ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 11:4 - 32
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 11:4 – 32
நிகழ்ச்சி எண்: 0029

வாசியுங்கள்

அருமையானவர்களே கடந்த நிகழ்ச்சியில் நோவாவின் சந்ததியினர் எப்படி பெருகினார்கள் என்றும், சிநெயார் சமவெளியில் வந்து அவர்கள் குடியேறினார்கள் என்றும் வாசித்தோம்.
இன்று ஆதியாகமம் 11 ஆம் அதிகாரம் நான்கு முதல் 32ஆம் வசனம் வரை சிந்திப்போம்.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 11:4
[4] பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
………..
கவனித்தீர்களா? நாம் சிதறி போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் கோபுரத்தையும் கட்டி நமக்குப் பேர் உண்டாக பண்ணுவோம் என்று சொல்கிறார்கள். எதற்காக இதை செய்யப் போகிறார்கள்? நாம் பூமியின் மேல் எங்கும் சிதறி போகாதபடிக்கு இப்படி செய்வோம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு என்று சொல்லி தவறான ஒரு நோக்கத்தோடு, தவறான காரணத்திற்காக கோபுரத்தை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் உள்நோக்கம் என்ன?? நினைத்த நேரம் எல்லாம் அங்கே ஒன்று கூடுவதற்காக இதை செய்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த நாட்களிலேயும் பலவிதமான ஐக்கியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள்கூட்ட மக்கள் ஒன்று சேர்ந்து செயல்பட அரங்கங்களை கட்டுகிறார்கள் இல்லையா?? அதே போல மக்கள் இணைந்து கூடும் ஒரு இடமாக அவர்கள் இதை திட்டமிட்டு இருக்கலாம்.
பாபேல் கோபுரம் ஒரு ziggurat அமைப்பைக் கொண்டதாய் இருந்தது என்று சொல்லப்படுகிறது இத்தகைய ஜிகுராட்களின் சிதைவடைந்த கட்டிடங்கள் பல இருக்கின்றன.‌ ஆபிரகாம் வாழ்ந்து வந்த ஊர் என்ற இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த ஜிகுராட்டின் படங்கள் நமக்கு கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றன.‌ அது செங்கற்களால் மிகவும் உறுதியாக கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அதைச் சுற்றி உச்சிக்குச் செல்வதற்கு ஒரு நடைபாதை இருந்தது. அதின் உச்சியில் ஒரு பலிபீடம் இருந்ததாக தெரிகிறது. அங்கு சில குறிப்பிட்ட சமயங்களில் மனித பலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் குழந்தைகளை நன்றாக சூடேற்றப்பட்ட உலோக சிலைக்குள் போட்டு பலியிட்டனர். பிந்திய வரலாற்றிலே இவை அனைத்தும் இந்த ஜிகுரட்டுடன் தொடர்புடையதாக இருந்தன.
ஆனால் அது கட்டப்பட்ட காலத்தில் பாபேல் கோபுரம் என்பது சர்வ பலமுள்ள தேவனுக்கு எதிரான மனு குலத்தின் கிளர்ச்சியை குறிப்பதாய் இருந்தது. இந்த இயக்கத்திற்கு நிம்ரோத் தலைமை தாங்கியதாக நமக்கு தெரிகிறது.‌ அவனே பாபேல் நகரத்தை கட்டியவன். அதேபோல அவனே பாபேல் கோபுரத்தையும் கட்டி இருக்க வேண்டும்.
தேவனுக்கு எதிராக ஒரு உலக பேரரசை உருவாக்குவதற்கான ஒரு இடமாக அது அமைய இருந்தது..

