ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 12:10 – 13:18
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 12:10 – 13:18
நிகழ்ச்சி எண்: 0031

வாசியுங்கள்

அருமையானவர்களே இன்று நாம் ஆதியாகமம் 12 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனம் முதல் 13 ஆம் அதிகாரம் 18 ஆம் வசனம் வரை சிந்திக்க போகிறோம்.
வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 12:10
[10] அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
……………..

ஆபிராம் இப்பொழுது கானான் தேசத்தில் இருக்கிறார். அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட இடம். அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று கர்த்தர் ஆபிராமிடம் கூறவில்லை. ஆனால் அந்த தேசத்திலே ஒரு பஞ்சம் வந்தது. நான் நினைக்கிறேன் ஒரு நாள் காலை தன்னுடைய கூடாரத்தின் தொங்குதிரையை விளக்கி அவர் வெளியே எட்டிப் பார்த்த பொழுது மக்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாய் போய்க்கொண்டிருந்திருப்பார்கள். உடனே சாராயைப் பார்த்து – சாராய் அங்கே பார் எல்லாரும் எகிப்துக்கு போகிறார்கள் இங்கே ஒரு பஞ்சம் இருக்கிறது வர வர இது மோசமாகிக் கொண்டிருக்கிறது எனவே நாமும் அங்கே எகிப்துக்கு போவது நல்லது என்று நினைக்கிறேன் – என்று சொல்லி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக சாராயும் சரி நான் உங்கள் மனைவி நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ நான் அதற்கு கீழ்படிக்கிறேன் நானும் வருகிறேன் போகலாம் என்று கூறி இருப்பாள். சில நாட்களுக்கு பிறகு வடக்கு புறத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் பிரயாணிகளிடத்திலே ஆபிராம் பேசியிருக்க வேண்டும். அவர்கள் பஞ்சம் வரவர கொடூரமாய் இருக்கிறது என்பதை தெரிவித்து இருக்க வேண்டும். ஒரு நாள் மாலையில் சாராயும் பார்த்து சரி நாமும் எதிர்த்து தேசத்திற்கு புறப்பட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன் எல்லாவற்றையும் நாம் ஆயத்தம் செய்வோம் என்று கூறி இருக்க வேண்டும். விளைவாக ஆபிரகாமும் சாராயும் இப்பொழுது எகிப்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சம் வந்த காலத்தில் நீ எகிப்துக்கு போ என்று கர்த்தர் ஆபிராமோடு கூறவில்லை. இதை நாம் கவனிக்க வேண்டும். கடைசி முறை தேவன் அவருக்கு காட்சியளித்த பொழுது ஆபிராமே இதுதான் நான் சொன்ன தேசம் இந்த தேசத்தைத்தான் நான் உனக்கு கொடுக்கப் போறேன் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் இங்கே நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் கவனியுங்கள் – ஆபிராம் தேவனை நம்பவில்லை. அவர் எகிப்து தேசத்திற்கு புறப்பட்டு போனார். வேத புத்தகத்தில் எகிப்து என்பது உலகத்தின் ஒரு அடையாளமாக அல்லது நிழலாக இருக்கிறது என்று சொல்லலாம். வேதாகமம் முழுவதும் நீங்கள் இதைப் பார்க்கலாம். இந்த காலத்தில் அங்கே சென்று பார்த்தவர்களும் அது உலகம் என்பதற்கு ஒரு அடையாளமாகவே இருக்கிறது என்பதை கூறுகிறார்கள். ஆனால் கானன் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஆபிராம் இப்பொழுது எகிப்து தேசத்திற்கு புறப்பட்டு போகிறார். பிரியமான சகோதரனே சகோதரியே இன்றைக்கும் உலகம் கிறிஸ்துவை அறிந்தவர்களையும் தன் பக்கம் இழுக்கும் விதம் மிக ஆச்சரியமானதாய் இருக்கிறது. அவர்களில் பலர் சாக்கு போக்குகளை சொல்கிறார்கள். தாங்கள் செய்யும் காரியங்களை நியாயப்படுத்துகிறார்கள். நாங்கள் திங்கட்கிழமை காலை அதிகாலமே வேலைக்குச் செல்ல வேண்டும். எனவே இரவு ஆராதனைக்கு வர முடியாது, ஜெபக்கூட்டத்திற்கு வர முடியாது, என்று சாக்க போக்க சொல்கிறார்கள்.