ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 2: 9 – 25
நிகழ்ச்சி எண்: 0017
வாசியுங்கள்
பிரியமானவர்களே, வேத ஆராய்ச்சிகளை தொடர்ந்து கேட்டு , எங்களோடு தொடர்பு கொள்ளும் உங்களை அன்போடு வாழ்த்துகிறேன். கடந்த நிகழ்ச்சியில் ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம் முதல் 8 வசனங்களை நாம் கற்றுக் கொண்டோம். இதில் ஆறு நாட்கள் தேவன் மனிதனுக்காக அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே அவர் ஓய்வாய் இருந்தார். ஏழு நாட்களுக்கு ஒரு நாள் மனித உடலுக்கு நல்ல ஓய்வு தேவை என்பதை காண்பித்தார் மேலும் அதை ஒரு கட்டளையாகவும் அவர் கொடுத்தார் என்று கடந்த நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டோம். ஏழு நாளில் ஒரு நாள் ஓய்வு என்பது மனிதன் பாவத்தில் விழும் முன்னாதாகவே தேவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம் என்று சொல்லலாம். மேலும் அனைத்தையும் வார்த்தையினாலே படைத்த தேவன், ஒரு குயவன் களிமண்ணில் வேலை செய்வது போல வேலைசெய்து மனிதனை உண்டாக்கினார். மனிதன் தன்னோடு உறவு கொள்ளக் கூடியவனாய் வாழும்படி தன்னுடைய சுவாசத்தை அவனிலே ஊதினார். இத்தனை அக்கறை கொண்டு படைக்கப்பட்ட மனிதனுக்காக, அவனுடைய ரட்சிப்பிற்காக தன்னுடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்தார் என்றும் சிந்தித்தோம்.
இன்று நாம் ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் முதல் 25ஆம் வசனம் வரை கற்றுக்கொள்ளப் போகிறோம்.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 2:9
‘தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ‘
………………………
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள், அசாதாரண மரங்கள். ஒன்று ஜீவ விருட்சம் மற்றொன்று, நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். இவற்றைப்பற்றி நாம் அதிகம் இப்பொழுது பேசமுடியாது. இவை இப்பொழுது பூமியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டன. தேவனாகிய கர்த்தர் ஒவ்வொரு மரமும் வளரும் படியாக படைத்தார். நீங்களும் கவனித்திருப்பீர்கள், அவை பார்ப்பதற்கு அழகானதாகவும், உணவுக்கு ஏற்றதாகவும் இருந்தன. இந்த மரங்கள் பார்க்க அழகானதாயிருந்தாலும், அதை பயன்படுத்துவது தொடர்பான மற்றொரு பக்கமும் இருந்தது. இரண்டும் இந்த மரங்களில் இணைக்கப்பட்டிருந்தன. இது எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் ஒரு மேஜை, நாற்காலி, சோபா போன்ற பொருட்கள் இருக்கும் கடைக்குச் செல்கிறீர்கள். அந்த கடைக்காரர் உங்களைப்பார்த்து, இந்த பொருட்கள் எல்லாம் அழகாயிருக்கின்றன ஆனால் இதை நீங்கள் பயன்படுத்த சில நிபந்தனைகள் இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும், யோசியுங்கள். ஏதேன் தோட்டத்திலும் இதுதான் முக்கியமான விஷயம். அங்கே சில அழகான மரங்கள் இருந்தன, ஆனால் அவைகளை பயன்படுத்துவதில் நிபந்தனைகள் இருந்தன. அவை நடைமுறைக்கான காரியங்கள்தான், அவைகள் உணவுக்கு நல்லவைகள் தான். நாம் வாழும் இந்த பூமியில் அந்த முதல் அழகின் ஒரு பகுதியை இன்னமும் நாம் பார்க்கிறோம். பூமியில் மனிதனுடைய வீழ்ச்சியின் சாபம் இருந்த போதிலும், அது முட்செடிகளை பிறப்பித்தாலும் இயற்கையில் அழகு இருக்கிறது. எந்த நாட்டின் மலைப்பிரதேசங்களுக்கு நீங்கள் சென்றாலும், தேவனுடைய படைப்பின் அழகை இன்றும் நீங்கள் காணமுடியும். வித்தியாச வித்தியாசமான மரங்கள் கொடிகள் மற்றும் பூக்கள், தேவனுடைய படைப்பின் மேன்மை நமக்கு நினைவுபடுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அற்புதமான காட்சிகள் மத்தியில் நம்மை மறந்து நாம் ஆண்டவரை துதிக்க முடியும். ஒருவேளை நீங்கள் வசிக்கும் பகுதியே அப்படிப்பட்ட அழகு நிறைந்ததாக இருக்கும் என்றால், அனுதினமும் நிச்சயம் அது உங்களுக்கு ஆண்டவரே நினைவுபடுத்தும். அவரை துதித்து பாட உங்கள் உள்ளம் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கும்.
