் கூறுகிறார். தேவன் மனிதர்களின் விசுவாசத்தை பரிசோதிக்கிறார் என்ற பொருளிலேயே சோதித்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. தேவன் ஆபிரகாமை பரிசோதித்தார், மேலும் அவரிடத்திலே மிகவும் விசித்திரமான ஒரு காரியத்தைச் செய்யும்படியாகவும் கேட்கிறார்.
இந்த அதிகாரம் முடிவடைந்து அடுத்த அதிகாரம் முதல் வசனத்தில் சாராளுக்கு 127 வயது ஆயிற்று என்று வாசிக்கிறோம். இதை நாம் கணக்கிட்டு பார்த்தால் ஈசாக்கு ஒரு சிறிய பையன் அல்ல என்பது நமக்கு புரியும். ஈசாக்கு பிறந்த பொழுது சாராளுக்கு 90 வயது. சாராள் மரிக்கும் பொழுது 127 வயது. அதாவது 37 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த அதிகாரத்தில் அவன் சிறுவன் என்று அழைக்கப்பட்டாலும் அவன் உண்மையில் 30 களில் அநேகமாக 30 அல்லது 33 வயது உடையவனாய் இருந்திருக்க வேண்டும்.

தேவன் ஆபிரகாம் இடத்தில் பேசும் பொழுது என்ன சொல்கிறார்? கவனியுங்கள் – நீ நேசிக்கிற உன் புத்திரனாகிய ஈசாக்கு என்னும் உன் ஏக சுதனை, நீ இப்பொழுதே அழைத்துக் கொண்டு- என்று சொல்லுகிறார்.
உன் புத்திரன் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திருத்துவத்தில் குமாரன் என்ற இடத்தை பெற்றார் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. மேலும் உன் ஏக சுதனை என்பதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவுடைய ஒரே பேரான குமார் என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் நமக்கு நினைவு படுத்துகிறது. அது மட்டுமல்ல – நீ நேசிக்கிற உன் புத்திரன் ஆம் இயேசு கிறிஸ்துவும் பிதா என்னிடத்தில் அன்பாய் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்…….
சரி, எங்கே போய் தேவன் இந்த பலியை செலுத்த சொன்னார்?
மோரியா தேசத்துக்கு போய் என்று சொல்லுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு பின் தேவாலயம் கட்டப்பட்ட இடமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நகர வாசலுக்கு வெளியே பலியான இடமும் இந்த மோரியா மலைதான் என்பது பலருடைய நம்பிக்கை. இப்பொழுது எருசலேமில் கொல்கதாவும் தேவாலயப் பகுதிக்கு மிக அருகில் இருக்கிறது. அவை ஒரே மலைத்தொடரை சேர்ந்தவை. தற்பொழுது ஒரு சாலை அந்த தொடரை இரண்டாகப் பிரித்தாலும், அது மோரியா என்று அழைக்கப்படும் அதே மலைத்தொடர்தான். இயேசு சரியாக அதே புள்ளியில் தான் மரித்தார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது நமக்கு தெரியாது. ஆனால் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட துணிந்த அதே மலைத்தொடரில்தான் இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் மரித்தார் என்பது உறுதியான ஒன்று.

இங்கே கர்த்தர் சொல்வது என்ன? நான் உனக்கு குறிக்கும் மலைகளில் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்கிறார். நியாயப்பிரமாணம் வரும் வரை தகனபலியே வழக்கத்தில் இருந்தது. அதன் பின்னர் தான் பாவ நிவாரண பலிகளும், குற்ற நிவாரண பலிகளும் கொடுக்கப்பட்டன. இங்கே தகனபலி என்பது கிறிஸ்து யார் என்பதை குறிக்கிறது. கவனியுங்கள். இது ஒரு மனித பலி – இங்கே ஒரு தார்மீக கேள்வி எழுப்புகிறது. மனிதனை பலிசெலுத்துவது தவறல்லவா? / / ஆம் அது உண்மையாகவே தவறானதுதான். ஆனால் அன்று ஆபிரகாம் ஈசாக்குடன் சென்று கொண்டிருந்த பொழுது, நீங்கள் அவரை சந்தித்து – ஆபிரகாம் நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டிருந்தால், ஈசாக்கை பலியிடப் போகிறேன் என்றுதான் அவர் பதில் சொல்லியிருப்பார், “அதற்கு நீங்கள், ‘இது தவறு என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டிருப்பீர்கள். அதற்கு ஆபிரகாம், ‘ஆம், இது தவறு என்று எனக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றியுள்ள பிற இன மக்கள் மனிதர்களைப் பலியிடுகிறார்கள்/ —பெலிஸ்தியர்கள் மோளேக்குக்குப் பலியிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்—ஆனால் எனக்கு அவ்வாறு கற்பிக்கப்படவில்லை’ என்று சொல்லியிருப்பார். நீங்கள் அவரிடம் மீண்டும் அப்படிஎன்றால் பின் ஏன் இதைச் செய்கிறீர்கள்? என்று கேட்டால், எனக்குத் தெரிந்ததெல்லாம் தேவன் இதை கட்டளையிட்டார் என்பதுதான், உண்மையில் இது எனக்கு புரியவில்லை ஆனால் நான் அவரோடு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறேன், அவர் ஒரு பொழுதும் என்னை கைவிட்டதில்லை, அல்லது சிறந்ததாக அமையாத எதையும் செய்ய வேண்டும் என்று என்னை அவர் கேட்டதும் இல்லை, இது எனக்கு புரியாவிட்டாலும் நான் இதை கடைசி வரை செய்தால், தேவன் ஈசாக்கை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்றும் நான் நம்புகிறேன் என்று தான் சொல்லியிருப்பார்.
ஆபிரகாம் ஈசாக்கை அழைத்துச் செல்லும் இந்த காட்சி ஒரு மகத்தான சித்திரமாகும்.

