ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 17: 6 – 18:4
நிகழ்ச்சி எண்: 0035
வாசியுங்கள்
தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு வரும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
எங்களோடு தொடர்பு கொண்ட உங்களுக்கு நன்றி கூறுகிறோம்.
இந்த ஊழியங்களின் மூலமாய் பல மொழிகளில் விநியோகம் செய்யப்படும் கர்த்தருடைய வசனங்கள் அனேகர் கேட்கவும் அனைவருக்கும் அவை பயனுள்ளதாய் அமையவும் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.
இன்று நாம் ஆதியாகமம் 17 : 6 முதல் 18:4ஆம் வசனம் வரை சிந்திக்கப் போறோம்.
ஆதியாகமம் 17:6,7
[6] உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
[7] உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
………………
அருமையானவர்களே தேவன் ஆபிரகாமுடன் எத்தகைய உடன்படிக்கை செய்தார் காவனித்தீர்களா?? அது ஒரு நித்திய உடன்படிக்கை. அது நித்தியமானது என்றால்? அது இன்றும் நிச்சயமாக செல்லுபடியாகும் ஒன்று. நாம் கிறிஸ்துவை நம்பினால் தேவன் உங்களுக்கும் எனக்கும் நித்திய ஜீவனை வாக்குறுதி அளித்திருக்கிறார் அது தேவன் செய்த ஒரு உடன்படிக்கை அருமையானவர்களே ஆபிரகாம் உடன் செய்த உடன்படிக்கையை தேவன் நிறைவேற்ற போவதில்லை என்றால் உங்களுடைய உடன்படிக்கையை நீங்கள் மீண்டும் ஒருமுறை சரி பார்ப்பது நல்லது. ஆனால் நான் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்கிறேன். அவர் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவார். அதேபோல ஆபிரகாமின் உடன்படிக்கையையும் கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 17:8
[8] நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
……………..
இங்கே நாம் வாசிக்கிறது போல தேவன் தான் என்ன செய்யப் போகிறேன் என்று ஆபிரகாமிடம் கூறுகிறார். தேவன்/ செய்வேன் /என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். – உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்;
எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
அது மட்டுமல்ல நீ தங்கி இருக்கிற தேசமாகிய கானான் தேசம் முழுவதையும் உனக்கும் உனக்கு பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாக கொடுப்பேன் என்றும் கூறுகிறார்.
தேவன் இந்த ஜனங்களோடு கூட ஒரு உடன்படிக்கையை செய்திருக்கிறார். அது ஒரு நித்திய உடன்படிக்கை. நித்தியமானது என்பதால் அது எளிதில் முறிக்கப்படக்கூடியதோ அல்லது காலாவதியாகக் கூடியதோ அல்ல. தேவன் அந்த தேசத்தை அவர்களுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கவில்லை தேவன் அவர்களுக்கு அதை ஒரு நித்திய சுதந்திரமாக கொடுத்திருக்கிறார்.
