ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 15
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 15
நிகழ்ச்சி எண்: 0033

வாசியுங்கள்

பிரியமானவர்களே.
இன்று நாம் ஆதியாகமம் 15 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம். வேத புத்தகத்தில் உள்ள அதிகாரங்களுள் இதுவும் ஒரு முக்கியமான அதிகாரமாகும்.
‭ஆதியாகமம் 15:1
[1] இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
………………..
இப்பொழுது தேவன் ஆபிராமுக்கு நான்காவது முறையாக காட்சியளிக்கிறார். தேவன் ஆபிராமை முன்னேறச் செய்து தொடர்ந்து அவரோடு அழைத்துச் செல்கிறார். ஆபிராம் இப்பொழுது மிகப்பெரிய ஒரு விசுவாச அடியை எடுத்து வைத்திருப்பதால் கடவுள் அவருக்கு காட்சியளிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால் அவர் லோத்தை மீட்க சென்றார் மேலும் சோதோம் ராஜா கொடுத்த கொள்ளை பொருட்களை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

இங்கே கர்த்தர் ஆபிராமுக்கு சொல்வது என்ன ஆபிராமே நீ பயப்படாதே நான் உனக்கு கேடயமாய் இருக்கிறேன் என்கிறார். கேடகம் – கேடயம் இரண்டும் ஒன்றுதான். இது மிகவும் அழகானது இது அற்புதமானது. ஆபிராம் அந்த யுத்தத்திற்கு சென்றிருந்த பொழுது ஒருவேளை உண்மையாகவே ஆபத்தில் சிக்கி இருக்கலாம். தான் உயிரோடு திரும்புவோமா என்று கூட அவர் யோசித்து இருக்கலாம், இப்பொழுது கடவுள் அவருக்கு எளிமையாக நினைவுபடுத்துகிறார். நானே உன்னை பாதுகாக்கும் கேடயம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேலும் இரண்டாவதாக கர்த்தர் சொல்வது ஆபிராமே நான் உனக்கு மகா பெரிய பலனுமாய் இருக்கிறேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அந்த பொருட்களை நீ மறுத்தது நல்லது. நானே உனக்கு பலனளிக்க விரும்புகிறேன் என்று கர்த்தர் கூறுகிறார். பிரியமானவர்களே இன்று ஒரு மனிதன் கடவுளை நம்பி அவரை மட்டும் நோக்கி பார்க்க ஆயத்தமாக இருந்தால் கடவுள் அவனை கொண்டு என்ன எல்லாம் செய்ய முடியும் தெரியுமா?
ஆபிராம் ஒவ்வொரு காலையிலும் தன்னுடைய பரிசுத்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பக்திமானான ஒருவர் என்று நீங்கள் நினைத்தால் அது அது சரியல்ல. ஆபிராம் மிகவும் நடைமுறையானவர் இப்பொழுது அவர் தன் வாழ்க்கையில் உணரும் உண்மையான ஒரு காரியத்தை குறித்து பேச போகிறார். அருமையானவர்களே நாமும் இப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்றைக்கு பல அடிப்படை வாதிகள் கொண்டிருக்கிற போலியான பக்தி மற்றும் மாயையான அணுகு முறையை நாம் விட்டு ஒழிக்க வேண்டும். ஆபிராம் தேவனிடத்தில் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்.
‭ஆதியாகமம் 15:2-3 பாருங்கள்
[2] அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். [3] பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
……………………
இங்கே ஆபிராம் கடவுளிடத்திலே சொல்வது என்ன?? எனக்கு இன்னும் அதிகமான செல்வம் வேண்டாம், என் இருதயத்திலே பாரமாய் இருப்பது எல்லாமே நான் குழந்தை இல்லாமல் இருக்கிறேன், எனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதுதான். என்னை ஜாதிகளின் தகப்பனாக்குவதாகவும் என் சந்ததியினரை கடற்கரை மணலை போல எண்ணில் அடங்காதவர்களாக மாற்றுவதாகவும் நீர் வாக்குறுதி அளித்தீர் ஆனால் எனக்கு ஒரு குழந்தை கூட இல்லையே, என்று கூறுகிறார். மேலும் அந்தக் காலச் சட்டமான ஹம்முராபி சட்ட தொகுப்பின்படி ஆபிராமுக்கு ஒரு குழந்தை இல்லை என்றால் காலப்போக்கில் அவருடைய நிர்வாகியும் தலைமை ஊழியருமான எலியேசர் ஆபிரகாமின் சொத்துக்களை சுதந்தரித்துக் கொள்வார்.