ஆதியாகமம் 22:3-4

[3] ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

[4] மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
…………………

கவனித்தீர்களா, ஆபிரகாம் ஈசாக்கை தன்னோடு அழைத்துக் கொண்டு தகன பலிக்கு தேவையான விறகுகளையும் எடுத்துக்கொண்டார். ஆபிரகாம் அந்த இடத்தை அடைய மூன்று நாட்கள் ஆனது, ஆனால் ஆபிரகாம் ஈசாக்கை மரித்தோரிலிருந்து திரும்ப பெற்றது போல, உயிரோடு திரும்ப பெற்றது இந்த மூன்றாம் நாளில்தான் என்பதை நினைவிலே கொள்ளுங்கள். ஆபிரகாம் அதை அப்படித்தான் பார்த்தார் மூன்றாம் நாளில் ஈசாக்கு அவருக்கு மீண்டும் உயிர்பிக்கப்பட்டான். இங்கு நமக்கு எவ்வளவு பெரிய ஒரு தீர்க்கதரிசன காட்சி கிடைத்திருக்கிறது கவனித்தீர்களா?

ஆதியாகமம் 22:5

[5] அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.
……………….
இங்கே நடக்கப் போகும் இந்த செயல், பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே – அதாவது ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் இடையே நடக்கும் ஒரு காரியமாகும். உண்மையில் அந்த நிகழ்வு நடந்த பொழுது, தேவன் மனிதனை வெளியே நிறுத்திவிட்டார், நடு பகலில், இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் மனிதன் விலக்கி வைக்கப்பட்டான். எந்த மனுஷனும் வேலை செய்யக்கூடாத இரவு வந்தது, அந்த கடைசி மூன்று மணி நேரத்தில் அந்த சிலுவை ஒரு பலிபீடமாக மாறியது, அதன் மேல் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டார். அந்த சிலுவையில் நடந்த அந்த பரிமாற்றம், பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே மட்டுமே நடைபெற்றது, மனிதன் வெளியே இருந்தான் அவன் இதில் எந்த விதத்திலும் பங்கு எடுக்கவில்லை, அதேபோல ஒரு சித்தரத்தைதான் நாம் இங்கேயும் பார்க்கிறோம். இங்கே ஆபிரகாமும் ஈசாக்கும் மட்டுமே தனியாக இருக்கிறார்கள்.

ஆதியாகமம் 22:6 பாருங்கள்
[6] ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
………………..
கவனித்தீர்களா?, ஆபிரகாம் தகன பலிக்கான கட்டைகளை எடுத்து தன் குமாரனாகிய ஈசாக்கின் மேல் வைத்தான். ஆம் கிறிஸ்து தமது சிலுவையை தாமே சுமந்து சென்றதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும், இதில் உள்ள நெருப்பு நியாயத்தீர்ப்பை குறிக்கிறது, மற்றும் கத்தி அந்த நியாயத்தீர்ப்பின் நிறைவேறுதலையும் பலியையும் குறிக்கிறது.