எனவே மக்கள் அந்த தேசத்திலே மூன்று சந்தர்ப்பங்களிலே குடியிருந்திருக்கிறார்கள். அது அவர்களுக்கே உரியது. ஆனால் முக்கியமான காரியம் என்னவென்றால் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அவர்கள் அங்கே வாழ முடியும். முதலாக தேவன் அவர்களை எதிர்த்து தேசத்திற்கு அனுப்பினார். அவர்கள் அங்கே சிதறடிக்கப்பட்டனர். சுமார் 70 பேர் கொண்ட குடும்பமாக உள்ளே சென்றவர்கள். குறைந்தது 15 லட்சம் பேர் கொண்ட ஒரு தேசமாக வெளியே வந்தார்கள். பின்னர் அவர்கள் தவறான வழிபாட்டில் ஈடுபட்டு தேவனுக்கு சாட்சியாக இருக்க தவறியதால் பாபிலோனிய சிறை இருப்பின் பொழுது மீண்டும் தங்கள் தேசத்திலிருந்து வெளியே விரட்டப்பட்டார்கள். கிறிஸ்துவுக்கு பின் 70ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் மேசியாவை நிராகரித்த பின் மீண்டும் தேசத்தை விட்டு வெளியேறியதை நாம் பார்க்கிறோம். உண்மையில் அவர்கள் முழுமையாக திரும்பி வரவில்லை. அவர்கள் மூன்று முறை தேசத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மூன்று முறை மீண்டும் கொண்டுவரப்படுவார்கள் என்றும் தேவன் முன் அறிவித்திருக்கிறார் அவர்கள் இரண்டு முறை திரும்ப வந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது அங்கு மக்கள் திரும்பி இருப்பது வாக்கு தத்தத்தின் நிறைவேறுதல் அல்ல. அடுத்த முறை அவர்கள் திரும்பும் பொழுது, அவர்கள் ஒருபொழுதும் அந்த தேசத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று நாம் நிச்சயமாய் சொல்லலாம். ஏனென்றால் தேவனே அதை கூறி இருக்கிறார். தேவன் அவர்களை ஒன்று திரட்டி மீண்டும் தேசத்திற்குள்ளே கொண்டு வரும் பொழுது ஆயிரம் வருட அரசாட்சி நடைபெறும்.
ஆதியாகமம் 17:9-11
[9] பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். [10] எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். [11] உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
……………..
விருத்தசேதனம் என்பது உடன்படிக்கையின் அடையாளமாகும். இஸ்ரவேலர்கள் அந்த உடன்படுக்கையில் உறுப்பினர்களாக ஆவதற்காக விருத்தசேதனம் செய்து கொள்ளவில்லை. மாறாக அவர்கள் தேவனிடத்திலிருந்து உடன்படிக்கையை பெற்றிருந்த காரணத்தினாலேயே விருத்தசேதனம் செய்து கொண்டார்கள்.
அருமையானவர்களே இந்த நாட்களில் விசுவாசிகளின் வாழ்க்கையில் நற்செயல்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதேபோலத்தான் அந்த நாளிலே விருத்தசேதனம் .இரட்சிக்கப்படுவதற்காக நீங்கள் நல்ல காரியங்களை செய்வதில்லை. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதினால் நல்ல காரியங்களை செய்கிறவர்களாக இருப்பீர்கள். இதுதான் உலகத்திலே ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறதாய் இருக்கிறது. அவருடைய பிள்ளைகள் ஆவதற்கு நாம் நன்மைகளையும் தான தர்மங்களையும் பண்ணுவதில்லை. நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதுனாலே நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
வாலிபன் ஒருவன் தன் வீட்டை விட்டு வெளியேறினான். அவன் பல பிரச்சனைகளிலே மாட்டிக் கொண்டான் என்றாலும் அவன் முழுமையான துரோகியாக மாறாமல் தன்னை தடுத்த ஒரே ஒரு காரியம் தன்னுடைய அப்பாவை பற்றிய எண்ணம்தான். நான் என் அப்பாவின் மகனாக இருப்பதால் நான் இதை செய்ய மாட்டேன் அல்லது அதைச் செய்ய மாட்டேன் என்று தனக்குள்ளயே அவன் சொல்லிக் கொண்டான். அவனுடைய தந்தையின் காரணத்துனாலேயே சில காரியங்களை தவிர்த்து வாழ்ந்தான். சில காரியங்களை செய்யாததினாலே அவன் அவருக்கு மகனாகவில்லை. அவன் ஏற்கனவே அவருடைய மகனாகத்தான் இருந்தான். ஆனால் அவன் அவருடைய மகனாக இருந்த காரணத்தினாலே சில காரியங்களை அவன் வாழ்க்கையிலே அவன் செய்யவில்லை. உடன்படிக்கையின் அடையாளம் விருத்தசேதனம். அவர்களை உடன்படிக்கைக்குள் கொண்டு வந்தது விருத்தசேதனம் அல்ல ஆனால் விருத்தசேதனம் என்பது அதன் அடையாளம் – அதற்கான சான்று.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற சகோதரனே சகோதரியே, உங்கள் வாழ்க்கையில் கடவுள் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது நன்மைகளை செய்து கடவுளை பிரியப்படுத்த நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா?? அல்லது இயேசு கிறிஸ்து என்னுடைய தண்டனையை சிலுவையிலே ஏற்றுக் கொண்டார் என்பதை விசுவாசித்து அவருடைய பிள்ளையாய் நீங்கள் மாறினபடியினாலே அவருடைய அன்பினால் உந்தி தள்ளப்பட்டு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்று உங்களை அர்ப்பணித்து இருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
ஆதியாகமம் 17:12
[12] உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.
