ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 21
நிகழ்ச்சி எண்: 0038
வாசியுங்கள்
பிரியமானவர்களே மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். கார்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.
இன்று நாம் ஆதியாகமம் 21 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
இதற்கு முந்திய அதிகாரத்தில் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு குழந்தையாக பிறக்கும் முன் அவர்கள் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டிய ஒரு பாவத்தை குறித்து பார்த்தோம்.
இப்பொழுது 21 ஆம் அதிகாரத்தில் ஈசாக்கின் பிறப்பை குறித்து பார்க்கப் போறோம்.
ஆதியாகமம் 21:1-2
[1] கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். [2] ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
…………………….
ஈசாக்கின் பிறப்பிற்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இடையே மிகவும் வியக்கத்தக்க ஒற்றுமைகள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். கிறிஸ்து வருவதற்கு முன்பே இந்த மகத்தான சத்தியத்தை மனித குலத்தின் முன் வைப்பதற்காகவே ஈசாக்கின் பிறப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். தேவன் வாக்குறுதி அளித்தபடி குறிப்பிட்ட காலத்தில் ஈசாக்கு பிறந்தான்.
பவுல் என்ன சொல்கிறார் பாருங்கள்.
கலாத்தியர் 4:5
[5] காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
…………………
ஆம் இயேசு கிறிஸ்து தேவனுடைய திட்டத்தின் படி காலம் நிறைவேறின பொழுது இந்த பூமியிலே பாலனாய் பிறந்தார்.
ஆதியாகமம் 21:3-7
[3] அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். [4] தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான், [5] தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான். [6] அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடகூட நகைப்பார்கள். [7] சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.
…………………..
நாம் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சில மிகக் குறிப்பிடத்தக்க உண்மைகள் இங்கே இருக்கின்றன. முதலாவதாக ஈசாக்கின் பிறப்பு ஒரு அற்புதமான பிறப்பாகும். அதாவது அது இயற்கைக்கு மாறானதாக இருந்தது. ரோமர் நிருபத்தில் பவுல் சொல்லுவதை கவனியுங்கள்.
ரோமர் 4:19
[19] அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
……………………
மரணத்திலிருந்து தேவன் ஜீவனை கொண்டு வருகிறார். இது ஒரு அற்புத பிறப்பு. கிறிஸ்துவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பை ஏதோ ஒரு புதிய காரியமாக தேவன் இந்த உலகத்தின் மீது திடீரென்று திணிக்கவில்லை என்ற உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதற்காக அவர் மனிதர்களை தயார்படுத்த தொடங்கினார். எனவே தான் இங்கே ஈசாக்கின் பிறப்பிலேயே நமக்கு ஒரு அற்புதப் பிறப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவன் சாராளிடமும் ஆபிரகாம் இடமும் செயல்பட வேண்டியது இருந்தது என்பதை இங்கே நாம் பார்க்கிறோம். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதையும் தங்களுக்கு ஒரு குழந்தை பிறப்பது சாத்தியமற்றது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டியது இருந்தது.
ஆபிரகாமுக்கு 100 வயது சாராருக்கு 90 வயது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் ஈசாக்கின் பிறப்பு என்பது அவர்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பிறப்பாக இருக்க வேண்டியது இருந்தது.
ஆதியாகமம் 21:8
[8] பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான்.
…………………..
இந்த சிறு குழந்தை முதலில் தன் தாய்ப்பாலை உண்டு வளர்ந்தது. ஆனால் அவன் தாய்ப்பால் மறக்க வேண்டிய ஒரு நாள் வந்தது. இது கூட நமக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. தொட்டிலில் இருக்கும் சிறு குழந்தைக்காக அம்மா பாட்டிலை தயார் செய்யும் பொழுது அந்த பிஞ்ச குழந்தையின் முழு உடலும் செயல்படும். அவன் தன் கால்களை அந்தரத்திலே உதைப்பான். கைகளை ஆட்டுவான். மேலும் தன் முழு பலத்தையும் திரட்டி சத்தம் போடுவான். அவனுக்கு அந்த பால் பாட்டில் வேண்டும்.
1 பேதுரு 2:2 என்று சொல்கிறது?
நீங்கள் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கம் இல்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாய் இருங்கள்.
…………………….
ஆம் அருமையானவர்களே வசனமாகிய அந்த பாலின் மேல் பசியை கொண்ட ஒரு புதிய விசுவாசியாக இருப்பது மிகவும் அற்புதமானது.