ஆதியாகமம் 22:7-8

[7] அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

[8] அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,
…………………….
கவனியுங்கள், சற்று நேரத்திற்கு பின் ஒரு ஆட்டுக்கடா தன் கொம்புகளால் புதரில் சிக்கிக் கொண்டிருப்பதை ஆபிரகாம் கண்டார் என்றும், அவர் அந்த ஆட்டுக்கடாவை எடுத்து பலியிட்டார் என்றும் 13 ஆம் வசனம் நமக்கு சொல்லுகிறது. தேவன் தமக்குத் தாமே ஓர் ஆட்டுக்குட்டியை ஆயத்தம் செய்வார் என்று ஆபிரகாம் இங்கே கூறுகிறார், ஆனால் அங்கே ஆட்டுக்குட்டி இல்லை. கடைசியில் அங்கே இருந்தது ஒரு ஆட்டுக்கடா,

இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு பல நூற்றாண்டுகளுக்கு பின் யோவான் இயேசுவைக் குறித்து நாம் யோவான் 1:29 இல் வாசிப்பது போல, இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க தேவ ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டும் வரை அந்த ஆட்டுக்குட்டி வழங்கப்படவில்லை. தேவன் தமக்கு தகனபலியாக ஒரு ஆட்டுக்குட்டியை தேடிக்கொள்வார் என்று ஆபிரகாம் கூறியது தீர்க்கதரிசன ரீதியானது என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியமானது. ஆபிரகாமுக்கு இது முழுமையாக புரியவிட்டாலும் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் பலியிட அவர் இப்பொழுது தயாராக இருக்கிறார்.

ஆதியாகமம் 22:9

[9] தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.
……………………….
ஈசாக்கை கட்டாயப்படுத்தி ஆபிரகாம் கட்டி போடுவதற்கு, ஈசாக்கு ஒன்றும் ஒரு சிறு பையன் அல்ல, இப்பொழுது அவன் வளர்ந்த மனிதன், ஒருவேளை உடல் ரீதியான மோதல் ஏற்பட்டிருந்தால், ஈசாக்கு ஆபிரகாமை எளிதாக ஜெயித்திருப்பார் என்று நம்பலாம், ஆனால் ஈசாக்கு கீழ்ப்படிதலோடு இதைச் செய்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் பொழுதும் என்னுடைய சித்தம் அல்ல உம்முடைய சித்தமே செய்யப்படுவதாக என்று கூறிவிட்டு சிலுவைக்குச் சென்றதை நாம் படித்திருக்கிறோம். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவே அவர் சிலுவைக்கு சென்றார், இது இங்கே நமக்கு எவ்வளவு பெரிய ஒரு தீர்க்கதரிசன காட்சியாக இருக்கிறது இல்லையா?

ஆதியாகமம் 22:10

[10] பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
………………….
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் நீங்களும் நானும் ஆபிரகாமிடம் ஐயா நீங்கள் உண்மையிலேயே இதை செய்யப் போகிறீர்களா? தேவன் உங்களை அனுமதிக்க போவது போல தெரிகிறதே என்று கேட்டிருக்கலாம், அதற்கு அவர் நிச்சயமாக செய்வேன். இது தவறு என்று எனக்கு போதிக்கப்பட்டுள்ளது – எனக்கும் இது புரியவில்லை ஆனால் தேவனுக்கு கீழ்ப்படிய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று பதில் கொடுத்திருப்பார், இது ஆபிரகாம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய நெருக்கடியான நேரம் தான், தேவன் இந்த மனிதனை நான்கு மிக தெளிவான நெருக்கடிகளின் வழியாக ஏற்கனவே நடத்தி இருக்கிறார், அவை ஒவ்வொன்றும் அவருடைய ஆத்மாவிற்கு ஒரு பயிற்சியாகவும், பாடமாகவும், இருதயத்திற்கு பெரும் சுமையாகவும், இருந்திருக்கின்றன.

தேவன் ஆபிரகாமுக்கு வைத்த முதல் பரீட்சை ஊர் என்ற ஊரில் இருந்த தன் உறவினர்கள் அனைவரையும் விட்டுவிட்டு வரும்படி அவர் அழைக்கப்பட்டது. அவர் ஒட்டுமொத்த கூட்டத்தையும் விட்டுவிட்டு வருவது ஆபிரகாமுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவர் அதை சரியாக செய்யவில்லை என்றாலும் இறுதியில் அந்த பிரிவு ஏற்பட்டது.

இரண்டாவது பரீட்சை ஆபிரகாமுடைய சகோதரனின் மகனாகிய லோத்துவினால் வந்து சோதனை. ஆபிரகாம் லோத்தை நேசித்தார். அன்பு இல்லாவிட்டால் அவர் லோத்தை தன்னோடு கூட்டி வந்திருக்க மாட்டார். ஆனால் அவர்கள் பிரிய வேண்டிய காலம் வந்தது. லோத்து சோதோமுக்கு சென்றார்.