‌ என் பிள்ளைக்கு பரீட்சை வருகிறது எனவே அவன் வாலிபர் கூட்டத்திற்கு வரமாட்டான் என்று கூறுகிறார்கள். எல்லாருமே திங்கள்கிழமை காலையிலேயே வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது உண்மைதான் ஆனால் ஞாயிறு ஆராதனைகளிலே வந்து பங்கு பெறுவதற்கு சாக்கு போக்கு சொல்லுகிற அதே மனிதர்கள் வார நாட்களிலே ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கே இசை மற்றும் நீண்ட உரையாடல்களுடன் கூடிய ஒரு சலிப்பூட்டும் நிகழ்ச்சியிலே வெகு நேரம் உட்கார்ந்திருப்பார்கள். அப்பொழுது அடுத்த நாள் காலை வேலைக்கு எழந்து செல்வதை பற்றி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படித்தான் உலகம் இன்று அனேக கிறிஸ்தவர்களை தன் வசப்படுத்தும் விதமும் இருக்கிறது. கிறிஸ்துவுக்காக தியாகம் பண்ண வேண்டிய ஒவ்வொரு காரியத்திற்காகவும் அவர்கள் சொல்லுகிற சாக்கு போக்கு வேதனையானதாக இருக்கிறது.
அன்று எகிப்திற்கு சென்று கொண்டிருந்த ஆபிராமை நீங்கள் வழியிலே சந்தித்து சற்று நில்லுங்கள் ஆபிராம் நீங்கள் தவறான திசையில் போய்க்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் இந்த தேசத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் அதற்கு ஆபிராம் மிகச்சிறந்த காரணங்களை கொடுத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.‌ ஒருவேளை அவர் உங்களை பார்த்து, இதோ பாருங்கள் என் ஆடுகள் எல்லாம் மிகவும் மெலிந்து விட்டன அவற்றிற்கு இங்கே மேய்ச்சல் நிலம் எதுவும் இல்லை. ஆனால் எகிப்தில் ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருப்பதால் நாங்கள் அங்கே போகிறோம் என்று சொல்லி இருக்கக்கூடும். ஆம் அதன்படியே அவர்கள் அங்கே சென்று விட்டார்கள்.
இருந்தாலும் அங்கே சென்றவுடனே அங்கே ஒரு பிரச்சனை எழும்புகிறது அது சாராயைப் பற்றிய பிரச்சனை. ஏனென்றால் அவள் ஒரு அழகான பெண்ணாய் இருந்தாள்.

அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
‭ஆதியாகமம் 12:11-12
[11] அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். [12] எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.
…………………
பிரியமானவர்களே, நீங்கள் வேதத்தை ஆராய்ந்து படிப்பதில் விருப்பமுள்ள ஒருவராய் இருப்பதால் ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சவக்கடலின் வடமேற்கு கரையோரம் உள்ள குகைகளில் பழங்கால சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை சவக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆரம்ப நாட்களிலே விசுவாசமற்ற அறிஞர்கள் வேத புத்தகம் தவறு என்று நிரூபிக்கும் ஏதோ ஒன்று தங்களுக்கு கிடைத்து விட்டதாக நினைத்தார்கள். ஆனால் அதன் பிறகு அந்த விமர்சனங்கள் எவ்வளவு அமைதியாகி விட்டார்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? வேதத்துக்கு முரணான எதையும் அந்த சுருள்களிலிருந்து அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
அந்த சுருள்களில் ஒரு தொகுப்பை மட்டும் விரிக்க முடியவில்லை ஏனென்றால் அவை மிகவும் நைந்து போய் பழமை ஆகிவிட்டது.
அவை மிக நீண்ட காலம் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததால் அதை விரித்தால் சிதறி சிறு சிறு துண்டுகள் ஆகிவிடும் என்ற நிலையிலேயே இருந்தன.