ஆதியாகமம் 2: 10 – 14
0தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
11முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
12அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.
13இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.
………………………
கண்களை மகிழ்விக்கும் பழங்களுடன் பசுமையான தோட்டங்கள் – ஆன்மாவைத் திருப்தியுற வைக்கும் பூஞ்செடிகள், அமைதலாய் ஓடுகின்றன ஆறுகள், தென்றல் காற்று வீசுகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லை, காலக்கெடு இல்லை, இன்பமற்ற ஊட்டங்களைத் தேடி ஓட தேவை இல்லை —. அமைதியான அந்த சூழ்நிலையில் ஆதாம் வலம் வருகிறான். எத்தியோப்பியாவில் காணப்படும் நதி நைல் நதி. இதக்கேல் என்பது டைகிரீஸ் நதியாக இருக்க வேண்டும்.
வசனம் 15 பாருங்கள்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்………………..
ஆதாமை உண்டாக்கிய தேவன் அவனை ஒரு சோம்பேறியாக, பழங்களையும் கனிகளையும் சாப்பிட்டு சுற்றி வா என்று விட்டுவிடவில்லை. அந்த அழகான ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். அதை எப்படி செய்ய வேண்டும் என்று ஆதாமுக்கு எப்படி தெரியும்?. பொறுப்பை கொடுத்த ஆண்டவர் நிச்சயம் அதற்கு தேவையான ஞானத்தையும் புரிந்து கொள்ளுதலையும் கொடுத்திருப்பார். இன்றும் நாம் யாராக இருந்தாலும் தேவன் நம்மை சோம்பலாய் இருக்க விரும்புவதில்லை. நம்மால் இயன்ற, நாம் இருக்கும் சூழ்நிலையில் நாம் செய்யும்படியாய் தேவன் தந்திருக்கிற பணியை உற்சாகத்துடன் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
மேலும் மனிதனின் கரங்களில் ஆளுகை இருந்தது. அவன் கட்டளையிட இயற்கையும் அவனுக்கு பதில்கொடுக்கும் நிலையில் இருந்தது.
பாருங்கள். வாசிக்கிறேன் ஆதியாகமம் 2: 16, 17
16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ………………..
தேவன் கொடுத்த கட்டளையை கேட்ட ஆதாம் கேள்வி கேட்கவில்லை. புரிந்து கீழ்ப்படிந்து வாழ்ந்தான் என்று சொல்லலாம்.
தேவனுடைய முதல் திட்டத்தின்படி மனிதனுக்கு மரணம் இல்லை. அவன் பயிற்சி காலத்தில் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தான். மனிதன் விரும்புவதைச் செய்யும் சுயாதீனம் பெற்றவனாயிருந்தான். சுயாதீனம் எப்பொழுதும் பொறுப்பை உண்டுபண்ணுகிறது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இரண்டும் ஒரே அச்சில் சுழலும் இரண்டு சக்கரங்கள் என்று சொல்லலாம். சுயாதீனம் கொடுக்கப்பட்டிருந்த மனிதனுக்கு அவன் தேவனுக்குக் கீழ்படிகிறானா என்பதை கணிக்க ஒரு பரீட்சை தேவையாயிருந்தது.