ஆம் ஆபிராமுக்கு தேவன் வைத்த மூன்றாவது சோதனை அல்லது பரிட்சை ஆகாரின் மகனாகிய இஸ்மவேலினால் வந்த சோதனை, ஆபிரகாம் ஒருமுறை தேவன் இடத்திலே ஆண்டவரே இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக என்று கதறினார், அவர் அந்த பையனை நேசித்தார். அவனை விட்டு பிரிய அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் தேவனுடைய கட்டளைப்படி அவர் கீழ்படிந்தார்.

இதுதான் உச்சகட்ட பரிட்சை அல்லது கடைசி சோதனை என்று நாம் சொல்லலாம். இப்பொழுது ஆபிரகாம் தனது வாழ்வின் நான்காவது பெரிய நெருக்கடியை சந்திக்கிறார். ஈசாக்கை விட்டுக் கொடுக்கும்படி அவர் கேட்கப்படுகிறார்.

ஏற்கனவே தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லி இருந்ததால் – அவருக்கு பல விபரங்கள் புரியவில்லை இருந்தாலும் – தேவன் ஈசாக்கை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்று ஆபிரகாம் விசுவாசித்தார். இதைத்தான் எபிரெயர் 11:19ல் நாம் வாசிக்கிறோம். ஆபிரகாமை பொருத்தவரை அவர் அந்த பலியை கொடுத்து விட மனமுவந்து தயாராகி விட்டார்.

தொடர்ந்து என்ன நடக்கிறது பாருங்கள். ஆபிரகாம் தன் மகனை பலியிட்டபோது அவர் கிரியைகளினாலே நீதிமான் ஆக்கப்பட்டார் என்று யாக்கோபு எழுதினார். ஆனால் சற்று பொறுங்கள் – ஆபிரகாம் தன் மகனை பலியிட்டாரா? ஆபிரகாம் தன் மகனுக்குள் கத்தியை பாய்ச்சினர் என்று வேதம் சொல்கிறதா? இல்லை.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 22:11-12

[11] அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

[12] அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
…………………..
இப்பொழுது ஆபிரகாம் தமக்கு பயப்படுகிறார் என்பதை தேவன் அறிந்து கொண்டார், அவர் அதை எப்படி அறிந்தார்? ஆபிரகாமின் செயல்களால், அதாவது அவருடைய கிரியைகளால் அறிந்து கொண்டார், இதற்கு முன்பு அது விசுவாசத்தினால் அறியப்பட்டது, தேவன் உங்கள் இருதயத்தை பார்க்கிறார் நீங்கள் உண்மையானவரா இல்லையா என்பதை அவர் அறிவார். ஆனால் உங்கள் அண்டை வீட்டாருக்கும் / நண்பர்களுக்கும் அது தெரியாது, அவர்கள் உங்கள் கிரியைகளை வைத்து நீங்கள் ஒரு விசுவாசியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும், அதனால்தான் கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு எழுதியிருக்கிறார், விசுவாசம் என்பது ஏதேனும் ஒரு செயலை வெளிப்படையாக உண்டாக்க வேண்டும்.
தேவன் ஆபிரகாமை பரிசோதித்தார், தேவன் யாரை அழைக்கிறாரோ, யாரை இரட்சிக்கிறாரோ, யாரை பயன்படுத்துகிறாரோ, அவர்கள் அனைவரும் கண்டிப்பாக பரிசோதிக்கப்படுவார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் ஆபிரகாமை பரிசோதித்தார். இன்றும் அவருக்குச் சொந்தமானவர்களை அவர் பரிசோதிக்கிறார், அவர் உங்களையும் என்னையும் பரிசோதிக்கிறார், நமது விசுவாசத்தை பலப்படுத்தவும், நம்மை நிலைநிறுத்தவும், நாம் அவருக்கு பயன் உள்ளவர்களாக மாறவுமே, இந்த சோதனைகள் நமக்கு வழங்கப்படுகின்றன. இந்த மனிதனாகிய ஆபிரகாமுக்கு இப்பொழுது மிக பெரிய ஒரு சோதனை கொடுக்கப்பட்டது, இதற்குப் பின் தேவன் அவரிடம் எதையும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆதியாகமம் 22:13

[13] ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
………………..