அந்தச் சுருளிலும் லாமேக்கு என்ற ஒரு பெயரை மட்டும் அவர்களால் படிக்க முடிந்தது. அதனால் அவை லாமேக்கு என்ற புத்தகத்தின் ஒரு பகுதி என்றும் வேத புத்தகத்தின் தள்ளுபடி ஆகமங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டது. ஆனால் அது எவ்வளவு தவறான கணிப்பு. இஸ்ரவேல் நாடு அந்த சுருள்களை விலை கொடுத்து வாங்கியது. அங்கே அருங்காட்சியகத்தில் இருந்த நிபுணர்கள் அந்த சுருள்களை ஈரப்படுத்தி மென்மையாக்கி மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக, கவனமாக அவற்றை விரித்தார்கள். அந்த சுருள்களில் ஆதியாகமம் 12, 13, 14 மற்றும் 15 ஆகிய அதிகாரங்கள் இருப்பதை அறிஞர்கள் கண்டறிந்தார்கள். ஆம் அவை வேத புத்தகத்தின் வசனங்களாக இல்லாமல் அந்த வசனங்களுக்கான ஒரு விளக்க உரையாய் இருந்தன. பனிரெண்டாம் அதிகாரத்தை பற்றிய பகுதியில் சாரயின் அழகை பற்றி சொல்லப்பட்டிருந்தது. அவளுடைய அங்க அடையாளங்களை விவரித்து அவள் எவ்வளவு அழகாக இருந்தாள் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளில் அவளைப் பற்றி நாம் வாசிப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
அந்தச் சுருளில் சொல்லப்பட்டிருக்கிற மற்றும் ஒரு காரியமும்
தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ அதுதான் ஆதியாமும் 13 :17ல் நாம் வாசிப்பது போல தேவன் ஆபிராமிடம் நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எவ்வளவோ, அவ்வளவும் அதைச் சுற்றி நட என்று சொன்ன பிறகு அவர் மேற்கொண்ட பயணத்தை பற்றிய விளக்கத்தை தந்திருக்கிறது. அந்த சூழலில் ஆபிராம் எனது பயணத்தை பற்றி தானே விவரிப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தேசத்தின் அழகு மற்றும் வளத்தை பற்றியும் வேத வசனம் கூறி இருப்பதை அது உறுதிப்படுத்துகிறது. அது உண்மையில் ஆபிராமா என்பது நமக்கு தெரியாது ஆனால் ஒரு நேரில் கண்கண்ட சாட்சி விவிலிய பதிவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிப்படுத்தி இருக்கிறது. இன்று இந்த தேசத்தில் செல்லும் அநேகர் அது எப்படி பாலும் தேனும் ஓடுகிற ஒரு தேசம் என்று அழைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஏனென்றால் அந்த நிலத்தில் இன்று காணும் பாழடைந்த நிலைமை ஏற்பட காரணம் என்ன என்பதை உபாகம புத்தகம் நமக்கு தெரிவிக்கிறது. ஆனால் ஆபிராமின் காலத்தில் அது ஒரு மகிமையான தேசமாய் இருந்திருக்கிறது.

இருந்தாலும் அங்கேயும் பஞ்ச காலங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒரு காலத்தில்தான் ஆபிராம் அந்த தேசத்தை விட்டு எகிப்து தேசத்திற்கு சென்றிருக்கிறார்.‌

ஆபிராம் எகிப்தை நெருங்கிய பொழுது தன் மனைவியின் அழகினாலே தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்தார் எனவேதான் சாராயிடம் இவ்வாறு கூறினார்.
ஆதியாகமம் 12:13
[13] ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
……………….
கவனித்தீர்களா? இங்கே ஆபிராம் சாராய் தன்னுடைய சகோதரி என்று சொல்லும்படியாய் கேட்டுக்கொள்கிறார். இதை சற்று பின்னால் நாம் பார்க்கும் பொழுது இது ஒரு அறை போய் என்பதை நாம் புரிந்து கொள்வோம். சில நேரங்களில் முழு பொய்யை விட ஒரு அரைப் பொய் மிகவும் மோசமானது. அது நிச்சயமாக ஏமாற்றும் நோக்கத்தில் சொல்லப்பட்டது. இங்கே ஆபிராமின் பயம் நியாயமானதுதான். ஏனென்றால் பார்வோன் சாராயை சிறை பிடித்து சென்று விட்டான். எஸ்தர் புத்தகத்தின் மூலம் அக்காலத்திலே ஒரு பெண் ஆட்சியாளரின் மனைவி ஆவதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட ஆயத்தக்காலம் இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அந்த ஆயத்த காலத்தின் பொழுதுதான் தேவன் பார்வோனையும் அவன் வீட்டாரையும் மகா வாதையினால் வாதித்தார். அது மட்டுமல்ல, சாராயை அவன் தன் மனைவியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் அவனுக்கு தெரியப்படுத்தினார்.‌

தொடர்ந்து வசனங்கள் 18 முதல் 20 வரை பாருங்கள்.