‭ஆதியாகமம் 15:4
[4] அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
……………………
ஒரு மனிதன் கடவுளிடத்திலே உள்ளத்தில் இருப்பதை உண்மையாக பேசும் பொழுது கடவுளும் அவரிடத்திலே மிக எதார்த்தமாகவே நடந்து கொள்கிறார். அவர் என்ன சொல்கிறார் பாருங்கள். ஆம் நான் உனக்கு ஒரு மகனை தருவேன் என்று உறுதியாக சொல்லுகிறார். அது இரவு நேரமாக இருந்திருக்க வேண்டும். கடவுள் ஆபிராமை கூடாரத்தை விட்டு வெளியே அழைத்து என்ன சொல்கிறார் கவனியுங்கள்.
‭ஆதியாகமம் 15:5
[5] அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
………………..
அருமையானவர்களே இது மிகவும் குறிப்பிடத்தக்கது. முதலாவது கர்த்தர் ஆபிராமின் சந்ததியினரை கடற்கரை மணலை போல எண்ணில் அடங்காதவர்களாக இருப்பார்கள் என்று கூறினார். இப்பொழுது அவர்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ணில் அடங்காதவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறார். ஆபிரகாமல் நட்சத்திரங்களை எண்ண முடியவில்லை. அவரால் தோராயமாக நான்காயிரம் நட்சத்திரங்களை பார்க்க முடிந்தது ஆனால் அவர் பார்த்த அந்த பகுதியிலே அனேகமாக 50,000க்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருந்திருக்கலாம். ஆபிராமால் தன் சந்ததியினரை என்ன முடியவில்லை இன்றும் உங்களால் அதைச் செய்ய முடியாது.
இந்த ஆபிராமுக்கு உண்மையில் இரண்டு வகையான சந்ததிகள் இருக்கிறார்கள். அவருக்கு மாம்சப்படியான ஒரு சந்ததி உண்டு அதுதான் இஸ்ரவேல் தேசம். மேலும் அவருக்கு ஒரு ஆவிக்குரிய சந்ததி உண்டு. அதுதான் விசுவாசிகளின் கூட்டம். திருச்சபை எப்படி ஆபிரகாமின் ஆவிக்குரிய சந்ததியாக மாறுகிறது?? விசுவாசத்தின் மூலமாகத்தான். கலாத்தியர்கள் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் ஆபிரகாமின் குமாரர்களாக இருக்கிறார்கள் என்று பவுல் கூறி இருக்கிறார். இது இயற்கை ரீதியான வம்சாவளியல்ல. மாறாக ஒரு ஆவிக்குரிய சந்ததியாகும். கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭கலாத்தியர் 3:29
[29] நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
……………………
யூதர்களிலே இரட்சிக்கப்பட்ட பல விசுவாசிகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் கூட்டத்தில் ஒரு முறை வெர்னன் மகி என்ற ஊழியர் செய்தி கொடுத்தபொழுது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மகிமையை குறித்தும் கிறிஸ்துவில் அவை எவ்வாறு நிறைவேறியது என்பதை குறித்து பேசினார். மேலும் அவர்கள் எல்லாரும் ஆபிரகாமின் சந்ததியினராய் இருக்கிறார்கள். என்பதைக் குறித்து அறிந்தவர்களோடு தான் பேசுவதை குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். அது மட்டுமல்ல தானும் ஆபிரகாமின் சந்ததியாய் இருக்கிறேன் என்றார். உடனே அங்கு இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டார்கள். பின் அவர் தாம் எப்படி ஆபிராமின் சந்ததி என்று விளக்கிச் சொன்னார். ஆம் அருமையானவர்களே விசுவாசத்தின் மூலமாக கர்த்தரிடத்தில் வந்த ஒவ்வொருவரும் ஆபிரகாமின் சந்ததியினராய் இருக்கிறார்கள். ஏனென்றால், ஆபிரகாம் தன் கிரியைகளினால் அல்ல விசுவாசத்தினாலேயே கர்த்தரிடத்தில் வந்தார் அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது.