இப்பொழுது நாம் பாபேல் கோபுரம் எதுவாக இருக்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். பெருவெள்ளம் வரும்பொழுது அதில் ஏறி தப்பிக் கொள்வதற்காக அல்லது தஞ்சம் அடைவதற்கான ஒரு இடமாக அது கட்டப்பட்டு இருக்கலாம் என்று சில விளக்க உரையாளர்கள் கூறுகிறார்கள். அது ஒரு முதிர்ச்சியற்ற விளக்கமாகவே இருக்கிறது. ஆனால் உண்மையில் அது அப்படி அந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை. ஓல்கா நதி பொங்கி வழிந்தால் லெனின் கல்லறை தஞ்சம் புகும் இடமாக இருக்கப் போவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் இந்த கோபுரம் தேவனுக்கு எதிரான மனிதனின் அகங்காரத்தையும், சவாலையும் கிளர்ச்சியான மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது. அருமையானவர்களே தேவன் மனிதனுக்கு கொடுத்த கட்டளை என்ன?? நீங்கள் பழகி பெருகி பூமியை நிரப்பி அதை கீழ்ப்படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். அதாவது மனிதன் பூமி எங்கும் பரவி பூமியை நிரப்ப வேண்டும் என்று தேவன் சொல்லியிருந்தார். ஆனால் மனிதனோ அப்படியெல்லாம் நாங்கள் செய்ய முடியாது நாங்கள் சிதறி போகவே மாட்டோம், நாங்கள் ஒன்று சேர்வோம் உம்முடன் எங்கள் தொடர்பை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று சொல்வது போல பாபேல் கோபுரம் தேவனுக்கு எதிரானதாக இருந்தது.

அடுத்ததாக பாபேல் கோபுரம் ஒரு சமய சடங்கின் அடையாளமாய் இருக்கிறது. அது மேல் நோக்கிச் செல்கிற ஒரு கோபுரமாக இருக்கிறது அந்த பகுதியிலே உள்ள யூப்ரடீஸ் டைகிரீஸ் நதி சமவெளியில் இப்படிப்பட்ட பல கோபுரங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த இடங்களில் தான் மக்கள் தங்களை உருவாக்கியவரை தொழுது கொள்ளாமல் தங்களுக்கென்று சில காரியங்களை உருவாக்கி அதை தொழுது கொண்டு இருந்தார்கள். அதாவது சிருஷ்டித்தவரை தொழுது கொள்ளாமல் தேவன் சிருஷ்டித்தவைகளை தொழுது கொண்டிருந்தார்கள். சில கோபுரங்கள் வட்ட வடிவத்திலும் சில கோபுரங்கள் சதுர வடிவத்திலும் இருந்தது. ஆனால் எல்லா கோபுரங்களிலேயும் மேல் நோக்கி செல்வதற்கான பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவைகளின் மேலே ஏறிச் சென்ற மக்கள் தேவன் உருவாக்கிய சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வணங்கினார்கள். சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் அவர்கள் கண்கள் காணும் வரை வெள்ளம் வராது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளத்தை அனுப்பிய கடவுள் தரக்குறைவானவர் அல்லது கொடூரமானவர் என்று நினைத்தார்கள். தொடர்ந்து பாபேல் கோபுரத்தை குறித்து தேவன் என்ன சொல்கிறார் என்பதையும் பார்ப்போம்.
ஆதியாகமம் 11:5
[5] மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
[6] அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
………………..
இது தேவனுடைய உன்னதமான ஒரு அறிக்கை என்று நாம் சொல்லலாம். அங்கே மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசிக் கொண்டிருந்ததால் அவர்களுக்குள் பெரிய மொழி தடை எதுவும் இருக்கவில்லை அவர்களால் ஒன்று கூடி தங்கள் அறிவையும் வளங்களையும் ஒருங்கிணைக்க முடிந்தது. இப்பொழுது அவர்கள் செய்ய நினைக்கிறது ஒன்றிலும் அவர்களுக்கு தடை இருக்காது. பெருவெள்ளம்பெருவளம் ஏற்பட்ட பின்னரும் கூட மனிதன் வீழ்ச்சியடைந்த சுபாவத்தையே கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் முற்றிலும் சீர் கெட்டுப் போய்விட்டான் என்பதையும் இங்கே நாம் பார்க்கிறோம் தேவன் இந்த மீறுதலை அலட்சியப்படுத்த முடியாது ஏனென்றால் இது அவருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும்.
தேவன் தண்டித்திருந்தும் அந்த தண்டனையின் கருத்தை உணராமல் மேலும் மேலும் தேவனுக்கு விரோதமான செயல்களை செய்து கொண்டிருக்கிற அவர்களை குறித்து தேவன் பார்த்தும் பாராதவர் போல இருப்பதில்லை.