ஆதியாகமம் 12:18-20
[18] அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? [19] இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான். [20] பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
……………………..
இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு முக்கியமான நாசத்தியம் தேவன் ஆபிராம் சாராய இவர்களின் வாழ்க்கையிலே வெளியே இருநது செயல்படுகிறார் ஆனால் அவர்கள் எகிப்து தேசத்தில் இருந்த காலத்தில் தேவன் அவர்களுக்கு தன்னை காண்பிக்கவில்லை. அதாவது ஆபிராமோடு தேவன் தொடர்பு கொண்டு பேசவில்லை.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதர சகோதரிகளை நாம் தேவனுடைய திட்டத்திற்கு வெளியே செல்லும் பொழுது ஒருவேளை அற்புதமாய் ஆச்சரியமாய் தேவன் நம்மை பாதுகாத்துக் கொள்வார். ஆனால் அவர் நம்மோடு தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பை நாம் இழந்து போக வாய்ப்பு இருக்கிறது. நான் எவ்வளவோ வேத வசனங்களை வாசிக்கிறேன், ஆனால் கர்த்தர் என்னோடு பேசியது போல தெரியவில்லையே என்று கவலையோடு இருப்பீர்கள் என்றால் உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு பகுதியிலே நீங்கள் தேவனை விட்டு தூரமாய் சென்று விட்டீர்களா?…..
தொடர்ந்து 13 ஆம் அதிகாரத்தை நாம் பார்ப்போம். இந்த அதிகாரத்தில் லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்துபோவதை பார்க்கிறோம். மேலும் தேவன் மீண்டும் ஆபிராமை சந்தித்து அவர் ஏற்கனவே கூறிய தனது வாக்குறுதியை உறுதிப்படுத்துகிறார்.

13ம் அதிகாரத்தில் நாம் பார்ப்பது போல ஆபிராம் குடும்பமும் லோத்துவின் குடும்பமும் எகிப்து தேசத்தை விட்டு மீண்டும் கானான் தேசத்திற்குள் வருகிறார்கள். இப்பொழுது லோத்து ஆபிராமை விட்டு பிரிந்து சோதோம் பட்டினத்தை நோக்கி போகிறார். அதன் பின் மூன்றாவது முறையாக தேவன் ஆபிராமுக்கு தரிசனம் ஆகிறார். நான் ஏற்கனவே கூறியது போல ஆபிராம் எகிப்து தேசத்தில் தங்கி இருந்த காலங்களில் எல்லாம் தேவன் ஆபிராமோடு தொடர்பு கொள்ளவில்லை. மேலும் ஆபிராம் லோத்தோடு கூட இணைந்திருந்த இந்த காலத்திலும் தேவன் ஆபிராமுக்கு தரிசனமாகவில்லை. ஆபிராம் எகிப்தை விட்டு மீண்டும் கானன் தேசத்திற்குள் வந்த பின் லோத்தும் அவன் குடும்பமும் பிரிந்து சென்ற பின் தேவன் ஆபிராமுக்கு காட்சி கொடுக்கிறார்.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 13:1-2
[1] ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். [2] ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.
……………………
இந்த வசனங்களை நாம் வாசிக்கும் பொழுது நாம் புரிந்து கொள்வது என்ன? அந்த கால உலக செல்வந்தர்களில் ஒருவராய் ஆபிராம் இருந்திருக்கிறார்.
வசனம் மூன்று
ஆதியாகமம் 13:3
[3] அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
………………….
இப்பொழுது ஆபிராம் எருசலேம் பட்டினத்திற்கும் வடக்கு சென்றார்.‌ தெற்கே வரும்பொழுது எப்பிரோன் மட்டும் வந்தார் இப்பொழுது அவர் எருசலேமிற்கு வடக்கே பெத்தேல் என்னும் இடத்திற்கு வருகிறார்.
ஆதியாகமம் 13:4
[4] தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
………………….