‭ஆதியாகமம் 15:6
[6] அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
……………………..
இது வேத புத்தகத்தில் உள்ள ஒரு உன்னதமான வாக்கியம். அவன் கர்த்தரை விசுவாசித்தான். இதன் பொருள் என்னவென்றால் ஆபிராம் தேவன் கூறிய வார்த்தைக்கு ஆமென் என்று சொன்னான். இங்கே தேவன் நான் உனக்கு இதைச் செய்வேன் என்று சொன்னார் அதற்கு ஆபிராம் ஆண்டவரே நான் உம்மை விசுவாசிக்கிறேன். அப்படியே ஆகக் கடவது நான் உன்னை நம்புகிறேன் என்றான்.
இந்த இடத்தில் நாம் ரோமர் நான்காம் அதிகாரம் முதல் ஐந்து வசனங்களை வாசிக்க வேண்டும்.
‭ரோமர் 4:1-5
[1] அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? [2] ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. [3] வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. [4] கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். [5] ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
………………

இங்கே ஆபிரகாம் மாம்சத்தினால் செய்த எந்த செயலினாலும் அவர் எதையாவது பெற்றுக் கொண்டாரா? என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.
வேத வாக்கியம் என்ன சொல்லுகிறது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அதாவது அவனுடைய விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது ஏனென்றால் விசுவாசம் என்பது நீதி அல்ல. ஆனால் தேவன் அதை நீதியாக கணக்கிட்டு கொண்டார்.
வேலை செய்கிறவனுக்கு கூலியானது கிருபை என்று எண்ணப்படாமல் கடன் என்று எண்ணப்படும். உங்கள் இரட்சிப்புக்காக நீங்கள் கிரியை செய்ய முடியுமானால் தேவன் உங்களுக்கு கடன் பட்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆனால் அருமையான சகோதரனை சகோதரியே தேவன் கிருபையைத் தவிர வேறு எந்த வழியிலும் ஒரு பொழுதும் இரட்சிக்கிறது இல்லை. இரட்சிப்பிற்கு அவரிடத்திலே வேறு எந்த முறையும் இருந்ததில்லை. நீங்கள் எப்பொழுதாவது இரட்சிக்கப்படுவீர்கள் என்றால் அது நீங்கள் தேவனை நம்புவதாலும் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்வதாலும், தேவன் உங்களுக்காக இரட்சிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்று விசுவாசிப்பதாலுமே நடைபெறும்.

அடுத்ததாக எந்த கிரியைகளையும் செய்யாமல்… என்று பார்க்கிறோம் புண்ணிய கிரியைகள் என்று யாரும் எதையும் செய்து இரட்சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது. மேலும் பக்திஅற்றவனை.. எப்படிப்பட்டவர்களை?? பக்தியற்றவர்களை நீதிமான் ஆக்குகிற இடத்தில் விசுவாசம் வைக்கிறவனுக்கும் அவனுடைய விசுவாசம் நீதியாக எண்ணப்படும். அருமையானவர்களே அவருடைய விசுவாசம் அவரிடத்தில் இல்லாத ஒன்றான நீதியாக எண்ணப்படுகிறது.

ஆபிரகாம் தேவனை அப்படியே விசுவாசித்தார் தேவன் சொன்னதை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் அவர் தேவனை நம்பினார் நீங்களும் இரட்சிக்கப்படுவதற்கான வழி இதுதான். தேவன் உங்களுக்காக ஏதோ ஒன்று செய்து இருக்கிறார் என்பதையும் கிறிஸ்து உங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதையும் நீங்கள் விசுவாசிப்பது தான் அது. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதின் மூலம் தேவன் உங்களை நீதிமான் என்று அறிவிப்பார்.