கவனித்தீர்களா? நீங்கள் ஒரு விசுவாசியாக வளர வேண்டிய நாள் வருகிறது. சங்கீதம் 23 மற்றும் யோவான் 14 ஆகியவற்றை மட்டும் வாசித்துக் கொண்டிருக்காமல், அந்த வசனங்கள் எவ்வளவு அற்புதமான வைகளாக இருந்தாலும், முழு வேதத்தையும் முறையாக கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு முயற்சி எடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் உங்கள் ஆத்ம வாழ்க்கையில் வளர முடியும். எப்பொழுதும் ஒரு குழந்தையாகவே இருந்து விடக்கூடாது. ஐந்தாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள எச்சரிக்கையை பாருங்கள்.
எபிரெயர் 5:13-14
[13] பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். [14] பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
……………..
அருமையானவர்களே நீங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்கள் வாஞ்சையாய் இருக்கிறது.
ஆதியாகமம் 21:9-10
[9] பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, [10] ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
……………………
சிறுவன் ஈசாக்கின் வருகை அந்த குடும்பத்தில் நிச்சயமாக பல சிரமங்களை உண்டாக்கியது. ஆபிரகாமின் மகனான இஸ்மவேல் பரிகாசம் செய்ததை நாம் பார்க்கிறோம். இப்பொழுதுதான் இஸ்மாவேலின் சுபாவத்தையும் குணத்தையும் நாம் கவனிக்க தொடங்குகிறோம். இதுவரையில் அவன் ஒரு நல்ல பையனாகக் காணப்பட்டான். ஆனால் குடும்பத்தில் மற்றுமொரு மகன் வந்தவுடன் இஸ்மவேல் தனது உண்மையான குணத்தை காட்டத் தொடங்குகிறான்.
இது ஒரு விசுவாசிக்கு இரண்டு சுபாவங்கள் உண்டு என்பதற்கான ஒரு விளக்கமாகும். நீங்கள் மனம் திரும்பும் வரை உங்களிடம் பழைய சுபாவம் இருக்கிறது. அந்த பழைய சுபாவமே உங்களை கட்டுப்படுத்துகிறது. நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்கிறீர்கள். ஒரு பழைய உலக பாடலை பாடுவது போல நீங்கள் இயல்பாக வருவதை செய்கிறீர்கள். நீங்கள் இயல்பாக செய்யும் காரியங்கள் எப்பொழுதும் மிகச்சிறந்ததாக இருப்பதில்லை. ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும்பொழுது ஒரு புதிய சுபாவத்தை பெற்றுக்கொள்கிறீர்கள் எப்பொழுது நீங்கள் புதிய சுபாவத்தை பெற்றுக் கொள்கிறீர்களோ அங்கேயே எப்பொழுதும் சிக்கல் தொடங்குகிறது.
பழைய சுபாவத்திற்கும் புதிய சுபாவத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
ரோமர் 7:19
[19] ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
………………….
கவனியுங்கள் / புதிய சுபாவம் அதைச் செய்ய விரும்புவதில்லை ஆனால் பழைய சுபாவம் அதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. மேலும் பழைய சுபாவமே கட்டுப்பாட்டில் இருக்கிறது. எந்த சுபாவத்தின் படி நீங்கள் வாழ போகிறீர்கள் என்ற முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டிய நேரம் வருகிறது. கர்த்தருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும் விஷயத்தில் நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஒன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய அனுமதிக்க வேண்டும் – இல்லை என்றால் மாம்சத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு உங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். தேவனுடைய பிள்ளைக்கு மூன்றாவது மாற்று வழி என்று எதுவுமே இல்லை.
இங்கே அடிமைப் பெண்ணின் மகன் வெளியேற்றப்பட வேண்டும் ஆதியாகமத்தில் நாம் பார்ப்பது சரியாக இதுதான். அடிமை பெண்ணான ஆகாரின் மகன் வெளியேற்றப்பட வேண்டும்.
ஆதியாகமம் 21:11
[11] தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
…………………..