வேதத்தை வியாக்கியானம் செய்யும் சிலர் அந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியில் விஷம் இருந்தது என்று கூறுகிறார்கள். ஆனால் அதுதான் அந்த தோட்டத்திலேயே ருசியான கனியாயிருந்திருக்கும் என்று போதகர் வெர்னன் மகி அவர்கள் கூறுகிறார்கள்.
அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று ஆதாமுக்குச் சொல்லப்பட்டிருந்தது. நினைவிருக்கிறதா? தேவன் அந்தக் கட்டளையை கொடுத்து எவ்வளவு காலங்களுக்கு பின்னர் ஏவளை உருவாக்கினாரோ நமக்கு தெரியாது. ஆனால் அந்த காலம் வரை எத்தனையோ முறை ஆதாம் அந்தத் தோட்டத்தின் நடுவில் உள்ள அந்த மரத்தையும் அதன் கனியையும் பார்த்து இருந்தாலும், அதை அவன் பறித்து சாப்பிடவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆதாமும் ஒரு திருத்துவத்தை உடையவனாயிருந்தான். ஆதாம் மரிப்பான் என்றால் அவன் மூன்று வகைகளிலும் மரிக்க வேண்டும். ஆதாம் 900 ஆண்டுகளுக்கு மேலாக சரீரப்பிரகாரமாக மரிக்கவில்லை. ஆனால் தேவன் , நீ அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கூறியிருந்தார். மரணம் என்றால் பிரிவு. எனவே ஆதாம் அந்த கனியை சாப்பிட்ட அன்றே ஆவிக்குறிய வாழ்க்கையில் தேவனைவிட்டு பிரிக்கப்பட்டுவிட்டான். இதை நாம் திட்டமாய் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 2:18
பின்பு: தேவனாகிய கர்த்தர்; மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
………………………..
ஆதாமை தேவன் ஏதேன் தோட்டத்தில் சில காலம் தனியாக வைத்திருந்ததிலும் ஒரு நோக்கம் இருந்தது. அதாவது அவனுடன் இருக்க அவனுக்கு ஒருவர் தேவை என்பதை அவன் உணர்ந்துகொள்ளவே தேவன் இவ்வாறு செய்தார்.
பின் தேவன் சரியான நேரத்தில் ஆதாமுக்கு ஏவாளை உருவாக்கி கொடுத்தார்.
#### திருமணத்தைக் குறித்து அடிக்கடி சிந்திக்கிற அருமையான வாலிப சகோதரனே சகோதரியே, நீங்கள் தவறான தீர்மானங்களை எடுத்து விடாதபடி. எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்ற உணர்வு பெற்ற நாளிலிருந்து ஆண்டவர் உங்களுக்காக உண்டாக்கி இருக்கிற உங்கள் வாழ்க்கை துணையை ஏற்ற நேரத்திலே கொண்டு வந்து சேர்க்க கருத்தோடு ஜெபிக்க வேண்டியது உங்கள் கடமை என்பதை மறக்க வேண்டாம். வாழ்க்கையில் துணை தேவை என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிலே ஏற்படுகிறது. இதைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் சமீபத்தில் தான் உங்கள் வாழ்க்கை துணை குறித்து சிந்திக்க துவங்கியிருப்பீர்கள் என்றால். இப்பொழுதே நீங்கள் அதற்காக கருத்தோடு ஜெபியுங்கள், அவசரப்பட்டு தவறான தீர்மானங்களை செய்து விட வேண்டாம். எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிற கர்த்தர் உங்களுக்கான வாழ்க்கை துணையையும் கொண்டு வருவார்.