இப்பொழுது தேவனே ஒரு பாதுகாவலன
சுவரை எழுப்பப் போகிறார். அவரே ஒரு தடையை அங்கே உண்டாக்கப் போகிறார். இந்த காரியம் அன்று தேவையானதாக இருந்தது. ஏனென்றால் மனிதன் எதையும் செய்யக்கூடிய வலிமை பெற்றவனாக காணப்படுகிறான். அவனும் சந்திரனுக்கு போக முடியும், அவன் வானத்திலே ஒரு பறவை போல விமானத்தில் பறக்க முடியும். பூமியை விட்டு ஐந்து மைல்களுக்கு மேலே பறக்கும் மனிதருக்கும் அருமையான ஆகாரம் கொடுக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாரிடத்தில் இதைக் கூறினாலும் அவர்களால் இதை நம்ப முடியாது. ஆனால் இக்காலத்தில் வாழுகிற மனிதனும் நம்ப முடியாத காரியங்களை வரப்போகும் காலத்திலே மனிதன் செய்யப் போகிறான் ஏனென்றால் அவ்வளவு திறமையாக தேவன் மனிதனை படைத்திருக்கிறார். ஒரே மொழி பேசுகிறவனாக மனிதன் கூடி வரும் பொழுது தேவனுக்கு விரோதமாக அவன் எதையெல்லாம் செய்ய முடியும் என்று பார்த்தோம். தொடர்ந்து தேவன் என்ன சொல்கிறார் பாருங்கள்.
ஆதியாகமம் 11:7-9
[7] நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். [8] அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். [9] பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்.
……………………..
இப்பொழுது ஜனங்கள் பூமியின் நாலா பக்கங்களிலும் சிதறடிக்கப்படுகிறார்கள். கலகக்காரர்களாய் ஒன்று கூடி இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. சைனாவில் உள்ள அந்தப் பெரிய சுவரை விட மொழியினால் ஏற்படுத்தப்படும் தடையானது மிகப்பெரியது. மேற்கு பெர்லினுக்கும் கிழக்கு பெர்லினுக்கும் இடையிலே கட்டப்பட்ட அந்த மாபெரும் பெர்லின் சுவரை விட வலிமை வாய்ந்தது. இதுவே மக்களை பிரிக்கிறது. ஒருவர் மொழியை ஒருவர் புரிந்து கொள்ளாத சூழ்நிலைக்கு செல்லும் பொழுது அது மக்களை நன்றாகவே பிரிக்கிறது. தேசங்களுக்கு இடையிலான வேலியை விட, ஏன்? மகா பெரிய சமுத்திரத்தையும் விட உறுதியாக மக்களை இது பிரித்து வைக்கிறது.
மொழி என்பது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்தது என்று சிலர் சொல்வார்கள். ஆனால் தேவன் சொல்வதென்ன அவர்களது அந்த நாளின் மொழியை குழப்பத்திற்கு உள்ளாக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாதபடி செய்தார். அவர்கள் பாபேல் கோபுரத்தை கட்டிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று ஒருவர் சொல்வதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவே அந்த பெரிய கட்டிட வேலை அப்படியே நின்று போயிற்று. பாபேல் என்ற அந்த இடத்திலிருந்து எல்லா திசைகளிலும் மக்கள் சிதறி போனார்கள்.