இப்பொழுது கலாத்தியர் 3: 6 முதல் 9 வரை பாருங்கள்.
‭கலாத்தியர் 3:6-9
[6] அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. [7] ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. [8] மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. [9] அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
……………
ஆம் அருமையானவர்களே ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசம் அவரை தேவனுக்கு உண்மை உள்ளவராக மாற்றியது. ஆனால் அவர் உண்மையுள்ளவராக இருந்ததால் இரட்சிக்கப்படவில்லை. அவர் தேவனை விசுவாசித்ததாலயே இரட்சிக்கப்பட்டார். நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானது.
நான் மீண்டும் சொல்கிறேன் ஆபிரகாம் மிகவும் நடைமுறை எதார்த்தமான ஒரு மனிதர். அவர் உண்மையை கையாள்வதில் நம்பிக்கை கொண்டவர். நாமும் அதையே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நமது வாழ்க்கையிலும் உண்மையான செயல்பாடு அவசியம். உங்கள் வாழ்க்கையில் அந்த உண்மை இல்லை என்றால் அங்கு எதுவுமே இல்லை என்றுதான் அர்த்தம். இன்று பலர் வெறுமனே சபை விளையாட்டுகளிலே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆபிராம் மிகவும் நடைமுறை ரீதியானவர். அவர் எதையும் தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறவர் மேலும் அவர் எதையாவது எழுத்துப்பூர்வமாக பெற விரும்புகிறவர் என்று சொல்லலாம்.
சரி, கடவுள் இப்பொழுது அவரிடத்தில் என்ன சொல்லப் போகிறார் தெரியுமா? ஆபிரகாமே நீ என்னிடம் இதைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. ஏனென்றால் நான் உன்னை நீதிமன்றத்தில் சந்திக்க போகிறேன். நான் ஒரு நோட்டரி பப்ளிக் முன்னிலையில் சென்று உன்னோடு நான் செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவேன். உனக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான். நீ அங்கே வந்து என்னை சந்தி. அந்த ஒப்பந்தபத்திரத்திலே கோடிட்ட இடத்திலே நான் கையெழுத்து விடுகிறேன் என்று கூறுகிறார். ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் வேத புத்தகத்தில் இல்லையே என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம் நீதிமன்றத்தை பற்றியோ நோட்டரி பப்ளிக் பற்றியோ வேதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய கால சட்டஒழுங்கின்படி பார்த்தால் கடவுள் ஆபிராமிடம் சொன்னது அதைத்தான்.
தொடர்ந்து வரும் வசனங்களிலே தேவன் ஆபிராமிடத்திலே சொன்னதை நாம் வாசிக்கிறோம் பாருங்கள்.
‭ஆதியாகமம் 15:9-10
[9] அதற்கு அவர்: மூன்றுவயதுக் கிடாரியையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். [10] அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
…………………
கர்த்தர் ஆபிராமிடத்தில் ஒரு பலியைஆயத்தப்படுத்த சொன்னார்.
அவர் ஒரு கிடாரையும், ஒரு வெள்ளாட்டையும் ஒரு ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து அவற்றை நடுவில் பிளந்து ஒரு பாதியை ஒரு பக்கத்திலும் மற்ற பாதியை மறுபக்கத்தலும் வைக்க வேண்டியது இருந்தது. அவர் காட்டுப் புறாவையும் புறா குஞ்சையும் இரண்டாக பிளக்க வில்லை ஆனால் ஒன்றை ஒரு பக்கத்திலும் மற்றொன்றை மறுபக்கத்திலும் வைத்தார்.