ஏதேன் தோட்டம் முதல் கிறிஸ்துவின் சிலுவை வரை, அவருடைய வருகையைச் சுட்டிக்காட்டும் ஒரு சிறிய விலங்கே அவருக்குப் பதிலீடாக (substitution) இருந்தது—மேலும் தேவன் மனிதப் பலியை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவருடைய குமாரன் இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் சிலுவைக்குச் சென்று மரித்தார்:
(ரோமர் 8:32) சொல்வது என்ன??
‘தம்முடையச் சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?’ .
…………………
அந்தச் சிலுவை ஒரு பலிபீடமாக மாறியது, அதில் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் பலியிடப்பட்டார். இதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.”

ஆதியாகமம் 22:14

[14] ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
…………………….

கவனியுங்கள், ஆபிரகாம் இந்த இடத்திற்கு ஒரு பெயர் கொடுக்கிறார், சாலமோனின் தேவாலயம் கட்டப்பட்ட இடமும் இதுதான் என்று அநேகர் நம்புகிறார்கள், தேவாலயம் அமைந்திருந்த அதே மலைத்தொடரில் தான் மண்டை ஓடு போன்ற ஒரு இடம் அதாவது கபாலஸ்தானம் என்று அழைக்கப்படும் கொல்கொதா இருக்கிறது, அங்கே ஆபிரகாம் தன் மகனை பலியிட்டார், அதே இடத்தில்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அடிக்க பட்டார், இதை நாம் பார்ப்பது மகிமையான அற்புதமான ஒரு காரியமாகும். ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டார் அதற்கு ஏகோவா பார்த்துக்கொள்வார் அல்லது ஏகோவா வழங்குவார் அல்லது கர்த்தருடைய பர்வதவத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று பொருளாகும், இங்கேதான் தேவன் ஆபிரகாமுக்காக இடையில் தலையிட்டு உதவி செய்தார்.
நாம் கற்றுக் கொண்ட வேத பகுதிக்கு ஒரு தலைப்பு கொடுக்க வேண்டுமென்றால்
விசுவாசத்தின் உச்சமும் தேவகிருபையின் வெளிப்பாடும்
என்று சொல்லலாம்.
ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் இந்தச் சம்பவம் வெறும் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, அது ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு பாடமாகவும், கல்வாரி சிலுவையின் நிழலாகவும் இருக்கிறது. இந்த அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன??:
1. பரிசோதிக்கப்படும் விசுவாசமே பலப்படும்: @@@@@
ஆபிரகாம் தன் வாழ்க்கையில் பல நெருக்கடிகளைக் கடந்தார். ஆனால், ஈசாக்கை பலியிடக் கோரிய அந்த இறுதிப் பரீட்சை, அவர் தேவனை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை உலகிற்கு நிரூபித்தது. தேவன் நம்மைச் சோதிப்பது நம்மை வீழ்த்துவதற்காக அல்ல, நம் விசுவாசத்தை உலகுக்கு மெய்ப்பிப்பதற்காகவே..
2. பதிலீடாக வந்த ஆட்டுக்குட்டி: @@@@@
ஆபிரகாம் பலிபீடத்தில் கத்தியை எடுத்தபோது, ஒரு ஆட்டுக்கடா புதரில் சிக்கியிருந்தது. அன்று ஆபிரகாமுக்கு – ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டுக்கடா கிடைத்தது போல, நம்முடைய பாவங்களுக்குப் பதிலாக தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியானார். இதுவே ‘யேகோவாயீரே’—தேவன் தமக்குத் தாமே ஒரு பலியைத் தயாரித்துக் கொள்வார் என்பதன் முழுமையான அர்த்தம்.
3. கீழ்ப்படிதலின் பலன்: @@@@@@
ஆபிரகாமின் கீழ்ப்படிதல் அவருக்கு மட்டுமல்ல, இன்று வரை நமக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறது. நாம் புரியாத சூழ்நிலைகளிலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் போது, தேவன் ஆச்சரியமான வழிகளைத் திறக்கிறார்.
பவுல் கூறியது போல, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார், அது அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. யாக்கோபு கூறியது போல, அந்த விசுவாசம் ஈசாக்கை பலிபீடத்தில் வைக்கும் கிரியையாக வெளிப்பட்டது. இன்று நம்மிடமும் தேவன் எதிர்பார்ப்பது இதையே. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை மிகவும் நேசிக்கிறீர்களோ, அதைத் தேவனுடைய பீடத்தில் வைக்கத் தயாராக இருக்கும்போது, தேவன் தம்முடைய மகிமையை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்.
யேகோவாயீரே —– உங்கள் தேவைகள் அனைத்தையும் அவருடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவாராக! ஆமென்

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top