இது மிகப்பெரிய ஒரு நிகழ்ச்சி. அவர்கள் ஒருவர் ஒருவர் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இங்கே ஒரு அந்நிய பாஷை பேசுதல் நிகழ்ந்தது என்று சொல்லலாம். இது ஒரு அற்புதம். பேசுவதிலே ஒரு அற்புதம் மற்றும் கேட்பதில் ஒரு அற்புதம். அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள். அதைக் கேட்டவர்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அருமையானவர்களே, இப்பொழுது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இது மாறுவேடத்தில் வந்த ஒரு ஆசிர்வாதமா? அல்லது மனித குலத்தின் மீதான சாபமா? கடவுளின் நோக்கங்களை பொருத்த மட்டும் இது ஒரு ஆசீர்வாதம்தான். கடவுளை விட்டு விலகிச் சென்ற மனிதன் வளர்ச்சிக்கு அது நிச்சயமாக ஒரு நியாய தீர்ப்பு .பல நூற்றாண்டுகளாக மனித குலம் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கிறது இது அவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது. வானொலி தொலைக்காட்சி மற்றும் விமான பயணம் ஆகியவற்றின் மூலம் இன்று நடக்கும் ஒரு காரியம் என்னவென்றால் இந்த சுவர்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. அவை எரிகோ கோட்டை போல இடிந்து விழுகின்றன. இதனால்தான் கடவுள் மீண்டும் நியாய தீர்ப்பு வழங்க இறங்கி வருகிறார் என்று நான் நினைக்கிறேன். சரி இப்பொழுது இந்த பல பாஷை பேசும் இயக்கத்தை வெந்தேகோஸ்தே நாளின் நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு பார்ப்போமா? அது மற்றும் ஒரு பெரிய பாஷை பேசும் இயக்கமாகும். அந்த நேரத்தில் அங்கிருந்த மக்களால் புரிந்து கொள்ளப்பட்ட அனைத்து மொழிகளிலும் சுவிசேஷம் பிரசிங்கிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம். இது தெரியாத ஒரு அந்நிய பாஷையில் பேசுவது அல்ல. பாபேல் கோபுர மொழிக் குழப்ப நிகழ்வில் பெந்தேகோஸ்தே நாளில் கூடியிருந்த மக்கள் எல்லாரும் தங்கள் தங்கள் சொந்த மொழியிலே நற்செய்தியை கேட்டது போல அங்கே நடைபெறவில்லை. ஆனால் பெந்தேகோஸ்தே நாளில் பாபேல் கோபுரத்திற்கான பதிலை தேவன் கொடுக்கிறார். அதாவது தேவன் மனு குலத்திடம் உங்களுக்காக என்னிடத்தில் ஒரு நற்செய்தி இருக்கிறது உங்கள் சொந்த மொழியில் அந்த நற்செய்தியோடு நான் உங்களிடத்திலே வருகிறேன் என்று கூறுகிறார்.
இதைத்தான் தேவன் செய்திருக்கிறார். இன்று வேறு எந்த புத்தகத்தையும் விட வேத புத்தகமே மிக அதிகமான மொழிகளிலே வெளியிடப்பட்டிருக்கிறது. இது இன்னும் பல்வேறு மொழிகளிலும் கிளை மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பழங்குடியினரிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுவிசேஷம் மனிதகுலம் முழுவதற்குமானது. அந்நிய பாஷைகளில் பேசுவதின் காரணமும் நோக்கமும், பாபேல் கோபுரத்திற்கு தேவன் பதில் அளித்து விட்டார் என்பதை மனித இனத்திற்கு தெரியப்படுத்துவதே ஆகும். அவர் இப்பொழுது மனிதனுக்காக ஒரு இரட்சிப்பை / ஒரு மீட்பை வைத்திருக்கிறார். அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. மனிதன் தனது இரட்சிப்பை தேடி – அவன் தானாக அதற்காக முயற்சி எடுத்து உழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் தேவனின் நல்ல செய்தியை கேட்டு இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி வரலாம். என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே நீங்கள் யாராக இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுகிறவராய் இருந்தாலும் சரி இந்த சுவிசேஷம் உங்களுக்கும் சொந்தமானது. இது உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. வேத புத்தகத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்திலே சொல்லப்பட்டிருப்பதை சற்று நாம் கவனிப்போமா? வாசிக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:9
[9] இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
……………..
கவனித்தீர்களா? இதுதான் அற்புதமான ஒரு பரலோக காட்சி. பற்பல விதமான மொழி பேசும் மக்கள் பல்வேறு ஜனக் கூட்டங்கள் தேவன் முன் வந்து அவரை தொழுது கொள்ளுவார்கள். நீங்களும் அந்தக் கூட்த்தில் இருக்க விரும்புகிறீர்களா?……
இப்பொழுது நாம் நோவாவின் குமாரனான சேமுடைய வம்ச வரலாற்றை பார்க்க போகிறோம். இந்த சந்ததியை குறித்தே பழைய ஏற்பாடு முழுவதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் 11:10
[10] சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
………………..