………………..
கவனித்தீர்களா? இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இவ்வளவு தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை எப்பொழுதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?இயேசு பாலனாக பிறந்த பொழுது எல்லா கட்டளைகளும் கைக்கொள்ளப்பட்டன. அவர் ஆபிரகாமின் குமாரனாக பிறந்தார் என்பது சொல்லப்பட்டிருக்கிறது தாவீதின் மைந்தனாக பிறந்தார் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் வம்ச வழியில் அவர் பிறந்ததினாலே எட்டாவது நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட்டார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர் நாலு ஐந்திலே இவ்வாறு கூறியிருக்கிறார்.
கலாத்தியர் 4:5
[5] காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
…………………
தொடர்ந்து
ஆதியாகமம் 17:13 பாருங்கள்
[13] உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
…………………..
மீண்டும் விருத்தசேதனம் – உடன்படிக்கையின் அடையாளம் என்பதை பார்க்கிறோம். உடன்படிக்கை செய்து கொள்வதற்காக அப்படி செய்ய வேண்டியது இல்லை. ஏற்கனவே தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்துவிட்டார். அருமையானவர்களே மீண்டும் அநேகர் இதைக் குறித்து தவறான எண்ணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு திருச்சபைல் / சேர்ந்தால் ஞானஸ்தானம் பெற்றால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். இல்லை – இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்காக இவைகளை நீங்கள் செய்ய முடியாது. நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் ஆனால் திருமுழுக்கு பெற்று திருச்சபையின் அங்கமாக சேர முடியும்.
ஒரு குதிரை வண்டியை குதிரைக்கு பின்னால் தான் வைக்க வேண்டுமே ஒழிய குதிரைக்கு முன்னால் வைக்க முடியாது. அநேகர் குதிரைக்கு முன்னால் குதிரை வண்டியை வைக்கிறார்கள்.
ஆதியாகமம் 17:14
[14] நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
…………,……….
கீழ்படியாதவர்கள் இருந்தார்கள். உண்மையில் எகிப்து தேசத்திலிருந்து வெளியே வந்த பொழுது கிட்டத்தட்ட அந்த தேசமே கீழ்ப்படியாமல் போனது. தேவனுடைய உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை. அந்த கீழ்ப்படியாமை என்பது குறிப்பிட்ட அந்த நபர் உடன்படிக்கையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதையே குறித்தது. இருந்தாலும் அந்த தேசத்தை பொறுத்தவரை தேவன் ஆபிரகாம் இடமும் அவருக்கு பின்வரும் அவருடைய சந்ததியினரிடமும் செய்த இந்த உடன்படிக்கையை எந்த ஒரு தனி நபரோ அல்லது குழுவோ அழித்துப் போட முடியாது இது ஒரு நித்திய உடன்படிக்கை. – உடன்படிக்கையை மீறிய மனிதன் வெளியேற்றப்பட்டான். ஆனால் உடன்படிக்கை நிலைத்து நின்றது. அதுதான் இதில் உள்ள ஆச்சரியமான மகத்துவமான காரியம்.