அந்த காலத்தில் மனிதர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பொழுது இப்படித்தான் செய்து கொண்டார்கள். உதாரணமாக ஒரு நபர் மற்றொருவரிடத்தில் இருந்து ஆடுகளை வாங்க ஒப்புக்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இந்த முறையில் ஒரு பலியை தயார் செய்வார்கள். ஒப்பந்தத்தின் முதல் நபரும் இரண்டாம் நபரும் கைகோர்த்து தங்கள் ஒப்பந்தத்தை அறிவிப்பார்கள். பின்னர் அவர்கள் அந்த பலிப்பொருட்களுக்கு இடையே நடந்து செல்வார்கள்.. இந்த காலத்தில் நீதிமன்றத்திற்கு சென்று ஒரு நோட்டரி பப்ளிக் முன்னிலையில் கையெழுத்து இடுவதற்கு இணையானதாக அன்று இந்த செயல் இருந்தது. எனவே தேவன் ஆபிராம் இடம் அவருடைய காலத்தில் இருந்த சட்ட நடைமுறையை பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.
எரேமியா 34 ஆம் அதிகாரம் 18 வது வசனத்திலும் அந்த தேசத்தில் நிலவிய இந்த வழக்கத்தை குறித்து ஒரு குறிப்பு இருக்கிறது இது இந்த மக்களிடையே மட்டுமல்ல அக்காலத்தில் இருந்த எல்லா மக்கள் மத்தியிலும் நடைமுறையில் இருந்தது.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭எரேமியா 34:18
[18] என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
………………..
இங்கே கர்த்தர் சொல்லுவது என்ன என் சமூகத்தில் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல் என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் ஒப்புக்கொடுப்பேன் அந்த நாட்களின் முறை என்னவென்றால் பலியை எடுத்து அதைப் பிரித்து வைத்த பின் மனிதர்கள் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
தேவன் கட்டளை இட்டபடியே ஆபிராம் அனைத்தையும் தயார் செய்தார்.
‭ஆதியாகமம் 15:11
[11] பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
…………………
கவனியுங்கள் இது மிகவும் உலக வழக்கமான ஒரு காட்சியாய் இருக்கிறது. ஆபிராம் அனைத்தையும் தயார் செய்துவிட்டு கர்த்தர்க்காக காத்திருக்கிறார். அவர் காத்திருக்கும் வேளையிலே வானத்து பறவைகள் மற்றும் காகங்கள் அந்த பலி பிணங்கள் மீது இறங்கி வருகின்றன. ஆபிராம் அங்கே நின்று கொண்டு அவற்றை துரத்திக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அவை அந்த பலிப் பொருட்களின் மேல் பாய்ந்து விழுவதற்கு தயாராக இருக்கின்றன ஒருவேளை நீங்கள் அங்கே இருந்து அந்த பலிப் பொருட்களின் காட்சியையும் அன்றைய வழக்கத்தையும் அறிந்திருந்தால் ஒருவேளை ஆபிராமை பார்த்து என்ன ஆபிராம் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நபர் இன்னமும் வந்ததாக தெரியவில்லையே அவர் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன் என்று கூறுவீர்கள் என்றால் அதற்க் ஆபிராம் – இல்லை இல்லை அவர் வருவதற்கு தாமதமாகவில்லை. என்னை தயார் நிலையில் இருக்க சொல்லி இருக்கிறார் எனவே ஒப்பந்தம் செய்ய அவர் இங்க நிச்சயம் வருவார் என்று சொல்லி இருப்பார்.
‭ஆதியாகமம் 15:12
[12] சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
……………….
கவனியுங்கள் இங்கே ஆபிராம் ஆழ்ந்த நித்திரையில் திகிலும் காரிருளும் மூடிக்கொண்டவராக ஒருபுறம் ஒதுக்கி வைக்கப்படுகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நேரத்திலே கடவுள் இவரை இப்படி உறக்கத்திலே ஆழ்த்தியது மிகவும் விசித்திரமாக நமக்கு தெரியலாம். ஆனால் இது ஒரு அசாதாரணமான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் கர்த்தர் எதையோ வாக்குறுதி அளிப்பதால் அவர் மட்டும் அந்த பலிப் பொருட்களுக்கு இடையே கடந்து செல்ல போகிறார். ஆனால் ஆபிராம் எதையும் செய்யப்போவதில்லை என்பதால் அவர் அந்த பலி பொருட்களை கடக்கப்போவதில்லை. ஆபிராம் கடவுளை அப்படியே விசுவாசித்தார். அவ்வளவுதான்.