தொடர்ந்து வருகிற வசனங்களிலேயும் சேமுடைய வம்ச வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இப்பொழுது
ஆதியாகமம் 11:24-25 ஆம் வசனங்களை கவனியுங்கள்
[24] நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். [25] தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
…………………
இப்பொழுது நாம் தொடர்ந்து தேராகின் வம்ச வரலாற்றை பார்க்கிறோம். ஏன் தேராகின் வம்சத்தை குறித்து நாம் படிக்க வேண்டும்? அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 11:26
[26] தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
………………….
இப்பொழுது நாம் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் ஆபிராமின் வழிவந்த மக்களை பின்தொடர போகிறோம். நாம் சேமின் சந்ததியை பின்தொடர்கிறோம். உண்மையில் வேத புத்தகம் முழுவதிலும் இந்த சந்ததியை நாம் பின்பற்றுகிறோம். தேவனுடைய வார்த்தை இந்த குடும்பத்தின் வழியாக நேரடியாக கிறிஸ்துவின் சிலுவை வரை தொடர்ந்து செல்கிறது.

தேவாதி தேவன் இந்த அனைத்து காரியங்களையும் ஒரு ஆரம்பமாக பதிவு செய்து வைத்திருக்கிறார். மனிதன் பாவத்தில் இருக்கிறான் என்பதை தேவன் இப்பொழுது நிரூபித்து காட்டியிருக்கிறார். காயின் மற்றும் ஆபேல் சம்பவத்தில் காயின், தான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அவனுடைய வாழ்க்கையில் ஜீவனத்தின் பெருமையின் வெளிப்பாட்டை நாம் பார்த்தோம். உலக அளவிலான ஜல பிரளயம் வந்த பொழுது மாம்சத்தின் பாவத்தை கவனித்தோம். ஏனென்றால் அக்காலத்து மக்கள் மாம்சத்தின் பாவங்களுக்கு தங்களை பூரணமாய் ஒப்புக்கொடுத்திருந்தார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் அவர்களின் ஒவ்வொரு எண்ணமும் அவர்களுடைய கற்பனையும் தீமையாகவே இருந்தது. தேவன் தங்களுக்கு தேவை என்பதை அவர்கள் உணர முடியாதபடி பார்வை அற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லலாம்.
அவருடைய அழைப்பிற்கு காது கேளாதவர்களாயும் தேவனுக்கு மரித்தவர்களாகவும், மீறுதல்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாகவும் இருந்தார்கள். நோவாவின் மூலமாக தேவன் அவர்களுக்கு ஒரு நல்ல அழைப்பை கொடுத்தார். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை உதாசீனம் செய்துவிட்டார்கள். மாம்சத்தின் பாவங்களிலேயே தொடர்ந்து நிலைத்திருந்தார்கள். எனவே இந்த பாபேல் கோபுரத்திலே சுயசித்தத்தின் பாவத்தை அதாவது தேவனுக்கு எதிரான இயற்கையான கலகத்தை பார்க்கிறோம். ஆம் அதுவே பாபேல் கோபுரம்.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனே, சகோரியே உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் தேவனுக்கு விரோதமான ஒரு கோபுரத்தை இன்றைக்கு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து கொண்டிருக்கிறீர்களா? இது மனிதனுடைய இயற்கை சுபாவமாய் இருக்கிறது. உங்கள் விருப்பப்படி, உங்கள் நன்மைக்காக என்று சொல்லி- நான், – எனக்கு, என்ற சுய எண்ணங்களை – சுய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் – நாம் நம்முடைய என்று ஒரு கூட்டமாக நீங்கள் தேவனுக்கு எதிர்த்து நிற்கிறீர்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
குமார் என்று ஒரு சிறுவன் இருந்தான் அவன் மிகவும் குறும்பு செய்கிறவன் ஒரு நாள் அவனுடைய குறும்பு மிகவும் அதிகமானதாலே அவனுடைய தாய் அவனுடைய காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வீட்டின் ஒரு அறையின் மூலையிலே ஒரு நாற்காலியை போட்டு அதிலே உட்கார வைத்து நீ சுவரைப் பார்த்து உட்கார்ந்து கொண்டே இரு என்று சொல்லிவிட்டு குடும்பத்தில் உள்ள எல்லாரையும் அவர்கள் அழைத்துக் கொண்டு முன்அறைக்கு வந்து விட்டார்கள். சிறிது நேரம் ஆனது அவனை உட்கார வைத்திருந்த அந்த அறையில் இருந்து ஏதோ சத்தம் வந்தது. உடனே அவனுடைய தாய், குமார் நீ எழுந்து விட்டாயோ? என்று கேட்டார்கள். அதற்கு அவன், இல்லை அம்மா நான் உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என் உள்ளத்தில் நான் இன்னும் எழுந்து நின்று கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறினான்.