ஆதியாகமம் 17:15-16
[15] பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். [16] நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
……………………
முன்பு ஆபிரகாமின் மனைவியின் பெயர் சாராய் என்று கூறப்பட்டிருந்தது இப்பொழுது அவளுடைய பெயர் சாராள் என்று மாற்றப்படுகிறது.
ஆதியாகமம் 17:16
[16] நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
…………………..
வயது சென்ற ஆபிரகாம் திரளான ஜாதிகளுக்கு தகப்பன் என்று அழைக்கப்படுவான் என்றால் சாராளும் ஜாதிகளுக்கு தாய் என்றுதான் அழைக்கப்படுவாள்.
ஆதியாகமம் 17:17
[17] அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
………………….
வயது முதிர்ந்த ஆபிரகாம் இதைக் கேட்டு சிரிக்கிறார். இது அவிசுவாசத்தினால் வந்த சரிபல்ல. இது போன்ற ஒரு காரியம் நடக்கப்போவது என்கிற சுத்தமான மகிழ்ச்சியினால் வந்த சிரிப்பு என்று சொல்லலாம். உங்கள் வாழ்க்கையிலையும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அற்புதமான காரியங்களை தேவன் நமக்கு செய்யும்பொழுது உண்மையில் நமக்கே தெரியாமல் நாம் மகிழ்ச்சியில் சிரிக்கிறோம். அந்த நேரத்தில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அதிசயத்தை எண்ணி வியந்து சிரிப்போம். இது இதுவரை கேள்விப்படாத ஒரு காரியம்,,,,, அங்கே சாராளுடைய கர்ப்பத்தின் செத்த நிலை இருந்தது ஆபிரகாம் சரீர ரீதியாக செத்த நிலையில் இருந்தார். பவுல் இதை எப்படி விவரிக்கிறார் என்று கவனியுங்கள்?
ரோமர் 4:17-22
[17] அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். [18] உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். [19] அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். [20] தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், [21] தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். [22] ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
………………..
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார். தேவனுடைய நற்குணத்தையும் அதிசயத்தையும் கண்டவர் முற்றிலும் மெய்சிலிர்த்து போனார். ஆனால் திடீரென்று ஒரு எண்ணம் அவருடைய இருதயத்திலே அம்பு போல தைக்கிறது. தனக்கு ஏற்கனவே இருக்கிற ஒரு சிறுவனை பற்றி தான் அந்த எண்ணம். இஸ்மவேல் என்னும் பெயருடைய தன் மகனைப் பற்றி அவர் நினைக்கிறார்.
ஆதியாகமம் 17:18
[18] இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.
…………………
இப்பொழுது ஆபிரகாம் ஆண்டவரே என்னுடைய வீட்டில் வளர்கிறானே அந்த சிறுவன் இஸ்மவேல் என்று கூறி நெருக்கமான உறவில் இருக்கும் இஸ்மவேலை நினைவுபடுத்துகிறார். சில காலங்களுக்கு பின் இஸ்மவேல் வீட்டை விட்டு அனுப்பப்பட்ட பொழுது அவனுக்கு 14 வயது இருந்திருக்கும் அதற்குப்பின் ஆபிரகாம் அவனைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. என்ன இருந்தாலும் இஸ்மவேலும் ஆபிரகாமுக்கு மகன்தான். ஆபிரகாம் அந்த தன் மகனை நேசித்தார். அவனை வீட்டை விட்டு அனுப்ப வேண்டிய நேரத்திலே நிச்சயமாக அது அவருடைய உள்ளத்தை உடைத்து இருக்கும் ஒரு சம்பவமாகவே இருந்திருக்க வேண்டும்.
