ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 16:1 – 17: 5
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 16:1 – 17: 5
நிகழ்ச்சி எண்: 0034

வாசியுங்கள்

மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாக உங்களை சந்திப்பதை குறித்து மகிழ்ச்சியடைகிறோம் கர்த்தருக்கு நன்றி சொல்கிறோம்.
இன்று ஆதியாகமம் 16:1 – 17:5 வசனம் வரை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
16ஆம் அதிகாரத்தில் சாராய் ஆபிராமுக்கு கொடுக்கும் ஒரு ஆலோசனை குறித்தும்
பின் ஆகார் வீட்டை விட்டு வெளியேறுவதை குறித்தும், ஆபிரகாம் சந்தித்த பரீட்சைகளை குறித்தும் படிக்கிறோம்.
அருமையானவர்களே இந்த அதிகாரமே வேத புத்தகத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. 15 ஆம் அதிகாரத்தில் உன்னதமான உயரத்திற்குச் சென்ற ஆபிராம் பரிபூரணமானவர் அல்ல என்பது தெரிகிறது. சாராயினுடைய ஆலோசனை எடுத்துக் கொண்ட ஆபிராமை குறித்து சிந்திக்கும் பொழுது எகிப்திய பெண்ணாகிய ஆகாரை தனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டது நிமித்தமாக தனது விசுவாசத்திலே ஆபிராம் பின்வாங்கிப் போனாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இங்கே சாராய் ஆபிராம் இரண்டு பேருடைய அவிசுவாசத்தையும் நாம் பார்க்கிறோம் அது மட்டுமல்ல இஸ்மாவேல் பிறந்ததையும் வாசிக்கிறோம்.
உன்னதமான பதினைந்தாம் அதிகாரத்தை தொடர்ந்து இந்த தாழ்வான பகுதிக்கும் நாம் வர வேண்டியது இருக்கிறது. கவனியுங்கள் சாராய் என்ன சொல்லுகிறாள்.
‭ஆதியாகமம் 16:1
[1] ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
………………..
கவனித்தீர்களா? அவனுடைய வாழ்க்கையிலே தொல்லை கொடுக்கும் இரண்டு காரியங்களை ஆபிரகாம் எகிப்தில் இருந்த நாட்களிலே பெற்றுக் கொண்டான் என்று சொல்லலாம் ஒன்று அவனுக்கு கிடைத்த செல்வம் அடுத்ததாக இந்த எகிப்திய அடிமைப் பெண்.
‭ஆதியாகமம் 16:2
[2] சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
…………………
அன்று சாராய் கொடுத்த ஆலோசனை, அந்த நாட்களின் வழக்கமாய் இருந்தது. ஒரு மனைவி பிள்ளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் மறுமணையாட்டிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
ஆபிராம் இவ்வாறு செய்ததால் இது சரியான ஒரு பழக்கம் என்று நாம் நினைத்து விடக்கூடாது. தேவன் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இது சாராயின் ஆலோசனையே தவிர
தேவனுடைய ஆலோசனை அல்ல. ஆபிராம் சாராளுக்கு தவறாய் செவி கொடுத்து விட்டார். குடும்பத் தலைவன் என்ற பொறுப்பை ஆபிராம் விட்டுக் கொடுத்தது போல சாராயின் ஆலோசனைக்கு சரி என்று கூறிவிட்டார்.
‭ஆதியாகமம் 16:3
[3] ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
…………………..
கவனித்தீர்களா? இங்கே அந்த எகிப்திய அடிமை பெண் ஆபிராமுக்கு மறுமணையாட்டி ஆகிறாள். இது தேவனுடைய சித்தப்படி நடக்கவில்லை. ஆகார் மூலமாக ஆபிராமுக்கு கிடைக்கும் சந்ததியை, தேவன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் அது தவறான பாதை. எனவே அருமையானவர்களே, ஆபிராம் செய்ததை தேவன் ஏற்றுக்கொண்டார் என்று ஒரு பொழுதும் நாம் சொல்லக்கூடாது. இது ஒரு சரித்திர உண்மையாய் இருப்பதினால் இது இங்கு சொல்லப்பட்டு இருக்கிறதே ஒழிய தேவன் இந்த வழக்கத்தை ஏற்றுக் கொண்டதினால் இது சொல்லப்பட்டிருக்கிறது என்று நாம் நினைத்து விடக்கூடாது.
‭ஆதியாகமம் 16:4
[4] அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.