ஆபிராம் தன் வாழ்க்கையில் தட்டு தடுமாறி விழுந்தாலும், மீண்டும் தேவனிடத்தில் வருகிறார்.‌ இயேசு கூறிய தூரம் போன இளைய குமாரன் அவன் அப்பாவினிடத்தில் திரும்பி வந்தது போல, தேவனிடத்திலே திரும்ப விரும்பும் எந்த ஒரு ஆணையும் அல்லது ஒரு பெண்ணையும் போல ஆபிராம் தேவனிடத்தில் திரும்பி வருகிறார்.

ஆதியாகமம் 13:5
[5] ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
…………………
எகிப்தில் இருந்த காலத்தில் லோத்தும் தன் செல்வ செழிப்பில் வளர்ச்சி கண்டது போல தெரிகிறது.

அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
ஆதியாகமம் 13:6-7
[6] அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. [7] ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
…………………..
கர்த்தருடைய வார்த்தை நம்மோடு கூட பேச நாம் அனுமதிப்போம் என்றால் கர்த்தருடைய வார்த்தை மிகவும் அற்புதமான ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்வோம். ஆபிராம் எகிப்து தேசத்தில் இருந்த பொழுது பெற்றுக்கொண்ட இரண்டு காரியங்கள் அவருக்கு மிகுந்த வேதனையை உண்டு பண்ணியது என்பதை நாம் கவனிக்க முடியும். முதலாவதாக ஆபிராம் பெற்றுக் கொண்ட செல்வ செழிப்பு, இரண்டாவதாக அவர்கள் குடும்பத்தோடு ஆபிராம் சேர்த்துக் கொண்ட ஆகார் எனும் எகிப்தின் அடிமைப்பெண். இந்த ஆகாரை குறித்து நாம் சற்று பின்னால் பார்ப்போம். இப்பொழுது ஆபிராம் பெற்று இருந்த செல்வ செழிப்புகளை குறித்து பார்ப்போம். இதன் விளைவாக இப்பொழுது லோத்து ஆபிராமை விட்டு பிரிந்து செல்ல வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் இருவரின் வேலை ஆட்களுக்குள் பிரச்சனை வந்துவிட்டது.
நான் வாசித்த அந்த வசனத்தில் கானானியரும் பெரிசியரும் அங்கே காணான் தேசத்தில் குடியிருந்தார்கள் என்று வாசித்ததை கவனித்தீர்களா? இப்பொழுது ஆபிராமின் மேய்ப்பர்களுக்கும் லோத்துவின் மேய்ப்பர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. நிச்சயமாய் அதன் விளைவாக ஆபிராமுக்கும் லோத்துக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகி இருக்கும்.
கானானியர் ஒருவேளை பெரிசியரைப் பார்த்து அவர்கள் இருவரையும் பார்த்தாயா இப்பொழுது சண்டை இட்டுக் கொள்கிறார்கள். இதற்கு முன்பு கானான் வந்த பொழுது உண்மையான கடவுளை தொழுது கொள்ளும் படியாய் அவருக்கு பலிபீடங்களை எல்லாம் கட்டினார்கள், ஆபிராமை நாம் அவ்வளவு உயர்வான ஒரு மனிதனாய் நினைத்தோம். ஆபிராம் உண்மை உள்ளவராய் இருந்தார் எல்லாவற்றிலும் நேர்மையாக இருந்தார் அவரை உயர்ந்த மனிதனாக நாம் நோக்கி பார்த்தோம் ஆனால் இப்பொழுது அவர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கிற சச்சரவை பாருங்கள் என்று பேசியிருப்பார்கள். இந்த முறை கானானுக்குள் வந்த ஆபிராமையும் லோத்தையும் குறித்து கானானியர்களும் பெரிசியர்களும் உயர்வான எண்ணம் கொள்ளவில்லை.