ஆதியாகமம் 2:19
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதிவே அதற்குப் பேராயிற்று.
…………………………….
ஆதாம் இவ்வளவு பெரிய வேலையை எப்படி செய்தான் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அருமையானவர்களே தேவன் ஒருவருக்கு ஒரு பொறுப்பு கொடுப்பார் என்றால் அதற்கு தேவையான ஞானத்தையும் பலனையும் கிருபையையும் அவரே தருவார் என்பதை மறந்து போக வேண்டாம். இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பை குறித்தாவது, நீங்கள் கலக்கத்தோடு இருப்பீர்கள் என்றால் கர்த்தரை நோக்கி பாருங்கள். அவரை நம்புங்கள்
அன்று அந்த எல்லா மிருகங்களுக்கும் பேரிட ஆதாம் புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும். கடவுள் ஒரு யானையை ஆதாமிடத்தில் கொண்டுவந்து இதற்கு என்ன பேரிடலாம் என்று கேட்டதற்கு ஆதாம் , யப்பா , இதைப்போல வேறு ஒன்றுமில்லை. இது யானை என்று கூறியிருக்க வேண்டும். எனவே இன்றுவரை யானை என்றே அது அழைக்கப்படுகிறது.
ஆதியாகமம் 2:20 பாருங்கள்.
அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பற்வைகளுக்கும், சகலவித காட்டு மிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
………………………………
ஆதாம் சொல்வதற்கு ஆமாம் என்று சொல்லவும், அவன் கேட்பதற்கு அவனுக்கு பதில் கொடுக்கவும், அவனைப்போல ஒரு உதவியாள் தேவை. அதாவது அவனுடைய அடுத்த பாதி அவனுக்குத் தேவை என்று சொல்லலாம். ஒரு மனிதன் திருமணம் ஆகும்வரை அவன் பாதியாகவே இருக்கிறான்.
எனவேதான் , மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு என்ற திருமணப் பாடலில் 3 – அவளே இல்லாதவன் ஒரு பாதி என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் கருத்து புரியாத ஒருவரோ அல்லது அச்சகத்தில் நடந்த தவறுதலாலோ – இன்று பல இடங்களில் பலர் உண்மையான கருத்தை அறியாமல் அவளே இல்லாதவன் ஒரு பாவி என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள். ( For shot))
திருமணம் என்பது தேவனுடைய திட்டமாயிருக்கிறது. ஆணுக்கு பதில் கொடுக்க ஒரு பெண் தேவை. அப்படிப்பட்ட ஒரு பெண் அவனுக்கு மறு பாதியாய் இருக்கிறாள்.
தொடர்ந்து வருகிற வசனத்தில் தேவன் ஏவாளை உண்டாக்கியதைக் குறித்து படிக்கிறோம்.
வாசிக்கிறேன் ஆதியாகமம் 2:21-22ஆம் வசனங்கள்.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனிஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
……………………………
ஆதாமின் விலா எலும்பிலிருந்து, அதாவது அவனுடைய நடு பக்கத்திலிருந்து பெண் உறுவாக்கப்பட்டிருக்கிறாள். இதைக்குறித்து டாக்டர் Matthew Henry என்ற வேத பண்டிதர் கூறும்பொழுது, ஆதாமுக்கு அதிகாரியாக இருக்கும்படி தேவன் ஆதாமின் தலையிலிருந்து ஏவாளை உண்டாகவில்லை, அவள் அவனை விட தாழ்மையானவள் என்பதற்காக ஆதாமின் கால் எலும்பிலிருந்தும் ஏவாளை உருவாக்கவில்லை அவள் ஆதாமின் அடுத்த பாதியாக இருக்கிறாள். என்பதால் அவனுடைய விலா எலும்பிலிருந்து அவளை உண்டாக்கினார் என்று கூறியிருக்கிறார்.
மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்படிந்திருங்கள் என்று கர்த்தர் கூறும்பொழுதும் இருவரும் இணையானவர்கள் என்பதால் தான் அவ்வாறு கூறியிருக்கிறார். இதன் பொருள் என்ன?? அவள் அவனுக்கு பதில் கொடுப்பவளாயிருக்க வேண்டும். ஒரு மனைவி அவளுடைய கணவனின் மறுபாதியாயிருக்கிறாள். அவள் இல்லாமல் அவன் ஒரு அரை மனிதன் மட்டுமே.
ஏவாள் மிகவும் அழகான ஒரு பெண்ணாயிருந்திருப்பாள் என்று நாம் திட்டமாகக் கூறமுடியும். இன்றும் அழகாயிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அந்த அழகை ஆதித் தாயாகிய ஏவாளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். அவளுக்கு இல்லாத அழகு என்று ஒன்றும் இல்லை என்று ஒருவர் கூறியிருக்கிறார். அவளே ஆதாமின் அடுத்த பாதி.
ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
……………………….
எபிரெய மொழியில் மனுஷி என்ற வார்த்தை மனுஷன் என்ற வார்த்தையைப் போலவே இருக்கிறது. மனுஷன் என்பது ஈஷ் என்றும் மனுஷி என்பது ஈஷ்ஷா என்றும் சொல்லப்படுகிறது. அவளே மனுஷனின் மறுபாதி. அவள் அவனுக்கு பதில் கொடுக்க வேண்டும். மனுஷன் வழிநடத்தப் படைக்கப்பட்டவன். தேவன் முதலாவது ஆதாமைப் படைத்தார். அடுத்து மனுஷியைப் படைத்தார். சரீரப்பிரகாரமாகவும் மனுஷனே முதலாவது செயல்படுகிறவனாகவும் பெண் அவனுக்கு பதிலளிப்பவராகவும் தேவனே படைத்திருக்கிறார்.
ஒரு மனைவி அவள் கணவனை நேசிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. தேவன் அவ்வாறு கூறவில்லை. கணவன் மனைவியைப்பார்த்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறுவான் என்றால், அவள் நானும் உங்களை நேசிக்கிறேன் என்று கூறுவாள். என் மனைவி குளிர்ந்துபோய் இருக்கிறாள் என்று ஒரு கணவன் கூறினால், அவனே ஒரு சரியான கணவனாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறான். அவன் ஒரு சரியான கணவனாக இருப்பான் என்றால், அவளும் நிச்சயம் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பாள். கணவனே குடும்பத்தில் முன்செல்ல வேண்டும்.
ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
………………………….
வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், கணவன் மனைவிக்குப் பொறுப்பாளனாகிறான். இப்பொழுது அவன் தன் தகப்பனுக்கும் தாய்க்கும் கட்டுப்பட்டவனாயில்லை.
வேதாகமத்தில் திருமணத்தைப் பற்றிய முதல் தெளிவான வார்த்தை ஆதியாகமம் 2:24-இல் வருகிறது. இது பாவம் நுழைவதற்கு முன்பே தேவன் ஏற்படுத்திய ஒழுங்கு. அதனால் இது மனித சமூகத்தின் கலாச்சாரமோ, பழக்கமோ அல்ல. இது தேவனுடைய திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த வசனம் வேதாகமத்தில் மொத்தம் நான்கு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் இது ஆதியாகமம் 2:24ல் வருகிறது. இதை மத்தேயு 19:5ல், இயேசு கிறிஸ்து நேரடியாக மேற்கோள் காட்டுகிறார்:
“இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்………. என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?”
இயேசு சொன்னதை மாற்கு சுவிசேஷத்திலும் நாம் வாசிக்கிறோம். மாற்கு 10:7,8,9:
“இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.”…………………
அப்போஸ்தலனாகிய பவுலும் கிறிஸ்துவையும் சபையையும் பற்றிப் பேசும்போது, இந்த இரகசியம் பெரியது என்று சொல்லி, இந்த வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். எபேசியர் 5:31:
“இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”………
இதிலிருந்தே இது எவ்வளவு முக்கியமானது என்று நமக்குத் தெரிகிறது, இல்லையா? இந்த ஒரு வசனத்தில் ஐந்து முக்கிய உண்மைகள் பொதிந்திருக்கின்றன. அவைகளை ஒன்றன் பின் ஒன்றாய் பார்ப்போம்.