மாம்சத்தின் படி பார்த்தால் ஈசாக்கை போலவே இஸ்மவேலும் ஆபிரகாமின் மகன்தான். ஈசாக்கு அப்பொழுதுதான் பிறந்திருக்கிறான். அவன் ஒரு சிறு குழந்தை அவனைப் பற்றி இன்னும் அதிகமாக அவருக்கு தெரியாது. ஆனால் இந்த இஸ்மவேல் பல ஆண்டுகளாக அந்த வீட்டிலே வளர்ந்தவன். அவன் இப்பொழுது ஒரு பதின் பருவ சிறுவன். அதாவது ஒரு டீன் ஏஜ் பாய். ஆபிரகாம் அவன் மேலே மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஆபிரகாம் அவனை வெளியே அனுப்ப வேண்டியிருந்தால் அது அவருக்கு மிகவும் துக்ககரமான காரியமாகும். சாராளும் ஆபிரகாமும் செய்த காரியத்தை தேவன் அங்கீகரிக்கவில்லை. அவரால் இஸ்மவேலை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பாவம். தேவன் அதை அங்கீகரிக்கவில்லை. அதை அங்கீகரிக்க அவர் நினைக்கவும் இல்லை. இது ஆபிரகாமுக்கு ஒரு மன வேதனையான காரியமாகவே இருந்தது. ஆனால் அந்த சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க அவர் அந்த சிறுவனை வெளியே அனுப்ப வேண்டியது இருந்தது. அந்த பெரிய சிறுவன் இஸ்மவேல் தன்னைத் தொடர்ந்து பரிகாசம் செய்வதை பாவம் சாரளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அருமையான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒரு விசுவாசியாக இரண்டு சுபாவங்களோடு கூட இணக்கமாக வாழ முடியாது. கட்டாயம் நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். யாக்கோபு என்ன சொல்லுகிறார்
(யாக்கோபு 1:8)
இருமனமுள்ளவன் தன் வழிகளில் எல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்.
………………………
இந்த நாட்களிலும் பல கிறிஸ்தவர்களிடையே காணப்படும் நிலையற்ற தன்மைக்கும் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் இதுதான் காரணமாகும். அவர்கள் உலகத்தோடும் செல்ல விரும்புகிறார்கள் அதே சமயம் கர்த்தரோடும் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் ஆன்மீக ரீதியிலே மனச்சிதைவு அடைந்தவர்களைப் போல இரண்டையும் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் உங்களால் அப்படி செய்ய முடியாது.
கிரேக்க மக்கள் ஒரு பந்தயம் நடத்தினார்கள். அதில் இரண்டு குதிரைகளை ஒன்றாக இணைப்பார்கள். வீரன் – ஒரு காலை ஒரு குதிரை மீதும், அடுத்த காலை மற்றொரு குதிரை மீதும் வைத்து சவாரி செய்ய வேண்டும். பந்தயம் தொடங்கும். அந்த இரண்டு குதிரைகளும் ஒன்றாக செல்லும் வரை அது ஒரு சிறந்த பந்தயமாக இருக்கும். அருமையானவர்களே உங்களுக்கும் எனக்கும் இரண்டு சுபாவங்கள் இருக்கின்றன. ஒன்று கருப்பு குதிரை மற்றொன்று வெள்ளை குதிரை. அவை இரண்டும் ஒன்றாகச் சென்றால் நன்றாக இருக்கும் .ஆனால் அவை ஒருபொழுதும் ஒத்துப்போகாது. வெள்ளை குதிரை ஒரு பக்கமும் கருப்பு குதிரை மற்றொரு பக்கமும்தான் செல்லும். அவை அப்படி செல்லும் பொழுது நாம் எந்த குதிரையோடு செல்ல போகிறோம் ? இதை கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும். பழைய சுபாவத்தின் படி வாழ போகிறோமா? அல்லது புதிய சுபாவத்தின் படி வாழப்போகிறோமா? இதனால்தான் நம்மை நாமே ஒப்புக் கொடுக்க சொல்லப்பட்டிருக்கிறோம்.
உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து உங்கள் அபயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்
என்று ரோமர் 6 13 இல் வாசிக்கிறோம்.
மாம்சத்தின் பலத்தால்/ நியாயப்பிரமாணத்தால் / எதை செய்ய முடியவில்லை. அதை இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் சாதிக்க முடியும் என்று பவுல்
கூறுகிறார்.
ரோமர் 8:3-4
[3] அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். [4] மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
………………….
நியாயப்பிரமாணம் மனிதனின் பழைய சுபாவத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து தோற்றுப் போனது. இப்பொழுது தேவனுடைய ஆவியானவர் புதிய சுபாவத்திற்கு பலன் கொடுத்து நியாயப்பிரமாணத்தால் ஒருபொழுதும் செய்ய முடியாததை செய்து முடிக்க உதவி செய்கிறார்.