ஆகாரை தனது மனைவியாக எடுத்துக் கொண்டது தான் செய்த எவ்வளவு பெரிய தவறு என்று அடிக்கடி ஆபிரகாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். இந்த பாவம் ஆபிரகாமை மட்டும் பாதிக்கவில்லை. ஆபிரகாம் பாவம் செய்ததினாலே ஆரம்பம் முதலே காணானில் பிரச்சனைதான். சின்ன பாவம் தானே எப்படியாவது அதை விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
கலாத்தியர் 6:7
[7] மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
…………………
விதைத்ததைப் போன்ற ஒன்றை அல்ல விதைத்ததையே அறுப்பான் எனவே தான் இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைத்திருப்பானாக என்று தேவனை நோக்கி ஆபிரகாம் கெஞ்சுகிறார்.
ஆதியாகமம் 17:19
[19] அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
…………………
தேவன் இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்ன? நான் இஸ்மவேலை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அது தவறானது என்று தெளிவாகச் சொல்லுகிறார். வேதத்திலே எழுதப்பட்டிருப்பதினால் பலதார மனம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது, தேவன் அதை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிவிடக்கூடாது.
ஆதியாகமம் 17:20-21
[20] இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். [21] வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.
…………………..
தேவன் தாம் கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே நாம் கொடுத்த அந்த வாக்குறுதியிலே அவர் எவ்வளவும் விலகவும் இல்லை அவர் வேண்டாம் என்று ஒதுக்கி போடவும் இல்லை. தான் செய்வேன் என்று சொன்ன அதே காரியத்தை அவர் செய்யப் போகிறார்.
இந்த வசனத்தில் ஈசாக்கு ஏற்கனவே பிறந்து விட்டது போல் அவர் பேசுகிறார். வருகிற வருடத்திலேயே என்று சொல்லி குறிப்பிட்ட காலத்தை குறித்தும் சொல்லுகிறார் என்றாலும் அது இன்னமும் நடைபெறவில்லை ஆனால் இனி நடைபெறப் போகிறது.
ஆதியாகமம் 17:22
[22] தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
……………….
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் – ஆபிரகாம் – நீ இனி அமைதியாக இரு போதும். அருமையான சகோதரனை சகோதரியே நம்முடைய வாழ்க்கையிலும் கூட சில காரியங்களை குறித்து நாம் ஆண்டவரிடத்தில் ஜெபிப்பதை நிறுத்தி இருப்போம். ஏனென்றால் ஏற்கனவே நாம் அதைக் குறித்து எவ்வளவோ ஜெபித்து விட்டோம் இனி அதற்கு மேல் நான் ஜெபிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர் நமக்கு தரப்போறார் என்ற நிச்சயம் நமக்குள்ளே கடந்து வந்திருக்கும். ஆனால் இன்னும் சிலர் ஆண்டவர் கொடுப்பார் என்ற விஷயத்தை பெற்ற பின்னரும் கூட தொடர்ந்து தேவனிடத்திலே அதைக் குறித்து முறையிட்டுக் கொண்டே இருப்பார்கள். தேவன் கொடுத்த விடை அவர்கள் கேட்ட காரியம் அவருக்கு கொடுக்கப்பட மாட்டாது இந்த விடையாய் இருந்தாலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இஸ்மவேலை குறித்து கூட நீ ஜெபிக்க வேண்டாம் ஏனென்றால் வரும் வருடத்தில் நான் உனக்கு ஒரு மகனை கொடுக்க போறேன் என்று தேவன் தெளிவாய் கூறி விட்டார்.