…………………….
ஆகார் கூறுவது என்ன? சாராய் செய்ய முடியாத ஒன்றை ஆபிராமுக்காக நான் செய்து முடித்து விட்டேன். ஆம் அவள் கர்ப்பம் தரித்ததுனாலே சாராயை தாழ்வாக குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறாள். அவள் இப்படி நினைத்தாள் என்பது நமக்கு எப்படி தெரியும்? அவளுடைய வார்த்தைகளிலேயும் அவருடைய செயல்களிலேயும் அது வெளிப்பட்டிருக்கும். விளைவு என்ன?
‭ஆதியாகமம் 16:5
[5] அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
…………………..
அருமையானவர்களே, இந்த வசனத்தை அப்படியே நாம் கடந்து போய்விடக்கூடாது. ஆபிராமின் இந்த செயலை தேவன் ஏற்றுக்கொண்டு விட்டார் என்று சொல்லக்கூடாது. அது தவறு என்பதை தேவனே கூறுகிறார். இப்பொழுதுதான் சாராய் தான் செய்த தவற்றை உணர்கிறாள். எனக்கு நேரிட்ட அநியாயம் உமது மேல் சுமரும் என்று சொன்னாள். ஆம் அவள் தான் அநியாயம் செய்தது அதை தேவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இது வயதான ஆபிராமுக்கு இருதயத்தை உடைக்கும் ஒரு காரியமாகவே இருந்திருக்கும். ஆனால் கவனித்தீர்களா ஆபிராமும் சாராயும் தேவனை விசுவாசிக்க வேண்டிய படி விசுவாசிக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட கால காலகட்டத்தில் ஆபிராம் 85 வயது உள்ளவராய் இருக்கிறார். சாராய்க்கு 75 வயது இருந்திருக்கும். இப்படிப்பட்ட வயதான நிலைமையிலே தங்களுக்கு குழந்தையை பிறக்காது என்ற முடிவுக்கு இரண்டு பேரும் வந்திருப்பார்கள். இதை உணர்ந்தவளாக சாராய் இதுதான் தேவனுடைய வழியாய் ஒருவேளை இருக்கலாம் ஏனென்றால் அந்த நாட்களில் வழக்கம் இதுவாகத்தானே இருக்கிறது என்று எண்ணி இருக்க வேண்டும்.
ஆபிராமும் சாராயும் செய்தது அந்த நாட்களின் வழக்கமாய் இருந்தது ஆனால் தேவன் செயல்படும் விதத்திற்கு மாறானதாக இருந்தது. வேதத்தில் இந்த காரியம் சொல்லப்பட்டு இருப்பதினால் இதை தேவன் ஏற்றுக்கொண்டுவிட்டார் இது சரியான ஒரு பழக்கம் என்று நாம் நினைத்து விடக்கூடாது.
இந்த சரித்திர பகுதியிலிருந்து நமது வாழ்க்கைக்கான ஒழுக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஊர் என்னும் இடத்தில் ஆபிராமும் சாராயும் வளர்ந்து வந்தார்கள். அவர்களை சுற்றி வாழ்ந்த மக்கள் மத்தியில் இது அவர்கள் பழக்கமாய் இருந்திருக்கிறது. அவர்கள் ஒழுக்க கேடான காரியத்தை செய்தார்கள் என்று சொல்வதை விட அவர்கள் தேவனை விசுவாசியாமல் போனார்கள் என்பதே சரி. சாராயின் ஆலோசனைப்படி ஆகாரை மனைவியாக ஆபிராம் எடுத்துக் கொண்டது ஒரு பாவம் தான். தேவன் அதை ஒரு பாவமாக எண்ணித்தான் செயல்பட்டார்.
‭ஆதியாகமம் 16:6
[6] அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.
…………………….
ஆம் இப்பொழுது ஆகார் வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். இப்படி அவள் ஓடுவது அவளுடைய ஜீவனுக்கும் குறிப்பாய் குழந்தையின் ஜீவனுக்கும் கேடானதுதான். மரணத்தை கூட சந்திக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.
‭ஆதியாகமம் 16:7
[7] கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
…………………….
இந்த பூமிக்கு வரும் முன்னர் இயேசு கிறிஸ்துவே கர்த்தருடைய தூதனானவர் என்று அழைக்கப் பட்டார் என்று நாம் விசுவாசிக்கலாம். …
தொலைந்து போனவர்களை தேடுவது தேவனுடைய ஒரு குண நலன். வீட்டை விட்டு தூரமாய் ஓடிக்கொண்டிருக்கிற ஆகாரைக் குறித்தும் தேவன் அக்கறை உள்ளவராக அவளைத் தேடிச் செல்கிறார்.