ஆபிரகாமின் மகனான இஸ்மவேலின் குணம் வெளிப்படத் தொடங்குகிறது. இந்த சுபாவத்தைதான் பின் நாட்களிலே அந்த தேசத்திலும் நாம் பார்க்கிறோம். இது பகை உணர்ச்சி கொண்ட – தன் சகோதரனுக்கு எதிராக கை நீட்டுகிற ஒரு தேசமாகும். பல ஆண்டுகளாக அவனைப் பற்றிய சித்திரம் இதுவாகவே தொடர்ந்து இருந்து வருகிறது
நான் ஏற்கனவே சொன்னது போல ஈசாக்கின் பிறப்பில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் முன் அடையாளத்தை பார்க்கிறோம். கன்னிப் பிறப்பை தேவன் திடீரென்று மனித குலத்தின் மீது திணிக்கவில்லை யோவான் ஸ்நானகனின் பிறப்பு சின்சோனின் பிறப்பு மற்றும் இங்கு ஈசாக்கின் பிறப்பு என இதற்கு முன்னே பல அற்புத பிறப்புகளின் மூலம் அவர் நம்மை தயார் படுத்தி இருக்கிறார். ஈசாக்கின் பிறப்பிற்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒப்பீட்டை நாம் கவனிக்க தவறி விடக்கூடாது.
ஈசாக்கின் பிறப்பிற்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கும் ஒன்று போல் இருக்கும் காரியங்களை நாம் பார்ப்போம்.
இருவரது பிறப்பும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவை: ஈசாக்கின் பிறப்பும் கிறிஸ்துவின் பிறப்பும் முன்னரே வாக்குறுதி அளிக்கப்பட்டவை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமை ஊர் என்ற ஊரிலிருந்து தேவன் அழைத்தபோது, “நானும் சாராளும் உனக்கு ஒரு மகனைத் தருவேன்” என்று கூறினார். இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தேவன் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். அதேபோல், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று இஸ்ரவேல் தேசத்திற்கு தேவன் கூறியிருந்தார். இயேசு பெத்லகேமில் பிறந்தபோது, அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.
வாக்குத்தத்தத்திற்கும் நிறைவேற்றத்திற்கும் இடையே இருந்த நீண்ட இடைவெளி: இரண்டு பிறப்புகளிலும், வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டதற்கும் அது நிறைவேறியதற்கும் இடையே நீண்ட கால இடைவெளி இருந்தது. ஈசாக்கின் விஷயத்தில் சுமார் 25 ஆண்டுகள் ஆனது. கிறிஸ்துவின் பிறப்பைப் பொறுத்தவரை, அது பல தலைமுறைகளுக்கு முன்பே சொல்லப்பட்டது. உதாரணமாக, தாவீதின் வம்சத்தில் ஒருவர் வருவார் என்று தேவன் வாக்குறுதி அளித்தார்—அது கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையாகும்.
பிறப்பு அறிவிப்புகள் நம்ப முடியாததாகத் தோன்றின: சாராளும் மரியாளும் அந்த அறிவிப்புகளை நம்புவதற்கு கடினமாக உணர்ந்தனர். கர்த்தருடைய ஊழியர்கள் சோதோமுக்குச் செல்லும் வழியில் ஆபிரகாமைச் சந்தித்தபோது, ஈசாக்கின் பிறப்பை அறிவித்தனர். அது சாத்தியமற்றதாகத் தோன்றியது. சாராள் நகைத்து, “இது நடக்கவே முடியாது, இது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது” என்றாள். கன்னிகைப் பிறப்பைப் பற்றி முதன்முதலில் கேள்வி எழுப்பியது யார்? அது மரியாளே. தேவதூதன் அறிவித்தபோது, “நான் புருஷனை அறியேனே, இது எப்படியாகும்?” (லூக்கா 1:34) என்று கேட்டாள்.
இருவரும் பிறப்பதற்கு முன்பே பெயரிடப்பட்டவர்கள்: ஈசாக்கும் இயேசுவும் பிறப்பதற்கு முன்பே பெயரிடப்பட்டனர். ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு மகன் பிறப்பான் என்றும், அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. கர்த்தராகிய இயேசுவின் பிறப்பிலும், அவருக்கு முன்னரே பெயரிடப்பட்டதைக் காண்கிறோம். தேவதூதன் யோசேப்பிடம், “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று கூறினார்.