பிரியமானவர்களே தேவன்- இல்லை /வேண்டாம் /முடியாது என்று சொன்ன காரியங்களுக்காக நீங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் அவ்வாறு நீங்கள் ஜெபிப்பதினால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல ஆண்டவரிடத்திலே நீங்கள் கேட்டு உங்களுக்கு தருவேன் என்று வாக்கு கொடுத்த ஏதாவது காரியத்தை குறித்தும் திரும்பத் திரும்ப அவரை தொந்தரவு பண்ணுவது போல் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கவும் அவர் சொல்லவில்லை. அவர் கொடுக்க போறேன் என்று சொன்ன காரியத்தை குறித்து நீங்கள் நன்றியோடு அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். ஆபிரகாம் ஜெபித்த ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார். இருந்தாலும், அவருடைய உடன்படிக்கையை பொருத்தமிட்டிலும் அதை இஸ்மவேலோடு அவர் செய்யவில்லை. ஈசாக்கோடே அவர் செய்தார்.
எனவே தேவனுடைய மனதை மாற்ற ஆபிரகாம் அதைக் குறித்து பேச வேண்டியதில்லை.
இன்று சிலர் தேவன் விடை கொடுக்க விரும்பாத காரியத்தை குறித்தும் தொடர்ந்து தேவனை தொந்தரவு செய்து கொண்டே இருப்பார்கள். எதையுமே நாம் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அதற்கு பதில் அளிப்பேன் என்று அவர் சொல்லி இரக்கிறார். வேத வசனத்தில் அவருடைய சித்தம் என்ன என்பதை அறிந்திருக்கிறோம். எனவே அதன் அடிப்படையில் ஜெபிக்கும் பொழுது ஆண்டவர் நிச்சயமாய் உங்களுக்கும் பதில் கொடுக்கிறவராய் இருக்கிறார்.
ஆதியாகமம் 17:23-27
[23] அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான். [24] ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். [25] அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான். [26] ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். [27] வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
………………….
ஏற்கனவே இதைக் குறித்து நாம் பார்த்தோம் தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளம் தான் விருத்தசேதனம். இஸ்மாவில் ஏன் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டான் என்று சிலர் கேட்கலாம். ஏன் தெரியுமா? தேவன் இஸ்மவேலையும் ஆசீர்வதித்து ,அவனையும் அதிகமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார் இல்லையா? அந்த காரணத்தினால் தான்.
என்றாலும் தேவன் ஆபிரகாமுக்கு கூறிய வாக்குத்தத்தத்தின் மகன் அவன் அல்ல. தேவன் பயன்படுத்த போகும் தேசத்தின் தகப்பன் அவன் அல்ல. அவனுடைய வழியில் மேசியா தோன்றப் போவதில்லை. ஈசாக்கை குறித்து தேவன் எதை முன் குறித்தாரோ எதை முன் அறிவித்தாரோ அதையே அவர் செயல்படுத்த போகிறார்.
தொடர்ந்து 18 ஆம் அதிகாரத்திலும் சில வசனங்களை பார்ப்போம். இந்த 18 19 ஆம் அதிகாரங்கள் ஏன் வேத புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற கேள்வியோடு ஒருவேளை நீங்கள் இருக்கலாம். ஏனென்றால் இது ஆபிரகாமின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து விலகிச் செல்கிறது என்று யோசிக்கலாம். இந்த அதிகாரங்களில் சோதோம் கொமோரா பட்டணங்களின் அழிவை குறித்து நாம் பார்க்கிறோம்.
இது மிக நீண்ட அதிகாரமாய் செல்கிறது. இதில் சோதோம் கொமோரா பட்டணங்களின் நியாயத்தீர்ப்பை குறித்து தேவன் ஆபிரகாமுக்கு சொல்வதையும் அந்த பட்டணங்களுக்காக ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் செய்வதையும் பார்க்கிறோம்.