முதலாவது உண்மை என்னவென்றால் திருமணத்தை நிறுவியவர் தேவனே. இதை ஆதாம் சொல்லவில்லை. மோசே எழுதவில்லை. தேவன் விதித்த கட்டளை இது. இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை மேற்கோள் காட்டும்போது, “என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று கேட்கிறார். இங்கே அவர் என்பது தேவனைக் குறிக்கிறது. ஆக, படைப்பின் ஆரம்பத்திலேயே தேவன் திருமணத்தை நிறுவினார்.
இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளும் இரண்டாவது உண்மை என்னவென்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது. புருஷன் என்பது ஆணையும், மனைவி என்பது பெண்ணையும் குறிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே திருமணம் வரையறுக்கப்பட்டுள்ளது. பாலின வேறுபாடு (sexual difference) திருமணத்தின் அடிப்படை. விவாகரத்து, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது (Live-in relationship), ஒரே பால் திருமணம் போன்றவை இந்தப் படைப்பு ஒழுங்குக்கு எதிரானவை. இதைத்தான் இயேசுவும் உறுதிப்படுத்துகிறார். மத்தேயு 19:4ல் “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்…,………..” என்று சொல்கிறார்.
மூன்றாவதாக, தன் தாயையும் தகப்பனையும் விட்டுப் பிரிய வேண்டும். திருமணத்திற்குப் பிறகு புதிய குடும்பம் முதன்மையாகிறது. பெற்றோரை விட்டுப் பிரிதல் என்பது அவர்களை வெறுத்தல் என்ற அர்த்தமல்ல. அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். அவர்களை கனம் பண்ண வேண்டும். ஆனால் முதல் இடத்தை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் மட்டுமே கொடுக்க வேண்டும். இதில் காணப்படும் சுவாரஸ்யமான காரியம் என்னவென்றால் ஆதாமுக்கோ ஏவாளுக்கோ தாய் தந்தையர் கிடையாது. அப்படி என்றால் தேவன் ஏன் அவர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்க வேண்டும்? இந்தக் கட்டளை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் புரிந்து அதன்படி வாழ வேண்டும். கணவன் மனைவி இரண்டு பேரும் தங்கள் பெற்றோரை விட, தங்கள் பிள்ளைகளை விட தங்கள் துணைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
நான்காவதாக, இசைந்திருப்பான் என்று பார்க்கிறோம். இசைந்திருத்தல் என்பது, இணைந்திருப்பது, ஒட்டிக்கொண்டிருப்பது. இது உணர்வு மட்டும் சார்ந்த விஷயம் இல்லை. இது உடன்படிக்கை உறவு (covenant). அதனால்தான் இயேசு மத்தேயு 19:6ல் “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.” தேவனே அவர்களை இணைத்திருக்கிறார்.
……………………………….
ஐந்தாவதாக, இரண்டு பேரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இது உடல் ரீதியான உறவை மட்டும் சொல்லவில்லை. முழு ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது. உடல், ஆத்துமா, ஆவியில் அவர்கள் ஒரே மாம்சமாயிருக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் இந்த வசனத்தை பவுல் இன்னும் ஆழமாக ஆராய்கிறார். எபேசியர் 5:31, 32 வசனங்களில் கிறிஸ்துவை மணவாளனாகவும், சபையை மணவாட்டியாகவும் சித்தரிக்கிறார். சிலுவையில் கிறிஸ்து தம்மை விட்டுக் கொடுத்தது, மணமக்கள் தங்கள் தாய் தகப்பனை விட்டுச் செல்வதைப் போன்றது. நாம் கிறிஸ்துவோடு ஒரே மாம்சமாகிறோம். நாம் அவருடைய சரீரத்தின் அங்கங்கள்.