ஆம் பிரியமானவர்களே இதுதான் மனிதனுடைய சுபாவம். நம்முடைய வாழ்க்கையிலே எந்த காரியத்திலேயாவது நாம் தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்து கொண்டிருக்கிறோமோ என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய கலகங்கள் அதிகமாகும் பொழுது தேவன் நமக்கு எதிராக செயல்படுவார் என்று இப்பொழுது கற்றுக் கொண்ட வேத பகுதி நமக்கு தெளிவாகச் சொல்கிறது. தேவன் அவ்வாறு செயல்படும் முன்னர் இன்று நம்மை தாழ்த்தி அவருடைய கரத்திலே நம்மை அர்ப்பணித்து – ஆண்டவரே உமக்கு விரோதமாய் நான் கலகம் செய்யாமல் உமக்குப் பிரியம் இல்லாத காரியங்களை செய்யாமல் இனி நான் உமக்குப் பிரியமானதை மட்டுமே செய்ய என்னை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்வோமா?

அப்படி நாம் செய்யும் பழுது அவர் நமக்கு பாவ மன்னிப்பை கொடுக்கிறது மட்டுமல்லாமல் அவரோடு கூட நெருக்கமான ஒரு உறவையும் தர வல்லமை உள்ளவராய் இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா?

ஆதியாகமம் 11:27-31
[27] தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான். [28] ஆரான் தன் ஜன்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான். [29] ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண் கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். [30] சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். [31] தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும், தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
……………………
இங்கே நாம் வாசிப்பது போல சேமுடைய வம்சத்தில்தான் நாகூர் வருகிறார். நாகூரின் மகன்தான் தேராகு
தேராகுவின் குமாரன் தான் ஆபிராம். 27 ஆம் வசனத்தில் தேராகுவின் வம்ச வரலாறு என்று கூறப்பட்டிருக்கிறது.‌ இவர்கள் தங்கள் சொந்த இடமான ஆரான் என்ற ஜென்ம பூமியிலே ஊர் என்கிற கல்தேயரின் பட்டணத்தில் வசித்து வந்தார்கள்.
. ஆபிராமோடு அந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் நாகூர் மற்றும் ஆரான் என்பவர்கள். இந்த ஆரான் லோத்தை பெற்றெடுத்தபின் அவனுடைய தகப்பனான தேராக மரித்துப் போகும் முன்னதாகவே மரித்து போய்விட்டான். எனவே லோத்து தன்னுடைய தகப்பனின் சகோதரர்களால் பராமரிக்கப்படுகிறான். ஆரான் என்ற வார்த்தைக்கு பிந்துதல் அல்லது காலம் தாழ்த்துதல் என்று பொருளாகும்.
பின் ஆபிராம் திருமணம் செய்கிறார் இவருடைய மனைவியின் பெயர் சாராய். ஆபிராம் உடைய சகோதரனாகிய நாகூரின் மனைவியின் பெயர் மில்காள். மேலும் சாராய்க்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆபிராமுடைய தகப்பனாகிய தேராகு – ஆரான் ஆபிராம் அவருடைய மனைவிமார் மற்றும் லோத்து எல்லாரையும் கூட்டிக்கொண்டு ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானன் தேசத்திற்கு போக புறப்பட்டு வருகிறார்கள் .ஆனால் அவர்கள் ஆரான் என்ற இடத்திற்கு வந்த பொழுது அங்கேயே இருந்து விட்டார்கள். ( முற்பிதாக்கள் குடும்பமாக பிரயாணம் செய்தல் அல்லது கூடாரங்கள் அருகில் அலர் நிற்பது போல- வயது 100 , 70, 60, 40 , 35 – 2 பெண்கள் 4 அல்லது 6 ஆண்கள்)
ஆதியாகமம் 11:32
[32] தேராகுடைய ஆயுசு நாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
…………………
அவர்கள் எல்லாரும் கடைசியாக வந்து தங்கி இருந்த ஆரான் என்னும் இடத்தில் ஆபிராமுடைய தகப்பனார் மரித்து போய்விடுகிறார். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் அங்கே என்ன நடந்தது என்பதைத்தான் 12 ஆம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்.