அருமையான சகோதரனே சகோதரியே எனக்கு யார் இருக்கிறார்கள்? என்னை யார் கவனிப்பார்கள்? எனக்கு விழைவிக்கப்பட்ட துன்பத்தை நான் எப்படி தாங்க முடியும்? இந்த உலகத்தை விட்டு நான் ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மேலும் கரிசனை உள்ளவராய் இருக்கிறார். அவரிடம் இன்றை வாருங்கள் உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதற்கு அவரே சரியான ஒரு ஆலோசனையையும் ஒரு வழி நடத்துதலையும் நிச்சயமாய் உங்களுக்கு கொடுப்பார். ஆனால் அவரை விசுவாசிக்கும் விசுவாசத்தோடு அவரிடம் வாருங்கள்.
‭ஆதியாகமம் 16:8-10
[8] சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். [9] அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். [10] பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
……………….
இந்த காட்சியை அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் நான்காம் அதிகாரத்தில் ஒரு உருவகமாக பயன்படுத்தியிருக்கிறார். அங்கே அவர் ஆகாரையும் அவளுடைய சந்ததியையும் சீனாய் மலைக்கு ஒப்பிடுகிறார். ஏனென்றால் அங்கு தான் மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அந்த நியாயப்பிரமாணத்தின் சட்ட ரீதியான தன்மையையும் அதன் அடிமைத்தனத்தையும் பற்றி அவர் அங்கே பேசுகிறார். பின்னர் அவர் சாராயை ஒரு சுயாதீனமுள்ளவர் என்று குறிப்பிடுகிறார். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் ஆபிராமுக்கு சொந்தமானவள் சாராய். அவளே அவருடைய மனைவி. இன்று அனேக மக்கள் விசித்திரமான ஒன்றைச் செய்ய .அவர்கள் தங்களை நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் பிரியமான சகோதரனை சகோதரியே விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்துவுடனே கூட இணைக்கப்பட்டிருக்கிறோம். திருச்சபையானது ஒரு கற்புள்ள கன்னியாக கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. அது ஒருநாள் கிறிஸ்துவின் மனவாட்டியாக மாறும் என்று பவுல் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே நீங்கள் நியாயப்பிரமாணத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அந்த நியாயப்பிரமாணம் என்பது உங்களுக்கும் எனக்கும் தேவையில்லாத வேறொரு காரியம். அது ஆகாரை போன்றது இதையே பவுல் கலாத்தியர் நிருபத்திலே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது சாராய்க்கு மட்டுமல்ல பின் நாட்களில் ஆபிராமுக்கும் இன்னும் பெரிய ஒரு துயரத்தை தரப்போகிறது. இப்பொழுது ஆகார் திரும்பி வந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அந்த குழந்தை ஆபிராமின் மகனாக பிறக்கிறான்.
அடுத்த இரண்டு வசனங்களையும் பாருங்கள்.
‭ஆதியாகமம் 16:11-12
[11] பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. [12] அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
…………………
மத்திய கிழக்கின் சுமார் 4000 ஆண்டு கால வரலாற்றின் பின்னணியில் இந்த வசனத்தை நீங்கள் எப்போதவது கவனித்திருக்கிறீர்களா? இன்று அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?? இஸ்மவேலின் சந்ததியினர் ஒரு கடினமான மனிதர்களாய் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக வனாந்தரத்தின் அந்த பழங்குடியினரின் வரலாறு இதுதான். இது கடவுள் கொடுத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும். அவர்கள் தங்களை ஆபிரகாமின் குமாரர்கள் என்று சொல்லி கொள்வார்கள். ஆனால் அவர்கள் இஸ்ரவேலின் குமாரர்களாகவும் இருக்கிறார்கள். இஸ்மவேல் வழியாக அவர்கள் ஆபிராமுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
‭ஆதியாகமம் 16:13-14
[13] அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள். [14] ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
…….,…………
தேவன் ஆகாாரிடம் எவ்வளவு கிருபை உள்ளவராக இருக்கிறார் என்பதை கவனித்தீர்களா? இது அவளுடைய பாவம் அல்ல. அதனால் கடவுள் அவளிடம் மிகவும் கிருபையாக நடந்து கொள்கிறார். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கர்த்தருடைய தூதன் என்பது இந்த உலகத்தில் மனிதனாக அவதரிப்பதற்கு முன்னே காணாமல் போனதை தேடிச் சென்ற கிறிஸ்துவை தவிர வேறு யாரும் அல்ல. அவர் அத்தகைய ஒரு மேய்ப்பராகவே இருக்கிறார். அவர் அவளிடத்திலே இந்த நற்செய்தியை கொண்டு வருகிறார்.