மேலும் எபேசியர் 5:30ல் பவுல் இவ்வாறு சொல்கிறார்:
“நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.”
…………………………………..
அதனால் மனித திருமணம் கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள அன்பினைச் சித்தரிக்கும் படம்.
திருமணம் என்பது வெறும் சமூக ஏற்பாடு அல்ல. படைப்பின் ஆரம்பத்தில் தேவன் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் ஒரே மாம்சமாக்கி, கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள அன்பை உலகிற்கு எப்போதும் காட்டும் வண்ணம் நிறுவிய புனித உடன்படிக்கையாகும்.
ஆகவே, திருமணத்தை மதிக்கிறவன் தேவனையும் அவருடைய குமாரனின் அன்பையும் மதிக்கிறான்.
ஆதியாகமம் 2:25
ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்…………….
வேதவசனம் நமக்குத் தெளிவாகக் கூறாவிட்டாலும், அவர்கள் இருவருக்கும் மகிமையான ஒரு உடை கொடுக்கப்பட்டிருந்திருக்கும் என விசுவாசிக்கலாம். அவர்கள் பாவம் செய்த பின்னர்தான் அவர்கள் , வெட்கப்பட்டார்கள், ஒழித்துக்கொண்டார்கள்.
இது மிகச் சிறிய வசனம். இங்கு 6 வார்த்தைகளே உள்ளன. ஆனால் இது மிக ஆழமான வசனம். இது பாவத்திற்கு முந்தைய முழு மனித நிலையின் உச்சக்கட்டச் சித்திரம். உடல் முழுவதும் திறந்த நிலை, ஒளித்து வைக்க எதுவுமே இல்லாத நிலை இது. அவர்கள் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களிடம் குற்ற உணர்வு இல்லை, அவமானம் இல்லை, பயம் இல்லை. ஒருவரையொருவர் தவறாகப் பார்க்கும் பார்வை இல்லை. இது உடல் ரீதியான நிர்வாணத்தை மட்டும் சொல்லவில்லை; ஆத்துமா, ஆவி ரீதியான முழு வெளிப்படைத்தன்மையையும் குறிக்கிறது. தேவனுக்கு முன்பும், ஒருவருக்கு ஒருவர் முன்பும் எந்த மறைப்பும் தேவையில்லை. இதுவே தேவன் விரும்பிய “முழு சமாதானம்” (shalom).
படைப்பின் வரிசையில் தேவன் மனுஷனையும் மனுஷியையும் படைத்தது அருமையான உன்னதமான ஒன்று என்று கூறலாம். தேவனே இணைத்த ஒரு கணவனும் மனைவியுமாய் இருந்தார்கள். தேவன் தன் ஜனங்களுக்குக் கொடுத்திருக்கிற காரியத்திற்கு மனிதர்கள் கீழ்ப்படிய வேண்டும் . திருமண உறவை ஏற்படுத்தியவர் தேவனே. இக்கால மனிதர்கள் வெகு எளிதாக திருமண இணைப்புகளை தூக்கி எறிய முயற்சிக்கிறார்கள்.
சங்கீதம் 2:3 என்ன சொல்கிறது??
வாசிக்கிறேன் கவனியுங்கள். சங்கீதம் 2:3
அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மை விட்டு எறிந்து போடுவோம் என்கிறார்கள்.
………………………….
மனிதன் என்ன செய்ய முயற்சிக்கிறான்? தேவனை அப்புறப்படுத்த முயற்சிக்கிறான், ஏனென்றால் தேவனே திருமணத்தை ஏற்படுத்தினார்.