பிரியமானவர்களே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் தம்முடைய குமாரனை அனுப்பிய பொழுது சரியாக இதுதான் நடந்தது. தேவன் தன்னுடைய ஒரே பேரான குமாரனை தந்து இந்த உலகத்திலே அன்பு கூர்ந்தார். அந்த குமாரனும் இந்த பூமிக்கு வந்து என்னுடைய பாவத்திற்காக உங்கள் பாவத்திற்காக மரிக்க சம்மதித்தார். அவரை விசுவாசிக்கிறவன் அவருடைய கிருபையை பெற்றுக் கொள்கிறவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு இது நடந்தது. இதைத்தான் யோவான் 3 16 இல் வாசிக்கிறோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்ய நான் அங்கே இருக்கவில்லை. ஆனால் பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அங்கே இருந்தார்கள். குமாரன் சிலுவைக்கு சென்று என் பாவங்களுக்காக மரித்தார். ஆனால் நான் பாவத்தினால் செயலிழந்து போயிருந்தேன். என்னால் எதையுமே வாக்குறுதி அளிக்க முடியவில்லை. உங்களாலும் எந்த வாக்குறுதியும் கர்த்தருக்கு கொடுக்க முடியாது .
ஆபிராமும் எதையுமே கடவுளுக்கு வாக்குறுதியாக சொல்லவில்லை. ஒருவேளை கடவுள் ஆபிராமிடம் ஆபிராமே நீ ஒவ்வொரு இரவும் ஜெபம் செய்வதாக எனக்கு வாக்கு கொடுத்தால் நான் உனக்கு இதைச் செய்வேன் என்று சொல்லி இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆபிராம் ஒருவேளை ஒரு இரவு ஜெபிக்க மறந்து விட்டால் அந்த ஒப்பந்தம் ஒன்றுமில்லாமல் போகும். அது உடைந்து விடும். அதன் பின் கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். ஆனால் கடவுள் தான் செய்ய வேண்டியதை செய்வதாக கூறினார். மேலும் அவர் மனிதனிடம், ஒரே ஒரு காரியத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார். அருமையான சகோதரனே சகோதரியே தேவனை விசுவாசிப்பதே இரட்சிப்பு. நீங்கள் தேவனை விசுவாசிக்க வேண்டும். அவர் உங்களுக்காக செய்து முடித்ததையும் விசுவாசிக்க வேண்டும்.
கிராமப்புறத்தில் இருந்து வாலிபன் ஒருவன் பட்டணத்திற்கு சென்றான் அங்கே சென்றவன் கடவுளை மறுதலிக்கிறவனாகவும் ஒரு அவிசுவாசியாகவும் திரும்பி வந்தான். அவன் வீட்டிற்கு வந்த பொழுது அவனுடைய நிலையை பார்த்த தாயார் அன்பாக அவன் அருகிலே போய் உட்கார்ந்து தேவனுடைய அன்பை குறித்தும் இரட்சிப்பின் முக்கியத்துவத்தை குறித்தும் தனது சொந்த இரட்சிப்பை குறித்தும் அவனோடு பகிர்ந்து கொண்டார்கள். அவன் அவர்கள் கூறிய எல்லாவற்றையும் அலட்சியம் பண்ணினான் மேலும் ஒரு நாள் அவனுக்கு உணவுப் பரிமாறும் பொழுது தேவனுடைய அன்பை குறித்து சொன்னார்கள் அப்பொழுது அவன் இவ்வளவு பெரிய உலகத்தையும் குறித்து அக்கறைப்பட்டு கொண்டிருக்கிற கடவுள் உங்களுடைய இந்த சின்ன ஆத்துமாவை குறித்து அக்கரை பட்டு கொண்டு இருப்பார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று ஒரு கேள்வி கேட்டான்
அமைதியாக உணவை பரிமாறி விட்டு உட்கார்ந்த தாயார் சற்று நேரம் கழித்து, மகனே நீ சொன்னதை குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீ சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். என்னுடைய இந்த சின்ன ஆத்துமா பெரிதான ஒரு காரியம் அல்ல தேவனுடைய அண்ட சராசரங்களை பார்க்கும் பொழுதும் அவர் இந்த சின்ன ஆத்துமாவை இழந்து போக மாட்டார். ஆனால் அவர் என்னை இரட்சிக்கவில்லை என்றால் நான் இழந்து போவதை விட பெரிய காரியத்தை அவர் இழந்து விடப் போகிறார். நான் எனது ஆத்துமாவை மட்டும்தான் இழந்து போவேன். ஆனால் அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை இந்த பெரிய ஒரு இழி சொல் அவருக்கு வந்துவிடும். ஏனென்றால் அவர் எனது ஆத்துமாவையும் இரட்சிப்பேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார். யோவான் 3 16 இல் அதைத்தான் நான் வாசித்திருக்கிறேன் என்று அந்த தாயார் கூறினார்களாம்.