அப்பொழுது அவள், என்னை காண்கிற தேவனை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா? என்று சொல்லி தன்னுடனே பேசிய கர்த்தருக்கு நீர் என்னை காண்கிற தேவன் என்று பெயரிட்டாள்.
………………….
இது அவளுக்கு புதிய ஒரு அனுபவம். இதற்கு முன்பு அவள் இதை உணர்ந்திருக்கவில்லை. எகிப்தியர்கள் கடவுளைப் பற்றி மிகவும் பழமையான ஒரு கருத்தையும் கற்பனையையுமே கொண்டு இருந்தார்கள். இங்கே என்னை காண்கிற வரை நானும் இங்கே கண்டேன் அல்லவா என்று கடவுள் தன்னை நேரில் காண்கிறார் என்ற உண்மையால் அவள் திக்கு முக்காடிப் போகிறாள்.. இன்று கடவுளை பற்றி நாம் இன்னும் உயர்ந்த கண்ணோட்டத்தை கொண்டிருப்பதால் இது நமக்கு அவ்வளவு ஆச்சரியமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் சற்று பொறுங்கள். ஆகாரைப் போலவே நாமும் கடவுளை பற்றி உண்மையாக தெரிந்து கொள்வதில் இன்னும் வெகு தூரம் பின்தங்கியே இருக்கிறோம். ஒரு சிறிய வரம்புக்குட்பட்ட மனிதன் எல்லையற்ற கடவுளை புரிந்து கொள்வது கடினமானது. நம் அனைவருக்குமே அவரைப் புரிந்து கொள்வதிலே மற்றும் அவரைக் குறித்து அறிந்து கொள்வதில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் நித்திய காலத்தின் முடிவில்லாத யுகங்கள் முழுவதும் நம்மை ஆட்கொள்ள போகும் ஒரே காரியம் கடவுளை அறிந்து கொள்ள வேண்டிய படி அறிந்து கொள்வதுதான்.
அது எந்த ஒரு மனிதனுடைய ஆய்வுக்கும் தகுதியான ஒரு காரியம். கடவுளை அறிந்து கொள்வது என்பது நித்தியம் முழுவதும் ஒரு மனிதனின் நிலையை கண்ணியப்படுத்தும் ஒரு காரியமாகும்.
‭ஆதியாகமம் 16:15-16
[15] ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். [16] ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
…………………………

இப்பொழுது நாம் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டியது
இஸ்மவேலும் ஆபிராமின் மகன்.

தொடர்ந்து நாம் கற்றுக் கொள்ளும் முன் தேவன் ஆபிராமுக்கு கொடுத்த ஏழு தரிசனங்களை நம் மனதில் கொண்டு வருவோம். இவைகளில் ஐந்து முறை தேவன் ஆபிராமோடு பேசியதை நாம் பார்த்து விட்டோம். ஆபிராம் உடைய வாழ்க்கையில் சில தோல்விகள் இருந்தன. வெற்றிகளும் இருந்தன. சொல்லப்போனால் தேவன் ஆபிராமுக்கு ஏழு பரீட்சைகள் வைத்தார்.
முதலாவதாக கல்தேயரின் தேசத்தில் உள்ள ஊர் என்னும் இடத்திலிருந்து ஆபிராமை தேவன் வெளியே அழைத்தார். அவருடைய வீட்டை விட்டு வரும்படியாக கர்த்தர் சொன்ன பொழுது அரைகுறையாய் அதற்கு கீழ்ப்படிந்தார். அவருடைய விசுவாசமானது பலவீனமானதும் பரிபூரணம் அடையாதமாய் இருந்தது. என்றாலும் அந்த இடத்தை விட்டு அவர் புறப்பட்டார். தொடர்ந்து ஆபிராம் கானான் தேசத்திற்கு வந்தார். அங்கே தேவன் அவரை ஆசீர்வதித்தார்.