இப்பொழுது நாம் ஆபிரகாமை பின்தொடர போகிறோம் என்பதை தெரியப்படுத்தவே இந்த சிறு சரித்திரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய முழுமையான வாழ்க்கை குறித்து 12 ஆம் வசனத்திலிருந்து தெளிவாக நாம் பார்க்க முடியும். சொல்லப்போனால் இந்த இடத்தில் தான் ஆதியாகம புத்தகம் அல்லது மொத்த வேத புத்தகமுமே ஒரு புதிய திருப்பத்தை எடுக்கிறது என்று சொல்லலாம். ஆதியாகம புத்தகத்தின் இடையில் ஒரு பெரிய பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு செல்கிறது. அதில் 11 அதிகாரங்கள் ஒரு பக்கத்திலும் மீதமுள்ள 39 அதிகாரங்கள் மறுபக்கம் இருக்கின்றன. முதல் 11 அதிகாரங்களிலே நாம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியை கடந்து விட்டோம். இது வேத புத்தகத்தின் மீது உள்ள பகுதிகள் அனைத்தையும் சேர்த்தால் வரும் காலத்தைப் போன்ற நீண்ட ஒரு காலமாகும். அந்த 2000 ஆண்டுகளை ஆதியாகமம் 12 முதல் 50 வரையிலான அதிகாரங்களில் உள்ள 350 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஆதியாகமத்தின் முதல் 11 அதிகாரங்களில் நாம் சிருஷ்டிப்பு , மனிதனின் வீழ்ச்சி, பெருவெள்ளம் , மற்றும் பாபேல் கோபுரம் ஆகியவற்றை பார்த்தோம் அந்த நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கிய நான்கு பெரிய நிகழ்வுகள் இவைகள் தான்.
“ஆகவே பிரியமானவர்களே, இன்று நாம் சிந்தித்த பாபேல் கோபுர நிகழ்வு, மனிதனுடைய பெருமைக்கும், தேவனுக்கு எதிரான கிளர்ச்சிக்கும் கிடைத்த ஒரு எச்சரிக்கையாகும். ‘சிதறிப்போகாமல் இருக்க கோபுரத்தைக் கட்டுவோம்’ என்று மனித நினைத்தான், ஆனால் தேவனோ அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணி, தமது சித்தத்தையே நிறைவேற்றினார். தேவ நாம மகிமைக்காக படைக்கப்பட்ட நாம் சுய மகிமையை தேடுவது நமக்கு ஆபத்து
இந்தச் சரித்திரம் நமக்கு இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:
தேவனுக்கு விரோதமான கலகம்: நம்முடைய பலம் மற்றும் திறமையைக் கொண்டு தேவனை மீறி எதையும் சாதிக்க முடியாது. நாம் கட்டும் ‘சுய கோபுரங்கள்’ இறுதியில் பாபேலைப் போல பாழாகிவிடும்.
மேலும் : பாபேலில் மொழிகளைக் குழப்பி மனிதர்களைச் சிதறடித்த தேவன், பெந்தெகொஸ்தே நாளில் அதே பாஷைகள் மூலமாகத் தம்முடைய நற்செய்தியை அனைவரும் அறியச் செய்தார். இன்று ஜாதி, கோத்திரம், பாஷை என அனைத்து எல்லைகளையும் கடந்து, கிறிஸ்துவுக்குள் நாம் ஒரே குடும்பமாக இணைய அவர் அழைக்கிறார்.
நம்முடைய பதில் என்ன??

பாடல்
அழைகிறார் , அழைகிறார் இதோ,
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top