தேவன் பெண்ணைப் படைத்தது நேரடியான படைப்பு அல்ல. அவளை மனிதனில் இருந்து எடுத்து படைத்தார். ஏன்? அவள் மனிதனின் ஒரு பகுதி என்பதை நமக்குப் புரிய வைக்கவே என்று சொல்லலாம். பெண் என்பவள் முழுமை பெறாத ஆண் அல்ல. அதே சமயம் அவர்கள் ஒன்றுபோன்றவர்களும் அல்ல. ஒன்றுபோல வித்தியாசமானவர்கள். சேர்ந்து வாழும் நீண்ட காலங்களில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அன்பினால் ஒருவரைப் போல் ஒருவர் ஆகிறார்கள்.
தேவன் மனிதனுக்காக மனுஷியைப் படைத்தது ஒரு அற்புதமான சரித்திரம்.
இந்த அதிகாரத்தின் ஒவ்வொரு காரியமுமே அற்புதமானதுதான். மனிதனின் சிருஷ்டிப்பு, அவன் வைக்கப்பட்ட இடம், அவனுக்கு கடவுள் கொடுத்த வேலை, ஒரு நிபந்தனையுடன் அவன் பெற்ற வாய்ப்பு, அவனுக்குத் தேவையாயிருந்த ஒரு துணை, பின் தேவன் அவனுக்காக உண்டாக்கப்பட்ட பெண். கணவன் மனைவியாக அவ்ர்கள் இணைக்கப்பட்டது. கணவர்களே உங்கள் மனைவிகளை நேசியுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார். இதுதான் படைப்பின் சரித்திரம்.
Nuremberg சிறைச்சாலை என்பது ஜெர்மன் தேசத்திலுள்ள ஒரு முக்கியமான சிறைச்சாலை. அதில் போதகராயிருந்த ஒருவர் சிறைச்சாலை கைதிகளிடம் பேசி அவ்ர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவார். நாசி கொள்கையை பின்பற்றிவந்த ஒரு தலைவனிடம் அவர் எவ்வளவோ பேசினாலும் அவன் விசுவாசத்திற்கு எதிர்த்து நின்றான். கடைசியாக இரவு 8:30 மணிக்கு அவனிடம் அவர் பேசியபொழுது அவன் சிருஷ்டிப்பின் வரலாறு, வேதவசனம் கர்த்தருடைய வார்த்தை மற்றும் கிறிஸ்துவின் அடிப்படை கொள்கைகள் பற்றி கேலி செய்தான். அந்த இரவே அவன் தற்கொலைசெய்து மரித்துப் போனான். வளர்ந்துகொண்டு செல்லும் தற்கொலையின் எண்ணிக்கையைக் குறைக்க மனிதர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய படைப்பு என்பதையும் அவர்கள் வாழ்க்கையைக் குறித்து அவர்கள் தங்களை உண்டாக்கியவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறிவிக்க வேண்டும்.
ஆதியாகமம் 2ஆம் அதிகாரத்தில் தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் குறித்தும், தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக்குறித்தும், மனிதன் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டியதைக்குறித்தும், தேவனுக்கு சேவை செய்ய வேண்டியவன் என்றும், தேவனிடத்தில் மனிதன் பெற்ற ஆளுமை குறித்தும், தேவனுக்காக தேவனிடத்தில் பெற்றுக்கொண்ட சமுதாய வாழ்க்கை குறித்தும் கற்றுக்கொண்டோம். இது உண்மையிலேயே வேதபுத்தகத்திலுள்ள ஒரு சிறந்த அதிகாரம்.
இன்று கற்றுக்கொண்ட வேத பகுதியை நீங்கள் நேரம் எடுத்து மீண்டும் வாசித்து தியானியுங்கள். என்று கற்றுக்கொண்ட சத்தியங்களை உங்கள் வாழ்க்கையில் கடைபிடியுங்கள் மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கர்த்தருடைய இரக்கம் கிருபை அன்பு உங்களையும் உங்கள் குடும்பங்களையும் என்றும் ஆட்சி செய்யட்டும் ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