இரண்டாவதாக காணானில் ஒரு பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது கானானில் இருந்து எகிப்தியை நோக்கி ஆபிராம் போனார். அங்கே அவருக்கு அதிகமான செல்வம் கிடைத்தது. ஆகார் அங்கேதான் ஆபிராமுடைய குடும்பத்தோடு இணைந்தாள். என்றாலும் இரண்டுமே இவருக்கு பிரச்சனையாக இருந்தது.
மூன்றாவதாக ஆபிராமுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டன. அது உண்மையான ஒரு சோதனை இன்றைக்கு செல்வமும் பொருட்களும் தான் அநேகருக்கு இடையூறாய் இருக்கின்றன. அப்படிப்பட்ட நேரங்களிலும் ஆபிராம் கர்த்தரை மறந்து போகவில்லை. தன்னுடைய சகோதரனின் மகனான லோத்துவரிடத்திலே மிக தாராள மனம் உடையவராய் இருந்தார். அவர்களுக்கு வந்த செல்வ செழிப்போ அவர்கள் இரண்டு பேரும் பிரிந்து செல்வதற்கான காரியத்தை வகுத்தது. அதை தொடர்ந்து தேவன் ஆபிராமுக்கு தரிசனமானார்.
நான்காவதாக கிழக்கத்திய ராஜாக்களை முறியடித்த பொழுது அந்த சூழ்நிலையிலே அவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வல்லமையும் காணப்பட்டது. இதுவும் ஒரு உண்மையான சோதனை தான். ஏனென்றால் ஆபிராம் அங்கே ஒரு வெற்றி சிறந்த மனிதனாக காணப்பட்டார். இப்பொழுதுதான் மெல்கிசேதேக்கு ஆபிராமை சந்திக்கிறார். இந்த சந்திப்பே ஆபிராமை இந்த சூழ்நிலைக்கு பெலப்படுத்தியது என்று சொல்லலாம். எனவே யுத்தத்தில் கிடைத்த பொருட்களை தனக்கு வேண்டாம் என்று சொல்ல முடிந்தது. அதற்குப்பின் ஆபிராமுக்கு தேவன் தரிசனமாகி அவரை உற்சாகப்படுத்தினார்.
ஐந்தாவதாக சாராயக்கு ஒரு மகன் கொடுப்பதை தேவன் பிந்தி போட்டார். ஆபிராம் பொறுமை இழந்தவராய் காணப்பட்டார். சாராய் கூறியதைக் கேட்டு தேவனுடைய சித்தத்திற்கு வெளியே புறப்பட்டு போய் ஆகாரை தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டார். இதன் விளைவாக இஸ்மவேல் பிறந்தான். இப்பொழுதும் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேல் மக்கள் மீது எரிச்சலோடு தான் இருக்கிறார்கள். அது ஆயிரம் வருட அரசாட்சி வரை தொடரலாம் என்று கருதப்படுகிறது.
ஆபிராமின் ஆறாவது தரிசனம் சோதோம் கொமோரா பட்டணம் அளிக்கப்படும் பொழுதும், ஏழாவது தரிசனமானது அவருடைய ஒரே மகனான ஈசாக்கை பலியிடும்படியாக கர்த்தர் கூறும் பொழுதும் ஆபிராமுக்கு கிடைத்தது.

சரி இப்பொழுது நாம் ஆதியாகமம்பதினேழாம் அதிகாரத்திற்கு வருவோம் இங்கே ஆபிராமுக்கு தேவன் ஒரு புதிய பெயரை கொடுக்கிறார். ஆதியாகமம் 17 ஆம் அதிகாரம் / ஆதியாகம புத்தகத்திலேயே உன்னதமான ஒரு அதிகாரம் என்று அநேகர் சொல்லுகிறார்கள். இங்கே தேவன் ஆபிராமோடு ஒரு உடன்படிக்கை செய்து அவருக்கு ஒரு குமாரனை கொடுக்க போவதை குறித்த வாக்குறுதியை உறுதிப்படுத்துகிறார். இஸ்மவேல் வாக்கு பண்ணப்பட்ட புத்திரன் அல்ல என்பதை ஆபிராம் அறிந்து கொள்ளத்தக்கதாக தேவன் வழி நடத்துகிறார்.