இருவருடைய பிறப்பும் தேவன் குறித்த காலத்தில் நிகழ்ந்த பிறப்புகள்: “தேவன் குறிப்பிட்டிருந்த காலத்திலே, சாராள் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள்” என்று ஆதியாகமம் 21-ஆம் அதிகாரம் 2-வது வசனம் கூறுகிறது. இயேசுவின் பிறப்பைக் குறித்து பவுல் கூறும்போது, “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4) என்று குறிப்பிடுகிறார்.
இரு பிறப்புகளும் அற்புதம் நிறைந்தவை: ஈசாக்கின் பிறப்பு ஒரு அதிசயமான பிறப்பு, அதேபோல் கர்த்தராகிய இயேசுவின் பிறப்பும் அற்புதம்—அதில் எந்த மனிதனுக்கும் பங்கில்லை.
இரண்டு பேரும் தந்தையருக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்த குமாரர்கள்: “சாராள் ஈசாக்கைப் பெற்றபோது ஆபிரகாம் அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்” என்று வாசிக்கிறோம். இதற்கு ‘சிரிப்பு’ அல்லது ‘மகிழ்ச்சி’ என்று பொருள். தேவன் அந்த அறிவிப்பைச் செய்தபோது ஆபிரகாம் மிகுந்த மகிழ்ச்சியால் நகைத்ததால் இந்தப் பெயரைச் சூட்டினான். கர்த்தராகிய இயேசுவைக் குறித்து, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று வானத்திலிருந்து பிதாவாகிய தேவன் பேசினார். இரண்டு குமாரர்களும் தந்தையருக்கு மகிழ்ச்சியாய் இருந்தனர்.
இருவரும் மரணபரியந்தம் தந்தையருக்குக் கீழ்ப்படிந்தவர்கள்: ஆதியாகமம் 22-ஆம் அதிகாரத்தில், ஈசாக்கை அவன் தந்தை பலியிட முனைவதைக் காண்போம். அப்போது அவன் எட்டு அல்லது ஒன்பது வயது சிறுவன் அல்ல; அவனுக்கு சுமார் 33 வயது இருக்கும். அவன் மரணம் வரை தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தான். இது ஈசாக்கின் வாழ்க்கையில் உண்மையாக இருந்தது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இதுவே நிகழ்ந்தது. ஈசாக்கின் பிறப்பிலும் வாழ்விலும் கிறிஸ்துவின் பிறப்பையும் வாழ்வையும் குறித்த ஒரு அற்புதமான சித்திரம் உள்ளது.
மரணத்திலிருந்து எழுந்த வாழ்வு: ஈசாக்கின் அதிசயமான பிறப்பு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு ஒரு அடையாளமாகும். ஆபிரகாம் “தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்கவில்லை” (ரோமர் 4:19) என்று பவுல் கூறுவதைக் கவனியுங்கள். மரணத்திலிருந்து வாழ்வு வந்தது—அதுதான் உயிர்த்தெழுதல். இதை வலியுறுத்திய பிறகு பவுல் இயேசுவைப் பற்றி, “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25) என்று கூறுகிறார். ஈசாக்கின் வாழ்வில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மிகச்சிறந்த நிழலாட்டத்தைக் காண்கிறோம்.
“இப்பொழுது தேவன் ஆபிரகாமிடமும், அதேபோல் ஆகாரிடமும் அவளுடைய குமாரனாகிய இஸ்மவேலிடமும் எவ்வளவு கிருபையாக நடந்துகொள்கிறார் என்பதைப் பார்க்கிறோம்”
ஆதியாகமம் 21:12-13
[12] அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். [13] அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
……………………
தேவன் மிகத் தெளிவாக ஆபிரகாம் இடத்திலே இஸ்மவேல் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குமாரனாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்பதை கூறி விடுகிறார்.
ஏற்கனவே தேவன் ஆபிரகாமுக்கு செல்லும் பொழுது உன்னுடைய வித்தில் இருந்து தேசங்களை நான் உருவாக்குவேன் என்று சொல்லி இருந்தார் எனவே இப்பொழுது இஸ்மவேலையும் ஒரு ஜாதி ஆக்குவேன் என்று சொல்லுகிறார்.
ஆதியாகமம் 21:14-21
[14] ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். [15] துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு, [16] பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். [17] தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். [18] நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். [19] தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். [20] தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். [21] அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.
………………,…..
இதோடு கூட வேத புத்தகத்தில் இஸ்மவேலின் சரித்திரம் முற்றுப்பெறுகிறது இதை இனி ஒருபொழுதும் எந்த இடத்திலும் வேதத்தில் நாம் பார்க்க முடியாது. ஆனால் இந்த இஸ்மவேலின் சந்ததியான அரபு மக்களை இன்றைக்கும் அந்த பாலைவனப் பிரதேசத்தில் நாம் பார்க்க முடிகிறது.