இன்றைக்கும் காணப்படுகிற பல திருச்சபை பிரிவுகள் வெவ்வேறு பெயர்களை கொண்டதாய் இருந்தாலும், அந்த திருச்சபைகளுக்குள்ளும் உண்மையான சகோதர அன்பு இல்லாமல் சண்டைகளும் சச்சரவுகளும் வழக்குகளும் இருப்பதை பார்க்கிறீர்கள். சபைகளுக்கு உள்ளே இப்படிப்பட்ட சண்டை சச்சரவுகள் இருக்கும் பொழுது இதைக் குறித்து வெளியே உள்ள மக்களும் அறிந்து கொள்ளுகிறார்கள். இதனால் தான் பலர் கிறிஸ்துவை குறித்து சிறந்த முறையில் அறிந்திருந்தாலும் கேள்விப்பட்டிருந்தாலும் திருச்சபையின் அங்கங்களாக இணைந்து கொள்ள அவர்கள் முன் வருகிறது இல்லை. திருச்சபைக்கு வெளியே சண்டை வரலாம். ஆனால் சண்டை செய்வதற்காக நான் திருச்சபைக்குள் செல்ல வேண்டியதில்லை என்று எண்ணுகிறார்கள். இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பார்த்தோ அல்லது திருச்சபை பார்த்தோ. நீங்கள் அடிப்படை வாதிகளாக இருந்து ஒரு சபையை உருவாக்கினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று சொல்லவே இல்லை. இதற்கு மாறாக இயேசு என்ன கூறியிருக்கிறார் என்பதை பாருங்கள்.
யோவான் 13:35
[35] நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
………….,…………
பிரியமானவர்களே திருச்சபையில் நீங்கள் சண்டையிட்டுக் கொள்வதை வெளியே இருக்கிற தேவனை அறியாத மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து போக வேண்டாம். உங்கள் சண்டைகளினாலே நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தை தூஷிக்கிறீர்கள் என்பதை என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
பாஸ்கர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான், ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைக் குறித்து அவருடைய மனைவி விசுவாசிகளான தங்கள் உறவினர்களிடத்திலே பல நேரம் வேதனைப்பட்டு இருக்கிறார்கள்.‌ இதற்கு காரணம் அவர்கள் வீட்டின் உள்ளே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி தான். பாஸ்கருடைய சகோதரி இருவர் அவர்களோடு கூட தங்கி இருந்தார்கள்.‌ அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு சபைகளுக்கு சென்று வந்தர்கள். பொதுவாக ஞாயிறு இரவு நேரங்களில் இந்த இரண்டு சகோதரிகளும் தங்கள் தங்கள் சபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டைகளைப் பற்றி விமர்சனம் செய்து தங்கள் சொந்த கருத்துக்களை சொல்வார்கள் அல்லது தங்கள் போதகர்களைக் குறித்து குறை சொல்வார்கள். இதையெல்லாம் தொடர்ந்து கவனித்த பாஸ்கருக்கு – திருச்சபையில் நன்மை உண்டு – திருச்சபையின் தலையாகிய இயேசு கிறிஸ்துவை தன் வாழ்க்கையின் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க முடியவில்லை.
பிரியமானவர்களே, இது இவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல இன்று பல குடும்பங்களிலே நல்ல மனிதர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் திருச்சபைகளுக்குள் நடைபெறும் சண்டைகள்தான். இந்த இடத்தில் ஒரு வேத வசனத்தை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.
அன்பு இல்லாதவன் தேவனை அறியான்.
………………………
மற்றவர்களை மன்னிக்க இயலாதவன் தேவனிடத்தில் இருந்து உண்மையான மன்னிப்பையும் புது வாழ்க்கையையும் பெற்றுக் கொள்ளவில்லை. பல திருச்சபைகளின் இப்படிப்பட்ட அவல நிலையினாலே பலர் ஆராதனைகளுக்கு வந்து பங்கு பெறுவதில்லை. இன்னும் சிலர் வேறு சபைகளை தேடி செல்கிறார்கள்.‌ இன்று திருச்சபைகளை சுற்றி இருக்கும் அனைகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இப்படிப்பட்ட பரிதாபமான ஒரு நிலை தான். ஒவ்வொரு சபையிலும் விசுவாசிகள் இணைந்து இப்படிப்பட்ட நிலை மாற வேண்டும் என்பதற்காக கருத்தோடு ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.‌ இரண்டு பேர் மூன்று பேர் இணைந்து ஜெபித்ததினாலே பல தேசங்களிலே எழுப்புதல் ஏற்பட்டிருக்கிறது.‌ அருமையான சகோதரனை சகோதரியே இதை குறித்த பாரத்தை உங்கள் உள்ளத்தில் கர்த்தர் கொடுப்பார் என்றால் என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒருவேளை உங்கள் திருச்சபையின் பிரச்சனைகளுக்கு காரணமாய் இருப்பீர்கள் என்றால் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து மனம்திரும்புங்கள். உங்களைச் சுற்றி இருக்கிற அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் போவதற்கு நீங்கள் தடையாய் இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். தேவன் நினைத்தால் உங்களை அந்த இடத்தில் இருந்து எடுத்து போட முடியும் இன்னமும் அவர் அதை செய்யாமல் இருக்கிறார் என்றால் நீங்கள் மனம் திரும்ப வேண்டும் என்று அவர் காத்திருக்கிறார்..