ஒரு விதத்தில் இந்த அதிகாரம் தான் ஆதியாகம புத்தகத்திற்கான ஒரு முக்கியமான அதிகாரம் என்று சொல்லலாம். ஏன் முழு வேத புத்தகத்திலும் முக்கியமான ஒரு பகுதி. ஏனென்றால் இங்கே இரண்டு முக்கியமான காரியங்களை குறித்து தேவன் ஆபிராமோடு உடன்படிக்கை செய்கிறார்.
ஆபிராமுக்கு ஒரு மகன் பிறப்பான் என்பதை குறித்தும், அந்த நிலத்தை குறித்தும் தேவன் வாக்குறுதி கொடுக்கிறார். இப்பொழுது தேவன் புதிய ஒரு பெயரோடு ஆபிராமுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அதுதான் எல்ஷடாய் அதாவது சர்வ வல்லமை உள்ள தேவன். அது மட்டுமல்ல ஆபிராமுக்கும் ஒரு புதிய பெயரைக் கொடுக்கிறார். இதுவரை ஆபிராமுடைய பெயர் ஆபிராம் இப்பொழுது அதை ஆபிரகாம் என்று மாற்றுகிறார். ஆபிராம் என்றால் உன்னதமான தகப்பன் என்று பொருள். ஆபிரகாம் என்றால் எண்ணற்ற மக்களுக்கு தகப்பன் என்று பொருள்.
இந்த அதிகாரத்திலிருந்து மிகத் தெளிவாக நாம் கற்றுக் கள்ளும் ஒரு சத்தியம்
இஸ்மவேல் தேவன் ஆபிராமுக்கு கொடுத்த வாக்குறுதியின் புத்திரன் அல்ல என்பதுதான்.
‭ஆதியாகமம் 17:1
[1] ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
………………….
இஸ்மவேல் பிறந்த பொழுது ஆபிராமுக்கு 86 வயது. இப்பொழுது 14 வருடங்களுக்குப் பிறகு தேவன் ஆபிரகாமுக்கு தரிசனம் ஆகிறார். தரிசனமாகி என்ன சொல்கிறார்?? நான் சர்வ வல்லமை உள்ள தேவன் நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாய் இரு என்கிறார்.
‭ஆதியாகமம் 17:2
[2] நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
………………….
அருமையானவர்களே இந்த ஒரு அதிகாரத்தில் 13 முறை உடன்படிக்கை என்ற வார்த்தையை நாம் பார்க்கிறோம். இந்த அதிகாரத்தில் உள்ள 27 வசனங்களுக்குள்ளே 17 முறை உடன்படிக்கை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது என்றால் உண்மையாகவே தேவன் உடன்படிக்கையை குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த இடத்தில் தேவன் தரிசனம் ஆவது – ஐந்தாவது முறை ஆபிராமுக்கு அவர் கொடுக்கும் தரிசனம்.
இப்பொழுது தேவன் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்யும்படியாக மட்டுமல்ல அவருக்கு ஒரு குமாரனை கொடுப்பேன் என்ற வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் படியாக தரிசனம் ஆகிறார்.‌ இப்படி கூறுவதன் மூலமாக இஸ்மவேல் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சந்ததி அல்ல என்பது தெளிவாகிறது.
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ரோமர் நான்காம் அதிகாரம் 19 வசனத்தில் இவ்விதமாய் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
‭ரோமர் 4:19
[19] அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
………………
சாராயின் கர்ப்பத்தை குறித்து ஒருவர் சொல்லும் பொழுது அது ஒரு கல்லறை என்று சொல்கிறார். அது மரணத்தின் இடம் ஆனால் இப்பொழுது மரணத்திலிருந்து ஜீவன் வருகிறது ஈசாக்கு பிறக்கிறான்.

ரோமர் நான்கு 25ல் பவுல் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.
‭ரோமர் 4:25
[25] அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
…………………

மரணத்திலிருந்து ஜீவன் – ஆபிராகாம் இடத்தில் இப்பொழுது தேவன் கொடுக்கும் வாக்குறுதி இது தான். ஆபிரகாமுக்கு இப்பொழுது வயது 99 அப்படி என்றால் சாராவுக்கு 89 வயது. ஈசாக்கு பிறந்த பொழுது ஆபிரகாமுக்கு வயது 100 சாராளுக்கு 90.
தொடர்ந்து ஆதியாகமம் 17 மூன்றாம் நான்காம் வசனங்களை பாருங்கள்.