ஆதியாகமம் 21:22-23
[22] அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். [23] ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
……………..
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் அபிமெலேக்கு இப்பொழுது ஆபிரகாமோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறான் இதினிமித்தமாக இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிறார்கள்
ஆதியாகமம் 21:32-33
[32] அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். [33] ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
………………….
ஏற்கனவே பல இடங்களிலே நாம் பார்த்தது போல ஆபிரகாம் தான் செல்லும் இடங்களில் எல்லாம் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறார்.
சொந்த ஊரில் இருந்தால்தான் நான் கர்த்தரை தொழுது கொள்வேன் என்பதல்ல நீங்கள் எங்கு இருந்தாலும் விசுவாசிகளோடு தேவனை தொழுது கொள்ள கவனமாக இருங்கள்.
ஆதியாகமம் 21:34
[34] ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
………………
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணிய இந்த தேசத்தில் ஆபிரகாம் எப்பொழுதும் ஒரு அந்நியனும் பரதேசியாகவும் இருந்தார் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இது அதற்கு ஒரு அடையாளம்.
ஆதியாகமம் 21-ஆம் அதிகாரம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக முக்கியமான மூன்று பாடங்களை முன்வைக்கிறது:
1. ஆபிரகாம் மற்றும் சாராளின் வாழ்வில் ஈசாக்கின் பிறப்பு என்பது, “மனிதனால் கூடாதது தேவனால் கூடும்” என்ற சத்தியத்திற்குச் சான்றாக இருக்கிறது. 100 வயது ஆபிரகாம், 90 வயது சாராள் – செத்துப்போன செத்துப்போன சரீரங்களிலிருந்து ஜீவன் பிறந்தது. இது வெறும் ஒரு குழந்தையின் பிறப்பு மட்டுமல்ல, மரணத்தை வென்ற கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு இது ஒரு முன் அடையாளமாகும். உங்கள் வாழ்வில் வாக்குத்தத்தங்கள் நிறைவேறத் தாமதமானால் சோர்ந்து போகாதீர்கள்; “காலம் நிறைவேறினபோது” தேவன் ஈசாக்கை தந்தது போல, உங்கள் வாழ்விலும் அதிசயங்களைச் செய்வார்.
2. ஈசாக்கு வந்தவுடன், இஸ்மவேல் பரியாசம் செய்யத் தொடங்குகிறான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் அப்படித்தான் – நாம் மறுபடியும் பிறக்கும்போது, பழைய மாம்ச சுபாவத்திற்கும் புதிய ஆவிக்குரிய சுபாவத்திற்கும் போராட்டம் நடக்கும்.
“அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்” (ஆதி 21:10)
என்று வேதம் சொல்வது போல, நாம் ஆவியில் வளர வேண்டுமானால், பழைய பாவப் பழக்கங்களையும் மாம்ச இச்சைகளையும் நம் வாழ்விலிருந்து வெளியேற்ற வேண்டும். இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது; நாம் ஆவியின்படி நடக்கத் சரியான தீர்மானம் செய்ய வேண்டும்..
3. ஈசாக்கு பால் மறந்த நாளில் ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான். அதேபோல, நாமும் வசனமாகிய ஞானப்பாலையே குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளாக இராமல், நீதியின் வசனத்தில் பழக்கமுள்ளவர்களாய், ஆவிக்குரிய முதிர்ச்சி (Spiritual Maturity) அடைய வேண்டும். ஆபிரகாம் தான் சென்ற இடமெல்லாம் கர்த்தரைத் தொழுதுகொண்டது போல, நாமும் இந்த உலகத்தில் பரதேசிகளாய் இருந்தாலும், எந்நிலையிலும் எந்த இடத்திற்கு சென்றாலும் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும்.@@@@@
கடைசியாக ஈசாக்கைப் போல நாம் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவைப் போல பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாகவும் மாற நம்மை ஒப்புக்கொடுப்போம். மாம்சத்தின் போராட்டங்களை முறியடித்து, ஆவியின் பலத்தினால் தேவன் நமக்காகக் குறித்திருக்கிற ஆவிக்குரிய சுதந்திரத்தைச் சுதந்தரிப்போம்.
இப்படிப்பட்ட கிருபையை கர்த்தர் தாமே உங்களுக்கும் தருவாராக ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