தொடர்ந்து
‭ஆதியாகமம் 13:8-9
[8] ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். [9] இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
………………….
இங்கே ஆபிராம் முன்னின்று இந்த பிரிவை எடுத்துச் சொல்கிறார். ஆம் பெரிய மனம் படைத்தவர்களே இவ்வாறு கூற முடியும். பிரியமான சகோதரனே சகோதரியே கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்ற வாசகத்தை ஒரு உணவு சாலையில் பார்த்த பொழுது இந்த வேத பகுதி தான் எனக்கும் நினைவிற்கு வந்தது.
‭ஆதியாகமம் 13:10
[10] அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
…………………
அந்த காலகட்டத்தில் அந்த பகுதி அத்தனை அழகான ஒரு பகுதியாக இருந்தது. இது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஆபிராமுடன் அந்த நிலத்திலே லோத்து தங்கியிருந்த காலம் முழுவதிலும் அனேகமாக ஒவ்வொரு இரவும் அவர் தனது கூடாரத்தின் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்து தன் மனைவியின் இடத்திலே அங்கே கீழே இருக்கும் அந்த இடத்தை பார்த்தாயா? அது எவ்வளவு அழகாக இருக்கிறதல்லவா என்று சொல்லி இருந்திருப்பார். காலையில் அவர் எழுந்திருக்கும் பொழுது அடடா கீழே பார்ப்பதற்கு எவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது என்று கூறி இருப்பார் எப்பொழுதுமே இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போலத்தான் தோன்றும் .ஒரு முடிவை எடுத்துச் செல்ல வேண்டிய நாள் வந்தபோது லோத்து எந்த திசையில் சென்றார் என்பது உங்களுக்கு தெரியும்.‌
அருமையான சகோதரனே சகோதரியே, எந்த மனிதனும் திடீரென்று எந்த ஒரு காரியத்திலும் வீழ்ச்சி அடைவதில்லை. அது எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களை எடுத்து தான் நடக்கிறது.‌ முதலாவது உங்கள் கண்கள் அந்த காட்சியை விரும்பி பார்க்கிறது. பின்னர் அதை நோக்கி நீங்கள் கூடாரம் அமைக்கிறீர்கள் அதாவது அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறீர்கள். அதுவே ஆரம்பம். லோத்துவும் தன் கண்களை ஏறெடுத்து அந்த சமவெளியை பார்க்கிறார். பின் அந்த திசையிலேயே சென்றார். அதுவே அவர் தன் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய ஒரு தவறு என்று சொல்லலாம்.‌
ஆனால் ஆரம்ப நாட்களில் லோத்து அதை அறிந்திருக்கவில்லை.‌
‭ஆதியாகமம் 13:13
[13] சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகாபாவிகளுமாய் இருந்தார்கள்.
…………..
ஆம் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது போலவே அந்த ஜனங்கள் இருந்தார்கள். அங்கே புறப்பட்டுச் சென்ற லோத்துவிற்கும் அவன் மனைவிக்கும் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கப் போகிறோம்.
‭ஆதியாகமம் 13:14
[14] லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
……………………
இங்கே நாம் பார்ப்பது போல லோத்து ஆபிராமை விட்டு பிரிந்த பின் கர்த்தர் மூன்றாம் முறையாக ஆபிராமுக்கு தரிசனம் ஆகிறார்.
இங்கே ஆபிராமுக்கு கொடுக்கப்படுகிற கட்டளை என்ன? நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கையும் தெற்கையும் கிழக்கையும் மேற்கையும் நோக்கி பார். இந்த இடத்தைத்தான் தேவன் ஆபிராமுக்கு கொடுக்கப் போகிறார். ஆபிரகமுக்கு மட்டுமல்ல, அதற்கு பின்னர் மற்ற விசுவாச தகப்பன்மார்களுக்கும் தொடர்ந்து காட்சியளித்த பொழுது இந்த இடத்தை பற்றிய எல்லை கோடுகளை வகுத்தார். தேவன் என்றும் இந்த காரியத்தை குறித்து மிகவும் தெளிவாய் இருக்கிறார்.

நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையானவர்களே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் எவ்வளவு உண்மையான ஒரு இடமோ, அதுபோல பரலோகமும் ஒரு உண்மையான இடமாகும். அது எங்கோ இருக்கும் ஒரு அழகான தீவு அல்ல .அது மிகவும் தெளிவான ஒரு இடம் அதை பற்றி தேவனுடைய வார்த்தை மிகவும் குறிப்பிட்டு கூறுகிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன் அதை மிகத் தெளிவாக நமக்கு விவரித்து இருக்கிறார். அவர் அதைச் சுற்றி எல்லைகளை வகுக்கிறார். அதைப்பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். தேவன் கற்பனையான விஷயங்களை கையாளுவது இல்லை மாறாக உண்மையான மற்றும் நடைபெறப் போகிற காரியங்களையே அவர் கையாளுகிறார்.‌
‭ஆதியாகமம் 13:15-16
[15] நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, [16] உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
…………………
தேவன் இந்த மனிதனுக்காக என்ன செய்கிறார் பாருங்கள்.‌ இந்த இடம் ஆபிராமுக்கு என்று முன்குறிக்கிறார்.‌ அது மட்டுமல்ல அவனுடைய சந்ததி எண்ணில் அடங்காத இருக்கும் என்பதையும் வாக்கு பண்ணுகிறார். அந்த வாக்குறுதி உண்மையானதால் ஆபிராமின் சந்ததியினர் இன்றும் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வசன 17.
‭ஆதியாகமம் 13:17
[17] நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
……….,,…
சவக்கடல் அருகே குகையில் எடுக்கப்பட்ட தோல் சுருள் ஒன்றில் ஆதியாகமப் புத்தகத்தின் இந்த பகுதி கூறப்பட்டிருக்கிறது.‌ அது ஆபிரகாமே அந்தப் பகுதியை குறித்து எழுதுவது போல எழுதப்பட்டிருக்கிறது. அந்த குறிப்பிட்ட காலத்தில் அது அப்படிப்பட்ட அற்புதமான ஒரு இடமாய் இருந்திருக்கிறது.
‭ஆதியாகமம் 13:18
[18] அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
…………………
ஆபிராம் எங்கு சென்றாலும் ஒரு பலிபீடத்தை கட்டுகிற சிறந்த நபராய் இருந்தார். இதனால், ஆபிராம் எங்கெங்கே சென்று இருந்தார் என்பதை உங்களால் எப்பொழுதும் சொல்ல முடியும். மனிதன் நிலவில் தன் கால் தடத்தை விட்டு வந்தான். ஒரு கொடியையும் நாங்கள் அமைதிக்காக வந்திருக்கிறோம் என்ற சிறிய வாசகத்தை விட்டு வந்திருக்கிறார்கள் ஆனால் தேவனுடைய வார்த்தையை வைத்து விட்டு வரவில்லை. ஆபிரகாமின் சிந்தனைக்கும் நாம் இன்று வாழும் காலத்தின் சிந்தனைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. மம்ரே என்பதற்கு ஒரு பொருள் செழுமை என்பதாகும். மற்றும் எபிரோன் என்றால் ஐக்கியம் என்று பொருளாகும். தங்குவதற்கு அது ஒரு அற்புதமான இடம். இன்றைய காலத்தில் ஆபிராம் இருந்த மரம் மற்றும் அங்கிருக்கும் கிணறு எங்கே இருக்கிறது என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கண்டறிய முடியும். செழுமையும் தேவனோடு ஐக்கியமும் உள்ள இடத்திலே இருப்பது ஒரு சிறந்த காரியம் இதுதான் ஆபிராமின் வீடாக இருந்திருக்கிறது அங்கேதான் அவர் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டார்.
இந்த வேத பகுதியில் நாம் பார்த்தது போல ஆபிராமம் லோத்தும் செய்த தவறுகளை நம் வாழ்க்கையிலே செய்து விடாதபடி கவனமாய் இருப்போம்.
எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை மட்டும் நம்பி அவருடைய விருப்பத்தை மட்டும் நிறைவேற்றுவோம். கர்த்தருடைய கிருபை உங்களோடு உங்கள் குடும்பத்தோடும் தங்கி இருப்பதாக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top