‭ஆதியாகமம் 17:3-4
[3] அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: [4] நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
…………………………
இப்பொழுது கர்த்தர் ஆபிராம் இடத்திலே அவன் திரளான ஜாதிகளுக்கு தகப்பன் ஆவான் என்று கூறுகிறார். அருமையானவர்களே இந்த உலகத்திலே வாழ்ந்த மனிதர்களில் எல்லாம் இந்த ஆபிராமுக்கு தான் அத்தனை அதிகமான பிள்ளைகள் பிறப்பார்கள் என்று சொல்லலாம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் கடந்த நான்காயிரம் ஆண்டுகளாக இஸ்மவேல் வம்சத்திலும், ஈசாக்கின் வம்சத்திலும் எத்தனை கோடி ஜனங்கள்?? எவ்வளவு பெரிய குடும்பம்? அதுமட்டுமல்ல ஆபிராமுக்கு ஆவிக்குரிய சந்ததியும் ஒன்று உண்டு. இயேசு கிறிஸ்துவேலே விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். பவுல் அப்போஸ்தலன் ரோமர் நான்காம் அதிகாரம் 16ஆம் வசனத்தில் ஆபிராமை குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார்.
கவனியுங்கள்.
‭ரோமர் 4:16
[16] ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
…………………

இவ்வாறு சொல்லும் பொழுது எல்லா விசுவாசிகளும் அதாவது இஸ்ரவேலில் உள்ள விசுவாசிகளும் அரபியர்களில் உள்ள விசுவாசிகளும் இதிலே அடங்கி இருக்கிறார்கள் எனவே தான் நீ திரளான ஜாதிகளுக்கு தகப்பன் ஆவாய் என்று சொல்லியிருக்கிறார்.
‭ஆதியாகமம் 17:5
[5] இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
………………….
ஆபிராம் என்றால் உன்னதமான தகப்பன் அல்லது உயர்வான தகப்பன் அல்லது உயர்த்தப்பட்ட தகப்பன். ஆனால் ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்கு தகப்பன். அருமையானவர்களே வேத பண்டிதர் ஒருவர் கற்பனையாக ஒரு சம்பவத்தை சற்று சிந்தித்து எழுதி இருக்கிறார். அதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு நாள் காலையில் ஆபிராகாமும் சாராயும் எழுந்து தங்கள் கூடாரத்தை சுற்றி வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் சில வியாபாரிகள் நடந்து வருவதை கவனித்தார்கள்.
அங்கே காணப்பட்ட நீரூற்றந்தையிலே வந்து தங்கள் ஒட்டகங்களுக்கும் அங்கே தண்ணீர் பெற்றுக் கொள்ளலாமா என்பதை அறிந்து கொள்ளும்படியாக வந்தார்கள். அவர்களை போய் ஆபிராம் சந்திக்கிறார் .அருமையானவர்களே அந்த காலங்களிலே விருந்தோம்பலில் பெயர் பெற்ற அனேகர் இருந்திருக்கிறார்கள். நாம் பல சமயங்களில் குகைகளிலே வாழ்ந்த மனிதர்களை குறித்து பேசுகிறோம் எவ்வளவு பயங்கரமானவர்கள் அவர்கள் என்று சொல்லுகிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது அவர்கள் செல்லும் வழிகளிலே முன்பின் அறியாத அனேகர் அப்படிப்பட்டவர்களை உபசரித்து இரக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் எந்த ஒரு பட்டணத்திற்கு சென்றாலும்
உங்களை முன் பின் அறியாத யாராவது உபசரிக்கிறார்களா? அப்படி வெகு சிலர் இருக்கிறார்கள்.
1972 ஆம் ஆண்டில் முதல் முறையாக நான் பெங்களூர் பட்டினத்திற்கு சென்ற பொழுது இரவு மிகவும் பிந்தி போய் சேர்ந்தேன். என்னுடைய கரத்திலே முகவரி இருந்தாலும் அவ்வளவு பிந்திய இரவிலே நான் அங்கே போய் சேர முடியாது என்பதை அறிந்து என்னோடு பேருந்தில் வந்த ஒருவர் தன்னுடைய வீட்டிலே வந்து தங்கும் படியாக என்னை அழைத்துச் சென்றார்.‌ எனவே நான் அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் என் சகோதரர் வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.