ஆம் அருமையான சகோதரனே சகோதரியே
அவர் கொடுக்கும் பாவம் மன்னிப்பையும், இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்களும் உங்கள் வீட்டார் இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் எந்த ஊருக்கும் பிரயாணம் செய்ய அவர் உங்களை கேட்கவில்லை இவ்வளவு தொகை எனக்கு காணிக்கை கொடுத்தால் தான் உன்னை இரட்சிப்பேன் என்று சொல்லவில்லை. நீங்கள் இருக்கிற இடத்தில் அவரை நோக்கி பார்த்து உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இயேசுவே என்னுடைய பாவத்திற்கான தண்டனையை நீர் சிலுவையில் சுமந்ததை நான் நம்புகிறேன் என்னுடைய உள்ளத்திலே வாரும் என்னுடைய பாவங்களை மன்னியும் எனக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தை தாரும் நான் உம்முடைய பிள்ளை என்ற உறுதியை எனக்கு தாரும் நீர் கொடுத்த வாக்குத்தத்தை நீர் காத்துக் கொள்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன் உம்மை இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள்.
‭ஆதியாகமம் 15:13
[13] அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடைய தல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
……………………..
எபிரேய மக்கள் மூன்று முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியே விரட்டப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது அப்படி அவர்கள் செல்வதில் இதுதான் முதல் முறை. அவர்கள் மீண்டுமாக திரும்ப வருவார்கள் என்றும் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறே அவர்கள் திரும்பி வந்தார்கள். பின்னர் பாபிலோனியரால், அவர்கள் சிறை பிடித்து செல்லப்பட்டார்கள். மீண்டும் திரும்பி வந்தார்கள். கிறிஸ்துவக்கு பின்
70-வது ஆண்டிலே எருசலேம் பாழாக்கப்பட்டது மூன்றாவது முறையாக எபிரேய ஜனங்கள் சிதறடிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் அவர்கள் இங்கே வந்து சேரவில்லை இப்பொழுது அவர்கள் இஸ்ரவேல் தேசத்திலே தங்கி இருப்பதினால் வேத வசனம் நிறைவேறிவிட்டது என்று கூற முடியாது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையின் படி இன்னும் ஒரு நாளிலே அவர்கள் அத்தனை பேரும் நிச்சயமாய் அங்கே வந்து சேர்வார்கள்.
‭ஆதியாகமம் 15:14-15
[14] இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். [15] நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
………………..
இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது போலவே அவர்கள் மிகுந்த பொருட்களுடனே வெளியே வந்தார்கள். ஆனால் அந்த காட்சியைக் காண ஆபிரகாம் உயிரோடு இருக்கப்போவதில்லை.
‭ஆதியாகமம் 15:16
[16] நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
………………..