இது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட, கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனோடு நெருங்கி ஜீவிக்கும் வாழ்க்கைக்கு அடையாளமாய் இருக்கிறது. ஆனால் 19 ஆம் அதிகாரத்தில் சோதம் கொமோரா பட்டணத்தில் லோத்துவின் வாழ்க்கையைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். அங்கே அவனுடைய வாழ்க்கை பாழாய் போன ஒரு வாழ்க்கை என்று சொல்லலாம். இதற்கெல்லாம் காரணம் ஒரு நாளிலே அவன் செய்த தீர்மானம். துரதிர்ஷ்டவசமாக இன்றும் நாம் இப்படி இரண்டு விதமான மக்கள் கூட்டத்தையும் கிறிஸ்தவ சமுதாயத்திலே பார்க்கிறோம். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் ஒருபுறம். பாழாய் போன வாழ்க்கை வாழ்பவர்கள் மறுபுறம். தங்கள் வாழ்க்கையை சிதைத்து கொண்டே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்திலிருந்து முற்றிலும் விலகிப் போனவர்கள். அவர்கள் தங்கள் இரட்சிப்பை இழந்து விட்டார்கள் என்று நான் ஒருகாலும் சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் நிச்சயமாக மற்ற அனைத்தையும் இழந்து விட்டார்கள். பவுல் என்ன சொல்கிறார்? பாருங்கள் – அவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் ஆனால் அது அக்னியினால் தப்பி பிழைப்பது போல இருக்கிறது என்று 1 கொரிந்தியர் 3:15ல் கூறி இருக்கிறார்.
இப்பொழுது
ஆதியாகமம் 18:1 வாசிக்கிறேன்.
[1] பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
…………………
இப்பொழுது வயது முதிர்ந்த ஆபிரகாம் மம்ரேயின் சமவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வெயில் அதிகமாக இருக்கிறது எனவே வெளியில் எங்கும் செல்லாமல் கூடார வாசலிலே உட்கார்ந்திருக்கிறார்.
ஆதியாகமம் 18:2
[2] தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து,
…………………
பிரியமானவர்களே ஆபிரகாமுடைய வாழ்க்கையில் காணப்பட்ட விருந்தோம்பலை கவனித்தீர்களா? கடந்த அதிகாரத்தை நாம் படிக்கும் பொழுது எகிப்திற்கு போன வியாபாரிகளுக்கு ஆபிரகாம் உபசரணை செய்தார் என்ற ஒரு சம்பவத்தை சிந்தித்தோம். ஒருவேளை அது கற்பனையாக இருந்தாலும் ஆபிரகாமுடைய குணம் அப்படித்தான் இருக்கிறது. இங்கேயும் முன்பின் தெரியாத மூன்று பேரை கண்ட உடனே கூடார வாசலில் இருந்து அவர்களுக்கு எதிரே ஓடிச் சென்று தரை மட்டும் குனிந்து அவர்களை வாழ்த்துகிறார்.
ஆதியாகமம் 18:3-4
[3] ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். [4] கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.
……………………
முன்பின் தெரியாத சிலரைப் பார்த்து உங்கள் கால்களை கழுவி மரத்தடியில் சாய்ந்திருங்கள் என்று சொல்வது வினோதமான ஒரு காரியமாக இருக்கிறது இல்லையா?? இந்த நாட்களில் நாம் யாரையும் பார்த்து அவ்வாறு சொல்வதில்லை. ஆனால் இது பழங்காலத்தில் இருந்திருக்கிற ஒரு வழக்கமாய் இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கிறது போல மேல் வீட்டு அறையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீடர்களுடைய கால்களை கழுவினார். ஆனால் அதிலும் ஒரு பெரிய ஆவிக்குரிய செய்தி அடங்கியிருந்தது. இங்கே ஆபிரகாம் அந்த வழிப்போக்கர்களை பார்த்து உங்கள் கால்களை கழுவுங்கள் என்று சொல்கிறார் இப்பொழுதும் சில இடங்களிலே வீடுகளுக்குள்ளே செல்லும் முன்பதாக வெளியே இருந்து வந்தவுடன் செருப்பை கழற்றி விட்டு கால்களை கழுவி வீட்டுக்குள்ளே போகும் பழக்கம் இருக்கிறது. பாதரட்சைகளை கழற்றி கால்களை கழுவி விட்டு அமர்ந்திருப்பது ஒரு வீட்டுக்குள்ளே அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வை உண்டு பண்ணுகிறதாய் இருந்திருக்கும். ஆபிரகாம் இந்த மூவரையும் நன்றாக உபசரிக்கிறார்.