அன்று தேவனே எனக்கு ஒரு தேவதூதனை அனுப்பியது போல அந்த இரவிலே உணர்ந்தேன். இப்படியும் இந்த உலகத்தில் நாம் சிலரை சந்திக்கிறோம். கிறிஸ்தவ விசுவாசிகள் என்று கூறினாலும் இப்படி அந்நியர்களை குடும்பங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் மிகச் சிலரே. ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம் அந்த அளவிற்கு மாறி போய்விட்டது. உபசரிப்பிலே நாம் குறைவாய் காணப்படுகிறோம்.‌
சரி இப்பொழுது நாம் ஆபிராகாமின் நாட்களுக்கு செல்வோம். அந்த வழிப்போக்கர்களை சந்திக்க போன ஆபிராம் அவர்களோடு என்ன பேசுகிறார் என்று கவனியுங்கள், அருமையானவர்களே தேவையான மட்டும் உங்கள் ஒட்டகங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒட்டகங்களுக்கும் நான் இறை கொடுக்கிறேன். நீங்கள் சற்று தங்கி இருந்து சென்றால் என்ன என்று ஆபிராகாம் கேட்க – இல்லை இல்லை நாங்கள் அவசரமாக வியாபாரம் தொடர்பாக எகிப்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். சீக்கிரமாய் நாங்கள் போய் திரும்ப வேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார். அப்படி இருக்கும் பொழுது அங்கிருந்த ஒரு மனிதர் என்னுடைய பெயர் அல்லா என்கிறார் மற்றொருவர் என்னுடைய பெயர் அலிபாபா என்கிறார். ஐயா உங்களுடைய பெயர் என்ன என்று கேட்ட பொழுது நான் உன்னதமான தகப்பன் என்று சொல்லுகிறார். உடனே அந்த மனிதன் உங்களுக்கு மகனா மகளா என்று கேட்ட பொழுது எனக்கு பிள்ளைகளே இல்லை என்றார் ஆபிராகாம். உடனே அவன் சிரித்துக் கொண்டவனாக குழந்தையே இல்லாத பொழுது உங்களுக்கு பெயர் ஆபிரகாமா?? இந்த உலகத்திலே பிள்ளைகளே இல்லாத உங்களை நீங்கள் தகப்பன் என்று எப்படி அழைக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு சிரித்தவர்களாக பாலைவனத்திலே தொடர்ந்து அவர்கள் பயணப்பட்டு இருப்பார்கள்.
ஆறு மாதங்கள் கழித்து மீண்டுமாக அவர்கள் திரும்பி வந்தார்கள் இப்பொழுதும் ஆபிராகாம் அவர்களை சந்திக்கும்படியாக புறப்பட்டு போகிறார். மீண்டுமாக அவர்களைப் பார்த்த பொழுது என்ன உன்னதமான தகப்பனாரே எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். அப்பொழுது என்னுடைய பெயர் இப்பொழுது உன்னதமான தகப்பனல்ல திரளான ஜாதிகளுக்கு தகப்பன் என்று கூறுகிறார் உடனே வியாபாரிகள் அப்படி என்றால் ரெட்டை குழந்தைகளா என்று கேட்கிறார்கள் இல்லை இல்லை இன்னமும் எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று சொன்ன பொழுது அத்தனை பேரும் இது என்ன வேடிக்கையாக இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்று விட்டார்கள்.
அருமையானவர்களே இந்த குழந்தை பிறப்பதற்கு முன்னதாக தகப்பன் என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனை பார்க்கிறோம். அது மட்டும் அல்ல ஆபிரகாம் உண்மையாகவே ஆபிரகாமாக இருந்தார் திரளான ஜாதிகளுக்கு விசுவாசத்தினாலே தகப்பனாய் இருந்தார். அதாவது 4000 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நானும் நீங்களும் இருக்கிற இந்த காலத்திலே உண்மையாகவே தேவன் அதை செய்து முடித்து விட்டார். ஆபிரகாம் இப்பொழுதும் திரளான ஜனங்களுக்கு தகப்பன் தான்.

ஆபிரகாமின் வாழ்க்கையில் அவர் தோல்விகளை சந்தித்தாலும், தேவன் அவர் வாழ்வில் வைத்த திட்டத்தை மாற்றவில்லை, விசுவாசத்தில் வளர அவருக்கு உதவி செய்து வாக்குத்தத்தை நிறைவேற்றினார். இதே காரியத்தை கர்த்தர் உங்கள் வாழ்விலும் செய்து முடிக்க போகிறார். விசுவாசத்தோடும் ஸ்தோத்திரத்தோடும் அவர் நேரத்திற்காக காத்திருக்க கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வாராக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top