இங்கே கர்த்தர் ஆபிராமுக்கு சொல்வது என்ன? நான் எமோரியரையும் நேசிப்பதினாலே இப்பொழுது உன்னை இந்த தேசத்திலே வைக்க முடியாது. அவர்கள் என்னிடமாக திரும்புவதற்காக நான் சற்று நேரம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே தான் இந்த எமோரியர்களுக்கு தேவன் 400 ஆண்டுகளை கொடுத்தார். அது நீண்ட ஒரு காலம்தான் இல்லையா? அவர்கள் அவரிடமாக திரும்புவார்களாக என்று பார்த்தார். அப்படி அவரிடத்திலே திரும்பிய ஒரே ஒரு காணானிய பெண்மணிதான் ராகப் என்ற வேசி. அவள் கர்த்தரிடமாக திரும்பினாள். அவள் தேவனை விசுவாசித்தாள்.

அருமையான சகோதரனை சகோதரியே இன்றும் கர்த்தர் உங்களைப் பார்த்தும் கேட்கும் ஒரே ஒரு காரியம் மகனே மகளே நீ என்னை விசுவாசிக்க மாட்டாயா? உங்களுக்கு ஆண்டவர் எத்தனையோ ஆண்டுகளை கொடுத்து விட்டார். எத்தனையோ ஆபத்துகளிலே உங்களை காத்து விட்டார். எத்தனையோ சாட்சிகளை உங்களுக்கு காட்டிவிட்டார். எத்தனையோ அற்புதங்களை நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். இன்னமும் உங்கள் விசுவாசம் குறைவுபட்டதாய் இருக்கும் என்றால் உங்களை குறித்தும் துக்கப்படுவார்.
என்றும் நீங்கள் கர்த்தரை நம்புவதற்கு பதிலாக வேறு எந்த ஒரு மனிதனையாவது பணத்தையாவது அல்லது வேறு ஒரு காரியத்தை நீங்கள் நம்பிக் கொண்டிருப்பீர்கள் என்றால் இன்று, ஆண்டவரே நான் இவைகள் எல்லாவற்றையும் விட உண்மை விசுவாசிக்கிறேன் உம்மை நம்புகிறேன் உம்மை நேசிப்பேன் என்று சொல்வோமா?
‭ஆதியாகமம் 15:17
[17] சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.
……………….
இங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா தேவன் ஆபிராமோடு ஒரு உடன்படிக்கை செய்யும்படியாக தீர்மானம் செய்து அக்கால வழக்கத்தின்படி மூன்று வயது கடாரியையும் மூன்று வயது வெள்ளாட்டையும் மூன்று வயது ஆட்டுக்கடாவையும் பாதி பாதியாக துண்டித்து இரண்டையும் ஒவ்வொரு பக்கமாக வைத்து ஆபிராம் தேவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். அக்கினியும் ஜ்வாலையும் இயேசு கிறிஸ்துவை குறித்து பேசுகிறது. அக்கினி என்று சொல்லும் பொழுது வரப்போகிற நியாய தீர்ப்பை குறிக்கிறது. ஒளியானது அவரே உலகின் ஒளி என்பதை வெளிப்படுத்துகிறது.
‭ஆதியாகமம் 15:18-21
[18] அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், [19] கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், [20] ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், [21] எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
………………
இப்பொழுது தேவன் ஆபிராமுக்கு வாக்குறுதி கொடுக்கும் தேசத்தின் எல்லைகளை குறித்து காட்டுகிறார். இதற்கிடையில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு ஆபிராம் என்ன செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்?? எதுவும் இல்லை. அவர் தேவனை விசுவாசித்தார் நீங்களும் உங்களுக்காக அவர் செய்த எல்லாவற்றையும் விசுவாசித்தால் கடவுள் உங்களையும் இரட்சிப்பார் அருமையான சகோதரனை சகோதரியே நீங்களும் தேவனை விசுவாசிக்கும் பொழுது தமது கிருபையினாலே அவர் உங்களை ரட்சிக்கிறார் உங்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவை மரத்திலே செய்து முடித்ததை நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றால் அந்த விசுவாசத்தின் பலனை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்றும் நிச்சயம் அனுபவிப்பீர்கள்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top