ஆதியாகமம் 17 மற்றும் 18-ஆம் அதிகாரங்களின் ஊடாக நாம் பயணித்த இந்த வேளையில், நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்குத் தேவையான மூன்று முக்கிய பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்:
ஆபிரகாமுடன் தேவன் செய்த உடன்படிக்கை “நித்தியமானது”. மனிதர்கள் வாக்கு கொடுத்துவிட்டு அதை மறந்துவிடலாம் அல்லது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நம்முடைய தேவன் அவ்வாறல்ல. ஆபிரகாம் மற்றும் சாராளின் சரீரம் “செத்துப்போன” நிலையில் இருந்தபோதும், தேவன் சொன்ன வார்த்தை உயிரோடிருந்தது.
ஆவிக்குரிய பாடம்: உங்கள் வாழ்வில் சூழ்நிலைகள் எவ்வளவு எதிர்மறையாக இருந்தாலும், தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற அவர் வல்லமையுள்ளவர். ஆபிரகாமைப் போலவே, நீங்களும் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், விசுவாசத்தில் வல்லவர்களாகி தேவனை மகிமைப்படுத்துங்கள்.
விருத்தசேதனம் என்பது உடன்படிக்கையின் அடையாளமே தவிர, அதுவே உடன்படிக்கை அல்ல. ஒரு மகன் தனது தந்தைக்குக் கீழ்ப்படிவதால் மகனாகவில்லை; அவன் மகனாக இருப்பதினாலேயே தந்தைக்குக் கீழ்ப்படிகிறான். இன்று நாம் செய்கிற நற்செயல்களோ, திருமுழுக்கோ அல்லது சபை அங்கத்துவமோ நம்மை இரட்சிக்காது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். அந்தப் பிள்ளையென்ற அந்தஸ்துதான் நம்மை நற்செயல்கள் செய்யத் தூண்டுகிறது.
இஸ்மவேலுக்காக ஆபிரகாம் பரிந்து பேசினாலும், தேவன் ஈசாக்கையே தெரிந்துகொண்டார். சில நேரங்களில் நாம் விரும்பும் “இஸ்மவேல்களை” (நமது சொந்த முயற்சிகள் அல்லது திட்டங்கள்) தேவன் ஆசீர்வதிப்பார், ஆனால் அவருடைய பிரதான திட்டம் “ஈசாக்கின்” (தேவனுடைய வாக்குத்தத்தம்) மூலமாகவே நிறைவேறும். நம்முடைய ஜெபம் தேவனுடைய மனதை மாற்றுவதற்காக அல்ல, மாறாக தேவனுடைய சித்தத்திற்கு நம் மனதை ஒப்புக்கொடுப்பதாக இருக்க வேண்டும்.
ஆபிரகாமைப் போல அந்நியர்களை உபசரிக்கும் குணமும், தேவன் சொன்னதை “அந்நாளிலேயே” செய்து முடிக்கும் உடனடி கீழ்ப்படிதலும் நமக்குள் இருக்கிறதா? ஆபிரகாம் தேவனுடைய நண்பனாக வாழ்ந்ததற்குக் காரணம் அவருடைய விசுவாசமும் கீழ்ப்படிதலுமே.
ஜெபம்: “அன்பு தகப்பனே, உம்முடைய வாக்குத்தத்தங்கள் என் வாழ்வில் நிச்சயம் நிறைவேறும் என்பதை ஆபிரகாமைப் போல விசுவாசிக்க எனக்கு உதவி செய்யும். நான் உமது பிள்ளை என்பதால் உம்மைப் பிரியப்படுத்தும் நற்செயல்களைச் செய்ய என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
